சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, May 21, 2012

பிரச்சினைகளை வளர்த்தாதீர்கள்!



ண்டைய சீனத்தில் பதிமூன்றாம் நூற்றாண்டில் வடக்கு சுங் வம்ச சக்கரவர்த்திகள் ஆண்ட காலத்தில் நடந்த ஒரு உண்மை நிகழ்ச்சி இது. ஒரு எல்லை மாகாணத்தில் கான் யுவான் (Con Yuon) என்ற அதிகாரி மேயராகப் பொறுப்பேற்ற போது மாகாணத் தலைமையிடத்தில் போலீஸ் மற்றும் இராணுவ வீரர்கள் யாருமே இல்லாதது கண்டு ஆச்சரியப்பட்டார். அவரது அதிகாரிகளை விசாரித்த போது இராணுவமும், போலீஸும் மாகாணத்தின் ஒரு எல்லையில் மூண்ட கலவரத்தை அடக்கச் சென்றிருப்பதாகத் தகவல் கிடைத்தது.

அவர் பொறுப்பேற்ற மூன்றாவது நாளில் இன்னொரு எல்லையில் உள்ள, அவரது மாகாண அதிகார வரம்புக்கு உட்பட்ட, பழங்குடி மக்கள் ஈட்டி, வில் போன்ற ஆயுதங்களுடன் நகர வாயிலில் குவிந்து இருக்கும் செய்தி வந்தது. கான் யுவான் தன் துணை அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். துணை அதிகாரிகள் நகரத்தின் பிரதான கதவை இழுத்து மூடி பக்கத்து மாகாணங்களிடம் இருந்து இராணுவ உதவி பெறுவதே உத்தமம் என்றார்கள். அப்படி இராணுவ உதவி வரும் வரை தாக்குப் பிடிக்க முடிந்தால் அது பெரியதொரு அதிர்ஷ்டம், அதைத் தவிர வேறு வழியில்லை என்றார்கள்.
கான் யுவான் கேட்டார். “அந்தப் பழங்குடியினர் திடீர் என்று போராடக் காரணம் என்ன?
அவரது துணை அதிகாரிகள் படிப்பறிவற்ற பழங்குடி மக்களுக்கு அதற்கெல்லாம் காரணம் பெரியதாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றார்கள். அற்ப சொற்ப காரணங்களுக்காகக் கூட அவர்கள் போராடத் துணிபவர்கள் என்று சொன்னார்கள். அதனால் முதல் வேலையாகப் பக்கத்து மாகாணங்களில் இருந்து இராணுவ உதவி பெற ஆளனுப்ப அவசரப்படுத்தினார்கள்.

கான் யுவானோ முதலில் பழங்குடி மக்களைச் சந்திக்க ஆளனுப்புவதே சரி என்று சொன்னார்கள். காரணம் அறியாமலேயே அவர்களை அடக்கி போராட்டத்தைத் தோல்வியடையச் செய்தாலும் இது போன்ற புரட்சிகள் மறுபடி வெடிக்க சாத்தியமுண்டு என்பதால் முதலில் யாராவது சென்று அவர்களைச் சந்தித்து என்ன பிரச்சினை என்பதை அறிந்து கொள்ளச் சொன்னார். பழங்குடி மக்களைச் சென்று சந்திப்பதில் சிறிதும் நாட்டமில்லாத அவர்கள் அவர் சொல்லுவது யதார்த்தத்திற்கு ஒத்து வராதது என்று கருதினார்கள். யாரும் போவதற்குத் தயங்கினார்கள். ஒரு சிலராகப் போய் பழங்குடியினரைச் சந்திப்பது ஆபத்தானது என்றார்கள்.

