என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Monday, August 12, 2024

யோகி 62

 

குமரேசன் மெல்ல கையில் உறையை மாட்டிக் கொண்டான்.  சில சமயங்களில் முட்செடிகளைக் கையாள்கையில் அவர்கள் கையில் உறையை மாட்டிக் கொள்வது வழக்கம் தான்.

 

குமரேசன் களைந்து வைத்திருக்கும் களைகளை சற்று தூரத்தில் கொண்டு போய்க் கொட்ட வேண்டும். அதற்கு அவன் பாண்டியனின் இருப்பிடத்தைத் தாண்டி தான் போக வேண்டும். ஒரு கூடையில் அந்தக் களைகளை போட்டுக் கொண்டு குமரேசன் கிளம்பினான். பாண்டியன் இருப்பிடத்தைத் தாண்டிப் போய் அந்தக் களைகளைக் கொட்டி விட்டுத் திரும்பி வருகையில் பாண்டியனின் வாசல் அருகே வரும் போது நின்று கூர்ந்து தரையைப் பார்த்தான். குனிந்து ஒரு கைப்பிடி மண்ணை எடுத்துக் கொண்டு மறுபடியும் கீழே பார்த்து திருப்தி அடைந்தவன் போல் அங்கிருந்து நகர்ந்தான். யாராவது பார்த்தாலோ, கேட்டாலோ, ’முட்கள் விழுந்து கிடப்பது தெரிந்தது. அந்த முட்களைத் தான் மண்ணோடு எடுத்தேன்என்று சொல்லிக் கொள்ளலாம். வெறும் ஒரு கைப்பிடி மண்ணை அவன் எடுத்ததற்கு அவர்கள் வேறு விதமாய்ச் சந்தேகப்பட ஒன்றுமில்லை

 

குமரேசனின் செயலை கண்காணிப்பு காமிராக்களின் பதிவுகளைப் பார்த்துக் கொண்டிருந்தவன் கவனிக்கவே செய்தான். எந்த நபர் பிரம்மானந்தா மற்றும் பாண்டியனின் இருப்பிடங்களுக்கு அருகே சென்றாலும் கூடுதல் எச்சரிக்கையுடன் கவனித்துத் தெரிவிக்க வேண்டியது அவனுடைய பொறுப்பு. தோட்டக்காரன் மருதகாசியாக அவன் அறிந்த குமரேசன், கூடையுடன் பாண்டியனின் இருப்பிடத்தைக் கடக்கும் போதும்  அவன் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். களைகளைக் கொட்டி விட்டு காலி கூடையுடன் திரும்பி வந்த மருதகாசி, பாண்டியனின் இருப்பிடத்தருகே வந்து நின்று தரையை உற்றுப் பார்த்ததைக் கண்டவுடன் கண்காணிப்பாளன் முழுக்கவனத்தையும் அவன் மீது திருப்பினான்.

 

தோட்டக்காரன் மருதகாசி குனிந்து ஒரு பிடி மண்ணை எடுத்துக் கொண்டு நிமிர்வது தெரிந்தது. நிமிர்ந்தவன் இன்னும் ஏதாவது இருக்கிறதா என்று பார்த்து நிற்பது தெரிந்தது. பின் பழையபடி நகர்வது தெரிந்தது. ’ஏதாவது கண்ணாடித் துண்டுகளையோ, முட்களையோ பார்த்து இருக்கலாம்அதை மண்ணோடு எடுத்துக் கொண்டு போயிருக்கலாம்…’

 

ஒரு துப்புரவுப் பணியாளன் யோகி பிரம்மானந்தாவின் இருப்பிடத்திற்குச் செல்வது இன்னொரு காமிராப் பதிவில் தெரிய, கண்காணிப்பாளனின் கவனம் அங்கு நகர்ந்தது.

 

ஷ்ரவனுக்கு அந்த மண் மதியம் மூன்று மணியளவில் கிடைத்தது. பரசுராமன் அதை 4.45க்கு அங்கு சென்று சேரும்படியாக அனுப்பி வைக்கும்படி சொல்லியிருந்தார். நாளை காலை பரசுராமன் துபாய் செல்கிறார் என்பதால், ஷ்ரவன் அவர் செல்வதற்கு முன் கடைசியாக ஒருமுறை அவரைச் சந்திக்க நினைத்து, தானே அந்த மண்ணை எடுத்துச் சென்றான்.

 

யோகாலயத்தில் அடுத்தநிலைப் பயிற்சிக்குச் செல்லவிருக்கும் அவன், அது முடிந்தவுடன் அதிக கால தாமதம் செய்யாமல் துறவியாக அங்கு சேர்ந்து கொள்ள முடிவெடுத்திருந்தான். அதன் பின் அவன் பரசுராமனிடம் போனில் கூடத் தொடர்பு கொள்வது சிரமம். பரசுராமன் மூன்று மாதங்கள் கழித்து சென்னைக்குத் திரும்பி வந்தால் கூட, தொடர்பு எல்லைக்கு அப்பால் யோகாலயத்தில் அவன் இருக்கும் சூழல் நிலவும் என்பதால் அச்சமயத்தில் ரகசியமாய்ச் சந்திக்கவும் வாய்ப்பில்லை. அதனால் இப்போதே அவரிடம் ஆலோசனை, சந்தேகம் எதாவது கேட்பதானால் கேட்டுக் கொள்ளலாம் என்று ஷ்ரவன் எண்ணினான்.

 

அவர் வரவேற்பறையில் வரைந்திருந்த ஒரு சின்னத்தில் அந்த மண்ணை வைக்கச் சொன்னார். அங்கு அந்த மண் இருந்த ப்ளாஸ்டிக் பையை ஷ்ரவன் வைத்து விட்டுக் கேட்டான். “உங்க பூஜையை எத்தனை மணிக்கு ஆரம்பிப்பீங்க சுவாமிஜி?”

 

பரசுராமன் சொன்னார். “6.35க்கு.”

 

அது வரைக்கும் உங்க கிட்ட பேசலாமா சுவாமிஜி?” 

 

தாராளமாய் பேசலாம்

 

ஷ்ரவன் நேற்றிரவு சுகுமாரனும், பாண்டியனும் செவென் ஸ்டார் மருத்துவமனைக்குச் சென்றதையும், இருவருக்கும் வயிற்றில் புண் இருப்பதாகத் தெரிவதாகவும் சொன்னான். பரசுராமன் தலையசைத்த விதத்திலிருந்து அது அவருக்கு ஏற்கெனவே தெரியும் என்பதை அவனால் உணர முடிந்தது. இருந்த இடத்திலிருந்தே அவர், அந்தப் பாதகர்களுக்கு இந்த அளவு பாதிப்பை ஏற்படுத்த முடிந்தது அவனுக்குப் பேராச்சரியமாக இருந்தது. இப்படி பலதைச் செய்ய முடிந்தும் கூட, சிலவற்றைச் செய்ய மட்டும் ஆட்களை அனுப்ப ஏன் சொன்னார் என்பது தான் அவனுக்குக் குழப்பமாய் இருந்தது. 

