என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Monday, July 7, 2025

யோகி 110

 

ஷ்ரவன் சொன்னான். “பாண்டியன் தாயத்து கட்டியதை வைத்து மாற்றம் ஒன்று நிகழ்ந்திருக்கிறது என்று தெரிந்து கொண்டதும், இனியும் எதாவது தொடர்ந்து நடக்கும் என்று எதிர்பார்த்ததும் சரி. ஆனால் நான் இங்கே வந்திருப்பது அதை நிரூபித்திருக்கிறது என்று சொல்கிறீர்களே, அது எப்படி?”

 

முக்தானந்தா சொன்னார். “நான் துறவியாகி இத்தனை ஆண்டுகள் கழிந்த பின்னும் யோகியாகி விடவில்லை என்றாலும், அதிகம் சாதித்தது இல்லை என்றாலும், மனிதர்களின் நுண்ணலைகளைப் படிக்கக் கற்றுக் கொள்வதில் தேர்ச்சி பெற்றிருக்கிறேன் ஷ்ரவன். உன்னிடம் துறவின் அலைகள் இல்லவே இல்லை. அன்பு, காதல் இரண்டின் அலைகள் தான் உன்னிடமிருந்து அதிகம் வெளிப்படுகின்றன. கூடவே நன்மை, மற்றும் ஞானத்தின் அலைகளும் வெளிப்படுகின்றன என்றாலும் அது துறவுக்கணக்கில் சேர்க்க முடிவதாக இல்லை. அதனால் நீ வேறு ஒரு உத்தேசத்தோடு தான் இங்கு வந்திருக்கிறாய் என்பது நிச்சயம். பாண்டியன் தாயத்து கட்டிக் கொண்ட சில நாட்களிலேயே நீ இங்கே வந்து சேர்ந்திருப்பது, அந்தத் தாயத்துக்குச் சம்பந்தப்பட்டதாகத் தான் எனக்குத் தோன்றுகிறது.”

 

ஷ்ரவன் திகைத்தான்.  முக்தானந்தா தன் நீண்ட கால, உண்மையான துறவு வாழ்க்கையின் மூலமாகப் பெற்றிருக்கும் இந்தச் சக்தி அவனைப் பேச்சிழக்க வைத்தது. சற்று முன் அவன் தியானம் செய்கையில் ஏதோ ஒரு சக்தியுடன் தொடர்பில் இருப்பதாகச் சொன்னார். இப்போது இதைச் சொல்கிறார். அவன் சற்றும் எதிர்பாராத விதமாக இங்கே வேஷம் கலைந்து விட்டான்....

 

ஷ்ரவன் என்ன சொல்வது என்று யோசித்தான். அவன் இப்போதும் அவர் சொல்வது நிஜமல்ல, அவன் உண்மையான துறவி தான் என்று மறுத்துச் சொல்ல முடியும்.  ஆனால் அதன் பின் அவன் அவரிடம் துப்பறியும் கேள்விகள் கேட்க முடியாது. புதியதாய் தகவல்களைப் பெற முடியாது. துறவிக்கு அதெல்லாம் எதற்கு என்று கேட்டால் அவனிடம் பதில் இல்லை.

 

அவன் பரசுராமன் சொல்லிக் கொடுத்த மந்திர உபதேசத்தை முறையாக ஜபித்துக் கொண்டு வந்ததால் அது ஆரம்பத்திலிருந்தே அவனுக்குச் சரியாக வழி காட்டியிருக்கிறது. சரியான சூழல்களை அது ஆரம்பத்திலிருந்தே ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. யோகாலயத்தில் அவன் மனக்காட்சியில் கண்ட ஓநாய் ஆரம்பத்தில் அவன் மீது பாய்ந்து அவனை நினைவிழக்கச் செய்ததால் தான் பாண்டியனின் நேரடி கவனத்திற்கு அவன் வந்திருக்கிறான். அவன் கண்களுக்கு என்ன காட்சி தெரிகிறது, என்ன சொல்கிறான் என்று தெரிந்து கொள்வதில் பாண்டியனும், பிரம்மானந்தாவும் ஆர்வம் காட்டும் நிலைமை இப்போது உருவாகி இருக்கிறது. அவர்கள் அவனை முழுவதும் நம்பி விடவில்லை என்றாலும், இப்போது அவர்கள் வழக்கமாக எழும் தங்கள் சந்தேகங்களைத் தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் இப்போது அவர்களை நெருங்க அவன் அவர்களுடைய ஆர்வத்தையே பயன்படுத்திக் கொள்ள முடிந்த சூழல் உருவாகி இருக்கிறது. அதை அவன் முழுவதுமாக உபயோகப்படுத்திக் கொள்ள, முக்தானந்தாவிடமிருந்து பெற்றுக் கொள்ளும் கூடுதல் தகவல்கள் கண்டிப்பாக உதவும்.  அதனால் உண்மையை ஒத்துக் கொள்வதே இந்தச் சூழ்நிலையில் ஷ்ரவனுக்குப் புத்திசாலித்தனமாகத் தோன்றியது.

