என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Friday, May 14, 2010

எண்ணங்கள் பிரம்மாக்கள்


ல்லா செயல்களுக்கும், நிகழ்ச்சிகளுக்கும் மூல விதை எண்ணங்களே. எண்ணங்கள் இல்லாமல் செயல்கள் இல்லை. நிகழ்ச்சிகள் இல்லை. நம்மைச் சுற்றி இருக்கும் ஒவ்வொரு பொருளும் யாரோ ஒருவர் எண்ணத்தில் கருவாகி பின்னால் உருவாகியது தான். ஒவ்வொருவரின் வெற்றிக்கும், தோல்விக்கும் அவரவர் எண்ணங்களே மிக முக்கிய காரணங்களாக இருக்கின்றன.

இதைப் பெரும்பாலோருக்கு ஏற்க கடினமாக இருக்கலாம். நான் தோல்வி அடைய வேண்டும் என்று எண்ணுவேனா, நான் கஷ்டப்பட வேண்டும் என்று எண்ணுவேனா? பின் எதனால் எனக்குத் தோல்வி வந்தது? எதனால் கஷ்டம் வந்தது? என்று கேட்கலாம். கேட்பது நியாயமாகக் கூட நமக்குத் தோன்றலாம். ஆனால் ஆராய்ந்து பார்த்தால் தான் உண்மை விளங்கும்.

உதாரணத்திற்கு எனக்குத் தெரிந்த ஒரு மனிதரைச் சொல்லலாம். அவர் வியாபாரத்தில் பெரிய வெற்றியடைய வேண்டும் என்பதே தனக்கு லட்சியம் என்று அடிக்கடி சொல்லிக் கொள்வார். தந்தையின் சொத்தில் ஒரு நல்ல தொகை அவருக்குக் கிடைத்து அதை மூலதனமாகப் போட்டு அவர் வியாபாரம் ஆரம்பித்தார். காலையில் ஏழரை மணிவாக்கில் தான் எழுந்திருப்பார். அரை மணி நேரம் செய்தித்தாள் படிப்பார். பத்து மணிக்குத் தான் கடையைத் திறப்பார். மதியம் ஒன்றரை மணிக்கு வீட்டுக்கு வந்தாரானால் சாப்பிட்டு விட்டுத் தூங்கி எழுந்து மறுபடி ஐந்து மணிக்குத் தான் கடைக்கு செல்வார். எட்டரை மணிக்கு கடையை மூடி விட்டு வீடு திரும்புவார். அவருடைய போட்டியாளர்கள் எல்லாம் காலை ஒன்பது மணி முதல் இரவு ஒன்பது மணி வரை மதியம் அரை மணி சாப்பாட்டு நேரம் தவிர கடையில் இருந்து வியாபாரம் செய்தார்கள்.

அதைச் சிலர் சுட்டிக்காட்டிய போது அவரோ “மதியம் சற்று தூங்கினால் ஒழிய எனக்கு உடல் ஒத்துக் கொள்கிறதில்லை. அந்த மதிய நேரத்தில் பெரிதாக என்ன வியாபாரம் ஆகி விடப்போகிறது” என்று சொன்னார். எட்டரை மணிக்கு கிளம்பி வருவது ஏன் என்று ஒருவர் கேட்ட போது “ஒன்பது மணி சீரியல் ஒன்று டிவியில் நன்றாக இருக்கிறது. எனவே எட்டரைக்குக் கிளம்பினால் தான் சரியாக அதைப் பார்க்க சரியாக இருக்கிறது” என்றார். வியாபாரத்தில் சிலர் அவருக்கு சற்று மரியாதை குறைவாகக் கொடுப்பது போல் தோன்றினாலும் அவரிடம் வியாபாரம் செய்வதை நிறுத்தி விடுவார். அவர் வியாபாரத்தில் படுநஷ்டம் ஏற்பட்டது என்பதை கூறத் தேவையில்லை.

வெற்றியடைய வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருந்தது உண்மையாக இருக்கலாம். ஆனால் மதிய நேரம் மூன்று மணி நேரமாவது தூங்க வேண்டும் என்ற எண்ணமும், இரவு ஒன்பது மணி சீரியலைப் பார்த்தே தீர வேண்டும் என்ற எண்ணமும், நல்ல மரியாதை தனக்கு கிடைக்க வேண்டும் என்ற எண்ணமும் வெற்றியடைய வேண்டும் என்ற எண்ணத்தையும் விட பல மடங்கு வலிமையாக ஆணித்தரமாக அவரிடம் இருந்தன. அந்த பலமான, ஆணித்தரமான எண்ணங்கள் செயல்களாகின. தூங்க முடிந்தது. சீரியல் பார்க்க முடிந்தது. மரியாதை தருபவர்களுடன் மட்டுமே வியாபாரம் செய்ய முடிந்தது. வெற்றியடைய வேண்டும் என்ற எண்ணத்தை விட வெற்றிக்கு எதிர்மறையான எண்ணங்கள் வலிமையாக இருந்ததால் வெற்றி மட்டும் கிடைக்கவில்லை.

