சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, June 4, 2012

ரகசிய தீட்சை பெற்றவர்களின் அனுபவங்கள்


பிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல் 16
ரகசிய தீட்சை பெற்றவர்களின் அனுபவங்கள்

சிரிஸ் கோயிலில் ரகசிய தீட்சை பெற்ற எகிப்தியர்களின் பெயர்கள் வரலாற்றில் பதிவு செய்யப்படவில்லை. ஞானம் பெற்ற அவர்களுக்கு அதுவே போதுமானதாக இருந்தது. அடுத்தவர்களுக்குத் தெரிவிக்கும் அவசியத்தை அவர்கள் உணரவில்லை, அல்லது வரலாற்றை பதிவு செய்வது முக்கியம் என்பதை அவர்கள் முக்கியமாக நினைக்கவில்லை என்று எடுத்துக் கொள்ளலாம்.

ஆனால் பண்டைய கிரேக்க மேதைகள் பலர் ரகசிய தீட்சை பெற்றது அவர்களுடைய வரலாறில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. அவர்கள் அபுல்லியஸ் (Apulleius), ப்ளேடோ (Plato), ஹோமர் (Homer), பித்தகோரஸ் (Pythagoras), தேல்ஸ் (Thales), லிகர்கஸ் (Lycurgus), சோலோன் (Solon), லம்ப்லிசஸ் (lamblichus), ப்ரோடஸ் (Produs), ப்ளூடார்க் (Plutarch) மற்றும் ஹெரொடோடஸ் (Herodotus).

வரலாற்றின் தந்தை என்று அழைக்கப்படும் ஹெரொடோடஸ் ஓசிரிஸ் கோயில் ரகசியங்கள் அனைத்தும் நான் அறிந்தவன் என்றாலும் அவற்றை என் உதடுகள் உச்சரித்து விடாமல் ஆன்மிகப் பிரமாணம் என்னைத் தடுக்கிறதுஎன்றார். மற்றவர்களும் தாங்கள் எடுத்திருந்த ரகசியப் பிரமாணத்தை மீறவில்லை என்றாலும் அவர்களில் சிலர் ரகசிய தீட்சை உண்மையானது, கடுமையான சோதனைகளுக்குப் பின்னரே தேர்ந்தெடுக்கப்படுவர் போன்றவற்றையும் அந்த அனுபவம் எப்படி இருந்தது என்பது பற்றிய சொல்லக் கூடிய தகவல்களை சொல்லி இருக்கிறார்கள்.

அபுல்லியஸ் என்ற மேதை இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். லத்தினில் பல புத்தகங்கள் எழுதியவர். அவர் படைப்புகளில் முழுமையாக பிற்காலத்தவர்களுக்குக் கிடைத்தது தங்கக் கழுதை (The Golden Ass)என்ற  நாவல். லூசியஸ் என்ற அந்த நாவலின் கதாநாயகன், மேஜிக் மற்றும் ரகசிய வித்தைகளை அறிந்து கொள்ளும் ஆவலுடன் இளமையிலேயே பல் வேறு இடங்களுக்குச் சென்று கழுதையாக மாறி விடுகிறான். பிறகு பல கஷ்டங்களுக்குப் பிறகு மனிதனாக மாறி அறிய வேண்டிய ரகசியங்களுள் மிக உயர்ந்த ரகசியம் என்று கருதப்பட்ட ஓசிரிஸ் கோயில் ரகசியத்தை அடைந்து உயர்வதாகக் கதை முடிகிறது. அந்த நாவல் நிஜமும் கற்பனையும் சேர்ந்து எழுதப்பட்ட கதை என்றும் அதில் லூசியஸ் பெற்ற ரகசிய தீட்சை அபுல்லியஸின் சொந்த அனுபவமே என்றும் கருதப்படுகிறது.

லூசியஸ் மூலமாக அவர் இப்படி சொல்கிறார். “நான் தினமும் ஓசிரிஸ் கோயிலின் தலைமை குருவை சந்தித்து எனக்கும் தீட்சை தர வேண்டுவேன். அவர் பெற்றோர் குழந்தைகளிற்கு சில விஷயங்களை மறுப்பது போல பொறுமையுடன் மறுப்பார். எந்த உண்மையும் தகுந்த காலம் வராமல் யாருக்கும் உபதேசிக்கப்படுவதில்லை. யாருக்கு எந்த நேரத்தில் தகுந்த உண்மை உபதேசிக்கப்பட வேண்டும் என்பதை தேவதைகள் மட்டுமே நிர்ணயிக்க முடியும் என்று சொல்வார்.

