என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Monday, October 16, 2023

யோகி 18

 

ருணாச்சலம் தெரிவித்த விவரங்களை எல்லாம் ராகவன் ஷ்ரவனிடம் சொன்னார். ஷ்ரவன் அவர் சொன்னதை எல்லாம் இடைமறிக்காமல் கேட்டுக் கொண்டான். முடிவில் ராகவன் சொன்னார். “இதுல ரொம்ப முக்கியம் என்னன்னா நாம இதைத் துப்பு துலக்கறோம்னோ, முதலமைச்சர் இதோட பின்னணியில இருக்கிறார்னோ அவங்களுக்குக் கொஞ்சமும் சந்தேகம் வரக்கூடாது.”

 

ஷ்ரவன் தலையசைத்தான். ராகவன் தயக்கத்துடன் தொடர்ந்து சொன்னார். “இதுல நாங்க உனக்கு மறைவாய் இருந்துட்டு ரகசியமாய் உதவலாமே ஒழிய வெளிப்படையாய் எந்த உதவியும் செய்ய முடியாது.”

 

ஏதாவது உதவி செய்தால் போலீஸும், முதல்வரும் பின்னணியில் இருப்பது  வெளிப்பட்டு விடும் என்ற நிலை வரும் என்றால் அவர்கள் கண்டிப்பாக உதவி செய்ய மாட்டார்கள்என்று ஷ்ரவன் அதை மொழிபெயர்த்துக் கொண்டான். அதில் அவன் தவறு காணவில்லை. ராகவன் சொல்வதை வைத்துப் பார்க்கையில் அருணாச்சலம் தன் மிக நெருங்கிய, மிக நல்ல நண்பனுக்கு உதவியே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் தான் இதில் இறங்கி இருக்கிறார் என்பது புரிந்தது. இல்லா விட்டால் அவரும் போலீஸும் இந்த விசாரணையை ஆரம்பித்தே இருக்க மாட்டார்கள்.

 

ஷ்ரவன் ராகவனிடம் கேட்டான். “பிரம்மானந்தா இதுல எந்த அளவு ஈடுபட்டிருப்பார்னு நீங்க நினைக்கிறீங்க மாமா?”

 

ராகவன் சொன்னார். “அந்தப் பொண்ணு மரணத்துல அவருக்கு எந்த அளவு பங்கு இருக்கலாம்னு என்னாலும் யூகிக்க முடியல ஷ்ரவன். ஆனா அவருக்குத் தெரியாம எதுவும் நடந்திருக்க வாய்ப்பில்லை... ஏன்னா இந்தச் சம்பவங்கள் நடந்தப்ப அவர் யோகாலயத்துலயே இருந்திருக்கார். எப்பவுமே அவர் சுற்றுப் பயணங்கள்ல தான் அதிகம் இருக்கிறவர்னாலும் கோவிட் தாக்கம் எல்லா இடங்கள்லயும் அதிகமாய் இருந்து கட்டுப்பாடுகளும் நிறைய இருந்ததால அவர் எங்கேயும் போகலை...”

 

ஷ்ரவன் சொன்னான். “அந்த மொட்டைக் கடிதம் கிடைச்சவுடனே டாக்டர் கிருஷ்ணா முதல்ல யோகாலயத்துக்குப் போய் மகளைப் பார்க்க அங்கே அனுமதிக்கலைன்னவுடனே போலீஸ்ல புகார் செய்தாரில்லையா. அதுக்குப் பிறகு போலீஸ் போய் விசாரிச்சு சைத்ராவை நேரில் பார்த்தோம், அவ நல்லா தான் இருக்கா, அவள் விருப்பமில்லாமல் தான் அப்பாவைப் பார்க்கலைன்னு தெரிவிச்சதில்லையா. போய் விசாரிச்ச போலீஸ் அதிகாரி எப்படிப்பட்ட ஆள்? அவர் ரெகார்டு எப்படி இருக்கு?”

 

எங்கே போனாலும் சம்பாதிக்கக் கூடியவர்என்று ராகவன் சுருக்கமாகச் சொன்னார்.

 

ஷ்ரவன் பெருமூச்சு விட்டான். ஒரு சிலரின் பணம் சேர்க்கும் பேராசையால் எத்தனை பேர் எப்படியெல்லாம் கஷ்டப்படுகிறார்கள்! அந்தப் போலீஸ் அதிகாரி நேர்மையான அதிகாரியாக இருந்தால் அவரைச் சென்று விசாரிக்க வேண்டும், அவர் சென்று விசாரித்த போது யோகாலயத்தில் நடந்தது என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஷ்ரவன் நினைத்திருந்தான். ஆனால் இப்போது அந்த அதிகாரியை விசாரிப்பது யோகாலயத்திற்கு தங்கள் விசாரணையை அறிவிப்பது போல் ஆகி விடும் என்று புரிந்ததால் அந்த எண்ணைத்தை அவன் கைவிட்டான்.

 

ராகவன் சொன்னார். “உன்னோட செயல்திட்டம் என்ன ஷ்ரவன்?”

 

ஷ்ரவன் சிறிது யோசித்து விட்டுச் சொன்னான். “நானும் சைத்ரா மாதிரியே யோகாலயத்துக்குள்ளே நுழையறது தான் ஒரே வழியாய் எனக்குத் தோணுது மாமா.”