 

அதை அவன் வெளிப்படையாகவே அவரிடம் கேட்ட போது அவர் சொன்னார். “இப்போதைக்கு நான் செய்திருக்கிறது ஒரு ஷாக் ட்ரீட்மெண்ட். கூடவே, அமைதியாய், நிதானமாய் அவர்கள் இருக்க முடியாத நிலைமையையும் நான் உருவாக்கியிருக்கிறேன். சில நேரங்கள்ல அவங்களுக்கு காட்சிகள் தெரியும். சில நேரங்கள்ல தெரியாதுங்கறபடி என் சக்திப் பிரயோகங்களையே கொஞ்சம் இடைவெளி விட்டுத் தாக்கற மாதிரி தான் பயன்படுத்தியிருக்கேன். அதுமட்டுமில்லாமல், வெறும் என் சக்திகளால் மட்டும் அல்லாமல் உன் ஆட்கள் மூலமாவும் சில வேலைகள் நடந்திருக்கிறதனால அவங்களுக்கு கண்டிப்பாய் குழப்பம் தான் அதிகம் இருக்கும். என்னடா இது, சிலது தானாய் நடக்குது, சிலது யாரோ செய்யற மாதிரி தெரியுதுன்னு குழம்புவாங்க. அதனால தெளிவாய், அமைதியாய், தைரியமாய் இது வரைக்கும் வேலை செஞ்சுகிட்டிருக்கறவங்க இனி அப்படிச் செய்ய முடியாது. குழப்பம், அவசரம் பயத்தோட தான் இனி அவங்க செயல்கள் இருக்கும். இதை நீங்க சரியாய் பயன்படுத்திக்கலாம்…”

 

ஷ்ரவன் நன்றியுணர்வோடு தலையாட்டி விட்டு, தனக்கு வந்த புதிய சந்தேகத்தைக் கேட்டான். ”இன்னைக்கு நீங்க செய்யற பூஜை கடைசி பூஜை.. அப்படின்னா நாளையில இருந்து அவங்களுக்கு எந்த விதமான பாதிப்பும் இருக்காதா?”

 

இன்னைக்குச் செய்யற பூஜை மகா உக்ர பூஜை. இது அவங்கள தொடர்ந்து எதாவது விதத்துல பாதிச்சுகிட்டேயிருக்கற விதத்துல பிரயோகத்தைச் செஞ்சு வெச்சுட்டு போறேன். ஆனால் கண்டிப்பாய் அவங்களும் சும்மா இருக்க மாட்டாங்க. தற்காப்புக்கு எதாவது செய்யத்தான் செய்வாங்க. ஆனா அது முழுசா அவங்களுக்குப் பாதுகாப்பும் தைரியமும் தந்துடாதபடியும் நான் சில வேலைகளை செஞ்சுட்டு போறேன். மீதி உன் கைல.”

 

ஷ்ரவனுக்கு அவர் சொல்வது புரிந்தும், புரியாமலும் இருந்தது. ஆனால் அவர் செய்திருப்பது மிகப்பெரிய உதவி என்பதில் அவனுக்குச் சந்தேகமில்லை. அன்று மிக அலட்சியமாகநான் நோய்களைப் பார்த்ததை விடப் பிரச்னைகளைப் பார்த்தது தான் அதிகம். அதனால ஏதாவது பிரச்னை வந்தா நான் பாத்துக்கறேன்என்று தன் மருத்துவமனை பொறுப்பாளரிடம் சொன்ன சுகுமாரன் இந்த ஆவி பிரச்சினையைத் தாள முடியாமல், தன் வீட்டிலேயே தங்கவும் முடியாமல், இரவு நேரங்களில் அங்குமிங்கும் அலைவதைப் பார்க்க சந்தோஷமாக இருந்தது.

 

அதே போல் குமரேசன் பாண்டியனைப் பற்றியும்அலட்டிக் கொள்ளாமல் அடுத்தவர்களை அச்சப்பட வைப்பதில் வல்லவர்என்று சொல்லியிருந்தான். அதை பரசுராமனும் உறுதிப்படுத்தியிருந்தார். கொலையில் பங்கிருந்தும், அலட்டாமல் சுகஜீவியாய் இருந்துவந்த பாண்டியனும் சுகுமாரனுடன் சேர்ந்து அலைவதும் ஷ்ரவனைத் திருப்தியடைய வைத்தது.  அதனால் அவன் பரசுராமனுக்கு மனதார நன்றி தெரிவித்தான்.

 

பரசுராமன் புன்னகையுடன் சொன்னார். “நன்றி சொல்ல அவசியமே இல்லை. ரொம்ப நல்ல மனுஷங்க கஷ்டப்படறதை நாம அனுமதிக்கக்கூடாது. அப்படிப்பட்ட மனுஷங்க இருக்கறதால தான் உலகம் ஒழுங்காய் இயங்கிட்டு இருக்கு. அந்த நல்ல மனுஷங்களும் நல்லவங்களாய் நீடிக்க முடியாமல் போனால், அப்புறம் இந்த உலகத்தை யாராலும் காப்பாத்த முடியாது. அதனால, நல்லதோட அருமை தெரிஞ்ச நம்மள மாதிரி ஆள்கள் செய்ய வேண்டிய வேலை தான் இது…”

 

தங்களை உயர்த்திக் காட்டுவதிலேயே குறியாய் இருக்கிற  பல ஆன்மீகக் குருக்கள் மத்தியில்  இவரைப் போன்றவர்களும் இருப்பது தான் ஆன்மீகத்தின் மரியாதையைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது என்று ஷ்ரவன் நினைத்துக் கொண்டான்.

 

ஷ்ரவன் அவரிடம் கேட்டான். “சுவாமிஜி, இந்த சக்திகளுக்கு எல்லை இருக்கா?”

 

பரசுராமன் சொன்னார். “இந்த சக்திகள் வலிமையானது, பரந்தது. ஆனாலும் இந்த சக்திகளை எல்லை இல்லாததுன்னு சொல்ல முடியாது ஷ்ரவன்.  சரியாய் சொன்னால் இறைசக்தி தவிர மற்ற எல்லா சக்திகளுக்கும் எல்லை இருக்கு. இந்த சக்திகளுக்கு வலிமை கூடறதே மனிதனோட மனசை ஆக்கிரமிச்ச பிறகு தான். மனிதனோட உணர்வுகள், நம்பிக்கைகள், ஈகோ எல்லாத்தையும் ஆக்கிரமிச்சு அதிலெல்லாம் இருக்கற சக்தியை எல்லாம் தன்னுடையதாக்கின பிறகு தான், இது மாதிரியான சக்தி அவனை ஆட்டிப் படைக்க ஆரம்பிக்குது. ஒரு பெரிய ரகசியம் சொல்லட்டுமா ஷ்ரவன்? எந்தவொரு சக்தியும், ஒரு மனிதனோட மனசு ஒத்துழைக்காம, அவன் மனசு எதிர்வினைல பங்கெடுத்துக்காம, அவன் மேல ஆதிக்கம் செலுத்த முடியாது. அதனால தான் நாம மனசை எந்த நிலைல, எந்தப் பக்குவத்துல வெச்சிருக்கோம்கிறது எல்லா நேரங்கள்லயும் ரொம்ப ரொம்ப முக்கியம்…”

 

அவருடைய பொருள் பொதிந்த வார்த்தைகள் ஷ்ரவனை யோசிக்க வைத்தன. திடீரென்று அவர் பார்வை வரவேற்பறையில் வைத்திருந்த யோகாலயத்து மண் இருந்த ப்ளாஸ்டிக் பை மீது நிலைத்தது. அதில் அவர் கூடுதலாக எதையோ பார்த்து விட்டது போல் ஷ்ரவனுக்குத் தோன்றியது.

