என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, October 13, 2022

சாணக்கியன் 26

 

ந்திரதத் விஷ்ணுகுப்தரிடம் கவலையுடன் கேட்டார். ”அலெக்ஸாண்டரை அனைவரும் சேர்ந்து எதிர்த்தால் தான் வெற்றி காண முடியும் என்று நீ சொன்னாய் விஷ்ணு. ஆனால் யாரும் அவரவர்களுக்கு ஆபத்து வராமல் ஒன்று சேர மாட்டார்களே. மனித சுபாவத்தை என்னை விட நன்றாக அறிந்தவன் நீயல்லவா? அவர்களுக்கு எல்லாவற்றையும் புரிய வைத்து அனைவரையும் ஒன்று சேர்ப்பவர் யார்?”

 

நான் முயற்சி செய்கிறேன் இந்திரதத். இது போன்ற சூழ்நிலைகளில் பெரியவர்களும், வலிமையானவர்களும் முடிவெடுப்பது தான் மிக முக்கியம். அவர்கள் முடிவெடுத்தால் கண்டிப்பாக மற்றவர்கள் இணைந்து கொள்வார்கள்.”

 

இதற்குத் தலைமை தாங்குவது யார் என்ற கேள்வி எழுகிறதே விஷ்ணு. நீ சொன்ன பெரியவர்களில், வலிமையானவர்களில் அதிக படை வலிமை படைத்தவர்கள் யார்?”

 

மகதம்

 

இந்திரதத் விஷ்ணுகுப்தரைத் திகைப்புடன் பார்த்தார். “தனநந்தனிடம் நீயே நேரில் போய் அறிவுரை சொல்லப் போகிறாயா விஷ்ணு

 

விஷ்ணுகுப்தர் தன் தந்தையைக் கொன்ற தனநந்தனிடம் போய் இது குறித்து அறிவுரை சொல்வதை இந்திரதத்தால் நினைத்துப் பார்க்க முடியவில்லை.

 

விஷ்ணுகுப்தர் அமைதியாகச் சொன்னார். “அறிவுரை சொல்வதை தனநந்தன் சிறிதும் விரும்ப மாட்டான் இந்திரதத். அதனால் அவனிடம் நான் அறிவுரை சொல்லப் போவதில்லை. உதவி கேட்கப் போகிறேன். பாரதம் அன்னியரால் வெல்லப்பட உள்ளது. நீ தலைமையேற்று அவர்களைத் துரத்தியடித்து பெருமை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப் போகிறேன்....”

 

சந்திரகுப்தனைப் போலவே இந்திரதத்தும் நண்பனின் மனவலிமையையும், உயர் குணத்தையும் கண்டு வியந்து போனார்.  தன்னுடைய வெறுப்பைக் குழி தோண்டிப் புதைத்து விட்டு பாரத மண்ணின் பாதுகாப்பிற்காக இப்படி பகைவனிடமே சென்று வேண்டுகோள் விடுக்கும் பெருந்தன்மை எத்தனை பேருக்கு வரும்? எத்தனை பேரால் இது முடியும்?

 

நீ சொல்வதற்கு தனநந்தன் செவி மடுப்பான் என்று நீ நம்புகிறாயா விஷ்ணு

 

முயற்சி செய்யும் கடமை எனக்கிருக்கிறது இந்திரதத். அதன் விளைவு என்னவாக இருக்கும் என்பது தனநந்தனுக்கும், இறைவனுக்குமே வெளிச்சம். நல்ல எண்ணத்தால், தேசபக்தியால் இதற்கு தனநந்தன் உடன்படுவான் என்று நான் நம்பவில்லை.  ஆனால் புகழுக்காகவும், அனைவரையும் தலைமை தாங்கிப் போகும் பெருமைக்காகவும் இதற்கு உடன்படும் வாய்ப்பு இருக்கிறது என்று தோன்றுகிறது.... காரணம் எதுவாக இருந்தாலும் நல்லது நடந்தால் சரி”

 

இந்திரதத் அதற்குக் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. அது நடக்கலாம். அல்லது நடக்காமலும் போகலாம். அவரை இன்னொரு சிந்தனை வாட்டி எடுக்க ஆரம்பித்தது. அதை அவர் நண்பனிடம் வெளிப்படையாகவே சொன்னார். “கேகய மன்னர் தனநந்தனின் தலைமையை ஏற்கக் கண்டிப்பாக உடன்பட மாட்டார் விஷ்ணு. அவருக்கு அவன் மீது உயர்ந்த அபிப்பிராயம் இல்லை. அவன் தலைமை ஏற்பதைச் சிறுமையாக அவர் கருதுவார்…”

 

விஷ்ணுகுப்தர் சொன்னார். “அதை அவர் பெருமையாக நினைக்க முடியாது என்பதை நானும் அறிவேன் இந்திரதத். ஆனால் சில சமயங்களில் நாம் இரண்டு சிறுமைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கிறது. அலெக்ஸாண்டரிடம் தோற்பதை விட இது சிறுமை அல்ல என்பதை நீ தான் அவருக்குப் புரிய வைக்க வேண்டும் நண்பா….”

 

இந்திரதத் சொன்னார். “அவரிடம் அலெக்ஸாண்டரிடம் தோற்க வேண்டியிருக்கும் என்பதைப் புரிய வைப்பதே எனக்கு மிகவும் கஷ்டம் தான் விஷ்ணு. அதைப் புரிய வைக்க முடிந்தால் அல்லவா அதை விட இந்தச் சிறுமை சிறியது என்பதை நான் புரிய வைக்க முடியும். உண்மையைச் சொன்னால் நானே அலெக்ஸாண்டர் எங்களைத் தோற்கடிக்க முடியும் என்பதை ஆரம்பத்தில் நம்பவில்லை அல்லவா? இப்போதும் அதைச் சொல்வது நீ என்பதால், உன் அறிவுக்கூர்மை ஆணித்தரமாக யூகிப்பது நடக்காமல் போகாது என்று நம்புவதால் தான் நானே அலெக்ஸாண்டர் எங்களை வெல்வது சாத்தியமாக இருக்கலாம் என்று நம்புகிறேன்.  எதற்கும் நீ மகதம் போய் விட்டு வா விஷ்ணு. தனநந்தனின் முடிவு என்ன என்று தெரிந்த பின் தான் எங்கள் மன்னரிடம் இதை நான் சொல்ல முடியும். அவனே மறுப்பானானால் எங்கள்  மன்னரிடம் நான் அதைப் பேசுவது கூட அர்த்தமற்றது...”

 

விஷ்ணுகுப்தர் பெருமூச்சு விட்டார். நண்பன் சொன்னதில் அவர் எந்தத் தவறும் காணவில்லை. இந்திரதத் அவருடைய நண்பனாக இருக்கலாம். ஆனால் இந்திரதத்துக்கு கேகய நாட்டின் அமைச்சர் பொறுப்பும் இருக்கிறது. விஷ்ணுகுப்தர் அவரிடம் பேசியது போல அவர் கேகய மன்னரிடம் சென்று பேச முடியாது….  ஆரம்ப இடத்திலேயே அதுவும் நண்பனிடத்திலேயே சம்மதிக்க வைப்பதில் இத்தனை சிக்கல்கள் என்றால் மற்ற இடங்களில் எப்படி இருக்கும் என்று யோசித்த போது ஒரு பாரம் அவர் நெஞ்சை அழுத்தியது.

