சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, November 8, 2018

இருவேறு உலகம் – 109

க்ரிஷ் மாஸ்டரிடம் தன் சந்தேகத்தைத் தெரிவித்தான். “மாஸ்டர் பணம் தான் இலக்குன்னா அதுக்கு இவ்வளவு சக்திகளை அந்த ஆள் வசப்படுத்தி இருக்க வேண்டிய அவசியமே இல்லையே. பணம் சம்பாதிக்க அதைவிட சுலபமான வழிகள் எத்தனையோ இருக்கே?”

மாஸ்டர் யோசனையுடன் சொன்னார். “எனக்கும் அது தான் புரியலை க்ரிஷ். ஆனா பணம் கையாடல் நடந்திருக்கே…. வேற உத்தேசம் எதுவும் இருக்கற மாதிரி தெரியலையே.”

க்ரிஷ் யோசித்து விட்டுச் சொன்னான். “இந்தக் கையாடல் பணம் எங்கே போயிருக்குன்னு தெரிஞ்சுதுன்னா அதை வெச்சு ஏதாவது  கண்டுபிடிக்க முடியுமான்னு பார்க்கலாம்”

“அதுக்கு அனிருத்துன்னு எங்க இயக்கத்து இளைஞன் கிட்ட சொல்லி இருக்கோம். அவன் ஆன்லைன்ல நடக்கற மோசடிகளைக் கண்டுபிடிக்கறதுல பேர் போனவன். அவன் சர்வதேசப் பரிவர்த்தனைகள் மூலமா நடக்கிற மோசடிகளைக் கூட நிறைய கண்டுபிடிச்சிருக்கான். அவன் கருத்துக்காகத் தான் காத்துகிட்டு இருக்கேன். அவன் நாளைக்கு நேர்லயே வந்து சொல்றதா சொல்லியிருக்கான்….. அவனை மாறுவேஷத்துல வரச் சொல்லி இருக்கேன்…. விஸ்வம் ஏமாத்திட்டு போனதுல நல்லது எதுவும் நடக்கலைன்னு சொல்ல முடியாது. அவன் எச்சரிக்கையா இருக்கணும்னு கத்துக்கொடுத்துட்டு போயிருக்கான்…” சொல்லும் போது மாஸ்டரின் முகத்தில் சின்னதாய் வருத்தம் கலந்த ஒரு புன்னகை வந்து போனது.


ரிணிக்குத் தாயின் நினைவு அதிகம் வந்தது. சண்டை போட்டு பேச்சு வார்த்தை நின்ற சமயத்தில் அவள் காணாமல் போனதால் அம்மாவின் வருத்தம் மிக அதிகமாய் இருக்கும் என்பது அவளுக்குப் புரிந்திருந்தது. அம்மாவின் வருத்ததில் குற்ற உணர்ச்சியும் நிறைய சேர்ந்திருக்கும். அம்மாவைக் கொஞ்சம் சமாதானப்படுத்து என்று க்ரிஷுக்கு அனுப்பிய முதல் தகவலில் சேர்த்து சொல்லி இருக்க வேண்டும் என்று தோன்றியது. முதல் தகவலே அவனுக்குக் கிடைத்ததா, அவன் சரியாகப் புரிந்து கொண்டானா என்று தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாகக் கிடைத்திருக்கும் என்றும் தோன்றியது. தகவலை முத்தத்துடன் அனுப்பி இருக்கிறாள். அடுத்த தகவலுடன் அம்மா பற்றியும் அவனுக்கு நினைவுபடுத்த வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.

அடுத்ததாக தகவல் அனுப்ப இந்த இடத்தையும் சூழலையும் கூர்மையாக கவனிக்க ஆரம்பித்தாள். மிஸ்டர் எக்ஸ் முழு நாளும் அவளைக் காத்துக் கொண்டு இருக்கவில்லை என்று கண்டுபிடித்தாள். ஒரு நாளைக்கு இரண்டு முறை உணவு கொண்டு வந்து கொடுக்கிறான். பகலிலும் இரவிலும்.  அவன் பகலில் உணவு கொடுத்து விட்டுப் போனவன் மறுபடி இரவு உணவு கொண்டு வரும் போது வருகிறான் என்பது தெரிந்தது. இரவு வருபவன் திரும்பப் போவதில்லை. மறுநாள் காலை தான் போகிறான். அவன் வரும் போது உள்ளே இருக்கும் இன்னொரு நபர் வெளியே போகிறான். எக்ஸ் போவதற்கு முன் அந்த இன்னொரு நபர் வந்து சேர்கிறான்.. இதை எல்லாம் அந்தக் கட்டிடத்தில் இருந்து ஒரு பைக்கும் ஒரு ஸ்கூட்டரும் கிளம்பும் சத்தம், வந்து சேரும் சத்தம் இரண்டையும் வைத்தும் கட்டிடத்தின் கீழ்க்கதவு திறக்கும் போதும், மூடும் போதும் வரும் கிறீச் சத்தத்தை வைத்தும் அவள் அனுமானித்தாள். எக்ஸும் அந்த இன்னொரு மனிதனும் மெல்லக்கூடப் பேசிக் கொள்ளவில்லை. எக்ஸ் கட்டிடத்துக்குள் வந்தவுடன் அவன் அவள் அறைக்கு வந்து விடுவதில்லை. சுமார் அரை மணி நேரமாவது கழித்து தான் வருவான். உள்ளே வந்தவுடன் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருப்பதைப் பார்த்து விட்டு பிறகு தான் அவள் இருக்கும் அறைக்கு வருகிறான் போல இருந்தது.

