சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, June 22, 2009

காது கொடுத்துக் கேளுங்கள்!


டுத்தவர் சொல்வதை முழுவதுமாகக் காது கொடுத்துக் கேட்பது ஒரு அற்புதமான கலை. வார்த்தைகளை மட்டும் கேட்பதல்ல அது. வார்த்தைகளுக்குப் பின்னால் உள்ள மனதைப் புரிந்து கொள்ளும் கலை அது. பாதி மனதை வேறெங்கோ அலைய விட்டு, சொல்வதை அரைகுறையாகக் கேட்பதல்ல அது. ஒருவர் பேசப் பேச இடைமறித்து நம் கருத்தைச் சொல்லி, பின் நம் அனுபவங்களைச் சொல்லி, அவர் சொல்ல வந்ததை மறக்கடிப்பதல்ல அது. முழு மனதுடன் பொறுமையாக, அமைதியாகக் கேட்கும் கலை அது. ஆனால் இந்தக் கலை இன்று அபூர்வமாகி விட்டது. அதற்குக் காரணம் இரண்டு.

முதலாவதாக இன்றைய மனிதர்களில் பெரும்பாலோருக்கு மிகவும் பற்றாக்குறையாக இருப்பது நேரமே. அவசர வாழ்க்கை ஓட்டத்தில் எதற்குமே அதிக நேரம் இருப்பதில்லை. கிடைக்கும் சிறிது நேரத்தை டெலிவிஷன் எடுத்துக் கொள்கிறது. வார்த்தைகள் தந்தி வாசகங்களாக மட்டுமே குடும்பத்தினுள்ளே பேசப்படுகின்றன. அதற்கு மேல் சொல்லவும் நேரமில்லை. கேட்கவும் நேரமில்லை.

அடுத்தது மனப்பற்றாக்குறை. தன்னையே மையப்படுத்திக் கொண்டு வாழ்க்கையை வாழும் மனநிலை. அடுத்தவர்களை அறிந்து கொள்ளவோ, புரிந்து கொள்ளவோ தேவை இருப்பதாக எண்ணாத மனோபாவம்.
இதில் இரண்டு வகை உண்டு. சிலர் தாங்களும் தங்களைப் பற்றி ஒன்றும் சொல்ல மாட்டார்கள். அடுத்தவர்கள் பற்றி கேட்கும் ஆர்வமும் இவர்களுக்கு இருக்காது. இதில் இரண்டாவது வகை
தங்களைப் பற்றியே பேசி ஆனந்தப்படும் மனிதர்கள். இவர்களுக்கு தாங்கள் பேசுவதை அடுத்தவர்கள் கேட்க வேண்டும். அடுத்தவர்கள் பேச ஆரம்பித்தாலோ போரடித்து விடும்.

இந்த இரண்டு பற்றாக்குறைகளையும் விட்டொழிக்கும் போதே கேட்கும் கலை கைகூடுகிறது.

மனிதர்கள் தீவுகள் அல்ல. தீவுகளாக அவர்கள் வாழ்ந்து விடவும் முடியாது. குடும்பத்திலும் சமூகத்திலும் ஒருவரது மகிழ்ச்சியும், துக்கமும் அடுத்தவரைப் பாதிக்காமல் இருக்க முடியாது. குடும்ப மற்றும் சமூக நலனும், மகிழ்ச்சியும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதிலேயே முக்கியமாக இருக்கிறது. அப்படி புரிந்து கொள்வது ஒருவர் சொல்வதை மற்றவர் காது கொடுத்து மனமாரக் கேட்கும் போதே சாத்தியமாகிறது.
முக்கியமாக ஒருவர் பிரச்சினைகளின் கனம் தாளாமல் தள்ளாடும் போது இந்த 'கேட்கும் கலை' பேருதவியாகி விடுகிறது.

