சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, April 22, 2010

ஆழ்மனதின் அற்புத சக்திகள்-29

ஆல்ஃபா அலைகளும் எளிய பயிற்சியும்




எல்லா அற்புதங்களையும் நிகழ்த்தக்கூடிய ஆழ்மனதின் சக்திகள் ஆல்ஃபா, தீட்டா, டெல்டா அலை வரிசைகளில் நாம் இருக்கையில் சாத்தியமாகின்றன என்பதைப் பார்த்தோம். அவற்றில் நம்மையறியாமல் நாம் பல முறை சஞ்சரித்துக் கொண்டு இருந்திருக்கலாம் என்றாலும் அவற்றை நாம் உணர்ந்திருப்பதில்லை. அவற்றை நாமாக ஏற்படுத்திக் கொள்ளாமல் தானாக அந்த அலைவரிசைகளில் இருந்திருக்கக் கூடிய சந்தர்ப்பங்களை எப்படிப் பயன்படுத்துவது என்பதை நாம் அறிந்திருப்பதுமில்லை.

முதலில் ஆல்ஃபா அலைகள் பற்றியும் அந்த அலைவரிசைக்கு நம் மனதைக் கொண்டு செல்வது எப்படி என்பதையும் பார்ப்போம்.

1924 ஆம் ஆண்டு ஜெர்மானிய மனோதத்துவ அறிஞர் ஹேன்ஸ் பெர்கர் அதீத மனோசக்திகளை ஆராய்ச்சி செய்யும் போது, குறிப்பாக டெலிபதி என்னும் ஒரு மனதிலிருந்து இன்னொரு மனதிற்கு செய்தி அனுப்பவோ, பெறவோ முடிந்த சக்தியை ஆராய்ச்சி செய்த போது அந்த நேரங்களில் அந்த மனிதர்கள் ஆல்ஃபா அலைவரிசையில் இருப்பதைப் பதிவு செய்தார். முதல் முதலில் அந்த அலைகளுக்கு ஆல்ஃபா அலைகள் என்று பெயரிட்டவரும் அவர் தான் என்று சிலர் சொல்கிறார்கள். அந்த சக்தி கிட்டத்தட்ட 100 மைக்ரோவால்ட்ஸ்
ஆக இருக்கிறது என்றும் அவர் அளவிட்டார். அவர் காலத்தில் இந்த அலைவரிசைகள் பெரும் அளவில் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்படா விட்டாலும் பிற்காலத்தில் பெருமளவில் ஆராயப்பட்டது.

புதிய புதிய கண்டுபிடிப்புகளைச் செய்த பெரிய விஞ்ஞானிகளும், தங்கள் கற்பனையால் காலத்தால் அழியாத புதுமைகளைப் படைத்த பிரபல கலைஞர்களும், யோகிகளும் அதிகமாக ஆல்ஃபா அலைவரிசைகளிலேயே அதிக நேரங்களில் இருந்தார்கள் என்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

பரபரப்பு மிகுந்த, அதிக சக்தி செலவழித்து முயலும், மனநிலையில் தான் பெரிய வேலைகள் ஆகின்றன, அதிக வேலைகள் சாத்தியமாகின்றன என்று நாம் பலரும் இன்றும் தவறாக நினைக்கிறோம். ஆனால் உண்மை அதுவல்ல என்று EEG போன்ற கருவிகளைக் கொண்டு செய்த ஆராய்ச்சிகள் சொல்கின்றன.
சென்ற நூற்றாண்டின் இணையற்ற விஞ்ஞானியான ஐன்ஸ்டீன் அவர்கள் கூட தன் ஆராய்ச்சி நேரங்களில் பெரும்பாலும் ஆல்ஃபா அலைவரிசையில் தான் இருந்திருக்கிறார் என்பதை EEG கருவியால் அளந்திருக்கிறார்கள். அதிலும் மிகவும் சிக்கலான கணிதங்கள் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிகளில் கூட அதிலேயே அவர் இருந்திருப்பது குறிப்பிடத்தக்கது. மிக மிகக் கடினமான கட்டத்திற்கு வந்த ஓரிரு சமயங்களில் மட்டுமே ஆல்ஃபா அலைவரிசையில் இருந்து பீட்டா அலைவரிசைக்கு அவர் வந்திருக்கிறார்.

