என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Wednesday, August 25, 2010

ஒரே ஒருவரை சந்திக்க மறுக்காதீர்கள்!
வாழ்க்கையில் ஒரு முறையாவது சிலரை சந்தித்து விட வேண்டும் என்கிற எண்ணம் நம்மில் பலருக்கும் இருக்கும். அப்படி சந்திக்க விரும்பும் நபர்கள் அவரவர் தன்மையைப் பொருத்து இருக்கும். சிலர் தங்களுக்குப் பிடித்த சினிமா நடிகர், நடிகையரை ஒரு முறையாவது சந்தித்து விட வேண்டும் என்று விரும்புவார்கள். சிலர் விளையாட்டு வீரர்களை சந்திக்க ஆசைப்படுவார்கள். சிலர் மகான்களையும், சிலர் பிரபலங்களையும் சந்திப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள்.

ஆனால் சந்தித்தே ஆக வேண்டிய ஒரு நபரை மட்டும் சந்திக்க யாரிடமும் பெரிய ஆர்வம் இருப்பதில்லை. இன்னும் சொல்லப் போனால் அவர் எல்லோராலும் எப்போதும் தவிர்க்கவே படுகிறார். ஒருவேளை அவரை நேருக்கு நேர் சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தங்கள் வருமானால் அச்சமயங்களில் உடனே வேகமாக விலகி ஓடி ஒளிந்து கொள்கிறார்கள். அப்படி ஒரு நபரே இல்லை என்பது போல வேறு யாரையாவது பார்க்க விரைகிறார்கள். அந்த ஒருவரை சந்திப்பதைப் போல மிகக் கசப்பான அனுபவம் இல்லை என்கிற அளவு தப்பியோட பல வழிகளைத் தேடுகிறார்கள். வெகு சொற்பமான விதிவிலக்குகளைத் தவிர இது நம் எல்லோராலும் செய்யப்படுவது தான். அந்த நபரை நாமும் பார்ப்பதில்லை. அவரை மற்றவர்கள் பார்க்க அனுமதிப்பதுமில்லை.

யாரந்த நபர்? நீங்கள் சந்தித்தே ஆக வேண்டியிருந்தாலும் எப்போதும் உங்களால் தவிர்க்கப்படும் அந்த நபர் யார்? அது வேறு யாருமல்ல நீங்கள் தான்! வெளிப்புறத்தில் எல்லோருக்கும் தெரியும் நீங்கள் அல்ல அது. யாராலும் முழுவதுமாகக் காண முடியாத உள்ளே இருக்கும் உண்மையான நீங்கள்!

வெளியே இப்படித் தெரிய வேண்டும், அப்படித் தெரிந்தால் தான் அழகு, மதிப்பு எல்லாம் என்று ஒரு தோற்றத்தை உருவாக்க ஆரம்பிக்கும் மனிதன் தன் சுயரூபத்தை கூடுமான அளவு அடுத்தவரிடமிருந்து மறைத்துக் கொள்ளப் பார்க்கிறான். நாளடைவில் அந்தத் தோற்றமே அவனுக்கு மிக முக்கியமானதாக மாறி விடுகிறது. உலகமும் அந்தத் தோற்றத்தையே பார்க்கிறது, விமர்சிக்கிறது, மதிப்பிடுகிறது. உள்ளே உள்ள நிஜம் கற்பனையால் கூட ஊகிக்க முடியாத அளவு ஆழமாக அமுக்கப்படுகிறது.

காலப்போக்கில் மனிதன் அந்தத் தோற்றத்தையே பிரதானப்படுத்துகிறான். அதையே வளர்த்துகிறான். அதையே மெருகூட்டுகிறான். அடுத்தவர்களை அதையே நிஜம் என்று நம்ப வைக்க முயற்சித்து வெற்றியும் பெறுகிறான். கடைசியில் தானும் அதையே நிஜம் என்று நம்ப முயற்சிக்கிறான். ஓரளவு வெற்றியும் பெறுகிறான். ஆனால் உள்ளே உள்ள நிஜத்திற்கும் வெளியே உள்ள தோற்றத்திற்கும் இடையே உள்ள தூரம் நீண்டு கொண்டே போகின்றது.
பல நேரங்களில் ஒன்றுக்கொன்று சம்பந்தமே இல்லை என்னுமளவு வித்தியாசப்படுகிறது.

