சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, October 14, 2021

இல்லுமினாட்டி 124



விஸ்வத்துக்கும் வாங் வே சொன்ன தகவல்கள் அதிர்ச்சியை அளித்தன. முதலிலேயே இம்மானுவலுக்கு சாலமன் மேல் சந்தேகம் வந்திருந்தது என்றும் அதனால் தான் அவர் வாஷிங்டனுக்குப் பதிலாக டெஹ்ரானுக்கு அனுப்பப்பட்டார் என்றும் சொன்ன வாங் வே அக்‌ஷயின் விலாசம் தலிபானுக்குத் தெரிந்ததும் சாலமன் மூலமாகத் தான் அந்தத் தகவல் கசிந்திருக்க வேண்டும் என்பது ஊர்ஜிதமாகியிருக்க வேண்டும் என்றும் வெளிப்படையாகவே சொன்னார். அவர் பேசிய போது வழக்கத்துக்கு மாறாக அவர் குரல் மூச்சு வாங்கிய விதம் அவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டிருப்பதையும் தெரிவித்தது.

விஸ்வம் சொன்னான். “அக்‌ஷய் கிழவருடன் இருக்கிற வரையில் எதுவும் செய்ய முடியாது என்பதால் தான் அவனை அவரிடமிருந்து பிரிக்க அந்தத் தகவலைத் தலிபானுக்கு அனுப்பினேன்....”

வாங் வே சொன்னார். “அது வீண் முயற்சியாகப் போய் விட்டிருக்கும் நண்பரே. நீங்கள் ஒரு விஷயத்தை மறந்து விட்டீர்கள். இல்லுமினாட்டியின் தலைவர் ஒரு கடவுள் மாதிரி தான். எதையும் செய்ய முடிந்தவராக இருக்கிறார் தலைவர். உங்கள் ஒருவரை மட்டும் தான் அவர்களால் சரியாகக் கையாள முடியவில்லை. காரணம் தனி மனிதரான நீங்கள் அமானுஷ்ய சக்திகளும் படைத்தவராக இருப்பதால் எப்போது என்ன செய்வீர்கள், எப்படிச் செய்வீர்கள் என்று யூகிக்கவும் கூட அவர்களால் முடியவில்லை. அதனால் தான் உங்களிடமிருந்து தலைவரைப் பாதுகாக்க அமானுஷ்யனை வரவழைத்தார்கள்.  கிளம்புவதற்கு முன் கண்டிப்பாக அவன் தனக்கு இருக்கும் தலிபான் எதிரிகள் பற்றி அவர்களிடம் சொல்லியிருப்பான். அவர்களும் தலிபான்களிடமிருந்தும் வேறு எதிரிகள் யாராவது இருந்தாலும் அவர்களிடமிருந்தும் அவன் இல்லாத போதும் அவன் குடும்பத்தைக் காப்பாற்றுவதாக வாக்கு தந்திருப்பார்கள்… இப்போதே தலிபான்களின் நிழல் அமானுஷ்யனின் வீட்டுப் பக்கம் விழுந்திருந்தாலும் கிழவரின் ஒரு போன்கால் போதும் தலிபான்களைத் தலைதெறிக்க ஓட வைக்க. தீவிரவாதக் குழு தலிபானாக இருந்தாலும் சரி, அல் குவைதாவாக இருந்தாலும் சரி, இல்லுமினாட்டியை எதிர்த்துக் கொண்டு தாக்குப் பிடிக்க முடியாது நண்பரே. அதனால் நீங்கள் அவன் விலாசத்தை சாலமனிடமிருந்து வாங்கித் தலிபானுக்குக் கொடுத்திருப்பது சாலமனுக்கு எதிராக மாறிவிட்டதே ஒழிய அமானுஷ்யனைக் கிழவரிடமிருந்து ஒரு அங்குலம் கூட விலக்கி விடாது…”

க்ரிஷ் விஷயத்தில் தீர்மானித்த அணுகுமுறை அக்‌ஷய் விஷயத்தில் பிசுபிசுத்துப் போய் விட்டது என்பது விஸ்வத்துக்குப் புரிந்தது.  அவன் மெல்லச் சொன்னான். “இந்த விஷயத்தில் என் கணக்கு தவறாகி இருக்கலாம். ஆனால் சாலமன் மேல் முதலிலேயே சந்தேகம் அவர்களுக்கு வந்து விட்டது என்று சொன்னீர்களே, அவர் வாஷிங்டன் போக இரண்டு நாட்கள் தாமதம் செய்ததாலேயா? அப்படி இருக்க வழியில்லையே…”

