என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Friday, February 27, 2009

இதுவும் கடந்து போகும்....

"எல்லா காலங்களுக்கும், சந்தர்ப்பங்களுக்கும் பொருத்தமாக வழி காட்டக்கூடிய ஒரு சுருக்கமான மந்திரமோ, வாக்கியமோ இருக்கிறதா?" என்று ஒரு சக்கரவர்த்தி தன் சபையில் இருந்த அறிஞர் பெருமக்களைக் கேட்டார்.

சர்வரோகங்களுக்கும் ஒரே நிவாரணி என்கிற மாதிரி அவர் கேட்டதற்கு அந்த அறிஞர் பெருமக்கள் ஒன்று கூடி சிந்தித்தார்கள். பலரும் பலதைச் சொன்னார்கள். ஆனால் அதெல்லாம் ஒரு சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமாகத் தோன்றியது இன்னொன்றிற்கு அபத்தமாகத் தோன்றியது. எனவே அவற்றையெல்லாம் அவர்கள் ஒதுக்கி விட்டார்கள்.

கடைசியில் ஒரு முதிய அறிஞர் ஒன்று சொல்ல அவர்களுக்கு அதுவே சரியான வாசகமாகப் பட்டது. அதை ஒரு காகிதத்தில் எழுதிக் கொண்டு வந்தனர். "அரசே! நீங்கள் கேட்ட கேள்விக்கான பதில் இதில் உள்ளது. ஆனால் இதை நீங்கள் இப்போது படிக்கக் கூடாது. நீங்கள் உங்கள் வாழ்க்கையின் மிக இக்கட்டான சூழ்நிலையில் தான் எடுத்துப் படிக்க வேண்டும்" என்றனர்.

சக்கரவர்த்தியும் அதை ஏற்றுக் கொண்டு அதை ஒரு வைர மோதிரத்தின் அடியில் வைத்துக் கொண்டு அதை விரலில் மாட்டிக் கொண்டார். சில காலம் கழித்து பக்கத்து நாட்டுடன் போர் மூள அந்தச் சக்கரவர்த்தி போரில் படு தோல்வி அடைந்தார். தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அவர் தப்பியோட வேண்டியதாயிற்று. எதிரிப்படையினர் துரத்தி வர ஒரு காட்டுப் பாதையில் ஓடிய சக்கரவர்த்தி ஓரிடத்தில் அப்பாதை முடிந்து ஒரு பெரிய பள்ளத்தாக்கு தான் அதற்குப் பின் இருந்ததைக் கண்டார். மேலே போக வழியில்லை. பின் செல்லவும் வழியில்லை. தொலைவில் எதிரி வீரர்கள் வரும் காலடி ஓசை வேறு கேட்டது.

அந்த இக்கட்டான சூழ்நிலையில் என்ன செய்வதென்று கலங்கிய சக்கரவர்த்திக்கு அந்த அறிஞர்கள் தந்த வாசகம் பற்றிய நினைவு வர வைர மோதிரத்தினடியில் இருந்த அந்த காகிதத்தைப் பிரித்துப் படித்தார். அதில் எழுதியிருந்தது-"இதுவும் கடந்து போகும்". அதை மீண்டும் படித்தார். மனதில் பொறி தட்டியது.

சில நாட்களுக்கு முன் அவர் பெரிய சக்கரவர்த்தியாக இருந்தார். எல்லா செல்வமும், படைபலமும் அவரிடம் இருந்தன. அவை எல்லாம் இன்று அவரைக் கடந்து போய் விட்டன. இன்று தோல்வியும், தனிமையும் மட்டுமே இருக்கின்றன. இதுவும் ஒரு கட்டத்தில் போகுமல்லவா?.... சிந்திக்க சிந்திக்க சொல்லொணா அமைதி அவரை சூழ்ந்தது. லேசான மனதுடன் எதிரிகளை எதிர்நோக்கி நின்றார். ஆனால் எதிரி வீரர்கள் காட்டின் மற்றொரு பாதையைத் தேர்ந்தெடுத்து அவரைத் தேடுவது, குறைந்து வந்த அவர்கள் காலடியோசை மூலம் தெரிந்தது.

கடைசியில் தப்பித்து தன் நேச நாடுகளின் உதவி கொண்டு மீண்டும் படைகளைத் திரட்டி போரிட்டு எதிரிகளைத் தோற்கடித்து அவர் பெருவெற்றி பெற்றார். நாட்டு மக்களின் வாழ்த்தும், வெற்றி வாகை சூடிய பூரிப்பும் சேர்ந்த போது அவருக்கு மனதில் கர்வம் வந்தது. "அப்படி சுலபமாக நான் விட்டுக் கொடுத்து விடுவேனா? என்னை வெல்வது யாருக்கும் சாத்தியமா?". அந்த எண்ணம் வர வர சூரிய ஒளிபட்டு அவர் வைர மோதிரம் பளீரிட்டது. படிக்காமலேயே அந்த செய்தியை அது நினைவூட்டியது. "இதுவும் கடந்து போகும்". அந்தக் கணத்தில் அவர் கர்வம் நீங்கியது. அன்றிலிருந்து அவர் வாழ்க்கையில் அந்த வாக்கியம் தாரக மந்திரம் ஆகியது. அமைதி குறையாத அரசரென அவர் எல்லோராலும் பாராட்டு பெறும்படி ஆட்சியையும் வாழ்க்கையையும் நடத்தினார்.

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறதல்லவா? வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா?

எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா?

இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் அமைதி சாதாரணமானதல்ல. அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள்.

வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்" என்பதை நினைவில் கொள்ளுங்கள். கர்வம் தலை தூக்காது.

தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்" என்பதை நினைவில் கொள்ளுங்கள். சோர்ந்து விட மாட்டீர்கள்.

நல்ல மனிதர்களும், நண்பர்களும் உங்கள் வாழ்க்கையில் வரும் போது "இதுவும் கடந்து போகும்" என்பதை நினைவில் கொள்ளுங்கள். இருக்கும் போது அவர்களை கௌரவிப்பீர்கள். அவர்கள் விலகும் போது பெரிதாக பாதிக்கப்படாமல் இருப்பீர்கள்.

தீய மனிதர்களும், பகைவர்களும் உங்கள் வாழ்வில் வரும் போது "இதுவும் கடந்து போகும்" என்பதை நினைவில் கொள்ளுங்கள். தானாகப் பொறுமை வரக் காண்பீர்கள். பெரிதாக மனஅமைதியை இழக்க மாட்டீர்கள்.

நெற்றி சுருங்கும் போதெல்லாம் "இதுவும் கடந்து போகும்" என்பதை நினைவில் கொள்ளுங்கள். சுருக்கம் போய் முகத்தில் புன்னகை தவழக் காண்பீர்கள். நினைவில் கொள்ளும் அவசியமே இல்லாமல் வாழ்க்கையின் ஜீவநாதமாக அந்த உண்மை உங்கள் இதய ஆழத்தில் பதிந்து போய் விட்டால் அந்தப் புன்னகை நிரந்தரமாக உங்கள் முகத்தில் தங்கி விடுவதை மற்றவர்கள் காண்பார்கள்.

-என்.கணேசன்

40 comments:

 1. ஸ்ரீதரன்February 27, 2009 at 5:04 PM

  திரு.என்.கணேசன்
  இன்றைய சுழலுக்கு ஏற்ற வரிகள் - அற்புதம் !

  ReplyDelete
 2. வாழ்க்கையின் தத்துவத்தை அருமையாக சொல்லியிருக்கீங்க...நன்றி

  ReplyDelete
 3. தன்னம்பிக்கையூட்டும் பதிவு.

  வாழ்த்துகள்.

  ReplyDelete
 4. It is a very timely article. Great work
  Nithy

  ReplyDelete
 5. நல்ல சிந்தனை. நம்பிக்கை அளிக்கும் பதிவு.

  ReplyDelete
 6. தன்னம்பிக்கையூட்டும் பதிவு.

  வாழ்த்துகள். நன்றி

  ReplyDelete
 7. Really a good one, thanks
  Kindly continue

  ReplyDelete
 8. தன்னம்பிக்கை ஊட்டும் நல்ல ஆலோசனைகள்.

  ReplyDelete
 9. தன்னம்பிக்கை ஊட்டும் நல்ல ஆலோசனைகள்.

  ReplyDelete
 10. பணி தொடரட்டும். வாழ்த்துக்கள்

  ReplyDelete
 11. thanks for a nice article...
  continue

  ReplyDelete
 12. தங்களுடைய பதிவு ஆனந்த விகடன் இணையதளத்தில் பதிவாகி உள்ளது...


  01/03/08 அன்று உங்கள் வலைபதிவு குட் ப்லொக் வரிசையில் இடம் பெற்றிருந்தது...
  http://youthful.vikatan.com/youth/index.asp

  அன்புடன்,

  P B முரளி கிருஷ்ணன்

  ReplyDelete
 13. True words...Thanks for opening my eyes......

  ReplyDelete
 14. தன்னம்பிக்கை ஊட்டும் நல்ல ஆலோசனைகள்

  ReplyDelete
 15. In my opinion, this is the greatest quote in the entire evolution of man kind....

  ReplyDelete
 16. All the above said is ways to reduce BP...
  1) No need to remember things which needs to be forgotten
  2) Be patient - Reminds me on SILENT & LISTEN
  Both words have same letters convey very deep meaning when arranged
  3) A King, A common man both are alike in front of HIM
  The creator never discriminates... what you need is given to you...
  4) Learn, Unlearn and relearn...
  5) Last but not the least Thanks to article & comments posted...

  ReplyDelete
 17. Thank u sir from

  Thannambikkai magazine Coimbatore

  ReplyDelete
 18. Enna oru arumaiyana vasagm Nandri !

  ReplyDelete
 19. excellent ganesan:)

  u helped me a lot today:)

  ReplyDelete
 20. மிகச்சிறந்த பதிவு

  ReplyDelete
 21. இதுவும் கடந்து போகும்' ஆஹா அருமையா சொல்லி இருக்கீங்க வாழ்த்துக்கள்...!!!

  ReplyDelete
 22. மிகவும் அருமையான வரிகள்

  ReplyDelete
 23. இதுவும் கடந்து போகும்' ஆஹா அருமையா சொல்லி இருக்கீங்க வாழ்த்துக்கள்...!!!

  ReplyDelete
 24. " இதுவும் கடந்து போகும்...." நம் ஞாபகத்திலிருந்து கடந்து போக விடாமல்,
  தக்க வைத்துக் கொள்ள வேண்டிய வார்த்தைகள்.......வாழ்க்கையின் ஜீவநாதமாக
  கொள்ள வேண்டிய வார்த்தைகள்......அருமை......நன்றி.....NG....

  ReplyDelete