சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, August 24, 2009

டென்ஷன் வேண்டாமே!


ஒரு சராசரி மனிதனுடைய இதயம் ஒரு நாளில் 1,03,689 முறை துடிக்கிறது. அவன் ரத்தம் ஒரு நாளில் 16,80,00,000 மைல் தூரம் பயணம் செய்கிறது. அவன் 438 கன அடிக்காற்றை மூச்சாக உள்ளே இழுத்துக் கொள்கிறான். 750 தசைகளைஅசைக்கிறான். 70,00,000 மூளை செல்களைப் பயன்படுத்துகிறான். இந்த செயல்களால் அவன் களைத்துப் போவதில்லை. ஏனென்றால் இவை எல்லாம் தன்னிச்சையாக நடக்கின்றன. இதில் அவன் முயற்சி என்று எதுவும் இல்லை.

ஆனால் அவன் முயற்சி எடுத்து நடத்தும் சில்லறை வேலைகளால் அவன் களைத்துப் போகிறான். தளர்ச்சி அடைகிறான். டென்ஷனாகிறான். எப்போது தான் இந்த வேலைக்கெல்லாம் ஓய்வோ என்று அங்கலாய்க்கிறான். தான் வேலை செய்வது அடுத்தவருக்குத் தெரியாமல் போனால், அடுத்தவர்கள் அதைப் பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளா விட்டால் கோபப்படுகிறான். 'நான் போனால் தான் என்னருமை தெரியும்' என்று பயமுறுத்திப் பார்க்கிறான்.

இயற்கையாக நடக்கும் வேலைகளுக்கும் மனிதனாகச் செய்கிற வேலைகளுக்கும் இடையே எத்தனை வித்தையாசம் பாருங்கள். இயற்கை பிரமிக்க வைக்கும் அளவு வேலைகளை மனித உடலில் செய்ய வைத்தும் ஏற்படாத களைப்பும், டென்ஷனும் மனிதனாகச் செய்யும் அற்ப வேலைகளால் வந்து விடுகின்றனவே
அது ஏன்? ஆராய்வோமா?

இயற்கை தான் செய்யும் வேலைகளைக் கணக்கு வைத்துக் கொள்வதில்லை. அதனால் ஏன் தினம் செய்ய வேண்டும் என்ற கேள்வி அங்கு எழுவதில்லை. மனிதன் துரும்பை நகர்த்தினால் கூட கணக்கு வைத்துக் கொள்கிறான். (மேலே சொன்ன புள்ளி விவரத்தைப் படித்தால் படித்து முடித்தவுடனே 'ஐயோ இந்த அளவு வேலைகள் என் உடல் செய்கிறதா?' என்று எண்ணியே கூட களைத்துப் போகக் கூடும்). அதனால் அந்தக் கணக்கே களைப்புக்கும் டென்ஷனுக்கும் காரணமாகி விடுகிறது.

இயற்கை எதையும் எதனோடும் ஒப்பிடுவதில்லை. உதாரணமாக மூளை 'நான் எழுபது லட்சம் செல்கள் பயன்படுத்துகிறேன். தசைகள் எழுநூற்று ஐம்பது தான் பயன்படுத்துகின்றன' என்று ஒப்பிடுவதில்லை. ஏனிந்த அநியாயம் என்று குமுறுவதில்லை. அதனால் டென்ஷனாவதில்லை.

இயற்கை தன் செயல்களை சுமையாக நினைப்பதில்லை. மனிதன் தன் பெரும்பாலான செயல்களை சுமையாகவே நினைக்கிறான். இயல்பாக, மகிழ்ச்சியாகச் செய்யும் எந்த செயலும் அவனுக்கு களைப்பையும் டென்ஷனையும் உண்டாக்குவதில்லை. ஆனால் அப்படிச் செய்யும் செயல்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. சுமையாக எண்ணி புலம்பலுடன் செய்யும் செயல்கள் களைப்பையும் டென்ஷனையும் ஏற்படுத்தாமல் இருந்தால் அது தான் அதிசயம்.