 

அவர் பார்வை கூர்மையாகியது. அடுத்ததாய் அவர் சொன்னது அவனை அதிர வைத்தது.


(தொடரும்)

என்.கணேசன்



Thursday, August 8, 2024

சாணக்கியன் 121

 

ம்பி குமாரனை க்ளைக்டஸால் சரியாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒரு காலத்தில் அறிவு முதிர்ச்சியின் அடிமட்டத்தில் இருந்த அவனிடம் பிறகு தெரிய ஆரம்பித்த மாற்றங்கள் புத்திசாலித்தனமாக இருந்தன. அதே சமயம், ஒரு காலத்தில் நல்ல அடிமையாக இருந்த அவனிடம் ஆளுமை மெல்ல எழுந்து வளர ஆரம்பித்து விட்டது. சத்ரப்பாக நியமிக்கப்பட்டவுடன் அலட்சியமும் அவனிடம் தலைதூக்க ஆரம்பித்து விட்டது. அவனுக்கு என்ன தோன்றுகிறதோ அதன்படி அவன் நடக்க ஆரம்பித்து விட்டான். அலெக்ஸாண்டரோடு யவன அதிகாரம் போய்விட்டது என்று நம்பி தன் விருப்பப்படி நடந்து கொள்ளும் போக்கு அவனுக்கு வந்து விட்டது. செல்யூகஸை சந்தித்து விட்டு வந்த பிறகு நிலமை மாறியிருக்கிறது என்பதை வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் எத்தனையோ விதங்களில் க்ளைக்டஸ் உணர்த்தினான். அதிகாரத்திற்கு செல்யூகஸ் வந்து விட்டான், அலெக்ஸாண்டரின் இடத்தில் இப்போது அவனிருக்கிறான் என்று தெரிவித்தாகி விட்டது. ஆம்பி குமாரனை சத்ரப் என்றழைப்பதை க்ளைக்டஸ் நிறுத்தி விட்டதை வைத்து ஆம்பி குமாரன் தன் தற்போதைய நிலைமையை யூகித்திருக்க வேண்டும். ஆனால் புத்திசாலியாக மாற ஆரம்பித்திருப்பது போலத் தோன்றும் ஆம்பி குமாரன் பழைய அலட்சியத்தோடு இருப்பது தான் க்ளைக்டஸைக் குழப்பியது.

 

ஆம்பி குமாரனின் சில நடவடிக்கைகளைப் பார்த்து ‘இதையெல்லாம் செல்யூகஸ் விரும்ப மாட்டான்’ என்று க்ளைக்டஸ் ஆரம்பத்தில் சூசகமாகச் சொல்லிப் பார்த்தான். யவனர்களின் சட்ட திட்டங்கள் கண்டிப்பானவை, அவற்றைப் பின்பற்றா விட்டால் தண்டனைகளும் கடுமையாக இருக்கும் என்று க்ளைக்டஸ் பேச்சோடு பேச்சாகத் தெரிவித்தும் பார்த்தான்.  ஆனால் அந்தச் சமயங்களில் ஆம்பி குமாரன் செவிடனைப் போல நடந்து கொண்டான்.

 

இனி இவனிடம் சூசகமாகவோ, பேச்சோடு பேச்சாகவோ எதையும் சொல்லிப் பயனில்லை என்று முடிவெடுத்த க்ளைக்டஸ் நேரடியாகவே யவன அதிகாரி என்ற முறையில் ஆம்பி குமாரனிடம் ஒரு நாள் சொன்னான். “காந்தார அரசே. நீங்கள் முன்பு சத்ரப்பாக இருந்த போது மலயகேதுவையும், சந்திரகுப்தனையும் எதிர்க்காமல் யூடெமஸின் உதவிக்கும் செல்லாமல் இருந்தது தளபதி செல்யூகஸுக்குக் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்களுக்கு நீங்கள் துணை போகிறீர்களோ என்று கூட சந்தேகத்தை அவரிடம் ஏற்படுத்தியுள்ளது. அதனால் செல்யூகஸ் இங்கே வரும் வரை காத்திருக்காமல் அவர் வரும் முன்பே நீங்கள் அவரது நம்பிக்கையை மீட்டெடுக்க உடனடியாக எதாவது செய்வது மிக நல்லது. ஏனென்றால் எங்கள் யவனச் சட்டத்தில் மேலான பொறுப்புகளில் இருப்பவர்கள் கடமை தவறுவது மிகப்பெரிய குற்றமாகக் கருதப்படுகிறது.”

 

ஆம்பி குமாரன் தனக்குள் எழுந்த கோபத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அமைதியாகக் கேட்டான். ”நான் ஏன் உங்கள் யவனச் சட்டத்தையும், செல்யூகஸின் அபிப்பிராயத்தைப் பற்றியும் கவலைப்பட வேண்டும் க்ளைக்டஸ்?”

 

க்ளைக்டஸ் அதிர்ந்து போனான். என்ன ஒரு திமிர்ப்பேச்சு! ஆம்பி குமாரன் புரிந்து தான் பேசுகிறானா இல்லை புரியாமல் பேசுகிறானா, இல்லை புத்தி தான் பிசகி விட்டதா? க்ளைக்டஸ் சற்று கடுமையாகவே ஆம்பி குமாரனுக்கு உண்மையைப் புரிய வைக்க ஆசைப்பட்டான். “காந்தார அரசே. நீங்கள் இங்கே சக்கரவர்த்தி அலெக்ஸாண்டரின் பிரதிநிதியாகத் தான் காந்தாரத்தை ஆண்டு கொண்டு இருக்கிறீர்கள் என்பது தங்களுக்கு மறந்து விட்டதா? தாங்கள் சற்று கடந்த கால வரலாற்றைத் திரும்பிப் பார்ப்பது நல்லது.”

 

ஆம்பி குமாரனும் கடுமையான குரலில் சொன்னான். “க்ளைக்டஸ். எனக்கு வரலாறு சரியாகவே நினைவிருக்கிறது. அதனால் நீ கடந்த கால வரலாற்றைத் திரும்பிப் பார்ப்பது நல்லது. அலெக்ஸாண்டர் கேகயத்தை வென்றது போல் காந்தாரத்தை வெல்லவில்லை. நானாக நட்புக் கரம் நீட்டி அலெக்ஸாண்டரை இங்கே வரவழைத்தேன். தட்சசீலத்தின் எல்லையில் நின்று நண்பனாக நானே தான் கூட்டிக் கொண்டு வந்தேன். நீயும் அந்தச் சமயத்தில் தான் இங்கே வந்தவன் என்பதால் அந்த நிகழ்வை நீ மறந்திருக்க முடியாது. நான் காட்டிய நட்புக்கு இணையாக அலெக்ஸாண்டரும் நட்பு காட்டினார். நாங்கள் நண்பர்களாகச் சேர்ந்து தான் கேகயத்தை வென்றோம். என் எதிரி புருஷோத்தமனின் வீரத்தை மெச்சி அலெக்ஸாண்டர் கேகயத்தைத் தன் பெயரில் ஆளும் அதிகாரத்தைத் திருப்பி அவனுக்கே தந்தது எனக்குப் பிடிக்கவில்லை. ஆனாலும் என் நண்பன் அலெக்ஸாண்டரின் முடிவுக்கு நான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அந்த அளவுக்கு என் நண்பன் மீது அன்பு வைத்திருத்தேன். நான் நட்பினால் அலெக்ஸாண்டரோடு இணைந்து கொண்டு அந்த நட்பிற்கு அடிபணிந்திருந்ததை நீங்கள் அடிமைத்தனமாக நினைத்து விட்டது எனக்கு வருத்தத்தைத் தருகிறது. ஆனால் அலெக்ஸாண்டர் அப்படி நினைக்கவில்லை என்பது பிலிப்பின் மரணத்திற்குப் பின் யூடெமஸை மட்டும் நம்பாமல் பாரதப்பகுதிகளுக்கு என்னையும் சேர்த்து சத்ரப்பாக நியமித்ததை வைத்து நீ புரிந்து கொள்ளலாம்.”

