சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, October 25, 2010

சோம்பல் ஒரு சோக காரணி





ஒருவன் வேலை தேடி ஒரு செல்வந்தரிடம் போனான். என்ன வேலையானாலும் செய்யத் தயார் என்றான். எவ்வளவு சம்பளமானாலும் சம்மதமே என்றான். அந்த செல்வந்தருக்கோ மட்டற்ற மகிழ்ச்சி. இப்படியும் ஒருவன் வேலையாளாகக் கிடைப்பது என்பது அதிர்ஷ்டமே அல்லவா?

அவன் தொடர்ந்து சொன்னான். “ஆனால் எனக்கு இரண்டே இரண்டு நிபந்தனைகள் .....”

அவர் கேட்டார். “என்ன நிபந்தனைகள்?”

அவன் சொன்னான். “முதலாவது நிபந்தனை- எனக்கு சாப்பிட்டவுடனேயே சிறிது நேரம் உறங்க வேண்டும்”

அவர் சொன்னார். “அது ஒரு பிரச்னையல்ல. அடுத்த நிபந்தனை என்ன?”

அவன் சொன்னான். “உறக்கத்தில் இருந்து விழித்த உடனேயே சிறிதாவது சாப்பிட வேண்டும்”

அந்த செல்வந்தரிடம் ஆரம்பத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சி கோபமாக மாறியது என்பதைச் சொல்லத் தேவையில்லை. உண்பதும் உறங்குவதுமே அவனுக்கு முழு நேர வேலை என்றால் அதற்கு சம்பளம் தர அவருக்கு பைத்தியமா பிடித்திருக்கிறது. அவனை அவர் அடித்து விரட்டினார்.

இது படிக்க ஒரு நகைச்சுவைக் கதை போல் தெரியலாம். ஆனால் நிறைய பேர் ஆசைப்படுவது இப்படித் தானிருக்கிறது. இந்த மனநிலை தான் சோம்பல். வாழ்க்கை சுமுகமாகப் போக வேண்டும், ஆனால் அது தங்கள் முயற்சியில்லாமல் நடந்தேற வேண்டும் என்று ஆசைப்படும் மனநிலை பலரிடம் இருக்கிறது. வார்த்தைகளில் சொல்லா விட்டாலும் எதிர்பார்ப்பு என்னவோ இப்படித்தான்.

சோம்பேறிகள் எந்த வித உழைப்பையும் மலைப்போடு பார்ப்பார்கள். கடுகளவு வேலையும் மலையளவாய் அவர்களுக்குத் தோன்றும். முயற்சி, வேலை என்றாலே ஒருவகை வெறுப்பை தங்கள் மனதில் வளர்த்து வைத்திருப்பார்கள். அப்படி வேறு வழியில்லாமல் வேலை செய்தே ஆக வேண்டும் என்று நிர்ப்பந்தம் வந்தால் அந்த வேலை தங்கள் வசதிக்கேற்ப இருக்க வேண்டும் என்று எண்ணுவார்கள். அந்த வேலையும் குறைந்த அளவாக இருக்க வேண்டும் என்றும், வேலையில் எந்த சிரமங்களும் இருக்கக்கூடாது என்று எண்ணுவார்கள். வேலை செய்வது எப்படி என்பதை அறிவதற்குப் பதிலாக அந்த வேலையில் இருந்து தப்பிப்பது என்பதை அறிந்து வைத்திருப்பார்கள்.
முடிந்த வரை அடுத்தவர்கள் தயவில், அடுத்தவர்கள் உழைப்பில் வாழத் துடிக்கும் இவர்கள் சோம்பல் தங்கள் வாழ்வில் மிகப்பெரிய சோக காரணி என்பதை உணர மறந்து விடுகிறார்கள்.