 

நண்பனைக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்த இந்திரதத் அவரது வேதனையை உணர்ந்து கொண்டு வருத்தத்துடன் மென்மையாகச் சொன்னார். “விஷ்ணு. ஒன்றுபட்ட பாரதம் என்ற உன்னுடைய கனவில் நான் பங்கெடுத்துக் கொள்ளலாம். ஆனால் பலருக்கும் அது நிஜத்தில் புரியாத கற்பனை பிம்பமாகவே இருக்கும் என்பதே யதார்த்தம். என்ன தான் உன்னதங்களைச் சொல்லி நீ அதைப் புரிய வைக்க முயன்றாலும் அவரவர் தனிப்பட்ட லாப நஷ்டங்களை வைத்தே ஒவ்வொருவரும் எதையும் தீர்மானிப்பார்கள் என்பதே உண்மை…”

 

விஷ்ணுகுப்தர் கண நேரத்தில் மனதில் இடம் பிடித்த பாரத்தைத் தள்ளி விட்டு அமைதியாகச் சொன்னார். “நீ சொல்லும் யதார்த்த நிலை எனக்கும் புரியாமல் இல்லை இந்திரதத். ஆனால் யதார்த்தங்களை நாம் தான் உருவாக்குகிறோம். இருக்கின்ற நிலைமைகளை அப்படியே ஏற்றுக் கொள்வதால் எதுவும் எப்போதும் மாறிவிடுவதில்லை. பலரும் போகும் போக்கிலேயே நம்மைப் போல் அறிந்தவர்களும் போவோமானால் நம் அறிவுக்கு அர்த்தமில்லாமல் போகிறது என்பதோடு நல்ல மாற்றங்களை சமூகத்தில் நம்மால் ஏற்படுத்தி விடவும் முடியாது. சொல்ல வேண்டிய உன்னதங்களை சலிக்காமல் சொல்லியே ஆக வேண்டும். நன்மைகள் என்றும் தீமைகளின் வேகத்தில் மனிதர்கள் மனதில் பதியாது. என்றாலும் சொல்லும் நல்ல விஷயங்கள் சிலர் மனதிலாவது சிறிது தங்கும். பின் கூடுதல் இடம் பிடிக்கும். இன்றில்லா விட்டாலும் சில காலம் கழித்தாவது அது பலனளிக்கும். அந்த நம்பிக்கை எனக்கு உள்ளது….”

 

விஷ்ணுகுப்தரின் வார்த்தைகளில் நெகிழ்ந்து போன இந்திரதத் பதில் சொல்ல வார்த்தைகள் கிடைக்காமல் மௌனமாக கைகூப்பினார்.

 

விஷ்ணுகுப்தரின் தொடர்ந்த பயணத்தில் சிற்றரசுகளையும், குடியரசுகளையும் அவர் கடக்க வேண்டியிருந்தது. அவர்களுடன் பேசி எந்தப் பேருதவியும் கிடைக்க வழியில்லை என்றாலும், இரவில் தங்குகின்ற இடங்களில் தங்குகின்ற நேரத்தில் அவர் சிற்றரசர்களிடமும், மக்கள் தலைவர்களிடமும் பாரதத்தின் எல்லையில் புதிதாக உருவாகியிருக்கும் நிலைமை குறித்து பேசினார். அவர்கள்  தோற்றத்தில் மாறுபட்டார்களேயொழிய அடிப்படை எண்ண ஓட்டங்களில் ஒன்று போலவே இருந்தார்கள். பாரத மண்ணின் மைந்தர்கள் என்ற சிந்தனை கிட்டத்தட்ட எங்குமே காணப்படவில்லை. ஒரு சிலர் மட்டுமே அவர் சொன்ன பிறகாவது அதை உணரவும், சிந்திக்கவும் முடிந்தவர்களாக இருந்தார்கள். அவர்களும் சில குடியரசுகளில் இருக்கும் சிந்தனையாளர்களாக இருந்தார்கள். அவர்களும் சிந்தனைக்கு உயர்வாகத் தோன்றும் இது நிஜமானால் மிக நன்றாக இருக்கும் என்று நினைத்தார்களே ஒழிய அது நிஜமாகும் என்று நம்பியதாகத் தெரியவில்லை.

 

மற்றவர்கள் அனைவரும் அலெக்ஸாண்டர் வரட்டும், பார்த்துக் கொள்ளலாம் என்றும் அடுத்தவர்கள் எல்லாரும் என்ன செய்கிறார்களோ அதையே செய்யலாம் என்றும் நினைப்பதாகச் சொன்னார்கள். போரிட்டு வெல்ல  முடியா விட்டால் சரணடைந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வது தான் அவர்கள் நிலைப்பாடாக இருந்தது. அதற்கு மேல் அவர்களுக்குச் சிந்திக்க எதுவும் இருக்கவில்லை. பலருக்குத் தங்கள் எல்லைகளைத் தாண்டி எதையும் யோசிக்க முடியவில்லை. அனைவரும் தட்சசீல ஆச்சாரியரை உயர்வாக நினைத்தார்கள். மரியாதையுடன் நடத்தினார்கள். ஆனால் அவர் தன்னுடைய சித்தாந்தங்களையும், தேசபக்தியையும் அவர்களுக்குப் புரிய வைக்க முடியவில்லை.

 

வேதங்கள், உபநிஷத்துக்களை உருவாக்கிய பாரதம், மாமுனிவர்களையும், யோகிகளையும், மகாவீரரையும், புத்தனையும் உருவாக்கிய பாரதம் இக்காலத்திற்குத் தேவையான மகாபுருஷர்களை உருவாக்கத் தவறி விட்டதோ என்று அவர் வருத்தப்பட்டார்.   அவர் பார்க்கின்ற இடங்களில் எல்லாம் ஞான சூனியங்களே அதிகம் இருந்தார்கள் அவர்களுக்குத் தனிப்பட்ட லாப நஷ்டங்களில் இருக்கும் கவனம், அறிவுகூர்மை எல்லாம் மற்ற விஷயங்களுக்கு நகர்ந்து விடாமல் இருப்பதாகவே அவருக்குத் தோன்றியது

 

மகதம் நோக்கிச் சென்ற அவரது பயணத்தில் இருந்த வேகம் வழியில் அவர் சிந்தனைகளை முக்கியமானவர்களிடம் சேர்க்க வைக்க முடிவதில் இருக்கவில்லை. அதில் அவருக்குப் பெரிய ஏமாற்றமும் இருக்கவில்லை. ஏனென்றால் அவர் அவர்களிடம் அதிகம் எதிர்பார்த்திருக்கவும் இல்லை. ஒரே ஒருவனின் தீர்மானம் தான் இப்போதைக்கு வரலாற்றை எழுதப் போகிறது. அவன் முன்னுக்கு வந்தால் அவன் பின்வர மற்றவர்களைத் திரட்டுவதில் சிரமம் பெரிதாக இருக்கப் போவதில்லை. அப்படிச் சிலர் வராமல் இருந்தாலும் பாதிப்பு எதுவும் இருக்கப் போவதில்லை. தனநந்தன் என்ன தீர்மானிப்பானோ?