 

“:நட்பின் காரணமாக நான் அலெக்ஸாண்டருக்குத் தந்த அனுமதி நான் யவனர்களுக்குத் தந்த நிரந்தர அனுமதியாகி விடாது. அந்த அனுமதி அலெக்ஸாண்டரின் மரணத்தோடு முடிவுக்கு வந்து விட்டது. இனி நானாக நட்பு பாராட்ட விரும்பினால் மட்டும் தான் எதுவும் தொடர முடியும். செல்யூகஸ் இங்கே என் நண்பன் அலெக்ஸாண்டரோடு வந்தவன். அதே பாவனையோடு இங்கே வந்தால் மட்டுமே என் நட்பையும் எதிர்பார்க்க முடியும். என் தலைவனாக இங்கே வந்து அதிகாரம் செலுத்தும் எண்ணம் இருந்தால் நான் என் நட்பை மறுபரீசீலனை செய்ய வேண்டி வரும்.”

 

“நீ எங்கள் யவனச் சட்டத்தில் மேலான பொறுப்புகளில் இருப்பவர்கள் கடமை தவறுவது மிகப்பெரிய குற்றமாகக் கருதப்படுகிறது என்று சொன்னாய். அதை யூடெமஸிடம் சொல்லி  அவன் தவறு செய்யாமல் காத்திருந்தால் அது உங்கள் யவனர் பெருமையை உணர்த்தியிருக்கும். அலெக்ஸாண்டர் நட்பு பாராட்டிய புருஷோத்தமனை யூடெமஸ் விஷம் வைத்துக் கொன்ற போது உனக்கு யவன சட்டமும் நினைவிருக்கவில்லை, வரலாறும் நினைவிருக்கவில்லை, சரி, தவறு என்ற பிரக்ஞையும் இருக்கவில்லை. நீயும் யூடெமஸும் சேர்ந்து நிகழ்த்திய சதிக்கு நான் அங்கீகாரம் தரும் வகையில்  உதவி செய்து இருக்க வேண்டும் என்று செல்யூகஸ் எதிர்பார்த்ததாகச் சொன்னாய். ஒரு யானை திருடிக்கு, ஒரு கொலைகாரனுக்கு உதவி செய்து என் தரத்தைத் தாழ்த்திக் கொள்ள எனக்கு விருப்பமில்லை. புருஷோத்தமன் என் எதிரி தான் என்றாலும் என் நண்பன் அலெக்ஸாண்டர் அவனிடம் அன்பு காட்டிய பிறகு நான் அவனை ஒரு போதும் எதிர்த்ததில்லை. அவன் கொலையையும் அலெக்ஸாண்டர் உயிரோடு இருந்திருந்தால் எப்படிப் பார்த்திருப்பானோ அப்படியே தான் நானும் பார்க்கிறேன். எந்த சந்தேகத்திற்கும் இடமில்லாமல் யூடெமஸ் குற்றவாளியாகவே எனக்கு இப்போதும் தெரிகிறான். அலெக்ஸாண்டரின் ஆட்கள் என்று சொல்லிக் கொள்ளும் உங்களால் அது முடியாமல் போவது எனக்கு மனவருத்தத்தைத் தருகிறது. நம்பிக்கைத் துரோகம் செய்து உங்கள் தலைமையின் கீழ் இருக்கும் ஆட்களுக்கே விஷம் வைத்துக் கொல்லும் உங்கள் நம்பிக்கையை மீட்டெடுக்க எனக்கு விருப்பமில்லை. அதை எதிர்பார்க்கும் அளவு உங்களுக்கு யோக்கியதையும் இல்லை.”

 

க்ளைக்டஸ் திகைத்து சிலையாக அமர்ந்திருந்தான். அந்தப் பைத்தியக்கார யூடெமஸ் இப்படியெல்லாம் ஆம்பி குமாரன் வாயிலிருந்து என்னைக் கேட்கும்படி செய்து விட்டானே என்று ஒரு கணம் அவன் மனம் நொந்தான்.  ஆம்பி குமாரனின் சாமர்த்தியமான பேச்சுக்குப் பதிலளிக்க அவனிடம் எந்த சாமர்த்தியமான பதிலும் இல்லை. அதனால் அவன் சொன்ன எதையும் பொருட்படுத்திப் பேசாமல் க்ளைக்டஸ் முடிவான கேள்வியொன்றைக் கேட்டான். “அப்படியானால் யவனர் தலைமையை நீங்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கிறீர்களா காந்தார அரசே?”

 

“அலெக்ஸாண்டரின் நண்பன் என்ற உயர்ந்த பதவியிலிருந்து யவனர்களின் அடிமை என்ற இழிநிலைக்கு இறங்க நான் மறுக்கிறேன்.”

 

இது என்ன பதில், இதை எப்படி எடுத்துக் கொள்வது? “யவன பிரதிநிதி என்ற முறையில் தங்கள் மனமாற்றத்தை நான் தளபதி செல்யூகஸுக்கு உடனடியாகத் தெரிவிக்க வேண்டிய நிலையில் இருக்கிறேன் காந்தார அரசே. நான் அவரிடம் முடிவாக என்ன தெரிவிக்க வேண்டும்?”

 

“நான் சொன்னதை அப்படியே செல்யூகஸிடம் சொல். முடிவை செல்யூகஸ் தான் எடுக்க வேண்டும்”

 

“இங்கே நீண்ட காலம் இருந்த நெருக்கத்தின் காரணமாக ஒரே ஒரு கேள்வியைக் கேட்க நான் விரும்புகிறேன் காந்தார அரசே. தங்களை எதிர்க்கும் முடிவை எடுத்து தளபதி செல்யூகஸ் பெரும்படையோடு வந்தால் அதை எதிர்க்குமளவு தங்களிடம் படைபலம் இருக்கிறதா?”

 

“என் படைபலம் போதாவிட்டால் நான் என் மீது அக்கறை கொண்டவர்களின் உதவியைப் பெற்றுக் கொள்வேன். ஆனால் உங்கள் அடிமையாக இருக்க எனக்கு விருப்பமில்லை.”

 

தீர்க்கமாகச் சொன்ன ஆம்பி குமாரனைத் திகைப்புடன் பார்த்தபடி ஒரு கணம் நின்று விட்டு உடனே அங்கிருந்து வெளியேறினான்.