அந்தப் பேருண்மைகளை அறியாமல் நாட்டுக்குத் திரும்பக் கூடாது என்று விடாப்பிடியாக நான் அடிக்கடி சென்று வேண்டிய போது அவர் சொன்னார். “அளவுக்கு மீறிய அவசரமும், தாமதமும் மனிதனின் உண்மையான எதிரிகள். அவை இரண்டையும் உன்னிடமிருந்து நீக்குவது மிக முக்கியம். உனக்கு சந்தர்ப்பம் வரும் முன் அவசரப்படுவதும், உனக்கு சந்தர்ப்பம் வரும் போது தயார் நிலையில் இல்லாமல் தாமதிப்பதும் கூடாது. எனவே தகுதிகளை வளர்த்துக் கொண்டு பொறுமையாக, தயாராகக் காத்திரு

இறைவனிடம் அந்த தீட்சைக்காக உளமாரப் பிரார்த்தனை செய்து கொண்டு சில காலம் காத்திருந்த நான் ஒரு நாள் இரவு நேரத்தில் உறக்கத்திலிருந்து விழித்து ஒரு பெரும் உந்துதலால உந்தப்பட்டு நேராக ஓசிரிஸ் கோயிலுக்குச் சென்று தலைமை குருவை சந்தித்தேன். அவர் என்னை எதிர்பார்த்தது போலக் காத்திருந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவரிடம்  என்ன ஆனாலும் சரி நீங்கள் என்னை தீட்சைக்கு அனுமதித்தே ஆக வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன். அவர் தனக்கும் உத்தரவு வந்து விட்டது என்று கூறி சில உபதேசங்கள் செய்து இன்னும் பத்து நாட்கள் மது, அசைவம் இரண்டையும் விலக்கி மனதையும் சுத்தமாக வைத்திருந்து விட்டு வரும்படி ஆணையிட்டார்.  

அப்படியே பத்து நாட்கள் இருந்து விட்டு நான் அங்கு சென்றேன். தீட்சையும் பெற்றேன். அதன் பின் நான் அறிந்தவற்றையும், உணர்ந்தவற்றையும் சொல்ல விடாமல் நான் எடுத்துக் கொண்ட சத்தியப்பிரமாணம் தடுக்கின்றது. முழுமையாகச் சொல்ல முடியாது. சொன்னாலும் மற்றவர்களுக்குப் புரியாது. ஆனால் ஒன்று மட்டும் சொல்வேன். மரணத்தின் விளிம்பு வரை சென்றேன். பல உலகங்களுக்குச் சென்றேன். படைப்பின் பரிமாணங்களை உணர்ந்தேன். இரவிலும் பிரகாசிக்கும் சூரியனைக் கண்டேன். திரும்ப இவ்வுலகத்திற்கு எல்லாம் கண்டவனாக, எல்லாம் உணர்ந்தவனாக வந்தேன்.

கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்று நம் முன்னோர் சுருக்கமாகக் கூறிய அதையே தான் அவரும் இந்த அனுபவத்தில் கூறுகிறார்.

ரகசிய தீட்சை பெற்ற இன்னொரு அறிஞரான ப்ளூடார்க் கூறுகிறார். “ரகசிய தீட்சையின் போது மனித ஆத்மா மரணத்தின் போது அனுபவிக்கும் அத்தனையையும் அனுபவிக்கின்றது. அறிய வேண்டிய அனைத்தையும் அறிகின்றது. ஆனால் ஓசிரிஸ் குறித்து நடந்ததாக சொல்லப்பட்ட கதையை உண்மையாக நடந்தது என்று அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. அந்தக் கதைகள் பாமரர்களுக்காக புனையப்பட்டவை. அவைகளுக்குப் பின்னால் உள்ள தத்துவார்த்தமாக இருக்கும் உண்மைகளைப் புரிந்து கொண்டால் போதும். தீமைகளாலும் தவறுகளாலும் உண்மைகளை அழித்து விட முடியாது. உண்மை பன்மடங்கு பலத்தோடு மீண்டு வரும் என்று அறிந்தால் போதுமானது.