 

(தொடரும்)

என்.கணேசன்



இந்த நாவலையும், அச்சில் உள்ள என் மற்ற நூல்களையும் அமேசானில் வாங்க லிங்க் -

(அல்லது)


நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து என்.கணேசன் புக்ஸுக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் ரிஜிஸ்டர் தபால் அல்லது குரியர் மூலமாகப் பெற்றுக் கொள்ளலாம். 

உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பேபோன் பேமற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம்(ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)

நூல்களின் குறிப்பு மற்றும் விலையை அறிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும் - என்.கணேசன் நூல்கள்


அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.


நூல்களை வாங்க விரும்பும் வெளிநாட்டு வாசகர்கள் தங்கள் விவரங்களை  nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பினால் தபால் செலவு அறிந்து சொல்லப்படும்.

புத்தம் சரணம் கச்சாமி நாவலுக்கு தினமலர் மதுரைப் பதிப்பில் விமர்சனம்!

 அன்பு வாசகர்களே!


புத்தம் சரணம் கச்சாமி நாவலுக்கு இன்று (13.10.2022) தினமலர் மதுரை பதிப்பில் வந்துள்ள விமர்சனம் உங்கள் பார்வைக்கு -




Monday, October 10, 2022

யாரோ ஒருவன்? 106


ல்யாணுக்கு யோசிக்க சிறிது நேரம் தேவைப்பட்டது. அவன் கார்க்கதவைச் சாத்தி விட்டு மறுபடி வீட்டுக்குள்ளே போனான். வேலாயுதம் மகனைப் பின் தொடர்ந்து வந்தார். இருவரும் வேலாயுதத்தின் அறைக்குள் நுழைந்து கொள்ள மேகலா அதைப் பார்த்து விட்டு மகளிடம் அங்கலாய்த்தாள். “வரவர உங்கப்பாவுக்கும் தாத்தாவுக்கும் பைத்தியம் பிடிச்சு அது அதிகமாயிட்டே போற மாதிரி தான் எனக்குத் தோணுது. ஒரு சின்ன ரத்தினக்கல் காணாம போனதுக்கு ரெண்டு பேரும் பண்ற கூத்து தாங்கல. பாரு. இப்ப தான் உங்கப்பா கம்பெனிக்கு கிளம்பினாரு. போனவர் திரும்ப மனசு மாறி உள்ளே வந்து உன் தாத்தா ரூம்ல உட்கார்ந்து திரும்பவும் டிஸ்கஸ் பண்றாங்க.”

தர்ஷினி சொன்னாள். “தாத்தா. பக்கத்து வீட்டுக்கு நாகராஜ் அங்கிள் குடிவந்த பிறகே பைத்தியம் மாதிரி ஆயிட்டார். அப்பா அந்த ரத்தினக்கல் காணாம போனபிறகு அந்த மாதிரியாயிட்டார். அந்த ரத்தினக்கல் என்ன விலை இருக்கும்மா

அதோட சைஸ் பாத்தா அதிக பட்சமாவே பத்தாயிரத்துக்குள்ளே தான் இருக்கும். உங்கப்பாக்கு அதுல ஏதோ செண்டிமெண்ட். அதனால தான் அது காணாம போனது அவருக்குத் தாங்கலஎன்றாள் மேகலா.

இவர்கள் இப்படிப் பேசிக் கொண்டிருக்கையில் வேலாயுதம் திரும்பவும் மகனிடம் கேட்டுக் கொண்டிருந்தார். ”அன்னைக்கு என்ன ஆயிருக்கும்னு நீ நினைக்கிறாய்டா

கல்யாண் அன்று நடந்ததாக மணி சொன்னதை நினைவுபடுத்திப் பார்த்தான். உங்க பக்கத்து வீட்டுக் கேட்டை நெருங்கினது தான் தெரியும். பின்னே எதுவும் எங்களுக்கு ஞாபகம் இல்லை.... எங்களுக்கு ஞாபகம் வந்தப்பவும் நாங்க அந்த வீட்டு கேட் முன்னாடியே நின்னுட்டிருந்தோம். மணி மூனே முக்கால் ஆகி இருந்துச்சு... எங்க யாருக்குமே என்ன நடந்துச்சுன்னு தெரியல. ஒரே நேரத்துல அத்தனை பேருக்கும் நினைவு போயிடுச்சு. ஒரே நேரத்துல அத்தனை பேருக்கும் நினைவு வந்துச்சு. இடைப்பட்ட ஒன்னே முக்கால் நேரமும் என்ன நடந்துச்சுன்னு யாருக்கும் தெரியல. எவ்வளவோ யோசிச்சும் நினைவுக்கு வரல...”

ஒன்னே முக்கால் மணி நேரமும் அந்த கேட் முன்னாடியே நின்னுகிட்டா இருந்தீங்க?”

அது தான் தெரியலை.... ஆனா நாங்க எங்க வேலையை ஆரம்பிச்சு முடிச்சிருந்தா எப்படி களைப்பை உணர்வோமோ அந்தக் களைப்பு எங்க எல்லாருக்குமே இருந்துச்சு. எங்க இதயத்துடிப்பு கூட கூடுதலா இருந்துச்சு....”

இப்போது எதிர்வீட்டுக்காரர் சொல்கிறார்உங்கள் வீட்டுக்குள்ளிருந்து ஆட்கள் வெளியே வந்து பக்கத்து வீட்டுக்குள் போனார்கள் என்று”. அப்படியானால் அவர்கள் இந்த வீட்டிலிருந்து அந்த நாகரத்தினக்கல்லைத் திருடி பக்கத்து வீட்டுக்குப் போய் கொடுத்திருக்கிறார்களா? நாகராஜ் அவர்களை வசியம் செய்து அப்படி செய்ய வைத்திருக்கிறானா?... அவர்களை மட்டுமல்ல. வேலாயுதம், கல்யாண், வீட்டாள்கள் எல்லோரையும் என்னவோ செய்து உறங்கச் செய்திருக்கிறான்.... நினைக்க நினைக்க கால்களின் கீழே இருக்கும் நிலம் வெடித்துப் படுகுழியில் சரிந்து கொண்டிருப்பது போன்ற உணர்வு கல்யாணுக்கு ஏற்பட்டது. என்ன நடந்திருக்கலாம் என்பதை அவன் வேலாயுதத்திடம் சொல்ல அவர் தலையில் இடி விழுந்தது போல் உணர்ந்து பலவீனமான குரலில் கேட்டார். “என்னடா சொல்றே?”