 

(தொடரும்)

என்.கணேசன்




   

Wednesday, August 7, 2024

Monday, August 5, 2024

யோகி 61

 

பாண்டியனுக்கு ஏமாற்றமாக இருந்தது. அப்படியானால் சிசிடிவி காமிரா மூலம் இந்த நெருப்பு பற்றிய நிஜத்தைக் கண்டுபிடிக்க வழியில்லை. அவர்  கடிகாரத்தைப் பார்த்தார். மணி பன்னிரண்டரை. அவர் சுகுமாரனிடம் கேட்டார். “இப்ப தோட்டத்துல ஆவி தெரியுதா?”

 

சுகுமாரன் அறைக்குப் போய் ஜன்னல் வழியாகப் பார்த்து விட்டு வந்து சொன்னார். ”இல்லை

 

இப்ப வீட்டுக்குள்ளேயும் இல்லை. வந்தது ஆவியாய் இருந்தால் இப்ப மட்டும் ஏன் அதைக் காணோம். ரெஸ்ட் எடுத்துக்குதா? கண்டிப்பாய் இதுக்குப் பின்னாடி யாரோ ஆட்கள் இருக்காங்க டாக்டர். நாம அதைக் கண்டுபிடிக்கணும்

 

சுகுமாரன் குழப்பத்துடன் கேட்டார். “நீங்க ஏன் அப்படி சொல்றீங்க?”

 

பாண்டியன் தன் மனதில் எழுந்த கேள்விகளைக் கேட்டார். “என் உள்ளுணர்வு இது வரைக்கும் பொய்யானதில்லை. நீங்களே யோசிங்க. ஏன் உங்க டாக்டர் வாசுதேவன் ஆவி வரலை? ஏன் சைத்ரா ஆவி மட்டும் வருது? அதுவும், அந்தப் பொண்ணு இறந்து இத்தனை காலம் கழிச்சு ஏன் வர ஆரம்பிக்குது? இதுக்கும் முன்னாடி எத்தனையோ பேர் இறந்து போயிருக்காங்க. அப்படி இறந்த ஆவிகள் ஏன் வரலை?”

 

ஒரு ஆவி வந்து படற பாடு போதாதா? இந்த ஆள் ஏன் மத்த ஆவிகள் வரலைன்னு கேட்கறான்? கல்லெடுத்து எறிஞ்சு அது இவன் மேல பாய வந்தும் சந்தேகப்படறான்னா என்ன சொல்றது?’ என்று மனதினுள் கடுகடுத்த சுகுமாரன் சொன்னார். “அதை ஆவிகளைப் பத்தி நல்லா தெரிஞ்சவங்க கிட்ட தான் கேக்கணும்.”

 

திடீரென்று டாமி குரைக்க ஆரம்பித்ததும் இருவரும் திடுக்கிட்டார்கள். டாமி எங்கு பார்த்து குரைக்கிறது என்று பார்த்தார்கள். ஹாலின் ஒரு மூலையைப் பார்த்து தான் டாமி குரைத்தது, அவர்கள் இருவரும் அங்கு திரும்பிப் பார்த்தார்கள். ஹாலில் அந்த மூலையில் கருகிப் போன சடலம் சுவர் ஓரமாகத் தெரிந்தது. சுகுமாரனின் இதயம் துடிப்பதை ஒரு கணம் நிறுத்தியது. பாண்டியனும் திடுக்கிட்டார் என்றாலும் அவர் பார்வை ஆராய்ச்சிப் பார்வையாக இருந்தது. குறிப்புகள் எடுக்கப் போகும் ஆராய்ச்சியாளன் பார்ப்பது போல அவர் பார்த்தார். ஓட முயன்ற சுகுமாரன் கையை இறுக்கமாகப் பிடித்து நிறுத்தினார்.

 

பாண்டியனின் பிடி இரும்புப் பிடியாய் இருந்தது. பார்வையை அந்தச் சடலத்தின் மீதிருந்து எடுக்காமல் பாண்டியன் சுகுமாரனிடம் கேட்டார். “இப்படி எத்தனை நாள் தான் ஓட முடியும்?”

 

அந்த கருகிய சடலத்திலிருந்து உடனடியாக, காரப்புகை மண்டலம் கிளம்ப ஆரம்பித்தது.  அந்தக் காரப் புகையை சுவாசித்துக் கொண்டு அங்கேயே இருவராலும் இருக்க முடியவில்லை. இருமியபடியே, வேறுவழியில்லாமல் பாண்டியனும் எழுந்து, சுகுமாரனுடன் வேகமாக வெளியே வந்தார். ஆனால் ஆவியால் துரத்தப்பட்டு வெளியேறும் நிலைமையை யோசிக்கையில் அவருக்கு மிகவும் அவமானமாக இருந்தது.

 

செவென் ஸ்டார்ஸ் மருத்துவமனையில் ஸ்கேன்கள் எடுத்து அவர்கள் இருவரையும் பரிசோதித்த டாக்டர் அவர்கள் அமிலங்களுக்கு இணையான எதையும் உட்கொள்ளாமல் இப்படி வயிறு புண்ணாகியிருக்க வாய்ப்பேயில்லை என்று நினைத்தார். குடித்த மது அதிகமாகி, போதையில் வேறெதோவும் குடித்திருந்தால் ஒழிய இப்படி ஆகியிருக்காது என்பது அவரது அனுமானமாக இருந்தது. ஆனால் மேனேஜிங் டைரக்டரிடம் அதை அவரால் நேரடியாகச் சொல்ல முடியவில்லை. இன்னும் பத்து நாட்களுக்காவது புளி, காரம் சேர்க்காத பத்திய உணவைத் தான் சாப்பிட வேண்டும் என்று மட்டும் சொன்னார்.

 

சுகுமாரன் தலையசைத்தாலும் அவர் கவனம் அந்த டாக்டர் சொன்னதில் இருக்கவில்லை. இன்று மாலை அவர் மனைவியும், மகளும் கும்பகோணத்திலிருந்து திரும்பிவரப் போகிறார்கள். அவர்கள் பார்வைக்கும் ஆவி தெரிய வருமா, இல்லையா, என்று யோசித்துக் கொண்டிருந்தார். தெரிய வந்தால் அவர்கள் எதிர்வினை எப்படி இருக்கும்? ஒருவேளை அவர்களுக்கு ஆவி தெரியவரா விட்டாலும், டாமிக்குத் தெரிந்து அவன் குரைத்துக் கொண்டே இருந்தாலும், அவர் மனைவி திட்டுவாள். இந்த ஆள் கண்டிப்பாக இன்றைக்கு இரவு வரமாட்டான். இன்று இரவு ஆவி எப்படித் தெரியுமோ, என்ன செய்யுமோ? மனைவி, டாமி, ஆவி மூன்றையும் சேர்த்து சமாளிப்பது எப்படி?

 

பெருங்கவலையில் மூழ்கிய சுகுமாரன் பாண்டியனைத் தனதறைக்கு அழைத்துச் சென்று அமரவைத்துக் கேட்டார். “இனி நாம என்ன செய்யறது?”