அதன் பிறகு இன்னொரு இடத்தில் கூறுகிறார். “அறியாமையில் இருந்து மனித ஆன்மா விடுபடுகையில், மகத்தான உண்மைகளை உணரும் போது உருவமில்லாத, மாற்றமில்லாத, பரிசுத்தமான இறைவனை அறியும் போது ஏற்படுகிற பேரானந்தத்தையும், காணும் பேரழகையும் வர்ணிக்க வார்த்தைகள் இல்லை

லம்ப்லிசஸ் கூறுகிறார். “இறை நிலையிலிருந்த மனிதன் விதியாலும் அறியாமையாலும் பற்பல சங்கிலிகளால் கட்டுண்டு கஷ்டப்படுகிறான். அந்த சங்கிலிகளை உடைத்துக் கொண்டு விடுதலையாகி தன் இறைநிலையை உணரும் நிலைக்கு ஓசிரிஸ் தீட்சை ஒருவரை அழைத்துச் செல்கிறது

மேலே குறிப்பிட்ட அறிஞர்கள் மட்டுமல்லாமல் பைபிளில் குறிப்பிடப்படும் மோசஸ் கூட ஓசிரிஸ் கோயிலில் ரகசிய தீட்சை பெற்றவர் என்று கூறப்படுகிறது. புதிய ஏற்பாட்டில் பைபிள் “மோசஸ் எகிப்தின் எல்லா ஞானத்தையும் போதிக்கப்பட்டிருந்தார்என்று கூறுவது முக்கியமாக இந்த ரகசிய தீட்சை ஞானத்தையே என்று சிலர் கூறுகிறார்கள்.

ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் இந்த உலகத்தில் அவர்கள் மூழ்கியிருந்த  அறியாமையை முற்றிலும் விலக்கி விட்டு அவர்கள் இறைவன் படைப்பின் ரகசியங்கள், தத்துவங்களை அனைத்தும் அறிந்து புதிய மனிதர்களாக திரும்பி வந்தார்கள் என்றே சொல்ல வேண்டும்.

ஓசிரிஸ் கோயில் மதகுருக்கள் ரகசிய தீட்சை பெற முடியாத பொதுமக்களையும் புறக்கணித்து விடவில்லை. கடவுள்களையும், வரலாற்று நாயகர்களையும் மையமாக வைத்துப் பல விதமான பழங்கதைகள், நாடகங்கள் படைத்து அவற்றை பொதுமக்களிடையே பரப்பினார்கள். அந்தக் கதைகள் அனைத்தும், தீமை தற்காலிகமாக வெல்வது போல தோன்றினாலும், கடைசியில் நிரந்தரமாக வெல்வது நன்மையே என்ற செய்தியையே கருவாகக் கொண்டிருந்தன. மிக மேலான ஞானத்தைப் பெற முடியாவிட்டாலும், உண்மைக்கு ஒரு போதும் அழிவில்லை, பொய்ம்மையால் என்றும் நன்மை இல்லை என்பது மட்டும் சாதாரண மனிதன் மனத்தில் உறுதியாகப் பதிந்து விட்டால் கண்டிப்பாக பின் அவன் அதற்கு மேற்பட்ட நிலைகளை உணர்ந்து கடைத்தேறுவான் என்பது அவர்கள் நம்பிக்கையாக இருந்தது.

- என்.கணேசன்

4 comments:

  1. ////“அளவுக்கு மீறிய அவசரமும், தாமதமும் மனிதனின் உண்மையான எதிரிகள். அவை இரண்டையும் உன்னிடமிருந்து நீக்குவது மிக முக்கியம். உனக்கு சந்தர்ப்பம் வரும் முன் அவசரப்படுவதும், உனக்கு சந்தர்ப்பம் வரும் போது தயார் நிலையில் இல்லாமல் தாமதிப்பதும் கூடாது. எனவே தகுதிகளை வளர்த்துக் கொண்டு பொறுமையாக, தயாராகக் காத்திரு”/////

    ReplyDelete
  2. Pls continue... very interesting

    ReplyDelete
  3. Sir,
    I request you to publish relevant articles regarding Concentration of mind in meditation. Since you are publishing very interesting articles, you can also give an effective article regarding concentration of mind and its ways, effects etc.

    ReplyDelete
  4. ஒவ்வொரு பதிவுகளிலும் ஒரு வித்தியாசம் .ஆழ்ந்த தேடல் .புது செய்தி .மெனக்கெடல் .அருமை .நன்றி

    ReplyDelete