என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Monday, June 2, 2008

உண்மையான அன்பு

இன்றைய உலகில் அன்பு என்ற சொல் கொச்சைப்படுத்தப் படுகின்ற அளவு மற்ற சொற்கள் கொச்சைப்படுத்தப்படுவதில்லை என்று சொல்லலாம். அன்பு என்பதே நமக்கு வேண்டியது போல அடுத்தவர்கள் இருப்பது, நாம் விரும்புவதை அடுத்தவர்கள் செய்வது என்று பலரும் அர்த்தப்படுத்திக் கொள்கிறார்கள். நமக்கு அனுகூலமாக அடுத்தவர் நடப்பதையோ, இருப்பதையோ நிறுத்தும் போது அது அன்பின்மையின் அடையாளமாக காணப்படுகின்றது. அதே போல் நம் கருத்துக்கு எதிரான கருத்து இருக்குமானால் அதையும் பல அன்பாளர்களால் ஏற்க முடிவதில்லை.

அன்பை இப்படி வரையறுப்பதின் விளைவே நம் வாழ்வில் அன்பை அதிகமாகக் காணாதிருக்கக் காரணம் என்றால் அது மிகையாகாது. நீ என்னை நேசிப்பது உண்மையானால் அப்படிச் செய், இப்படி இரு என்று அடுத்தவரை தம் விருப்பப்படி மாற்ற முனைவது உண்மையான அன்பா? பலனை எதிர்பார்த்து எதைச் செய்தாலும் அது ஒருவித வாணிபமே அல்லவா? நான் இதைச் செய்கிறேன் நீ அதைச் செய் என்பதும், நான் இதைத் தருகிறேன் நீ அதைக் கொடு என்பதும் கொடுக்கல் வாங்கல் என்றால், நான் உன்னிடம் அன்பு செலுத்துகிறேன், பதிலுக்கு இப்படி இரு, அப்படி மாறு என்று கூறுவதும் வியாபார ஒப்பந்த வரிகளாக அல்லவா உள்ளது?

என்னை போலவே இரு, என்னைப் போலவே நினை, எனக்காகவே வாழ் என்று சொல்வதெல்லாம் அன்பு அல்ல. வடிகட்டிய சுயநலம். சிலர் சொல்லலாம் "நாங்கள் எதிர்பார்ப்பதே அன்பின் மிகுதியால் தான், அவர்களுக்கு நல்லதற்காகத் தான்" என்று. காரணம் என்னவாக இருந்தாலும் பதிலுக்கு ஒன்றை எதிர்பார்க்கையில் அன்பு தொலைந்து போகிறது என்பதே உண்மை.

எனக்கு நன்றாகத் தெரிந்த பெண்மணி ஒருவர் மகனிடம் சொன்னார். "நீ அம்மாவை நேசிப்பது உண்மையானால் புகை பிடிப்பதை நிறுத்து". மகனிடம் சத்தியமும் வாங்கிக் கொண்டார். சில மாதங்கள் மகன் புகை பிடிக்காமல் சமாளித்தான். ஒரு சந்தர்ப்பத்தில் அது முடியாமல் போய் இப்போது தாயாருக்குத் தெரியாமல் ரகசியமாகப் புகை பிடிக்கிறான். அவனுக்குத் தாய் மேல் பாசம் இல்லாமல் இல்லை. தாயாரும் அவன் நலத்திற்காகத் தான் அப்படி சத்தியம் வாங்கிக் கொண்டார். ஆனாலும் அன்பிற்கும் அந்தப் பழக்கத்திற்கும் முடிச்சுப் போட்டது மகனை மாற்றுவதற்குப் பதிலாக அவனை ஏமாற்றத் தான் தூண்டியது.

இதே போல் சில வீடுகளில் "எங்களை நேசிப்பது உண்மையென்றால் மாநிலத்தில் முதல் ரேங்க் வா" என்றும் "அதைச் செய்து காட்டு. இதை சாதித்துக் காட்டு" என்றும் குழந்தைகளிடம் சொல்லி பெற்றோர்
இலக்குகள் நிர்ணயிப்பதும் அபத்தமே. குழந்தைகளிடம் எதிர்பார்ப்பதும், ஊக்குவிப்பதும் தவறல்ல. ஆனால் அன்புக்கே அடையாளம் இது தான் என்று சில இலக்குகளை தீர்மானிப்பது தான் அபத்தம். கொடுத்துக் கொண்டே இருப்பது, சொன்னதற்கெல்லாம் தலையாட்டிக் கொண்டே இருப்பது, எல்லாமே எனக்கு நீ தான் என்பது, சதா கூடவே இருப்பது என்று இன்னும் எத்தனையோ அளவுகள் அன்பின் பெயரால் புழக்கத்தில் இருக்கின்றன.

ஆனால் உண்மையான அன்பு இது எதுவும் அல்ல. சரி எது தான் உண்மையான அன்பு?

