ஏவல் சக்தியுடன் தொடர்புடையவனாய், ஒரு நிஜ
யோகியைத் தேடும் இளைஞனை பாண்டியன் ஏற்கெனவே அறிந்திருக்கிறார் என்பது அவரும், சுகுமாரனும்
அலைபேசியில் பேசிக் கொண்டதன் மூலம் ஷ்ரவனுக்குத் தெரியும். இப்போது
அவன் கல்பனானந்தாவைக் கேட்ட கேள்வியை அவள் பாண்டியனிடம் அப்படியே தெரிவித்தால் புத்திசாலியான
அவருக்கு உண்மையைத் தெரிந்து கொள்ள நிறைய நேரம் ஆகாது என்பதையும் ஷ்ரவன் உணர்ந்தான். ஏவல்சக்தி
ஓநாயைத் தெரிந்து வைத்திருப்பவன், இளைஞன், நிஜமான யோகியைப் பார்த்திருக்கிறீர்களா என்று அவன் கேட்ட
கேள்வி இந்த மூன்றையும் இணைத்துப் பார்த்தாலே போதும், கண்டிப்பாக
பாண்டியனுக்கு அவன் மேல் சந்தேகம் பிறந்து விடும்....
இந்த ஆபத்தை அறிந்திருந்தும் ஷ்ரவன் அவளிடம் அந்தக் கேள்வியைக் கேட்க ஒரே காரணம் அவள் அவர்களுடன் சேர்ந்தவளா இல்லை முக்தானந்தா சொல்வது போல் நல்லவளா என்பதை அறியத் தான். கல்பனானந்தா அந்த நிஜ யோகியை அறிந்திருக்கிறாள் என்பது இப்போது உறுதியாகி விட்டது. ஆனால் பாண்டியனோ, டாக்டர் சுகுமாரனோ அப்படி ஒரு யோகியை அறிந்திருக்கவில்லை என்பதும் அவர்கள் பேசிக் கொண்டதில் இருந்து அவன் அறிவான். அப்படியானால் அவள் அவர்களிடம் அதைச் சொல்லவில்லை என்றாகிறது. ஆனால் அதைச் சொல்லாதவள், அவன் கேட்டதையும் அவர்களிடம் சொல்ல மாட்டாள் என்று எடுத்துக் கொள்ள முடியாது. அவள் பாண்டியனிடம் அவன் கேட்டதைச் சொல்லவும் வாய்ப்பு இருக்கிறது. அப்படிச் சொன்னால் அது அவனுக்கு ஆபத்து என்பதை அறிந்த அவன் அவரிடம் சொல்லக்கூடிய பதிலை ஏற்கெனவே தயாராக வைத்து இருக்கிறான்.
அந்த ஓநாயுடன் தெரிந்த இளைஞன் அந்த ஓநாயிடம் “நிஜமான யோகியை நீ பார்த்திருக்கிறாயா?” என்று கேட்டதைக் காட்சியாகப் பார்த்ததாய் அவன் சொல்லிக் கொள்ளலாம். முழுவதுமாக அவர் நம்பா விட்டாலும், முழுவதுமாக அவரால் நம்ப மறுக்கவும் முடியாது. ஏனென்றால் அவர் அவன் அந்த ஓநாயால் அரை மணி நேரம் மயங்கிக் கிடப்பதை ரகசியக் காமிரா மூலமாகப் பார்த்தவர். அவராகத் தான் அவனைத் தொடர்பு கொண்டு விசாரித்தாரேயொழிய அவனாகச் சென்று அவர்கள் யாரையும் இதுவிஷயமாகத் தொடர்பு கொள்ளவில்லை. பரசுராமனின் மந்திர உபதேசத்தால் விளைந்த மிகப் பெரிய உதவியாக இப்போதும் ஷ்ரவன், ஓநாய் அவன் மீது பாய்ந்து அரை மணி நேரம் நினைவிழந்ததை, நினைத்துக் கொள்கிறான். அது தான் ஒரு தொடர்பை அவர்களுக்குள் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது...
ஆனால் கல்பனானந்தா அவன் கேட்ட கேள்வியை அவரிடம் சென்று சொன்னால் சிறிது சந்தேகம் கண்டிப்பாக அவன் மீது அவருக்கு இருந்துவரும் அபாயம் இருக்கிறது. அதை உணர்ந்திருந்தாலும் அவன் இந்த ஆபத்தான விளையாட்டில் இறங்கியிருக்கிறான். அப்படிக் கேட்டிருக்கா விட்டால், சைத்ராவைப் போலவே கல்பனானந்தாவும், சைத்ரா சொல்லும் நிஜ யோகியைச் சந்தித்திருக்கிறாள் என்ற மிக முக்கியமான தகவல் அவனுக்குத் தெரிய வராமலே போயிருக்கும். அதனால் தான் அன்று ஓநாயும் அவளையே பார்த்தபடி நின்றிருக்கிறது என்று இப்போது அவனுக்குப் புரிகிறது.
அவன் வேலை முடித்து விட்டுக் கிளம்பும் வரை கல்பனானந்தா அவன் கண்ணில் படவில்லை. அறையை நோக்கி அவன் செல்லும் போது கண்ணன் தான் எதிரில் வந்தார். அவனை நட்புடன் பார்த்துப் புன்னகைத்த அவர் சொன்னார். “எங்கள் மேனேஜர் பாண்டியன் உங்களைச் சந்தித்துப் பேச விரும்புகிறார். இன்று சத்சங்கத்தின் சமயத்தில் அங்கே போவதற்குப் பதிலாக மேனேஜரைச் சந்தித்துப் பேச முடியுமா?”
இதயம் படபடத்தாலும் ஷ்ரவன் இயல்பாகச் சொன்னான். “கண்டிப்பாக. அவரை எங்கே சென்று சந்திப்பது?”
கண்ணன் பாண்டியனின் இருப்பிடத்தைச் சுட்டிக் காட்டினார். “அந்தக் கட்டிடம் தான் அவர் தங்கியிருக்குமிடம்.”
“நன்றி. கண்டிப்பாகச் சென்று சந்திக்கிறேன்” என்று ஷ்ரவன் சொன்னவுடன் அவர் பழையபடி நட்புடன் புன்னகைத்து தலையசைத்து விட்டுச் சென்றார்.
அறைக்கு வந்தவுடன் ஷ்ரவன் முக்தானந்தாவிடம் அன்று மாலை நடந்ததை எல்லாம் சொன்னான். கல்பனானந்தா ஒரு நிஜ யோகியைச் சந்தித்து இருக்கிறாள் என்ற தகவலில் வியப்படைந்தார் என்றால், அவனை பாண்டியன் அழைத்திருக்கிறார் என்ற தகவலில் முக்தானந்தா துணுக்குற்றார். அது நல்ல தகவலாக அவருக்குத் தெரியவில்லை. அதை அவர் அவனிடம் வாய்விட்டுத் தெரிவித்தார்.
ஷ்ரவன் புன்னகையுடன் சொன்னான். “இப்போது அவர் என்னை அழைப்பது நேற்றைய தகவலுக்கா, இல்லை இன்று நான் கல்பனானந்தாவிடம் கேட்ட கேள்விக்கும் சேர்த்தா என்பது அங்கே போனால் தெரிந்து விடும். எதுவாக இருந்தாலும் நான் சமாளித்தாக வேண்டும்.”
அவர் அவனைக் கவலையுடன் பார்த்தார். அவன் சொன்னான். “ஒரு மனிதன் தயார்நிலையில் இருந்தால் அவனால் எதையும் சிறப்பாய் சமாளிக்க முடியும் சுவாமிஜி. பல நேரங்களில் அவனைக் கவிழ்ப்பதே அவன் தானிருக்கும் சூழ்நிலையை ஏற்க மறுப்பது தான். இப்படி ஆகியிருந்திருக்கக் கூடாது, ஏனிப்படி ஆகிவிட்டது என்று புலம்பும் மனநிலையில் இருக்கையில் அவன் மூளை ஒழுங்காக வேலை செய்வதில்லை. அவனால் மாற்ற முடியாத அந்தச் சூழ்நிலையை மறுக்காமல் சந்திக்கும் தயார் மனநிலையில் அவன் இருந்தால், மனம் மூளையை ஒழுங்காக வேலை செய்ய அனுமதிக்கும். அவன் அறிவு அவனுக்குக் கண்டிப்பாக ஏதாவது வழியைக் காட்டும்.”
சொல்லி விட்டு அவன் கடிகாரத்தைப் பார்த்தான். மணி ஆறு. 6.15க்கு சத்சங்க சமயத்தில் தான் அவன் பாண்டியனைச் சந்திக்கப் போக வேண்டும். இன்னும் பதினைந்து நிமிடங்கள் இருக்கின்றன. அமைதியாக அமர்ந்து கண்களை மூடி உபதேச மந்திரத்தை ஜபிக்க ஆரம்பித்தான். இப்போது அவனுக்கு உதவிக்கு செய்யவும், உடன் வரவும் முடிந்தது பரசுராமனின் அந்த மந்திரக்கவசம் தான்.
முக்தானந்தா அவனைத் திகைப்புடன் பார்த்தார். படபடப்பு, கவலை இல்லாமல் அவனுடைய மந்திர தியானத்தை அவன் செய்ய ஆரம்பித்தது அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. அவனிடமிருந்து கற்றுக் கொள்ள நிறைய இருக்கின்றது என்று அவருக்குத் தோன்றியது. வழக்கம் போல் அந்த நேரத்தில் அவன் ஆத்மார்த்தமாய் ஒரு மகாசக்தியுடன் ஐக்கியமாவது போல் தோன்றியது. ஆரம்பத்திலிருந்தே அவரை மிகவும் கவர்ந்தது அது தான். சாதாரண சமயங்களில் மட்டுமல்லாமல் ஆபத்தின் விளிம்பில் இருக்கும் போதும் அவனால் அது முடிவது பேராச்சரியம் தான்.
சரியாக ஆறேகாலுக்கு சத்சங்கத்திற்காக மணியடித்த போது கண்களைத் திறந்தவன் மெள்ள எழுந்தான். புன்னகையுடன் அவரிடம் சொன்னான். “நானும் கிளம்புகிறேன் சுவாமிஜி. நான் திரும்பி வந்தால் சந்திப்போம்”
அவன் சொன்னதில் அவர் பதறிப்போனார். “ஏன் அபசகுனம் போல் இப்படிப் பேசுகிறாய்.”
அவர் அக்கறையில் நெகிழ்ந்து போன அவன் அவர் காலைத் தொட்டு வணங்கி எழுந்தான். “இது அபசகுனமாய்ப் பேசுவது அல்ல சுவாமிஜி. எதுவும் ஆகலாம் என்ற புரிதலில் இருப்பது. இது எச்சரிக்கையாக மட்டுமல்லாமல், நம்மை எதற்கும் தயாராகவும், எல்லா சமயங்களில் கவனமாகவும் இருக்க வைக்கும்.”
அவர் அவன் தலையை இரு கைகளாலும் தொட்டு ஆசிர்வதித்து விட்டுத் தன்னையே கேட்டுக் கொண்டார். “துறவி இவனா, நானா?”
அவன் போய் விட்டான். சத்சங்கத்துக்குப் போய் அமர்ந்த போதும் அவர் மனம் அந்தப் பேச்சில் இருக்கவில்லை. அவர் அவனுக்காகப் பிரார்த்திக்க ஆரம்பித்தார்.
பாண்டியன் ஷ்ரவன் வருவதை ஜன்னல் வழியே
பார்த்துக் கொண்டு இருந்தார்.
பொதுவாக ஒருவர் நடந்து வருவதைப் பார்த்தாலே அவர் அந்த மனிதரின் ஒருசில
தன்மைகளைக் கணித்து விடுவார்.
ஷ்ரவனின் நடை சீரான
நடையாக இருந்தது. எதையும்
கணக்குப் போட்டு நிதானமாகச் செய்ய முடிந்தவர்களுடைய நடை அது. அப்படிப்பட்ட
ஒருவன் பிரம்மானந்தாவின் தீவிர பக்தனாக மாறியது ஆச்சரியம் தான்....
ஷ்ரவன் அவர் வாசலுக்கு வந்தவுடன் ஒரு கணம் நின்று தரையைக் கூர்ந்து பார்ப்பது தெரிந்தது. அவரும் அவனையே கூர்ந்து பார்த்தார். அவன் முகத்தில் திகைப்பும், ஆச்சரியமும் கலந்து தெரிந்தன. என்ன பார்க்கிறான்? அவனுக்கு என்ன தெரிகிறது?
(தொடரும்)
என்.கணேசன்