தன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.
Sunday, December 19, 2021
Saturday, December 18, 2021
Thursday, December 16, 2021
இல்லுமினாட்டி 133
Wednesday, December 15, 2021
இந்தியாவிலும் தொடர்ந்த நோய் தீர்க்கும் அற்புதங்கள்!
ஆன்மிகப் பயணத்தில் ஆத்மசக்திகள்! 31
கர்னல் ஓல்காட் இலங்கையிலிருந்து இந்தியா வந்த பின்னும் ஏழை எளிய மக்களின் நோய் தீர்க்கும் சேவையைத் தொடர்ந்தார். அவருடைய எல்லா முயற்சிகளும் வெற்றி பெற்று விடவில்லை என்பதை அவர் எந்த விதமான தயக்கமும் இல்லாமல் ஒப்புக் கொண்டார். சில முயற்சிகள் உடனடியாக வெற்றி பெற்றன. சில முயற்சிகள் வெற்றி பெற சில நாட்கள் தொடர்ந்து முயற்சிகள் தேவைப்பட்டன. சில முயற்சிகளில் தற்காலிகமாக அவர் வெற்றி கண்டாலும் பின்னர் அந்த நோய்கள் தொடர்ந்த சம்பவங்களும் உண்டு. சில முயற்சிகள் வெற்றி பெறாமலே போனதும் உண்டு. ஆனால் மருத்துவம் படிக்காமல் தன்னிடம் குணப்படுத்தும் அபூர்வசக்தியை ஏற்படுத்திக் கொண்டு கணிசமான ஆட்களைக் குணப்படுத்தி இருக்கிறார் என்பதே ஆச்சரியப்பட வேண்டிய விஷயமல்லவா?
ஏன் சிலரைக் குணப்படுத்த முடிகிறது, ஏன் சிலரைக் குணப்படுத்த முடிவதில்லை என்ற கேள்விகளுக்கு பதிலை அவர் நீண்டகாலம் யோசித்து இருக்கிறார். சில நேரங்களில் நோயாளிகள் மீது எல்லையில்லாத கருணையும், குணப்படுத்தியே ஆக வேண்டும் என்ற உந்துதலும், குணப்படுத்தி விட முடியும் என்ற நம்பிக்கையும் தீவிரமாக அவருக்குள் எழும் போது அவரால் அந்த நோயாளிகளைக் குணப்படுத்தி விட முடிகிறது என்பதை அவர் அனுபவத்தில் கண்டார். சில சமயங்களில் நோயாளிகளுக்கு அவர் மீது அளவுகடந்த நம்பிக்கை ஏற்படும் போதும் அவரால் அவர்களை நிரந்தரமாகக் குணப்படுத்தி விட முடிகிறது என்பதும் அவருடைய அனுபவமாக இருந்தது. நோயாளிகளுக்கு அவநம்பிக்கை இருக்கும் போதும், அரைகுறை மனநிலைகளில் அவர் இருக்கும் போதும், அவரே மிகவும் களைத்துப் போயிருக்கும் போதும் குணப்படுத்த அவரால் முடிந்ததில்லை. சில நேரங்களில் அவரிடமிருந்து வெளிப்படும் சக்தி போதாமல் இருக்கும் போது சில நாட்கள் தொடர்சிகிச்சை தேவைப்படுவதாகவும் அவர் கண்டார்.
அந்த வகையில் இந்தியாவில் மேற்கு வங்காளத்தில் அவர் நிறைய பேரைப் பல விதமான வியாதிகளிலிருந்து குணப்படுத்தி இருக்கிறார். அந்த நிகழ்வுகளில் மேற்கு வங்காளத்தில் அவராலும் அவருடன் இருந்தவர்களாலும்
மறக்க முடியாத ஒரு நிகழ்வு முகப் பக்கவாதம் வந்து இரண்டு வருடங்களாகக் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த ஒரு பிராமண இளைஞன் சம்பந்தப்பட்டது. அவனால் இரண்டு வருடங்களாகக் கண்களை இமைக்க முடியவில்லை. நாக்கும், உதடும் அவன் கட்டுப்பாட்டில் இல்லை. அவன் நரக வேதனை அனுபவித்து வந்தான் என்பது அவனைப் பார்க்கையிலேயே அவருக்குத் தெரிந்தது.