“உண்மை. அந்த ஒரு காரணம் வேறு ஒரு பெரிய காரணத்துடன் சேர்ந்து இருக்கலாம் என்று நானும் நினைக்கிறேன். யோசித்துப் பார்க்கையில் தலைவரின் வாஷிங்டன் பயணம் பற்றி உங்களுக்குத் தெரிந்து விட்டது என்று இம்மானுவல் சந்தேகப்பட ஏதாவது காரணம் இருந்திருக்கலாம். உங்கள் பக்கத்திலிருந்து ஏதாவது தகவல் கசிந்திருக்கலாம் என்று நான் பயப்படுகிறேன்.”

விஸ்வம் இறுகிய குரலில் சொன்னான். “என் பக்கத்திலிருந்து தகவல் கசிய வாய்ப்பே இல்லை…”

வாங் வே அவன் குரலில் தொனித்த கோபத்தை உணர்ந்தார். அவர்  மெல்லச் சொன்னார். “நான் உங்கள் பக்கத்தில் தவறு கண்டுபிடிக்கிறேன் என்று நினைக்காதீர்கள். என் சந்தேகத்தைச் சொன்னேன். காரணம் நானும், சாலமனும் எங்கள் விதியே இதில் பின்னிப் பிணைந்துள்ளதால் சர்வ ஜாக்கிரதையுடனேயே இருந்து வந்தோம்….”

விஸ்வம் சிறிது யோசித்து விட்டுச் சொன்னான். ”இந்தத் தகவல் கசிவு சமாச்சாரம் இரண்டு பக்கத்திலுமே அபாயத்திற்கான அறிகுறி தான். அதனால் பரஸ்பரம் குற்றம் சாட்டுவதை விட  அதன் பின்னணி என்று பார்த்து தெளிவு அடைவது முக்கியம்”

வாங் வே சொன்னார். “உண்மை”

விஸ்வம் கேட்டான். “உங்கள் மேல் அவர்களுக்குச் சந்தேகம் வந்திருக்க வாய்ப்பில்லை அல்லவா?”

“இது வரை இல்லை. ஆனால் இப்போது கர்னீலியஸ் மூலமாக ஆபத்து வரலாம் என்கிற பயமிருக்கிறது…”

விஸ்வத்துக்கு கர்னீலியஸ் யார் என்று நினைவு வரவில்லை. ”யார் கர்னீலியஸ்?” என்று அவன் கேட்டான்.

வாங் வே சொன்னார். “அவரிடம் இருக்கும் இரகசிய ஆவணம் மூலமாகத் தான் நாங்கள் உங்கள் தற்போதைய இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க முடிந்தது. அவர் இல்லுமினாட்டி தலைவரிடம் சொல்ல நினைத்திருந்த அந்தத் தகவலை அவருடைய பிரதிநிதியாக நினைத்து என்னிடம் சொல்லியிருக்கிறார். வாஷிங்டனில் நடக்கும் இல்லுமினாட்டி கூட்டத்திற்கு அவரும் அழைக்கப்படுவார். ஒருவேளை எர்னெஸ்டோவிடம் அவர் அந்த ரகசிய ஆவணம் பற்றிய பேச்சை எடுத்தால் எல்லா உண்மைகளும் தெரிந்து விடும். பிறகு சாலமனின் கதி தான் எனக்கும் ஏற்படும்....”

“அவர் பேசினால் தானே. அதை நான் பார்த்துக் கொள்கிறேன்.... அந்த ரகசிய ஆவணத்தில் பாதி தகவல் தான் சொல்லியிருக்கிறார் என்று கேள்விப்பட்டேன். மீதி?”

“அது வங்கி லாக்கரில் அவர் வைத்திருக்கும் அந்த ஆவணத்தைப் படித்துப் பார்த்தால் தான் தெரியும். அதை எடுத்துப் படிக்கப் போகும் போது தான் வழியில் இருக்கும் ஒரு சிக்னல் தாண்டி போக அவரால் முடியவில்லை. நீங்கள் தான் அதற்குக் காரணம் என்று அவர் நினைக்கிறார்...” வாங் வே சொல்லி அதோடு நிறுத்திக் கொண்டார்.