அவர்கள் தயக்கத்தைக் கண்ட மேயர் கான் யுவான் தானே சென்று பழங்குடியினரைச் சந்திப்பதாகச் சொன்னார். அவர்கள் அவரைக் கூடுமான வரை தடுக்க முயன்றார்கள். ஆனால் அவர் கேட்பதாக இல்லை. துணைக்கு இரண்டு வயதான வேலையாட்களை அழைத்துக் கொண்டு கிளம்பினார். அவரது துணை அதிகாரிகள் இந்த முட்டாள் மேயர் திரும்பவும் உயிரோடு திரும்ப மாட்டார் என்று தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.
ஒரு படையை எதிர்பார்த்திருந்து அதை எதிர்கொள்ளவும் தயாராக இருந்த பழங்குடி மக்கள் ஒரு தனிமனிதர் குதிரையில் இரு வேலையாட்களுடன் வந்த போது ஆச்சரியப்பட்டார்கள்.

கான் யுவான் அவர்களிடம் சொன்னார். “நான் இந்த மாகாணத்திற்கு புதிய மேயராக சமீபத்தில் பொறுப்பு எடுத்துக் கொண்டவன். உங்களுடைய போராட்டத்திற்குக் காரணத்தை அறிய விரும்புகிறேன். தயவு செய்து தங்கள் தலைவரிடம் என்னை அழைத்துச் செல்லுங்கள்

அவர்கள் ஆச்சரியம் மேலும் அதிகரித்தது. அவர்கள் அவரை அவர்களுடைய தலைவரிடத்தில் அழைத்துச் சென்றார்கள். நகர எல்லையைக் கடந்து காட்டிற்கு பழங்குடியினர் தலைவரை சந்திக்கச் செல்வதில் ஆபத்தை உணர்ந்த அவருடைய வயதான வேலையாட்கள் ஏதேதோ காரணங்கள் சொல்லி நின்று விட்டார்கள். ஆனால் கான் யுவான் தனியாகவே பழங்குடியினர் தலைவரை சந்திக்க குதிரையில் பயணத்தைத் தொடர்ந்தார்.

பழங்குடியினர் தலைவருக்கும் இவரைக் கண்டவுடன் வியப்பு. அவரிடம் கான் யுவான் சொன்னார். “நான் புதியதாக மேயராக பதவி ஏற்றவன். முறைப்படி தாங்கள் தான் என்னை வந்து சந்தித்திருக்க வேண்டும். ஆனால் அவசர நிலைமை காரணமாக நானே இங்கு வர வேண்டியதாகி விட்டது. பரவாயில்லை. உங்கள் இன மக்கள் திடீர் என்று போராட்டம் நடத்தக் காரணம் என்ன?

அவரைத் தகுந்த மரியாதையுடன் வரவேற்று உபசரித்த பழங்குடி மக்கள் தலைவர் முந்தைய மேயரின் ஆட்சியில் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையும், அவர் நடத்திய முறைகேடுகளையும், பழங்குடி மக்களுக்கு விதித்த அநியாய அதிக வரிகளையும், அதனால் அவர்களுக்கு வரப்போகும் பனிக்காலத்திற்குத் தேவையான உணவின்மையையும், ஆடுமாடுகள் இல்லாததையும் விளக்கினார்.

கான் யுவான் அவர்கள் சொன்னதில் இருந்த நியாயத்தை உணர்ந்தார். “முந்தைய மேயர் உங்களிடம் அநீதியாக நடந்து கொண்டதற்கு நான் உங்களிடம் மன்னிப்பு கோருகிறேன். இப்போது நீங்கள் என் பொறுப்பில் உள்ளவர்கள். உங்களுக்கு நல்லபடியாக வாழ வழி செய்து தருவது என் கடமை. நான் உங்களுக்குத் தேவையான அனைத்தையும் நான் செய்து தருகிறேன். இப்போது இருட்டி விட்டது. அதனால் இன்று உங்களுடன் தங்கி விட்டு நாளை காலை செல்கிறேன். என்னுடன் உங்கள் ஆட்களை அனுப்பினால் அவர்களுடன் உணவுப் பொருள்களையும், கால்நடைகளையும் அனுப்பி வைக்கிறேன்

