சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, October 5, 2009

ஸ்டாலினை வியக்க வைத்த ஆழ்மனசக்தி

ஆழ்மனதின் அற்புத சக்திகள்-6

ஸ்டாலினை வியக்க வைத்த ஆழ்மனசக்தி

விவேகானந்தா சந்தித்த சாது அவருடைய எண்ணத்திலும், அவருடைய நண்பர்கள் எண்ணங்களிலும் ஆதிக்கம் செலுத்தி ஆச்சரியப்படுத்தியது போல் ரஷியாவில் ஒருவர் சர்வாதிகாரி ஸ்டாலினையே ஆச்சரியப்படுத்தினார். ரஷிய மருத்துவரும் ஆழ்மன ஆரார்ய்ச்சியாளருமான லியோனிட் லியோனிடோவிச் வாசிலிவ் (1891-1966) என்பவர் சர்வாதிகாரி ஸ்டாலினை ஆழ்மன ஆராய்ச்சிக் கூடம் ஏற்படுத்த அனுமதி கேட்டு அணுகினார். கம்யூனிஸ்டான ஸ்டாலினிற்கு இந்த ஆழ்மன சக்திகளில் சுத்தமாக நம்பிக்கை இருக்கவில்லை.



தன்னிடம் உள்ள சக்தியை நிரூபிக்க ஸ்டாலினை அவருடைய பாதுகாப்பு வளையத்தையும் மீறி அவருடைய தனியறையில் ஒரு குறிப்பிட்ட நாள் இரவில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வந்து சந்திப்பதாக வாசிலிவ் சொன்ன போது ஸ்டாலினுக்கு சிரிப்பு தான் வந்தது. அப்படி வந்தால் கண்டிப்பாக அவர் விருப்பப்பட்ட ஆராய்ச்சிக் கூடம் அமைக்க அனுமதி தருவதாக ஸ்டாலின் உறுதியளித்தார். உடனடியாக தன் பாதுகாவலர்களை அழைத்து வாசிலிவ் பற்றிச் சொல்லி எக்காரணத்தைக் கொண்டும் அவரை தன்னை வந்து சந்திக்க அனுமதிக்கக் கூடாது என்று சொல்லிய ஸ்டாலின் பின் அந்த விஷயத்தையே மறந்தார்.

வாசிலிவ் குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட இரவு நேரத்தில் அவரது தனியறையில் வந்து நின்ற போது ஸ்டாலினிற்கு எப்படி இருந்திருக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை. உடனடியாக வெளியே நின்றிருந்த தன் பாதுகாவலர்களை அழைத்த ஸ்டாலின் வாசிலிவைக் காட்டி தன் கட்டளையை மீறி அவரை உள்ளே விட்டது ஏன் என்று கேட்டார். மிரண்டு போன பாதுகாவலர்கள் அவரைத் தாங்கள் பார்க்கவேயில்லை என்று சாதித்தனர். கோபத்தின் உச்சிக்கே போன ஸ்டாலின் அவர்களுக்கு அந்த இடத்திலேயே மரண தண்டனை விதித்து ஆணையிட வாசிலிவ் இடைமறித்து தவறு அவர்களிடத்தில் இல்லையென்று சொன்னார். ஸ்டாலினிற்கு மிக நெருக்கமான ஆலோசகர் ஒருவருடைய உருவத்தை பாதுகாவலர்கள் மனதில் ஏற்படுத்தி தான் அவர்களைக் கடந்து வந்ததாக வாசிலிவ் சொன்னார். விசாரித்த போது பாதுகாவலர்கள் அனைவரும் அந்த ஆலோசகரைப் பார்த்ததாக ஒருமித்து சொன்னார்கள். வியப்புற்ற ஸ்டாலின் மரணதண்டனையை விலக்கிக் கொண்டார்.

ஆனாலும் இந்த மனோசக்தி ஸ்டாலினைக் குழம்ப வைத்தது. ஆராய்ச்சிக் கூடம் அமைக்க அனுமதி தந்த ஸ்டாலின் வாசிலிவை இன்னொரு அதிசயத்தைச் செய்து காட்டச் சொன்னார். ஒத்துக் கொண்ட வாசிலிவ் ஸ்டாலினுக்கு நம்பகமான இருவரைத் தன்னுடன் ஒரு வங்கிக்கு அனுப்பச் சொன்னார். உடனடியாகத் தன் ஒற்றர் படையில் இருவரைத் தேர்ந்தெடுத்து ஸ்டாலின் அவருடன் அவர்களை அனுப்பி வைத்தார்.