கிட்டத்தட்ட அரைத்தூக்க நிலை, அல்லது லேசான கனவு நிலை போன்றது இந்த ஆல்ஃபா அலைவரிசையில் உள்ள நிலை என்பதை நாம் கண்டோம். அப்படியானால் அதிக நேரங்களில் இந்த அலைவரிசையில் உள்ளவர்கள் எல்லாம் பெரிய மேதைகளா, ஞானிகளா, படைப்பாளிகளா என்று கேட்டால் அல்ல என்பது தான் உண்மையான பதில். பல மந்த புத்திக்காரர்களும், மகா சோம்பேறிகளும், போதை மருந்துகளை உட்கொண்டவர்களும் கூட அதிக நேரம் இந்த அலைவரிசைகளில் இருக்கிறார்கள் என்பதை டாக்டர் பார்பரா ப்ரவுன் போன்ற ஆராய்ச்சியாளர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால் இது போன்ற ஆட்கள் ஆல்ஃபா அலைவரிசைகளில் அதிகம் இருந்தாலும் உள்ள சக்திகளையும் இழந்து அழிந்து கொண்டு இருக்கிறார்கள் என்பதில் இன்னொரு கருத்து இருக்க முடியாது.


அப்படியானால் முன்பு சொன்னதற்கும், இப்போது சொன்னதற்கும் இடையே முரண்பாடு உள்ளதே என்று பலரும் நினைக்கலாம். கூர்ந்து யோசித்தால் முரண்பாடு இல்லை. ஐன்ஸ்டீன் போன்ற விஞ்ஞானிகளும், பெரிய மேதைகளும் ஆல்ஃபா அலைவரிசைக்கு விழிப்புணர்வோடு முயற்சி செய்து செல்பவர்களாக இருந்திருக்கிறார்கள். மந்த புத்திக்காரர்களும், மகா சோம்பேறிகளும் கிட்டத்தட்ட ஜடநிலையில் அந்த அலைவரிசையில் இருக்க, குடி மற்றும் போதையால் அந்த அலைவரிசையில் இருப்பவர்கள் செயற்கையாக அங்கு இழுத்து செல்லப்பட்டவர்களாக இருக்கிறார்கள். எனவே முன்னவர்கள் அந்த அலைவரிசையில் செயல்பட முடியும் போது, பின்னவர்கள் அந்த அலைவரிசையில் முடங்கியே போகிறார்கள். இதை நாம் என்றும் மறந்து விடக்கூடாது.

சரி ஆல்ஃபா அலைவரிசைக்கு செல்வதெப்படி என்பதைக் காண்போம். ஆல்ஃபா அலைவரிசையை ஒரே வார்த்தையில் விளக்க வேண்டும் என்றால் மிகப் பொருத்தமான வார்த்தை “ரிலாக்ஸ்” (Relax). பதட்டமில்லாத, அவசரமில்லாத அமைதியான மனநிலை இது. இக்காலத்தில் இந்த அமைதியான மனநிலையை நாம் சிறிது சிறிதாக இழந்து வருகிறோம். நமக்குச் செய்ய வேண்டிய காரியங்கள் நிறைய இருக்கின்றன. முந்த வேண்டிய ஆட்கள் நிறைய இருக்கிறார்கள். கவனிக்க வேண்டிய கவலைகள் ஏராளம் இருக்கின்றன. பிரச்னைகள், நேரக்குறைவு போன்றவை வேறு இருக்கின்றன. இப்படி இருக்கையில் அமைதியான மனநிலை எப்படிக் கிடைக்கும் என்ற கேள்வி எழலாம்.

