சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Tuesday, December 29, 2009

கைகேயி இராமன்



கைகேயியிற்கும் இராமனுக்கும் இடையே உள்ள பந்தம் ஆழமானது. கோசலையிடம் அவன் வளரவில்லை. அவன் கைகேயிடமே வளர்ந்தவன். இராமனுக்கு முடிசூட்ட தீர்மானம் ஆனவுடனேயே எல்லோரையும் விட அதிகமாய் மகிழ்ந்தவள் கைகேயி. இராமனைப் போன்ற மகன் இருக்கையில் எனக்கு என்ன குறை என்று பெருமிதப்பட்டவள் அவள். கூனி தன் சதிவலையைப் பின்ன ஆரம்பித்த போது அவள் பட்ட கோபம் சிறிதல்ல. கடுமையான வார்த்தைகளால் கைகேயி அவளை ஏசுகிறாள்.

"எனக்கு நன்மை செய்பவளும் அல்ல நீ, என் மகன் பரதனுக்கு நன்மை செய்பவளும் அல்ல நீ. தர்மப்படி பார்த்தால் உனக்கே நீ நன்மை செய்பவள் அல்ல" (இராமனைப் போன்ற ஒரு உயரிய குணம் படைத்த ஒருவனுக்குக் கெடுதல் நினைப்பதால் நீ பெரிய பாவத்தை சம்பாதிப்பதால் உனக்கே நீ கெடுதல் செய்து கொள்கிறாய் என்று மறைமுகமாய் சொல்கிறாள்) என்றெல்லாம் கைகேயி கூனியை ஏசுகிறாள்

(எனக்கு நல்லையும் அல்லை நீ! என் மகன் பரதன்
தனக்கு நல்லையும் அல்லை நீ! தருமமே நோக்கின்
உனக்கு நல்லையும் அல்லை! வந்(து) ஊழ்வினை தூண்ட
மனக்கு நல்லன சொல்லினை; மதியிலா மனத்தோய்!).


இராமனைப் பற்றி கெடுதலாகச் சொல்வது அவன் மீது அளவுகடந்த பாசம் வைத்திருக்கும் இவளிடம் எடுபடாது என்று அறிந்த கூனி 'கோசலைக்கு அதிகாரம் கூடும், நீயும் உன் மகனும் ஓரம் கட்டப்படுவீர்கள்' என்ற வாதத்தை திறம்பட கைகேயி முன் வைக்கிறாள். கடைசியில் கைகேயி மனம் மாறுகிறது. தசரதனிடம் பரதன் நாடாள வேண்டும் என்றும், இராமன் 14 வருடங்கள் காட்டுக்குச் செல்ல வேண்டும் என்றும் வரம் கேட்கிறாள்.

தசரதன் துக்கப் பெருங்கடலில் மூழ்குகிறான். "என் கண்களைக் கேள். என் உயிரைக் கேள், இந்த நாட்டையே எடுத்துக் கொள். உன் மகன் ஆளட்டும். இரண்டாவது வரத்தை மட்டும் திரும்ப வாங்கிக் கொள். இராமனை இங்கேயே இருக்க விடு" என்று கதறுகிறான்.

('கண்ணே வேண்டும் எனினும் ஈயக்கடவேன்; என்
உள்நேர் ஆவி வேண்டினும் இன்றே உனதன்றோ?
பெண்ணே! வண்மைக் கேகயன் மானே! பெறுவாயேல்
மண்ணே கொள் நீ மற்றையது ஒன்றும் மற' என்றான்


'நின்மகன் ஆள்வான்; நீ இனிது ஆள்வாய்; நிலம் எல்லாம்
உன் வயம் ஆமே! ஆளுதி தந்தேன்; உரை குன்றேன்;
என் மகன், என் கண், என் உயிர் எல்லா உயிர்கட்கும்
நன்மகன் இந்த நாடிறவாமை நய' என்றான்.)


