சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Friday, February 11, 2011

இந்த துக்கம் அர்த்தமற்றது!


கீதை காட்டும் பாதை 2

இந்த துக்கம் அர்த்தமற்றது!

ஒருவர் பேசுவதை இடைமறிக்காமல் முழுவதுமாகக் கேட்பது மிகப் பெரிய அபூர்வமான கலை. அது எல்லோருக்கும் கைகூடுவதில்லை. ஒருவர் பேசப் பேச இடையிடையே தங்கள் கருத்தையும், எண்ணத்தையும் சொல்லத் தோன்றும். அதே போல அறிவுரையை யாருக்கும், எப்போதும், இலவசமாக அறிவுரை வழங்கத் தயாராக இருப்பவர்கள் அதிகம். கேட்டால் மட்டுமே, தேவைப்பட்டவர்களுக்கு மட்டுமே சரியான அறிவுரை சொல்ல முற்படுவதும் அபூர்வமே. இந்த இரண்டு அபூர்வத் தன்மைகளையும் பகவான் கிருஷ்ணனிடம் நாம் பார்க்க முடிகிறது. திடீரென்று தத்துவஞானியாக மாறிய அர்ஜுனன் யுத்தத்தால் குலநாசம் வரும், பல தலைமுறைகளுக்கு அதர்மம் சூழும் என்றெல்லாம் கண்டுபிடித்து சொற்பொழிவு ஒன்றை நிகழ்த்தி முடிக்கும் வரை பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த கிருஷ்ணன், அவன் ”உன்னை சரணடைகிறேன், எது தர்மம் என்று சொல்” என்று சொன்ன பின்னரே தன் உபதேசத்தை ஆரம்பிக்கிறார்.

பகவத் கீதையின் இரண்டாம் அத்தியாயமான சாங்கிய யோகத்தில் பதினோராம் சுலோகத்தில் இருந்து தான் பகவான் கிருஷ்ணனின் உபதேசம் ஆரம்பமாகிறது.

“யாருக்காக துக்கப்பட வேண்டாமோ, அவர்களுக்காக நீ துக்கப்படுகிறாய். விவேகிகள் இருப்பவர்களுக்காகவும், இறந்தவர்களுக்காகவும் வருத்தப்பட மாட்டார்கள்.

நானோ நீயோ, இந்த மன்னர்களோ ஒரு காலத்திலும் இராமலிருந்ததில்லை. இனிமேலும் நம்மில் எவரும் இராமலிருக்கப் போவதுமில்லை.

உடல் எடுத்த ஆன்மாவுக்கு இந்த உடலில் குழந்தைப் பருவம், இளமைப்பருவம், மூப்பு ஆகியவை எப்படியோ மற்றொரு உடலை அடைவதும் (அதாவது மறுபிறப்பும்). விவேகி இதற்கு மயங்குவதில்லை.

இந்த ஆன்மா ஒரு போதும் பிறப்பதில்லை. ஒரு போதும் இறப்பதில்லை. இது இல்லாதிருந்து பின் உண்டாவதில்லை. பிறப்பில்லாதது, என்றும் இருப்பது, புராதனமானது. உடல் கொல்லப்பட்டலும் ஆன்மா கொல்லப்படுவதில்லை.

கிழிந்த துணிகளைக் களைந்து எறிந்து விட்டு மனிதன் புதிய துணிகளை அணிந்து கொள்வது போல் ஆத்மா சிதைந்து போன உடம்புகளைக் களைந்து விட்டு புதிய உடம்பைப் பெற்றுக் கொள்கிறது”

என்று பகவான் கிருஷ்ணன் உடலின் நிலையாமை குறித்தும், ஆன்மாவின் நிரந்தரத்தன்மை குறித்தும் சொல்கிறார்.

ஒரு மனிதன் தன் உடலையே தானாகவும், தன் அடையாளமாகவும் காண முற்படும் போது அவன் கணக்கற்ற துன்பங்களைப் பெற வலுவான அஸ்திவாரத்தை ஏற்படுத்திக் கொள்கிறான். கிட்டத்தட்ட அனைத்து துக்கங்களுக்கும் மூல காரணம் அப்படி உடலையே “நான்” என்றும் “மற்றவர்” என்றும் எடுத்துக் கொள்ளும் அறியாமையே. எனவே தான் பகவான் கிருஷ்ணன் ஆரம்பத்திலேயே அந்த அறியாமையை சுட்டிக் காட்டுகிறார்.