இரண்டாவது வேளை உணவு கொண்டு வரும் போதே மனோகர் கேட்டான். “நீ தியானம் செய்கிறாயா?”

“தியானமா? நானா? என்னை நீ ரொம்பவே உசத்திட்டே தேங்க்ஸ். தியானம் எல்லாம் க்ரிஷ் சப்ஜெக்ட். எனக்கு சுட்டுப் போட்டாலும் வராது. ரெண்டு நிமிஷம் தியானம் செய்ய உக்காந்தா ரெண்டாயிரம் எண்ணம் அந்த ரெண்டு நிமிஷத்துல வந்துடும்….” என்று சொல்லி ஹரிணி சிரித்தாள். அதே சமயம் உள்ளுக்குள் நினைத்துக் கொண்டாள். ’க்ரிஷுக்குத் தகவல் அனுப்ப உக்காந்ததை சிசிடிவி கேமரால பாத்து தியானம்னு நினைச்சுகிட்டான் போல் இருக்கு. இனிமே கவனமா வேற விதமா அனுப்பணும்….’

மனோகர் அவள் பற்றி விசாரித்து நிறைய தெரிந்து வைத்திருந்தான். அதில் தியானம் அவளுக்குத் தெரிந்ததாய் யாரும் சொல்லவில்லை. கொஞ்ச நஞ்ச சந்தேகத்தையும் அவள் உடனே சொன்ன பதில் நீக்கி விட்டது.

அடுத்த நாள் காலையில் மனோகர் போய் அரை மணி நேரம் கழித்து  கட்டிடத்தின் கீழே பெரிய வாகனம் ஒன்று வந்து நின்ற சத்தம் கேட்டது. லாரியாக இருக்க வேண்டும்…. அதிலிருந்து இறங்கியவர்கள் சத்தமாக எதையோ பேசிக் கொண்டார்கள். லாரி டிரைவர் மற்றும் கூலி ஆட்கள் போல் தெரிந்தது. கீழ்க்கதவு கிறீச் சத்தத்துடன் திறக்கப்பட்டது. அவர்கள் வேறு யாரோ நபர் ஒருவரிடமும் பேசினார்கள். அந்த ஆள் தான் இந்தக் கட்டிடத்தில் எக்ஸ் இல்லாத போது தங்குபவனாய் இருக்க வேண்டும். சத்தமில்லாமல் பேசினதால் அவன் பேசியது என்ன என்று அவளுக்குக் கேட்கவில்லை. ஏதோ பொருட்களை இறக்கி வைக்கிறார்கள் என்பது கேட்ட சத்தங்களில் இருந்து தெரிந்தது.

இங்கிருந்து கத்தினால் அவர்கள் வந்து காப்பாற்றக்கூடுமோ என்கிற எண்ணம் அவளுக்கு உடனே வந்தது. ஆனால் அது ஆபத்தாகவும் தோன்றியது. எல்லாருமே  எதிரியின் ஆட்களாக இருக்கலாம். அதனால் தான் தைரியமாக அவளை அங்கே வைத்திருக்கிறார்கள். இல்லாவிட்டாலும் இங்கு காவல் காக்கும் இன்னொருவனை எதிர்த்து எதுவும் செய்ய முடியாதவர்களாக இருக்கலாம். எனவே இப்போது கத்துவது எக்ஸ் முன்பே எச்சரித்தபடி சித்திரவதையில் முடியலாம். அவசரப்படக்கூடாது என்று தீர்மானித்து ஹரிணி மௌனம் காத்தாள். நாற்பது நிமிடங்கள் கழித்து கிறீச் சத்தத்துடன் கதவு சாத்தப்பட்டது. லாரி கிளம்பிப் போன சத்தம் கேட்டது. மறுபடி கட்டிடத்தில் அமைதி. இப்போது தெருவில் போய் வந்து கொண்டிருந்த வாகனங்கள் சத்தம் மட்டும் தான் கேட்க ஆரம்பித்தது. அதுவும் அதிகம் இல்லை. போக்குவரத்து குறைவான தெருவாக இது இருக்க வேண்டும். இந்தக் கட்டிடம் ஒரு குடோனாக இருக்கக்கூடும். இந்த முதல் மாடியும் குடோனாகவே இருக்கலாம். அதனால் தான் ஜன்னல் எதுவும் இல்லை. இத்தனை உயரத்தில் மேல் சுவர். கடத்தலுக்காகவே கட்டியது போல் இருக்கிறது என்று முன்பு சந்தேகப்பட்டது தவறு. கட்டும் போதே அப்படி யாரும் கட்ட மாட்டார்கள். குடோனுக்காகத் தான் அப்படிக் கட்டி இருக்கிறார்கள். அது கடத்தலுக்காகவும் பொருத்தமாக இருப்பதால் உபயோகப்படுத்தியிருக்க வேண்டும். அதுவும் அடிக்கடி திறக்காத எப்போதாவது திறக்கும் குடோன்.

