என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Monday, November 14, 2022

யாரோ ஒருவன்? 112



காளிங்க சுவாமி அவனிடம் சொன்னார். “பயப்படாதே. ஒரு சக்தி வாய்ந்த கவசம் உனக்குப் போட்டிருக்கிறேன். நீ உன் வேலை முடித்து இங்கே வந்து அந்த ரத்தினத்தை ஒப்படைக்கும் வரை இந்த சக்திக் கவசம் உன்னோடு எப்போதுமே இருக்கும்….”

பீம்சிங் தன் உடலைப் பார்த்தான். எந்தக் கவசமும் அவன் உடம்பில் இருப்பது போல் தெரியவில்லை.

காளிங்க சுவாமி சொன்னார். “அந்தக் கவசத்தைச் சாதாரண கண்களால் பார்க்க முடியாது. ஞானக்கண்ணால் தான் பார்க்க முடியும்

பீம்சிங் தலையசைத்தான். அவனுக்கு இப்போது இருட்டு பழகிப் போயிருந்தது. கர்ப்பக்கிரக விளக்கு வெளிச்சம் எட்டாத கோயில் இருட்டு மூலையில் நின்று கொண்டிருந்த இரண்டு சீடர்களைக் கூட அவனால் நிழல் போலப் பார்க்க முடிந்தது.  காளிங்க சுவாமி மிக ஒல்லியாகத் தெரிந்தார்…. முகத்தில் கண்கள் மட்டுமே பிரகாசமாய் ஜொலித்தன. மூக்கு கழுகின் மூக்கு போல கூர்மையாகவும் முனையில் சற்று வளைந்தும் தெரிந்தது.

அவர் சொன்னார். “இந்த மந்திரக்கவசம் இருக்கும் வரை உன்னை எந்தப் பாம்பும் எதுவும் செய்யாது. பாம்புகள் தான் உன்னைப் பார்த்து பயப்படும். நீ பாம்புகளைப் பார்த்து பயப்பட வேண்டியதில்லை.”

அவர் சொன்னதை அவனும் தன்னுள்ளே உணர்ந்தான். பாம்புகளைப் பற்றி இப்போது யோசிக்கையில் பயம் எதுவும் எழவில்லை.

காளிங்க சுவாமி கேட்டார். “இனி பாம்புகளைப் பார்க்கலாம் அல்லவா?”

அவன் தலையசைத்தான். அடுத்த கணம் கோயிலில் பாம்புகள் நிறைந்திருந்தன. அவன் கண்ணுக்கெட்டிய தூரத்தில் எல்லாம் பாம்புகள் தெரிந்தன. அவன் அமர்ந்திருந்த மண்டலத்திலேயே கூட மூன்று சிறிய பாம்புகள் இருந்தன. அவன் திகைத்தான். இத்தனையும் திடீரென்று எப்படி இங்கே வந்து சேர்ந்தன?

அவர் சொன்னார். “நீ ஆரம்பத்திலேயே பயப்பட்டதால் தான் இந்தப் பாம்புகளை உன் கண்ணுக்குத் தெரியாமல் மறைத்தேன். இவை இங்கேயே தான் இருந்தன...”

பீம்சிங் திகைத்தான். அவன் உணர்ந்த திகைப்பு அவர் சொன்ன தகவலுக்கு மட்டுமல்லாமல் அவன் மனதில் நினைப்பதற்கெல்லாம் அவர் பதில் சொல்வதற்காகவுமாய் இருந்தது.

காளிங்க சுவாமி சொன்னார். ”எழுந்து போய் காளியை வணங்கி விட்டு வா

பீம்சிங் எழுந்து போய் காளியை வணங்கினான். அவன் நடந்த போதும் வணங்கிய போதும் தானாய் பாம்புகள் இடம் கொடுத்து ஒதுங்கிய அதிசயத்தைப் பார்த்தான். வணங்கி நிமிர்ந்த போது காளி சிலையில் கூட இரண்டு பாம்புகள் சுற்றியிருந்ததை அவன் கவனித்தான். முன்பெல்லாம் அவனுக்குக் கிலியை ஏற்படுத்திய பாம்புகள் அங்குமிங்கும் சுற்றி இருப்பது இப்போது எறும்புகள் ஊர்வதைப் போல் ஒரு பொருட்டே அல்லாத விஷயமாக மாறி விட்டிருந்தது.

காளியை வணங்கி விட்டு வந்த போது காளிங்க சுவாமி முன்பிருந்த இடத்தில் இருக்கவில்லை. கர்ப்பக்கிரக விளக்கொளி படாத தெற்கு மூலையிலிருந்து அவர் குரல் மட்டும் கேட்டது. “இங்கே வா     

அவன் குரல் வந்த திசையில் மெல்ல கவனமாய் நடந்தான். ஏனிந்த ஆள் இருட்டான இடமாகவே பார்த்து உட்கார்ந்து கொள்கிறார் என்ற எண்ணம் வர ஆரம்பித்து அவர் எண்ணங்களை வாய் விட்டுச் சொல்வது போலவே புரிந்து கொள்ளக்கூடியவர் என்ற நினைவு வந்து அப்படியே நிறுத்திக் கொண்டான்.

காளிங்க சுவாமி இருட்டில் இருந்தாலும் அவர் இருக்கும் இடத்தில்  ஏதோ இரண்டு ரத்தினக்கற்கள் பச்சையும் நீலமும் கலந்த நிறத்தில் மின்னுவது தெரிந்தது. நெருங்கிய போது அவர் கையில் தான் அந்த ரத்தினங்கள் மின்னுகின்றன என்பது புரிந்தது. அவர் அந்தக் கற்களை அவனிடம் நீட்டியபடி சொன்னார். “நீ எடுத்து வரப் போகும் ரத்தினக்கல் இந்த கல்களை விட இரட்டை மடங்கு பெரியதாக இருக்கும். அதன் ஜொலிப்பும் இதை விட மூன்று மடங்கு அதிகமாய் இருக்கும்.”

அவற்றைக் கையில் வாங்கிய போது பீம்சிங் ஒரு சிலிர்ப்பை உணர்ந்தான். இந்த ஜொலிப்பு அசாதாரணமாக இருப்பதையும் அவன் கண்டான்.

அவர் ஒரு சீட்டை நீட்டினார். “இந்த விலாசத்தில் தான் அந்த ரத்தினம் இருக்கின்றது. இதை வைத்திருப்பவன் சக்தி வாய்ந்தவன். நாகசக்தியை வசப்படுத்தியிருப்பவன்

பீம்சிங் கேட்டான். “உங்களை மாதிரியா?”

இப்போதைக்கு நாகராஜ் அவரையும் விட சக்தி வாய்ந்தவன் தான். அதை ஒத்துக் கொள்வதில் சிறு வருத்தம் இருந்தாலும் என்னையும் விட அவன் சக்தி வாய்ந்தவன்என்று காளிங்க சுவாமி வெளிப்படையாகச் சொன்னார். ஆனால் அது இன்னும் சில நாட்களுக்குத் தான். அந்த விசேஷ நாகரத்தினம் இடம் மாறும் போது சக்தி அளவுகளும் இடம் மாறும். ஒரு வரலாற்றுப் பிழை சரிசெய்யப்படும்.