 

ராகவனும் அதைத் தான் அருணாச்சலத்திடம் சொல்லியிருந்தார் என்பதால் திருப்தியுடன் தலையசைத்தார்.

 

ஷ்ரவன் சொன்னான். “யோகாலயத்துக்குள்ளே நமக்கு வேண்டப்பட்ட ஒரு ஆளும் இருக்குன்னு நினைக்கறேன் மாமா. சைத்ரா உயிருக்கு ஆபத்திருக்கிறதாய் சொல்லி மொட்டைக் கடிதம் எழுதின ஆள் யோகாலயத்துக்குள்ளே இருந்து தான் எழுதியிருக்கணும். அந்த ஆள் யாருன்னு கண்டுபிடிச்சா நமக்கு எல்லா உண்மைகளும் தெரிய வாய்ப்பிருக்கு...”

 

ராகவன் சொன்னார். “அந்த ஆளையும் அவங்க கண்டுபிடிச்சு இதுவரைக்கும் அப்புறப்படுத்தாம இருந்தால்

 

நீங்க சொல்றபடி ஆயிருக்கவும் வாய்ப்பிருக்கு. பார்ப்போம். இது வரைக்கும் வேறெந்த விபத்தோ, மரணமோ அங்கே நடந்த மாதிரி நம்ம கவனத்துக்கு வரலை அல்லவா?’

 

இல்லை....” என்று சொல்லி மேலும் ஏதோ சொல்ல முற்பட்டவர் எதுவும் சொல்லாமல் தவிர்த்தார்.

 

அதைக் கவனித்த ஷ்ரவன் புன்னகையோடு சொன்னான். “அப்படி ஒரு விபத்தோ, மரணமோ அங்கே நடந்து நம்ம கவனத்துக்கு வராமலேயே போயிருக்கலாம். சில நாள் கழிச்சு அது தெரிய வரவும் வாய்ப்பிருக்கு. அது தானே நீங்கள் சொல்ல வந்தது...”

 

ராகவன் சிரித்து விட்டார். அவருடைய மருமகனின் புத்திசாலித்தனம் அவருக்குப் பிடித்திருந்தது. “ஆமா.... ஆனா எல்லாத்தையும் நெகடிவ்வாவே ஏன் சொல்லிட்டு இருக்கணும்னு தான் விட்டுட்டேன்

 

அதை நினைக்கறதும், அதுக்கு தயாராய் இருக்கறதும் தப்பில்லை மாமா. நீங்க அனுபவசாலிங்கறதால எல்லாத்தையும் சரியாய் தான் யோசிச்சு வெச்சிருக்கீங்க. ஆனா நான் அந்த மொட்டைக்கடிதம் எழுதின ஆள் இன்னேரம் செத்திருக்கலாம்னு நினைக்கலை. சைத்ரா சாகறதுக்கு சில நாள் முன்பே அவளுக்கு இருக்கற ஆபத்தைச் தெரிஞ்சுகிட்டு அடுத்தவங்கள எச்சரிக்கற அளவு விவரமான ஆள் தன்னைக் காப்பாத்திக்கற அளவு முன்கூட்டியே எச்சரிக்கையாய் இருக்காமல் போக வழியில்லைன்னு என் உள்ளுணர்வு சொல்லுது. பார்ப்போம்.”

 

ராகவன் அவன் உள்ளுணர்வு சரியாக இருக்கலாம் என்று எண்ணினார். அவன் சொன்னான். “நாம இன்னொரு பக்கத்துல இருந்தும் விசாரணையை ஆரம்பிக்கிறது நல்லதுன்னு நினைக்கிறேன் மாமா. அந்த ஆஸ்பத்திரியில் தான் சைத்ராவும், அந்த டாக்டரும் இறந்திருக்காங்க. அங்கேயும் விசாரிக்கணும். ஆனா அங்கே யார் விசாரிக்கப் போனாலும் அது யோகாலயத்துக்குத் தெரியாமல் போக வாய்ப்பில்லைன்னு தோணுது. அதனால நானும் போக முடியாது. விசாரிக்கப் போகிற ஆளும் நேரடியாய் இந்த இரண்டு மரணங்களுக்காக மட்டும் விசாரிக்கப் போகிறதா இருக்கக் கூடாது. விசாரணை பொதுவானதாய் இருக்கணும். கோவிட் சிகிச்சைக்கு ஆஸ்பத்திரிகளுக்கு மானியமாய் ஒரு தொகை அரசாங்கம் தர்றதால, ஆஸ்பத்திரி ரெகார்ட்ஸ் எல்லாம் சரியாய் இருக்கான்னு பொதுவாய் விசாரிக்கப் போகிற தணிக்கை அதிகாரி மாதிரி ஒரு ஆள் போனா அது நம்பற மாதிரி இருக்கும்...”

 

ராகவன் சொன்னார். “நல்ல ஆலோசனை ஷ்ரவன். நம்பிக்கைக்குரிய நல்ல திறமையான ஆள் ஒருத்தரை அதுக்கு நான் உடனே ஏற்பாடு செய்யறேன். எங்க பக்கத்துல இருந்து நாங்க வேறென்ன பண்ணனும்?”

