கல்கத்தா வீதிகளில் பிச்சையெடுத்துக் கொண்டிருந்த தொழுநோயாளி ஒருவரது உடல்நிலை மிகவும் மோசமாகி விட அவர் அன்னை தெரசாவின் கருணை இல்லம் ஒன்றில் அடைக்கலம் புகுந்தார். சில இடங்களில்அழுகிய நிலையில் இருந்த அவர் உடலைச் சுத்தம் செய்து கொண்டிருந்த சேவகர் ஒருவர், ஒரு கட்டத்தில் அந்த நெடியைத் தாங்க முடியாமல் பின்வாங்க அன்னை தெரசா அந்த வேலையைத் தானே மேற்கொண்டு தொடர்ந்தார்.
சிறிதும் முகம் சுளிக்காமல், நெடியைப் பொருட்படுத்தாமல் அன்னை தொடர்ந்து செய்த அந்தப் பணி அந்தத் தொழு நோயாளியின் கண்களில் கண்ணீரை வரவழைத்து விட்டது. "அம்மா இது போன்ற அருவருக்க வைக்கும் வேலையைச் செய்ய உங்களுக்கு சிரமமாகத் தோன்றவில்லையா?" என்று அவர் கேட்டார்.
"சகோதரரே! நீங்கள் அனுபவிக்கும் இந்தக் கஷ்டத்துடன் ஒப்பிடும் போது நான் செய்வது ஒரு சொல்லத்தக்க விஷயமே இல்லை" என்று அன்புடன் பதிலளித்தார் அன்னை தெரசா.
அன்னையுடைய அந்தத் தன்னலமில்லாத சேவைக்கு இணையாக அந்தத் தொழுநோயாளியின் இதயத்தைத் தொட்டது அந்த அன்பான வார்த்தைகள்.
பல நேரங்களில் நல்லதாக, அன்பாக சொல்லப்படும் நான்கு வார்த்தைகள் ஏற்படுத்தும் தாக்கத்தை, பணத்தாலும், பொருளாலும் ஏற்படுத்த முடிவதில்லை. அதுவும் கஷ்ட காலங்களில் ஒருவன் சிக்கித் தவிக்கும் போது அவனிடம் அன்பாகவும், ஆறுதலாகவும், நம்பிக்கையூட்டும்படியாகவும் சொல்லப்படும் வார்த்தைகள் ஏற்படுத்தும் நன்மைகளுக்கு அளவேயில்லை. தண்ணீரில் மூழ்கித் தத்தளிக்கும் நீந்தத் தெரியாத மனிதனுக்குக் கிடைக்கும் கட்டை பிடித்து மிதக்க உதவுவதைப் போல அந்த நல்ல வார்த்தைகள் கஷ்டகாலங்களில் தாக்குப் பிடிக்க ஒருவனுக்கு உதவுகின்றன.
மிகவும் தன்னம்பிக்கை உடையவர்கள், தைரியசாலிகள் கூட சில சமயங்களில் தங்கள் தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் இழந்து விடுவதை நான் பார்த்திருக்கிறேன். அவர்களே தங்களுக்குள் அவற்றை இழந்து நிற்கும் அந்தக் குறுகிய காலத்தில் அடுத்தவரிடமிருந்து வரும் நம்பிக்கை வார்த்தைகள் எப்படிப்பட்ட ஊக்க மருந்தாக வேலை செய்கிறது என்பதைக் கண்கூடாகக் கண்டிருக்கிறேன்.
சொற்கள் சக்தி வாய்ந்தவை. அவை ஆக்கவும் அழிக்கவும் வல்லமை படைத்தவை. அவைகளை ஆக்கத்திற்கே பயன்படுத்துங்கள். சந்திக்கும் மனிதர்களிடம் உள்ள நல்லதைக் கண்டுபிடித்துப் பாராட்டுங்கள். அப்படி நல்லதைப் பாராட்டும் போது அவர்கள் மேலும் நல்லதைச் செய்ய நீங்கள் ஊக்கப்படுத்துகிறீர்கள்.