அவர் அவனைப் பார்த்தது காலை நேரம். அவனிடம் அவர் பெயரைக் கேட்டார். அவனால் தொண்டை வழியாகப் பரிதாபமான ஒலி மட்டும் தான் பதிலாக எழுப்ப முடிந்தது. அவன் மீது அவருக்கு ஆழமான இரக்கம் அவருக்கு ஏற்பட்டது. அவர் முழு சக்தியுடன் அப்போது இருந்தார். அவனை உடனடியாகக் குணப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் அவருக்குள் உறுதியாக ஏற்பட்டது. கர்னல் ஓல்காட் தன் வலது கையை அவனை நோக்கி நீட்டியபடியே பார்வையை உறுதியாக அவன் மேல் பதித்து மிக உறுதியான குரலில் வங்க மொழியில் கூறினார். “இப்போதே நீ குணமாவாய்”
ஒரு கணம் மின்சாரத்தால் தாக்கப்பட்டது போல் அந்த இளைஞனின் உடல் துடித்தது. அவன் கண்கள் ஒரு முறை மூடி மறுபடியும் திறந்தன. அதே போல் அவனுடைய நாக்கும் ஒரு முறை வாயை விட்டு வெளிவந்து மறுபடி உள்ளே போனது. இரண்டு வருட நரக வேதனையிலிருந்து தப்பித்த அந்தக் கணம் சந்தோஷம் கலந்த பெருந்துக்கத்துடன் கத்தியபடியே கர்னல் ஓல்காட்டின் காலில் விழுந்து வணங்கி அவர் காலைக் கட்டிக் கொண்டபடியே அவன் கதறி அழுதான். அங்குள்ள அத்தனை பேர் கண்களும் அந்தக் காட்சியைக் கண்டு ஈரமாயின. கர்னல் ஓல்காட்டும் இறைவனுக்கு நன்றி சொன்னார்.
சில நாட்கள் கழித்து பாபு பத்ரிநாத் பானர்ஜி என்ற குருடர் அவரிடம் வந்தார். அவர் பாகல்பூர் என்ற இடத்தில் நீதிமன்றப் பணியாளராக இருந்தவர். அவர் பார்வைத் திறனை சில வருடங்களுக்கு முன் இழந்திருந்தார். அவரைப் பரிசோதித்த கல்கத்தாவின் தலைசிறந்த கண் நிபுணர்கள் இனி அவர் பார்வை பெற முடியாது என்றும் பார்வை நரம்புகள் முழுமையாகப் பலமிழந்து போய் இருக்கின்றன என்றும் சொல்லி இருந்தார்கள். கர்னல் ஓல்காட்டைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்த அவர் ஒரு சிறுவன் கையைப் பிடித்துக் கொண்டு கர்னல் ஓல்காட்டைத் தேடி வந்தார்.
அவர் நெற்றிப் பொட்டிலிருந்து அரை அங்குலம் விரலை வைத்து சிறிது பிரார்த்தித்து விட்டு கர்னல் ஓல்காட் அவரைத் தொடாமலேயே விரலை அவர் உடலில் இருக்கும் சக்தி மையங்களுக்கு நகர்த்தி வந்தார். அவர் என்ன செய்கிறார் என்று தெரியாவிட்டாலும் அவர் விரல் நகர்த்துகிற இடங்களில் எல்லாம் பாபு பத்ரிநாத் பானர்ஜி ஏதோ உணர்ந்தது போல் நெளிந்தார். பின் கர்னல் ஓல்காட் மறுபடி அவர் கண்கள் அருகில் விரலைக் கொண்டு வந்து தன் சக்திகளை அனைத்தையும் அந்தக் கண்களுக்கு அனுப்ப முயன்றார். பானர்ஜி ஏதோ சிவப்பு ஒளியை அவர் விழிகள் கண்டதாகச் சொன்னார். இது போல் சில நாட்களுக்குச் சிகிச்சை செய்த பின் பானர்ஜியின் ஒரு கண் குணமாகியது. அவர் அந்த ஒரு கண் மூலம் தினசரிப்பத்திரிக்கையின் பொடி எழுத்துக்களையும் தெளிவாகப் படிக்க முடிந்தது என்பது கூடுதல் ஆச்சரியம்.
