
மாவீரன் நெப்போலியன் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தவன். அந்த ஏழ்மை அவனுடைய வாலிப வயது வரை அவன் வாழ்வில் தங்கி பாடாய் படுத்தியது. பாரிஸில் பிரைன் என்னுமிடத்தில் ராணுவப் பள்ளியில் படித்த போது தன் தந்தைக்கு எழுதிய கடிதம் ஒன்றில் இப்படி நெப்போலியன் வருந்தி எழுதினான். "என்னுடைய வறுமை நிலை அன்னிய மாணவர்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆழ்த்துகிறது". ஆனால் நெப்போலியனுடைய கனவுகளில் ஏழ்மை இருக்கவில்லை.
மற்றவர்கள் விளையாடிக் கொண்டிருக்கையில் சிறுவன் நெப்போலியன் ஒதுக்கமான ஓரிடத்தில் கருங்கற்பாறையின் பிளவு ஒன்றில் ஆழ்ந்த கனவுகளுடன் அமர்ந்திருப்பான். கடலின் அலைகள் போர்வீரர்களாக தாக்க வருவது போலவும் தன் முன் போரிட முடியாமல் மோதி மடிவது போலவும் கற்பனை செய்து கொண்டிருப்பான். அந்தக் கருங்கல்பாறை இன்றும் "நெப்போலியனின் அழகுமிகு செயற்கைக் குகை (Napoleon's Grotto)" என்ற பெயரினைத் தாங்கி வருகிறது.
சத்ரபதி சிவாஜி குழந்தைப் பிராயத்தில் தந்தையால் அலட்சியப்படுத்தப்பட்டவன். தாய் ஜீஜாபாயுடன் ஒரு மலைப்பகுதியில் தான் சிறு வயதைக் கழித்தான். தந்தை பீஜாப்பூர் சுல்தானது அரண்மனையில் ஒரு நல்ல பதவி வகித்தாலும் செல்வச்செழிப்பும், அந்தஸ்தும் சிவாஜியை எட்டியதேயில்லை. அவனது இளமைப் பருவம் குறித்து "மராட்டிய மக்கள் வரலாறு" என்ற நூலில் வரலாற்றாசிரியர்களான கின்கெய்ட், பராசனிஸ் இப்படி எழுதினார்கள்.

நெப்போலியன் ஐரோப்பாவிலும், சிவாஜி இந்தியாவிலும் சாம்ராஜ்ஜியங்களை ஏற்படுத்தி சரித்திரம் படைத்தனர். இவர்கள் வாழ்வின் ஆரம்பம் கிட்டத்தட்ட பூஜ்ஜியமே. கனவுகளைத் தவிர்த்து அவர்களிடம் வேறெதுவும் அவர்களிடம் இருக்கவில்லை. அந்த இல்லாத நிலை அவர்கள் கனவுகளைச் சுருக்கி விடவில்லை. உலகம் இருப்பவர்களுக்கே சொந்தம் என்று இவர்கள் விரக்தியடைந்து கனவுகளை விட்டு விடவில்லை. கடைசியில் கனவுகள் நனவாகும் வரை அவர்கள் கனவுகளை அடைகாத்திருந்தார்கள்.
சாம்ராஜ்ஜியங்களே கனவுகளால் கைகூடும் போது வேறெது தான் கைகூடாது? ஒவ்வொரு துறையிலும் இமாலய சாதனை படைத்தவர்கள் எல்லாம் அப்படிக் கனவு கண்டவர்களே. எனவே கனவு காணத் தயங்காதீர்கள். ஒரு விதை ஒரு காட்டையே உருவாக்கும், அந்த விதை வீரியமுள்ளதாக இருந்தால். உங்கள் கனவுகளும் விதைகள் தான். அவை வீரியமுள்ளதாக இருந்தால் அவை உங்கள் எண்ணப்படியே கச்சிதமாக அமையாமல் இருப்பதில்லை.
'இப்படி ஆனால் எவ்வளவு நன்றாக இருக்கும்' என்று கற்பனை செய்து பெருமூச்சு விட்டால் அந்தக் கற்பனைக் கனவு கற்பனையாகவே இருக்கும். ஒரு நாள் பெரிய நடிகனாகும் கனவு, மறுநாள் பிரபலமான பாடகனாகும் கனவு, அதற்கடுத்த நாள் பெரிய கிரிக்கெட் வீரனாகும் கனவு என்று ஒவ்வொரு பிரபலத்தைப் பார்க்கும் போதும் நம் கனவு மாறிக் கொண்டே வருமானால் அந்தக் கனவுகளும் நனவாகாமல் போகும். கனவை நனவாக்க எந்த ஒரு முயற்சியும் எடுக்காமல் இருந்தால் அந்தக் கனவும் மலட்டுக் கனவே.
வீரியமுள்ள கனவு என்பது உங்கள் ஆழ்மனத்தில் இருந்து எழுவது. அதற்கு மகத்தான உந்து சக்தி உண்டு. சதா அதைப் பற்றியே நினைக்க வைக்கும். அது சம்பந்தப்பட்ட அனைத்திலும் பெரும் ஈர்ப்பு ஏற்படுத்தும். எத்தனை பிரச்சினைகளை சந்தித்த போதும் அந்தக் கனவின் அக்னி தணியாது. உயிரின் உயிராக சாதிக்க வேண்டிய உன்னத விஷயமாக அந்தக் கனவு திகழும். அது நனவாக வேண்டிய செயல்களை உங்களைச் செய்ய வைக்கும். வந்து வந்து போகும் எண்ணங்கள் அல்ல அவை. நிரந்தரமாக நின்று வழிநடத்தக் கூடிய லட்சியம் அது.
எனவே கனவு காணுங்கள். உங்கள் இன்றைய நிலைக்கு அது எட்டாத கனவாகக் கூடத் தோன்றலாம். அதைப் பற்றி கவலைப்படாதீர்கள். அந்தக் கனவு வீரியமுள்ளதாக இருந்தால் அது நிச்சயம் ஒருநாள் நிறைவேறும்.
-என்.கணேசன்
ஊக்கமும் உத்வேகமும் அளிப்பதாய் இருந்தது, தங்கள் விருந்து, மிக்க மகிழ்ச்சி!
ReplyDelete//'பிரதமை சிறிதாக இருப்பினும் அது முழு மதியாகக் கண்டிப்பாக வளரும் என எல்லோரும் அறிவார்கள். இது சிவாஜிக்கே பொருந்தும்"//
அருமையாக சொல்லப்பட்டுள்ளது!
//கனவை நனவாக்க எந்த ஒரு முயற்சியும் எடுக்காமல் இருந்தால் அந்தக் கனவும் மலட்டுக் கனவே.//
ReplyDeleteA dream is just an inspiration which is but one per cent for a determined one. One must plunge hard and put 99 per cent perspiration to achieve the desired result.
Good advice well said.
subbu rathinam
thanjai.
http://vazhvuneri.blogspot.com
//வீரியமுள்ள கனவு என்பது உங்கள் ஆழ்மனத்தில் இருந்து எழுவது. அதற்கு மகத்தான உந்து சக்தி உண்டு.//
ReplyDeleteஅற்புதமான வார்த்தைகள் மனதில் பதியும் படி உங்கள் வார்த்தைகள் பதியப்பட்டுள்ளது....