என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, July 3, 2025

சாணக்கியன் 168

 

சாணக்கியரின் முதுகுக்குப் பின்னால் தான் மேல் மாடம் இருந்தாலும் சந்திரகுப்தனால் பார்வையைத் திருப்ப முடியாத அளவு கவர்ந்தது யாராக இருக்கும் என்பதை அவரால் உடனடியாக அனுமானிக்க முடிந்தது. அவர் திரும்பிப் பார்க்க முனையவில்லை.

 

சந்திரகுப்தன், துர்தரா இருவர் பார்வைகளும் பூட்டிக் கொண்டதால் இருவராலும் ஒருவரை ஒருவர் பார்த்து ரசிக்காமல் இருக்க முடியவில்லை. சாணக்கியர் பேச்சை நிறுத்தி விட்டதால் அதற்கு மேலும் பார்வையைத் திருப்பாமல் இருப்பது சரியல்ல என்பதை உணர்ந்து சந்திரகுப்தன் கஷ்டப்பட்டு பார்வையை விடுவித்துக் கொண்டு அவரைப் பார்த்தான். அவளும் சுயநினைவுக்கு வந்தவளாக வேகமாக மேலிருந்து ஓடிவிட்டாள்

 

மன்னிக்க வேண்டும் ஆச்சாரியரேஎன்று குற்றவுணர்வுடன் சந்திரகுப்தன் சொன்னான்.

 

மன்னிக்க ஏதுமில்லை சந்திரகுப்தாஎன்று சொன்ன சாணக்கியர் பேச்சைத் தொடர்ந்தார். அவராக அது பற்றி எதுவும் கேட்கவில்லை. அவனாக எதுவும் சொல்லவுமில்லை. அவரிடம் மனம் விட்டுப் பேச முடியாத ஒன்று அவன் வாழ்வில் நுழைந்து விட்டது அவனுக்கு வருத்தமாக இருந்தது.  பின் அவர் பேசியதில் பாதி தான் அவன் மனம் லயித்தது. அவள் திரும்பவும் வந்து மேல் மாடத்தில் நிற்க மாட்டாளா என்று அவன் மனம் ஏங்க ஆரம்பித்தது அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது.

 

துர்தராவின் போக்கில் அவள் தாய் பெருத்த மாற்றத்தைக் கண்டாள். மகள் ஏதோ ஒரு யோசனையாக எப்போதுமிருந்தாள். சமயங்களில் சாப்பிட மறந்தாள். பல சமயங்களில் சுற்றி இருப்பவர்கள் பேசுவது எதுவும் அவள் காதுகளில் விழவில்லை. அவள் தாரிணியிடம் சொன்னாள். “என்ன ஆயிற்றென்றே தெரியவில்லையே தாரிணி. அவள் தன் எதிர்காலத்தை எண்ணி கவலைப்படுகிறாளா?”

 

தாரிணி புன்னகைத்தபடி சொன்னாள். “நீங்கள் பயப்படுவது போல இல்லை அக்கா. அவள் காதல்வசப்பட்டு விட்டாள் போல் தெரிகிறது

 

என்ன சொல்கிறாய்? யார் மீது? யாரையும் தான் சந்திக்கும் நிலைமையிலேயே நாமில்லையே?”

 

அவள் தோழியை விசாரித்ததில் அவள் சந்திரகுப்தனை மேல்மாடத்திலிருந்து பார்த்த பிறகே இப்படித்தான் மாறி விட்டாள் என்று சொன்னாள். அவனும் அழகனாம். துர்தரா எப்படியெல்லாம் கனவு கண்டாளோ அப்படியெல்லாம் அவன் இருக்கிறானாம். ஆரம்பத்தில் கோபத்துடன் தான் பார்க்கப் போனாளாம். போய்ப் பார்த்த பின் மனதைப் பறி கொடுத்து விட்டாளாம்.”

 

அமிதநிதா முகத்தில் கடுங்கோபம் தெரிந்தது. ”எதிரியைக் காதலிக்கிறாளா? நம்மைச் சிறைப்படுத்தியவனைக் காதலிக்கும் அளவுக்கு அவளுக்குப் பைத்தியம் பிடித்து விட்டதா? இது தெரிந்தால் அவள் தந்தை அவளைக் கொன்றே விடுவார்.” என்று அவள் பொரிந்து தள்ளினாள்.

