என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, February 17, 2022

இல்லுமினாட்டி 142



ம்மானுவல் அவரை ஒரு விசித்திர ஜந்து போல் பார்த்தான். பின் சொன்னான். “துரோகத்திற்குத் தான் தண்டனையே ஒழிய மாற்றுக் கருத்துக்கு அல்ல. துரோகிகளின் அபிப்பிராயங்களை அறிவிக்கும் வேலையை இல்லுமினாட்டி என்றும் செய்வதுமில்லை. கர்னீலியஸ் அவர்களின் மரணத்தை நீங்கள் விளக்கி வழிகாட்டி இருப்பதால் அதே வழியில் உங்கள் மரணத்தையும் விளக்குவோம் உறுப்பினர்களின் மாற்றுக் கருத்துக்கள் தெரிவிக்கப் பட்டால் அவற்றுக்குத் தகுந்த பதில்கள் அளிக்கப்படும். வர்கள் சொல்வது சரியாக இருக்கும் பட்சத்தில் ஏற்றுக் கொள்ளவும் படும். அதனால் தாங்கள் அதையெல்லாம் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை.”

இம்மானுவல் அருகில் இருந்த துப்பாக்கி வீரனை ஒரு பார்வை பார்க்க அந்த துப்பாக்கி வீரன் வெளியே சென்று ஒரு ஒயின் பாட்டிலோடு உள்ளே நுழைந்தான். அவன் கையிலிருந்த இத்தாலிய ஒயின் பாட்டிலை வாங்கி இம்மானுவல் வாங் வே முன் வைத்தான்.  தலைவரின் கடைசிப் பரிசு

வாங் வேக்குப் புரியவில்லை. இம்மானுவல் சொன்னான். “உங்கள் விஸ்வத்தின் பரிசும் இதில் கலந்திருக்கிறது…”

வாங் வேக்கு மெல்ல புரிந்தது. சில வினாடிகள் அந்த ஒயின் பாட்டிலையே வெறித்துப் பார்த்தார். இனி எதையும் மாற்றவோ திருத்தவோ வழியில்லை. அவர் போட்ட கணக்கு தவறாகி விட்டது. அது இல்லுமினாட்டியின் கணக்காக இருந்ததால் அடித்தல் திருத்தல்களுக்கு வாய்ப்பு இல்லை. துப்பாக்கி வீரன் ஒரு கண்ணாடி தம்ளரும் எடுத்து வந்து ஒயின் பாட்டில் பக்கத்தில் வைத்தான். ஒன்றுமே சொல்லாமல் வாங் வே அந்த ஒயில் பாட்டிலை எடுத்து தம்ளரில் ஊற்றி எடுத்துக் குடிக்க ஆரம்பித்தார். இம்மானுவல் எதுவுமே சொல்லாமல் எழுந்து போய் விட்டான். அந்தத் துப்பாக்கி வீரர்கள் இருவரும் உணர்ச்சியே இல்லாமல் அவரைப் பார்த்தபடி நின்றிருந்தார்கள். வாங் வே நெஞ்சில் ஒரு பாரம் ஏறுவதை உணர்ந்தார். சிறிது நேரத்தில் அவருக்கு மூச்சிறைக்க ஆரம்பித்தது. அவர் அப்படியே சரிந்தார்.


கிடோ அரிமாவுக்கு நண்பர் மாரடைப்பில் மரணம் அடைந்த செய்தி வந்து சேர்ந்தது. ஏராளமான கனவுகளுடன் துடிப்புடன் வாழ்க்கையை வாழ்ந்தவர், இல்லுமினாட்டியில் மாறாமல் இருந்த தன் நிலையைத் தேக்க நிலையாய் உணர்ந்து மாற்ற முனைந்தவர், அந்த முனைப்பில் தன் வாழ்க்கையையே பணயம் வைத்து விட்டார் என்று அவருக்குத் தோன்றியது. நண்பரின் இந்த முடிவு அவர் மனதைச் சோகமாக்கியது. முன்பிருந்தே நண்பரை எச்சரித்து வந்திருந்த அவர் சாலமனின் முடிவு தெரிய வந்த போது கூடுதலாக எச்சரித்திருந்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக வீழ்ச்சியை நோக்கி வேகமாக ஓடுபவர்கள் எந்த எச்சரிக்கையையும் பொருட்படுத்துவதில்லை. நண்பருடனான பழைய நினைவுகளை எண்ணியபடி அகிடோ அரிமா ஆழ்ந்த வருத்தத்துடன் அமர்ந்திருந்தார்.


