என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Tuesday, November 11, 2008

இந்த மூன்றும் சேர்ந்தால் நாசமே!இளமை ஒரு கற்பூரப்பருவம். நல்லதும் சரி, கெட்டதும் சரி இந்தப் பருவத்தில் விரைவாக பற்றிக் கொள்ளும். ஒரு வாழ்க்கை எப்படி அமையப் போகிறது என்பதை இந்த இளமை எளிதில் அடையாளம் காட்டிவிடும். அந்த இளமைப் பருவத்தில் மூன்று விஷயங்கள் ஒருசேர அமையப் பெற்றால் ஒரு வாழ்க்கை நாசமே அடைகிறது என்பதை நான் பலர் அனுபவங்களில் இருந்து கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்.

அவை என்ன?

1) நிறைய ஓய்வு நேரம்
2) நிறைய பணம்
3) தீய நட்பு

முதலாகக் குறிப்பிட்ட ஓய்வு நேரம் பல கலைகளின் பிறப்பிடமாக இருந்திருக்கிறது. அந்த நேரம் நூலகங்களிலும், விளையாட்டு மைதானங்களிலும், ஏதாவது நல்ல பயிற்சிகளிலும் ஈடுபடுத்தப்படும் போது மனநலம், உடல்நலம், சாதனைகள் என நல்ல விளைவுகளையே தரும். ஆனால் எத்தனையோ தீமைகளைக் கற்றுக் கொள்ளும் காலமாகக் கூட இந்த ஓய்வு நேரம் ஆவதுண்டு.

இரண்டாவதாகக் குறிப்பிட்ட பணம் சரியாகப் பயன்படுத்தப்படும் போது வாழ்வின் ஆதாரமாக இருக்கக் கூடியது. அப்படிப் பயன்படுத்தத் தவறுகையில் பணம் பெரும்பாலும் தேவையற்ற வழிகளிலோ, தீய வழிகளிலோ செலவாவது இயல்பே. பணம் கஷ்டப்பட்டு கிடைக்காத போது, அதன் அருமை அறியப்படுவதில்லை. அருமை அறியப்படாத போது அலட்சியமாகவே அது கையாளப்படுகிறது.

முதல் இரண்டும் சேர்ந்தாற் போல இருக்கும் இடங்களை, மூன்றாவதாகக் குறிப்பிட்ட தீய நட்பு வேகமாகத் தேடி வந்து விடுகிறது. சர்க்கரை இருக்கும் இடத்தை எறும்புக்கு அறிவிக்க வேண்டிய அவசியமில்லை அல்லவா? எனக்குத் தெரிந்த போதைப் பழக்கமுள்ள பெரும்பாலான இளைஞர்கள் இப்படி மூன்றும் சேர்ந்தாற் போல கிடைக்கப் பெற்றவர்களே.

இந்த மூன்றில் இரண்டு இருந்தாலும் வழி தவறிப் போகும் அபாயம் நிறையவே இருக்கிறது.

ஒரு காலத்தில் கூட்டுக் குடும்ப முறை இருந்தது. சம வயதுள்ள குழந்தைகள் ஒவ்வொரு வீட்டிலும் நிறைய இருந்தார்கள். வழி தவற வாய்ப்புகள் குறைவு. ஒரு குழந்தை அப்படித் தவற ஆரம்பித்தாலும் மற்ற குழந்தைகள் மூலம் உடனடியாக வீட்டுப் பெரியவர்களுக்குத் தகவல் வந்து சேர வாய்ப்புகள் அதிகம். ஆனால் இன்றோ தங்கள் குழந்தைகளின் தவறான பழக்கங்களைக் கடைசியாக அறிவதே பெற்றோர்கள் என்ற நிலை தான் பெரும்பாலான இடங்களில் இருக்கிறது.

எனவே இளமைப் பருவத்தில் உங்கள் சகோதர சகோதரிகளோ, உங்கள் குழந்தைகளோ இருப்பார்களேயானால் நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள். அவர்களது ஓய்வு நேரமும், பணமும் எப்படி செலவாகிறது என்பதைக் கண்காணிக்கத் தவறாதீர்கள். அவர்கள் நண்பர்களைப் பற்றி நன்றாக அறிந்திருங்கள்.

'நான் பட்ட கஷ்டம் என் குழந்தை படக்கூடாது' என்று சொல்லி உங்கள் குழந்தைகளைப் பணக்கஷ்டமே தெரியாமல் வளர்க்க முற்படாதீர்கள். நீங்கள் பட்ட கஷ்டம் உங்கள் குழந்தை பட வேண்டியதில்லை. உண்மை தான். ஆனால் நீங்கள் கஷ்டப்பட்டுத் தான் சம்பாதிக்கிறீர்கள் என்ற விஷயமே தெரியாதபடி உங்கள் குழந்தையை வளர்த்து விடாதீர்கள்.

பயன்படுத்தப் படாத காலம் வீண் ஆகும் என்றால், தவறாகப் பயன்படுத்திய காலம் அழிவுக்குப் போடும் அஸ்திவாரம் என்பதை உங்கள் குழந்தைகளுக்குச் சொல்லி வளர்த்துங்கள். பணத்தின் அருமையையும், காலத்தின் அருமையையும் உணர்ந்தவர்களை எந்த தீய சக்தியும் நெருங்குவதில்லை.

- என்.கணேசன்

4 comments:

 1. பயன்படுத்தப் படாத காலம் வீண் ஆகும் என்றால், தவறாகப் பயன்படுத்திய காலம் அழிவுக்குப் போடும் அஸ்திவாரம்.

  beautiful lines.

  ReplyDelete
 2. whatever said in this article is very true..

  ReplyDelete
 3. \\பயன்படுத்தப் படாத காலம் வீண் ஆகும் என்றால், தவறாகப் பயன்படுத்திய காலம் அழிவுக்குப் போடும் அஸ்திவாரம்.//

  வள்ளுவனைப் போல நச்சுனு சொல்லியிருக்கீங்க கனேசன் மிக அருமை.

  ReplyDelete
 4. Super Article Sir.I gain more from your Spiritual Articles.
  Can you post an article related to Ramana maharishi's "Naan Yaar"
  Concept in Tamil.
  thanks.

  ReplyDelete