நம் உடலில் ஒவ்வொரு நொடியும் ஆயிரக்கணக்கான செல்கள் பிறக்கின்றன, ஆயிரக்கணக்கான செல்கள் அழிகின்றன என்று இன்றைய விஞ்ஞானம் சொல்கிறது. மனித உடல் சில மாதங்களில் முற்றிலும் புதியதாக மாறி விடுகிறது என்றும் பழைய செல்களில் ஒன்று கூட அப்போது உடலில் எஞ்சி இருப்பதில்லை என்றும் நவீன விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். இன்று ஒரு தாவரத்தில் இருக்கும் செல், நாளை நம் உடம்பினுள்ளே இருக்கலாம். சில நாட்கள் கழித்து ஒரு விலங்கின் உடலில் அந்த செல்லைக் காணலாம். இப்படி உடல் இயங்கத் தேவையாக இருக்கும் செல்கள் கூட நம்மிடம் நிரந்தரமாக இருப்பதிலை. இன்று “நான்” என்று சொல்வதில் ஒரு பகுதியாக இருந்த செல் ஒரு நாள் தாவரத்தின் ’நானாக’ இருக்கிறது, இன்னொரு நாள் விலங்கின் ‘நானாக’ இருக்கிறது. இப்படி மாறிக் கொண்டே இருக்கும் உடலில் எது நம்முடையது? கணந்தோறும் மாறுவதும், கணந்தோறும் அழிவதுமான உடல் தான் நாமா?

இந்த செல்கள் பற்றிய விஞ்ஞானம் எல்லாம் எனக்குத் தெரியாது, என்னைப் பொறுத்த வரை பார்வைக்கு உடல் தொடர்ந்து இருக்கிறது என்று சொன்னால் கூட குழந்தைப் பருவம், இளமைப் பருவம், நடுத்தர வயதுப் பருவம், வயோதிகம் என்று பார்வைக்குக் கூட உடல் மாறிக் கொண்டே போகிறதே இதில் எது நீ என்ற கேள்வி எழுகிறது.

மேலும் உடலின் பிறப்புடன் ஆன்மா உருவாவதில்லை. உடல் இறக்கும் போது ஆன்மா அழிந்து போவதுமில்லை. என்றும் இருக்கும் ஆன்மாவிற்கு உடல் ஒரு ஆடையைப் போலத் தான். இந்த எண்ணம் மனதில் ஆழப்பதிந்தால் மரணம், அது யாருடையதானாலும், நம்மை வருத்தாது. தினம் தினம் உடை மாற்றுகிறோமே அதற்காக நாம் துக்கப்படுகிறோமா?

நீங்கள் உபயோகிக்கும் கருவி நீங்களாகி விட முடியாது. நீங்கள் எடுத்திருக்கும் இந்தப் பிறவி முழுவதும் நீங்கள் உபயோகிக்கும் கருவி தான் இந்த உடல். இதை நீங்களாக அடையாளம் காணும் போது அந்த அடையாளம் அத்துடன் நின்று போவதில்லை. அதனுடன் ஒரு பட்டாளமே கூட்டு சேர்ந்து விடுகிறது. நான், எனது மனைவி, எனது கணவன், எனது பிள்ளைகள், எனது நண்பர்கள் என்று அந்த ‘நானு’டன் நாம் இணைக்கும் கூட்டம் எல்லாமே சேரும் போது ஒன்றில்லா விட்டால் இன்னொன்று என்று ஏதாவது ஒரு துக்கம் நம்மைப் பாடாய் படுத்துகிறது. அத்துடன் நிற்காமல் எனது சொத்து, எனது பூமி, எனது செல்வாக்கு, எனது பதவி என்று நாம் தேடி சம்பாதித்ததும் நம்முடைய ‘நானு’டன் சேரும் போது இதற்கெல்லாம் வரும் சின்ன சின்ன நஷ்டங்கள் கூட நம்மைப் பாடாய் படுத்தும் சக்தி பெற்று விடுகிறது. வருத்தப்பட நிறைய காரணங்கள் நமக்குக் கிடைத்து விடுகின்றன. எனவே தான் பகவான் கிருஷ்ணன் இத்தனைக்கும் மூல வேரான இந்த உடலை நானாக நினைக்கும் அறியாமையின் முட்டாள்தனத்தை ஆரம்பத்திலேயே சுட்டிக் காட்டுகிறார். அந்த அறியாமை நம்மை விட்டு விலகும் போது அதனுடன் சம்பந்தப்பட்ட அத்தனை துக்கமும் நம்மிடம் இருந்து விலகுகின்றன.

