என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Friday, November 4, 2011

அற்புதங்களின் அறிவியல் விளக்கம்


பிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல்-11
அற்புதங்களின் அறிவியல் விளக்கம்

“இந்த அற்புதங்களை எப்படி செய்கிறீர்கள் என்று விளக்க முடியுமா?

இந்தக் கேள்விக்கு உண்மையான விளக்கத்தைச் சொல்ல முன் வருபவர்கள் வெகு சிலரே. விளக்கி விட்டால் தங்களைக் குறித்து அடுத்தவர்கள் வைத்திருக்கும் அதீத மதிப்பு குறைந்து விடும் என்று நினைப்பது இயல்பே. ஆனால் டெஹ்ரா பே அப்படி நினைக்காமல் பால் ப்ரண்டனிடம் விளக்க முன் வந்தார்.

எல்லாவற்றிற்கும் ஆரம்பம் நமக்குள்ளே இருக்கும் பிரம்மாண்டமான சக்தியை நாம் கண்டு கொள்வதே. அதைக் கண்டு கொள்ளும் வரை அறியாமை என்ற சங்கிலியால் கட்டுண்டே இருக்க நேரிடும். கண்டு கொண்டால் மட்டுமே ஆழ்மன சக்திகளையும், மற்ற பெரிய சக்திகளையும் பயன்படுத்த முடியும். நான் செய்து காட்டியவற்றை சிலர் கண்கட்டு வித்தை என்று நினைக்கலாம், அல்லது அமானுஷ்ய சக்தியைப் பெற்றிருக்கிறேன் என்று நினைக்கலாம். ஆனால் இந்த இரண்டு கருத்துகளும் சரியல்ல. நான் செய்த அனைத்துமே இயற்கை விதிகளுக்கு உட்பட்டதே. அறிவியல் உண்மையைச் சார்ந்ததே.

மற்றவர்களுக்கு அற்புதமாகத் தோன்றும் இந்தச் செயல்களை நான் செய்ய இரண்டு விஷயங்கள் உதவுகின்றன. ஒன்று, உடலின் சில நாடி நரம்பு மையங்களைப் பற்றி அறிந்து அவற்றில் அழுத்தம் தருவது. இரண்டாவது நாக்கை உள்ளிழுத்துக் கொண்டு உணர்வற்று ஆழ்மயக்க நிலைக்கு என்னால் போக முடிவது. இந்த இரண்டையும் செய்யத் தவறினால் என்னாலும் வலியைப் பொறுத்துக் கொள்ள முடியாது. இதில் ஆன்மிகம் எதுவும் கிடையாது. ஆன்மிகம் என்று நான் ஏதாவது சொல்ல வேண்டுமானால் இதையெல்லாம் செய்யும் போது பற்றுதல் இல்லாத நிலையில் நான் இருப்பதை வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம். மற்றபடி இதில் ஆன்மிகமோ, மந்திரவாதமோ கிடையாது.

பால் ப்ரண்டனுக்கு அவர் வெளிப்படையாக ஒத்துக் கொண்டு விளக்கிய விதம் அவர் மேல் இருந்த மரியாதையை அதிகப்படுத்தியது. அவர் கேட்டார். “அந்த இரண்டு அம்சங்களையும் விளக்கிச் சொல்ல முடியுமா?

டெஹ்ரா பே சொன்னார். “நரம்புகள் மூலமாகவே வலி மூளைக்கு உணர்த்தப்படுகிறது. அவற்றின் சில சூட்சும மையங்களை அறிந்து விரல் அழுத்தத்தினால் அந்த மூளைக்கு இரத்த ஓட்டம் செல்ல தடை செய்தால் அந்த நரம்பு மையங்கள் அனஸ்தீஷியா (மயக்க மருந்து) கொடுத்தது போல உணர்விழந்து போகும். வலி தெரியாது. ஆனால் இதைக் கடும் பயிற்சி மூலம் தான் கற்றுத் தேற முடியும். அப்படியில்லாமல் அரைகுறையாகத் தெரிந்து கொண்டு இதை யாராவது முயற்சித்தால் உயிருக்கு ஆபத்தாகவே முடியும். இதைச் செய்யும் போது மன ஒருமைப்பாடு இருக்க வேண்டும். அதே நேரத்தில் இறுக்கமற்ற முறையில் தசைகளையும் நரம்புகளையும் வைத்திருக்க வேண்டும். நாக்கை உள்ளிழுத்து ஆழ்மயக்க நிலைக்குப் போவதற்கும் முறையான பயிற்சிகள் செய்து தேர்ந்திருக்க வேண்டும். இதில் இந்திய யோகிகள் கைதேர்ந்தவர்கள்.

பால் ப்ரண்டன் சுவரசியத்துடன் கேட்டார். “ஆழ்மயக்க நிலைக்குச் சென்ற பிறகு என்ன ஆகிறது?