சீனாவின் சக்தி வாய்ந்த அரசியல் தலைவர்களில் ஒருவரான வாங் வே ம்யூனிக்கில் மாரடைப்பால் காலமானதையும் அவர் உடல் ஷாங்காய் நகருக்குக் கொண்டு செல்லப்படுவதையும் தெரிவிக்கும் செய்தியை விஸ்வம் தன் அலைபேசியில் படித்தான். அப்படியானால் எர்னெஸ்டோ இன்னமும் உயிரோடு தான் இருக்கிறார். அவர் சென்ற புதன் இரவு அந்த ஒயினைக் குடிக்கவில்லை போலிருக்கிறது. காரணம் இம்மானுவலா, அக்ஷயா என்று தெரியவில்லை. ஒட்டு மொத்தத்தில் விஸ்வத்தின் திட்டம் வெளிப்பட்டு விட்டது…. விஸ்வம் உள்ளிருந்து எழுந்த ஆத்திரத்தை அடக்க முடியாமல் குமுறினான். வாஷிங்டனிலேயே அடுத்த நாள் அந்தக் கிழவர் பொதுக்கூட்டத்திற்கு வந்திருந்தால் அவர் கதையை முடித்து விட அவனிடம் நல்ல திட்டமொன்று இருந்தது. கிழவரோ அவருக்கு ஆலோசனை சொன்னவர்களோ இரண்டாவது அதிர்ஷ்டத்தை நம்பவில்லை போல் இருக்கிறது…. கிழவரைக் கிளப்பிக் கொண்டு போய் விட்டார்கள்.  

தோல்விகள் அவனுக்குப் புதிதில்லை. ஒவ்வொரு பெரிய வெற்றிக்கு முன்னும் அவனுக்குப் பல தடவை கிடைத்தது தோல்விகளே. ஆனால் அவன் தோல்வியை ஏற்றுக் கொண்டு இது வரை முடங்கியதில்லை. ஒவ்வொரு முறையும் அவன் மீண்டே இருக்கிறான். தோல்வியிலிருந்து கற்றுக் கொண்டு, தக்க வகையில் தன்னை மாற்றிக் கொண்டு, கூடுதலாகத் தயார்ப்படுத்திக் கொண்டு மீண்டும் மீண்டும் போராடி வெற்றி பெறும் வரை ஓய்ந்ததில்லை. இப்போதும் அதையே செய்யப் போகிறான்

விஸ்வம் மெல்ல எழுந்து பாதாள அறைக்குப் போக யத்தனித்த போது ஜிப்ஸி சொன்னான். “இத்தனை தெரிந்த அவர்கள் இந்த இடத்தைத் தெரிந்து கொள்ள இன்னும் அதிக காலம் ஆகாது…”

“தெரியும்” என்றான் விஸ்வம்.

“நீ தெரிந்து கொள்ள வேண்டியது இன்னும் இருக்கிறது. க்ரிஷ் இப்போது ம்யூனிக்கில் தான் இருக்கிறான். உதய் மருத்துவமனையில் இருப்பது எல்லாம் நாடகம் தான். உன் சிந்துவை க்ரிஷ் மாற்றி விட்டான்… அவள் இப்போது நிஜமாகவே உதயைக் காதலிக்கவும், க்ரிஷ் குடும்பத்தை நேசிக்கவும் ஆரம்பித்து விட்டாள்.”

