என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Friday, November 20, 2009

ஆழ்மனதின் அற்புத சக்திகள்-11


ஸ்வாமி ராமாவைப் போலவே ஜேக் ஷ்வார்ஸ் என்ற ஹாலந்துக்காரரும் தன் உடலில் பல விந்தைகள் செய்து காட்டக் கூடியவராக இருந்தார். ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் ஆணிகளின் படுக்கையில் படுப்பது, கூரிய வாள்களின் மேல் நடனமாடுவது, ஆணிகளையும், ஊசிகளையும் உடலில் துளைத்துக் கொண்டு பின் காயங்களை ஆற வைத்துக் காட்டுவது போன்ற செயல்களைக் காட்டி வந்த அவர் இரு முறை இரண்டாம் உலகப் போரில் நாசிகளிடம் சிக்கி சித்திரவதைகளுக்கு ஆளானார். இரண்டாம் முறை சிக்கிய பின் மற்ற இரண்டு கைதிகளுடன் சுவரின் கீழ் சுரங்கத்தைத் தோண்டி ஒரு மாத காலத்திற்குள் தப்பி விட்டார். பின் இங்கிலாந்து ராணுவத்தில் சேர்ந்து பணி புரிந்த அவர் பின்னர் அமெரிக்காவில் குடியேறினார்.

ஜேக் ஷ்வார்ஸ் 1958ல் மனித உடலின் மீது மனதிற்குள்ள சக்தியை வெளிப்படுத்தும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளும் அலெத்தியா உடல்-உள்ளம் ஆராய்ச்சி நிறுவனத்தை நிறுவினார். ஸ்வாமி ராமாவை ஆராய்ச்சி செய்த மென்னிங்கர் நிறுவனம் அவரையும் ஆராய்ச்சி செய்தது. பெரிய ஊசி ஒன்றை எடுத்து அவர் தனது கையில் குத்திக் கொண்ட பின்னரும் இரத்தம் அவர் உடலிலிருந்து கசியாததைக் கண்ட ஆராய்ச்சியாளர்கள் திகைத்தனர். ஒரு ஆராய்ச்சியாளர் "இரத்தத்தைக் கசிய வையுங்கள் பார்க்கலாம்" என்று சொல்ல அடுத்த கணம் ஷ்வார்ஸ் அந்த ஊசியைக் குத்திய இடத்திலிருந்து இரத்தத்தை கசிய விட்டார். ஆராய்ச்சியாளர்கள் பெருகி வரும் இரத்தத்தை நிறுத்தச் சொன்னார்கள். அவர் அடுத்த கணமே அந்த இரத்தக் கசிவை நிறுத்திக் காட்டினார்.சாதாரண ஊசிகள் அல்லாமல் துருப்பிடித்த ஊசிகள் மற்றும் ஆணிகளாலும் தன் உடலை ஷ்வார்ஸ் துளைத்துக் காண்பித்தார். ஆனால் அவர் உடலில் எந்த பாதிப்பும் இல்லை. எரியும் சிகரெட்டுகளை உடலில் அழுத்திக் காண்பித்தார். சிவந்த, கருகிய காயங்கள் தெரிந்தனவே ஒழிய அவற்றாலும் அவர் உடலில் எந்தப் பாதிப்பும் இல்லை. ஊசிகள், சிகரெட்டுகளால் ஏற்பட்ட காயங்கள் உடனடியாக ஆறின. எப்படிப்பட்ட வடுக்களானாலும் 24 மணி நேரம் முதல் 48 மணிகளுக்குள் உடலிலிருந்து மறைந்தன. வருடக்கணக்கில் இது போன்ற செயல்களில் ஈடுபட்ட ஷ்வார்ஸின் தோல் எந்த வடுவுமில்லாமல் குழந்தையின் தோலைப் போல் மொழு மொழுவென்று இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இத்தனை அற்புதங்கள் புரிந்த ஷ்வார்ஸ் அதைத் தன்னால் மட்டுமே முடிந்த பெருஞ்சாதனையாகக் கருதவில்லை. மூளை அலைகளில் ஒரு குறிப்பிட்ட அலையை ஏற்படுத்திக் கொண்ட பின்னர் என்ன கட்டளையிட்டாலும் உடல் அதை ஏற்றுக் கொள்ளும் என்றார். சரியான பயிற்சியால் இதை யாராலும் செய்ய முடியும் என்றார். சில மூச்சுப் பயிற்சிகளாலும், தியானத்தாலும் மூளையில் அந்த அலைகளை ஏற்படுத்த முடியும் என்று கூறினார். 2000 ஆம் ஆண்டு இறந்த ஜேக் ஷ்வார்ஸின் அலெத்தியா உடல்-உள்ளம் நிறுவனம் இன்றும் செயல்பட்டு வருகிறது.

