சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, June 8, 2023

சாணக்கியன் 60

ம்பி குமாரனுக்கு அலெக்ஸாண்டர் விஷயத்தில் தன் நிலைப்பாடுகள் சரியா தவறா என்று தெளிவான அபிப்பிராயத்தை எட்ட முடியவில்லை. ஒவ்வொரு முறை ஒவ்வொன்று அவனுக்குத் தோன்றியது. அலெக்ஸாண்டரை எதிர்த்துப் போரிட்டு மகன்களையும், படைகளில் ஒரு கணிசமான பகுதியையும் இழந்து பின் கடைசியில் ஆம்பி குமாரனைப் போலவே அலெக்ஸாண்டரின் தலைமையை ஏற்றுக் கொண்ட கேகய மன்னன் புருஷோத்தமனை எண்ணிப் பார்க்கையில் இந்தச் சேதாரங்கள் இல்லாமல் முதலிலேயே நட்புக்கரம் நீட்டி ஏற்றுக் கொண்டது நல்ல புத்திசாலித்தனமாகத் தோன்றியது. ஆனால் இன்னொரு விதமாகப் பார்த்தால் அலெக்ஸாண்டரின் பார்வையில் புருஷோத்தமன் உயர்ந்து, ஆம்பி குமாரன் தாழ்ந்து விட்டபடியும் தோன்றியது. அதை உணர்த்தும் விதமாக அலெக்ஸாண்டர் புருஷோத்தமனை அழைத்துக் கொண்டு போகத் தீர்மானித்து ஆம்பி குமாரனைக் கழற்றி விட்டதும் அவமானமாக இருந்தது.  

 

நட்புக்கரம் நீட்டியதாலேயே அலெக்ஸாண்டரின் நண்பனாகவும் பிரதிநிதியாகவும் அந்தப் பிராந்தியத்தில் ஆட்சி செலுத்தலாம் என்று அவன் ஆரம்பத்தில் நினைத்தது தப்புக்கணக்கு என்பது பிறகு புரிந்தது. அலெக்ஸாண்டர் ஒவ்வொரு இடத்திலும் மேற்பார்வைக்கு ஒரு பிரதிநிதியை நியமிப்பான் என்றெல்லாம் அவன் எதிர்பார்க்கவில்லை என்பதால் பிலிப் காந்தாரத்திற்கு நியமிக்கப்பட்ட போது பெரியதொரு ஏமாற்றத்தை ஆம்பி குமாரன் உணர்ந்தான். ஆனாலும் பிறகு அது பழகி விட்டது. மேலும் பெயருக்கு இப்போதும் அவன் தான் காந்தாரத்தின் அரசனாக இருக்கிறான். பிலிப் அவனுடைய சிம்மாசனத்தில் வந்து உட்கார்ந்து கொள்ளவில்லை. அரண்மனையில் பங்கு கேட்கவில்லை. குடிமக்கள் முன்னிலையில் ஆம்பி குமாரனைத் தர்மசங்கடப்படுத்தவில்லை. அதனால் எல்லாம் ஆம்பி குமாரன் ஓரளவு திருப்தியை உணர்ந்தான். அதேசமயத்தில் திடீர் திடீர் என்று படையினரை அலெக்ஸாண்டர் சொல்லும் பகுதிகளுக்கு அனுப்பி வைப்பதற்கு முன் பிலிப் அவனிடம் சம்பிரதாயத்துக்குக் கூட அனுமதி கேட்கவில்லை. அவன் கேட்டால் இவன் மறுக்கப் போவதில்லை என்றாலும் கூட பிலிப் அனுமதி கேட்காதது ஆம்பி குமாரனுக்கு அதிருப்தியை அளித்தது.

 

இரவு நேரங்களில் தூங்க முடியாமல் இப்படி மாறி மாறித் தன்னுடைய நிலைமை பற்றிய எண்ணங்களில் ஆம்பி குமாரன் ஆழ்ந்திருப்பான். இன்றும் அவன் அப்படிப் படுக்கையில் புரண்டபடி யோசனைகளில் ஆழ்ந்திருந்த போது ஒரு காவலன் உள்ளே நுழைந்தான்.  “அமைச்சர் ஏதோ அவசர செய்தியோடு வந்திருப்பதாகச் சொல்கிறார் அரசே,. தங்களை உடனே காண விரும்புகிறார்.”

 

ஆம்பி குமாரன் உடனே எழுந்து வெளியே வந்தான்.   ”என்ன செய்தி அமைச்சரே?”

 

அமைச்சர் சொன்னார். “இன்றிரவில் நமது ஆயுதக்கிடங்கில் கொள்ளையர் புகுந்து ஆயுதங்களைக் கடத்த முற்பட்டிருக்கிறார்கள் அரசே. நம் காவலாளிகள் அதைக் கவனித்து அவர்களைப் பிடிக்க முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனால்  அவர்கள் நம் காவலர்களைத் தாக்கி விட்டுத் தப்பித்துச் சென்று விட்டார்கள்”

 

ஆம்பி குமாரன் திகைத்தான். “ராஜ்ஜியத்தின் தலைநகருக்கே வந்து ஆயுதக் கிடங்கில் நுழைந்து ஆயுதங்களைக் கொள்ளையடிக்க வேண்டும் என்றால் எத்தனை துணிச்சல் அந்தக் கொள்ளையருக்கு இருக்க வேண்டும். அந்தக் கொள்ளையர்களின் அடையாளம் எதாவது தெரிந்ததா?”  

