தன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.
Friday, June 4, 2010
ஆழ்மனதின் அற்புத சக்திகள்-34
மந்திர தியானம்
அடுத்ததாக இன்னொரு எளிமையான, சக்தி வாய்ந்த தியானமான மந்திர தியானத்தைப் பார்ப்போம். மந்திரம் என்றால் அது இந்து மத தியானம் என்பது போல் ஒரு எண்ணம் தோன்றலாம். ஆனால் இது சர்வ மதத்தினரும், மதங்களைச் சாராதவர்களும், நாத்திகர்களும் கூட பின்பற்றக் கூடிய வகையில் அமைந்த தியானம் என்பதே உண்மை.
மந்திரம் என்பது சக்தி வாய்ந்த சொல் அல்லது சொற்றொடர். இந்த மந்திரங்களின் சக்தியை இந்தியர்களும் திபெத்தியர்களும் பண்டைய காலத்திலேயே நன்றாக அறிந்திருந்தார்கள். ஓம் என்கிற ஓங்காரத்தில் இருந்தே அனைத்தும் தோன்றின என்கின்றது இந்து மதம். ஓம் மந்திரமும் காயத்ரி மந்திரமும் மிகவும் சக்தி வாய்ந்த மந்திரங்களாக இந்துக்கள் கருதுகிறார்கள்.
“ஆதியில் வசனம் இருந்தது. அந்த வசனமே தெய்வத்துடையதாக இருந்தது. அந்த வசனமே தெய்வமாக இருந்தது” என்று பைபிள் கூறுகிறது. (In the beginning was the Word, and the Word was with God, and the Word was God. New Testament, John1:1-2)
அரபுக்கதைகளிலும் சில மந்திரச் சொற்கள் அற்புதங்களை நிகழ்த்துவதாகக் கூறுவதை நாம் படித்திருக்கிறோம். ஆக உலகமெங்கும் மந்திரங்களை சக்தி வாய்ந்தவை என பலரும் பல காலமாக அங்கீகரித்திருப்பதை நாம் உணரலாம்.
இந்த மந்திர தியானத்தில் மனதைக் குவிக்க ஒரு எளிய சொல் அல்லது மந்திரம் உபயோகப்படுத்தப் படுகிறது. ஒரு காலத்தில் அது குருவால் தரப்படும் இரகசியச் சொல்லாக இருந்தது. அது நாமாகத் தேர்ந்தெடுக்கும் சொல்லாக இருந்ததில்லை. குரு மூலம் பெறும் அந்த சொல்லிற்கு மிகுந்த சக்தி இருப்பதாக நம்பப்பட்டதால் அந்த மந்திர தியானம் சக்தி வாய்ந்ததாக கருதப்பட்டது. அன்றும் இன்றும் பிரபலமான தியான முறைகளில் ஒன்றாக இது இருந்து வருகிறது.
மகரிஷி மகேஷ் யோகியின் ஆழ்நிலை தியானத்திலும் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட ஒரு மந்திரம் தியானத்திற்காகத் தரப்படுகிறது. தியானத்தின் போது அந்த மந்திரச்சொல்லில் முழுக்கவனத்தையும் வைக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது.
மந்திர தியானம் மதங்களைக் கடந்து பயன்படுத்தப்படுகிறது என்பதற்கு ஒரு சுவையான உதாரணத்தைச் சொல்லலாம். ஜான் மெய்ன் என்ற இங்கிலாந்தைச் சேர்ந்த கத்தோலிக்க ஐரிஷ் பாதிரியார் இரண்டாம் உலகப் போரின் போது அரசுப்பணியில் மலாயாவிற்கு அனுப்பப்பட்டார். அப்போது கோலாலம்பூரில் ஒரு ஆசிரமம் நடத்தி வந்த ஸ்வாமி சத்யானந்த சரஸ்வதியை சந்தித்த போது ஆன்மிக விஷயங்களைப் பற்றி இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். ஸ்வாமி சத்யானந்த சரஸ்வதி தியானங்கள் பற்றி விவரித்தது ஜான் மெய்னை மிகவும் கவரவே தங்கள் மதத்திற்கேற்ப தியானம் செய்ய முடியுமா என்று அவர் ஸ்வாமியைக் கேட்டார்.
தியானம் மதங்களைக் கடந்தது என்று சொன்ன ஸ்வாமி ஜான் மெய்னுக்கு ஒரு கிறிஸ்துவ புனித வார்த்தையை உபதேசம் செய்து அந்த மந்திரத்தின் மீது தினமும் இருமுறை தியானம் செய்யச் சொன்னார். அந்த மந்திர தியான முறையையும் ஸ்வாமி அவருக்குச் சொல்லித்தந்தார். அவர் சொல்லித் தந்தபடியே தியானத்தை செய்த ஜான் மெயின் வாரா வாரம் ஸ்வாமி சத்யானந்த சரஸ்வதியின் ஆசிரமத்திகே வந்து அந்தத் தியானத்தை ஸ்வாமியுடன் சேர்ந்து செய்தார். அதனால் சிறப்பான ஆன்மிக அனுபவத்தைப் பெற்றதால் ஜான் மெயினின் ஆன்மிக வாழ்க்கையின் அங்கமாக அந்த தியானம் மாறியது.
