சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, March 19, 2009

வாழ்க்கை ஒரு விளையாட்டு


வாழ்க்கை ஒரு விளையாட்டு.

ஒரு பக்கத்தில் நீங்கள். மறுபக்கத்தில் கண்ணுக்குப் புலப்படாத இறைவன்.

ஆட்டத்தின் விதிகள் பிரபஞ்ச விதிகள்.

இந்த வினோத விளையாட்டே நீங்கள் ஜெயிக்கிறீர்களா இல்லையா என்பதை நிர்ணயிக்கத்தான். ஆனால் மறு பக்கத்தில் இருக்கும் இறைவனுக்கு இந்த விளையாட்டில் வெற்றி தோல்வி கிடையாது.

நீங்கள் காய்களை நகர்த்தும் விதத்தை வைத்தே இறைவனும் காய்களை நகர்த்துகிறான்.

இறைவன் உங்களை அவசரப்படுத்துவதில்லை. இப்படி ஆடு, அப்படி ஆடு என்று உங்களை நிர்ப்பந்திப்பதில்லை. எப்படிக் காய்களை நகர்த்துகிறீர்கள் என்பதில் உங்களுக்கு பூரண சுதந்திரம் உண்டு. நீங்கள் காய்களை நகர்த்தும் வரை இறைவன் பொறுமையாகவே காத்திருக்கிறான். ஒரு முறை நகர்த்திய பிறகு வாபஸ் வாங்கிக் கொள்கிறேன் என்று சொல்வதற்கு இந்த ஆட்டத்தில் இடமில்லை.

அதேசமயம் நீங்கள் காய்களை நகர்த்திய பிறகு அதை வைத்து இறைவன் காயை நகர்த்தும் போது அதை விமரிசித்தால் இறைவன் பொருட்படுத்துவதில்லை. இறைவனைப் பொறுத்த வரை நீங்கள் காய்களை நகர்த்துவதில் தான் உங்கள் சாமர்த்தியத்தைக் காட்டுகிறீர்களே ஒழிய உங்கள் கருத்துகளுக்கு இந்த ஆட்டத்தில் இடமில்லை.

இறைவன் கண்டிப்பாக விதிகளை மீறுவதில்லை. தப்பாட்டம் ஆடுவதில்லை. நீங்களும் அப்படியே ஆட வேண்டும் என்ற அடிப்படை நாணயத்தை உங்களிடம் அவன் எதிர்பார்க்கிறான். ஆனால் கண்ணுக்குப் புலப்படாதவன் அசந்திருப்பான், கவனிக்க மாட்டான் என்று நீங்கள் அழுகுணி ஆட்டம் ஆடினால் நீங்கள் தோற்பது உறுதி. விதிகளுக்கு புறம்பாக ஆடத்துவங்கும் போதே உங்கள் தோல்வி தீர்மானிக்கப்பட்டு விடுகிறது.

இந்த ஆட்டத்தின் சுவாரசியமான அம்சமே இந்த ஆட்டம் எத்தனை காலம் நீடிக்கும் என்பதை நீங்கள் அறியாதது தான். ஆட்டம் திடீரென்று எந்த நேரமும் இறைவனால் முடித்து வைக்கப்படலாம். இறைவனாக முடிக்கிற வரை எப்படி ஆடிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை வைத்து தான் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படுகிறது.

ஆட்டத்தை உற்சாகமாகவும், நேர்மையாகவும், புத்திசாலித்தனமாகவும் ஆடிக் கொண்டிருக்க முடிந்தால் ஆட்டத்தில் நீங்கள் வெற்றியடைந்து விட்டீர்கள் என்று அர்த்தம். எந்திரமாகவோ, வஞ்சகமாகவோ, முட்டாள்தனமாகவோ ஆடி வந்தால் தோல்வியடைந்து விட்டீர்கள் என்று அர்த்தம்.

மற்ற விளையாட்டுகளை விட இந்த விளையாட்டு இன்னொரு விதத்தில் நிறையவே வித்தியாசப்படுகிறது. மற்ற ஆட்டங்களில் முதல் சுற்று, இரண்டாம் சுற்று என்று உங்களை நிரூபிக்க பல சந்தர்ப்பங்கள் உள்ளன. இதில் அப்படி இன்னொரு சந்தர்ப்பம் உங்களுக்கு அளிக்கப்படுவதில்லை. இந்த வாழ்க்கை தான் உங்களுக்கு கிடைக்கும் ஒரே மிகப்பெரிய சந்தர்ப்பம். இது முடியும் போது எல்லாமே முடிந்து போகிறது.

இந்த அரிய சந்தர்ப்பத்தை எப்படி பயன்படுத்தி ஆடிக்கொண்டிருக்கிறீர்கள்?

-என்.கணேசன்

17 comments:

  1. எப்போதும் போல் எவ்லளவு அழகாகச் சொல்கிறீர்கள். அருமை.
    தெரிந்தே சில சமயங்களில் சறுக்குகிறேன். அதன் பின் சில சமாதானங்களால் அதை மூடுகிறேன். ஆனாலும் சரியான ஆட்டத்தின் பக்கம் முயற்சிக்க வேண்டுமென்றே முனைகிறேன்.