 

ஷ்ரவன் சிறிது நேரம் தீவிரமாக யோசித்து விட்டுச் சொன்னான். ”யோகாலயம் கிட்டத்தட்ட 50 ஏக்கர் இருக்கற பெரிய இடம். சுமார் ஐநூறு பேருக்கும் மேலே அங்கே வாழ்றாங்கன்னு கேள்விப்பட்டேன். அதனால அவங்களுக்கு கூட்டிப் பெருக்க, சுத்தம் செய்ய, தோட்ட வேலை செய்ய, சமைக்க, சாமான்கள் கொண்டு வந்து தரன்னு பல பேர் வேலைக்குத் தேவைப்படும். அதுல நிறைய பேர் அடிக்கடி வெளியே போயிட்டு வரக்கூடியவங்களா இருப்பாங்க. அந்த மாதிரியான வேலையில் நம்ம ஆள் ஒருத்தன் இருக்கறது நல்லது. ஏன்னா நான் ஏதாவது முக்கியமான தகவல் அனுப்பணும்னா அவன் மூலமா உங்களுக்கு அனுப்பலாம். அதே மாதிரி நீங்க ஏதாவது தகவல் எனக்கு அனுப்பணும்னாலும் அவன் மூலமாய் எனக்கு அனுப்பலாம்.”

 

ராகவன் சம்மதித்தார். “அதுக்கும் ஒரு ஆளை உடனே ஏற்பாடு செய்யறேன்.”

 

ஷ்ரவன் சொன்னான். “அந்த ஆளை உடனடியாய் அங்கே வேலையில் சேர்த்தறது நல்லது மாமா. ஏன்னா நானும் அந்த ஆளும் ஒரே சமயத்துல அங்கே சேர்றது நாங்க ரெண்டு பேரும் எதிர்காலத்துல பேசிக்கறத பார்க்கிற சமயங்கள்ல அவங்களுக்கு சந்தேகத்தை உண்டுபண்ணலாம். நான் சைத்ரா பத்தி சேதுமாதவன் சார் கிட்டயும், அவளோட சிநேகிதிகள், வேலை செஞ்ச இடத்து ஆள்கள் கிட்டயும் விசாரிச்சுத் தெரிஞ்சுக்க வேண்டியிருக்கு. அதுக்கும், சில அடிப்படை வேலைகள் செய்யவும் எனக்குச் சில நாட்கள் தேவைப்படுது. நான் அங்கே போய்ச் சேர பத்து நாளுக்கு மேல ஆகும். அதனால முதல்ல அந்த ஆள் போய் சேர்ந்துக்கட்டும்.”

 

ராகவன் அதற்கும் சம்மதித்தார். அடுத்ததாக, விசாரணை சம்பந்தமான விஷயங்களுக்குத் தேவையான முக்கிய வேலைகளைச் செய்ய, தனக்கு முழு நம்பிக்கைக்கு உகந்த இரண்டு போலீஸ் இளைஞர்கள் வேண்டும் என்று ஷ்ரவன் சொன்னான். அதற்கும் அவர் சம்மதித்தார்.

 

சிறிது நேரம் அவர்கள் குடும்ப விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தார்கள். கடைசியில் ஷ்ரவன் அவரிடம் விடைபெற்ற போது அவர் சொன்னார். “ஷ்ரவன் நீ ரொம்ப ஜாக்கிரதையாக இருக்கணும். இதுல நிறைய ஆபத்து இருக்குங்கறதையும் நான் சொல்லி ஆகணும்.”

 

ஷ்ரவன் புன்னகையுடன் சொன்னான். “ஆபத்து சாதாரணமாய் தெருவுல நடந்து போகறதுலயும் கூட இருக்கு மாமா. எவனாவது குடிச்சிட்டோ, கட்டுப்பாடு இல்லாமயோ அவன் ஓட்டிகிட்டு வர்ற வண்டியை நம்ம மேலே ஏத்திடலாம். அந்த வாய்ப்பு இருக்குங்கறதால நாம் தெருவில் நடக்காமயா இருந்துடறோம். ஆபத்து நம்ம உத்தியோகத்தோட சேர்ந்தே இருக்கு. எச்சரிக்கையும் நம்ம ரத்தத்துல கலந்தே தான் இருக்குங்கறதால பயப்பட எதுவும் இல்லை மாமா

 

ராகவன் பெருமையுடன் தன் மருமகன் தோளைத் தட்டிக் கொடுத்தார். என்னவொரு தெளிவு!

 

(தொடரும்)

என்.கணேசன்

Thursday, October 12, 2023

சாணக்கியன் 78

 

ன்று இருட்டிய பிறகு பிலிப் யவன சேனாதிபதியை வரவழைத்துக் கேட்டான். “வீரசேனன் வந்து விட்டானா?”

 

இல்லை சத்ரப். இது வரை அவன் வரவில்லை. அவனைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. அவனை எதிரிகள் சிறைப்படுத்தியிருக்க வாய்ப்பிருக்கிறது.”

 

அவனுடன் காட்டிற்குச் சிறிது தூரம் வரையாவது சென்ற வீரர்கள் என்ன சொல்கிறார்கள்?”

 

வீரசேனன் அவர்களுக்குச் சரியான பதிலடி தர மிக வேகமாக அவர்கள் பின்னால் சென்றதாகச் சொல்கிறார்கள். ஆனால் நம் படைத்தலைவன் வீரசேனன் கலவரக்காரர்களுக்கு ஆதரவாக நடந்து கொண்டவன் என்பதால் அவர்களுடன் சேர்ந்து கொள்ளும் பொருட்டே அப்படிப் போயிருக்க வேண்டும் என்று நம்புகிறான். அதை நம் யவன வீரர்களிடம் உறுதியாகச் சொல்லிக் கொண்டு இருக்கிறான்.”