விஸ்வம் அதிர்ந்து போனான். ஆத்திரமும் சந்தேகமும் சேர்ந்து அவனுக்குள் எழுந்தன. ”அவள்  காதலில் விழும் ரகம் அல்லவே. சுலபமாகக் கிடைக்கும் பணம், ஆடம்பர வாழ்க்கை அதெல்லாம் தானே அவள் குறிக்கோள். காதல், குடும்பம், பாசம் எல்லாம் அவள் அகராதியிலேயே கிடையாதே. அவளை எப்படி க்ரிஷ் மாற்றினான்?...”

ஜிப்ஸி நடந்ததைச் சொன்னான். விஸ்வத்துக்கு ஆத்திரத்தில் இரத்தம் கொதித்தது. விஸ்வம் கேட்டான். “இதையேன் நீ அப்போதே சொல்லாமல் இப்போது சொல்கிறாய்?”

ஜிப்ஸி சொன்னான். “ஓரளவு நீ பலம் பெற்ற பிறகு உன் உயிருக்கு ஆபத்து வரும் நிலைமை இருந்தால் மட்டும் சொல்லவும், உன் உயிருக்கு ஆபத்து வந்தால் அதைத் தடுக்கவும் மட்டும் செய்வேன் என்று வாக்கு தந்திருக்கிறேன். அதனால் சொல்லவில்லை. ஆனால் இப்போது எல்லாம் கைமீறிப் போகும் போலத் தெரிவதால் தான் சொன்னேன்…”

யாருக்கு வாக்கு தந்திருக்கிறாய், என்ன நடக்கிறது என்றெல்லாம் கேட்க நினைத்தாலும் விஸ்வம் கேட்கவில்லை. போவதற்கு முன் சொல்கிறேன் என்பான் என்று நினைத்து அதை ஒதுக்கினான். உடனடியாக சிந்துவுக்குத் தகுந்த தண்டனையைத் தர வேண்டும், க்ரிஷுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என்று விஸ்வத்துக்குத் தீவிரமாகத் தோன்ற ஆரம்பித்தது.  ஆனால் அதைச் செய்யும் வேலையில் இறங்கினால் சிறிதாவது காலம் வீணாகும். சக்தி நிறைய வீணாகும். அவனுக்கு இப்போது காலமும், சக்தியும் மிக முக்கியம். எதிரிகள் அவனை நெருங்க அதிக காலம் இல்லை. குறைந்த காலத்தில் நிறைய சக்தியை அவன் பெற்றாக வேண்டும். அதைப் பெற்ற பின் அவன் எதிரிகள் ஒவ்வொருவரையும் முறையாக அவன் தண்டிப்பான். அது நிச்சயம்…

“அவர்கள் என்னேரமும் இங்கே வரக்கூடும். இந்த முறை உனக்கு மரணம் நிகழ்ந்தால் இன்னொரு உடலுக்குள் போக முடியாத நிலைமை இருக்கிறது.” ஜிப்ஸி நினைவுபடுத்தினான்.

”தெரியும்” என்றபடி விஸ்வம் பாதாள அறையை நோக்கிப் போனான்.

“என்ன செய்யப் போகிறாய்?” ஜிப்ஸி கேட்டான்.

“அவர்கள் வந்தால் சந்திப்பதற்கு என்னைத் தயார்ப்படுத்திக் கொள்ள போகிறேன்”   

விஸ்வம் பாதாள அறையில் அமைதியாக இறங்கினான். மனதில் இருக்கும் ஆத்திரம் முதலான எதிர்மறை எண்ணங்களை எல்லாம் ஒதுக்கி வைத்தான். அவை அவன் சக்தியைப் பெறவும், பெருக்கிக் கொள்ளவும் இப்போதைக்கு இடைஞ்சல்கள்.  அங்கே வழக்கமாக அமர்வது போல் அவன் கதேயின் கவிதைச் சுவரைப் பார்த்து அமராமல் திரும்பி பிரமிடுக்குள் வரையப்பட்டிருந்த பெருவிழி ஓவியச் சுவரைப் பார்த்து உட்கார்ந்தான்.

