என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Monday, July 28, 2025

யோகி 113


ஷ்ரவன் சொன்னது போல் அந்த நிஜ யோகியை ஏதோ ஒரு தனிப்பட்ட காரணத்திற்காக பிரம்மானந்தா யோகாலயத்திற்கு வரவழைத்திருக்க  வாய்ப்பிருப்பதாகத் தோன்றினாலும், அந்தச் சந்திப்பின் போது சைத்ரா இருந்திருக்க வாய்ப்பு இல்லை என்றே முக்தானந்தாவுக்குத் தோன்றியது. அவர் சொன்னார். “இங்கே நடக்கும் முக்கிய சந்திப்புகளில் தன்னுடன் இருக்க பிரம்மானந்தா பாண்டியன் அல்லது கல்பனானந்தாவை அனுமதிப்பாரே ஒழிய சைத்ரா போன்ற சாதாரண இளம் துறவியை எல்லாம் தன்னுடன் இருக்க அனுமதித்திருக்க மாட்டார் ஷ்ரவன். அதனால் நீ சொல்வது போல் அவர் அந்த யோகியை இங்கே வரவழைத்திருந்தாலும் கூட, அவருடன் சேர்ந்து சைத்ராவும் அந்த யோகியை இங்கே சந்தித்திருக்க வாய்ப்பில்லை.”

 

அப்படியானால் பிரம்மானந்தாவுடன் இல்லாமல் வேறு விதமாக சைத்ரா அவரை இங்கே சந்தித்திருக்கலாம்.”

 

நீ சொல்லும் யோகி சாதாரண தோட்டக்காரரின் உடையில் இருப்பவர் என்றால் அவர் வெளிகேட்டிலிருந்தே உள்ளே நுழைந்திருக்க முடியாதே.”

 

எந்தக் கோணத்தில் பார்த்தாலும் இடிக்கிறதே என்று எண்ணிய ஷ்ரவன் தன் அடுத்த சந்தேகத்தை அவரிடம் கேட்டான். “சரி சுவாமிஜி. அந்த யோகியை சைத்ரா ஏன், எப்படி, எங்கே சந்தித்தாள் என்பதை விட்டு விடுவோம். சைத்ராவை என்ன காரணத்திற்காக அவர்கள் கொன்றிருப்பார்கள் என்பதை உங்களால் யூகிக்க முடிகிறதா?”

 

முக்தானந்தா இல்லை என்று தலையசைத்து விட்டுச் சொன்னார். “இங்கே சட்ட விரோதமான வேலைகள் நடக்கின்றன என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை ஷ்ரவன். ஏனென்றால் இங்கே சில நாட்களில் இரவு நேரங்களில் ஆட்களின் போக்குவரத்து அதிகமாக இருக்கும். துறவிகளை இரவு பத்து மணிக்கு எந்தக் காரணத்தைக் கொண்டும் வெளியே உலாவக் கூடாது என்று சொல்லும் இவர்கள் மட்டும் அந்த நேரத்திற்குப் பின் ஏன் நடமாடுகிறார்கள் என்று தெரியவில்லை. அப்படி நடமாடுபவர்களில் ஒருசிலர் சில சமயங்களில் புதிய ஆட்களாகவும் இருக்கிறார்கள். அவர்களை அழைத்துப் போகிறவர்களும், அழைத்து வருபவர்களும் பாண்டியனின் ஆட்களாய் இருக்கிறார்கள். சில சமயங்களில் துறவிகளையும் அழைத்துக் கொண்டு போகிறார்கள். அந்த அகால நேரத்தில் என்ன வேலையாய் அழைத்துக் கொண்டு போகிறார்கள் என்பது தெரிவதில்லை. இரண்டு தடவை யாரையோ தூக்கிக் கொண்டு போவதைக்கூட நான் பார்த்திருக்கிறேன். உயிருடன் தூக்கிக் கொண்டு போகிறார்களா, இல்லை பிணத்தைத் தூக்கிக் கொண்டு போகிறார்களா என்பதும் தெரிவதில்லை…”

 

ஷ்ரவன் அவர் சொன்னதையெல்லாம் கவனமாகக் கேட்டுக் கொண்டு சிறிது யோசித்து விட்டுக் கேட்டான். “நீங்கள் பார்த்ததில் பெண்களும் இருந்திருக்கிறார்களா?”

 

ஐந்தாறு வருடங்களுக்கு முன்பு ஒரு முறை ஒரு பெண்ணையும் அழைத்துப் போவதை நான் பார்த்தேன். அதற்கு முன்பும், பின்பும் நான் பார்த்தவர்கள் எல்லாம் ஆண்கள் தான்.”