பகவான் கிருஷ்ணன் மேலும் சொல்கிறார்.

“இந்த ஆன்மா எப்போதும் பிறப்பதாயும், இறப்பதாயும் நீ எண்ணினாலும் அப்போது கூட நீ துக்கப்படுவது சரியல்ல.

பிறந்தவன் இறப்பதும் இறந்தவன் பிறப்பதும் நிச்சயம். உன்னால் தவிர்க்க முடியாததற்கு நீ வருந்தி என்ன பயன்?”

பகவான் கிருஷ்ணன் அர்ஜுனனிற்காகவும், தத்துவங்களில் பெரிய நம்பிக்கை இல்லாதவர்களுக்காகவும், இன்னும் ஒரு படி இறங்கி வருகிறார். எனக்கு இந்த ஆன்மா பற்றிய தத்துவ விசாரங்கள் எல்லாம் பிடிபடவில்லை, எனக்கு உடல் தான் நான் என்று தோன்றுகிறது சொல்கிறவர்களுக்கு அவர் கேட்கும் கேள்வி தான் இது.

“நெருனல் உளனொருவன் இன்றில்லை எனும்
பெருமை உடைத்திவ் வுலகு”
என்று திருவள்ளுவர் சொன்னது போல உலகத்தில் நேற்று வரை வாழ்ந்தவனும் திடீர் என்று இன்று இல்லாமல் போவது இயல்பல்லவா? பிறப்பு என்று ஒன்று இருந்தால் இறப்பும் நிச்சயமல்லவா?

கிங் லியர் நாடகத்தில் ஷேக்ஸ்பியர் சொன்னது போல ”இந்த உலகத்திற்கு வருவதைப் போலவே இந்த உலகை விட்டுப் போவதையும் நாம் சகித்துக் கொள்ளவே வேண்டும்” அல்லவா?

எல்லோருக்கும் பொதுவாக இருக்கும் இந்த விதிக்கு நாமும் கட்டுப்பட்டவர்களே அல்லவா? உலகில் வாழும் ஒவ்வொரு உயிருக்கும் இது இயல்பான நிகழ்வே அல்லவா? ஒரு விதத்தில் பார்த்தால் நாம் இதை எதிர்பார்த்தே அல்லவா இருக்க வேண்டும்? பின் ஏன் நம் விஷயத்தில் நிகழும் போது நாம் பெருந்துக்கத்தில் அழுந்த வேண்டும்? மாறுதல் ஒன்றே மாறாத நியதி அல்லவா? நம் விஷயத்தில் மட்டும் அந்த நியதி மாறுபட வேண்டும் என்று ஆசைப்படுவது எந்த விதத்தில் நியாயம்?

இந்த உண்மைகளை எல்லாம் சொல்வது ஒருவன் ‘கல் மனம்’ கொண்டவனாய் மாறி விட வேண்டும் என்பதற்கல்ல. மரணம் நிகழும் போது, இழப்புகளை சந்திக்கும் போது, உடனடியாக வருத்தப்படுதல் சாதாரண மனிதர்களுக்கு இயல்பே. ஆனால் அதிலிருந்து உடனடியாக மீளுதல் மிக முக்கியம். அதைப் பெரிது படுத்தி சோகப் பெருங்கடலில் மூழ்க ஆரம்பிப்பதற்கு பதிலாக இந்த உண்மைகளை உள்ளத்தில் பதித்து, தெளிந்து, அடுத்ததாகச் செய்ய வேண்டியதைச் செய்ய ஆரம்பிப்பது புத்திசாலித்தனம். நம்மை சில இழப்புகள் செயலிழக்க வைத்து விடாமல் நம் வாழ்க்கைப் பாதையில் நாம் தொடர்ந்து முன்னேற இந்த உண்மைகள் நமக்கு பேருதவியாக இருக்கும்.

அடுத்ததாக பகவான் கிருஷ்ணன் கீதோபதேசத்தின் மிக முக்கியமான தத்துவம் ஒன்றை, வெற்றி பெற எண்ணும் ஒவ்வொரு மனிதனும் பின் பற்ற வேண்டிய ஒரு தத்துவத்தை, சொல்ல ஆரம்பிக்கிறார். அது என்ன என்று பார்ப்போமா?....

