சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, March 24, 2008

உங்கள் கோப்பை நிறைந்திருக்கிறதா?


ஜென் துறவி நான்-இன் என்பவர் மிகப்பெரிய ஞானி. அவரிடம் ஜென் புத்த மதத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள ஒரு மேலை நாட்டுப் பேராசிரியர் வந்திருந்தார். வந்தவர் ஏற்கெனவே ஜென் புத்த மதத்தைப் பற்றி படித்து தெரிந்து வைத்திருந்தார். அவர் தான் கற்றறிந்தவற்றைப் பற்றியும் தன் கருத்துக்களைப் பற்றியும் நான்-இன்னிடம் மணிக்கணக்கில் விவரித்துக் கொண்டு இருந்தார்.

பொறுமையாக அதைக் கேட்டுக் கொண்டிருந்து விட்டு நான்-இன் அவருக்கு தேநீர் பரிமாறினார். கோப்பையில் தேநீர் ஊற்றியவர் அது நிரம்பிய பின்னும் தேநீர் ஊற்றிய வண்ணம் இருந்தார். ஆரம்பத்தில் நான்-இன் கவனிக்கவில்லையோ என்று சும்மா இருந்த பேராசிரியர் அவர் தொடர்ந்து ஊற்றிக் கொண்டே போவதைப் பார்த்து பொறுமை இழந்து போனார்.

"ஐயா நிறைந்த கோப்பையில் தேநீர் ஊற்றிக் கொண்டே போகிறீர்கள். இடமே இல்லாத போது மேலும் தேநீர் ஊற்றி என்ன பயன்?"

"இந்தக் கோப்பையைப் போல் நீங்களும் உங்கள் கருத்துகளாலும், சித்தாந்தங்களாலும் நிறைந்திருக்கிறீர்கள். ஜென்னை அறிய உங்களிடமும் இடமில்லை" என்று நான்-இன் அமைதியாகக் கூறினார்.

ஒரு வேளை அந்தக் கோப்பையில் பாதி தண்ணீர் இருந்து அதில் மீதியை தேநீரால் நிரப்பினால் கூட நாம் அந்தத் தண்ணீரையும், தேநீரையும் சேர்த்து வீணாக்குவது போல் அல்லவா இருக்கும்.?

நம்மில் பலரும் நமது சொந்தக் கருத்துக்களுடனும் சித்தாந்தங்களுடனும் நிறைந்திருக்கிறோம். இந்த சேகரிப்புகளுடன் தான் பல சமயங்களிலும் நாம் புதியனவற்றை அணுகுகிறோம். அதை நாம் உள்ளது உள்ள படி புரிந்து கொள்ளாமல் போவதற்கு இதை விடப் பெரிய காரணம் என்னவாக இருக்க முடியும்.?

ஜென் போன்ற பெரிய விஷயங்களை அறிய மட்டுமல்ல ஒரு மனிதனைப் புரிந்து கொள்ளக் கூட இந்த அணுகுமுறை நமக்கு உதவாது. நாம் ஆழமான நம்பிக்கைகளுடனும், ஆணித்தரமான கருத்துகளுடனும், தீவிர விருப்பு வெறுப்புகளுடனும் எதை அறிய முற்பட்டாலும் உண்மையை அறியவோ, புரிந்து கொள்ளவோ முடியாது. மாறாக நமக்குள் இருக்கும் இந்த சாயங்கள் பூசப்பட்ட பொய்யையே மெய்யென அறிய நேரிடும்.

அதுவும் அடுத்த மனிதனையும், அடுத்தவர் மதத்தையும், அடுத்த நாட்டையும் நாம் பொதுவாக இப்படித் தான் புரிந்து கொள்கிறோம் என்றால் அது மிகையாகாது. இதன் விளைவாக நாம் அறியாமையை வளர்த்துக் கொள்கிறோம். சண்டை சச்சரவுகளையும், கலவரங்களையும், பகையையும் பெருக்கும் அபாயத்திற்கு இந்த தவறாகப் புரிந்து கொள்வதே மூலகாரணமாக இருக்கிறது.

எனவே எதை அறிய வேண்டுமானாலும், யாரைப் புரிந்து கொள்ள வேண்டுமானாலும் அதற்கு முற்படும் முன் ஒரு கேள்வியை கண்டிப்பாகக் கேட்டுக் கொள்ளுங்கள் - "என் கோப்பை நிறைந்திருக்கிறதா?"

விருப்பு வெறுப்பில்லாமல், முன் கூட்டியே தீர்மானித்துக் கொள்ளாமல், எதையும் யாரையும் திறந்த மனத்துடன் அறிய முற்படும் போது மட்டுமே புரிதல் என்பது நிகழும்.

-என்.கணேசன்

5 comments:

  1. கட்டுரையின் சாரமும்,

    //விருப்பு வெறுப்பில்லாமல், முன் கூட்டியே தீர்மானித்துக் கொள்ளாமல், எதையும் யாரையும் திறந்த மனத்துடன் அறிய முற்படும் போது மட்டுமே புரிதல் என்பது நிகழும்.
    //

    முடிவுரையும் நினைவு கொள்ளத்தக்கவை.

    புரிதல்கள் பெரும்பாலும் ஒப்பீடு அளவில் இருப்பதால் குறைபாடுகள் உடையது தான்.

    ReplyDelete
  2. A good question to ask...Is my cup filled? ....
    I'll remember this ever a nice lesson to learn..
    anbudan aruna

    ReplyDelete
  3. Very good zen story and very good explanation.

    ReplyDelete
  4. உண்மைதான், மனம் விசாலமாக இருந்தால் மட்டுமே விடயங்களில் தெளிவு இருக்கும்.

    நீங்கள் கூறுவது போல் விருப்பு வெறுப்பு இல்லாமல் இருக்கமுடியுமானால் வாழ்வில் துன்பம் மறைந்து விடும்.

    நல்ல பதிவு.....

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. I like your message.
    Thanks Brother.
    Abishek.Akilan..

    ReplyDelete