     

 

“முகமெல்லாம் கரிபூசிக் கொண்டு வந்திருந்தார்கள். ஆகவே அவர்களைக் காவலாளிகளால் அடையாளம் காண முடியவில்லை. பெரும்பாலும் இப்படிச் செய்பவர்களில் நாம் அறிந்தவர்களும் இருக்கக்கூடும். அதனால் தான் அடையாளம் தெரியாதிருக்க அவர்கள் இப்படி கரிபூசிக் கொண்டு வந்திருக்கக்கூடும்...”

 

“எத்தனை ஆயுதங்கள் திருட்டுப் போயிருக்கின்றன என்பது தெரிந்ததா?”

 

“எனக்குத் தகவல் தெரிந்ததும் நான் அங்கே போய் அதைத் தான் பரிசோதித்துப் பார்த்து கணக்கெடுக்கச் சொன்னேன். அப்படிக் கணக்கெடுக்கையில் ஏராளமான ஆயுதங்கள் திருட்டுப் போயிருப்பது தெரிந்தது. உண்மையில் இன்று மட்டுமே அத்தனை ஆயுதங்களும் காணாமல் போயிருக்க வாய்ப்பில்லை; இது சில காலமாகவே நடந்து வந்திருக்கிறது என்பது எனது சந்தேகம். இன்று தான் இது தெரிய வந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.”

 

ஆம்பி குமாரன் அதிர்ந்து போனான். “உடனடியாக விசாரணைக்கு ஏற்பாடு செய்யுங்கள் அமைச்சரே. குற்றவாளிகளையும், அதற்கு உடந்தையாக இருந்தவர்களையும் கண்டுபிடிக்க தேவையான நடவடிக்கைகளை எடுங்கள்”

 

”தங்கள் ஆணைப்படியே செய்கிறேன் அரசே” என்று சொல்லி விட்டு அமைச்சர் வெளியேறினார். ஆம்பி குமாரன் சிறிது யோசித்து விட்டுக் காவலனை அழைத்துச் சொன்னான். “உடனடியாக ஒற்றர் தலைவரை இங்கே வரச்சொல்”

 

ஒற்றர் தலைவர் வந்து சேரும் வரை ஆம்பி குமாரன் ஆசனத்தில் அமர்ந்து பல யோசனைகளில் ஆழ்ந்திருந்தான். ’இந்த விஷயம் வெளியே தெரிந்தால் அது எவ்வளவு கேவலம்,   முக்கியமாக பிலிப் இந்தத் தகவலை அறிந்தால் என்ன செய்வான், எப்படி நடந்து கொள்வான்? என்ன நிர்வாகம் செய்கிறாய் என்று என்னைக் குற்றம் சாட்டுவானா?’ என்பது போன்ற கவலைகள் அவன் மனதில் ஓடின. இப்போது பிலிப் இங்கே இல்லை.  அவன் அலெக்ஸாண்டரைப் பார்க்கப் போயிருக்கிறான்.  அலெக்ஸாண்டர் கடைசியாக என்ன ஆணைகளை அவனிடம் பிறப்பித்து விட்டு போகப் போகிறானோ தெரியவில்லை....

 

ஒற்றர் தலைவர் வந்து முன்னால் நின்றதும் ஆம்பி குமாரன் ஏளனமாகக் கேட்டான். “என்ன ஒற்றர் தலைவரே. சௌக்கியமா? இங்கே ஆயுதக்கிடங்கில் கொள்ளையடிக்கப்பட்ட தகவல் தெரியுமா? இல்லை நான் சொல்லித் தான் இப்போது தெரிந்து கொள்கிறீர்களா?”

 

ஒற்றர் தலைவர் கண்கள் தரையை நோக்கித் தாழ்ந்தன. “தெரியும் அரசே?”

 

“ஆயுதக்கிடங்கில் முன்பிருந்தே களவு போய்க் கொண்டிருக்கிறது என்று அமைச்சர் அபிப்பிராயப்படுகிறார். ஆனால் அது குறித்து உங்களிடம் இருந்து எனக்கு எந்தத் தகவலும் வரவில்லையே. ஒற்றர்கள் எல்லோரும் உல்லாசப் பயணம் சென்று விட்டார்களா என்ன?”