தொடர்வோம் ....

- என்.கணேசன்
நன்றி: விகடன்

11 comments:

  1. கவனிப்புத்தன்மை அபாரம் அதை எழுத்தில் கச்சிதமாக கொண்டு வந்ததற்கு பாராட்டுக்கள் ...
    டைம் இருந்தா நம்ம பக்கம் வாங்க..

    ReplyDelete
  2. அற்புதம். இப்படிச் சொன்னால் கீதை எவருக்கும் புரியும். பாராட்டுகள்

    ReplyDelete
  3. I felt Arjunan is worried that he has to kill his relatives and friends. He is not worried they are going to die, but b'coz he has to do the job. In that angle this explanation doesn't seem to fit for me. Can you clarify?

    ReplyDelete
  4. I also mentioned that only in my first chapter. "அவன் சொல்லாத ஒரு உண்மை அத்தனை பேச்சுக்கும் அடித்தளமாக இருந்தது. அது தன் அன்பிற்குரியவர்கள் மீது அவனுக்கு இருந்த அளவு கடந்த பாசம் தான். அவர்கள் அல்லாமல் வேறு யார் எதிரணியிலிருந்தாலும் அவர்களைக் கொன்று குவிப்பதில் அவனுக்கு எள்ளளவும் வருத்தம் இருந்திராது." So Arjuna's dilemma is their deaths are going to be caused by him. So Lord Krishna begins saying death is natural to mankind, it is inevitable. Next he explains that it is his duty as Kshatriya prince and his sudharma to kill them(which will be explained in coming chapters). Thus he relieves of his two worries namely their deaths and his killing them.

    ReplyDelete
  5. Thank you for your explanation. That was quick response.

    ReplyDelete
  6. //திடீரென்று தத்துவஞானியாக மாறிய அர்ஜுனன்// அவன் திடீரென மாறவில்லை, முன்னமே அவனுக்கு அத்தனை விஷயமும் தெரியும், இருந்தபோதும் பகவான் அவனை அந்தக் கணத்தில் மனக் குழப்பத்தை ஏற்ப்படுத்தி கேள்விகள் கேட்குமாறு செய்தார். ஏனெனில் பகவத் கீதை பிறக்க வேண்டுமே! அவன் அன்று கேட்டதால் தானே நாம் இன்று பகவத் கீதயைப் படிக்க கிடைக்கப் பெற்றோம்!! //இன்று ஒரு தாவரத்தில் இருக்கும் செல், நாளை நம் உடம்பினுள்ளே இருக்கலாம். சில நாட்கள் கழித்து ஒரு விலங்கின் உடலில் அந்த செல்லைக் காணலாம்.// உயிருள்ள செல்லாக போகாது, ஆனால் chemicals களாக போகும். ஒவ்வொரு ஏழு வருடத்திலும் உடலில் உள்ள வேதிப் பொருட்கள் chemicals 100% புதிதாக இருக்கும். இந்தப் பிறவியிலேயே குழந்தை, பால்ய பருவம், நடுத்தர வயது முதிய வயது என வெவேறு உடல்களை மாற்றுகிரோமே, அதுபோல இறப்பிர்க்கப்புரமும் ஆன்மா வேறொரு உடலை எடுக்கும்.

    ReplyDelete
  7. Krishna speech looks like mesmerizing Arjuna to become killer machine, though it is very philosophical, first of all why the lord preaches to kill another man that was also created by him. you say Evil must be punished and killed. Does it apply at any time and place NO. Even now you see lot of Evil men (now it applies to all the genders)will you go and kill that person. If it is lord's preaching it must apply at any place and time. To me this is just a story with lot of philosophical conversation nothing more to worship and follow universally. Not trying to offend you, I must admit that I am regular follower of your blogs and I have benefited from your other writings. Nithy (