மற்றவர்கள் வருத்தத்தில் மூழ்கியிருக்கையில் ஆத்மார்த்தமாய் ஆறுதல் வார்த்தைகளைச் சொல்லுங்கள். வருத்தங்களும் தோல்விகளும் சகஜமானவை என்பதையும் அதைத் தாண்டாமல் யாரும் பெரிய வெற்றிகளை அடைந்ததில்லை என்பதை நினைவூட்டுங்கள். உங்களுக்குத் தெரிந்து அதே போன்ற நிலைகளில் இருந்து விடுபட்டு மேலுக்கு வந்தவர்கள் பற்றி எடுத்துச் சொல்லி தைரியப்படுத்துங்கள். அதன் மூலம் அதிலிருந்து மீண்டு வர அவர்களுக்கு நீங்கள் உதவுகிறீர்கள்.
காணும் ஒவ்வொரு திறமையையும் சுட்டிக் காட்டி வாழ்த்தத் தயங்காதீர்கள். பிறையாகத் தோன்றும் எல்லாமே முழுநிலவாகிப் பிரகாசிப்பதில்லை. எத்தனையோ பிறைகள் அலட்சியத்தாலும், கடுமையான விமரிசனங்களாலும் அமாவாசை இருட்டாய் தொலைந்து போயிருக்கின்றன. ஒரு திறமை வெளிப்படுகையில் அடையாளம் காணப்பட்டு பாராட்டப்படும் போது அந்தத் திறமை வேரூன்ற உதவுகிறீர்கள். தங்கள் திறமைகள் மீது உண்மையிலேயே நம்பிக்கை ஏற்படும் வரை எல்லாத் திறமையாளர்களுக்கும் ஆரம்பத்தில் இது போன்ற நல்ல வார்த்தைகள் தேவைப்படுகின்றன. அந்த நல்ல வார்த்தைகளைச் சொல்ல என்றுமே தயங்காதீர்கள்.
இன்றைய நாட்களில் நல்லதாய் நான்கு வார்த்தைகள் கேட்பது உண்மையிலேயே அரிதாக இருக்கிறது. எத்தனையோ சௌகரியங்களும், வசதிகளும் பெருகி இருந்தாலும் மனப்பற்றக்குறையாலும், நேரப்பற்றாக்குறையாலும் நல்ல நம்பிக்கை, ஆறுதலூட்டும் வார்த்தைகள் கேட்பது அபூர்வமாகவே இருக்கிறது. இந்தச் சிறிய குறைபாட்டின் விளைவுகள் வார்த்தைகளில் அடங்காதவை. பூதாகாரமானவை.
அன்னை தெரசாவைப் போல் தன்னலமில்லாத சேவைகளை செய்ய நமக்கு முடியாமலிருக்கலாம். ஆனால் அன்பாய் நான்கு வார்த்தைகள் சொல்லவாவது செய்யலாமில்லையா? அதற்கு என்ன செலவு இருக்கிறது? அதில் என்ன சிரமம் இருக்கிறது? இந்தக் கணத்திலிருந்து சிரமமில்லாத, செலவில்லாத அந்த நல்ல காரியத்தை நாம் செய்ய ஆரம்பிப்போமா!
-என்.கணேசன்
அருமையான கட்டுரை.
ReplyDelete\\சொற்கள் சக்தி வாய்ந்தவை. அவை ஆக்கவும் அழிக்கவும் வல்லமை படைத்தவை. அவைகளை ஆக்கத்திற்கே பயன்படுத்துங்கள். சந்திக்கும் மனிதர்களிடம் உள்ள நல்லதைக் கண்டுபிடித்துப் பாராட்டுங்கள்.\\
ReplyDeleteவாழ்த்துக்கள்..
nice and true
ReplyDeleteஅருமையான கட்டுரை. தேவைப்படும் தருணங்களில் தன்னம்பிக்கையூட்டும் வார்த்தைகளை சொல்லி ஒருவரை இக்கட்டான நிலையிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்பதை மிகவும் அழகாக விளக்கி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள் பல.
ReplyDeleteரேகா ராகவன்.
Excellent post!
ReplyDelete'Words are the most powerful drugs known to mankind' - Kipling.
-Swami