சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Friday, July 24, 2009

இந்தப் பாத்திரம் நிரம்புவதில்லை!


ஒரு சு·பி கதை...

ஒரு அரசர் தனியாக நகர்வலம் சென்று கொண்டிருந்தார். எத்தனையோ வேலைகளின் அழுத்தத்தில் இருந்து தப்பிக்க அவருக்கு தனிமையின் அமைதி தேவைப்பட்டது. அப்படிச் சென்று கொண்டிருக்கையில் ஒரு பிச்சைக்காரன் அவரிடம் வந்து பிச்சை கேட்கிறான். அரசர் எரிச்சலடைந்து "நானே அமைதிக்காக தனியாக வந்திருக்கிறேன். என் அமைதியைக் கெடுக்காதே" என்று சொல்லி விரட்டுகிறார். பிச்சைக்காரன் வாய் விட்டுச் சிரித்துச் சொன்னான். "அரசே! உங்கள் அமைதி இப்படிப் பலராலும் கெடக் கூடிய நிலையில் இருந்தால் அதற்குப் பெயர் அமைதியே அல்ல"

வந்திருப்பவன் வெறும் பிச்சைக்காரர் அல்ல என்பதைப் பேச்சிலிருந்தே புரிந்து கொண்ட அரசர் மன்னிப்பு கேட்டுக் கொண்டு "உங்களுக்கு என்ன வேண்டுமோ கேளுங்கள், தருகிறேன்" என்று சொல்ல அந்தத் துறவி ஏளனமாக சிரிக்கிறார். "அரசே! உங்களால் முடியாததை எல்லாம் தர முடியும் என்று வாக்குறுதி கொடுக்காதீர்கள்" என்று கூறுகிறார்.

நாடாளும் மன்னவனுக்குத் தன்னால் தர முடியாத செல்வமா என்று கர்வம் வர "உங்களுக்கு என்ன வேண்டும்?" என்று கேட்கிறார்.

துறவி தன் பிச்சைப் பாத்திரத்தைக் காட்டி "இது நிறைய பொற்காசுகள் வேண்டும்" என்கிறார்.

மன்னனுக்கு இவ்வளவு குறைவாகக் கேட்டது தன்னை சிறுமைப்படுத்துவது போல் தோன்றியது. ஆனாலும் ஒன்றும் சொல்லாமல் அந்தத் துறவியை அரண்மனைக்கு அழைத்துச் சென்று ஒரு தாம்பாளம் நிறைய பொற்காசுகள் வரவழைத்து அந்தப் பிச்சைப் பாத்திரத்தில் கொட்டுகிறார். கொட்டக் கொட்ட பிச்சைப் பாத்திரம் நிரம்பாமல் விழுங்கிக் கொண்டே இருக்கிறது. மன்னனுக்கு அது கௌரவப்பிரச்சினை ஆகி விடுகிறது. கஜானாவில் இருந்து ஒரு மூட்டை நிறைய பொற்காசுகள் வரவழைக்கிறார். அதனாலும் அந்தப் பாத்திரம் நிரம்பவில்லை. இன்னும் மூட்டை மூட்டையாகப் போட்டும் அந்தப் பிச்சைப் பாத்திரம் நிரம்பாமலிருக்க மன்னன் கர்வம் கரைந்தது. துறவியிடம் தன் தோல்வியை ஒப்புக் கொண்டார்.

துறவி சொன்னார். "மன்னா! உன்னால் மட்டுமல்ல குபேரனே தன் கஜானாவைக் கொண்டு நிரப்பப் பார்த்தாலும் இந்தப் பிச்சைப் பாத்திரம் நிரம்பாது. காரணம் இது சாதாரண பிச்சைப் பாத்திரம் அல்ல. இது நிறைய பேராசைகளுடன் வாழ்ந்து, நிறைய செல்வத்தை சேர்த்தும் திருப்தி இல்லாமல் இறந்து போன ஒரு மனிதனின் மண்டை ஓட்டினால் செய்யப்பட்ட பாத்திரம்...."

இருந்த போது மட்டுமல்ல இறந்த பின்னரும் நிறைக்க முடியாத மனோபாத்திரம் அது.

இன்றைய நம் ஊழல் அரசியல்வாதிகளிடம் இருக்கும் சொத்து பல்லாயிரம் கோடிகள் இருக்கும் என்று புள்ளி விவரங்கள் சொல்கின்றன. அவர்களில் யாராவது 'வேண்டுமளவு சம்பாதித்து விட்டோம். பல தலைமுறைகளுக்குத் தேவையான அளவு சொத்துக்கள் சேர்த்து விட்டோம். போதும். இனியாவது பாவப்பட்ட பொதுமக்கள் பணத்தை சுரண்டாமல் அவர்கள் பணத்தை அவர்களுக்காகவே பயன்படுத்துவோம்' என்ற நல்ல தீர்மானத்திற்கு வருகிறார்களா?

உண்ண உணவில்லாமல், உடுக்க சரியான உடையில்லாமல், இருக்க சிறு குடிசையுமில்லாமல் எத்தனையோ கோடி மக்கள் தினமும் போராடுவதைப் பார்த்த பின்னராவது அவர்களுக்கு மேலும் மக்களை சுரண்டுவதை நிறுத்த மனம் வருகிறதா? அவர்களது மனோபாத்திரம் பணத்தை மட்டுமல்லாது, அவர்களது மனசாட்சியையும், மனித நேயத்தையும் சேர்த்தல்லவா கபளீகரம் செய்து விட்டிருக்கிறது. போதாது இன்னும் அதிகம் வேண்டும் என்று கடைசி மூச்சு வரை கேட்கும் பிச்சைப் பாத்திரமாக அல்லவா அது இருக்கிறது.

அவர்களிடம் இருப்பது செல்வமா, பிச்சைக்காரத்தனமா?

- என்.கணேசன்

8 comments:

  1. நல்ல பதிவிற்கு நன்றி.


    அவர்களிடம் இருப்பது செல்வமா, பிச்சைக்காரத்தனமா.?

    கோவைகாரர்கள் மிக்க மரியாதையுடன் பேசுபவர்கள் என்று அறிவேன். அதனால் இப்படி கேட்டுள்ளீர்கள்.

    சென்னை பாஷையில் சொன்னால்..... xxx

    ReplyDelete
  2. சத்தியமா சொல்றேன். அந்தத் துறவி கையில இருந்த பாத்திரம் நம்ம அரசியல்வாதி ஒருத்தனோட மண்டை ஓட்டால செஞ்சது தான்.

    ReplyDelete
  3. மிக அருமையான பதிவு ..... நன்றி

    ReplyDelete
  4. திருப்தி இல்லை எதுவும் இல்லை தான். நல்ல பதிவு. நன்றி
    Swami

    ReplyDelete
  5. பசித்து வந்து பானையை பார்க்காத... குளித்து விட்டு வந்து கொடியை பார்க்காதா வழ்க்கையை கொடு இறைவா என்று மட்டும் கடவுளிடம் பிராத்தனை செய் என்று ஒரு ஆச்சி சொன்னார்கள் என் சின்ன வயதில்....

    அதாவது மாற்றி உடுப்பும் அடுத்த வேளை உணவும் இருக்கு என்ற நம்பிக்கையுடன் வாழும் வாழ்க்கையே நிறைவானது அதற்கு மேல் அனைத்தும் பேராசையே...

    ReplyDelete
  6. பயனுள்ள பதிவுகளைத் த்ந்துதவுவதற்கு மிக்க நன்றி.

    ReplyDelete