    ReplyDelete
  8. முதலில் கீதை சொல்லப்பட்ட காலத்தை நினைவில் நிறுத்தினால் உண்மை புரியும். அர்ஜுனன் பிறப்பாலும், இயல்பாலும், கடமையாலும் மாவீரன்.அந்தக் காலத்தில் போரில் வெற்றியையும், வீரமரணத்தையும் ஒரு போல பெருமையாக நினைத்தார்கள். போரில் பின் வாங்குவதும் புற முதுகு காட்டி ஓடுவதும் மட்டுமே வீரனுக்கு இழிவாகக் கருதப்பட்டது. போர்க்களத்திற்கு தங்களின் நியாயமான உரிமை வேண்டி வந்த பின்னர் செண்டிமெண்ட்ஸ் கொண்டு அவன் போரிடாமல் பின் வாங்குவது அவன் இயல்புக்கோ, கடமைக்கோ, பெருமைக்கோ பொருத்தமானதல்ல. அப்படியே அவன் பின் வாங்கி இருந்தாலும் அந்த ஒரு கண முடிவுக்காக வாழ்நாள் எல்லாம் வருந்தி அர்ஜுனன் மறுகி இருப்பான். எனவே தான் எல்லாம் அறிந்த ஸ்ரீகிருஷ்ணர் ஒரு போர் வீரனாக அவன் தன் கடமையைச் செய்ய வலியுறுத்துகிறார். கெட்டவர்களை எல்லாம் கொல்வது என்பது சரியா என்று கேட்கிறீர்கள்? உதாரணத்திற்கு நீதிபதியை எடுத்துக் கொள்வோம். குற்றம் செய்தவருக்கு தண்டனை தருவது அவர் கடமை. அதில் குற்றம் செய்தவன் அவருக்கு மிக வேண்டியவனாக இருந்தால், அந்த நேரத்தில் இந்த நீதிமுறையே தவறு என்று அவர் பின் வாங்கினால் அது தவறு தானே. அவர் மரணதண்டனை விதித்து தீர்ப்பு கொடுத்த பின்னர் தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பில் உள்ளவர் தனக்கு வேண்டிய ஒரு ஆளைத் தூக்கில் போடப்போகும் போது மட்டும் தூக்கில் இடுவதே தவறு என்று முடிவுக்கு வருவதும் சரியல்ல அல்லவா? நம் உடலிலேயே ஒரு பாகம் நோய்க்கிருமிகளால் பாதிக்கப்பட்டு அப்பகுதியை அப்படியே விட்டு விட்டால் அது மற்ற பாகங்களுக்கும் பரவி அப்பாகங்களையும் அழித்து விடும் என்ற நிலை வரும் போது அப்பாகத்தை அழித்து மீதி உள்ள உடலைக் காப்பாற்றிக் கொள்ள நாம் தீர்மானிப்போம் அல்லவா? அதே போலவே தான் இங்கும் தர்மத்தை நிலைநாட்டி சமூகத்தைக் காப்பாற்றிக் கொள்ள தீயவர்களை அழிக்க அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் விருப்பு, வெறுப்பு இல்லாமல் இது நடந்தால் ஒழிய இது போன்ற செயல்கள் பேரழிவைத் தர ஆரம்பிக்கும் என்பதால் பின் வரும் பல இடங்களில் விருப்பு வெறுப்பற்ற சமநிலை பகவானால் அறிவுறுத்தப்படுகிறது. இத்தொடர் முழுவதையும் படித்து முடிக்கையில் இது போன்ற எல்லா சந்தேகங்களும் தெளிவாகும் என்று நம்புகிறேன். -என்.கணேசன்

    ReplyDelete
  9. @B+

    சட்டத்தைக் கையில் எடுத்து யார் வேண்டுமானாலும் யாரையும் தண்டிக்கலாம் கொள்ளலாம் என்று எடுத்துக் கொள்ளக் கூடாது.

    கீதையின் போர் புரிய சொல்லப்படும் காரணங்கள் சாதாரண பிரஜைகளுக்கு உரியதாகவே எடுத்துக் கொள்ளக் கூடாது. சட்ட ரீதியாக தண்டிக்கும் உரிமை பெற்ற உயர் அதிகாரி தன் உறவினர் என்ற காரணத்துக்காக ஒருவரை தண்டிக்காமல் அர்ஜுனன் போல் குழப்பம் அடைவாராகின் அவருக்கு அந்த அறிவுரைகள் பொருந்தும்.

    ReplyDelete
  10. ராஜ சுப்ரமணியன்February 23, 2011 at 6:41 PM

    நல்ல அறிவார்ந்த பதிவு. கீதையை எத்தனை முறை கேட்டாலும், நம் சிந்தனை விரிவடைகிறது. நன்றிகள்.

    ReplyDelete