என் நண்பர் ஒருவர் அவருடைய நண்பர் ஒருவர் வீட்டில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தைச் சொன்னார். அந்தக் குடும்பம் ஒருவருக்கொருவர் அதிகம் பேசிக் கொள்ளாத குடும்பம். குடும்பத் தலைவி சமைத்து விட்டு வேலைக்கு சென்று விடுவார். ஒவ்வொருவரும் அவரவர் நேரங்களில் தாங்களே எடுத்து சாப்பிட்டுக் கொண்டு விட்டு அவரவர் அறைக்குள்ளோ, வெளியிலோ சென்று விடுவார்கள். சில நேரங்களில் ஹாலில் டிவி பார்த்துக் கொண்டு இருப்பார்கள். அப்போதும் கூட அந்த நிகழ்ச்சிகளைப் பற்றி கருத்துகள் பரிமாறிக் கொள்வதும் கிடையாது.

அந்த வீட்டின் கடைசி பிள்ளை அப்போது தான் ஒரு கல்லூரியில் சேர்ந்திருக்கிறான். நிறைய பணம் கொடுத்து ஒரு பிரபல கல்லூரியில் சேர்த்திருந்தார்கள். சேர்ந்த சில நாட்களில் அவன் ஒருவித மன உளைச்சலுடன் இருந்திருக்கிறான். அவனுடைய தாயார், இரண்டு சகோதரர்கள் அதைக் கவனிக்கக்கூட இல்லை. இரண்டு மூன்று முறை தந்தை டிவி பார்த்துக் கொண்டிருந்த போது அவன் வந்து வந்து போயிருக்கிறான். மகனிடம் என்ன விஷயம் என்று தந்தை கேட்டு இருக்கிறார். அவன் ஒரு நிமிடம் தயங்கி விட்டு ஒன்றுமில்லை என்று சொல்லி இருக்கிறான். சுவாரசியமாக டிவியில் எதையோ பார்த்துக் கொண்டிருந்த தந்தை அதோடு விட்டிருக்கிறார்.

மறு நாள் அந்த இளைஞன் தூக்கில் தொங்கி இருக்கிறான். கல்லூரியில் ராகிங் கொடுமையாம்.

மகனின் பிணத்தருகே அந்தத் தந்தை கதறியழுதது கல்லையும் கரைய வைக்கும் என்கிறார் என் நண்பர். "ரெண்டு மூணு தடவை என் மகன் என் கிட்ட வந்தானே, ஒரு மாதிரியாய் இருந்தானே, அந்த டிவியை ஆ·ப் செய்துட்டு, வாடா என்னடா விஷயம்னு கேட்டுருந்தா சொல்லியிருப்பானோ என்னவோ?". அது காலம் கடந்து பெற்ற ஞானோதயம் அல்லவா? அந்த வீட்டில், தாய் தந்தை இரண்டு சகோதரர்கள் என நால்வர் கூட இருந்தும் மனம் விட்டுத் தன் பிரச்சினையைச் சொல்ல ஏற்ற நபராக ஒருவரைக் கூட அந்த இளைஞன் எண்ணாததும், அந்த சூழ்நிலையில் குடும்பம் இருந்ததும் துர்ப்பாக்கியமே அல்லவா?

இப்படி இறப்பது மட்டுமே கொடுமையான விஷயம் அல்ல. பல சமயங்களில் இறக்க முடியாமல் இருக்க நேர்வதும் அதை விடப் பெரிய கொடுமையே. அதை மனமும், நேரமும் இருந்தால் நீங்கள் உங்களைச் சுற்றி நிறைய காணலாம். முக்கியமாய் வயதான காலங்களில் அதிகமாய் பணமோ, உணவோ தேவைப்படாமல் எப்போதாவது சில முறையாவது சில நிமிடங்களை நமக்காக நம் குடும்பத்தினர் ஒதுக்க மாட்டார்களா என்று மட்டும் ஏக்கப்படும் முதியவர்களெத்தனை பேரிருக்கிறார்கள்?