வங்கிக்குச் சென்ற வாசிலிவ் ஒரு வெள்ளைக் காகிதத்தை வங்கி கேஷியரிடம் தந்து அதற்கு ஆயிரம் ரூபிள்கள் தரச் சொன்னார். அதை வாங்கிய கேஷியர் மனதில் வாசிலிவ் அது ஆயிரம் ரூபிளுக்கான வங்கிக் காசோலை என்ற எண்ணத்தை ஏற்படுத்தினர். அந்தக் கேஷியர் அதை வாங்கிப் பார்த்து விட்டு ஒன்றும் சொல்லாமல் ஆயிரம் ரூபிள்களை எண்ணி அவரிடம் தந்ததை ஸ்டாலினின் ஒற்றர்கள் விழிகள் பிதுங்கப் பார்த்தனர். பின் அந்தக் கேஷியரிடம் மீண்டும் அந்தப் பணத்தைத் தந்த வாசிலிவ் அந்தக் காகிதத்தை இன்னொரு முறை பார்க்கச் சொல்ல, வெள்ளைக் காகிதத்தைப் பார்த்த வங்கி கேஷியர் அங்கேயே மயக்கம் போட்டு விழுந்தார். அந்தக் காலத்தில் ஆயிரம் ரூபிள்கள் என்பது மிகப் பெரிய தொகை.

இறுதியில் ஸ்டாலின் உறுதியளித்தபடி ஆழ்மன ஆராய்ச்சிக்கூடத்தை லெனின்கிராட் பல்கலைக்கழகத்தில் நிறுவ அனுமதியளித்தார். நாட்டு விஷயங்களிலும், தனிப்பட்ட அரசியல் விஷயங்களிலும் கூட ஸ்டாலின் வாசிலிவின் சக்தியினைப் பயன்படுத்திக் கொண்டார் என்று சொல்லப்பட்டாலும் அதன் விவரங்கள் வெளியிடப்படவில்லை. எல்லா சர்வாதிகாரிகளுக்கும் இருக்கக்கூடிய சந்தேகமும், பயமும் ஸ்டாலினிற்கும் இருந்ததால் அவர் அவ்வபோது அந்த ஆராய்ச்சிகளுக்குக் காட்டிய உற்சாகத்தைக் குறைத்துக் கொண்டார். அரசியல் கலக்காத மருத்துவ சம்பந்தமான ஆராய்ச்சிகள் பற்றிய விவரம் கூட வெளிவருவதை ஏனோ அவர் விரும்பவில்லை. அதனால் 1920, 1930களில் வாசிலிவ் மனோசக்தி குறித்து ஆராய்ச்சிகள் பல செய்து வெற்றி கண்ட விவரங்கள் 1960 கழிந்து ஸ்டாலின் மறைவிற்குப் பின் தான் வெளி வந்தன.


ஆரம்பத்தில் ஆழ்ந்த ஹிப்னாடிச மயக்கத்தில் சோதனையாளர்களை ஆழ்த்தி தான் சொன்னபடி அவர்களை செயல்படுத்த வைத்த வாசிலிவ் பின் வாய் விட்டு சொல்லாமலேயே நினைத்தவுடன் அது போல் நடந்து கொள்ள வைப்பதில் வெற்றி கண்டார். "வலது கையை அசை. இடது காலைத் தூக்கு. இப்போதே உறங்க ஆரம்பி. விழித்துக் கொள்" என்பது போன்ற கட்டளைகள் அவர் மனதில் எழுந்தவுடன் ஹிப்னாடிச நிலையில் இருந்த சோதனையாளர்கள் தங்களை அறியாமல் அதை செய்தார்கள். அந்த ஹிப்னாடிச உறக்கத்தில் பல நோயாளிகளை அவர் குணப்படுத்தியும் காட்டினார்.