 

மகனின் மரணத்தின் பின் விசால மனதையும், பக்குவத்தையும் அடைந்திருந்த தாரிணி சொன்னாள். “அக்கா, காதலே ஒரு பைத்தியம் தான். அது எல்லாக் கணக்கும் பார்த்து வருவதில்லை அக்கா. இன்னொன்றையும் நீங்கள் கவனிக்க வேண்டும். இப்போது சந்திரகுப்தன் நம்மை வென்றிருக்கும் அரசன். அவன் இன்னும் திருமணம் ஆகாதவனும் கூட. அவனை இவள் மணந்து கொண்டால் பட்டத்தரசியாகி விடுவாள். ஜோதிடர்கள் சொன்னது பலித்து விடும். அதற்காகவே கிரகங்கள் இப்படி அவளை ஆட்டுவிக்கின்றன போலிருக்கிறது.”

 

அமிதநிதா கோபம் தணியாதவளாகவே சொன்னாள். “ஆனாலும் இதை எல்லாம் நீ கோபமில்லாமல் சரியான விஷயம் போலச் சொல்வதையே என்னால் தாங்க முடியவில்லை தாரிணி.”

 

தாரிணி கண்ணீர் திரையிட சொன்னாள். “நாம் தான் நம் பிள்ளைகளையும், நம் எதிர்காலத்தையும் தொலைத்து விட்டோம் அக்கா. நம் மகளாவது நல்லதொரு வாழ்க்கை வாழட்டுமே.”

 

அமிதநிதாவும் அந்த வார்த்தைகளைக் கேட்டு கண்கலங்கினாள். சிறிது நேர யோசனைக்குப் பின் அவள் வருத்தத்துடன் சொன்னாள். “ஆனாலும் இதெல்லாம் நடக்க முடிந்ததாக எனக்குத் தெரியவில்லை. அவள் தந்தை இதை ஒத்துக் கொள்வார் என்று எனக்குத் தோன்றவில்லை. அந்த அந்தணரோ இதற்குக் கண்டிப்பாகச் சம்மதிக்க மாட்டார்....”

 

ர்வதராஜனும், சுசித்தார்த்தக்கும் வேகமாக நெருக்கமாகி விட்டார்கள். ராக்ஷசரின் ஒற்றனாக சுசித்தார்த்தக் இருக்கக்கூடும் என்ற பலத்த சந்தேகம் பர்வதராஜனுக்கு இருந்த போதிலும் அவன் அந்த சந்தேகத்தை சாணக்கியருடன் பகிர்ந்து கொள்ளவில்லை. அவசியம் வந்தால் பின் தெரிவிக்கலாம் என்று பர்வதராஜன் நினைத்தான். அவரும் எல்லாவற்றையும் அவனிடம் சொல்லாமல் ரகசியம் காக்கிறவர் என்பதால் சுசித்தார்த்தக் ஒரு பிரச்சினை ஆகிற வரை அவனைப் பற்றி அவரிடம் சொல்வது அவசியமில்லை என்று எண்ணினான். ஒருவேளை அவர் தந்திரமாக அவனை ஏமாற்ற முயற்சித்தால் ராக்ஷசர் பக்கம் சாய சுசித்தார்த்தக் உதவக்கூடும் என்று பர்வதராஜன் எண்ணினான்.

 

சாணக்கியரும் சந்திரகுப்தனும் நடந்து கொள்வது அவனுக்குக் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மகத வெற்றியில் அவன் பங்கு மிக மிகக் குறைவு, அவர்கள் இருவர் பங்கு மிக அதிகம் என்றாலும் வெற்றிக்குப் பின் சரிசமமாக எல்லாவற்றையும் பிரித்துக் கொள்வது என்ற ஒப்பந்தம் அவர்களுக்குள் இருந்ததால் சில்லறைக் காரணங்கள் காட்டி அதை அவர்கள் இருவரும் உடனடியாக அமல்படுத்தத் தயக்கம் காட்டுவது அவனுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. எந்த நேரத்தில் அவர்களிருக்கும் மாளிகைக்குச் சென்றாலும் அவர்கள் அங்கு இருப்பதே இல்லை. எங்கே போகிறார்கள், என்ன செய்கிறார்கள் என்பதே அவனுக்குத் தெரியவில்லை. இப்படிப்பட்டவர்கள் ஒப்பந்தப்படி சரியான முறையில் சரிசமமாக அனைத்தையும் பிரித்துத் தருவார்கள் என்று அவனுக்கு நம்ப முடியவில்லை.

