
சிறு வயது முதலே இராமனின் நிழல் போல இணைபிரியாதிருந்தவன் இலக்குவன். இது போன்ற சகோதர பாசத்தின் தீவிரம் எல்லாம் திருமணத்திற்குப் பின் பொதுவாகக் குறையும் என்பார்கள். திருமணத்திற்குப் பின்னும் குறையாமல் இருந்தது இலக்குவனின் சகோதர பாசம். தசரதன் கைகேயிக்குத் தந்த வரத்தால் இராமன் வனம் செல்லக் கிளம்பிய போது “நின் பிரிவினும் சுடுமோ பெருங்காடு” என்று சீதை இராமனுடன் கிளம்ப இலக்குவனும் இராமனுடன் செல்லத் தயாராகிறான்.
வனத்திற்குத் தன்னுடன் வர வேண்டாமென்று இராமன் சொன்னதற்கு இலக்குவன் நீயில்லாத இடத்தில் நான் எப்படி இருக்க முடியும் என்று அண்ணனிடம் கேட்கிறான். ”நீர் இருந்தால் தான் மீன் இருக்க முடியும். அதே போல் நானும் சீதையும் நீ இருந்தால் தான் இருக்க முடியும்” என்று கூறுகிறான்.
நீர் உள எனில் உள மீனும் நீலமும்
பார் உள எனில் உள யாவும்; பார்ப்புறின்
நார் உள தனு உளாய்1 நானும் சீதையும்
ஆர் உளர் எனில் உளேம் அருளுவாய் என்றான்.
திருமணமாகி அதிக நாட்கள் ஆகவில்லை. பிரியக் கூடிய காலம் சில நாட்கள் அல்ல. பதினான்கு வருடங்கள். அப்படி இருந்தும் மனைவியை விட்டு அண்ணனைப் பின் தொடர்ந்து இலக்குவன் காட்டுக்குச் சென்றான். அப்படிச் சென்றவன் ஒரு இளவரசனைப் போல் இருந்து விடவில்லை. அவன் செய்த சேவைகள் சாதாரணமானதல்ல. பர்ணசாலை அமைக்கவும், காட்டில் பாதைகள் ஏற்படுத்தவும் அவன் உழைத்ததைப் பார்த்து இராமனே வியந்து போனான்.
”தம்பி நீ என்னோடு இணைபிரியாமல் இருந்தவனாயிற்றே, சாலையமைத்தல் முதலியவற்றை எனக்குத் தெரியாமல் என்றைக்குப் பழகினாய்” என்று கண்ணீர் சொரிய இராமன் இலக்குவனைக் கேட்கிறான்.
என்று சிந்தித்(து) இளையவற் பார்த்(து) “இரு
குன்று போலக் குலவிய தோளினாய்!
என்று கற்றனை நீயிது போல்’ என்றான்:
துன்று தாமரைக் கண் பனி சோர்கின்றான்
அது போன்ற பணிகள் மட்டுமல்லாமல் வனவாச காலம் முழுவதும் இராமனுக்கு இலக்குவன் ஒரு சேவகனாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது. இராமனைக் காண வந்த பரதன் குகனிடம் பேசிக்கொண்டிருந்த போது இலக்குவனைப் பற்றி குகன் பெருமையாகச் சொல்கிறான். “இராமபிரானும், சீதையும் உறங்கும் போது வில்லை ஊன்றிக் கொண்டு இரவெல்லாம் கண்களைக் கூட இமைக்காமல் காவல் காத்து நின்றான்” என்று தெரிவிக்கிறான்.
அல்லை ஆண்டு அமைந்த மேனி அழகனும் அவளும் துஞ்ச
வில்லை ஊன்றிய கையோடும் வெய்து உயிர்ப்போடும், வீரன்
கல்லை ஆண்டு உயர்ந்த தோளாய்! கண்கள் நீர் சொரியக் கங்குல்
எல்லை காண்பளவும் நின்றான்! இமைப்பிலன் நயனம் என்றான்.
’இமைப்பிலன் நயனம்’ என்ற இரு சொற்களில் இலக்குவனின் காவலைப் பற்றி கம்பன் சொல்கின்ற நயத்தைப் பாருங்கள்.