ரேந்திரன் ரா தலைவரிடம் தன் கோயமுத்தூர் அனுபவங்களை விரிவாகச் சொன்னான். ரா தலைவர் நாகராஜ் பற்றி அவன் சொன்னதை எல்லாம் கேட்டு பிரமித்துப் போனார். அவர் அவனிடம் கேட்டார். “அவர் அங்கிருந்து கொண்டே இங்கே இந்த அற்புதங்களை நிகழ்த்த முடிந்தது அந்த விசேஷ நாகரத்தினத்தினால் தான் என்று நினைக்கிறாயா?”

“அப்படித் தான் தோன்றுகிறது. ஏற்கெனவே அவருக்கிருந்த சக்திகள் மற்ற நாகரத்தினங்களால் அவருக்குக் கிடைத்திருக்கலாம் என்றாலும் இந்த விசேஷ நாகரத்தினம் கடவுளைப் போன்ற சக்திகளைக் கொடுக்கும் என்று அந்த பாம்பாட்டி சொன்னான். அதை நிரூபிக்கிற மாதிரி தான் நடந்திருக்கிறது”

”அவர் அந்த வேலையைச் செய்யாமல் இருந்திருந்தால் ஜனார்தன் த்ரிவேதி இன்று இந்தியா முழுவதும் பேசும் நபராக உன்னைப் பிரபலமடையச் செய்திருப்பார். பாராளுமன்றத்தில் கூட நீ பேசப்பட்டிருப்பாய். ராவின் பெயரும் பெரிய விமர்சனத்திற்குள்ளாகி இருக்கும். அதனால் நீ மட்டுமல்ல, ராவும் அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறது..... அவர் சொல்வதைப் பார்த்தால் அஜீம் அகமது இப்போது இந்தியாவில் இருக்கிறான்”

“ஆமாம் சார். மதன்லால், சஞ்சய் ஷர்மா இருவரையும் கண்டுபிடித்திருக்கும் அறிவுகூர்மையில் அவன் தான் தெரிகிறான். அதை அவன் வெளிநாட்டிலிருந்தே கூடச் செய்திருக்கலாம் என்றாலும், அவன் இங்கே வந்திருக்க வேண்டிய அவசியமில்லை என்றாலும் இங்கே வந்து சேர்ந்திருக்கிறான். அது என் பாக்கியம்”

அதைச் சொல்லும் போது அவன் கண்கள் மின்னின. அஜீம் அகமதின் வருகை அவனுக்குள் பெரியதொரு எழுச்சியை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை அவரால் உணர முடிந்தது. தந்தையின் மரணக்கணக்கைத் தீர்க்கும் பெரியதொரு வாய்ப்பு அவனுக்குக் கிடைத்திருக்கிறது என்று அவன் நினைக்கிறான் என்பது புரிந்தது.

ரா தலைவர் சொன்னார். “அவன் சாதாரணமானவன் அல்ல. அவனிடம் நீ மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.”

நரேந்திரன் அமைதியாகச் சொன்னான். “தெரியும் சார். அதனால் தான் அவன் இங்கே வந்திருப்பது தெரிந்தும் இது போன்ற சந்தர்ப்பங்களில் நாம் பயன்படுத்தும் நம் வழக்கமான வழிமுறைகள் எதையும் முடுக்கி விடவில்லை. ஜனார்தன் த்ரிவேதியைக் கூடக் கண்காணிப்பதை நிறுத்தி விட்டேன். இங்கே அபாயம் எதுவுமில்லை என்பதை அவன் உணரட்டும் என்று எல்லாவற்றையும் விலக்கி வைத்திருக்கிறேன். அவனுக்கு மிக நெருக்கமான ஆட்களின் நடமாட்டம் டெல்லியில் அதிகரித்திருக்கிறது. அதைக் கவனித்த பிறகும் அந்த ஆட்களைக் கூடப் பின் தொடர வேண்டாம் என்று சொல்லி இருக்கிறேன்.  இந்த முறை அவனைத் தப்பவிடக்கூடாது என்பதில் நான் மிகவும் கவனமாக இருக்கிறேன்.”

ரா தலைவர் மெல்லக் கேட்டார். “நீ நாகராஜை உதவி கேட்டிருந்தால் அஜீம் அகமதைப் பிடித்துக் கொடுக்க அவர் உனக்கு உதவியிருக்க மாட்டாரா?”

நரேந்திரன் சொன்னான். “அது நான் வாங்கும் சம்பளத்திற்கு அவரை வேலை பார்க்கச் சொல்வது போல ஆகி விடுமல்லவா சார்”

ரா தலைவர் புன்னகைத்தார். அவன் சொன்ன விதம் அவரைக் கவர்ந்தது. நரேந்திரன் சொன்னான். ”அவர்கள் அந்த ஃபேக்டரியைக் கண்காணிக்க ஆரம்பித்து விட்ட பிறகு நான் என்ன செய்தாலும், செய்யாமல் விட்டாலும் எனக்குப் பிரச்சினை தான் என்ற நிலை இருந்தது. என் வாழ்க்கை லட்சியமே நிறைவேறாமல் போய் விடும், வேலை போய் விடும், எதிரிகள் சுலபமாக என்னை அழித்து விடுவார்கள் என்ற நிலைமை இருந்த போது வேறு வழி தெரியாமல், அவர் உதவுவாரா இல்லையா என்ற நிச்சயம் கூட இல்லாமல், அவரிடம் உதவி கேட்டேன். அதில் நியாயம் இருந்தது. இனி நான் பார்த்துக் கொள்வேன் சார்.”

ரா தலைவர் சொன்னார். “நீ சொல்வதும் சரி தான். இனி இது நம் வேலை. அஜீம் அகமது பிடிபடுவது நமக்கு முக்கியம். உன் அப்பாவைக் கொன்றது மூலம் ’ரா’வுக்கே அவன் சவால் விட்டிருக்கிறான்.  அந்த சவாலை நாம் ஏற்றுக் கொண்டிருக்கிறோம். எத்தனை ஆட்கள் உனக்கு வேண்டுமானாலும் சொல். என் தரப்பிலிருந்து என்ன உதவி வேண்டுமானாலும் சொல். அவன் இந்த முறை இங்கேயிருந்து தப்பி விடக்கூடாது என்பது உன் இலக்கு மட்டுமல்ல. ரா வின் இலக்கும் தான் அது.”

(தொடரும்)
என்.கணேசன்  

பரபரப்பான இந்த நாவலை வாங்கிப்படிக்க என்.கணேசன் புக்ஸை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.





Sunday, October 9, 2022

தினத்தந்தியில் “விதியை மாற்றும் ஆழ்மன சக்திகள்” நூல் விமர்சனம்!

 இன்று (9 அக்டோபர் 2022) தினத்தந்தியில் “விதியை மாற்றும் ஆழ்மன சக்திகள்” நூலுக்கு வந்துள்ள விமர்சனம்.




Thursday, October 6, 2022

சாணக்கியன் 25

 

விஷ்ணுகுப்தர் மறுநாள் அதிகாலையிலேயே தன் சந்தியா வந்தனத்தை வேகமாய் முடித்து விட்டு தட்சசீலத்தில் ஒரு வணிகரைச் சந்தித்துப் பேசி விட்டு வந்தார்.  அந்த வணிகர் அடிக்கடி பாரசீகம் வரை சென்று பொருட்களை விற்று, அங்குள்ள பொருட்களை வாங்கிக் கொண்டு வந்து இங்கு விற்பவர். போகும் போதும், வரும் போதும் இடையில் உள்ள பிரதேசங்களிலும் வாணிபத்தைச் செய்பவர். அதனால் அங்கே இருக்கும் நிலவரங்களை உற்றுக் கவனிக்கும் வாய்ப்பிருப்பவர். அவரிடம் பாரசீகம் வரை உள்ள நிலவரங்களை விஷ்ணுகுப்தர் எப்போதும் கேட்டறிந்து கொள்வது வழக்கம். சில சமயங்களில் எதையாவது குறிப்பிட்டுச் சொல்லி அதைப் பற்றிய விவரங்களைக் கூர்மையாகக் கண்டறிந்து வரும்படியும் விஷ்ணுகுப்தர் அவரிடம் சொல்வார். அந்த வணிகரின் மகன் கல்வி கற்பதில் மிகவும் பின் தங்கி இருந்தவன். அவனைத் தன் தனிப்பட்ட அக்கறையால் முன்னேற வைத்தவர் விஷ்ணுகுப்தர் என்பதால் விஷ்ணுகுப்தர் மீது அந்த வணிகர் நன்றியுணர்வு கலந்த மிகுந்த மரியாதை வைத்திருந்தபடியால் அவர் கூறும்படியே அந்தக் குறிப்பிட்ட விவரங்களை அந்த வணிகர் கண்டறிந்து வந்து சொல்வது வழக்கம். அவரிடம் சென்று பேசிய போது அவர் இரண்டு நாட்களில் பாரசீகத்திற்குக் கிளம்புவதாக விஷ்ணுகுப்தரிடம் சொன்னார். அவரிடம் தனக்கு வேண்டிய விவரங்களைச் சொல்லி அவை குறித்து கண்டறிந்து வந்து சொல்லும்படி கோரிக்கை விடுத்து விட்டு வந்த விஷ்ணுகுப்தர் அடுத்தபடியாக சந்திரகுப்தன் உள்ளிட்ட தன் முக்கிய மாணவர்களை அழைத்துக் கொண்டு சின்ஹரனைக் காணச் சென்றார்.

 

சின்ஹரன் விஷ்ணுகுப்தரின் மாணவர்கள் முகத்தில் தெரிந்த கவலைகளின் ரேகைகளைப் பார்த்தான். அவர்கள் அளவு எந்த உணர்ச்சியையும் எப்போதும் தன் முகத்தில் காட்டாத விஷ்ணுகுப்தரிடம் சின்ஹரன் கேட்டான். “என்ன ஆயிற்று ஆச்சாரியரே. காந்தார அரசருக்கு ஏதாவது?...”

 

அவனைப் பொருத்த வரை காந்தார அரசரின் மரணமும், ஆம்பி குமாரன் அரியணை ஏறுவதையும் தவிரத் தற்போதைக்குக்  கவலைக்குரிய தகவல் வேறெதுவும் இல்லை.

 

விஷ்ணுகுப்தர் சொன்னார். “காந்தார அரசர் இன்னும் உடலில் இருந்தும் மகனிடமிருந்தும் விடுதலை பெற்று விடவில்லை சேனாதிபதி. இப்போதைய கவலைக்குரிய தகவல் அலெக்ஸாண்டர் பாரதம் நோக்கி கிளம்பியிருக்கிறான். அவனை எதிர்ப்பதற்குப் பதிலாக ஆம்பி குமாரன் அவனுக்கு நட்புக்கரம் நீட்ட முடிவெடுத்திருக்கிறான் என்பது தான்...”

 

சின்ஹரன் திகைப்புடன் கேட்டான். “ஆம்பி குமாரனுக்குப் பைத்தியம் பிடித்து விட்டதா ஆச்சாரியரே?”

 

“அவனுக்குப் பைத்தியம் எப்போதோ பிடித்து விட்டது. இப்போது அது முற்றி விட்டது. அவ்வளவு தான்.... நீ உன் தாய்நாட்டுக்குக் கடமையாற்ற வேண்டிய நேரம் நெருங்கி விட்டது சேனாதிபதி. நீ மட்டுமல்ல நாம் அனைவரும் வேகமாக இயங்க வேண்டிய காலம் வந்து விட்டது.”

 

“நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் ஆச்சாரியரே” என்று ஆவலுடன் சின்ஹரன் கேட்டான். தன் தவறுக்கு ஏதாவது வகையில் விரைவிலேயே பிராயச்சித்தம் செய்ய முடிந்தால் அவன் மனப்பாரம் சிறிதாவது குறையும்.

 

“உடனடியாக நீ செய்ய வேண்டியது நான் தொலைதூரம் வேகமாகச் சென்று வருவதற்கு ஒரு நல்ல குதிரையை நீ தேர்ந்தெடுத்துத் தர வேண்டும். அடுத்தபடியாக, நான் திரும்பி வருவதற்குள் நீ இவர்களுக்கு எல்லாப் போர்ப்பயிற்சிகளும் தந்து தயார்நிலையில் இருத்த வேண்டும்...”

 

விஷ்ணுகுப்தர் தன் நீண்ட பயணத்தைத் துவங்குவதற்கு முன் சந்திரகுப்தனைத் தனியாக அழைத்துச் சொன்னார். “சந்திரகுப்தா. உன் வாழ்வில் முக்கியமானதொரு கட்டம் நெருங்க ஆரம்பித்திருக்கிறது. நீ முழுக் கவனத்துடன் உன் திறமைகளைக் கூர்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். அதிர்ஷ்டம் என்பது வாய்ப்புகள் வரும் போது ஒருவன் தயாராக இருப்பதே. சந்தர்ப்ப வசத்தால் நாம் பெறும் உயர்வுகள் இன்னொரு சந்தர்ப்ப வசத்தால் நம்மிடமிருந்து போயும் விடலாம். ஆனால் ஒருவன் தகுதியாலும், உழைப்பாலும் சம்பாதித்துப் பெறுவதைத் தக்க வைத்துக் கொள்ளும் சாமர்த்தியத்தையும் பெற்று விடுகிறான். அதனால் இனி நீ கற்க வேண்டியதையும் விரைவில் கற்றுக் கொள். சின்ஹரன் மிகவும் திறமையானவன். அனுபவம் உள்ளவன். அவன் கற்றுத் தரும் சூட்சுமங்களை முழுவதுமாகக் கற்றுக் கொண்டு விடு. இனி நம்மிடம் அதிக காலம் இல்லை....”    

 

சந்திரகுப்தன் எப்போதும் போல அவர் சொல்வதை எல்லாம் மிகக் கவனமாகக் கேட்டுக் கொண்டான். அவனைப் பொருத்த வரை அவர் சொல்லும் எதுவும் அலட்சியப்படத் தகுந்தது அல்ல. பின் சரியென்று தலையசைத்தான்.