 

நீ என்ன நினைக்கிறாய்?”

 

அவன் சதிகாரனாக இருப்பான் என்று எனக்குத் தோன்றவில்லை சத்ரப். இது வரை அப்படியான அறிகுறிகள் எதுவும் அவனிடம் தெரியவில்லை. ஆனால் மாளவ மக்களும் புரட்சியில் ஈடுபடுவதற்கான அறிகுறிகள் ஆரம்பத்தில் நமக்குத் தெரியவில்லை. ஆனால் அது இப்போது நடந்திருப்பதால் யாரைப் பற்றியும் நிச்சயமாகச் சொல்ல முடியாமலிருக்கிறது

 

பிலிப்புக்கு அவன் சொல்வதும் சரியென்று தோன்றியது. அவன் சிறிது யோசித்து விட்டுக் கேட்டான். “அவன் சகோதரன் என்ன சொல்கிறான்?”

 

அவன் அவனுடைய அண்ணனை மீட்டு வருவதற்கு சிறு படையுடன் காட்டுக்குப் போக அனுமதி கேட்டான். நான் அனுமதி தரவில்லை. தனியாகவாவது போகிறேன் என்று கேட்டான். “கொஞ்சம் பொறு. எதையும் யோசித்துச் செய்வோம்என்று சொல்லியிருக்கிறேன். சூரசேனன் மட்டுமல்லாமல் வீரசேனனின் படைவீரர்களும் தங்கள் தலைவன் குறித்த கவலையில் ஆழ்ந்திருக்கிறார்கள்”

 

வீரசேனனுக்கு என்ன ஆகியிருக்கும் என்று நீ நினைக்கிறாய்?”

 

அவன் சிறைப்பட்டிருக்கலாம். அல்லது பலத்த காயப்பட்டிருக்கலாம். அல்லது நம் படைத்தலைவன் சந்தேகப்படுவது போல் அவர்களுடன் சேர்ந்திருக்கலாம்

 

பிலிப் சேனாதிபதியைக் கூர்ந்து பார்த்தபடி கேட்டான். “ஏன் அவன் இறந்திருக்கலாம் என்று நீ நினைக்கவில்லை?”

 

இது வரை எதிரிகள் நம் யவன வீரர்களைக் கொன்றிருக்கிறார்களேயொழிய மற்றவர்களைத் திட்டமிட்டுக் கொல்லும் வேலையில் ஈடுபட்டதில்லை. மாறாக அவர்களைத் தங்கள் பக்கம் இழுத்துக் கொள்ளும் வேலையைத் தான் செய்திருக்கிறார்கள். அதனால் வீரசேனனை அவர்கள் கொன்றிருக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு.”

 

சேனாதிபதி சொன்னதை பிலிப் யோசித்துப் பார்த்தான். எதிரிகள் செயல்படும் விதம் சேனாதிபதி சொன்னது போல் தான் இருக்கிறது. மற்ற பகுதிகளில் என்ன நடந்திருக்குமோ என்ற கவலை அவன் மனதில் மறுபடி தலையெடுத்தது. அவன் இந்த நிகழ்வுகளைச் சரியாகக் கையாளவில்லை என்று அலெக்ஸாண்டர் எண்ணி விடுவானோ என்ற அச்சமும் அதனுடன் சேர்ந்து கொண்டது.

 

சேனாதிபதி மெல்லச் சொன்னான். “சத்ரப் நம் வீரர்கள் மத்தியில் பயம் எழ ஆரம்பித்திருக்கிறது. அவர்களைத் தனிமைப்படுத்தித் தாக்குகிறார்கள் என்று தோன்ற ஆரம்பித்திருக்கிறது. இரண்டு வீரர்கள் சற்று முன் என்னிடம் நேரடியாகவே வந்து ”மற்ற யவன வீர்ர்கள் அலெக்ஸாண்டருடன் போகும் போதே நாங்கள் போகாமல் இருந்தது சதிகாரர்களால் கொல்லப்படுவதற்கல்ல, சாவது தான் எங்கள் விதி என்றால் நாங்கள் தாயகம் போய் சாக விரும்புகிறோம்” என்று சொன்னார்கள். நான் அவர்களை இப்போதைக்குத் தைரியப்படுத்தி இருக்கிறேன். ஆனால் இப்படி எத்தனை நாட்கள் சமாளிக்க முடியும் என்று தெரியவில்லை சத்ரப்.  பிரச்சினை முற்றுவதற்கு முன் நாம் ஏதாவது செய்தாக வேண்டும். இல்லா விட்டால் ...”

 

சேனாதிபதி நிறுத்திக் கொண்டான். பிலிப் அவன் கருத்தைத் தொடர்ந்து சொல்ல வற்புறுத்தவில்லை. இருக்கிற பிரச்சினைகளே போதும். இவன் புதியதாக ஏதாவது சொல்லிப் பயத்தைக் கூட்டி விடுவதை பிலிப் விரும்பவில்லை. யவனப்படைத்தலைவன் அவனிடம் சொன்னதை யவன வீரர்கள் சேனாதிபதியிடமும் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.  அதிரடியாக எதாவது செய்து அவர்களுக்கு நம்பிக்கையூட்டா விட்டால் நிலைமை மிக மோசமாகிவிடும்.    

அது மட்டுமல்ல. யவன வீரர்களுக்கு நம்பிக்கையூட்டுவதுடன் சதி செய்ய நினைப்பவர்களுக்குக் கடுமையான பயத்தையும் ஏற்படுத்தி விட வேண்டும். அதை இந்த சமயத்திலேயே செய்வது தான் நிலைமையை மேலும் மோசமாக்காமல் தவிர்க்கும் என்று பிலிப் புரிந்து கொண்டான். அவன் எடுக்கப் போகும் முடிவு அலெக்ஸாண்டரின் உறுதியும், ஆளுமையும் பிலிப்புக்கும் உள்ளது என்று எல்லோருக்கும் தெரியப்படுத்துவதாக இருக்க வேண்டும்....

 

பிலிப் அமைதியாகவும், உறுதியாகவும் சொன்னான். ”வீரசேனன் விஷயத்திலேயே எல்லாமே நம் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது என்பதை நாம் நம்மவர்களுக்கும், மற்றவர்களுக்கும் புரிய வைப்போம். நீ சூரசேனன் மீது தனிக்கவனம் வைக்க வேண்டும். அவன் சகோதரனைக் கண்டுபிடித்து கூட்டிவரப் போகிறேன் என்றோ, சகோதரனைக் காப்பாற்றி வரப் போகிறேன் என்றோ சொல்லித் தப்பித்து விடப் போகிறான். அப்படி அவனையும் போக விட்டால் அது நம் பலவீனத்தைப் பறைசாற்றுவது போலாகி விடும்.  எச்சரிக்கையோடு இரு. வீரசேனனைத் தேடிக் கண்டுபிடிக்க நாளையே சில வீரர்களை அனுப்பு. அந்த வீரர்கள் வீரசேனன் படைப்பிரிவைச் சேர்ந்தவர்களாகவோ, சூரசேனன் படைப்பிரிவைச் சேர்ந்தவர்களாகவோ இல்லாமல் பார்த்துக் கொள். போகிறவர்கள் நம் முழு நம்பிக்கைக்கு உரியவர்களாக இருக்கட்டும். ஒருவேளை அவர்கள் காட்டுக்குள் வீரசேனனின் பிணத்தைக் கண்டுபிடித்தால் பிரச்சினை இல்லை. ஒருவேளை அவனைக் கண்டுபிடிக்க முடியாமல் திரும்பி வந்தார்கள் என்றால் அவன் நம் எதிரிகளுடன் சேர்ந்து கொண்டிருக்குறான் என்றே எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படியாக இருக்கும் பட்சத்தில் நாம் சூரசேனன் மூலமாக வீரசேனனுக்கும், நம் எதிரிகளுடன் இணைய நினைப்பவர்களுக்கும், சதிகாரர்களுக்கும் அனுப்ப வேண்டிய செய்தியொன்று இருக்கிறது...”

 

சொல்லி விட்டு பிலிப் சேனாதிபதியை அர்த்தமுள்ள பார்வை பார்த்தான். சேனாதிபதி அந்தப் பார்வையிலேயே அவன் உத்தேசத்தைப் புரிந்து கொண்டு திருப்தியுடன் தலையசைத்தான்.

 

பிலிப் எச்சரிக்கையுடன் தாழ்ந்த குரலில் சொன்னான். “நாம் எது செய்தாலும் அது வெளிப்படையாகத் தெரியாதபடி சாமர்த்தியமாகவும், தந்திரமாகவும் தான் செய்ய வேண்டும். முக்கியமாக வீரசேனன் படையினருக்கும் சூரசேனன் படையினருக்கும் நாம் தான் செய்தோம் என்பது வெளிப்படையாகத் தெரியக் கூடாது. அதற்கான தடயம் எதையும் நாம் விட்டு வைக்கக்கூடாது. தவறினால் அவர்களும் நமக்கு எதிராகத் திரும்ப வாய்ப்பிருக்கிறது. அது நமக்கு ஆபத்து.”

 

சேனாதிபதி “புரிகிறது சத்ரப்” என்று சொல்லி விட்டு விடைபெற்றான்.

 

சூரசேனன் உறக்கம் வராமல் தவித்தான். அவன் சகோதரனுக்கு என்ன ஆகியிருக்கும் என்று அவனுக்குத் தெரியவில்லை. பல விதமான யூகங்கள் மனதில் வந்து அவனைப் பயமுறுத்தின. அவனுடைய படைவீரன் ஒருவன் சற்று முன் தான் அவனிடம் வந்து வீரசேனன் எதிரிகளுடன் சேர்ந்து விட்டிருக்க வாய்ப்பிருக்கிறது என்று யவனப்படைத்தலைவன் தன் வீரர்களிடம் சொல்வது காதில் விழுந்தது என்று சொல்லி விட்டுப் போனான். அதைக் கேட்டதிலிருந்தே அவனுக்கு ஆத்திரத்தைத் தாங்க முடியவில்லை. அவன் அண்ணனைக் காப்பாற்றி அழைத்து வருகிறேன் என்று சொன்ன போது யவன சேனாதிபதி அதற்கு ஏன் அனுமதிக்கவில்லை என்பது  இப்போது அவனுக்குப் புரிகிறது.

 

அவனுடைய அண்ணன் சதிகாரன் அல்ல என்பதை யவன சேனாதிபதியிடம் கத்தி அறிவிக்க வேண்டும் என்று சூரசேனன் மனம் துடித்தது.  நேர்மையான வீரர்கள் மீது இப்படி அபாண்டமாகப் பழிசுமத்த அவர்களால் எப்படி முடிகிறது என்பது அவனுக்குப் புரியவில்லை. யவனர்கள் நம்பத் தகுந்தவர்கள் அல்ல என்று புரட்சிக்காரர்கள் சொல்வதில் தவறேதும் இல்லை என்று இப்போது அவனுக்குத் தோன்ற ஆரம்பித்தது. எதிரிகளை விரட்டிக் கொண்டு காட்டுக்குள் வீரமாகச் சென்ற அவன் சகோதரனுக்கு என்ன ஆயிற்று என்ற கவலை அவனுக்கும், அவன் அண்ணனின் படைப்பிரிவினருக்கும் இருப்பது போல யவன சேனாதிபதிக்கு இல்லாமல் போனது புரட்சியாளர்களின் கருத்தை நிரூபிப்பது போலிருந்தது.

 

திரும்பத் திரும்ப “அண்ணனைக் காப்பாற்ற எதாவது செய்தேயாக வேண்டும்” என்று மனதில் எண்ணம் வந்து கொண்டிருந்தது. யவனர்கள் வீரசேனனை சதிகாரன் என்று நம்பும் பட்சத்தில் சூரசேனன் எடுக்கும் முயற்சிகளை அனுமதிக்கவோ, ஆதரிக்கவோ மாட்டார்கள் என்பது உறுதியாகத் தெரிகிறது. அவன் ‘என்ன தான் செய்வது’ என்று தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்த வேளையில் தான் தூரத்தில் குதிரை ஒன்றின் குளம்படிச் சத்தம் கேட்டது. அவன் அண்ணனின் குதிரை. அதன் குளம்படிச் சத்தம் பிரத்தியேகமானது. அவன் உற்சாகத்துடன் எழுந்தான்.

 

(தொடரும்)

என்.கணேசன்  

Monday, October 9, 2023

யோகி 17

 


ராகவன் யோசித்து விட்டு சொன்னார். “நீங்க உங்க நண்பர் கிட்ட சொன்ன மாதிரி சட்டபூர்வமான எந்த நடவடிக்கை எடுக்கவும் நம்ம கிட்ட ஆதாரங்கள் எதுவுமில்லை. உங்க நண்பரோட பேத்தியும் அந்த டாக்டரும் அடுத்தடுத்து இறந்ததை சந்தேகப்பட்டு விசாரணை செஞ்சாலும் போஸ்ட்மார்ட்டம் பண்ண அவங்க உடல்கள் இல்லாததால கோர்ட் வரைக்கும் கொண்டு போகற மாதிரி எந்த வலுவான ஆதாரமும் கிடைக்க வழியில்லை...”

 

மெல்லத் தலையசைத்தபடி அருணாச்சலம் சொன்னார். “இன்னொரு பிரச்சனையும் இருக்கு. வெளிப்படையான விசாரணைன்னு வந்துட்டா குற்றவாளிகள் உஷாராயிடுவாங்க. அதனால எதைச் செய்யறதாய் இருந்தாலும் அதை நாம ரகசியமாய் தான் செய்யணும்...”

 

ராகவன் புரிந்தது என்பது போல் தலையசைத்தார். அருணாச்சலம் தொடர்ந்து சொன்னார். “இது வரைக்கும் பிரம்மானந்தாவுக்கும் எனக்கும் இடையே நல்ல நட்பு தான் இருக்கு. அதை நான் வெளிப்படையா இழக்க விரும்பல. பல பேர் அவரைப் பூஜிக்கிறாங்க. குருவாய் ஏற்றுக்கறாங்க. அதனால அவரை வெளிப்படையாக எதிரியாக்கிக்கறது தேவையில்லைன்னும் நான் நினைக்கறேன். நமக்கு எல்லா உண்மைகளும் தெரியணும். அதே நேரத்துல நாம இந்த விசாரணையைக் கையில் எடுத்துருக்கோம்னு அவங்களுக்குத் தெரியவும் கூடாது. அதுக்கு என்ன வழி ராகவன்?”

 

சிறிது ஆலோசித்து விட்டு ராகவன் சொன்னார். “நம்ம ஆள் ஒருத்தன் மாறுவேஷத்துல யோகாலயத்துக்குள்ளே போய் ரகசியமாய் துப்பு துலக்கறது தான் ஒரே வழி சார்...”

 

அருணாச்சலம் சொன்னார். “ஆனா சரியான ஆளாய்ப் பார்த்து நாம அனுப்பலைன்னா நம்ம வேலை ஆகாது. அந்த ஆளையும் ஆபத்துக்குள்ளே அனுப்பிச்ச மாதிரி ஆயிடும்...”