இங்கிலாந்து திரும்பிய பின்னர் அந்த தியானத்தைத் தொடர்ந்த ஜான் மெய்ன் அவரது தலைமை பாதிரியாரிடமிருந்து எதிர்ப்பை சந்தித்தார். இந்த தியான முறை கிறிஸ்துவ சம்பிரதாயத்திற்கு எதிர்மாறானது என்று தலைமை பாதிரியார் தடுத்தார். சிறிது காலம் அந்த தியான முறையை நிறுத்திக் கொண்ட ஜான் மெய்ன் ஏதோ இழந்தது போல் உணர்ந்தார். பின் கிறிஸ்துவ நூல்களை ஆழமாகப் படித்த போது மிகப் பழைய காலத்தில் இது போன்ற தியான முறை கிறிஸ்துவர்களிடமும் இருந்தது என்பதற்கான ஆதாரங்களைக் கண்டறிந்தார். பலரிடமிருந்து வந்த கடும் விமரிசனங்களைப் பொருட்படுத்தாமல் மீண்டும் தான் கடைப்பிடித்து வந்த தியானத்தைத் தொடர்ந்த ஜான் மெய்ன் தனது தியானத்திற்கு ’கிறிஸ்துவ தியானம்’ என்று பெயரிட்டு பரப்பினார். 1982ல் அவர் மறைந்தாலும் கிறிஸ்துவ தியானம் பல நாடுகளில் பிரபலமாகி பின்பற்றப்பட்டு வருகிறது. இப்படி மந்திர தியானம் உலகில் பல வடிவங்களில், பல மதத்தினரால், பல பெயர்களில் இக்காலத்தில் பின்பற்றப்படுகிறது.
மந்திரத் தியானம் செய்யும் முறையை அறியும் முன் ஒரு மந்திரத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது முக்கியம். அந்த மந்திரத்தை நீங்கள் ஒரு குருவிடம் இருந்து பெறலாம். இல்லா விட்டால் நீங்களாகவே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
மந்திர தியானத்திற்கு நீங்கள் தேர்ந்தெடுக்கும் மந்திரம் இரண்டு தன்மைகளைக் கொண்டிருக்க வேண்டும். முதலாவதாக அந்த மந்திரம் சுருக்கமாக இருக்க வேண்டும். பொதுவாக அது ஓரிரு வார்த்தைகளாக மட்டும் இருப்பது நல்லது. (காயத்ரி மந்திரம் மிக உயர்ந்த மந்திரமானாலும் அது ஓரிரு வார்த்தைகளுக்கு மேல் நீண்டு இருப்பதால் இது போன்ற மந்திர தியானங்களுக்குப் பயன்படுத்தப்படுவதில்லை).
நீங்கள் தேர்ந்தெடுக்கும் அந்த மந்திரம் ஏதோ ஒரு வகையில் உங்களுக்கு மிக உயர்ந்ததாகவோ, சக்தி வாய்ந்ததாகத் தோன்றுவதாகவோ இருக்க வேண்டும். அப்போது தான் மந்திர தியானத்தில் நீங்கள் பெறும் பலன் சக்தி வாய்ந்ததாக இருக்கும். (அந்த மந்திரத்தின் அர்த்தம் உங்களுக்கு விளங்கியிருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. உதாரணத்திற்கு மகரிஷி மகேஷ் யோகியின் ஆழ்நிலை தியானத்தில் பங்கு பெறும் அமெரிக்க, ஐரோப்பிய நபர்களுக்கு மந்திரமாக தரப்படுபவை பெரும்பாலும் வேதங்களில் இருக்கும் சம்ஸ்கிருத சொற்கள் தான். அது புனித சொல், சக்தி வாய்ந்த மந்திரம் என்பது மட்டும் அவர்களுக்கு உணர்த்தப்படுகிறது)
மந்திர தியானத்திற்குப் பொதுவாக பலரும் பயன்படுத்தும் சில மந்திரங்களையும், மந்திர தியானம் செய்யும் முறையையும் அடுத்த வாரம் விரிவாகப் பார்ப்போம்.....
-என்.கணேசன்
நன்றி: விகடன்
Labels:
ஆழ்மன சக்தி,
தியானம்
Subscribe to:
Post Comments (Atom)
I have never read such quality contents like this in any site. I am almost every day doing word of mouth for this. Thanks a million for sharing with us. Keep rocking sir.
ReplyDeleteபுதியவர்களுக்கு கூட புரியும்படி எளிமையாக சொல்லியுள்ளீர்கள்.
ReplyDeleteதியானம் மனதுக்கான பயிர்ச்சி,அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும்.
//மந்திரம் என்றால் அது இந்து மத தியானம் என்பது போல் ஒரு எண்ணம் தோன்றலாம்.// ஏன் இந்து மத தியானமாகத் தான் இருந்தால் என்னவாம்? அதை சொல்வதற்கு ஏன் தயக்கம். உலகிலேயே மந்திர உச்சாடனங்கள் மூலம் சக்திகளை மேலெழுப்பும் உத்தியையும் தியானத்தையும் சொல்லிக்கொடுத்தது இந்து தர்மம் தானே. அதை அப்படியே ஏற்றுக்கொள்ள தயாராக இல்லாதவர்களுக்காக நாம் ஏன் பசப்ப வேண்டும். ஒரு நல்ல விஷயம் இந்து மதத்தைச் சார்ந்தது என்று சொல்வதர்கே நம்மவர்கள் கூசிப்போகும் கொடுமை இந்தியாவில் மட்டுமே நடக்கிறது. மந்திர தியானம் இந்துமதம் சொல்லிக்கொடுத்த கொடையே என்பதை வெளிப்படையாகச் சொல்லுங்கள்.
ReplyDeleteஅன்புடன்
ராம்
www.hayyram.blogspot.com
manathai migavum kavarntha pathivu.
ReplyDeleteExcellent.we will proudly Hindus
ReplyDelete