 

பாண்டியன் சொன்னார். “அதைத் தான் நானும் யோசிச்சுகிட்டு இருக்கேன்

 

சுகுமாரன் தன் மிகப் பெரிய கவலையைச் சொன்னார். “இன்னைக்கு சாயங்காலம் என் மனைவியும், மகளும் வர்றாங்க.”

 

பாண்டியன் சொன்னார். “கூர்க்காவுக்கு ஆவி தெரியாத மாதிரி அவங்களுக்கும் தெரியாதுன்னு தோணுது. வேணும்னா நீங்களும், உங்கள் நாயும் எதாவது காரணம் சொல்லி வீட்டுல இன்னைக்குத் தங்காதீங்க.”

 

ஒரு நாளைக்கு சரி. நாளைக்கு, அடுத்த நாள்...? எதுக்கும் யோகி பிரம்மானந்தாவையும் கலந்தாலோசிக்கறது நல்லதில்லையா. இந்த மாதிரி விஷயங்கள்ல அவருக்குக் கண்டிப்பாய் நம்மள விட அதிக ஞானமிருக்கும்.”

 

நீங்க சொல்றதும் சரி தான். ஆனா அவர் நாளைக்கு மதியம் தான் வர்றார். வந்தவுடன் பேசுவோம். நிச்சயமாய் எதாவது வழி கண்டுபிடிப்போம். இன்னைக்கு ராத்திரி மட்டும் எப்படியாவது சமாளியுங்க.”

 

அவரளவு பாதிக்கப்படாமல் இன்னமும் பாண்டியன் ஓரளவு தைரியமாக இருந்தது சுகுமாரனையும் ஓரளவு தைரியப்படுத்தியது. அவர் மெல்லத் தலையசைத்தார். இருவரும் மௌனமானார்கள். நேற்றிரவே அவர்கள் இந்த மருத்துவமனைக்கு வந்து விட்டார்கள். இங்கு தான் உறங்க முயற்சித்தார்கள். ஆனால் இருக்கிற நிலைமை இருவரையும் உறங்க விடவில்லை. காலை ஆனவுடன் வயிறு சம்பந்தப்பட்ட டாக்டரை உடனடியாக வரவழைத்து, பரிசோதனை நடத்தி விட்டுத் தான் யோசிக்கிறார்கள்...

 

சுகுமாரன் வயிற்றுப் புண்ணிற்காகத் தானும் மருந்தை உட்கொண்டு பாண்டியனுக்கும் தந்தார். அதைக் குடித்து விட்டு பாண்டியன் கிளம்பினார். அவர் காரை ரிப்பேருக்குத் தர வேண்டும். கருகிய கார் சீட்டை மாற்ற வேண்டும். வழக்கமாய்ச் செய்யும் வேலைகளுடன் இந்த ஆவியைச் சமாளிக்கும் வேலையும் சேர்ந்து கொண்டிருக்கிறது. மற்ற வேலைகளை எப்படிச் செய்ய வேண்டும் என்ற தெளிவான சிந்தனை அவரிடம் இருக்கிறது. ஆனால் உண்மையாகவே ஆவி சமாச்சாரம் தானென்று அவரால் இன்னமும் முழுமையாக நம்ப முடியாத இந்த வேலை தான் புதியது, குழப்பமானது...

 

அவர் கூடுமான வரை எந்தப் பிரச்சினையையும், பிரம்மானந்தா வரைக்கும் செல்ல விடுவதில்லை. தானே பிரச்சினையைத் தீர்த்து விடுவார். அதன் பின்னும் அந்தப் பிரச்சினை வந்திருந்ததையே தேவைப்பட்டால் தான் அவர் பிரம்மானந்தாவிடம் சொல்வார். ஆனால் முதல் முறையாக பிரம்மானந்தாவை இந்தப் பிரச்சினை எட்ட வேண்டியிருக்கிறது

 

குமரேசனிடம் நேற்று மாலை தான் ஷ்ரவன் இந்த வேலையை ஒப்படைத்திருந்தான். வெளிப்பார்வைக்கு இது சுலபமான வேலை தான். ஆனால் யோகாலயத்தில் கண்காணிக்கும் நபர்களையும், காமிராக்களையும் மீறி, எந்த சந்தேகத்தையும் ஏற்படுத்தாமல் பாண்டியன் தங்குமிடத்தின் அருகே ஒரு பிடி மணலை எடுப்பது அவ்வளவு சுலபமல்ல. முடிந்த வரை கையுறை அணிந்து கொண்டு அந்த மண்ணை எடுத்துக் கொண்டு வந்தால் நல்லது என்றும் ஷ்ரவன் சொல்லியிருந்தான்.

 

பாண்டியன் தாவர அழகை ரசிப்பவரல்ல. அதனால் பாண்டியனின் இருப்பிடத்திற்கு அருகே தோட்டம் இல்லை.   தோட்டம்  அங்கு இல்லாததால் தோட்டக்காரர்கள் அந்தப் பகுதிக்குப் போக முடியாது. தவறி யாராவது போவது தெரிந்தால்  உனக்கு அங்கே என்ன வேலை?” என்று கேட்டுக் கொண்டு யாராவது வந்து விடுவார்கள்.  சொல்லும் பதில் அவர்களுக்குத் திருப்தி தராவிட்டால் அன்றோடு வேலையிலிருந்து நிறுத்தப்படும் அபாயமும் இருக்கிறது.

 

இப்போதைக்கு மண் எடுப்பதில் பெரிய கேள்விகள் எழப் போவதில்லை என்றாலும், சில நாட்களில் சந்தேகம் எழ வாய்ப்பிருக்கிறது என்று ஷ்ரவன் சொல்லியிருந்தான். அதனால் பாண்டியனின் தோட்டத்திலிருந்து சற்று தள்ளியிருந்த தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த குமரேசன், யாருக்கும் எந்தச் சந்தேகத்தையும் ஏற்படுத்தாமல், எப்படி அந்த வாசலருகே இருந்து மண் எடுப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தான். நேற்றிரவே பாண்டியன் எங்கேயோ வெளியே போயிருந்ததால் அவர் இருப்பிடத்திற்குச் சென்று வருபவர்களின் நடமாட்டம் இப்போது இல்லை. ஆனால் அவர் எந்த நேரத்திலும் வந்து விடலாம். அவர் வந்து விட்டால், அப்பகுதியில் ஆட்கள் நடமாட்டமும், கண்காணிப்பும் அதிகமாகி விடும். அதனால் விரைந்து செயல்பட வேண்டும்

 

இன்னொரு தோட்டக்காரன் சற்று தள்ளி மும்முரமாக வேலை பார்த்துக் கொண்டு இருந்தான். பாண்டியனின் வாசற்கதவுக்கு மேல் ஒரு கண்காணிப்பு காமிரா இருக்கிறது. ஆனால் நேரடியாகக் கண்காணிக்கும் நபர்கள் அருகில் யாரும் தற்போது இல்லை. அதனால், எல்லாக் கண்காணிப்பு காமிராக்களையும் கவனித்துக் கொண்டு இருக்கும் ஆள் மட்டும் அவன் நடவடிக்கையைக் கவனிக்கும் வாய்ப்பு இருக்கிறது. ஆனாலும் இயல்பாக அந்த வேலையைச் செய்து விட ஒரு உபாயம் குமரேசன் மனதில் மெல்ல உருவாகியது


(தொடரும்)