ஆழ்மயக்க நிலைக்குச் செல்லும் முன்பே எந்த நேரத்தில் திரும்ப சுயநினைவுக்கு வரவேண்டும் என்பதனை ஆழ்மனதில் முன்பே குறித்துக் கொண்டு விட வேண்டும். குறித்த காலத்தில் ஆழ்மனம் தானாக இயல்பு நிலைக்குக் கொண்டு வந்து விடும். மேல்மனம் உறங்கி விட்டாலும் ஆழ்மனம் எப்போதும் உறங்குவதில்லை. இது பெரிய விஷயமல்ல. மறு நாள் இத்தனை மணிக்கு எழ வேண்டும் என்று முடிவு செய்து அப்படியே அலாரம் இல்லாமல் விழித்தெழுவது பலருக்கும் முடிகிறது. அதே போல் தூக்கத்தில் நடக்கும் வியாதி இருப்பவர்கள் அந்த உறக்க நிலையிலும் எத்தனையோ வேலைகளைத் தங்களை அறியாமலேயே செய்வதையும் நாம் சர்வசகஜமாகப் பார்க்கிறோம். நரம்பு மையங்களுக்கு அழுத்தம் கொடுத்து ஆழ்மயக்க நிலைக்குச் சென்றவுடன் உடலில் இரத்த ஓட்டம் நின்று விடுகிறது. சுருக்கமாக உடலின் எல்லா இயக்கமும் ஸ்தம்பித்து நின்று விடுகிறது.

“பல முறை குத்திய பிறகும் உங்கள் உடலில் காயமோ, காயத்தின் தழும்போ இல்லாமல் இருந்தது எப்படி?

அதை நான் இரு விதங்களில் சாதிக்கிறேன். முதலில் என் இரத்த ஓட்டத்தை தற்காலிகமாக அதிகரிக்க வைக்கிறேன். அதனால் இதயத்துடிப்பு அதிகமாகிறது என்றாலும் அது தாக்குப் பிடிக்கும் அளவிலேயே இருக்கும்படி பார்த்துக் கொள்கிறேன். இரத்த ஓட்டம் அத்தனை வேகமாகச் செல்வதால் காயங்கள் என் மன உறுதியின் தன்மையிலேயே குணமாகி விடுகின்றன. அடுத்ததாக இரத்தத்தின் சூட்டை நான் அதிகமாக்குகிறேன். அந்த சூட்டில் ஏதாவது கிருமிகள் காயங்களில் நுழைந்திருந்தாலும் அவை உடனடியாக அழிந்தும் போகின்றன. இந்த இரண்டையும் செய்வதால் சாதாரண காயங்கள் உடனடியாகவும், ஆழமான காயங்கள் சில மணிகளுக்குள்ளும் ஆறி விடுகின்றன

டெஹ்ரா பே எல்லாவற்றையும் மிகவும் எளிமையாக விளக்கிய விதம் பால் ப்ரண்டனை வியப்பில் ஆழ்த்தியது. அவர் அடுத்தபடியாக அவரை மிகவும் பிரமிக்க வைத்த முக்கிய நிகழ்ச்சி பற்றி கேட்டார். “உயிரோடு புதைந்து பல மணிகள் கழித்தும், பல நாட்கள் கழித்தும் பின் பிழைத்தது எப்படி?

(தொடரும்)

- என்.கணேசன்


6 comments:

 1. சுவாரஸ்யமான தொடர்

  ReplyDelete
 2. ரொம்ப சுவாரஸ்யம்

  ReplyDelete
 3. ”எல்லாவற்றிற்கும் ஆரம்பம் நமக்குள்ளே இருக்கும் பிரம்மாண்டமான சக்தியை நாம் கண்டு கொள்வதே. அதைக் கண்டு கொள்ளும் வரை அறியாமை என்ற சங்கிலியால் கட்டுண்டே இருக்க நேரிடும். கண்டு கொண்டால் மட்டுமே ஆழ்மன சக்திகளையும், மற்ற பெரிய சக்திகளையும் பயன்படுத்த முடியும்./

  அருமையான பகிர்வு. பாராட்டுக்கள்..

  ReplyDelete
 4. எண்ணங்களை எழுத்துக்களாக்க அழைக்கின்றோம்...

  ReplyDelete
 5. மறு நாள் இத்தனை மணிக்கு எழ வேண்டும் என்று முடிவு செய்து அப்படியே அலாரம் இல்லாமல் விழித்தெழுவது பலருக்கும் முடிகிறது. //

  மனம் நினைத்தால் எல்லாம் முடியும்.
  மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்று பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

  அற்புதமானது மனித மூளை.

  நல்ல பகிர்வு.

  ReplyDelete