கௌதம புத்தர் மகாநிர்வாணம் அடையாமல் இந்த இடத்தை விட்டு எழ மாட்டேன் என்று அசைக்க முடியாத உறுதியுடன் போதிமரத்தடியில் அமர்ந்த கதையை அவன் படித்திருக்கிறான்.  அந்த உறுதியுடன் தான் விஸ்வம் இன்று அமர்ந்தான். அவன் தன் அனைத்து சக்திகளையும் பெறாமல் இங்கிருந்து எழ மாட்டான். பெருவிழியில் பெரும் சக்தி பெறுவான் என்று அந்த ரகசியச் சுவடியில் எழுதி இருந்தது பொய்யாகக்கூட இருக்கலாம். அவன் அந்தச் சக்தியைப் பெறாமலேயே போகலாம். அப்படியானால் அவன் இறந்து போவானே ஒழிய மனதைத் தேற்றிக் கொண்டு எழ மாட்டான். உச்ச இலக்கை அடைவது பெரிய வெற்றி, பெரிய கௌரவம் என்றால் அதற்கு அடுத்த வெற்றி, அடுத்த கௌரவம் அந்த முயற்சியிலேயே கடைசி வரைப் போராடுவது தானே தவிர இலக்கைக் கொஞ்சம் குறைத்துக் கொண்டு அதை அடைவதல்ல. விஸ்வம் இது வரை இலக்குகளுக்கேற்றபடி சக்திகளை வளர்த்துக் கொண்டே வாழ்ந்தவனே ஒழிய சக்திக்குத் தகுந்தபடி இலக்குகளைக் குறைத்து வாழ்ந்தவன் அல்ல. இப்போதும் அவன் அதை அடைவான் அல்லது இறப்பான். இடைப்பட்ட ஒரு நிலையில் வாழ மாட்டான்

(தொடரும்)
என்.கணேசன்



இந்த ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சியில் ப்ளாக்ஹோல் மீடியா பதிப்பகம் பங்கு பெறவில்லை. எனவே நூல்கள் வாங்க விரும்புவோர் வழக்கம் போல் பதிப்பாளரை 9600123146 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

சாணக்கியன் இரண்டு பாகங்களும் இம்மாத இறுதியில் வெளியாகும். வெளியானவுடன் அதை அறிவிக்கிறேன்.

அன்புடன்

என்.கணேசன்

 



     

Wednesday, February 16, 2022

மகாத்மாக்களின் தொடர்புகள்!

ஆன்மிகப் பயணத்தில் ஆத்மசக்திகள்! 33



தியோசபிகல் சொசைட்டி அறிஞர்கள் பேசிய அளவுக்கு மகாத்மாக்கள் என்னும் உயர்சக்தி மனிதர்களை வேறு யாரும் பேசியதில்லை. ப்ளாவட்ஸ்கீ அம்மையாரும், கர்னல் ஓல்காட்டும், தியோசபிகல் சொசைட்டியின் வேறுசில அறிஞர்களும் மகாத்மாக்களைச் சந்தித்ததாகவும், அவர்களிடமிருந்து ஆசிகளையும், அறிவுரைகளையும் பெற்றதாகவும் பலமுறை தெரிவித்து இருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் அவர்களுக்கு யாரோ எழுதி அனுப்பிய சில கடிதங்களிலும் காலி இடங்களில் எல்லாம் மகாத்மாக்களின் குறிப்புகள் இருந்ததாகவும் கூறியிருக்கிறார்கள். இப்போது அப்படிப்பட்ட இரண்டு நிகழ்வுகளையும் அவற்றிற்குப் பின் உள்ள ஆன்மிகக் காரணங்களையும் காண்போம்.