 

அவர் மெல்லக் கேட்டார். “பாடலிபுத்திரத்தில் உன் தாயாரிடம் நான் எதாவது சொல்ல வேண்டுமா?”

 

தாயாரின் நினைவு சந்திரகுப்தனை மென்மையாக்கியது. அவளை விட்டு வந்து காலம் நிறைய ஆகி விட்டது. அவனுக்குத் தாயிடம் எத்தனையோ சொல்ல இருந்தன. சிறுவனாக அவளைப் பிரிந்த அவன் இளைஞனாக உருமாறி இருக்கும் இந்த இடைப்பட்ட காலத்தில் எத்தனையோ சம்பவங்களை அவளிடம் சொல்ல அவன் மனதில் சேகரித்து வைத்திருக்கிறான். ஆனால் அவை ஆச்சாரியரிடம் சொல்லி அனுப்பக் கூடியவை  அல்ல....   ”அவருடைய ஆசியாலும் பிரார்த்தனையாலும் நான் மிகவும் நலமாக இருப்பதாகச் சொல்லுங்கள் ஆச்சாரியரே....”

 

ந்திரதத் விஷ்ணுகுப்தரின் வருகையைச் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை. வந்திருப்பது தன் நண்பன் தானா, இது கனவு ஒன்றும் அல்லவே என்று சந்தேகப்பட்டு சந்தேகம் தெளிந்த பின் அவர் ஓடி வந்து நண்பனை அரவணைத்துக் கொண்டார். நண்பனை உபசரித்து அமர வைத்த பின் அவர் கேட்டார். ”என்ன விஷ்ணு திடீரென்று....?”

 

விஷ்ணு குப்தர் ஆம்பி குமாரனின் உத்தேசத்தைச் சொன்ன போது அவரும் திகைத்தார். ஆனால் அனைவரும் ஒன்று பட்டு அலெக்சாண்டர் ஆம்பி குமாரன் கூட்டணியை எதிர்த்தால் ஒழிய யாரும் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியாது என்று விஷ்ணுகுப்தர் சொன்ன போது அவர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

 

“கேகய நாட்டின் படை வலிமையை நீ சரியாகப் தெரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கிறேன் நண்பா. ஆம்பி குமாரனையும், அலெக்ஸாண்டரையும் எதிர் கொள்ளும் வலிமையை நாங்கள் நிச்சயமாகப் பெற்றிருக்கிறோம்...”

 

மனதில் எழுந்த சலிப்பை வெளிப்படுத்திக் கொள்ளாமல் விஷ்ணுகுப்தர் பொறுமையாக சந்திரகுப்தனிடம் சொன்னபடியே அலெக்ஸாண்டரின் அனைத்து வலிமைகளையும் நண்பனிடன் சொன்னார்.  கேட்டுக் கொண்ட இந்திரதத் அலெக்ஸாண்டரின் விசேஷத் தன்மைகளை எண்ணி வியந்தாலும் தங்களால் அவர்களை வெல்ல முடியும் என்ற எண்ணத்தை மாற்றிக் கொள்ள முடியாதவராக இருந்தார்.விஷ்ணு நான் படை வலிமையை மட்டும் பேசவில்லை. நீ சொன்னபடி அலெக்ஸாண்டர் வலிமையானவனாகவே இருந்தாலும் கூட நாங்கள் எங்களுக்குத் தெரியாத ஏதோ ஒரு பிரதேசத்துக்குச் சென்று அவனுடன் போரிடப்போவதில்லை. அவன் தான் இங்கே வரப் போகிறான். இங்கே ஒவ்வொரு இடமும் நாங்கள் நன்கறிந்தவை. அவனுக்குத் தான் இந்த இடங்கள் புதியவை. இங்குள்ள மலைப்பகுதிகளும், நதியும், மற்ற பகுதிகளும்  நாங்கள் தினமும் வாழ்ந்தும், பயன்படுத்தியும் வரும் இடங்கள்.  போர்களில் இரு பக்கங்களின் படை வலிமை மட்டும் வெற்றியைத் தீர்மானிப்பதில்லை. அந்த இடம், சீதோஷ்ணம் போன்றவை கூட அவற்றைத் தீர்மானிப்பவையாகவே இருக்கின்றன. இதெல்லாம் நீ அறியாதவை அல்ல... எங்கள் பூமியில் வந்து போரிடப்போகும் அவர்களை வெல்லும் வலிமை எங்களுக்கு இருக்கிறது என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை....”

 

விஷ்ணுகுப்தர் பொறுமையாக அத்தனையும் கேட்டுக் கொண்ட பின் சொன்னார். “நானும் படை வலிமையை மட்டும் பேசவில்லை. அலெக்ஸாண்டரின் போர் யுக்தியையும், தந்திரத்தையும் தான் உன்னிடம் எச்சரிக்கிறேன். போரிடப் போகும் இடங்களைப் பற்றி முழுவதுமாகவும் தெளிவாகவும் அறிந்து கொள்ளாமல் அலெக்ஸாண்டர் போருக்குப் போவதில்லை.  என் கணிப்பு சரியாக இருக்குமானால் இங்கே வருவதற்கு முன்பும் அதை மனதில் தெளிவுபடுத்திக் கொண்ட பிறகு தான் வருவான். போரில் உங்கள் அனுபவத்தை விட அவனுடைய அனுபவம் அதிகம் இந்திரதத். அவன் அறிவின் விசாலம் உங்களை வெல்லும் வழியை அவனுக்குக் காண்பிக்காமல் இருக்க வழியில்லை. ஏனென்றால் உங்களைப் போல் எத்தனையோ எதிரிகளைப் பார்த்து, வென்று விட்டு வந்து கொண்டிருப்பவன் அவன். அவன் இது வரை தோல்வியே கண்டறியாதவன் என்று சொல்கிறார்கள். ஆம்பி குமாரனின் உதவியும் அவனுக்கு இருக்குமானால் அவனுக்கு கேகய நாடு எளிமையாகவே இருக்கும்”

 

இந்திரதத் தன் நண்பனை ஆழ்ந்த ஆலோசனையுடன் பார்த்தார்.  விஷ்ணுகுப்தரின் அறிவு ஒருவனை இந்த உயர்விற்கு நினைக்கிறது என்றால் அந்த மனிதன் ஆபத்தை விளைவிக்க முடிந்தவனாகவே இருக்க வேண்டும். ஏனென்றால் தெளிவாகத் தெரிந்து கொள்ளாமல் எதைப் பற்றியும் அனுமானத்தில் பேசும் ஆள் விஷ்ணுகுப்தர் அல்ல. அனாவசியமான வார்த்தைகள் அவரிடம் கிடையவும் கிடையாது.... அலெக்ஸாண்டரின் அறிவுக்கூர்மையை விட விஷ்ணுகுப்தரின் அறிவுக்கூர்மைக்கு அதிக முக்கியத்துவம் தந்த இந்திரதத் உண்மையாகவே ஆபத்தை மெள்ள உணர ஆரம்பித்தார்.

 

(தொடரும்)

என்.கணேசன்


இந்த நாவலையும், அச்சில் உள்ள என் மற்ற நூல்களையும் அமேசானில் வாங்க லிங்க் -

(அல்லது)

என்.கணேசன் புக்ஸுக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் தபாலில் பெற்றுக் கொள்ளலாம். 

நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பேபோன் பேமற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம்(ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)

நூல்களின் குறிப்பு மற்றும் விலையை அறிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும் - என்.கணேசன் நூல்கள்


அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.


நூல்களை வாங்க விரும்பும் வெளிநாட்டு வாசகர்கள் தங்கள் விவரங்களை  nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பினால் தபால் செலவு அறிந்து சொல்லப்படும்.

Monday, October 3, 2022

யாரோ ஒருவன்? 105


ஜீம் அகமதும், ஜனார்தன் த்ரிவேதியும் நகர்ந்தவுடனேயே காளிங்க சுவாமி வேகமாக ஜீப்பில் கிளம்பி விட்டார். அவர் ஜீப் போவதையே பார்த்துக் கொண்டு நின்ற அஜீம் அகமது ஜனார்தன் த்ரிவேதியிடம் சொன்னான். “சே... இவரிடம் ஒன்றைக் கேட்காமல் போய் விட்டேன்?”

ஜனார்தன் த்ரிவேதி கேட்டார். “என்னது?”

அஜீம் அகமது சொன்னான். “நாகராஜ் மகராஜ் ஏன் மகேந்திரன் மகனுக்கு உதவி செஞ்சான்னு தெரியலயே”

ஜனார்தன் த்ரிவேதி சொன்னார். “ரெண்டு பேரும் ஒரே ஊர்ல இருந்ததால சந்திச்சிருக்கலாம். பழகியிருக்கலாம். நரேந்திரன் அந்த பழக்கத்தினால உதவி கேட்டிருக்கலாம். நாகராஜ் செஞ்சிருக்கலாம்”

அந்த அனுமானம் சரியாக இருக்கும் என்று அஜீம் அகமது தலையசைத்தான்.  

ஜனார்தன் த்ரிவேதிக்குத் திடீரென்று ஒரு சந்தேகம் எழுந்தது. “நாகராஜ் மகராஜோ ரொம்ப சக்தி படைச்சவனா இருக்கிறான். மதன்லால், சஞ்சய் விஷயத்துல அவன் நரேந்திரனுக்கு உதவின மாதிரி மத்த விஷயத்துக்கும் உதவிகிட்டே போனா நமக்கு ஆபத்து தானே,. அந்த ரத்தினத்தை எடுத்துட்டு வர்றதுக்குள்ளே எத்தனையோ நடந்துட வாய்ப்பிருக்கே. அது நமக்கு ஆபத்தல்லவா?” என்று அவர் கவலையோடு கேட்டார்.

அஜீம் அகமது நரேந்திரன் பற்றி அனைத்து தகவல்களும் அறிந்து அவன் எப்படி யோசிப்பான் என்கிற அளவு வரை அவனைப் புரிந்து கொண்டிருந்ததால் புன்னகையுடன் சொன்னான். “அதைப் பத்தி கவலை வேண்டாம் த்ரிவேதிஜி. மகேந்திரன் மகனுக்கு தன்னைப் பத்தி தெரிஞ்சதை விட அவனைப் பத்தி நான் அதிகமா தெரிஞ்சிருக்கேன்.  அவனுக்கு சுயமரியாதை, தன்மானம், ’நான்’கிற கர்வம் எல்லாம் அதிகம். இந்த உதவியை வேற வழியில்லாம ஏற்றுகிட்டிருப்பான். இதுலயே அவனோட ஈகோ நிறைய பாதிச்சிருக்கும். மற்றபடி அடுத்தவங்க உதவியைத் தொடர்ந்து வாங்கி தன் வேலைகளை சாதிச்சுக்கறத அவன் அவமானமாய் நினைப்பான். தன்னோட திறமையாலயும், சாமர்த்தியத்தாலயும் தான் எல்லாத்தையும் செய்யணும்னு நினைக்கிறவன்கிறதால நாகராஜ் மகராஜ் அவனுக்கு உதவ முன்வந்தால் கூட வேண்டாம்னு சொல்லிடுவான்...”  

ஜனார்தன் த்ரிவேதிக்கு நரேந்திரன் அப்படி நினைத்தால் அது வடிகட்டிய முட்டாள்தனம் என்று தோன்றியது.

அவர் முகபாவனை மூலம் அதைப் படிக்க முடிந்த அஜீம் அகமது உள்ளூரப் புன்னகைத்தான். ’சுலபமான வழியில் வேலையாக வேண்டும், அது எப்படியானாலும் சரி’ என்ற கொள்கையோடு வாழ்ந்து வரும் இந்த அரசியல்வாதிக்கு மகேந்திரன் மகனின் சிந்தனைகள், போக்கு எல்லாம் முட்டாள்தனமாகத் தோன்றுவதில் ஆச்சரியமில்லை…

அஜீம் அகமதுவிடம் ஜனார்தன் த்ரிவேதி சொன்னார். “நாகராஜ் மகராஜ் கிட்ட இருந்து ரத்தினக்கல்லை எடுத்துட்டு வரப் போகிற ஆளுக்கு எவ்வளவு பணம் தர்றதாய் இருந்தாலும் அதை நான் ஏத்துக்கறேன் அஜீம்ஜீ. அவன் காரியத்தைக் கச்சிதமாய் முடிக்கறவனா இருந்தால் போதும்...”

“பீம்சிங் இது வரைக்கும் எடுத்துகிட்ட எந்த வேலைலயும் தோல்வியை சந்திச்சதில்லை”


வேலாயுதமும் கல்யாணும் சிவப்புப் பட்டுத்துணியில் வைத்திருந்த நாகரத்தினக்கல்லை மறுபடி மறுபடி தேடிச் சலித்தார்கள். ஒவ்வொரு முறை முயன்று கிடைக்காத போதும் அவர்கள் முகத்தில் பீதி கூடிக் கொண்டே போனது. தர்ஷினியைக் கூப்பிட்டு அவள் எங்காவது பார்த்தாளா அல்லது எடுத்தாளா என்று கேட்டுப் பார்த்தார்கள். இல்லை என்ற அவள் அவர்கள் இருவர் முகத்தில் தெரிந்த பீதியைப் பார்த்து விட்டு அறிவுரை சொன்னாள். “அந்த ரத்தினம் காணோம்னா விடுங்க. இன்னொன்னு வாங்கிக்கலாம். அதுக்குப் போய் சொத்தையே தொலைச்ச மாதிரி அப்பாவும். பிள்ளையும் ஏன் இப்படி டென்ஷன் ஆறீங்க”

அப்படி அது வாங்க முடிந்த ரத்தினம் அல்ல என்று சொல்ல முடியாமல் அவர்கள் இருவரும் தவித்தார்கள். அவர்கள் இருவரும் தனியாக இருக்கையில் வேலாயுதம் மகனிடம் சொன்னார். “உன்னோட இத்தனை பிரச்னைக்கும் காரணம் அது காணாமல் போனது தான். அது இருந்த வரைக்கும் நம்ம கிட்ட இருந்த அந்த அதிர்ஷ்டம் இப்ப நம்ம கிட்ட இருந்து போயிட்ட பிறகு தான் ஒவ்வொரு பிரச்சனையா வர ஆரம்பிச்சிருக்குன்னு நினைக்கிறேன்...”