ஜெரிமி டெய்லர் சொல்வார். “உயிர் வாழும் மனிதனைப் புதைப்பது போன்றது சோம்பல்”. செஸ்டர் ஃபீல்டு பிரபு கூறுவார். “முயற்சி செய்யாமல் முடங்கிக் கிடைக்கும் சோம்பலை நான் ஒரு விதத் தற்கொலையாகவே கருதுகிறேன்”. அவர்கள் சொல்வது போல சோம்பேறித்தனம் மரணமடைவதற்கு சமமானது. இறந்தவனால் ஒன்றும் செய்ய முடியாது. சோம்பேறியோ ஒன்றும் செய்ய மாட்டான். இந்த இயக்கமின்மையை வைத்துப் பார்க்கும் போது இருவரும் ஒன்று தானே. இறக்கும் வரை இயங்கவே பிறந்திருக்கிறோம். இயங்க மறுப்பது வாழ்க்கையையே மறுப்பது போலத் தான்.


ஆனால் மேலும் ஆராய்ந்து பார்த்தால் சோம்பேறி பிணத்தைக் காட்டிலும் மோசமானவன். பிணம் மற்றவரை உபத்திரவிப்பதில்லை. சோம்பேறியோ யாரையெல்லாம் சார்ந்து இருக்கிறானோ அவர்களுக்கெல்லாம் பெரும் பாரமாகவும் உபத்திரவமாக இருக்கிறான். பிணம் யாரிடமிருந்தும் எதையும் எதிர்பார்க்காது. ஆனால் சோம்பேறிக்கோ அடுத்தவர்களிடம் நிறைய எதிர்பார்ப்பு இருக்கிறது.

மனிதன் பயன்படுத்தாத எதுவும் வலிமை குன்றிப் போகிறது. உடலை உழைக்க வைக்காத போது உடல் வலிமை குறைந்து கொண்டே போய் உடல் நோய்வாய் படுகிறது. அறிவைப் பயன்படுத்தாத போதோ சிந்திக்கும் திறன் குறைந்து கொண்டே போய் புத்தி மந்தமாகி விடுகிறது. சோம்பேறி இந்த இரண்டையும் பயன்படுத்தாமல் ஆரோக்கியத்திலும், புத்தியிலும் தனக்கே கேடு விளைவித்துக் கொள்கிறான்.

உலகில் உழைப்பில்லாமல் எந்த நல்ல காரியமும் நடந்து விடுவதில்லை. நம்மைச் சுற்றிப் பாருங்கள். நாம் வசிக்கும் வீடு உழைப்பால் உருவாக்கப்பட்டது. நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளும் உழைப்பால் உருவானவை. உழைப்பில்லாமல் உருவாவது களைகள் மட்டுமே. நல்ல செடிகளை நட்டு, நீருற்றி பேணிக்காக்க வேண்டி இருக்கிறது. அங்கு உழைப்பு தேவைப்படுகிறது.

சோம்பேறித்தனத்தால் நல்லது எதுவும் நடப்பதில்லை என்பது மட்டுமல்ல, ஏராளமான தீமைகளுக்கு சோம்பல் விளைநிலமாக இருக்கிறது என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம். சோம்பேறியின் மூளை தீமைகளின் தொழிற்சாலை என்று சொல்வார்கள். அது உண்மையே. தேங்கிக் கிடக்கும் நீரில் நோய்க்கிருமிகளும், புழு பூச்சிகளும் உருவாவது போல இயக்கம் இல்லாத சோம்பேறியின் மூளையில் தீய சிந்தனைகள் தழைக்கின்றன. திருட்டு, கொள்ளை எல்லாம் உழைக்கத் தயங்கும் சோம்பேறித்தனத்தின் விளைவுகளே அல்லவா?

சோம்பலின் தீமைகளை திருவள்ளுவரும் அருமையாக விளக்குவார்.

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும். (616)

(முயற்சி செல்வத்தை உருவாக்கும். சோம்பலோ வறுமையை சேர்த்து விடும்)

603 ஆம் குறளில் “மடிமடிக் கொண்டொழுகும் பேதை” என்பார். ”அழிக்கும் இயல்புடையதாகிய சோம்பலை தன்னிடம் கொண்டு நடக்கும் அறிவிலி” என்பது இதற்குப் பொருள்.