இயற்கை எந்த செயலையும் அடுத்தவர் பார்வைக்காகச் செய்வதில்லை. அதனால் அது அடுத்தவர் கருத்துகளை எதிர்பார்த்து இருப்பதில்லை. அதன் செயல்களின் தரம் சிறப்பாகவும், நிலையான தன்மையுடையதாகவும் இருக்கின்றது. மனிதர்கள் பலர் அடுத்தவர் பார்க்க மாட்டார்கள் என்றால் ஒரு நல்ல செயலை செய்யவே முற்படுவதில்லை. செயல்களை செய்வதை விட அடுத்தவர்கள் கவனிக்கிறார்களா, பாராட்டுகிறார்களா, என்ன சொல்கிறார்கள் என்றெல்லாம் நினைப்பதில் அதிக நேரமும், அதிக கவனமும் மனிதர்கள் செலவிடுவதே டென்ஷனுக்கு அடிப்படைக் காரணமாகி விடுகிறது. விளைவு, குறைவான செயல்கள் நிறையவே டென்ஷன் என்றாகி விடுகிறது.

இயற்கையின் செயல்களில் தேவையான ஒழுங்குமுறை இருக்கிறது. பெரும்பாலான மனிதர்கள் செயல்களில் அது இருப்பதில்லை. அவர்களுடைய தவறான மனநிலைகள் அந்த ஒழுங்கின்மைக்குக் காரணமாக அமைந்து விடுகின்றன.

இயற்கை செய்யத் தேவையில்லாத செயல்களைச் செய்ய முனைவதில்லை. தேவையுள்ளதை மட்டுமே செய்வதால் அனைத்தையும் அலட்டிக் கொள்ளாமல் இயற்கை செய்து முடிக்கிறது. மனிதன் செய்கின்ற பல செயல்கள் தேவையில்லாததாகவும் அவனுக்குப் பயன் தராதவையாகவும் இருக்கின்றன. அதனால் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்ய அவனுக்கு நேரம் போதுமானதாக இருப்பதில்லை. எனவே மீதியுள்ள குறைவான நேரத்தில் அனைத்தையும் செய்ய முயலும் போது களைப்பும் டென்ஷனும் தோன்றுவது இயல்பேயல்லவா?

இயற்கையிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியவை நிறைய இருக்கின்றன. செய்ய வேண்டிய செயல்களை அமைதியாக ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக முழுக் கவனத்தோடு செய்யும் போது நாம் ஒவ்வொரு நாளும் டென்ஷனில்லாமல், தளர்ச்சி இல்லாமல் சிறப்பாக எத்தனையோ செய்து முடிக்க முடியும். முன்பு சொன்ன இயற்கையின் செயல்களுக்கும், மனித செயல்களுக்கும் இடையே உள்ள வித்தியாசங்களை கவனித்தால் ஒரு பெரிய உண்மை விளங்கும். டென்ஷன் எப்போதுமே செய்கின்ற செயல்களால் இல்லை. செயல்களைப் பற்றிய எண்ணங்களாலேயும் முறைகளாலேயும் தான் ஏற்படுகின்றது.

யாரோ ஒரு அறிஞர் சொன்னது நினைவுக்கு வருகின்றது. "பிரபஞ்சம் நொடியில் பல நட்சத்திரங்களை சத்தமில்லாமல் உருவாக்கி வருகின்றது. ஆனால் கோழி முட்டை இடுவதற்கு முன்பு போடும் சத்தம் ஊரையே தட்டி எழுப்புகிறது".

நாம் கோழியாக இருக்க வேண்டாம். பிரபஞ்சமாக இருந்து அமைதியாக நட்சத்திரங்களை உருவாக்குவோம். மேலே குறிப்பிட்ட இயற்கையின் வழிமுறைகளைப் பின்பற்றி செயல்புரிய கற்றுக் கொண்டால் டென்ஷனே ஏற்படாது. களைத்துப் போகாமல் நாம் செய்ய முடியும் சாதனைகள் கற்பனைக்கும் அடங்காது.

- என்.கணேசன்

14 comments:

  1. //நாம் கோழியாக இருக்க வேண்டாம். பிரபஞ்சமாக இருந்து அமைதியாக நட்சத்திரங்களை உருவாக்குவோம். மேலே குறிப்பிட்ட இயற்கையின் வழிமுறைகளைப் பின்பற்றி செயல்புரிய கற்றுக் கொண்டால் டென்ஷனே ஏற்படாது. களைத்துப் போகாமல் நாம் செய்ய முடியும் சாதனைகள் கற்பனைக்கும் அடங்காது.//
    நல்ல சிந்தனை. இதை பின்பற்றினாலே போதும் நாமெல்லாம் எங்கோ போய்விடுவோம். இது சத்தியம். வாழ்த்துக்கள் ஒரு நல்ல பதிவை எங்களுக்கு படிக்க கொடுத்ததற்காக.