 

ராகவன் சொன்னார். “இதுக்கு கச்சிதமான ஒரு ஆள் இருக்கான் சார். வயசு 29 தான். .பி.எஸ் அதிகாரி. அவன் பெயர் ஷ்ரவன். அவங்கப்பா ஆந்திராக்காரர். அம்மா தமிழச்சி. அவனுக்கு தமிழ் தெலுங்கு ரெண்டும் நல்லாவே தெரியும். இதுக்கு முன்னாடி ஆந்திரா கவர்மெண்ட் சென்ட்ரல்ல கேட்டு வரவழைச்சு அவனை ஆந்திரா ஒரிசா பார்டர்ல பிரச்சினையாய் இருந்த பெரிய நக்சலைட் கும்பலைப் பிடிக்கப் பயன்படுத்தினாங்க. ஒன்றரை வருஷம் அந்த நக்சலைட் கும்பலோட ஒருத்தனா அவன் வாழ்ந்தான். கடைசில அவங்களைப் புடிச்சுக் குடுத்தான். அதெல்லாம் உயிரைப் பணயம் வெச்சு செய்யற வேலை. ஆனா ரொம்ப சிறப்பா செஞ்சான். ஒரு வேஷம் போட்டான்னா அந்த நபராகவே மாறிடுவான். நாம சென்ட்ரல்ல கேட்டா அவனை அனுப்பிக் கொடுப்பாங்க...”

 

அருணாச்சலம் யோசனையுடன் சொன்னார். “சென்ட்ரல்ல விஷயத்தைச் சொல்லிக் கேட்டு அந்தத் தகவல் அங்கேயிருந்து வெளியே கசிஞ்சுதுன்னா பிரச்சனையாயிடுமே ராகவன்.”

 

ராகவன் சொன்னார். “முக்கிய வேலைக்குன்னு கேட்டா போதும் சார். என்ன வேலைன்னு அவங்க கிட்ட நாம விவரிக்க வேண்டியதில்லை. நீங்க ஒரு வார்த்தை பிரதமர் கிட்ட சொன்னா போதும். அவனை அனுப்பிச்சுடுவாங்க. நாங்க டிபார்ட்மெண்ட் மூலமா அவங்க கிட்ட கேட்கறத விட நீங்க பிரதமர் கிட்ட பேசறதுக்கு அதிக மதிப்பிருக்கும். எனக்குத் தெரிஞ்சு இப்ப அவனுக்கு எந்த அசைன்மெண்ட்டும் இல்லை...”

 

அருணாச்சலம் மெல்லக் கேட்டார். “அந்த ஐபிஎஸ் அதிகாரி தனிப்பட்ட முறைல எப்படிப்பட்ட ஆள்? எதுவும் சொதப்பிட மாட்டானே?”

 

ராகவன் சொன்னார். “பையன் பத்தரைமாத்துத் தங்கம். அறிவாளி. துணிச்சல்காரன். அவனோட அம்மா என் சித்தி பொண்ணுங்கறதால அவனை எனக்கு நல்லாவே தெரியும்.”

 

அவன் ராகவனின் உறவுக்காரன், அவருக்கு நன்றாகவே தெரிந்தவன் என்று தெரிந்த பிறகு அருணாச்சலம் திருப்தியடைந்தார். அதற்குப் பிறகு எதுவும் யோசிக்கத் தேவையிருக்கவில்லை.

 

ராகவன் சொன்னார். “ஷ்ரவனுக்கு தத்துவங்கள்லயும் நல்ல ஈடுபாடு உண்டு. ஆதிசங்கரரோட ஆத்மபோதம், உபநிஷத்துக்கள் பத்தியெல்லாம் மணிக் கணக்காய் பேசக்கூடியவன். அதனால யோகாலயத்துக்கு உள்ளே நடிக்க அவனுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது சார்...”

 

அருணாச்சலம் அந்தத் தகவலிலும் திருப்தி அடைந்தாலும் திடீரென்று ஒரு சந்தேகம் அவர் மனதில் எழ, மெல்லக் கேட்டார். “யோகாலயத்துக்குப் போறவங்க கொடுக்கற தகவல்லயே அவங்க திருப்தியடைஞ்சுடுவாங்களா. அதெல்லாம் சரி தானான்னு அவங்க செக் பண்ண மாட்டாங்க?...”

 

அவன் எந்த ஆளாய் போறானோ அந்த ஆளுக்கான அத்தனை ஐடியும் ரெடி பண்ணிட்டு தான் போவான் சார். அவங்க செக் பண்ணாலும் சரியாத் தான் தெரியும்...” 

 

நல்லது ராகவன். நான் இன்னைக்கே பிரதமர் கிட்ட பேசறேன்

 

ஷ்ரவன் வேலை விஷயமாய் சென்னைக்குப் போகிறான் என்றவுடன் அவன் தாய்க்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. என்ன தான் காதலித்து தெலுங்குக்காரரைத் திருமணம் செய்து கொண்டு ஹைதராபாதிலேயே வாழ நேர்ந்திருந்தாலும் அவளுக்குத் தமிழகம் மீதும், தமிழ் மீதும் இருந்த பற்று சிறிதும் குறையவில்லை. “அங்கேயே ஒரு நல்ல தமிழ்ப் பொண்ணைப் பார்த்துட்டு வாடா. இனியும் கல்யாணத்தைத் தள்ளிப்போடறது சரியில்ல. 27லிருந்து 29க்குள்ளே பசங்களுக்குக் கல்யாணமாயிடணும். அது தான் சரியான வயசு.”

 

அவன் அப்பா தெலுங்கிலேயே சொன்னார். “அது என்ன தமிழ்ப் பொண்ணு. அவன் தெலுங்குப் பொண்ணைப் பார்த்தால் ஆகாதா?”