கைகேயி மனம் இரங்கவில்லை. இராமனுக்கு சொல்லி அனுப்புகிறாள். இராமன் கைகேயி மாளிகையை நோக்கிச் செல்வதைப் பார்த்த அயோத்தி மக்கள் சொல்வது கைகேயி-இராமன் பந்தத்தை அழகாய் விளக்குகிறது. "இராமன் தாயிடம் வளர்ந்தவனல்ல. அவனை வளர்க்கும் பாக்கியத்தை தவமிருந்து கைகேயியே பெற்றிருக்கிறாள். அப்படிப்பட்டவளுக்கு அயோத்தி மன்னனாக இராமன் முடிசூடுவதில் இருக்கும் பேரானந்தத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது" என்று மக்கள் பேசிக் கொள்கிறார்கள்

(தாய்கையில் வளர்ந்திலன்; வளர்த்தது தவத்தால்
கேகயன் மடந்தை; கிளர்ஞாலம் இவன் ஆள
ஈகையில் உவந்தவள், இயற்கை இதென்றால்
தோகை அவள் பேருவகை சொல்லல் அரிது என்பார்.)


இராமனைக் கண்டு அந்தக் கொடிய கட்டளையைச் சொல்ல தசரதன் நாக்கு எழவில்லை. கைகேயியே அந்தக் கட்டளையை மன்னன் சொன்னதாகச் சொல்கிறாள். அந்த இடத்தில் இராமன் கைகேயியிடம் முகமலர்ச்சி (இராமனின் முகம் வரைந்த செந்தாமரை போல் மாறாமல் இருந்ததென்று கூறுகிறார் கம்பர்) குறையாமல் சொல்கின்ற சொற்கள் மிக அழகானவை. "மன்னன் சொல்லா விட்டால் என்ன நீங்கள் சொன்னால் நான் மறுக்கவா போகிறேன். என் தம்பிக்குக் கிடைத்த செல்வம் எனக்கே கிடைத்தது போல் அல்லவா? நான் இப்போதே போகிறேன். விடை கொடுங்கள்"

(மன்னவன் பணி அன்றாகில் நும்பணி மறுப்பனோ? என்
பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றதன்றோ
என் இனி உறுதி அப்பால்; இப்பணி தலை மேல் கொண்டேன்
மின் ஒளிர்க் கானம் இன்றே போகின்றேன் விடையும் கொண்டேன்)

தசரதன் மூர்ச்சையாகி மயங்கி விழுகிறான். பின் "நீ என் மனைவியும் அல்ல. பரதன் என் மகனுமல்ல" என்று தசரதன் மனம் வெறுத்து கைகேயியை ஒதுக்குகிறான். கைகேயியிடம் ஒளிவு மறைவு கிடையாது. குலகுரு வசிட்டர் தசரதனுக்கு என்ன ஆயிற்று என்று கேட்ட போதும் சரி, பின் பரதன் வந்து கேட்ட போதும் சரி தன் வரங்களைப் பற்றியும் அதனால் தசரதனுக்கு ஏற்பட்ட நிலையையும் ஒளிக்காமல் அப்படியே சொல்கிறாள். அவர்கள் இருவரிடமும் வசவுகளையும் வாங்கிக் கொள்கிறாள். பரதன் கோபப்பட்டு "நீ என் தாயே அல்ல" என்று சொல்லி விட்டுப் போன பின் கைகேயி இராமாயணத்தில் பேச்சிழக்கிறாள். பின் அவள் இராமாயணத்தில் ஒரு வார்த்தை கூடப் பேசியதாய் தகவல் இல்லை.

எந்த மகனுக்காக அவள் அரசபதவியை வரமாக வாங்கினாளோ அந்த மகன் தன் அண்ணனின் செருப்பைக் கொண்டு வந்து சிம்மாசனத்தில் வைத்து ஒரு துறவியைப் போல் வாழ ஆரம்பித்த போது அவள் மனம் துடித்திருக்க வேண்டும். தன் வரங்கள் தனக்கு சாபமாக மாறியதை உணர்ந்து மீளாத்துயரில் ஆழ்ந்திருக்க வேண்டும். ஆனால் அதை நம் கற்பனைக்கே விட்டு விடுகிறார்கள் வால்மீகியும், கம்பனும். இராமனைக் காண காட்டுக்கு மற்றவர்கள் போன போது அவளும் கோசலையுடனும், சுமத்திரையுடனும் சென்றாள் என்று மட்டும் அவர்கள் சொல்கிறார்கள். அந்த ஒரு செய்கையில் தன் தவறை உணர்ந்து விட்டதாக அவள் அறிவிக்கிறாள் என்றே சொல்ல வேண்டும்.