ஆவணத்தைப் பற்றிச் சொன்னவுடன் விஸ்வத்துக்கு ஜிப்ஸி அது குறித்துச் சொன்ன தகவல்கள் நினைவுக்கு வந்தன. ஜிப்ஸி அவனிடம் ”அந்தச் சுவடி இருக்கும் இடத்திற்குப் போய் அதை எடுத்துப் படிக்க முடியாத நிலைமையில் அந்த ஆள் இருக்கிறார். படித்தது நினைவுக்கு வந்ததைச் சொல்லி இருக்கிறார். மீதி அவருக்கும் நினைவில் இல்லை...” என்று சொல்லியிருந்தான். அந்த நிலைமையை உருவாக்கியதே ஜிப்ஸியாகத் தான் இருக்க வேண்டும்.... ஜிப்ஸி சொன்ன போது எல்லாமே முன்கூட்டியே தீர்மானிக்கப்படுவதில் அவனுக்கிருந்த அதிருப்தியைப் பற்றி விஸ்வம் சொல்ல ஆரம்பித்ததால் இந்த விவரங்களைப் பற்றிப் பேச முடியாமல் போய் விட்டது. ”அது அந்த ஆளுக்குத் தெரிய வரும் போது தான் நமக்கும் தெரிய வரும். அந்தக் காலத்தில் சில மந்திரங்கள், விசேஷ பூஜைகள் செய்து சில சுவடிகளை எந்தச் சக்திக்கும், அலைவரிசைக்கும் சிக்காதபடி மறைத்து வைப்பதுண்டு. அதைச் செய்து வைத்திருக்கிறார்கள்” என்று வேறு ஜிப்ஸி சொல்லி இருந்தான்...

விஸ்வம் இப்போதைய சூழ்நிலையில் அந்த இரகசிய ஆவணத்தில் என்ன எழுதியிருக்கிறது என்பது முழுமையாகத் தெரிந்து கொள்வது திட்டமிடுவதில் உதவியாக இருக்கும் என்று நினைத்தான். அவன் கர்னீலியஸின் கணிப்பு பற்றிக் கருத்து தெரிவிக்காமல் சொன்னான். “அவரிடம் உடனடியாக அந்த வங்கி லாக்கரில் போய் படித்துப் பார்த்து என்ன இருக்கிறது என்று சொல்லச் சொல்லுங்கள். இனி மேல் அவர் போவதில் பிரச்னை இருக்காது. அதிலிருப்பதை அவரிடமிருந்து தெரிந்து கொண்டு என்னிடம் சொல்லுங்கள்... அவர் எர்னெஸ்டோவைச் சந்தித்துப் பேசாதபடி நான் பார்த்துக் கொள்கிறேன்...”

வாங் வே பெரும்நிம்மதியை உணர்ந்தார். “அப்படியே செய்கிறேன். இப்போதே போய்ப் பார்க்கச் சொல்கிறேன்...”

விஸ்வம் கேட்டான். “அவருடன் நீங்கள் தொடர்பு வைத்திருப்பதற்கான ஆதாரங்கள் என்னவெல்லாம் அவரிடம் இருக்கின்றன...”

“போனில் அவரிடம் சில முறை பேசியிருக்கிறேன்....”

“அந்த ஆதாரங்களும் இல்லுமினாட்டி கையில் கிடைக்காது. போதுமா?”

வாங் வே மனதாரச் சொன்னார். “மிகவும் நன்றி. அது போதும்....”

“அவருடைய விலாசம் புகைப்படம் இரண்டையும் அனுப்பி வையுங்கள். உங்களிடம் அவர் அந்த ஆவண விவரங்கள் சொன்னவுடன்  வேறு யாரிடமும் பேசாமல் நான் பார்த்துக் கொள்கிறேன்.”

(தொடரும்)
என்.கணேசன்


4 comments:

  1. Super. Sema speed and sema tension.

    ReplyDelete
  2. போன்கால்
    I feel this is not a right tamil word

    ReplyDelete
  3. ஒருவழியாக அந்த ரகசிய ஆவணத்தில் உள்ள ரகசியம் வெளிப்பட போகிறது.... அதை அறிந்தால் climax எப்படி அமையும்? என்பதை கணித்து விடலாம்....

    ReplyDelete