 

ஒற்றர் தலைவர் தாழ்ந்த குரலில் சொன்னார். ”ஒற்றர்களில் பாதியளவு ஆட்கள் யவன அதிகாரி பிலிப் அவர்களால் வேறுசில பகுதிகளுக்கு பல வேலைகளுக்காக அனுப்பப்பட்டிருக்கிறார்கள் அரசே. குறைந்த அளவு ஆட்களே தற்போது நம் வேலைக்கு இருக்கிறார்கள்”

 

ஆம்பி குமாரன் திகைத்தான். இது குறித்தும் பிலிப் அவனிடம் எதுவும் சொல்லியிருக்கவில்லை... ஆனாலும் அதை வெளிப்படுத்திக் கொள்ளாமல் ஆம்பி குமாரன் கேட்டான். “இருக்கும் ஆட்களுக்கு இது குறித்து எதுவும் தெரியாமல் இருப்பது பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன? இந்தக் குற்றத்தைப் புரிந்தவர்கள் யாராக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?”

 

ஒற்றர் தலைவர் சொன்னார். “தட்சசீலத்தில் சில வித்தியாசமான நடவடிக்கைகள் நடப்பது எங்கள் கவனத்திற்கு வந்திருக்கிறது. நாங்கள் அந்த நபர்களை அவ்வப்போது  கண்காணித்தும் வருகிறோம். எதோ நடக்கிறது என்ற சந்தேகம் இருந்தாலும் அவர்களையே தொடர்ந்து கண்காணித்து அவர்கள் குற்றம் என்னவென்று முடிவாகக் கண்டுபிடித்து குற்றவாளிகளைக் கையும் களவுமாய் பிடிக்க எங்களிடம் போதுமான ஆட்கள் இல்லை அரசே. ஏனென்றால் மற்ற பகுதிகளையும் மற்ற இடங்களிலும் வழக்கமான கண்காணிப்புகளை நாங்கள் செய்ய வேண்டியிருக்கிறது”

 

ஆம்பி குமாரன் நெற்றியைச் சுருக்கிக் கொண்டு கேட்டான். “நீங்கள் சந்தேகப்படும் ஆட்கள் யார்?”

 

“தட்சசீலத்து கல்விக்கூட மாணவர்கள்”

 

ஆம்பி குமாரன் திடுக்கிட்டான். அவன் இதைச் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை. “அவர்கள் என்ன செய்கிறார்கள்?”

 

“அவர்கள் இரவு நேரங்களிலும் நகர வீதிகளில் அங்குமிங்கும் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் ஒருவனை ஒரு முறை அழைத்து ”ஏன் இரவு வேளைகளில் வெளியே திரிகிறீர்கள்” என்று நான் கேட்டேன். அவர்களுடைய ஆசிரியர் அவர்களுக்கு ஏதோ வேதாந்தப் பயிற்சி செய்ய இப்படி இரவு நேரங்களில் வீதியில் நடந்து கொண்டே மனனம் செய்வது நல்லது என்று சொன்னாராம். சற்று விரிவாகச் சொல்லும் படி கேட்டேன். அவன் ஏதேதோ சொல்ல ஆரம்பித்தான். ஒன்றுமே புரியவில்லை. புரிந்து கொள்ள முயற்சி செய்து எனக்குத் தலைவலியே வந்து விட்டது. “நீ சொல்வது ஒன்றுமே புரியவில்லையே” என்று கேட்டேன். “எங்கள் ஆசிரியர் சாணக்கியரிடம் வந்து கேளுங்கள். அவர் சொன்னால் உங்களுக்குத் தெளிவாகப் புரியும்” என்று சொன்னான்.”

 

ஆம்பி குமாரன் குழப்பத்தோடு யோசித்து விட்டுச் சொன்னான். “எனக்குத் தெரிந்து சாணக்கியர் என்ற பெயரில் அங்கே ஆசிரியர்கள் யாரும் இல்லையே”

 

“ஆச்சாரியர் விஷ்ணுகுப்தரைத் தான் அவர்கள் சாணக்கியர் என்று தற்போது அழைக்கிறார்கள் அரசே. சாணக் என்பது அவர் தந்தை பெயராம். சாணக்கின் மகன் சாணக்கியன் என்ற பொருளில் அப்படி அழைக்கிறார்கள்?”

 

ஆம்பி குமாரன் சந்தேகத்துடன் கேட்டான். “ஏன் திடீரென்று இந்தப் பெயர் மாற்றம்?”

 

”அவர் அந்தப் பெயரில் தான் மகத மன்னரிடம் ஏதோ சபதம் போட்டிருக்கிறாராம். அந்தச் சபதம் நிறைவேறும் வரை தன்னுடைய குடுமியை முடிவதில்லை என்றும் முடிவெடுத்திருக்கிறார் போல் இருக்கிறது... அவர் சொல்லித் தான் இந்த மாணவர்கள் என்னென்னவோ செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது அடியவனின் சந்தேகம்”

 

ஆம்பி குமாரன் பிரச்னை பெரிதாவதை உணர்ந்தான்.

 

(தொடரும்)

என்.கணேசன்

2 comments:

  1. Chankayan's next plan has begun. Great calculations. A real genius.

    ReplyDelete
  2. அன்னியருக்கு அடிபணிந்து நடப்பவனுக்கு எதற்கு ஆயுதம்?" என்று சாணக்கியர் நினைத்து விட்டார் போலும்...

    ReplyDelete