 

அவர் கண்டிப்பாக எதிரிகள் பக்கம் போகக்கூடியவர் அல்ல. அதே போல் அவனைக் காட்டிக் கொடுக்கும் ரகமும் அல்ல. அந்த விஷயத்தில் அவரை முழுவதுமாக நம்பலாம் என்றே தோன்றியது. அதற்காகத் தான் அவன் ஜபித்த மந்திர சக்தி அவனை இவரிடம் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. அவன் வேகமாக வேலை ஆக வேண்டும் என்று வேண்டிக் கொண்டவுடன், ஓநாய் அவரைப் பார்த்ததும், அவரைப் பயன்படுத்திக் கொள் என்ற தகவல் என்றே அவன் உணர்கிறான். அந்த நாளிலேயே சித்தானந்தாவுக்குக் காய்ச்சல் வந்து, அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்து, அவன் தனியாக முக்தானந்தாவிடம் பேசும் சூழ்நிலையை ஏற்படுத்தியும் கொடுத்திருக்கிறது. எல்லாமே அந்த மகாசக்தி அவனுக்கு உதவியிருக்கும் விதம் என்று புரிந்த போது, அந்த மகாசக்தி காண்பித்துக் கொடுத்த முக்தானந்தாவிடம் உண்மையைச் சொல்வதே உத்தமம் என்ற முடிவுக்கு ஷ்ரவன் வந்தான்.

 

ஷ்ரவன் தாழ்ந்த குரலில் சொன்னான். ”சுவாமிஜி நான் உண்மையை மறைக்காமல் உங்களிடம் சொல்லி விடுகிறேன். ஆனால் நான் சொல்வதை நீங்கள் ரகசியமாக உங்களிடமே வைத்துக்கொள்ள வேண்டும் என்றும், எந்தக் காரணத்தைக் கொண்டும் யாருக்கும் சொல்லி விடக்கூடாது என்றும் கேட்டுக் கொள்கிறேன்.”

 

அவனையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்த முக்தானந்தா சரியென்று தலையசைத்தார். இதுவே மற்றவர்களாக இருந்தால் அதை வார்த்தைகளால் சொல்ல வைத்துக் கேட்டால் ஒழிய திருப்தி அடைந்திருக்காத ஷ்ரவன் அவருடைய தலையசைப்பிலேயே திருப்தி அடைந்து கேட்டான். “இங்கே நாம் பேசிக் கொள்வதை யாரும் ஓட்டுக் கேட்க வழியில்லை அல்லவா?”

 

அவன் ஏற்கெனவே கூர்ந்து பார்த்து கவனித்துத் தெளிந்த விஷயமானாலும் அவரிடமும் கேட்டது அவனது கூடுதல் எச்சரிக்கையாக இருந்தது. 

 

முக்தானந்தாவும் தாழ்ந்த குரலில் சொன்னார். “அப்படி ஒட்டுக் கேட்கும் சூழ்நிலை இருந்திருந்தால் நான் உன்னிடம் மனம் விட்டு இத்தனை விஷயங்கள் பேசியிருக்க மாட்டேன் ஷ்ரவன். இங்கே சில அறைகள் மட்டும் அப்படி ஒட்டுக் கேட்கும் படியான உபகரணங்களுடன் இருக்கின்றன. சந்தேகத்திற்கு இடமானவர்களை அவர்கள் அந்த அறைகளில் தான் தங்க வைப்பார்கள்.  உன்னை அந்த அறைகளில் ஒன்றில் தங்க வைக்காமல், இங்கே தங்க வைத்திருப்பதே உன் மேல் அவர்களுக்கு எந்தச் சந்தேகமும் இல்லை என்பதைக் காட்டுகிறது.”

