சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, November 1, 2007

அவசரம் தேவையா? (1)

ன்று நாம் ஓர் ஏவுகணையின் வேகத்தில் வாழ்கிறோம். அதிகமாகி விட்ட தேவைகள், சந்திக்க வேண்டிய போட்டிகள், எளிதில் வெற்றி பெறத் துடிக்கும் வெறி எல்லாம் சேர்த்து நம்மை வேகமாக ஓடத் துரத்துகின்றன.

அசுர வேகத்தில் இயங்கா விட்டால் இந்த சமூகத்தில் நாம் தாக்குப் பிடிக்கவே முடியாது என்று நமக்குத் தோன்றுகிறது. ஆனால் இந்த அவசர வாழ்க்கை முறைக்கு ஈடாக நம் ஆரோக்கியத்தையும்மன அமைதியையும் இழப்பதை நாம் ஏனோ உணர மறந்து விடுகிறோம்.

இரத்தக் கொதிப்பு, நரம்புத் தளர்ச்சி, ஜீரணக் கோளாறு, இதய நோய்கள் என அவசர வாழ்க்கை முறை தரும் நோய்களை இன்றைய மருத்துவ ஆராய்ச்சிகள் பட்டியல் இடுகின்றன. காரணம், ஒவ்வொரு அவசர சூழ்நிலையில் நாம் இயங்கும் போதும் நமது நரம்பு மண்டலமும், முக்கியமான பல உள் உறுப்புகளும் முடுக்கி விடப்படுகின்றன. அவை வழக்கத்தை விட விரைவாக இயங்குகின்றன.

மிக முக்கியமான அவசரக் கட்டத்தில் இப்படி இயங்க வேண்டியவை, தினமும் தொடர்ந்து எல்லாச் சமயங்களிலும் இயங்க வேண்டி இருப்பதால் சீக்கிரமே பழுதடைந்து விடுகின்றன. நோய்களை நாமே சீக்கிரம் வரவழைத்துக் கொள்கின்றோம்.

டாக்டர் மெயர் ·ப்ரைமேன் மற்றும் டாக்டர் ரே ரோசன்மேன் என்ற இரண்டு மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் மாரடைப்பிற்கான காரணங்களைப் பல வருடங்கள் ஆராய்ந்தார்கள். மிகத் துரிதமாக வாழ்க்கையை வாழத் துடிப்பவர்களும், குறுகிய காலத்தில் லாபத்தையும் வெற்றியையும் அடைய விரைபவர்களுமே அதிகமாக மாரடைப்பை விலை கொடுத்து வாங்குகிறார்கள் என முடிவில் கண்டு பிடித்துள்ளனர். அவர்கள், "தவறான உணவு முறைகளும், சிகரெட்டுகளும் குண்டுகள் என்றால், அவசர வாழ்க்கை முறையே துப்பாக்கியாக இருக்கிறது" என்கிறார்கள்.

வாழ்க்கையில் வேகம் அதிகரிக்க அதிகரிக்க, நமக்கு மிக நெருங்கியவர்களின் உணர்வுகளையோ, மானசீகத் தேவைகளையோ புரிந்து கொள்ளவும் நேரமில்லாமல் போய் விடுகிறது. நம்மைச் சுற்றி உள்ள சின்னச் சின்ன அழகுகளையும், நல்ல விஷயங்களையும் ரசிக்கத் தவறுகிறோம். ருசித்துச் சாப்பிடுவதற்குப் பதிலாக விழுங்கி விரைகிறோம். குழந்தைகளைப் பெறுகிறோம். அவர்களின் குறும்புகளின் குறும்புகலையும், மழலையும் ரசிக்க நமக்கு நேரம் இருப்பதில்லை. வீட்டை அழகான பொருள்களால் நிரப்ப முடிந்தாலும் அவற்றை நின்று ரசிக்க முடிவதில்லை. வீட்டில் ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசுவது என்பது பெரும்பாலும் இல்லை.

சில நிமிடங்கள் கிடைத்தாலும் அதை டி.வி. திருடி விடுகிறது. பொருளையும், பணத்தையும் சேர்க்கும் அவசரத்தில் நாம் வாழ்க்கையைக் கோட்டை விட்டு விடுகிறோம்.

நம் முன்னோர்களை விட எல்லா வித வசதிகளிலும் முன்னேறி உள்ள நாம் அவர்களை விடச் சந்தோஷமான நிறைவான வாழ்க்கை வாழ்கிறோமா என யோசித்தால் இல்லை என்பது தெரியும். இந்த அவசர வாழ்க்கைக்கு நாம் தரும் விலை மிக மிக அதிகம்.