    ரேகா ராகவன்

    ReplyDelete
  2. நீங்க சுலபமா சொல்லீட்டீங்க டென்சனாகாதீங்கன்னு. ஆனா :)

    //இயற்கையிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியவை நிறைய இருக்கின்றன. //

    ஆமாம். இயற்கையோடு ஒன்றி வாழாததைனால்தானே எல்லாம்.

    ReplyDelete
  3. Very Very useful post. keep up the good work

    ReplyDelete
  4. தங்களுடைய எழுத்துக்கள் நாளுக்கு நாள் வலிமை பெற்று கொண்டு இருக்கின்றது...மேலும் தங்கள் பணி சிறப்பாக அமைய என் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. யாரோ ஒரு அறிஞர் சொன்னது நினைவுக்கு வருகின்றது. "பிரபஞ்சம் நொடியில் பல நட்சத்திரங்களை சத்தமில்லாமல் உருவாக்கி வருகின்றது. ஆனால் கோழி முட்டை இடுவதற்கு முன்பு போடும் சத்தம் ஊரையே தட்டி எழுப்புகிறது".

    eppadi ummai paaraattuvathu endre theriyavillai. Eppadi......ippadi...arumai-arumaiyaana pathuivugalai padaikkindreer aiya? athan ragasiyam thaan ennvo?

    enna thozhil purigindreer? illai ithuve thaan (pathivugal padaipathu thaan) umm mulu nera thizhilo?

    Adiyenin manam kanintha vaalthukkal. thodarattum thanggal 'payanulla' pani :-)

    ReplyDelete
  6. Nandri ananbare. Ezuthuvathu oru hobby thaan. paNi vangkiyil. ungkaLaip pol palarai sendru en ezuththu adaikiRathu enpathil mattillaatha makizchi.

    ReplyDelete
  7. திரு என்.கணேசன் அவர்களே,
    தங்கள் இந்த பதிவு , அந்த பதிவு பயனுள்ளதாக இருக்கிறது என்றெல்லாம் பிரித்து சொல்வதற்கில்லை. சுருக்கமாக பயனுள்ள, சமூக அக்கறையுள்ள, நல வாழ்வுக்கு வழி காட்டும் கருத்துக்கள் அடங்கிய ஒரு blog உங்களுடையது. வாழ்த்துக்கள்.
    தொடரட்டும் உங்கள் நற்பணி. நன்றி

    ReplyDelete
  8. வாழ்த்துகள் கனேசன் நான் ஏற்கனவே சில பதிவுகளை தங்களின் தளத்தில் இன்ட்லி வழியாக வந்து படித்திருக்கிறேன் அப்பொழுதெல்லாம் நினைப்பதுண்டு எப்படி இவரால் எளிமையாக பெரிய விஷயத்தை கையால முடிகிறது என யோசிப்பேன் இன்றும் அதையே தான் நினைக்கிறேன்.

    இயற்கையிடம் இருந்து விலகி சென்றால் இன்னும் இன்னல்கள் ஏராளாம் அனுபவிக்க வேண்டியிருக்கும்..

    மீண்டும் ஒரு முறை தங்களின் சிந்தனைக்குறிய பதிவுகளுக்கு...

    வாழ்த்துகளுடன்
    ஞானசேகர் நாகு

    ReplyDelete
  9. அருமையான பதிவு. தங்கள் மனிதநேய பனி தொடரட்டும். எண்ணங்களை வண்ணங்களாக்கும் தங்கள் எழுத்து தூரிகை இன்னும் வலிமை பெறட்டும்!

    ReplyDelete
  10. தமிழில் சிறந்த வலைப்பதிவர்களுக்கான சிறந்த தளம் இணைந்திருங்கள் http://cpedelive.blogspot.com/

    ReplyDelete
  11. வணக்கம் இன்றுதான் முதன் முதலில் உங்கள் தளத்திற்கு வருகின்றேன் உங்கள் எழுத்துக்கள் ரசிக்கவைக்கின்றது இனி தொடர்ந்து வருவேன்

    ReplyDelete