 

ஷ்ரவன் கேட்டான். “சைத்ராவுக்கு பாலியல் ரீதியாக எதாவது பிரச்சினைகள் வந்திருக்க வாய்ப்புண்டா சுவாமிஜி?”

 

இங்கே அதற்கு வாய்ப்பு அதிகம் இல்லை ஷ்ரவன். வேறெதாவது காரணம் தான் இருக்கும். ஏனென்றால் நான் பார்த்த வரையில் இங்கே அந்த வகைப் பிரச்சினைக்கான சூழல் இருந்ததேயில்லை.“

 

சதாசர்வ காலம் ஜன்னல் அருகே அமர்ந்து கவனித்துக் கொண்டே இருக்கும் முக்தானந்தாவுக்கு அங்குள்ள சூழல் பற்றி எப்போதும் அறிந்திருக்க வாய்ப்பு உள்ளதால் ஷ்ரவன் அவர் சொன்னதை நம்பினான். அவனுக்குத் திடீரென்று இன்னொரு சந்தேகம் வந்தது.

 

நீங்கள் அப்படி ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டிருப்பதை அவர்கள் கண்டிப்பதில்லையா சுவாமிஜி?”

 

ஆரம்ப காலங்களில் சில முறை என்னை முறைத்தும், திட்டியும் இருக்கிறார்கள். எனக்குத் தூக்கம் வருவதில்லை, நான் என்ன செய்யட்டும் என்று கேட்டேன். அதன் பின் என்னால் பிரச்சினை எதுவும் வராததைப் பார்த்து அவர்கள் என்னைக் கண்டு கொள்ளாமல் இருக்கப் பழகி விட்டார்கள்.”

 

ஷ்ரவன் சொன்னான். “சைத்ராவோடு 206ல் இருந்தவர்களுக்கு, கொலைக்கான காரணம் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் அவர்களைத் தொடர்பு கொள்ள வழியில்லை….”

 

முக்தானந்தா சொன்னார். “தொடர்பு கொள்ள முடிந்தாலும் கூட அவர்கள் வாய் திறந்து பேச வாய்ப்பில்லை.”

 

அவளுடன் இரண்டு அல்லது மூன்று பேர் அந்த அறையில் இருந்திருக்கலாம். அவர்களில் யாராவது ஒருத்தி சைத்ராவைக் காப்பாற்ற அவள் தந்தைக்கு மொட்டைக் கடிதம் எழுதி இருக்கலாம் அல்லவா?”

 

இருக்கலாம். ஆனால் இங்கே தபால் பெட்டி வெளிகேட்டுக்குப் பக்கத்தில் தான் இருக்கிறது. இங்கேயுள்ள உள் கேட்டைத் தாண்டி வெளியே போய் தான் அந்தப் பெட்டியில் தபாலைப் போட வேண்டும். ஆனால் இங்குள்ள துறவிகள் அனுமதியில்லாமல் உள்கேட்டைத் தாண்ட முடியாதே ஷ்ரவன். அப்படி இருக்கையில் அவள் எப்படி அந்தக் கடிதத்தை அந்தத் தபால் பெட்டியில் போட்டு இருப்பாள்?”

 

ஷ்ரவன் பெருமூச்சு விட்டான். எல்லா வழிகளிலும் அடைப்பு இருக்கிறதுபின் கேட்டான். “சைத்ராவுக்குக் கொடுக்கப்பட்ட தோட்ட வேலையிலும், நூலக வேலையிலும் அவளுக்கு மேற்பார்வையாளராக இருந்தது கல்பனானந்தா தான். அதனால் அவருக்கு சைத்ரா பற்றியும்,  இங்கு அவளுக்கு என்ன, ஏன் ஆனது என்பது பற்றியும் கண்டிப்பாகத் தெரிந்திருக்க வாய்ப்புண்டு அல்லவா சுவாமிஜி?”

 

முக்தானந்தா தலையசைத்தார். “நிச்சயம் உண்டு. கல்பனானந்தா அதீத புத்திசாலி. அவள் இருக்கும் இடத்தில் நடப்பது எதுவும் அவள் கவனத்திலிருந்து தப்ப வழியேயில்லை.”

 

ஷ்ரவன் சொன்னான். “பிரம்மானந்தாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகவும் அவர் இருப்பதால், அவர் பக்கத்திலிருந்தும் கல்பனானந்தாவுக்குத் தகவல்கள் கிடைக்கும் வாய்ப்பிருக்கிறது. இன்னொரு சாத்தியக்கூறும் இருக்கிறது சுவாமிஜி. பிரச்சினையே கல்பனானந்தா மூலமாகக்கூட ஏற்பட்டிருக்கலாம் அல்லவா? சைத்ரா இவர்களுடைய ரகசியம் எதையாவது கண்டுபிடித்து விட்டதை கல்பனானந்தா தெரிந்து கொண்டு பிரம்மானந்தாவிடமோ, பாண்டியனிடமோ சொல்லிக் கொடுத்திருக்கவும் வாய்ப்பு இருந்திருக்கிறது அல்லவா சுவாமிஜி.