இப்படி பிரச்சினைகளைக் கொண்ட இளையவர்கள், இலையுதிர்காலத்தில் முதியவர்கள் என்று மட்டுமல்லாமல் நம்மில் ஒவ்வொருவரும் கூட ஒருசில சந்தர்ப்பங்களில் பொறுமையான காதுகளுக்காக ஏங்கியிருக்கக் கூடும். மனச்சுமைகள் அதிகமாகி விடும் சில நேரங்களில் அவற்றை இறக்கி வைக்கவும், ஆறுதல் பெறவும், நாம் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்கும் நல்ல இதயங்களைத் தேடி நிற்கும் பலவீனமான தருணங்கள் நமக்கும் வருவதுண்டு. அந்த நேரத்தில் நமக்கு ஒருவர் செய்யக் கூடிய மிகப் பெரிய உதவி நாம் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்பதே. பிற்பாடு நாம் சுதாரித்துக் கொண்ட பின் நம் பிரச்சினைகளைத் தெரியப்படுத்தி விட்டோமே, சொல்லி இருக்கத் தேவையில்லையோ என்று நம்மில் சிலர் நினைத்தாலும் கூட அந்த இக்கட்டான நேரத்தில் அந்த ஒருவரிடம் உள்ளதைக் கொட்டி நாம் பெற்ற ஆசுவாசத்தை நாம் குறைத்து மதிப்பிட முடியாது.

எனவே காது கொடுத்துக் கேளுங்கள் நண்பர்களே. மேல் போக்காக அல்லாமல் முழு கவனத்தையும் வைத்து சொல்வதைக் கேளுங்கள். குடும்பத்தினுள்ளேயும், வெளியேயும் பிரச்சினைகளால் நிரம்பி வழியும் மனிதர்கள் ஏதாவது சொல்ல முன் வந்தால் தயவு செய்து நேரம் ஒதுக்கி பொறுமையாகக் கேளுங்கள். முடிவில் அவர்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வாக எதாவது வழி தெரிந்தால் சொல்லுங்கள். அப்படி இல்லையென்றாலும் நல்ல மனதுடன் ஆத்மார்த்தமாக "எல்லாம் சரியாகி விடும், கடவுள் கண்டிப்பாக ஏதாவது வழி விடுவார்" என்று நம்பிக்கையான வார்த்தைகளைச் சொல்லுங்கள். பல நேரங்களில் அதை விடப் பெரிய உதவி வேறு இருக்க முடியாது.

- என்.கணேசன்


8 comments:

  1. Well said. Must-Read for today's people.

    ReplyDelete
  2. என்ன சொல்ல கணேசன் சார்...மிக அருமை என்ற வார்த்தைகளுக்கு உள்ள மிகப்பெரிய அளவுகோலை என் வாழ்த்துக்களாக ஏற்றுக்கொள்ளுங்கள்.உங்கள் படைப்புகளின் அதி தீவிர ரசிகையாகிவிட்டேன்

    ReplyDelete
  3. எல்லாம் சரியாகி விடும், கடவுள் கண்டிப்பாக ஏதாவது வழி விடுவார்" என்று நம்பிக்கையான வார்த்தைகளைச் சொல்லுங்கள். பல நேரங்களில் அதை விடப் பெரிய உதவி வேறு இருக்க முடியாது.
    neenga yeppavum yenakku star than.
    oru sagotharanin aruthal.romba nalla pathivu.
    nanri.
    Abishek.Akilan..

    ReplyDelete
  4. அருமை அருமை அருமை. எல்லோரும் பின் பற்ற வேண்டிய நல்ல கருத்துக்கள்.பாராட்டுக்கள் பல.

    அன்புடன்
    ரேகா ராகவன்

    ReplyDelete
  5. //இப்படி இறப்பது மட்டுமே கொடுமையான விஷயம் அல்ல. பல சமயங்களில் இறக்க முடியாமல் இருக்க நேர்வதும் அதை விடப் பெரிய கொடுமையே.//

    ஆம். மனதைப் பிசைந்த நிகழ்வு. அருமையான கட்டுரை.

    ReplyDelete
  6. romba arumai Sir. ungaludaiya ella padivaiyum naan adikadi padikiren. Pechukaaga sollala, manasu kashtama irukkum podhu unga padivu eduthu padikiren thirumba thirumba. Pakathula irundhu solli thara maadiri irukku.

    neengal innum niraya pakirndhu kolla, ezhudha ellam valla iraivanai prarthikiren. VAAZHGA VALMUDAN.
    Regards
    Geetha

    ReplyDelete
  7. I became your fan. Few months back i just started to read your blog because i am also from the home town CBE. But now i read each and ever word of you blog. Please continue your good work.

    ReplyDelete