இராமன் அயோத்தியில் காட்டிய அதே பாசத்தை காட்டிலும் காட்டுகிறான். தாயர் மூவரையும் ஒரு போலவே தொழுது எழுகிறான். அவன் மனதில் கைகேயியிடம் சிறிதும் வருத்தமில்லை. அவன் அவள் மீது வைத்திருக்கும் பாசத்தில் சிறிதும் குறைவில்லை. கடைசியில் வானுலகில் இருந்து இராமனைக் காண வரும் தசரதனிடம் கேட்கும் வரம் ஒப்புயர்வில்லாதது.

தசரதன் எப்போது கைகேயியைத் தன் மனைவியல்ல, பரதன் மகனுமல்ல என்று துறந்து விட்டானோ அப்போது முதல் இராமன் கைகேயியைத் தாய் என்று அழைப்பது தந்தை சொல்லை மீறிய செயலாகும். ஆனால் இராமன் கைகேயி மீது வைத்துள்ள பாசம் அளப்பரியது. அவளுடைய ஒரு செய்கையை வைத்து அவள் முன்பெல்லாம் காட்டிய பாசத்தை மறக்க அவன் தயாரில்லை. அதனால் தசரதனிடம் "தீயவள் என்று நீங்கள் துறந்த என் தெய்வத்தையும், அவள் மகனையும் மீண்டும் என் தாயும், தம்பியுமாக அனுமதி வேண்டும்" என்று அனுமதி கேட்கிறான். அப்போது கூட அவளைத் தாயென்று அவனால் அழைக்க முடியவில்லை. குறைத்துச் சொல்லவோ மனம் ஒப்பவில்லை. எனவே தாயான கைகேயியை 'தெய்வம்' என்று உயர்த்துகிற பண்பைக் கவனியுங்கள்.

(தீயள் என்று நீ துறந்த என் தெய்வமும் மகனும்
தாயும் தம்பியும் ஆம் வரம் தருகெனத் தாழ்ந்தான்.)


அதைக் கேட்டு உலகமே அவனைத் தொழுதது என்கிறார் கம்பர். ஆக இராமன் கடைசி வரை கைகேயி இராமனாக இருந்தான் என்பதற்கு வேறென்ன சாட்சி வேண்டும்?

-என்.கணேசன்


நன்றி: ஈழநேசன்

10 comments:

  1. கணேசன், என்னதிது திடீர்னு ஆன்மீகத்துப் பக்கம்?

    ReplyDelete
  2. கம்பன் மீது இளமையில் இருந்தே எனக்கு மிக ஈடுபாடு உண்டு. அதை எழுத்திலும் வடிக்கும் சிறிய முயற்சியே இது. அவ்வளவு தான்

    ReplyDelete
  3. உங்கள் எழுத்து நடை அருமை

    எல்லோரும் பாடலை முதலில் போட்டு விளக்கம் கிழே இருக்கும் ஆனால் நீங்கள் முதலில் விளக்கத்தை போட்டு அப்புறம் பாடல் போட்டிருப்பதால் பாடலின் அர்த்தம் எளிதாக விளங்குகிறது.

    நன்றி

    ReplyDelete
  4. நல்ல பதிவு. இது போன்ற இலக்கியத்தில் சிறந்த இடங்களை நீங்கள் மேலும் சுட்டிக்காட்ட வேண்டும்..

    நன்றி

    தமிழார்வன்.

    ReplyDelete
  5. கம்ப ராமாயணம் பொழிப்புரை யுடன் புத்தகம் கிடைக்குமா . கிடைக்கும் முகவரி தெரிவிக்க இயலுமா. கம்ப ராமாயண பாடல்களுக்கான உங்கள் விளக்கங்கள் மிகவும் அருமை . என்னுடைய மினஅஞ்சல் முகவரி ramukonapet@gmail.com

    ReplyDelete
    Replies
    1. எல்லா காண்டங்களுக்கும் மூலமும் உரையும் திருமகள் நிலையம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது என்று கேள்விப்பட்டேன். விசாரிக்கவும். நன்றி

      Delete
  6. சிறப்பு, வாழ்த்துக்கள்." இலக்கிய இன்பம் " எனும் எனது பதிவுக்கு இது பெரிதும் உதவுகிறது. நன்றி.

    ReplyDelete