    ReplyDelete
  2. Thought provoking article.

    ReplyDelete
  3. ___//மற்ற விளையாட்டுகளை விட இந்த விளையாட்டு இன்னொரு விதத்தில் நிறையவே வித்தியாசப்படுகிறது. மற்ற ஆட்டங்களில் முதல் சுற்று, இரண்டாம் சுற்று என்று உங்களை நிரூபிக்க பல சந்தர்ப்பங்கள் உள்ளன. இதில் அப்படி இன்னொரு சந்தர்ப்பம் உங்களுக்கு அளிக்கப்படுவதில்லை. இந்த வாழ்க்கை தான் உங்களுக்கு கிடைக்கும் ஒரே மிகப்பெரிய சந்தர்ப்பம். இது முடியும் போது எல்லாமே முடிந்து போகிறது.//___

    இறை நம்பிக்கை எனக்கு எல்லை என்ற போதும்
    இயற்கையை நம்பி
    மிகவும் இரசித்தேன் இந்த வரிகளை ...

    (புதன் அன்று தங்களை வங்கியில் காண முடியவில்லையே ... விடுப்பா ?)

    ReplyDelete
  4. எந்த ஒரு விசயத்தையும் அழகாக சொல்கிறீர்கள். உங்கள் எழுத்துக்கள் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது

    ReplyDelete
  5. anuncia ,
    I am ur fan.keep it up. how u got this type of messages.very nice anna.somebody have this type of knowledge about life.

    ReplyDelete
  6. விதிகளுக்கு புறம்பாக ஆடத்துவங்கும் போதே உங்கள் தோல்வி தீர்மானிக்கப்பட்டு விடுகிறது.

    Super

    ReplyDelete
  7. ஒவ்வொரு முறை நாம் காய்களை நகர்த்தும் போது வெற்றி தோல்வியைப் பற்றி கவலைப் படாமல் இறைவனுக்கு இணையாக நாம் ஆட முடிந்தால் அதுவே அருமையான விளையாட்டு.
    இறைவன் நம்மோடு விளையாடுவது போல் தோன்றினாலும் ,அவன்தான் நம் காய்களையும் நகர்த்துகிறான் ....

    ReplyDelete
  8. ஒவ்வொரு முறை நாம் காய்களை நகர்த்தும் போது வெற்றி தோல்வியைப் பற்றி கவலைப் படாமல் இறைவனுக்கு இணையாக நாம் ஆட முடிந்தால் அதுவே அருமையான விளையாட்டு.
    இறைவன் நம்மோடு விளையாடுவது போல் தோன்றினாலும் ,அவன்தான் நம் காய்களையும் நகர்த்துகிறான் ....என்பதைப் புரிந்து கொண்டு ஆடினால் ஆட்டம் இன்னும் சுவாரசியம் ஆகும்...

    ReplyDelete
  9. Very beautiful style of writing! Absolutely. Inge Iraivanai patri varum patthi galai eduthu vittu parthalum porul verubadu ondrum illai endru ennugiren. Surukkamaga, avaravar vazhkai avaravar kaiyil. Idil iraivan seidhadhum, seivadhum, seiya povadum ondrum illai. Iraivan irukiran enbadu namakku nambikkayai adhiga paduthugirathu. Avvalave!

    ReplyDelete
  10. //இந்த வாழ்க்கை தான் உங்களுக்கு கிடைக்கும் ஒரே மிகப்பெரிய சந்தர்ப்பம். இது முடியும் போது எல்லாமே முடிந்து போகிறது.//

    இதை ஒத்துக்கொள்வதாக இல்லை,

    "பூமி உருண்டைக்குள் விழுந்து விட்ட நாம் விளையாட்டில் வெற்றி பெறும் வரை அவன் பயிற்சி கொடுத்துக் கொண்டே இருப்பான்,

    என்ன நாளொரு உடைமாற்றும் போது நாம் தெரிந்து கொள்கிறோம் ஆனால் பிறப்பொறு உடலை உடையாக்கும் போது தெரிந்து கொள்வதில்லை."

    முற்றும் உணர்ந்தோர் வாக்கிலிருந்து இதனை அறிந்து கொள்கிறேன்.

    ReplyDelete
  11. hello brother,
    super,super,super
    Akilan...Abishek.

    ReplyDelete
  12. இதற்கு தான் ஆடி அடங்குதல்னு சொன்னாங்களோ

    ReplyDelete
  13. வாழ்க்கை என்பது ஒரு விளையாட்டு , நாம் விரும்பியே அதை விளையாடி தீரவேண்டும். அது நமக்கு விதிக்கப்பட்ட விதி என்பதைவிட , நமக்கு கிடைத்த வாய்ப்பு என்று கருதவேண்டும். தங்களின் கட்டுரை எங்களை மிகவும் சிந்திக்க வைக்கிறது.

    ReplyDelete
  14. Ganesh its very nice
    Kudos keep it up son

    ReplyDelete