 

கர்னல் ஓல்காட் லடாக்கில் இருந்து காஷ்மீருக்குச் சென்றார். காஷ்மீர் மகாராஜாவும், திவானும், வேறுசில உயர் பிரமுகர்களும் ஆன்மிகத்தில் ஆர்வமுள்ளவர்களாக இருந்தபடியால் கர்னல் ஓல்காட்டுக்கு அங்கே சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சில நாட்கள் தர்பாருக்குச் சென்று ஆன்மிக விஷயங்களில் அளவளாவி விட்டுப் பின் மறுபடி லாகூர் வந்து தங்களுக்கென்று அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களில் அவரும், அவருடன் வந்தவர்களும் இளைப்பாறினார்கள். அவர்களுடைய கூடாரங்களில் எல்லா வசதிகளும் சிறப்பான முறையில் தரப்பட்டிருந்தன. கர்னல் ஓல்காட்டுடன் ப்ரவுன் என்ற அறிஞரும் தங்கியிருந்தார். அவரும் ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடுள்ளவர். அவர் தியோசபிகல் சொசைட்டியில் உறுப்பினரும் கூட.

 

அப்படி ஒரு நாள் தன் கூடாரத்தில் கர்னல் ஓல்காட் இரவு உறங்கிக் கொண்டிருந்த போது அவரை யாரோ தொடுவதாக உணர்ந்தார்.  லாகூரில் வெட்டவெளியில் உள்ள கூடாரத்தில் இருப்பதால் சமூக விரோதிகள் யாராவது வந்திருக்கக்கூடுமோ என்ற அச்சத்தில் கர்னல் ஓல்காட் தன்னைத் தொட்டவரை இறுக்கிப் பிடித்தார். கண்களைத் திறக்கும் முன் அவருடைய வாய் கேள்விகள் கேட்டது. ”யார் நீ? என்ன வேண்டும் உனக்கு?”

 

என்னைத் தெரியாதா? என்னை நினைவில்லையா?” மிக இனிமையான குரல் ஒன்று அவரைப் பதிலுக்குக் கேட்க கர்னல் ஓல்காட் மெய்சிலிர்த்தபடி விழித்துக் கொண்டார். அது அவரை இதற்கு முன்னும் வந்து சந்தித்தும், தகவல்கள் அனுப்பியும் வந்த மகாத்மா! நோய் தீர்க்கும் முயற்சியிலும் அவருக்கு ஈடுபாடிருக்கவும், வெற்றி கிடைக்கவும் காரணமாய் இருந்தவர் அந்த மகாத்மா.

 

இறுக்கிப் பிடித்த கைகளைக் கூப்பி வணங்கியபடி கர்னல் ஓல்காட் உறக்கத்திலிருந்து விழித்தார். கருணையே வடிவாக அவர் அருகில் ஓரிரு நிமிடங்கள் நின்ற மகாத்மா கர்னல் ஓல்காட்டின் தலையைத் தொட்டு ஆசிர்வதித்து விட்டு அவர் கையைப் பிடித்தார். கையில் ஏதோ ஒன்று தரப்படுவதாக கர்னல் ஓல்காட் ஸ்பரிசத்தை உணர்ந்தார். பின் அந்த மகாத்மா மறைந்து விட்டார். கர்னல் ஓல்காட் எழுந்து அமர்ந்து பார்த்த போது ஒரு பட்டுத் துணியில் ஒரு கடிதம் அவருக்கென வைக்கப்பட்டிருந்தது. அதில் சீக்கிரத்தில் இறக்கப் போகும் இரண்டு நபர்கள் பற்றித் தெரிவிக்கப்பட்டிருந்தது. பின் அடுத்ததாக அவர் செய்ய வேண்டிய வேலைகள் பற்றி தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்தக் கையெழுத்து அவருக்கு எப்போதும் வரும் மற்ற கடிதங்களில் காலி இடங்களில் எழுதப்பட்டிருக்கும் கையெழுத்து தான்.

 

சிறிது நேரத்தில் ப்ரவுன் என்ற ஆங்கிலேய அறிஞர் அவருடைய கூடாரத்திற்கு விரைந்து வந்தார். அவர் கையிலும் கர்னல் ஓல்காட் கையில் இருப்பது போன்ற கடிதம் ஒன்று இருந்தது. அவருக்கும் அவர் அறிய வேண்டி இருந்த சில தகவல்களும், அடுத்துச் செய்ய வேண்டியிருந்த கடமைகளும் அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டிருந்தன. ப்ரவுன் பிற்காலத்தில்இந்தியாவில் சில அனுபவங்கள்என்ற தலைப்பில் எழுதியதிலும் தியோசபிகல் சொசைட்டி பத்திரிக்கையில் எழுதிய கட்டுரை ஒன்றிலும் இந்த சம்பவத்தைப் பற்றி விரிவாக எழுதினார்.