எனவே வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் எனக்கு அதிகம் இருந்தும் எனக்கு வெற்றியே கிடைக்கவில்லை என்று யாராவது சொன்னால் அவர் வெற்றி பற்றிய எண்ணத்தோடு கூட இருக்கும் மற்ற எண்ணங்களையும் பரிசோதித்துப் பார்ப்பது நல்லது.

வாய் விட்டுச் சொல்லும் எண்ணங்கள் தான் முக்கியமானது என்றில்லை. பெரும்பாலான நேரங்களில் வாய் விட்டுச் சொல்லாத, வார்த்தையாகாத எண்ணங்கள் நம்முள்ளே வலிமையாக இருக்குமானால் அந்த வலிமையான எண்ணங்கள் தான் செயல்களாகும். மேலே சொன்ன உதாரணத்தில் தோல்வியடைய வேண்டும் என்பது அவரது எண்ணமாயில்லை என்றாலும் தோல்விக்கு இட்டுச் செல்கின்ற எண்ணங்கள் அவரிடம் வலிமையாக இருந்ததால் தோல்வி நிஜமாகியது.

ஒரு முறை எண்ணிய உடனேயே அந்த எண்ணம் சக்தி படைத்ததாக மாறி விடுவதில்லை. ஒரு எண்ணம் திரும்பத் திரும்ப எண்ணப்படும் போது அது சக்தி பெற ஆரம்பிக்கிறது. அந்த சக்தி அதை செயல்படுத்தத் தூண்டுகிறது. அதே எண்ணங்கள் கொண்டவர்களை தன் பக்கம் ஈர்க்கிறது. மேலும் வலுப்பெறுகிறது. அது அலைகளாகப் பலரையும் பாதிக்கிறது. பலரையும் செயலுக்குத் தூண்டுகிறது. அந்த எண்ணம் வலிமையானதாக இருந்தால் அது தனி மனிதர்களை மட்டுமல்ல, ஒரு சமூகத்தையே மாற்றலாம், நாட்டையே மாற்றலாம்.

சூரியன் அஸ்தமிக்காத பேரரசாகத் திகழ்ந்த ஆங்கிலேயர் ஆட்சியை கத்தியின்றி, இரத்தமின்றி போராடி இந்தியாவை விட்டு விரட்ட முடியும் என்ற எண்ணம் மகாத்மா காந்தியிடம் இருந்தது. எண்ண அளவிலே அது நகைப்பிற்கு இடமளிப்பதாகவே தோன்றினாலும் அந்த எண்ணத்தின் வலிமை இந்திய தேசத்தின் சரித்திரத்தையே பின்னாளில் மாற்றியமைத்ததை நாம் அறிவோம். அந்த எண்ணத்தின் வீரியம் எண்ணற்ற மனிதர்களைத் தொட முடிந்ததும், அந்த மனிதர்களை மாற்ற முடிந்ததும், சுதந்திரப் போராட்ட பேரலையை இந்தியாவில் உருவாக்க முடிந்ததும் வரலாறு அல்லவா? ஆங்கிலேய சூரியன் இந்திய மண்ணை விட்டு மறைந்தது சரித்திரம் அல்லவா?

ஒவ்வொரு புரட்சிக்குப் பின்னும், ஒவ்வொரு பெரிய மாற்றத்திற்குப் பின்னும், வலிமை வாய்ந்த எண்ணங்கள் ஆரம்பங்களாக இருந்திருக்கின்றன. வரலாற்றின் மாற்றத்திற்கே விதைகள் எண்ணங்களாக இருக்கின்றன என்றால் தனி மனித மாற்றத்திற்கு எண்ணங்கள் எந்த அளவு முக்கியம் என்பதை சொல்லத் தேவையில்லை.

நான் அதிர்ஷ்டமில்லாதவன் என்கிற எண்ணமே அடிக்கடி ஒருவர் மனதில் எழுமானால் அதற்கான ஆயிரம் நிரூபணங்களை அந்த எண்ணம் அவர் வாழ்வில் ஏற்படுத்திக் கொடுக்கும். என்னால் முடியும் என்ற உறுதியான எண்ணமே எப்போதும் ஒருவர் மனதில் மேலோங்கி நின்றால் அந்த எண்ணம் உண்மையில் அந்தக் காரியத்தை கண்டிப்பாக முடித்துக் காட்டும்.