ஆனால் எந்தக் காரணங்களுக்காக அமைதியான, ரிலாக்ஸான மனநிலை சாத்தியமில்லை என்று நினைக்கிறோமோ அந்தக் காரணங்களை முறையாகக் கையாள பீட்டா அலைவரிசையை விட ஆல்ஃபா அலைவரிசை தான் சிறந்தது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. பீட்டா அலைவரிசையில் இருக்கும் போது நம் சக்திகள் மிக அதிக அளவு விரயமாகின்றன. அப்படி விரயம் செய்து நாம் சாதிப்பதோ மிகக் குறைவாகவாகத் தான் இருக்கும். ஏனென்றால் பார்வைக்கு மிகவும் சுறுசுறுப்பாகவும் அதிவேகமாகவும் செயல்கள் நடைபெறுவது போல் தோன்றினாலும் பீட்டா அலைவரிசையில் தேவை இல்லாத பரபரப்பில் தான் நம் சக்திகள் அதிகம் வீணாகின்றன. ஐன்ஸ்டீன் போன்ற விஞ்ஞானிகளே சிரமமான விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளையும் ஆல்ஃபா அலைவரிசையில் செய்து வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்றால் நம்மைப் போன்றவர்கள் அதைப் பின்பற்றுவதல்லவா புத்திசாலித்தனம்.

முதலில் தினந்தோறும் அதிகாலை அரை மணி நேரமும், இரவு அரை மணி நேரமுமாவது அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள்.

அமைதியான ஒரு இடத்தில் அமருங்கள். இயற்கையழகு நிறைந்த இடமாகவோ, ஜனசந்தடி அதிகம் இல்லாத இடமாகவோ இருந்தால் மிக நல்லது. இல்லாவிட்டால் தனியாக ஒரு அறையில் அமர்ந்து கொள்ளுங்கள். இசைப்பிரியராக இருந்தால் வார்த்தைகள் இல்லாத இசையைக் கூட நீங்கள் இருக்கும் இடத்தில் தவழ விடலாம். வார்த்தைகள் கலந்த இசையானால் அந்த வார்த்தைகளின் பொருள், அதன் சம்பந்தப்பட்ட விஷயங்கள் என்று மனம் தீவிரமாக செயல்பட்டு பீட்டா அலைகளுக்குப் போய் விட வாய்ப்பு அதிகம். சிறிது நேரம் உங்கள் மூச்சில் கவனம் வையுங்கள். உள்ளிழுக்கும் காற்று, வெளியே விடும் காற்று இரண்டிலும் கவனம் வையுங்கள். நீங்களாக எந்த மாற்றத்தையும் மூச்சில் கூடக் கொண்டு வர முயற்சிக்காதீர்கள். குறிப்பாக எதைப் பற்றியும் சீரியஸாக நினைக்காதீர்கள். மூச்சு ஒரே சீராக மாற ஆரம்பிக்கும். இயற்கையழகு நிறைந்த சூழ்நிலையில் இருந்தால் அந்த அழகை ரசிக்க ஆரம்பியுங்கள். நீங்கள் இருப்பது உங்கள் அறையில் தான் என்றால் கண்களை மூடிக் கொண்டு நீங்கள் மிகவும் ரசிக்கும் இயற்கை சூழ்நிலையை உங்கள் கற்பனையில் வரவழைத்துக் கொள்ளுங்கள். மலைச்சாரல், நதிக்கரை அல்லது கடற்கரை போன்ற ஏதாவது இடத்தில் நீங்கள் இருப்பதாக நினைத்துக் கொண்டு ரசியுங்கள்.