இதே போல் சுமார் நூறாண்டுகளுக்கு முன்பு உடலைத் தன் முழுக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த நரசிங்கஸ்வாமி என்ற யோகியைப் பற்றி பால் ப்ரண்டன் என்ற தத்துவ ஞானி தன் "ரகசிய இந்தியாவில் ஒரு தேடல்" என்ற நூலில் குறிப்படுகிறார். சர் சி வி இராமன் உட்படப் பல விஞ்ஞானிகள், மருத்துவ நிபுணர்கள் முன்னிலையில் கல்கத்தாவில் ப்ரசிடென்ஸி கல்லூரி இயற்பியல் அரங்கத்தில் நரசிங்கஸ்வாமி செய்து காட்டிய அற்புதத்தை டாக்டர் பாண்ட்யோபாத்யாயா என்பவர் மூலம் கேள்விப்பட்டதாக அவர் சொன்னார். விஞ்ஞானிகள், மருத்துவர்கள் அடங்கிய குழு நரசிங்கஸ்வாமிக்கு கந்தக அமிலம், கார்பாலிக் அமிலம், பொட்டாசியம் சயனைடு மூன்றும் கலந்த கலவையை ஒரு பாட்டிலில் தர அவர் அதை அவர்கள் முன்னிலையில் குடித்தார். இதில் ஒன்றே கொடிய விஷம். மூன்றும் சேர்ந்தால் எப்படி இருக்கும்? பிறகு கண்ணாடியைப் பொடி செய்து தந்தனர். அவர் அதையும் விழுங்கினார். என்ன தான் செய்து காட்டுவேன் என்று நரசிங்கஸ்வாமி சொல்லியிருந்தாலும் இந்த மூன்றைக் குடித்து அவருக்கு ஏற்படப் போகும் உயிராபத்திற்கு உதவ மருத்துவர் குழு தயாராகவே இருந்தது. ஆனால் நரசிங்கஸ்வாமி எந்த வித பாதிப்பும் இல்லாமல் சகஜமாகவே இருந்திருக்கிறார். மருத்துவக் குழுவினரின் உதவி தேவையிருக்கவில்லை.

அவர் முன்னால் இருந்த குழுவினர் எந்த விதத்திலும் ஏமாந்து விடக் கூடாது என்பதில் மிக உறுதியாக இருந்தனர். மூன்று மணி நேரமாகியும் பாதிக்கப்படாமல் இருந்த நரசிங்கஸ்வாமி ஏதாவது கண்கட்டு வித்தை செய்து அந்த அமிலக்கலவையைக் குடிக்கவில்லையோ என்ற சந்தேகத்தில் அவர் வயிற்றுக்குள் இருந்தவற்றை பம்ப் செய்து வெளியே எடுத்து மருத்துவ பரிசோதனை செய்து பார்த்தனர். அதில் அத்தனை விஷங்களும் இன்னமும் இருந்தன. மறு நாள் அவர் மல பரிசோதனை கூட செய்து பார்த்திருக்கின்றனர். கண்ணாடித் துகள்கள் அவற்றில் இன்னமும் இருந்திருக்கின்றன.