வெளியே புனித நூல்களை உதாரணம் காட்டி ஆன்மீகக் கடலில் ஆழ்த்தும் சில நபர்கள் உள்ளே சாக்கடையில் ஊறிக் கிடக்கிறார்கள். வெளியே அன்பையும், கருணையையும் போதிக்கும் சிலர் உள்ளே கொடூரமாக இருக்கிறார்கள். நாகரிகத்தின் அடையாளமாக காணப்படும் எத்தனையோ பேர் உள்ளே அநாகரிகத்தின் உச்சமாக இருக்கிறார்கள். இந்த அளவுக்கு இல்லா விட்டாலும் ஒருசில அபூர்வ விதிவிலக்குகள் தவிர எல்லாருமே ஓரளவாவது வெளித்தோற்றத்திற்கு எதிர்மறையான சிலவற்றையாவது உள்ளே மறைத்து வாழ்கிறார்கள்.

எல்லா அந்தரங்கங்களையும் அனைவருக்குமே அறிவித்து விட வேண்டியதில்லை தான். அனைவரும் அனைத்தையும் அறிந்து கொள்ள அவசியமில்லை தான். மற்றவரை பாதிக்காத தனது அந்தரங்கங்களைப் பிறரிடமிருந்து மறைப்பது அவரவர் உரிமை என்றே சொல்லலாம். ஆனால் உள்ளே உள்ள நிஜமான உங்களை நீங்களே அறியாமல் இருப்பது வடிகட்டிய முட்டாள்தனம்.

வெளித் தோற்றங்களால் இல்லாத ஒன்றை இருப்பதாகவும், இருக்கும் ஒன்றை இல்லாததாகவும் பிறரை நம்ப வைப்பது மிக சுலபம். ஆரம்பத்தில் பிறரை நம்ப வைக்க முயற்சிக்கும் ஒரு மனிதன் பின் தானே அதை நம்ப ஆரம்பிக்கும் போது உண்மையான மகிழ்ச்சியையும், மன நிறைவையும் இழக்க ஆரம்பிக்கிறான். ஏனென்றால் உண்மையான மகிழ்ச்சியும், மனநிறைவும் தன்னைத் தானே காண மறுக்கும் ஒரு மனிதனுக்கு, தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்ளும் ஒரு மனிதனுக்கு ஒரு போதும் கிடைப்பதில்லை. ஏதோ ஒரு வெற்றிடத்தை அவனுக்குள் அவன் உணர ஆரம்பிப்பது அப்போது தான்.

பலர் அந்த வெற்றிடத்தைப் பணத்தால் நிரப்பப் பார்க்கிறார்கள், புகழால் நிரப்பப் பார்க்கிறார்கள், போதையால் நிரப்பப் பார்க்கிறார்கள், அடுத்துவர்களை முந்துவதால் நிரப்பப்பார்க்கிறார்கள். ஆனால் அவ்வப்போது நிரம்புவது போல் தோன்றும் அந்த வெற்றிடம் மிகக் குறுகிய காலத்தில் மீண்டும் வெற்றிடமாகவே மாறி நிற்கும்.


எனவே உங்களுக்குள் இருக்கும் அந்த நிஜமான ‘உங்களை’ அடிக்கடி சந்திக்க மறுக்காதீர்கள். அந்த சந்திப்பு எவ்வளவு கசப்பான அனுபவமாக இருந்தாலும் அதைக் கண்டிப்பாகச் செய்யுங்கள். உள்ளதை உள்ளபடி காண்பதில் உறுதியாய் இருங்கள். அங்கே ஏராளமான பலவீனங்கள் இருக்கலாம். பெருமைப்பட முடியாத பல விஷயங்கள் இருக்கலாம். ஆனால் அவற்றை எல்லாம் தயங்காமல் கவனியுங்கள். இருப்பதை இருக்கிறது என்று ஏற்றுக் கொள்ளுங்கள். ஏனிருக்கிறது, எப்படி உருவாயிற்று, அதை எப்படி வளர்த்தோம் என்றெல்லாம் ஆழமாகச் சிந்தியுங்கள். உள்ளதென்று உணர்வதை நம்மால் எப்போதுமே மாற்றிக் கொள்ள முடியும். ஆழமான, நேர்மையான சுய பரிசோதனையால் எதையும் அறியவும் முடியும். அறிய முடியுமானால் அந்த அறிவு மாறுவது எப்படி என்ற வழியும் தெரியும். ஆனால் இல்லை என்று நினைத்து விட்டால் மாறுதல் என்றுமே சாத்தியமில்லை.