 

அங்கு அவர்கள் தங்கியிருந்த சில நாட்களில் இன்னொரு சம்பவம் நிகழ்ந்தது. ஒரு நாள் காலை அவர்கள் எழுந்த போது அவர்கள் வேலையாள் தாமோதர் காணாமல் போயிருந்தான். தகவலறிந்தவுடன் கவலையுடன் எல்லா இடங்களிலும் அவனைத் தேடினார்கள். அவன் உடைமைகள் எல்லாம் அப்படியே அங்கிருந்தன. சுற்று வட்டாரத்தில் விசாரித்த போது அதிகாலையில் அவன் அங்கிருந்து சென்றதைப் பார்த்ததாக ஒருவர் கூறினார். ஏனிப்படி நடந்து கொண்டான் என்று அறிய முடியாமல் குழப்பத்துடன் தன் கூடாரத்திற்கு வந்த போது வேறொரு மகாத்மாவின் ஒரு துண்டுச் சீட்டு கர்னல் ஓல்காட்டின் மேசையில் இருந்தது. தாமோதரைத் தன் பாதுகாவலில் வைத்திருப்பதாகவும் அவனைக் குறித்துக் கவலை எதுவும் வேண்டாம் என்றும் அவன் இரண்டு நாட்களில் திரும்பி விடுவான் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.  

 

காணாமல் போனவனைத் தேட எல்லாரும் அங்குமிங்கும் பரபரவென்று போய்க் கொண்டும், வந்து கொண்டும் இருந்ததால் கர்னல் ஓல்காட்டின் கூடாரத்திற்கு வெளியே எப்போதும் ஆட்கள் இருந்து கொண்டேயிருந்தார்கள். ஆனலும் கர்னல் ஓல்காட்டின் கூடாரத்திற்குள் மகாத்மா போன்ற புதிய ஆள் நுழைந்ததை யாரும் பார்த்திருக்கவில்லை. அந்த மாஸ்டர் எப்போது எப்படி நுழைந்தார், எப்படி கடிதத்தை வைத்து விட்டுப் போனார் என்று கர்னல் ஓல்காட் வியந்தார்.

 

தாமோதர் காணாமல் போனதை லாகூரிலிருந்து கர்னல் ஓல்காட் சென்னையில் இருக்கும் ப்ளாவட்ஸ்கீ அம்மையாருக்குத் தந்தி மூலம் தெரிவித்தார். தந்தியில் அதிக விவரங்கள் எழுத முடியாததால் அவர் அந்த மகாத்மா விட்டுச் சென்ற சீட்டு விவரத்தை அவருக்குத் தெரிவிக்கவில்லை. மறுநாளே ப்ளாவட்ஸ்கீ அம்மையாரிடம் இருந்து தந்தி வந்து சேர்ந்தது. “கவலை வேண்டாம். இரண்டு நாட்களில் வந்து விடுவான் என்று ஒரு மாஸ்டர் என்னிடம் தெரிவித்திருக்கிறார்

 

தந்தியை கர்னல் ஓல்காட்டிடம் தந்தது தபால்தந்தி ஊழியன். பொதுவாக மாஸ்டர்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தந்தி வருமானால் தபால்தந்தி ஊழியர்கள் உருவில் வந்து போகிறவர்கள் உயர்நிலை மனிதர்களே என்பதை கர்னல் ஓல்காட் தன் அனுபவத்தில் பார்த்திருக்கிறார். இப்போது இந்தத் தந்தியைத் தந்தது ஊழியரா அல்லது உயர்நிலை மனிதர் யாராவதா என்று சந்தேகம் வர கர்னல் ஓல்காட் வெளியே ஓடிச் சென்று பார்த்தார். ஊழியராக இருந்தால் சுமார் ஐம்பதடிகள் கூடத் தாண்டியிருக்க முடியாது. அவர்கள் கூடாரம் வெட்டவெளியில் இருந்ததால், அருகில் மரங்களோ, மறைப்பது போல் பாறைகளோ இல்லாமலும் இருந்ததால் கண்டிப்பாக அந்த ஊழியன் காணக் கிடைத்தே ஆக வேண்டும். ஆனால் அந்த ஊழியன் வடிவில் வந்தவர் மறைந்திருந்தார். கண்ணுக்கெட்டிய தூரம் வரை காணக் கிடைக்கவில்லை.