என்.கணேசன்




Thursday, August 1, 2024

சாணக்கியன் 120

 

பாடலிபுத்திர நகரவாயிலைக் கடந்த பிறகு பெருமளவு நிம்மதியை சாரங்கராவும், விஜயனும் உணர்ந்தார்கள் என்றாலும் அது முழு நிம்மதியாக இருக்கவில்லை. பெருஞ்செல்வத்தைக் கொண்டு செல்வதில் அந்தக் காலத்திலும் கூட வழியில் நிறைய ஆபத்துகள் இருந்தன. வழிப்பறிக் கொள்ளைகள் ஆங்காங்கே நடந்து கொண்டிருந்தன. அதனால் வணிகர்களும், மற்ற பயணிகளும் மிக எச்சரிக்கையாகவே பயணிக்க வேண்டியிருந்தது. அவர்கள் பெரும்பாலும் சேர்ந்தே பயணித்தார்கள். இரவில் தங்குமிடங்களிலும் பாதுகாப்பான இடங்களையும், பாதுகாப்பு குறைவான இடங்களையும் தங்கள் அனுபவங்களால் அறிந்து வைத்திருந்து பாதுகாப்பான இடங்களிலேயே தங்கினார்கள். வணிகர்களாகவே சில காலமாகப் போய் வந்து கொண்டிருப்பதால் விஜயனும், சாரங்கராவும் போகும் வழியிலுள்ள இடங்களையும், மனிதர்களையும் நன்றாகவே அறிந்திருந்தார்கள்.

 

பெருஞ்செல்வந்தர்களும், அரசர்களும் செல்வத்தைக் கொண்டு செல்ல வேண்டிவரும் போது செல்வத்தின் அளவிற்கேற்ப ஆயுதம் ஏந்திய வீரர்கள், படைகளோடு தான் கொண்டு சென்றார்கள். ஆனால் அதிலும் ஒரு சிக்கல் இருந்தது. பெருஞ்செல்வத்தைக் கொண்டு செல்கிறார்கள் என்று தெரிய வந்தால் கொள்ளையர்கள் மட்டுமல்லாமல் சில சிறு குறும்பகுதிகளை ஆள்பவர்களும் அந்தச் செல்வத்தை அபகரிக்க முனைந்தார்கள். அவர்களும் படையுடன் வருவார்கள். ஆனால் அவர்கள் வழக்கமாகத் தங்கள் பகுதிகளைக் கடக்கும் வணிகர்களிடம் தங்கள் கைவரிசைகளைக் காட்டுவதில்லை. வரி வசூலிப்பதோடு நிறுத்திக் கொண்டார்கள். அதனால் தான் தன் மாணவர்கள் வணிகர்களாகவே தனநந்தனின் செல்வத்தைக் கொண்டு வருவது அதிக பாதுகாப்பானது என்ற முடிவுக்கு சாணக்கியர் வந்திருந்தார். அந்தந்த பகுதிகளில் வழக்கமான சுங்கவரி கட்டிப் பயணிப்பது அதிக பிரச்சினை இல்லாததாக இருக்கும் என்று அவர் கணித்திருந்தார்.

 

ஆனாலும் யாத்திரீகர்களாகவும், வணிகர்களாகவும், தனிவீரர்களாகவும். புரட்சிப்படைவீரர்கள் பாடலிபுத்திரத்திற்கு அருகில் இருக்கும் சிறு கிராமங்கள், நகரங்களில் முன்பே காத்திருந்து அவர்கள் வந்தவுடன் சேர்ந்து கொண்டார்கள். அப்படிச் சேர்ந்து கொண்டவர்களில் சிலர் விஜயனையும், சாரங்கராவையும் அறிந்தவர்கள் போலக் காட்டிக் கொண்டு, நட்போடு நெருங்கி வந்து பாதுகாவலாக இருந்தார்கள். ஆனால் பலர் அறியாத அன்னியர்கள் போலவே முன்னாலும், பின்னாலும் இருந்து இரகசியப் பாதுகாவலர்களாக இருந்தார்கள். அப்படிக் கணிசமாகப் பாதுகாவல் அதிகரித்த பின் தான் விஜயனும், சாரங்கராவும் கூடுதல் நிம்மதியை உணர்ந்தார்கள்.

 

அவர்களை வரவேற்க சந்திரகுப்தனும், சாணக்கியரும் நகர வாயிலில் நின்றிருந்தார்கள். சந்திரகுப்தன் தன் நண்பர்களை ஆரத் தழுவி வரவேற்றான். செல்வத்தோடு அவர்கள் வந்ததை விட அவர்கள் பாதுகாப்பாக வந்து சேர்ந்தது மகிழ்ச்சியாக இருந்தது. அத்தனை செல்வத்தையும் கருவூலத்தில் பத்திரப்படுத்தும் முன்பு சாணக்கியர் சாரங்கராவிடமும், விஜயனிடமும் சொன்னார். ”நீங்கள் உங்கள் உயிரைப் பணயம் வைத்து இதை பாடலிபுத்திரத்திலிருந்து கொண்டு வந்திருக்கிறீர்கள். நீங்கள் அகப்பட்டிருந்தால் சித்திரவதை செய்து உங்கள் உயிரை தனநந்தன் எடுத்திருப்பான். உங்கள் வீரச்செயலுக்கு நான் எத்தனை தந்தாலும் அது குறைவாகவே இருக்கும். ஆனால் நான் ஜீவசித்திக்குச் சொல்லச் சொன்ன அதே வார்த்தைகளை உங்களிடமும் சொல்கிறேன். நீங்கள் உங்களுக்கு எவ்வளவு விருப்பமோ, அத்தனையை எடுத்துக் கொண்டு மீதத்தை இதனுள்ளே கொண்டு போய் வைத்தால் போதும்.”

 

சாரங்கராவ் கோபப்பட்டான். ”ஆச்சாரியரே! உங்கள் மாணவர்களை தயவுசெய்து இழிவுபடுத்தாதீர்கள். வலிமையான ஒன்றிணைந்த பாரதம் உங்கள் கனவு மட்டுமல்ல. எங்களது கனவும் கூட. சொந்தக் கனவை விலை பேச முடியுமா?”

 

விஜயன் சாரங்கராவ் போலக் கோபப்படவில்லை. அவன் சொன்னான். “ஆச்சாரியரே. நான் வணிகனாகி பிற்காலத்தில் நிறைய செல்வம் சம்பாதிப்பேன். ஆனால் புண்ணியத்தை உங்கள் நிழலில் இருக்கும் வரை தான் சம்பாதிக்க முடியும் என்று நம்புகிறேன்.”

 

சாணக்கியர் ஈரமான விழிகளுடன் தன் மாணவர்களைப் பெருமிதத்துடன் பார்த்தபடி ஆசிர்வதித்தார். “இறைவன் உங்கள் மனதிற்கேற்ற உயரத்திலேயே உங்களை எப்போதும் வைத்திருக்கட்டும்.