 

அம்மா தமிழிலேயே அவருக்குப் பதிலடி தந்தாள். ”நீங்களே தமிழ்ப் பொண்ணைத் தானே கல்யாணம் செய்துகிட்டீங்க. அப்புறம் என்ன மகனுக்கு மட்டும் தெலுங்குப் பொண்ணு?”

 

ஷ்ரவனுக்கு அவர்கள் இருவரும் பேசிக் கொள்வது எப்போதுமே வேடிக்கையாக இருக்கும். அவர்களுக்குள் இப்போதும் மிகுந்த அன்பு இருந்ததென்றாலும் மொழி மற்றும் மாநிலப் பற்றை இருவருமே விட்டுக் கொடுத்ததில்லை. இருவரும் அவர்களுக்குள்ளும் அவரவர் மொழியிலேயே தான் பேசிக் கொள்வார்கள். அவர் தெலுங்கில் கேள்வி கேட்டால் அவள் தமிழில் பதில் சொல்வாள். அவள் தமிழில் கேள்வி கேட்டால் அவர் தெலுங்கில் பதில் சொல்வார். ஷ்ரவனிடமும் அவர்கள் அவர்களது தாய்மொழியிலேயே தான் பேசுவார்கள். அதனாலேயே ஷ்ரவன் இரண்டையும் நன்றாகக் கற்றுக் கொண்டிருந்தான்.

 

ஷ்ரவன் அம்மாவிடம் கேட்டான். “நீங்க ரெண்டு பேரும் லவ் பண்றப்பவும் இதே மாதிரி உங்க உங்க மொழிகள்லயே தான் பேசிகிட்டீங்களா?”

 

அம்மா கணவனைப் பொய்க் கோபத்தோடு பார்த்து விட்டுச் சொன்னாள். “அப்ப எல்லாம் உங்கப்பா தமிழ்ல தான் பேசினார். கல்யாணமான பிறகு தான் அவருக்குக் கொம்பு முளைச்சுடுச்சு.”

 

அப்பா சிரித்துக் கொண்டே தெலுங்கில் சொன்னார். “காதல் கைகூடணும்னா சில தியாகங்கள் செஞ்சு தான ஆகணும். அப்படி செய்ய வேண்டியதாய் போச்சு ஷ்ரவன்

 

அம்மா அவரைப் பொய்க் கோபத்தோடு முறைத்தாள். ஆனாலும் அவள் உதட்டோரத்தில் புன்னகை தவழ்ந்தது. இருவரும் தாங்கள் காதலித்த நாட்களின் நினைவுகளால் மௌனமாகி அவரவர் வேலையைப் பார்க்க நகர்ந்தார்கள். 

 

ஷ்ரவன் தன் பெற்றோரைப் பாசத்துடன் பார்த்துப் புன்னகைத்தான். அவர்களுக்கு இந்த மொழிச் சண்டை கூட காதலின் ஊடல் தான். அவர்கள் இருவருக்கும் இடையே இருக்கும் அன்னியோன்னியம் போல் அவனுக்கும் அவனுக்கு வரப்போகும் மனைவிக்கும் இடையே அன்னியோன்னியம் இருக்க வேண்டும் என்று ஆசையாய் இருந்தது. எங்கே பிறந்திருக்கிறாளோ அவள்? அம்மா சொல்வது போல் தமிழகத்தில் கிடைப்பாளா?

 

அவன் சென்னைக்குக் கிளம்பத் தயாரானான். மூன்று நாட்களுக்கு முன் தான் அவன் மாமா ராகவன் அவனிடம் போனில் பேசியிருந்தார். என்ன வேலை என்பது குறித்து அவர் போனில் எதுவும் சொல்லவில்லை. சீக்கிரமே அதிகார பூர்வ உத்தரவு வரும் என்று சொன்னார். அவன் சிறிதும் எதிர்பார்க்காத விதமாக மறுநாளே, அதாவது இரண்டு நாட்களுக்கு முன்பு, தமிழகத்தில் உள்ள ரகசியப் பணிக்காகச் செல்லும் உத்தரவு அவனுக்கு வந்தது. பொதுவாக எந்த வேலையையும் பற்றி செய்தி கிடைத்தவுடனேயே அதிக காலதாமதமில்லாமல் உத்தரவும் வருமானால் அந்த வேலையில் மேலிடம் சம்பந்தப்பட்டு இருக்கிறது என்று அர்த்தம். வேலை குறித்த விவரங்கள் தமிழகம் சென்ற பிறகு தான் தெரியவரும்.

 

வேலை எதுவாக இருந்தாலும் அது ஆபத்தானதாகத் தான் இருக்கும் என்பதில் அவனுக்குச் சந்தேகமில்லை. உண்மையில் அவன் அது போன்ற ஆபத்தான வேலைகளையே விரும்பினான். அவற்றில் மூழ்கி சமாளித்து வெற்றி பெறுகையில் கிடைக்கும் திருப்தியே அலாதி! மூளையும் ஆபத்துக்களைச் சந்திக்கையில் கூர்மையாகி வேலை செய்வது போல மற்ற சமயங்களில் வேலை செய்வதில்லை. எனவே அடுத்தடுத்து திறமைகளை வளர்த்துக் கொண்டே போவதற்கு வேலையில் ஆபத்துகளும், சிக்கல்களும், பிரச்சினைகளும்  தேவையாகவே இருக்கின்றன. இந்த வேலையில் அவை எந்த விதங்களில் இருக்குமோ?


(தொடரும்)

என்.கணேசன்