மூச்சு சீராகி, மனமும் அமைதியடையும் போது ஆல்ஃபா அலைகளில் இருக்க ஆரம்பிக்கிறோம். ஆழ்மன சக்திகள் அடைவது உட்பட எந்த தீவிரமான சிந்தனையும் இந்த நேரத்தில் வேண்டாம். இப்போதைய ஒரே குறிக்கோள் ஆல்ஃபா அலைகளில் பயணிப்பது தான். அந்த அலைவரிசைக்கு நம் விருப்பப்படி தினமும் போய் வருவது தான். சிலருக்கு ஆரம்பத்தில் உறக்கமே வரலாம். பரவாயில்லை. இயற்கைச் சூழலுக்குப் போக முடியவில்லை, எனக்கு கற்பனையும் வராது என்றாலும் பராயில்லை. அப்படிப்பட்டவர்கள் மூச்சின் சீரான போக்கில் மட்டும் கவனம் வையுங்கள். ஆல்ஃபா அலைவரிசையில் இருந்து பாருங்கள்.

இந்த எளிய பயிற்சியை அடுத்த வாரம் வரை தினமும் செய்து பாருங்கள்.

மேலும் பயணிப்போம்.....

(தொடரும்)
நன்றி: விகடன்

14 comments:

  1. தொடர் அற்புதமா இருக்கு .

    ரேகா ராகவன்.
    (சிகாகோவிலிருந்து)

    ReplyDelete
  2. அன்புடன் நண்பருக்கு வணக்கம்
    . மிக எளிமையான தியான முறை தொடருங்கள் தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
  3. வலையில் இது போன்ற மதிப்புள்ள ரத்தினங்கள் கிடப்பது அரிது.
    தொடர்ந்து எழுதுங்கள். பின் வருகிறோம்.
    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  4. அருமை நண்பரே வாழ்த்துகள்

    ReplyDelete
  5. சூப்பர் கணேசன்,

    ஆல்பா பற்றிய நல்ல பதிவு.

    சில்வா மைண்ட் கண்ட்ரோல் பரிசோதித்து இருக்கீறீர்களா. எளிமையானதும், எபக்டிவ்வானதும் அது. வலையிலேயே இலவசமாய் நிறைய கெய்டட் MP3 டிராக் எல்லாம் கிடைக்கிறதே. அதையும் சொல்லலாமே,

    அன்புடன்

    படுக்காளி.

    என்ன ஒரு ஒற்றுமை. நானும் ஆன்மீகம் குறித்து ஒரு தொடர் எழுதுகிறேன். அதில் வந்து தங்கள் வாக்கு அளித்தமைக்கு மிக்க நன்றி.

    தொடருங்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. Really amazing experience.
    pls send 30th chapter quick

    ReplyDelete
  7. A very interesting article(s). Special thanks to you for sharing this kind of wonderful articles and I really enjoy reading those little anecdotes that you write about Ramayan. Thank you.

    ReplyDelete
  8. அற்புதமாக இருக்கிறது...

    ReplyDelete
  9. idhai nan 10 days thavathil VIPPASANA endru peyar Bhutharin thayanam learned in Chennai. early morning 4am to 7pm different type of thayanam. no physical activities.starting stage is what u mentioned above that is the one.

    ReplyDelete
  10. These articles may be published in a printer friendly manner so that one can read in an offline mode.

    ReplyDelete
  11. தியானத்திற்கான விளக்கங்கள் மிக மிக நன்று தங்களின் அனைத்து கட்டுரைகளையும் படித்து வருகிறேன் தெளிவான விளக்கங்கள் தங்களின் தனி சிறப்பு
    அன்புடன்
    வை,பூமாலை
    சுந்தரபாண்டியம்

    ReplyDelete
  12. நன்றி உங்கள் தொடருடன் பயனிப்பதுடன் பயிற்சிகளையும் செய்கின்றேன்

    ReplyDelete
  13. மிக மிக நன்றக உள்ளது. உங்களது சேவை தொடர வாழ்த்துக்கள்......

    ReplyDelete
  14. தியானம் செய்வது குறித்து விளக்கமும் பரிந்துரையும் மிக அருமையாக இருக்கிறது எளிமையாகவும் பெரிய விஷயம் நாம் ஒதுங்கி கொள்வோம் என்கிற எண்ணத்தில் இருந்து விடுவித்தது உங்கள் தியானம் பற்றிய இந்த கட்டுரை நன்றி G

    ReplyDelete