 

மகாத்மாவின் துண்டுச் சீட்டின்படியும், ப்ளாவட்ஸ்கீ அம்மையாரின் தந்தியின் படியும் இரண்டு நாட்களில் தாமோதர் வந்து சேர்ந்தான். அங்கிருந்து காணாமல் போகையில் மிகவும் பலவீனமாயும், சோர்ந்தும் இருந்த தாமோதர் இரண்டே நாட்களில் நிறைய மாறியிருந்தான். ஓரளவு திடகாத்திரமாகவும், விசேஷ சக்தியுடனும், தேஜஸுடனும் காணப்பட்டான். எங்கு போனான் என்று விசாரித்த போது இமயமலையில் இருக்கும் ஒரு மகாத்மாவின் ஆசிரமத்திற்குச் சென்றதாகவும் அவன் தெரிவித்தான்.

 

படிப்பறிவோ, பிரத்தியேக சூட்சும அறிவோ இல்லாத ஒரு வேலையாள் கூட ஆன்மிகத்தில் உண்மையான ஆர்வத்தைக் காட்டும் போது சில அபூர்வ சக்திகளைப் பெறுகிறான் என்பதற்கு ப்ளாவட்ஸ்கீ அம்மையார் சென்னையில் விழுந்து காலில் கடுமையான காயம் ஏற்பட்டதை உடனடியாக வடநாட்டில் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த போது அவன் நேரில் கண்டு வந்தது போல் சொன்னதே நல்ல உதாரணம். அது மட்டுமல்லாமல் அது போல் ஓரளவு முன்னேறியவர்கள் அடுத்த நிலைக்குச் செல்ல மகாத்மாக்களும் உதவுகிறார்கள் என்பதற்கு லாகூரில் அவன் காணாமல் போய் புத்துணர்ச்சியுடனும் தேஜஸுடன் திரும்பி வந்தது இன்னொரு உதாரணம்.

 

பொதுவாக ஆன்மிகப் பாதையில் செல்பவர்களுடைய பயணம் உப்புசப்பில்லாமலும், பெரிய மாற்றங்களும், புத்துணர்ச்சியும் இல்லாமலும் தேக்கநிலையிலேயே இருக்கின்றது என்பதே உண்மை. மகாத்மாக்களின் தொடர்பு அவர்கள் ஆன்மிகத்தில் அடுத்த கட்டத்திற்குச் செல்லவும், அவர்கள் இனி என்ன செய்ய வேண்டும் என்று வழிநடத்தவும் உதவுகின்றது.  அதன் மூலம் ஆன்மிகப் பயணத்தைத் துடிப்புள்ளதாகவும், சுவாரசியம் மிக்கதாகவும் ஆக்குகின்றது. அதுமட்டுமல்ல ஆன்மிக அன்பர்கள் வழிதவறிப் போய் விடாமல் காக்கின்றது. இந்த வகையில் தான் மகாத்மாக்களின் தொடர்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

 

(தொடரும்)

என்.கணேசன்

நன்றி : தினத்தந்தி


இந்த ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சியில் ப்ளாக்ஹோல் மீடியா பதிப்பகம் பங்கு பெறவில்லை. எனவே நூல்கள் வாங்க விரும்புவோர் வழக்கம் போல் பதிப்பாளரை 9600123146 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

சாணக்கியன் இரண்டு பாகங்களும் இம்மாத இறுதியில் வெளியாகும். வெளியானவுடன் அதை அறிவிக்கிறேன்.

அன்புடன்

என்.கணேசன்