அன்று அவர்களுள் ஒருவராக அவர்களுடனே தங்கி மறு நாள் அவர்களில் சிலரை அழைத்துக் கொண்டு கான் யுவான் நகரத்திற்குத் திரும்பினார். அவர்களுடன் அவர் வருவதைக் கண்ட அவருடைய துணை அதிகாரிகள் அவரைப் பணயக்கைதியாக அந்தப் பழங்குடியினர் அழைத்து வருவதாக எண்ணிக் கொண்டு அவர்களைத் தாக்க ஏற்பாடுகள் செய்தார்கள். ஆனால் கான் யுவான் அவர்களைத் தடுத்து உண்மையை விளக்கி பல டன்கள் உணவு தானியங்களையும், நூற்றுக் கணக்கான ஆடுமாடுகளையும் அந்தப் பழங்குடி மக்களுக்கு உடனடியாக அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தார். அவரைத் தெய்வமாகப் போற்றிய பழங்குடி மக்கள் எந்தக் காலத்திலும், எந்த நிலையிலும், என்ன உதவி அவருக்குத் தேவைப்பட்டாலும் தங்கள் உயிரைக் கொடுத்தாவது செய்வோம் என்று வாக்குறுதி தந்தனர். அது போலவே அவர் மேயராக இருந்த வரை நன்றியுடன் இருந்தார்கள்.

பல சமயங்களில் பிரச்சினைகளுக்கு உண்மையான காரணங்கள் என்ன என்பதை அறிந்து கொண்டு சரிவர அணுகினாலே அவற்றில் பாதிக்கு மேல் சரியாகி விடும். நேரடியான அறிவு பூர்வமான அணுகுமுறையால் மலை போன்ற பிரச்சினைகளும் நம்மால் சரி செய்யக் கூடிய அளவுக்கு இலகுவாகி விடும். அதே நேரத்தில் சிறிய பிரச்சினைகள் கூட மனிதர்களின் அலட்சியத்தாலும், ஈகோவினாலும், முட்டாள்தனத்தாலும் பூதாகரமாக மாறி விடுவதுண்டு.

இந்த உதாரணத்தில் தன் துணை அதிகாரிகள் சொன்னதைக் கேட்டு கான் யுவான் படை திரட்டி அந்தப் பழங்குடி மக்களை ஒடுக்க நினைத்திருந்தால் ஏராளமான உயிர்ச்சேதம் இரு பக்கத்திலும் நிகழ்ந்திருக்கும். அப்படியே அவர்கள் ஒடுக்கப்பட்டாலும் கூட அது தற்காலிகமாகவே இருந்திருக்கும். சரியான சந்தர்ப்பத்திற்காக அவர்கள் காத்துக் கொண்டு இருப்பார்கள். அவர்கள் அரசாங்கத்தின் தலைக்கு மேல் தொங்கும் கத்தியாகவே என்றும் இருந்திருப்பார்கள். கான் யுவான் தன் தலைமைப் பண்பினாலும், அறிவு கூர்மையாலும் பெரிய பிரச்சினையை சமாளித்ததோடு அவர்களைத் தனக்கு உதவக்கூடிய பெரும்பலமாக ஆக்கிக் கொண்டதில் இராஜதந்திரியாகயாகவும், நல்ல தலைவனாகவும் மாறி விட்டார். அவருடைய துணை அதிகாரிகள் ஆரம்பத்திலும் சரி, கடைசியிலும் சரி தவறான முடிவுகளை எடுப்பவர்களாகவே இருந்தாலும் அதை அனுமதிக்காமல் சரியாக பிரச்சினையை கான் யுவான் அணுகியதால் அப்போதைக்கு மட்டுமல்லாமல் பிற்காலத்திலும் பழங்குடி மக்கள் மூலமாக வர முடிந்த பிரச்சினைகளுக்கு முற்றுப் புள்ளி அவர் வைத்து விட்டார். 