நாம் கிட்டத்தட்ட இயந்திரங்களாக மாறி வருகிறோம். ஆனால் இயந்திரம் கூடத் தன் சக்திக்கேற்ற வேகத்தில் மட்டுமே இயங்குகிறது. மற்ற இயந்திரங்களை முந்திக் கொள்ளவோ, ஜெயிக்கவோ இயங்குவதில்லை. நாம் வெற்றி பெறப் பாடுபடுவதற்கும், மற்றவர்களைத் தோற்கடிக்கப் பாடுபடுவதற்கும் இடையே மிகப் பெரிய வித்தியாசம் இருக்கிறது. இரண்டாவதில் நம் சக்திகள் அனைத்தும் விரயமாகி மன அமைதியும் கெடுகிறது.

இந்த அவசரம் நம் இரத்தத்தில் ஊறிப் போய் சாதாரண தவிர்க்க முடியாத இடங்களில் கூட
நம்மால் அமைதியாக இருக்க முடிவதில்லை. சிக்னல்களில் ஓரிரு நிமிடங்கள் காக்க வேண்டி இருந்தால் நம்முள் பலரும் தவித்துப் போகிறோம். திருப்பதியில் தெய்வ தரிசனமானாலும் சரி, ரயில்நிலையத்தில் முன் பதிவுக்கானாலும் சரி, நீண்ட வரிசைகளில் நிற்க நேரிட்டால் முன்னால் நிற்பவரின் கால்களைப் பல முறை மிதித்துப் பலரும் முன்னேறத் துடிக்கிறோம். வேலையே இல்லா விட்டாலும் சிலரால் சும்மா இருக்க முடிவதில்லை. கால்களையாவது ஆட்டிக் கொண்டிருப்பார்கள்.

அதிவேகம் சுறுசுறுப்பல்ல. உண்மையில் அது சக்தி விரயம். அவசர புத்தி பின் புத்தி. அவசரத்தில் மனிதன் அதிகமாகப் பதட்டமடைகிறான், குழப்பமடைகிறான். அதனால் தவறுகள் பல செய்து அவற்றைச் சரி செய்ய ஒரே வேலையைப் பல முறை செய்ய நேரிடுகிறது.

(இது குறித்து மேலும் சொல்வேன். - என்.கணேசன்)

8 comments:

  1. இந்த காலக்கட்டத்து மக்களுக்கு மிகவும் தேவைப்படும் ஒரு கருத்து. :-)

    ReplyDelete
  2. //
    இந்த அவசரம் நம் இரத்தத்தில் ஊறிப் போய் சாதாரண தவிர்க்க முடியாத இடங்களில் கூட
    நம்மால் அமைதியாக இருக்க முடிவதில்லை
    //
    வாஸ்த்தவம்தான்

    //
    அதிவேகம் சுறுசுறுப்பல்ல. உண்மையில் அது சக்தி விரயம். அவசர புத்தி பின் புத்தி. அவசரத்தில் மனிதன் அதிகமாகப் பதட்டமடைகிறான், குழப்பமடைகிறான். அதனால் தவறுகள் பல செய்து அவற்றைச் சரி செய்ய ஒரே வேலையைப் பல முறை செய்ய நேரிடுகிறது.
    //

    ரொம்ப கரெக்டா
    சொல்லியிருக்கீங்க.

    ReplyDelete
  3. ரொம்ப கரெக்டா
    சொல்லியிருக்கீங்க.
    ஆனால் எந்த ஒரு விசயத்தில் காத்து இருந்தாலும் நம்ம நேரம் வரும்பொழுது நம்மள கடுப்பு எயதன்னே இடையில் நுளைவாங்க .அப்ப எப்படி பொறுமையாக இருக்கமுடயும் .

    ReplyDelete
  4. your article and peoples comments are really super

    ReplyDelete
  5. ///நாம் வெற்றி பெறப் பாடுபடுவதற்கும், மற்றவர்களைத் தோற்கடிக்கப் பாடுபடுவதற்கும் இடையே மிகப் பெரிய வித்தியாசம் இருக்கிறது. இரண்டாவதில் நம் சக்திகள் அனைத்தும் விரயமாகி மன அமைதியும் கெடுகிறது.////
    ரத்தின வார்த்தைகள்

    ReplyDelete
  6. அருமை பயனுள்ள பகிர்வு

    ReplyDelete
  7. Nice and Well said. Waiting for more. Vazhga Valamudan :)

    ReplyDelete