மாயப் பொன்மானைக் கண்டு சீதை ஆசைப்பட, இராமன் அதன் பின்னால் சென்று மாயப்பொன்மான் வேடத்தில் இருந்த மாரீசனை வில்லால் வீழ்த்தினான். விழும் முன் இராமன் குரலில் இலக்குவன் பேரைச் சொல்லி அலறிக் கொண்டு மாரீசன் வீழ்கிறான். சீதை அதை இராமனுக்கு வந்த ஆபத்தாகக் கருதி சென்று பார்க்க இலக்குவனைப் பணிக்கிறாள். சீதைக்குக் காவலாக இரு என்று சொல்லி விட்டுச் சென்ற அண்ணனின் வார்த்தைகளை மீற விரும்பாத இலக்குவன் அவளைத் தனியாக விட்டுச் செல்ல விரும்பவில்லை. அது தன் அண்ணன் குரலல்ல, இதில் ஏதோ சூழ்ச்சி உள்ளது என்றெல்லாம் சொல்லிப் பார்த்தான்.
அவனைப் போக வைக்க சீதை சொல்லத் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்துகிறாள். ”அண்ணன் இறந்தால் என்னை நீ அடையலாம் என்று எண்ணித் தான் நீ செல்லாமல் இருக்கிறாய்” என்று குற்றம் சாட்ட நஞ்சாக வந்த வார்த்தைகளின் வலி தாங்காமல் இலக்குவன் போகிறான். போகும் போது ஒரு கோடு கிழித்து ‘எக்காரணத்தைக் கொண்டும் இந்தக் கோட்டைத் தாண்டி வெளியே வராதீர்கள்’ என்று ஒரு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தி விட்டுத் தான் செல்கிறான். ஆனால் இராவணன் தன் சூழ்ச்சியால் அவளை அதையும் தாண்டி வர வைத்து கவர்ந்து செல்கிறான்.
செல்கின்ற போது போகின்ற தடத்தின் அடையாளத்திற்காக தன் ஆபரணங்களை வழியெல்லாம் வீசிக் கொண்டு சீதை செல்கிறாள். அந்த ஆபரணங்கள் சிலவற்றைப் பார்த்த இராமன் இது சீதையுடையது தானே என்று இலக்குவனிடம் கேட்ட போது இலக்குவன் கூறும் பதில் பிரசித்தமானது. “அண்ணியின் குண்டலங்களையோ, கேயூரங்களையோ நான் அறியேன். அவள் காலில் அணிந்திருந்த மெட்டிகளை மட்டும் நான் அறிவேன். தினமும் வணங்குவதால் என்னால் அவற்றை மட்டும் அடையாளம் கண்டு கொள்ள முடியும்”
இப்படிப் பட்ட உத்தமனான இலக்குவனைப் பார்த்து அந்த கொடிய வார்த்தைகளைச் சொல்ல சீதைக்கு எப்படி மனம் வந்தது? உண்மையில் இலக்குவன் மனது அவளுக்குத் தெரியாதா? இலக்குவன் சென்று சிறிது நேரத்திலேயே முனிவர் வேடத்தில் வந்த இராவணன் அவளைப் பற்றியும் குடும்பத்தைப் பற்றியும் கேட்டவுடன் சொல்லும் போது கூட இலக்குவனைப் பற்றி இராவணனிடம் மிக உயர்வாகச் சொன்னவளாயிற்றே அவள். என்ன சொன்னால் கிளம்புவான் என்று தெரிந்து கிளப்புவதற்காகவே சொல்லி இருந்தாலும் அந்த வார்த்தைகள் அவனை எப்பாடு படுத்தி இருக்கும்.
அதைப் பற்றி யோசிக்க அசோகவனத்தில் சீதைக்கு நிறையவே நேரமிருந்தது. அப்படி யோசித்த போது தன் கணவன் தன்னை மீட்க வராததற்குக் கூட இலக்குவனிடம் அபாண்டமாகச் சொன்ன வார்த்தைகளாக இருக்குமோ என்று சீதை சந்தேகம் கொள்கிறாள். இப்படிப்பட்ட வார்த்தைகளைச் சொல்லுமளவு அறிவில்லாதவளாக இருக்கிறாளே என்று அவளை இராமன் துறந்தே விட்டானோ என்று சீதை வருந்துகிறாள்.