எதிர்ப்பவர்கள் எல்லாம் எதிரிகள் அல்ல. பல சமயங்களிலும் எதிர்ப்பிற்கு வலுவான நியாயமான காரணங்கள் இருக்கக் கூடும். அதை அலட்சியம் செய்வது யாருக்கும் நல்லதல்ல. உண்மையைக் காண மறுப்பதும், ஒரு சூழ்நிலை பிரச்சினையாக மாற அனுமதிப்பதும் முட்டாள்தனம். சிறியதாக இருக்கையில் கையால் கிள்ளி விடுவதை விட்டு விட்டு மரமாக அனுமதித்துப் பின் கஷ்டப்பட்டு கோடாரியால் வெட்டி வீழ்த்துவது அறிவுடமையும் அல்ல, இனிமையானதுமல்ல.

சிந்தித்துப் புரிந்து கொள்வதற்குப் பதிலாக கோபித்துக் கொதித்தெழுவது எந்தப் பிரச்சினையையும் வளர்த்திக் கொண்டே போகுமே ஒழிய தீர்த்து வைக்காது. எந்தப் பிரச்சினையிலுமே அதன் மூல காரணத்தைத் தெரிந்து கொள்வதும், அதைச் சரி செய்யத் தேவையானதைத் தயக்கமில்லாமல் செய்யத் துணிவதுமே மிக முக்கியம். வேரை அழிக்காமல் கிளைகளை வெட்டிக் கொண்டிருந்தால் திரும்பத் திரும்ப அதை நாம் எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.

அதே போல சில பிரச்சினைகளை சுற்றி வளைத்து அணுகாமல் நேரடியாக அணுகினால் அவற்றை சீக்கிரமாகவே தீர்த்து வைக்க முடியும். ஆனால் பிரச்சினைகளால் அதிகம் பாடுபடுவர்கள், பிரச்சினைகளிலேயே மூழ்கிக் கொண்டிருப்பவர்கள் பிரச்சினையே அவர்களிடம் இந்த நேரடி அணுகுமுறை இல்லாதிருப்பது தான். அவர்கள் எதையும் சம்பந்தப்பட்டவர்களிடம் நேரடியாகப் பேசித் தெரிந்து கொள்ளவோ, தெரிவிக்கவோ மாட்டார்கள். இரண்டாம் மனிதர், மூன்றாம் மனிதர் மூலமாகவே கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்படும். எப்போதுமே சுற்றி வளைத்துப் போகும் கருத்துக்கள் உள்ளது போலவே போய்ச் சேர்வதில்லை. அந்த இரண்டாம் மனிதர், மூன்றாம் மனிதர் நேர்மையானவராகவும், நல்ல எண்ணம் கொண்டவராகவும் இல்லா விட்டாலோ அது கண்டிப்பாக பிரச்சினைகள் இன்னும் பெரிதாக்குவதாகவே இருக்கும்.

எனவே பிரச்சினைகளை கான் யுவான் போல அணுகுங்கள். பிரச்சினைகள் தீர்வது மட்டுமல்ல அவை அனுகூலமாக மாறவும் கூடும்.

-என்.கணேசன்


11 comments:

  1. நல்ல நடைமுறைக்கு பொருந்தும் ஆலோசனை. வாழ்க்கையை பிரச்சினை மயமாக ஆக்கிக்கொள்பவர்கள் அநேகம். அது தேவையில்லாதது என்று அழகாகக் கூறியுள்ளீர்கள்.

    ReplyDelete
  2. yes... we can change our approach towards the problem

    ReplyDelete
  3. அருமையான ஆலோசனையை அழகிய பதிவாக ஆக்கியிருக்கிறீர்கள்.
    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  4. good lesson to follow in real life...

    Venu

    ReplyDelete
  5. அருமையான பதிவு.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    நன்றி சார்.

    ReplyDelete
  6. அருமை.வீட்டிற்கும் நாட்டிற்கும் நல்ல பாடம்.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. Good Information, Thanks for sharing - Mangai

    ReplyDelete