எண்ணங்கள் பிரம்மாக்கள். அவை எண்ணியதை உருவாக்கும் சக்தி படைத்தவை. ஒரு எண்ணம் செயலாக முடியாமல் போகிறதென்றால் அதை விட சக்தி வாய்ந்த வேறொரு எண்ணம் அதனுடனேயே இருந்து போராடி அதனைப் பலமிழக்க வைத்திருக்கிறது என்று பொருள். எனவே உங்கள் மனதில் அதிகமாக மேலோங்கி நிற்கும் எண்ணங்கள் எத்தகையவை என்பதை அடிக்கடி சோதித்துப் பாருங்கள். அவை இன்று உங்களை இந்த நிலைக்குக் கொண்டு சேர்த்த பெருமை உடையவை. உங்களுடைய இன்றைய நிலை திருப்திகரமாக இல்லையென்றால் முதலில் உங்கள் எண்ணங்களை மாற்றுங்கள். எண்ணங்கள் மாறுகிற போது அதற்கேற்ப எல்லாமே மாறும். இது மாறாத உண்மை.

- என்.கணேசன்
- நன்றி: ஈழநேசன்

19 comments:

 1. நீங்கள் சொல்வது உண்மைதான் சார்.. அருமையான பதிவு..

  ReplyDelete
 2. அருமையான பதிவினை எங்களுக்கு கொடுக்கவேண்டும் என்ற உங்களின் எண்ணம் உயர்ந்தது.

  ரேகா ராகவன்
  (சிகாகோவிலிருந்து)

  ReplyDelete
 3. எண்ணங்கள் வலிமையானவை!
  மனிதனை வடிவமைப்பவை!

  என்பதை எடுத்தியம்பும் தங்கள் இடுகைகளைத் தொடர்ந்து படித்துவருகிறேன்.

  மிக நன்று.

  தொடருங்கள் நண்பரே.

  ReplyDelete
 4. எல்லோரும் அவசியம் படிக்க வேண்டிய பதிவு.
  நன்றி!

  ReplyDelete
 5. உண்மையாக எண்ணங்களுக்கு ஒரு சக்தி உண்டு .. ஒரு இடத்தில் கூட்டமாக நின்று ஒரே விடயத்தை அனைவரும் சிந்திக்கும் பொது . அதுக்கு இன்னும் பலம் . அது தான் கடவுள் என நாம் கூறுவது . நல்ல பதிவு வாழ்த்துக்கள் ..

  ReplyDelete
 6. good article.write more articles..All the best.

  ReplyDelete
 7. நிச்சயமாக
  எண்ணங்களே பிரம்மாக்கள்
  நல்ல பதிவு
  தொடருங்கள்
  இனியன் பாலாஜி

  ReplyDelete
 8. Srinivasan TiruvannamalaiMay 17, 2010 at 5:00 PM

  I am really admired withyour articles Speacially aazh mana sakthi.it is really worth to read all your articles.keep it your exceptional job.Just guide me to get nice books regarding "how to improve cosmic energy".Thanks a lot

  ReplyDelete
 9. yes you are right! i happen to experience your words in my life much. if we happen to think about a issuse it leads to action and will success in end though its a positive or negative thing.

  ReplyDelete
 10. Ya very true statement......Good work forever brother......

  World must change...Specially our thamil society..

  ReplyDelete
 11. உண்ணும் உணவு உடல் மட்டும் பாயும்..
  என்னும் எண்ணம் எங்கும் பாயும் !!

  selvaraj238@gmail.com

  ReplyDelete
 12. Parvathi Visweswaran and Visweswaran SubramanyamMarch 30, 2013 at 10:15 AM

  Ever day, my wife and myself read at least one such article to our children (boys at ages 17 and 11). It is we who could realize the power of your statements. Prior to reading your article, whenever my wife and myself had attempted to convey the same message, it did not make the same impression in the minds of our children. But when the same message is conveyed through your writing it works out! Because, we are sure, when you wrote the article you had mixed your powerful Ahtma shkath while making it. That energy of Spirit penetrates the minds of the readers... Long live, Shree. Ganeshan! You must long live with His continued Blessings.... With love and respects, Parvathi Visweswaran and self (Visweswaran) Winnipeg Canada - 2013-03-29.

  ReplyDelete
 13. very powerful article.Thank you.

  ReplyDelete