இது குடோனாக இருக்கலாம் என்ற தகவலை க்ரிஷுக்கு எப்படி அனுப்புவது என்று ஹரிணி யோசிக்க ஆரம்பித்தாள்….


மாஸ்டருக்குத் தன் குருவைப் பற்றிச் சொன்ன அளவு சலிக்கவில்லை. பேரன்போடு குரு தனக்காகச் செய்த ஒவ்வொன்றையும் நினைவுகூர்ந்தார். அவர் குருவும் அவரும் எங்கெல்லாம் அமர்ந்து பல விஷயங்களைப் பேசுவார்கள், அவர் எவ்வளவு எளிமையானவர், எவ்வளவு நல்லவர், அவர் போதித்திருந்த மறக்க முடியாத பெரிய உண்மைகள் என்னென்ன என்று அவர் சொல்ல க்ரிஷ் சுவாரசியத்தோடு கேட்டுக் கொண்டான். இப்படி நேசிக்கும் ஒரு சிஷ்யன் கிடைக்க இவர் குரு கண்டிப்பாக தவம் செய்திருக்க வேண்டும் என்று தோன்றியது….

அவனிடம் மனம் விட்டுப் பேசியதில் மாஸ்டர் மனம் மிக லேசானது. “உன் பயிற்சிகள் எப்படிப் போகிறது?” என்று கேட்டார்.

”சிலசமயம் நல்லா ஒழுங்கா போகுது. ஆனா சிலசமயம் மனசு முரண்டு புடிக்குது. ஹரிணியைக் காப்பாத்திட்டு மத்த எல்லாத்தையும் செய்னு கறாரா சொல்லுது…. அது சொல்றதை எல்லாம் கேட்டுகிட்டு ‘இந்தப் பயிற்சிகள் எல்லாமே அவளைக் காப்பாத்தறதுக்காகவும் தான். முழு பலத்தோடு இருந்தால் தான் எதிரியை ஜெயிக்க முடியும்’னு பொறுமையா சொல்லி திரும்ப பயிற்சிகளுக்குக் கொண்டு போறேன். சில சமயம் மனசு ஒத்துழைக்குது. சில சமயம் புரிஞ்சுக்க மறுக்கற குழந்தை மாதிரி அழுது தகராறு பண்ணுது” என்று சொல்லி க்ரிஷ் வருத்தம் கலந்து சிரித்தான்.

க்ரிஷின் மிகப்பெரிய பலமே எதையும் எதிர்ப்பதில் தன் சக்திகளை அதிக விரயம் செய்யாமல் இருப்பது தான் என்று மாஸ்டர் நினைத்தார். உறுதியாக இருக்கும் அதே சமயம் தீவிரமாய், மூர்க்கமாய் எதற்கு எதிராகவும் அவன் மல்லுக்கட்டி நிற்பதில்லை….

இருவரும் நள்ளிரவு வரை பேசிக்கொண்டிருந்தார்கள். மறு நாள் காலை அனிருத் தாடி, மீசை, சீக்கியர்களின் குல்லாய் எல்லாம் போட்டுக் கொண்டு அங்கு வந்தான். அவன் கண்டுபிடித்திருந்த தகவல்கள் அவர்களுக்குப் பேரதிர்ச்சியாகவும், தலைசுற்ற வைப்பதாகவும் இருந்தன.

(தொடரும்)


என்.கணேசன்

5 comments:

  1. Never ending suspense. Super sir. Is there any bonus for miladi nabi? Because I find it difficult to wait till next Thursday.

    ReplyDelete
  2. அனிரூத்தின் அதிர்ச்சி ஊட்டும் செய்திக்காக நானும் வெயிட்டீங்....

    ReplyDelete
  3. Waiting for Shivaji bro... its very nice story... but somewhat Shivari THe Real Boss of all stories

    ReplyDelete
  4. அனிரூத் வந்ததும் முடிஞ்சிடுச்சே...!!!
    க்ரிஷின்... முரண்டு பிடிக்கும் தன் மனதினை கையாலும் விதம்...சக்தியை விரயம் செய்யாமல் தவிர்த்தல்...போன்ற செயல்கள்.. அருமை...

    நன்மையின் அணியில் இருப்பர்கள் எப்போது தான்... தன் பலவீனமான பகுதியான அந்த "செணடிமென்டை" சரி செய்வார்களோ? தெரியவில்லை...

    ReplyDelete