தன் உடல் மீது இப்படியொரு கட்டுப்பாட்டை ஒருவரால் வைத்துக் கொள்ள முடியும் என்பதை அதுவரை
கண்டிராத அந்தக் குழுவினர் "எப்படி இந்தக் கொடிய விஷங்கள் உங்கள் உடலைப் பாதிக்காமல் பார்த்துக் கொள்கிறீர்கள்?" என்று நரசிங்கஸ்வாமியைக் கேட்ட போது அவர் சொன்னாராம். "நான் உடனடியாக யோக நித்திரைக்குப் போய் என் மனதை ஒருமைப்படுத்தி இந்த விஷங்களுக்கு எதிர்ப்பு சக்தியை என் உடலில் உருவாக்கி விடுவேன்.."

(இதைக் கேட்டு ஆச்சரியப்பட்ட பால் ப்ரண்டன் நரசிங்கஸ்வாமியை சந்திக்க முயன்றார். ஆனால் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் தன் யோக சக்தியை வெளிப்படுத்திக் காட்டும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள எப்போதும் பயணத்தில் இருந்த அவரை பால் ப்ரண்டனால் சந்திக்க முடியவில்லை.

பால் ப்ரண்டன் 1932ஆம் ஆண்டு நரசிங்கஸ்வாமியின் மரணத்தை பத்திரிக்கைகளில் பார்க்க நேர்ந்தது. ரங்கூனில் நரசிங்கஸ்வாமி இப்படி ஒரு நிகழ்ச்சியில் செய்து காட்டி முடித்த பிறகு பல பத்திரிக்கையாளர்கள், அவரைப் பார்க்க வந்தவர்கள் எல்லோருமாய் அவரை சூழ்ந்து கொள்ள அவரால் உடனடியாக யோக நித்திரைக்குச் செல்ல முடியாததால் விஷ முறிவுக்கான சக்தியை உடலில் ஏற்படுத்திக் கொள்ள அவரால் முடியவில்லை. துரதிர்ஷ்டவசமாக அதனால் அவர் உடனடியாக அங்கேயே அவர் இறந்து போனார்.)

மனித மனம் தன் உடலில் இவ்வளவு கட்டுப்பாட்டை வைத்துக் கொள்ள முடியும் என்றால், இத்தனை சாதனகளை உடலில் புரிய முடியும் என்றால் புற்றீசல் போல் பலப்பல நோய்கள் கிளம்பி வரும் இக்காலத்தில் நாம் பெரும்பாலான நோய்களின் தீர்வாக மனதை ஏன் முறையாகப் பயன்படுத்தக் கூடாது?

சிந்தியுங்கள். மேலும் பயணிப்போம்...

(தொடரும்)

-என்.கணேசன்

நன்றி: விகடன்

5 comments:

 1. நண்பர்கள் கவனத்திற்கு

  தமிழர்ஸ் தளத்தில் உங்கள் பதிவை இணைக்கலாம் வாங்க....

  ஆங்கிலம் | தமிழ் | SEO Submit
  காணொளி தேடல் | வலைப்பூக்கள்

  ReplyDelete
 2. அருமையான பதிவு படிக்க, படிக்க அத்தனை சுவராஸ்யமாக எழுதி இருக்கீங்க

  ReplyDelete
 3. Dear Mr Ganeshan,

  very nice and much intresting. Your blog is a Amirtham. God bless you.

  ReplyDelete
 4. Every Human being can do all the things listed in this site, the thing is they have to do meditation. If we think good, Good things happens. If we think Bad, bad things happen.So Friends always think good, do Good. See God does not do Good or Bad. It is only our Thoughts, which convert into action and that action determines our Lives. So what input we feed into our mind determines our lives. So always put Good Matters into mind.Do meditation daily. Always dream and think Big. You can achieve what ever you want. All the Best

  ReplyDelete