 

தனிமையில் இருக்கும் போது சந்திரகுப்தன் சாணக்கியரிடம் சொன்னான். “எனக்கு இப்போதும் உண்மை என்று நம்பக் கஷ்டமாக இருக்கிறது ஆச்சாரியரே. இவ்வளவு சுலபமாக தனநந்தனின் புதையல் அங்கிருந்து இங்கு வந்து சேரும் என்று நான் எண்ணியிருக்கவில்லை. தனநந்தன் இவ்வளவு அலட்சியமாகவா இருப்பான் என்று ஆச்சரியமாக இருக்கிறது? நீங்கள் பேரறிவு படைத்தவராகச் சொல்லும் ராக்‌ஷசர் கூட நம் ஆட்களின் செயலை அறிய முடியாமல் போனது எப்படி?”

 

சாணக்கியர் சொன்னார்.  “மனிதனின் மனமும், அறிவும் பல சமயங்களில் விசித்திரமாகவே செயல்படுகின்றன சந்திரகுப்தா. அந்த சமயங்களில் அவன் தன் குறுகிய பார்வையிலேயே பார்த்து அனைத்தையும் முடிவு செய்கிறான். அதையே சரியென்று நம்புகிறான். அதனால் அதில் உள்ள குறைகளை அறியவோ, மாற்றிக் கொள்ளவோ விரும்புவதில்லை. தனநந்தன் கிட்டத்தட்ட அனைத்தையும்  அப்படித் தான் செய்பவன். அவனையும் மீறி மகதம் வலிமையாக இருக்கின்றது என்றால் அதன் நிர்வாகம் ராக்‌ஷசர் கையில் இருப்பது தான். இந்தப் புதையல் பற்றி ராக்‌ஷசருக்கே தெரிந்திருக்க வழியில்லை என்று தான் எனக்குத் தோன்றுகிறது. ஏனென்றால் அவருக்குத் தெரிந்திருந்தால் அதை இரகசியமாகப் பாதுகாக்கும் பொறுப்பை அவர் ஏற்று அதைக் காப்பாற்றியிருப்பார்.”

 

சந்திரகுப்தன் குழப்பத்துடன் கேட்டான். “தனநந்தன் ஏன் அத்தனை தொலைவில் புதையலை வைத்திருக்கிறான். ஏன் அதை அவரிடமிருந்து கூட மறைக்கிறான்?”

 

சாணக்கியர் யோசனையுடன் சொன்னார். “சரியாகத் தெரியவில்லை. ஆனால் யோசித்துப் பார்க்கையில் என் தந்தை, அமைச்சர் ஷக்தார் போன்றோர் அவனை எதிர்த்துக் கொண்டிருந்த காலத்தில்  ஏதாவது ஒரு ஆபத்து வந்து அரியணை, அரண்மனை, கஜானா என எல்லாவற்றையும் இழக்கும் நிலை வரக்கூடும் என்ற பயம் தனநந்தனுக்கு வந்திருக்கக்கூடும். அப்படி நிகழ்ந்து அங்கிருந்து வெளியேறும் நிலை வந்தால் எல்லாவற்றையும் திரும்ப மீட்க வேண்டுமளவு செல்வம் யாருமறியாத ஒரு பொது இடத்தில் நல்லது என்ற எண்ணம் அவனுக்கு உதித்திருக்கலாம். அந்தக் காலக்கட்டத்தில் ராக்‌ஷசர் இருக்கவில்லை. அவர் அப்போது இருந்திருந்தால் அவரிடம் அவன் சொல்லியிருக்கலாம். அப்போது அவனுக்கு முழுநம்பிக்கையானவர் என்று வேறு யாருமே இருக்கவில்லை. அவன் வேறு யாரையும் நம்பவுமில்லை. அதனால் நதிக்கரையோரம் இருக்கும் செல்வத்தை எப்படியாவது அப்புறப்படுத்திக் கொண்டு போவது எளிது என்று நினைத்து அவன் கங்கைக் கரையில் புதைத்து வைத்திருக்கலாம். அப்படி அவன் புதைத்து வைத்ததை நான் பார்த்து விட்டது அவனுக்குத் தெரியாததால், அறிந்து விட்டவர்களை எல்லாம் கொன்று விட்ட நிம்மதியில் அவன் இருந்திருப்பான் என்று தோன்றுகிறது. ஆனாலும் பிறகு பயம் வந்திருக்க வேண்டும். புதையல் இருக்கும் இடத்தில் மேலும் அதிகம் செல்வம் சேர்த்து யாகசாலை கட்டிய பின் அது தெரிந்த அந்த கட்டிடப் பணியாளர்களையும் கொன்ற பிறகு அந்தப் பயமும் போயிருக்கும். அதற்குப் பிறகு ராக்‌ஷசரிடம் சொல்லும் அவசியமும் இல்லை என்று அவன் நினைத்திருக்கலாம். சொல்வதானால் பழைய கதையையும் சேர்த்தே சொல்ல வேண்டும் என்பதால் அவன் அவரிடம் பின்பு சொல்வதையும் தவிர்த்திருக்கலாம். தன் ஒருவனுக்கு மட்டுமே அந்த ரகசியம் தெரிந்திருப்பது பாதுகாப்பு என்றும் கூட அவன் நினைத்திருக்கலாம்.”

 

அவருடைய அனுமானங்கள் பெரும்பாலும் தவறாக இருப்பதில்லை என்பதால் அப்படித் தானிருக்கும் என்று சந்திரகுப்தன் நம்பினான்.

 

சாணக்கியர் தொடர்ந்து சொன்னார். “ஆனாலும் அவன் எப்போதாவது அந்த யாகசாலைக்குப் போய்ப் பார்த்துவிட்டு வருகிறான் என்பதை நான் கேள்விப்பட்டேன். பெயரில் செல்வம் இருப்பது போலவே மனதிலும் செல்வத்தின் நினைப்பே அதிகம் இருக்கும் அவன் அப்படிப் போய் அந்தச் செல்வத்தைத் தோண்டிப் பார்க்க வாய்ப்பில்லை. போய் அங்கு சிறிது நேரம் உட்கார்ந்து தன் காலடியில் எத்தனையோ செல்வம் இருக்கிறது என்று எண்ணிப் பூரித்து விட்டு வருவான் போலிருக்கிறது. அவன் சில மாதங்களுக்கொரு முறை அங்கே போய் வருவது தெரிந்ததால் தான் கடைசியாக அவன் பார்த்து விட்டுப் போன பிறகு கண்டிப்பாக மறுபடி சில காலம் போய் பார்க்க மாட்டான், அதற்குள் அந்தப் புதையலை எடுத்து வருவது சரியாக இருக்கும் என்று திட்டம் போட்டேன். ஆனால் உண்மையைச் சொல்வதென்றால் எனக்குமே அந்த நிதி இங்கே வந்து சேரும் வரை முழுவதுமாக நம்பிக்கை இருக்கவில்லை. மொத்தத்தில் நம் கனவை இறைவன் ஆசிர்வதித்து இருக்கிறான். அதனால் தான் இந்த அற்புதம் நிகழ்ந்திருக்கிறது என்று இப்போது தோன்றுகிறது.”

 

சந்திரகுப்தன் மனநிறைவுடன் புன்னகைத்தான். அவர் சொன்னது போல் எல்லாம் வல்ல இறைவனின் ஆசிர்வாதமே இது என்று அவனுக்கும் தோன்றியது. “இனி அடுத்தது என்ன ஆச்சாரியரே?”

 

“இனி நாம் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது சந்திரகுப்தா” என்று சாணக்கியர் சொன்னார்.

 

(தொடரும்)

என்.கணேசன்