உண்மையான அன்பு மற்றவர்களிடம் இருந்து எதையும் எதிர்பார்ப்பதில்லை.
உண்மையான அன்பு மற்றவர்கள் வித்தியாசப்பட அனுமதிக்கிறது.
உண்மையான அன்பு மூச்சு முட்டுமளவு மற்றவர்களை நெருங்கி சங்கடம் விளைவிப்பதில்லை.
உண்மையான அன்பு மற்றவர் வெற்றியை தனதாகக் கண்டு மகிழ்கிறது.
உண்மையான அன்பு அடிக்கடி அடுத்தவரைப் பரிசோதித்துப் பார்ப்பதில்லை.
உண்மையான அன்பு நடிப்பதும் இல்லை; நடிப்பை மற்றவர்களிடம் எதிர்பார்ப்பதுமில்லை.
உண்மையான அன்பு மற்றவர் தவறை சுட்டிக் காட்டத் தயங்குவதுமில்லை. அதே போல் தங்கள் தவறு சுட்டிக் காட்டப்படும் போது வருந்துவதுமில்லை.
உண்மையான அன்பு அடுத்தவர் சுதந்திரத்தை அனுமதிக்கிறது.
உண்மையான அன்பு மற்றவர் ஏற்ற தாழ்வுகளால் கூடிக் குறைவதில்லை.
உண்மையான அன்பு ஆதிக்கம் செலுத்த ஆசைப்படுவதுமில்லை; அடிமையாக சம்மதிப்பதுமில்லை.
எல்லாவற்றிற்கும் மேலாக உண்மையான அன்பு மற்றவர்கள் மாறவும், விலகவும் கூட அனுமதிக்கிறது.

இப்போது சொல்லுங்கள். நாம் உண்மையாகவே அன்பு காட்டுகிறோமா?

- என்.கணேசன்

15 comments:

 1. நல்ல ஒரு பதிவு !

  ReplyDelete
 2. அன்பின் இயல்பை மிக அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

  இப்பொழுது அன்பென்னும் வார்த்தையை அடுத்தவரை அடிமைப்
  படுத்தவே பிரயோகிக்கிறார்கள்.

  அன்புதான் உண்மை. சத்தியம் என்பதெல்லாம் என்பதை உணர மறுக்கிறார்கள்.

  அவர்கள் தான் அறியாமையின் உச்சியில் இருக்கும் அறிவிலிகள் என்பதைத் தவிர
  வேறு என்ன சொல்வது.

  ReplyDelete
 3. sinthikka vaikkum pathivu. nandri nanpare.

  ReplyDelete
 4. அனன்சியாApril 17, 2009 at 11:41 PM

  நல்ல பதிவு அண்ணே....எப்படி இப்படி உங்களால் மட்டும்...சொல்லுங்க...

  ReplyDelete
 5. அட நீங்க வேற ஐயா..

  நீங்க உண்மைஅன்பு என்றால என்னவென பட்டியலிட்டபடி நடப்பவனை ஈசியாக இளிச்சவாயர்களாக்கி விடுவாங்க ஐயா.

  கடவுளின் அன்பே நாம் அவருக்கு பிரியமானவர்களால் அவர் சொன்ன கட்டளை வேதங்களின் படி நடக்கும்போது தான் ஆசிர்வாதமாக கிடைக்கும் எனும்போது மனித அன்பில் எதிர்பார்ப்பில்லாமல் இருப்பது சாத்தியமாகுமா ஐயா.

  நாம் அன்பு செலுத்துபவரின் சந்தோஷம நிம்மதிதான் முக்கியம்னு நாம் விட்டு கொடுத்து தனிமனித சுதந்திரம் அது இதுன்னு போனோம்னு வைச்சிக்கங்க நம்மை புரிந்துக்கவே மாட்டாங்க நம்மை ஏமாளியாககி மூலையில் உட்கார்ந்து காலமெல்லாம் கண்ணீர் விட்டு அழ வைச்சிருவாங்க.

  இந்த உலகத்தில் மென்மையான விட்டு கொடுக்கும் உண்மை அன்புக்கு அர்த்தமே இல்லை.

  ReplyDelete
 6. SUPER ANNA*********SM

  ReplyDelete
 7. k...anbu oru kalathil anaivararaium kondruvidum...

  ReplyDelete
 8. anbu pathe nalla puriya vechuteenga.. thanks...

  ReplyDelete
 9. தேவனுடைய அன்பை நாம் பெற்றுக்கொண்டால் நம்மை பகைப்பவர்களையும் நாம் அன்புக்கூறமுடியும். நம்மை நேசிப்பவர்களை நாம் நேசிப்பது மனித அன்பு நம்மை நேசிக்காதவர்களையும் நாம் நேசிப்பது தேவ அன்பு கு.செல்வம்.னாகர்கோவில்.

  ReplyDelete
 10. உண்மையான அன்பு மற்றவர்களிடம் இருந்து எதையும் எதிர்பார்ப்பதில்லை.

  ReplyDelete
 11. unmaiyana anbu in bible

  I கொரிந்தியர்
  13 அதிகாரம்

  1. நான் மனுஷர் பாஷைகளையும் தூதர்பாஷைகளையும் பேசினாலும், அன்பு எனக்கிராவிட்டால், சத்தமிடுகிற வெண்கலம்போலவும், ஓசையிடுகிற கைத்தாளம்போலவும் இருப்பேன்.

  2. நான் தீர்க்கதரிசன வரத்தை உடையவனாயிருந்து, சகல இரகசியங்களையும், சகல அறிவையும் அறிந்தாலும், மலைகளைப் பேர்க்கத்தக்கதாக சகல விசுவாசமுள்ளவனாயிருந்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை.

  3. எனக்கு உண்டான யாவற்றையும் நான் அன்னதானம்பண்ணினாலும், என் சரீரத்தைச் சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் எனக்குப் பிரயோஜனம் ஒன்றுமில்லை.

  4. அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது,

  5. அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது,

  6. அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும்.

  7. சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும்.

  8. அன்பு ஒருக்காலும் ஒழியாது.

  ReplyDelete
 12. உண்மையான அன்பு என்று நீங்கள் கூறிய அனைத்தும் சத்யமான வார்த்தைகள்...
  அவை நம்மை ஏமாளியாக தோன்ற செய்தாலும் ......

  ReplyDelete