அவர் சொல்வது போல சோம்பேறித்தனம் முட்டாள்தனமே ஆகும். உழைப்பு கடினமானது என்பது ஒரு தவறான அஸ்திவாரத்தில் எழுப்பப்பட்ட கருத்து ஆகும். உண்மையில் பார்த்தால் உழைப்பை விட சோம்பலே கடினமானது. உழைக்கும் போது உடலுக்கும் அறிவிற்கும் வேலை இருப்பதால் காலம் வேகமாக ஓடி விடும். முடிவில் செல்வமும் நன்மையும் விளைந்திருக்கும். ஆனால் சோம்பலில் காலம் நகர்வதே இல்லை என்று தோன்றும். முடிவில் வெறுமையும் துக்கமுமே மிஞ்சும்.

எனவே சோம்பலை உங்களிடம் இருந்து விலக்குங்கள். சோகத்தையும், அர்த்தமின்மையையும் சேர்த்து நீங்கள் உங்கள் வாழ்க்கையிலிருந்து விலக்குவதாக அது அமையும்.

-என்.கணேசன்

நன்றி: ஈழநேசன்

7 comments:

  1. மிகவும் பயனுள்ள கட்டுரை.

    ரேகா ராகவன்.

    ReplyDelete
  2. Sir very good examples for laziness also in the earlier comment you said the font is unicode I have tried some of the tamil unicode fonts still some of the characters does not support can you suggest me the web address or font name of the website. Also one more request which i have mailed to u to meet u personally. View the mail & reply

    ReplyDelete
  3. "தேங்கிக் கிடக்கும் நீரில் நோய்க்கிருமிகளும், புழு பூச்சிகளும் உருவாவது போல இயக்கம் இல்லாத சோம்பேறியின் மூளையில் தீய சிந்தனைகள் தழைக்கின்றன"
    நல்ல கருத்து.....

    ReplyDelete
  4. அருமையான வெளிச்சப் பதிவு
    அன்புடன்
    நெல்லை பெ. நடேசன்
    அமீரகம்

    ReplyDelete
  5. ஆன்மீகம் மற்றும் இந்த பிரபஞ்சத்தின் இயக்கங்கள் மனிதன் மீது ஏற்படுத்தும் தாக்கம் பற்றி எழுதி வரும் தாங்கள் இது போன்ற கட்டுரையை இங்கு பிரசுரிப்பது ஆச்சரியமாக இருக்கிறது. நான் அறிந்த வரையில் சனியின் ஆதிக்கத்தில் (ஏழரைச்சனி நடப்பது) மாட்டிக் கொள்ளும் ஒருவர் மந்தமாகவும், சிந்தனை வளம் குறைந்தும் இருப்பது எதார்த்தமானது என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.
    உங்கள் பதில் என்ன? தெளிவான தகவல் தேவை.
    Information anxiety என்ற விடயம் சாதாரணமானதல்ல. குறிப்பாக மனிதனின் இயல்புகளை சொல்லும்போது. உங்களை போன்ற சிறந்த எழுத்தாளர்கள் சோம்பலின் அடிப்படை காரணத்தை சாதாரணமாக எழுதி விட்டு விடுவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
    சோம்பலுக்கு பல காரணங்கள் இருக்கலாம் என்பது எனது எண்ணம்..
    1.உடல் நலக்கோளாறு.
    2.இரவு முழுவதும் டாஸ்மாக்கில் இருந்து கும்மாளம் போட்டு விட்டு பகலில் படுத்துறங்குவது.
    3.அடுத்தவரின் வற்புறுத்தலினால் ஒரு வேலையில் சேர்ந்து விட்டு அதையும் விட முடியாமல் திணறுவது.
    4.வேறு விதமான மனப்பிரச்சனைகளை சமாளிக்க முடியாமல் சோர்நது கிடப்பது.
    5.மேலே சொன்ன சனிக்கிரகத்தின் தாக்கம்.
    இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
    சோம்பேறிக்கு இந்த உலகத்தில் இடமில்லை எனும் போது யார் சோம்பேறியாக இருக்க விரும்புவர்? சோற்றுக்கு வழி எது?

    ReplyDelete