அதே போல டாக்டர் லாட்லி மோகன் என்ற ஒரு மருத்துவரின் இடது கண்ணும் பார்வையை இழந்திருந்தது. பிரபல கண் மருத்துவர்கள் இருவர் அந்த இடது கண்ணைக் குணப்படுத்த முடியாது என்று சொல்லி விட்டனர். அவரும் கர்னல் ஓல்காட்டை நாடி வந்தார். கர்னல் ஓல்காட் அவர் இடது கண்ணைத் தன் சிகிச்சை முறையில் குணமாக்கினார். வலது கண்ணை மூடி இடது கண்ணால் அவரைப் பத்திரிக்கைச் செய்தியை கர்னல் ஓல்காட் படிக்க வைத்த போது அந்த டாக்டர் அடைந்த மகிழ்ச்சி அளவில்லாதது. அதே போல் ஒரு செவிடரையும் இரண்டு நாள் சிகிச்சையில் கர்னல் ஓல்காட் குணப்படுத்தினார். டமாரச் செவிடராக இருந்த அவர் பல அடிகள் தூரத்தில் இருந்து சாதாரண குரலில் பேசினாலும் அதற்குச் சரியான பதில் தரும் அளவில் குணமானார்.
கர்னல் ஓல்காட்டின் அபூர்வ சிகிச்சை முறைகளையும், குணப்படுத்துதலையும் கேள்விப்பட்டு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ரெவெரெண்ட் பிலிப் எஸ். ஸ்மித் என்பவர் அவரைத் தேடி வந்தார். அவர் வேறு வேலையாக அந்தச் சமயத்தில் இந்தியா வந்திருந்தார். அவர் சில நாட்கள் கர்னல் ஓல்காட்டுடன் தங்கி அவர் சிகிச்சைகளைக் கூர்ந்து கவனித்து அந்தச் சிகிச்சைகளைக் குறித்து வைத்துக் கொண்டு குணப்படுத்துதல்களில் மகிழ்ந்து போனார்.
கர்னல் ஓல்காட்டின் குணப்படுத்தும் திறனைக் கேள்விப்பட்டு அவரை வரவழைத்துக் கௌரவித்தவர்களில் லண்டன் பல்கலைக்கழகத்தில் பி. எச்.டி பெற்ற பாபு பி.சி.ராய் என்ற கல்கத்தாவைச் சேர்ந்த அறிஞரும் ஒருவர். அவர் பிற்காலத்தில் கல்கத்தா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் இருந்தவர். அவர் வீட்டில் மிகப்பெரிய நூலகம் இருந்தது. அந்த நூலகத்தில் எல்லா நூல்களும் வெளிநாட்டு அறிஞர்கள் எழுதிய நூல்களாகவே இருந்தன.
கர்னல் ஓல்காட் கேட்டார். “உங்கள் நாட்டு ஞானிகள், அறிஞர்கள் எழுதிய புத்தகங்கள் எங்கே?”
பி.சி.ராய் அவை எதுவும் தன்னிடத்தில் இல்லை என்று சொல்ல கர்னல் ஓல்காட் அவரிடம் உரிமையுடன் கடிந்து கொண்டார். “உங்கள் ஞானிகள், அறிஞர்கள் எழுதியதை அறிய எங்களைப் போன்றோர் வெளிநாடுகளில் இருந்து வருகிறோம். நீங்களே அந்தப் பொக்கிஷங்களை அலட்சியப்படுத்துவது சரியா?”
பி.சி.ராய்க்கு ஒரு மாதிரியாகி விட்டது. ஒரு வெளிநாட்டுக்காரர் அறிந்திருக்கும் நம் பெருமையை நாம் அலட்சியப்படுத்துகிறோமே என்று வெட்கப்பட்டவர் பின் இந்திய ஞானிகள் எழுதியதை எல்லாம் படித்து பிற்காலத்தில் அது குறித்து ஒரு புத்தகமும் எழுதினார். அதை அறிந்து கர்னல் ஓல்காட் மிக மனம் மகிழ்ந்தார்.
(தொடரும்)
என்.கணேசன்
நன்றி : என்.கணேசன்