அடுத்த கட்டமாக சோதனையாளர்கள் வெகு தொலைவில் இருந்தாலும் மிகச் சுலபமாக இதை நடத்திக் காட்ட முடியும் என்று நம்பிய வாசிலிவ் அதை நிரூபித்தும் காட்டினார். செவஸ்டோபோல் என்ற நகரம் லெனின்கிராடிலிருந்து சுமார் ஆயிரம் மைல்களுக்கும் அப்பால் இருந்தது. அங்குள்ள ஒரு ஆராய்ச்சிக் கூடத்திற்கு இன்னொரு ஆராய்ச்சியாளரான டொமாஷெவ்ஸ்கீ என்பவரை அனுப்பி ஒரு குறிப்பிட்ட நேரத்தினை முன் கூட்டியே தீர்மானித்துக் கொண்டு அந்த நேரத்தில் இந்த மனோசக்தி பரிசோதனைகளை நடத்தி எண்ணங்களின் சக்தியை அனுப்பவோ, பெறவோ, தூரம் ஒரு தடை அல்ல என்று கண்டுபிடித்தார். ஒரு நாள் அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் லெனின்கிராடு ஆராய்ச்சிக் கூடத்தில் எந்த ஒரு பதிவும் பதியாததைப் பார்த்த வாசிலிவ் பிறகு செவஸ்டோபோல் ஆராய்ச்சிக் கூடத்தை தொடர்பு கொண்ட போது டொமாஷெவ்ஸ்கீயிற்கு உடல்நிலை சரியில்லாததால் அவர் எந்த சோதனையும் அன்று செய்யவில்லை என்பது தெரிந்தது.

எண்ண அலைகளின் சக்தி எப்படியெல்லாம் வெற்றி பெறுகிறது என்பதைக் கண்ட வாசிலிவ் அந்த எண்ண அலைகளில் காந்தத் தன்மை இருக்கலாமோ என்று சந்தேகப்பட்டு இரும்புச் சுவர்கள் கொண்ட அறையில் சோதனையாளர்களை அமர வைத்து பரிசோதனைகள் செய்து பார்த்தார். அந்த ஆராய்ச்சிக் கூட பரிசோதனைக் கருவிகள் எந்தக் காந்த சக்தியும் அந்த இரும்புச் சுவரை ஊடுருவுவதையும் கண்டுபிடிக்கவில்லை. எந்த பரிசோதனைக் கருவியிலும் பரிசோதிக்க முடியாத, ஆனால் எல்லையில்லாத சக்திகள் கொண்ட ஆழ்மன எண்ணங்கள் செய்ய முடிகின்ற அற்புதங்கள் தான் எத்தனை என்று தோன்றுகிறதல்லவா?

இனியும் ஆழமாகப் பயணிப்போம்....

-என்.கணேசன்

நன்றி:விகடன்

9 comments:

  1. IYYA ITHAI PONDRA AALMANA SAKTHI PAYIRCHI PERUVATHU YEPPADI ? PAYIRCHI PERUM BOOKS THAMILIL ULLANAVA APPADI IRUNTHAL ATHIYUM LINKING VASATHIYODU THANTHAAL UNGAL VASAGARGALUKKU PAYANULLATHAGA IRUKKUM ..ADUTHA PATHIVIL YEATHIR PARKIREAN .. NANUM UNGAL VASAGANTHAN.. BY MOHAMED

    ReplyDelete
  2. இந்தத் தொடரின் பிற்பகுதியில் இதைப் பற்றி விளக்கமாகச் சொல்வதாக இருக்கிறேன். தொடர்ந்து படித்து வரவும். நன்றி. -என்.கணேசன்

    ReplyDelete
  3. நன்றி கணேசன்,உங்கள் படைப்புகள் அனைத்தும் அருமையிலும் அருமை,தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
  4. Excellent Ganesan. Keep it up. Please provide more details. Thanks.

    ReplyDelete
  5. நன்றி கணேசன் - சிறந்த, உபயோகமானக் கட்டுரைத் தொடர். சுமார் முப்பது / முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் நான், Dr Herald Sherman எழுதிய How to make ESP work for you என்ற புத்தகத்தைப் படித்துவிட்டு - எண்ண அலைகளைப் பெறுவதில் சிறிய பரிசோதனைகள் நடத்தி, அதில் வெற்றியும் பெற்றேன். அவை ஒன்றும் பெரிய சோதனைகள் இல்லை என்றாலும், பத்து முறை பரிசோதனை செய்ததில், மூன்று முறை மட்டுமே சரியாக வந்தது என்றபோதிலும், என் முன் காணல்கள் / மற்றும் மறைந்த பொருள் / எண் - யூகித்தல் ஆகியவை சரியாக வந்த அனுபவம் - எனக்கு இப்பொழுது நினைத்தாலும் சிலிர்க்கிறது.
    கௌதமன்.

    ReplyDelete
  6. Please let me know, have you written any books based on this.

    ReplyDelete
  7. Not so far. But I intend to do that in future.

    ReplyDelete
  8. read gnm tyrel's the personality of the man also life yogi by paramananda yogeswar//am autobiography of a yogi[

    ReplyDelete
  9. I hope that person is not leonid leonidovich vasiliev. The person who has proofed with Stalin is Wolf_Messing

    ReplyDelete