எப்படி அது காணாமல் போயிருக்கும் என்பதை இருவராலும் யூகிக்க முடியவில்லை.  வேலாயுதம் கேட்டார். “அன்னைக்கு நாம ரெண்டு பேரும் சேர்ந்து தானே உன் பீரோல இருந்து எடுத்துப் பார்த்தோம். பார்த்துட்டு உள்ளே வெச்சியா? நீ வெச்ச ஞாபகம் எனக்கு இருக்கு. இருந்தாலும் நல்லா யோசிச்சுப் பார். ஒருவேளை நானும் சரியா கவனிக்காம நீயும் எதோ யோசனையா வெளியே எங்கயாவது வெச்சு, வேலைக்காரங்க யாராவது எடுத்திருக்க வாய்ப்பு இருக்கான்னு யோசி”

“இல்லைப்பா. நான் மறந்து கூட அதை வெளிய வெச்சிருக்க மாட்டேன். அப்படியே வெச்சிருந்தாலும் வேலைக்காரி திருடற ரகமில்லை. எத்தனையோ தடவை மேகலா நகைகளைக் கழட்டி அங்கங்கே வெச்சி மறந்திருக்கா. ஒரு தடவை கூட அந்த நகைகள்  காணாம போனதில்லை. அப்படி இருக்கறப்ப மதிப்பு தெரியாத இதை அவ எடுத்திருக்க வழியேயில்லை.”

“அப்படின்னா அதோட மதிப்பு தெரிஞ்ச யாரோ தான் எடுத்திருக்கணும்?” வேலாயுதம் திட்டவட்டமாகச் சொன்னார்.

“யாரு? எப்படி? நாம தான் வீட்லயே இருக்கிறோமே” என்று கல்யாண் பரிதவிப்புடன் கேட்டான்.

வேலாயுதம் சொன்னார். “சில சமயங்கள்ல கொஞ்ச நேரம் கழிச்சு திடீர்னு நமக்கு ஏதாவது நினைவுக்கு வரலாம்...”

கல்யாண் தலையசைத்து விட்டு எழுந்து கம்பெனிக்குக் கிளம்பினான். வெளியே வந்து கார் ஏறப் போன போது எதிர் வீட்டுக்காரர் அவர் வீட்டு வாசலில் தெரிந்தார். அவர் அவனைப் பார்த்தவுடன் கையசைத்து விட்டு புன்னகையோடு தெருவைக் கடந்து வந்தார்.

கல்யாணுக்கு இருக்கும் மனநிலையில் அவனுக்கு யாருடனும் பேசப்பிடிக்கவில்லை. எதிர்வீட்டுக்காரர் அந்தமான் தீவுகளுக்குச் சுற்றுலா போய் விட்டு மூன்று நாட்கள் முன்பு தான் திரும்பி வந்திருந்தார். அவர் திரும்பி வந்த பின் அவரிடம் அவன் பேசியிருக்கவில்லை. அதனால் சம்பிரதாயமாகவாவது ஐந்து நிமிடங்கள் பேச வேண்டிய கட்டாயத்தில் கல்யாண் புன்னகைத்தபடி கேட்டான். “ஹலோ சார். எப்ப வந்தீங்க? அந்தமான் பயணமெல்லாம் எப்படியிருந்துச்சு?’

“ரொம்ப நல்லா இருந்துச்சு. இன்னும் நாலு நாள் அங்கேயே இருந்துடலாமான்னு வீட்ல எல்லாருமே நினைச்சோம். அந்த அளவு பிடிச்சுப் போச்சு. மூனு நாள் முன்னாடி அதிகாலையில் மூனரை மணிக்கு தான் வீடு வந்து சேர்ந்தோம். இங்கே வந்து பாத்தா உங்க வீட்டுல இருந்து நாலஞ்சு ஆளுக வெளியே வந்துட்டிருந்தாங்க”

கல்யாண் அதிர்ந்து போனான். மகன் பின்னாலேயே வெளியே வந்து இந்தப் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த வேலாயுதம் திகைப்புடன் கேட்டார். “எங்க வீட்டுல இருந்தா? யாரது?”  

“தெரியல. ஆரம்பத்துல நான் அவனுகள திருடங்கன்னு நினைச்சுட்டேன். ஆனா அவனுக எங்கள பாத்த பிறகும் ஓடப்பார்க்கல. சொல்லப்போனா எங்கள கண்டுக்கவே இல்லை. அமைதியா உங்க வீட்டுல்ல இருந்து வெளியே வந்து பக்கத்து வீட்டுக்குப் போறத பார்த்தேன். ஒருவேளை நீங்களும், பக்கத்து வீட்டுக்காரரும் சேர்ந்து எதாவது வேலையை அவனுக கிட்டே கொடுத்திருக்கீங்களோன்னு தோணுச்சு. சரின்னு நாங்க வீட்டுக்குள்ளே போயிட்டோம். கால் மணி நேரம் கழிச்சு ஜன்னல் வழியா பார்க்கறப்ப அவங்க ஏதோ மாருதி வேன் ஏறிப் போறது தெரிஞ்சுது. அவங்க உங்களுக்குத் தெரிஞ்ச ஆளுக தானே.. ”

கல்யாணும் வேலாயுதமும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். எதிர் வீட்டுக்காரர் சொல்கிற நாள் நேரம் எல்லாம் வைத்து யோசிக்கையில் அந்த ஆட்கள் அவர்கள் நாகராஜ் வீட்டிலிருந்து நாகரத்தினத்தைத் திருட ஏற்பாடு செய்திருந்த மணியும் அவனது ஆட்களும் என்பது புரிந்தது. அதனால் உள்ளுக்குள் ஏற்பட்ட பூகம்பத்தை மறைத்து அவர்கள் இருவரும் புன்னகையுடன் “ஆமாமா” என்றார்கள்.


“நினைச்சேன். ஆனா நீங்களும் யாரும் வெளியே தெரியலை. அந்தப் பக்கத்து வீட்டுக்காரரும் தெரியலை. அதனால தான் கொஞ்சம் சந்தேகமும் வந்துச்சு” என்று எதிர்வீட்டுக்காரர் சொன்னார்.

அடுத்த இரண்டு மூன்று நிமிடங்கள் எதிர்வீட்டுக்காரர் பேசியதென்னவென்றே அவர்கள் மனதில் பதியவில்லை. அவர்கள் புன்னகையும் தலையசைப்பும் தானாக நடந்தன. அவர் போன பிறகு வேலாயுதம் குரல் நடுங்கக் கேட்டார். “அன்னைக்கு என்னடா நடந்துச்சு?”

(தொடரும்)
என்.கணேசன்