 

முக்தானந்தா சொன்னார். ”காலப் போக்கில் எல்லாருமே சிறிதாவது மாறுகிறார்கள். அப்படி கல்பனானந்தாவும் ஓரளவு மாறியிருக்கலாம். அப்படி மாறியிருந்தால் ஒழிய அவளால் பிரம்மானந்தாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவளாக இப்போதும் இருந்திருக்க முடியாது. ஆனாலும் அவளால் இன்னொரு பெண்ணின் உயிர் போயிருக்க முடியாது என்பதை மட்டும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும் ஷ்ரவன். கல்பனானந்தாவுக்கு சைத்ராவின் கொலை பற்றிய உண்மைகள் தெரிந்திருக்கலாம் என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன். ஆனால் அவளால் சைத்ராவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்க முடியாது.”

 

ஷ்ரவன்எதனால் அந்த அளவு உறுதியாகச் சொல்கிறீர்கள்?” என்று கேட்டான்.

 

முக்தானந்தா சொன்னார். “ஆன்மீகத்தில் என்னுடைய ஈடுபாட்டுக்குச் சிறிதும் குறைந்ததல்ல அவளுடைய ஈடுபாடு. இளம் வயதில் அவள் நிறையவே கஷ்டப்பட்டு இருக்கிறாள். அவளுடைய கஷ்டங்கள் வாய்விட்டுச் சொல்ல முடியாதவை. அக்காலத்திலேயே அவளுக்கு ஆன்மீகம் தான் பெரிய ஆசுவாசமாக இருந்திருக்கிறது. நிறைய புத்தகங்கள் படித்திருக்கிறாள். யாராவது ஒரு பிரபல ஆன்மீக அறிஞரைப் பற்றி நீ பேச ஆரம்பித்தால், அவருடைய வாழ்க்கை வரலாற்றையும்,  அவருடைய பிரதான போதனைகளையும் தெளிவாக அவளால் விவரிக்க முடியும். பிரம்மானந்தாவின் சில பேச்சுக்கள் மிக நன்றாய் இருக்கின்றன என்றால், காரணம் அவை அனைத்தும் அவள் குறிப்பெடுத்துக் கொடுத்தவை. அவள் குறிப்பெடுத்துக் கொடுத்ததை மட்டும் அவர் பேசியிருந்தால் எவ்வளவோ சிறப்பாக இருந்திருக்கும். ஆனால் அவர் சிறிது தன் சொந்தப் புகழையும், கற்பனைக் கதைகளையும் புகுத்தி தான், கேட்பவர்களை சோதித்து விடுகிறார்...”

 

ஷ்ரவன் கேட்டான். “கல்பனானந்தாவிடமிருந்து நான் சைத்ரா பற்றிய உண்மைகளைக் கேட்டுத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பிருக்கிறதா சுவாமிஜி?”

 

முக்தானந்தா வறண்ட குரலில் சொன்னார். “அவள் உண்மைகளைச் சொல்வதாய் இருந்தால், தன் உயிரைப் பணயம் வைத்து தான் உன்னிடம் சொல்ல வேண்டியிருக்கும்.”

 

அப்படி யாரையாவது வற்புறுத்திக் கேட்க முடியுமா? அப்படிக் கேட்பது நியாயமாய் இருக்குமா?’ என்று ஷ்ரவன் திகைத்தான்.

 

(தொடரும்)

என்.கணேசன்




2 comments:

  1. தன் சொந்த புகழையும், கற்பனை கதைகளையும் புகுத்தாமல் எத்தனையோ மகான்கள் உள்ளதை உள்ளபடி பேசியிருக்கிறார்கள்...

    ஆனால் மரத்தடியில் கைத்தடி மற்றும் கோவணத்துடன் அமர்ந்து சொல்லும் கிழவர்களை விட...
    உடை,முக அலங்காரம் மற்றும் நவீன ஒளி,ஒலி அமைப்புடன், திரைப்பட நடிகைகள் போல தமிழை அரைகுறையாக பேசும் பிரம்மானந்தாக்களையே பலர் குருவாக சொல்வதில் பெருமை கொள்கின்றனர்.

    அப்படி நினைப்பவர்களை தண்டிப்பதற்காகவே இறைவன் பிரம்மானந்தாவை அனுப்பியிருக்கிறார் போல...

    ReplyDelete
  2. Brahmananda is not a guru for normal people; he is a guru for the elite people.

    ReplyDelete