 

அவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பது கூட வெளியே இருப்பவர்களுக்குத் தெரிந்து விடக்கூடாது என்ற எச்சரிக்கையுடன் இருவரும் தாழ்ந்த குரலிலேயே பேசிக் கொண்டார்கள். ஷ்ரவன் புன்னகையுடன் சொன்னான். “அவர்கள் நான் சென்ற முறை தியான வகுப்புக்கு வந்த போது அந்த மாதிரி அறையில் என்னைத் தங்க வைத்து, ஒரு வாரம் கவனித்து சந்தேகம் தெளிந்திருக்கிறார்கள் சுவாமிஜி. நல்ல வேளையாக அவர்கள் நவீன உபகரணங்களைத் தான் நம்புகிறார்கள். உங்களைப் போல் அவர்களிடம் நுண்ணுணர்வு இல்லை...”

 

முக்தானந்தாவும் புன்னகைத்தார். ஷ்ரவன் அவரிடம் கேட்டான். “சுவாமிஜி. உங்களுக்கு யோகாலயம் பற்றிய செய்திகள் உடனுக்குடன் கிடைப்பதுண்டா?”

 

இல்லை ஷ்ரவன். அவர்கள் விருப்பப்படும் செய்திகளை மட்டும் சத்சங்கத்துக்கு முன்னால் காட்டுவார்கள். பிரம்மானந்தாவுக்குக் கிடைக்கும் விருதுகள், கௌரவம், யாராவது அவரை உயர்த்திப் பேசியது, அவர் எங்கேயாவது போய் பேசியது எல்லாம் தான் எங்களுக்குக் காண்பிப்பார்கள். மற்றது எதுவுமே எங்களுக்குத் தெரிய வராது. வெளியே இருந்து வரும் வேலையாட்களிடம் இருந்தும் நாங்கள் எதையும் தெரிந்து கொள்ள முடியாது. அதைக் கண்காணிக்க என்றே ஒரு கூட்டம் இங்கே இருக்கிறது. அதனால் தேவைக்கு அதிகமாய் நாங்கள் அந்த வேலையாட்களிடமும் பேச முடியாது.”

 

ஷ்ரவன் கேட்டான். “உங்களுக்கு இங்கே சில மாதங்கள் முன்பு வரை இருந்த சைத்ரானந்தா என்ற பெண் துறவியைத் தெரியுமா?”

 

இல்லை ஷ்ரவன்

 

ஷ்ரவன் அவரைக் கூர்ந்து பார்த்துக் கொண்டே சொன்னான். “அந்தப் பெண் துறவி 206 எண் அறையில் வசித்து வந்தவள். அதாவது எதிரில் உள்ள கட்டிடத்தில் கீழ் வரிசையில் ஆறாவது அறையில் வசித்து வந்தவள். நம் அறைக்கு எதிரே உள்ள அறையிலிருந்து மூன்றாம் அறையில் வசித்தவள்.”

 

சொன்னதோடு அவர் ஜன்னலிலிருந்து அந்த அறையை ஷ்ரவன் அவருக்குக் காண்பித்தான். “சில மாதங்களுக்கு முன்பு அந்த அறையில் அசாதாரணமாய் எதாவது நடந்ததை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? நீங்கள் பெரும்பாலும் இந்த ஜன்னல் பக்கம் தான் அமர்ந்து வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் எதாவது பார்த்திருக்கலாம். அல்லது எதாவது சத்தம் உங்களுக்குக் கேட்டு இருக்கலாம். நன்றாக யோசித்துச் சொல்லுங்கள் சுவாமிஜி.”

 

முக்தானந்தாவின் கண்களில் ஒரு மின்னல் தெரிந்து மறைந்தது.

(தொடரும்)

 என்.கணேசன் 




என்.கணேசனின் நூல்களை வாங்கிப் படிக்க விருப்பமுள்ளவர்கள் 94863 09351 எண்ணில் வாட்சப்பில் தொடர்பு கொள்ளவும்.

1 comment: