முக்தானந்தா தொடர்ந்து சொன்னார். “... அவளுடைய தந்தையின் செயலால் எல்லாமே வெறுத்துப் போய் நிம்மதிக்காக ஞான மார்க்கத்தில் நுழைந்தவள் அவள். பின் எங்கள் எல்லோரையும் விட ஆன்மீகத்தில் மிக ஆழமாய்ப் போனவள். அவள் எங்கள் எல்லோரையும் விட அதிகமாக, யோகாலயத்தின் எதிர்காலக் கனவுகளை வளர்த்துக் கொண்டவள். வயதில் மிக இளையவளானாலும் பிரம்மானந்தா உட்பட நாங்கள் எல்லோரும் அவளை மதித்தோம். இங்கே விரும்பத்தகாத மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்தவுடன் அவள் எப்போதோ இங்கிருந்து போய் விடுவாள் என்று நான் எதிர்பார்த்தேன். எங்கே போனாலும் அவளுடைய அறிவுக்கும், ஞானத்திற்கும் சிறப்பான இடம் கிடைத்திருக்கும். ஆனால் அவள் ஏன் போகவில்லை என்பது தெரியவில்லை. பிரம்மானந்தா மாறியது போல் அவளாலும் மாற முடியும் என்று என்னால் நம்ப முடியவில்லை. ஆனால் அவள் மாறாமல் இதையெல்லாம் எப்படி சகித்துக் கொண்டிருக்க முடியும் என்றும், பிரம்மானந்தாவுடன் நெருக்கமாக இருக்க முடியும் என்றும் எனக்கு இன்னமும் புரியவில்லை.”
முக்தானந்தா சொல்வதை எல்லாம் கேட்கையில் அவனுக்கும் கல்பனானந்தா ஒரு புதிராகவே தோன்றினாள்.
முக்தானந்தா தொடர்ந்து சொன்னார். “எனக்குத் தெரிந்த கல்பனானந்தா ஆன்மீகத்தில் ஈடுபாடு உள்ளதைப் போலவே பெண் உரிமைக்காகவும் தைரியமாய் குரல் கொடுப்பவள். அவள் பட்ட கஷ்டங்கள் அவளுக்காக மட்டுமல்லாமல் மற்ற பெண்களுக்காகவும் போராடத் தூண்டியிருந்தன. அதனால் தான் நான் அன்றைக்கு, சைத்ராவை கல்பனானந்தா காட்டிக் கொடுத்திருக்கவோ, அவளுடைய மரணத்திற்குக் காரணமாய் இருந்திருக்கவோ, வாய்ப்பில்லை என்று உறுதியாக சொன்னேன்....”
அப்படிப்பட்ட கல்பனானந்தா எந்த விதமான நிர்ப்பந்தங்களால் சிக்கி இங்கேயே இருக்கிறாள் என்பது ஷ்ரவனுக்கும் தெரியவில்லை. ஆனால் சைத்ரா பற்றிய உண்மைகளை அறிந்தவளும், சைத்ரா சொன்ன யோகியை அறிந்தவளுமான ஒருத்தி இங்கே இருக்கிறாள் என்பதும், அவள் முழுவதுமாக எதிரிகள் கோஷ்டியில் சேர்ந்தவளுமல்ல என்பதும் அறிந்து கொள்ள முடிந்தது அவனுக்குத் திருப்தியளித்தது.
மறுநாள் காலை அவன் வழக்கம் போல் மந்திரத்தை ஜபித்துக் கொண்டிருந்த போது மறுபடியும் அந்த ஓநாய் அவனுக்குத் தென்பட்டது. அவன் மகிழ்ச்சியாக ”ஹாய் நண்பா” என்று மனதிற்குள் அழைத்தான். ஓநாய் அவனை நெருங்கி வந்து அவனைத் தொட்டது. இப்போது அவனுக்கு உடலெங்கும் மின்சாரம் பாய்ந்தது போல் இருந்தது. ஆனால் அது தாங்க முடிந்ததாக இருந்தது. கூடவே உடல் இலகுவாவது போல் ஒரு உணர்வு அவனுக்கு ஏற்பட்டது. நன்றியுடன் அந்த ஓநாயை அவன் பார்த்தான். ஓநாய் தீ உமிழும் கண்களால் அவனைப் பார்த்துக் கொண்டிருந்து விட்டுத் திரும்பியது. அது பின் வேகமாக நகர்ந்தது.
அது போகுமிடமெல்லாம் அவனால், ஆச்சரியகரமாக, பார்க்க முடிவதை ஷ்ரவன் பிரமிப்புடன் பார்த்தான். ஓநாய் யோகாலயத்தின் அலுவலக அறைக்குள் நுழைந்தது. அது நுழையும் வரை, மூடியிருந்த அலுவலக வாசல் கதவு தான் ஷ்ரவனுக்குத் தெரிந்து கொண்டிருந்தது. ஆனால் அது கதவை ஊடுருவி உள்ளே நுழைந்தவுடன், அலுவலகத்தின் உட்பக்கம் தெரிய ஆரம்பித்தது. அவன் இந்தப் புதிய முன்னேற்றத்தில் திகைத்தான். இது போன்ற வேறு இடக் காட்சிகள் அவனுக்கு இதுவரை தெரிந்ததில்லை.
ஓநாய் நேராக உள்ளே உள்ள ஹாலுக்குப் போனது. உள்ளே கம்ப்யூட்டர்கள் மட்டுமே இருந்தன. ஆட்கள் இருக்கவில்லை. ஓநாய் ஒரு கம்ப்யூட்டருக்கு முன்னால் உள்ள நாற்காலியில் தாவி அமர்ந்தது. ஓநாய் தாவி அமர்ந்ததும், தானாக அந்தக் குறிப்பிட்ட கம்ப்யூட்டர் மட்டும் இயங்க ஆரம்பித்தது. ஷ்ரவன் திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான். கம்ப்யூட்டர் திரையில் தெரிந்தவை எதுவும் புரியவில்லை. ஷ்ரவன் உற்றுப் பார்த்தான். ஏதோ வரவு செலவுக் கணக்கு போல் இருந்தது. ஓநாய் அவனைத் திரும்பிப் பார்த்தது.
அவன் மானசீகமாக அதனிடம் கேட்டான். “என்ன சொல்கிறாய்?”
அது அவனுக்குக் கூடுதலாக எதையும் காட்டாமல் மறைந்து போனது. ஷ்ரவன் தொடர்ந்து அந்த மந்திரத்தை ஜபித்து 1008 கணக்கை முடித்த பின், ஓநாய் சொல்ல வந்தது என்னவாக இருக்குமென்று யோசித்தான். அவன் கம்ப்யூட்டரில் பார்த்தது வரவு செலவுக்கணக்காகத் தான் இருக்குமென்றால் சைத்ராவின் மரணத்திற்கும், அதற்கும் என்ன சம்பந்தமிருக்கும்? அவள் யோகாலயத்தில் எப்போதும் உள்ளே அலுவலகத்தில் வரவுசெலவுக் கணக்கு வேலை பார்த்தவள் அல்ல. அதனால் அவள் அதில் ஏதாவது குளறுபடியைக் கண்டுபிடித்து, அதில் எந்தப் பிரச்சினையும் வந்திருக்க வாய்ப்பில்லை.
அப்படியிருக்கையில் ஓநாய் ஏன் அதைக் காட்டுகிறது. ஆடிட்டிங் வேலைக்கும் இந்தக் கொலைக்கும் என்ன தொடர்பிருக்க முடியும்? ஆடிட்டிங் என்ற வார்த்தை அவன் எண்ணத்தில் வந்து போனவுடனேயே, அவன் மூளையில் ஒரு பொறி தட்டியது. ஆடிட்டர்!
அவன் கண்களைத் திறந்த போது முக்தானந்தா அவனையே பார்த்துக் கொண்டிருந்தாலும், அவனைக் கேள்வி கேட்டு தொந்தரவு செய்ய அவர் விரும்பவில்லை. எல்லாவற்றையும் அவரிடம் சொல்லிக் கொண்டிருப்பது அவனுக்கு சாத்தியமும் இல்லை. அவர் அதைக் கேட்டு எதுவும் செய்யப் போவதுமில்லை. அவன் நம்பும் மந்திர சக்தி அவனுக்கு வழிகாட்டி உதவட்டும் என்று அவரும் பிரார்த்தித்து மௌனமாக இருந்தார்.
அன்று காலை ஷ்ரவன் தோட்ட வேலைக்குப் போன போது கல்பனானந்தா மற்ற துறவிகளுக்கு தோட்ட வேலைகளை ஒதுக்கி, என்ன செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தாள். அவர்கள் அங்கிருந்து செல்லும் வரை ஷ்ரவன் அமைதியாகக் காத்திருந்தான். அவர்கள் பேசினால் கேட்கும் இருபதடி தொலைவில் தான் பாண்டியனின் ஆள் ஒருவன் நின்றிருந்தான். அதனால் கல்பனானந்தா ஷ்ரவனிடம் மண்புழு உரம் போட வேண்டிய இடங்களைச் சொன்னதோடு நிறுத்திக் கொண்டாள்.
வரிசையாக வைத்திருந்த மண்புழு உரப் பைகளில் ஒன்றை எடுத்துக் கொண்டு கிளம்பிய ஷ்ரவனுக்கு இன்று அவள் கண்டிப்பாக அவனிடம் வந்து பேசுவாள் என்று உள்ளுணர்வு சொன்னது. இன்று அவன் போகும் இடங்கள் சில, மற்றவர்களும் வேலை செய்து கொண்டிருந்த இடங்களாக இருந்தன. ஆனால் இரண்டு இடங்கள் ஒதுக்குப் புறமான இடங்களாக இருந்தன. அந்த இரண்டு இடங்களில் அவன் வேலை செய்து கொண்டிருக்கும் போது அவள் கண்டிப்பாக வருவாள் என்று எதிர்பார்த்தான்.
இன்று அவன் குமரேசனிடமும் ஒரு முக்கியத் தகவல் சொல்ல வேண்டி இருந்தது. குமரேசன் எங்கே வேலை செய்கிறான் என்று ஷ்ரவன் பார்வையால் தேடினான். நல்ல வேளையாக அவன் போய் மண்புழு உரம் போட வேண்டிய இடம் ஒன்றுக்கு அருகில் தான் குமரேசன் இருந்தான். அங்கே ஒரு மூத்த துறவி ஒருவரைத் தவிர வேறு யாரும் இல்லை.
ஷ்ரவன் அந்த இடம் நோக்கி நிதானமாக நடக்க ஆரம்பித்தான். தோள் பட்டையில் ஏதோ பிடித்துக் கொண்டதைச் சரி செய்யும் பாவனையில் ஷ்ரவன் தோள்பட்டையைப் பிடித்துக் கொண்டு முழங்கையை மேலே உயர்த்தினான். இந்த சமிக்ஞைக்குப் பொருள்: “நான் உன்னிடம் பேச வேண்டியிருக்கிறது”
குமரேசன் அதைப் பார்த்தான். ஆனால் எந்த விதமான எதிர்வினையும் காட்டாமல் அவன் செய்து கொண்டிருந்த வேலையைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தான். ஷ்ரவன் அவன் வேலை செய்து கொண்டிருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள செடிகளுக்கு மண்புழு உரம் போட்டுக் கொண்டிருந்த போது, குமரேசன் ஒரு மண்வெட்டியை எடுத்துக் கொண்டு அவனருகில் வேறெதோ வேலை செய்வது போல் வந்தான்.
ஷ்ரவன் சுற்றுப்புறத்தைப் பார்த்தான். மூத்த துறவி ஐம்பதடிகள் தொலைவில் எதோ வேலை செய்து கொண்டிருந்தார். கண்காணிப்பாளன் அவருக்கும் ஐம்பதடிகள் அந்தப்பக்கம் தள்ளி நின்று கொண்டிருந்தான். ஆக கண்காணிப்பாளனுக்கும் ஷ்ரவனுக்கு இடையே நூறடி இடைவெளி இருக்கிறது. முகம் அந்தக் கண்காணிப்பாளனுக்குத் தெரியாதபடி வைத்துக் கொண்டு, குமரேசனுடன் மிகத் தாழ்ந்த குரலில் பேசினால் கண்காணிப்பாளனுக்குத் தெரியவோ, கேட்கவோ வழியில்லை.
ஷ்ரவன் மண்புழு உரத்தைப் பரப்பிக் கொண்டே குமரேசனிடம் தாழ்ந்த குரலில் சொன்னான். “பிரச்சினை வரவு செலவுக் கணக்கு சம்பந்தப்பட்டதாய் இருக்கலாம்னு நினைக்கிறேன். இங்கே அக்கவுண்ட்ஸ் இருக்கற ஆபிஸ் கம்ப்யூட்டர்கள் பக்கம் போகவே வழியில்லை. அதனால் ஆடிட்டர் திவாகரன் ஆபிசில் அந்த முயற்சியை எடுப்பது நல்லது.”
குமரேசன் தலையசைக்கும் தவறையும் செய்யாமல், சட்டியில் மண்ணை அள்ளிக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்.
(தொடரும்)
என்.கணேசன்