 

சுசித்தார்த்தக் பெரும்பாலும் அவருக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்து கொண்டு அவர் அருகிலேயே இருந்தான். அப்போது அவர் தனநந்தனைப் பற்றியும், ராக்ஷசர் பற்றியும், பல விஷயங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டார். சுசித்தார்த்தக் நிறைய விஷயங்கள் தெரிந்தவனாக இருந்தான். அவனிடம் பேச்சுக் கொடுத்ததில் அவனுக்கு அடுத்தவர்கள் பற்றிய விஷயங்களைத் தெரிந்து கொள்ள மிகுந்த ஆர்வம் உண்டு என்றும், மற்ற பணியாட்களுடன் விசாரித்து அவர்களது எஜமானர்களின் அந்தரங்க விஷயங்களையும் தெரிந்து கொள்வது அவன் இயல்பு என்றும் பர்வதராஜன் அறிந்து கொண்டான். பல நூறு ஆட்களை விசாரிப்பதை விட இவனைப் போன்ற ஒரு ஆளிடம் விசாரிப்பதில் பல மடங்கு தகவல்கள் பெற்று விடலாம் என்பது அவன் அனுமானமாக இருந்தது.

 

ஒரு நாள் பர்வதராஜனின் கால்களை அமுக்கிக் கொண்டே சுசித்தார்த்தக் கேட்டான். “அரசே. தாங்கள் ஹிமவாதகூடத்திற்குச் செல்லும் போது அடியேனையும் அழைத்துச் செல்வீர்களா?”

 

ஏன் அப்படிக் கேட்கிறாய் சுசித்தார்த்தக்?” என்று பர்வதராஜன் புன்னகையுடன் கேட்டான்.

 

அங்கு உங்களுடன் வந்தால் என் வாழ்க்கை வளமாகும் என்ற நைப்பாசை தான் அரசே

 

வாழ்க்கை வளமாவதற்காக நீ அங்கே வர வேண்டும் என்பதில்லை சுசித்தார்த்தக். நான் விரும்பினால் இங்கேயே உனக்கு வளமான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுக்க முடியும்.”

 

எனக்காக நீங்கள் சாணக்கியரிடம் பரிந்துரை செய்ய முடியும் என்கிறீர்களா அரசே

 

இப்போதெல்லாம் அனைவருமே ஆச்சாரியரை சாணக்கியர் என்றே அழைக்க ஆரம்பித்து விட்டதை பர்வதராஜன் கவனித்தான். முன்பெல்லாம் அவருடைய மாணவர்களும், நெருக்கமானவர்களும் மட்டுமே அப்படி அழைத்து வந்தார்கள். ஆனால் சாணக்கின் மகனான அவருடைய சபதம் நிறைவேறி விட்டதால் விஷ்ணுகுப்தர் என்ற பெயரைப் பயன்படுத்துவதை விட்டுவிட்டார்கள்...

 

பர்வதராஜன் பெருமையாகச் சொன்னான். “இந்த வெற்றியில் சரிபாதி என்னைச் சேரும் சுசித்தார்த்தக். சந்திரகுப்தனுக்கு இணையான அதிகாரம் எனக்கும் இங்குண்டு. அதனால் நான் உனக்காக யாரிடமும் பரிந்துரை செய்ய வேண்டியதில்லை. நானே உனக்கு எதுவும் செய்ய முடியும்.”

 

சுசித்தார்த்தக் முதலில் அவனைக் குழப்பத்துடன் பார்த்தான். பின் குழப்பம் போய் இரக்கம் அவன் முகத்தில் தெரிந்தது. அவன் ஏன் ஐயோ பாவம் என்பது போல் பார்க்கிறான் என்பதை பர்வதராஜனால் ஆரம்பத்தில் புரிந்து கொள்ள முடியவில்லை. பின் அனுமானிக்க முடிந்த போது அவமானத்தையும், ஆபத்தையும் ஒருசேர அவன் உணர்ந்தான். இவனே பரிதாபப்படும்படியாக நம் நிலைமை இங்கே இருக்கிறதே என்று மனம் புழுங்கினான்.

 

(தொடரும்)

என்.கணேசன்




3 comments:

  1. "பர்வதராஜன் வேறெந்த திட்டமும் தீட்டக்கூடாது" என்பதற்காகவே சுசித்தார்த்தகை... சாணக்கியர் நியமித்திருக்கலாம்...

    ReplyDelete
  2. "பல சமயங்களில் சுற்றியில் இருப்பவர்கள் பேசுவது எதுவும்" சுற்றி என்று திருத்தி விடவும். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. மாற்றி விட்டேன். நன்றி.

      Delete