என்னை நாயகன் இளவலை எண்ணலா வினையேன்
சொன்ன வார்த்தை கேட்டு அறிவு இலள் எனத் துறந்தானோ?
ஆனால் அண்ணியின் வார்த்தைகளை அப்படியே சொல்லி அண்ணன் மனதில் அவள் மேல் வெறுப்பு ஏற்படக் காரணமாக இருப்பவன் அல்லன் இலக்குவன்.
இராமனுக்கும் தன் தம்பி இலக்குவன் மேல் இருந்த பாசம் அலாதியானது. இந்திரசித்துடன் போர் புரிய இலக்குவனை அனுப்பிய போது அவன் மனதில் ஏற்பட்ட வேதனை முன்பு விஸ்வாமித்திரனுடன் இராமனை அனுப்பும் போது தசரதன் மனதில் ஏற்பட்ட வேதனையை ஒத்திருந்தது என்கிறான் கம்பன்.
வான் பெரு வேள்வி காக்க, வளர்கின்ற பருவ நாளில்
தான் பிரிந்து ஏகக் கண்ட தயரதன் தன்னை ஒத்தான்.
(மகன் பாதுகாப்பு குறித்து பயந்த தசரதன் மகனுக்குப் பதிலாகத் தானே வரட்டுமா என்று விஸ்வாமித்திரனைக் கெஞ்சியது தெரிந்திருக்கலாம்.)
இந்திரசித்தின் நாகாஸ்திரத்தால் மூர்ச்சையாகி விழுந்த இலக்குவனைப் பார்த்து வால்மீகியின் இராமன் புலம்புகிறான். “தேடிப் பார்த்தால் சீதையைப் போன்ற மனைவி கிடைக்கலாம். ஆனால் இலக்குவனைப் போன்ற மகாவீரனான சகோதரன் எப்படிக் கிடைப்பான்?”
கம்பனின் இராமனும் மூர்ச்சையாகி விழுந்த இலக்குவனைக் கண்டு உருக்கமாகப் புலம்புகிறான். “என்னை ஓய்வெடுக்க வைத்து எனக்குச் செய்ய வேண்டியதை எல்லாம் செய்து நீ ஓய்வில்லாமல் இருந்தாயே. வெயில் என்று பார்க்காமல் காவலுக்கு நின்று களைத்துப் போனாயே. அந்தக் களைப்புக்காகத் தான் இப்போது உறங்குகின்றாயா? இந்த உறக்கத்தைத் துறந்து எழ மாட்டாயா?”
பயிலும் காலம் பத்தொடு நாலும் படர் கானகத்து
அயில்கின்றேனுக்கு ஆவன நல்கி அயிலாதாய்!
வெயில் என்று உன்னாய் நின்று தளர்ந்தாய்! மெலிவு எய்தித்
துயில்கின்றாயோ? இன்றிவ்வுறக்கம் துறவாயோ?
”தந்தை இறந்த போதும் தைரியமாக இருந்தேன். அரசபதவியைத் துறந்த போதும் கவலையற்று இருந்தேன். நீ இருப்பதால் நான் தனியன் அல்லேன் என்று இருந்தேன். இப்போது நீயும் போய் விட்டாய். எனக்குச் சொல்ல வார்த்தைகள் இல்லை. இனி நான் வாழ மாட்டேன். நானும் உன்னுடன் வருகிறேன்”
எந்தை இறந்தான் என்றும் இருந்தேன்; உலகு எல்லாம்
தந்தனென் என்னும் கொள்கை தவிர்ந்தேன்; தனி அல்லேன்
உய்ந்தும் இருந்தாய் நீ என நின்றேன்; உரை காணேன்
வந்தனென் ஐயா! வந்தனென் ஐயா! இனி வாழேன்
இலக்குவன் மூர்ச்சை தெளிந்து எழுந்த போது இராமன் தன் உயிரையே திரும்பப் பெற்றது போல உணர்ந்தான்.
போர் முடிந்து அயோத்தி திரும்பும் வரையில் தன் புதிய மண வாழ்க்கையையும், தன் அரண்மனை வாழ்க்கையின் சௌகரியங்களையும் தியாகம் செய்து அண்ணனின் காவலனாய், ஏவலனாய், நிழலாய் இருந்த இலக்குவன் இணையற்ற சகோதரனே அல்லவா?
-என்.கணேசன்
நன்றி: ஈழநேசன்