வெளியே காட்டிக்கொள்ளும் தோற்றத்திற்கும், உள்ளே இருக்கும் நிஜத்திற்கும் இடையே உள்ள தூரம் குறையக் குறைய தான் மனிதன் உயர ஆரம்பிக்கிறான். உண்மையான மன நிறைவை உணர ஆரம்பிக்கின்றான். நடிக்க வேண்டிய அவசியமே இல்லாமல் போகும் போது அவன் உணரும் அமைதியே அலாதியானது. ஆனால் இதற்கெல்லாம் உள்ளே உள்ள நிஜம் அடிக்கடி சந்திக்கப்பட வேண்டும், சிந்திக்கப்பட வேண்டும். அதை மறுப்பதும், தவிர்ப்பதும், மறப்பதும் வாழ்க்கையை என்றும் அதிருப்தியாகவும், துக்ககரமாகவுமே வைத்திருக்கும்.

-என்.கணேசன்
நன்றி: ஈழநேசன்

8 comments:

 1. உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்.

  ReplyDelete
 2. உங்களது பதிவுகள் அனைத்தையும் நான் என் கணினியில் காபி செய்து வைத்து படித்து வந்தேன்..அப்போது எனக்கு இந்த பிளாக் பற்றி எதுவும் தெரியாது..பின்னர் தற்போது நானும் ஒரு பிளாக் தொடங்கியவுடன்..உங்களது பதிவுகளைத் தேடிக்கொண்டே இருந்தேன்..கிடைக்கவே இல்லை...(எனது கணினியில் உங்கள் பதிவுகள் வைத்திருந்த ஹார்ட் டிஸ்க் ரிப்பேர் ஆகிவிட்டது..அதில் உள்ள தகவல்கள் இன்னும் எடுக்க முடியாத நிலையில் இருக்கிறது)...இன்று திடீரென உங்க பதிவைப் பார்த்ததும்..மிகவும் மகிழ்ந்தேன்..மிகவும் தன்னம்பிக்கை தெரிக்கும் எழுத்துக்களாக இருக்கின்றன..உங்கள் எழுத்துக்கள்...நன்றி

  ReplyDelete
 3. ஆழ்ந்த கருத்துக்கள்...

  ReplyDelete
 4. நல்ல கருத்துக்கள்.

  ReplyDelete
 5. //வெளியே காட்டிக்கொள்ளும் தோற்றத்திற்கும், உள்ளே இருக்கும் நிஜத்திற்கும் இடையே உள்ள தூரம் குறையக் குறைய தான் மனிதன் உயர ஆரம்பிக்கிறான்//

  so True

  ReplyDelete
 6. நான்கு நிலைகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

  1. பிறர் எந்த அளவில் நம்மை அறிந்து கொண்டிருக்கிறார் என்பது.
  2. பிறர் எந்த அளவில் நம்மை அறிய வில்லை என்பது.
  3. நாம் நம்மை எந்த அளவில் அறிந்து கொண்டிருக்கிறோம் என்பது.
  4. நாமே நம்மை எந்த அளவில் அறிய வில்லை என்பது.

  இந்த நால்வகை நிலையும் ஜோஹரி வின்டோ என்னும் தியரியில் அழகாக வர்ணிக்கப்படுகின்றன.
  இவைகளில் முதல் நிலையும் நாலாவது நிலையும் மாறுபடும்பொழுது பிணக்கங்கள் conflicts
  ஏற்படுகின்றன. குறிப்பாகச் சொல்லப்போனால், நம்மை எந்த அளவிற்கு அல்லது ஏதோ ஒரு குறிப்பிட்ட‌
  தன்மையில் பிறர் அறிகிறாரோ , அவற்றினை நாமே நம்மைப்பற்றி அறியவில்லை எனின், அவருக்கும் நமக்கும்
  கருத்து வேறுபாடு மட்டுமல்ல, பிணக்கங்களும் சச்சரவுகளும் கூட தோன்றுகின்றன.

  எனவே, நாம் நம்மைப் பற்றி அறியாதன கூட, ந்ம்மைப்பற்றி பிறர் அறியவொரு வாய்ப்பு இருக்கிறது என்பதை
  அறிவது அறிவு.

  நீங்கள் சொல்லியவாறு நாம் நம்மைப்பற்றியே அறிவது அதிகரிக்கும்பொழுது தான் நமது பூரணத்வம்
  சித்திக்கிறது.

  இன்னும் ஒன்று. நாமும் அறியாது பிறரும் அறிய வாய்ப்பில்லாத பல நிலைகளும் உள்ளன. இதை
  இருட்டு அறை என்பர். இந்த இருட்டறை சுத்தமாக நீங்குவது எல்லோருக்கும் இயலுமா !!

  சுப்பு ரத்தினம்.
  http://pureaanmeekam.blogspot.com
  http://kandhanaithuthi.blogspot.com

  ReplyDelete
 7. அருமையான வாழ்க்கைட்தத்துவத்திற்குப் பாராட்டுக்கள்.

  ReplyDelete