அவர் சிறுவனாக இருந்த போதே இந்தப் பாதைக்கு வந்து விட்டார். கடந்த 75 வருடங்களாக அவர் ஆயில்ய நட்சத்திர நாட்களில் ராகு காலத்தில் நாகங்களுக்கு விசேஷ பூஜை செய்கிறார். அந்த நாட்களில் பூஜை முடியும் வரை அவர் தண்ணீர் கூடக் குடிப்பதில்லை. வருடத்திற்கு மூன்று முறை உக்கிர பூஜை செய்கிறார். அந்த உக்கிர பூஜை நாட்களில் முழு நாளும் அவர் பட்டினி தான். அப்படி மிகவும் நியம நிஷ்டைகளைக் கடைப்பிடித்து ஏராளமான பூஜைகள் செய்து இந்த நாகசக்தியின் உச்சத்திற்காகவே வாழ்ந்து வரும் அவருக்கும், தீவிரமாகவோ, உக்கிரமாகவோ எப்போதும் பூஜைகள் செய்திராத நாகராஜுக்கும் சரிசமமாய் நாகரத்தினங்கள் சில நாட்கள் முன்பு வரை கிடைத்திருந்தன. அது அவரை அதிருப்தி அடைய வைத்தாலும் கூட காளிங்கசுவாமி அந்த இளைஞன் அதிர்ஷ்டக்காரன் என்று எண்ணி விட்டு விட்டார். நமக்கும் தான் கிடைத்திருக்கிறது. அவனைப் போல் கஷ்டப்படாமல் பெற்று விடாமல் உழைத்து அதைச் சம்பாத்தியமாகப் பெற்றிருக்கிறோம் என்று அவர் தன்னைச் சமாதானம் செய்து கொண்டிருந்தார். அவருடைய முக்கிய இலக்கே விசேஷ நாகரத்தினமாக இருந்தது. அது அவருக்குக் கண்டிப்பாகக் கிடைக்கும் என்று நம்பிக்கையோடு இருந்தார். அதற்காக பூஜைகளைத் தொடர்ந்து முறையாகச் செய்து வந்தார். ஆயிரம் ஆண்டுக்கு ஒரு முறை கிடைக்கும் விசேஷ நாகரத்தினம் அதிர்ஷ்டத்தில் கிடைத்து விடாது. விருப்பு வெறுப்பு இல்லாமல் நடுநிலையாக அவர் யோசித்த பிறகும் அதைப் பெற அவரை விட அருகதை உள்ளவர்கள் வேறு யாருமில்லை என்பது அவருக்குத் தீர்க்கமாகத் தெரிந்தது. ஆனால் மற்றவர்களுக்கு எல்லாம் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று சரியாகச் சொல்பவர் சொந்த விஷயத்தில் வழுக்கி விட்டார். (இது போன்ற சக்திகள் மற்றவர்கள் விஷயத்தில் வேலை செய்வது போல சொந்த விஷயத்தில் பல சந்தர்ப்பங்களில் சரியாகப் பலிப்பதில்லை.) அருகதைக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது.

அவருக்குக் கிடைக்காமல் அந்த விசேஷ நாகரத்தினம் நாகராஜ் கையில் போய் சேர்ந்ததை அவரால் இப்போதும் ஜீரணிக்க முடியவில்லை. காளியின் உபாசகனான அவருக்கு அன்று காளி சொன்ன பதில் இப்போதும் அவருடைய அறிவுக்கு எட்டவில்லை. ’அவன் எதையும் எதிர்பார்க்காமல் அன்புகாட்டுகிறானாம். அதனால் தான் அந்த விசேஷ நாகம் அவனிடம் அதைத் தந்து விட்டு இறந்ததாம். அன்பு நாய்க்குட்டி கூட அபரிமிதமாகக் காட்டும். அதற்காக நாய்க்குட்டியிடம் அந்த நாகரத்தினத்தை நாகம் தந்து விடுமா? என்ன பைத்தியக்காரத்தனமிது? நாகங்கள் இதை எப்படி தீர்மானிக்கலாம்? மந்திர தந்திரங்களின் சூட்சுமத்தை அறிந்த ஒருவன் கட்டளையிடும் போது அதை இந்த நாகங்கள் அனுசரித்துப் போக வேண்டியவை அல்லவா?’

காளியிடமே தன் இந்தக் கருத்தை காளிங்க சுவாமி சொல்லி இருக்கிறார். காளி அதற்குப் பதிலே சொல்லவில்லை...

பீம்சிங் சந்தேகத்தோடு கேட்டது அவருடைய எண்ண ஓட்டத்தைக் கலைத்தது. “உங்களை விட அவர் அதிகமாய் சக்தி வாய்ந்தவர்ன்னு சொல்றீங்க சுவாமிஜி. அப்படி இருக்கறப்ப நீங்க போட்டிருக்கிற மந்திரக்கவசத்தை அவரால உடைக்க முடியாதா? அவரால என்னைத் தடுத்து நிறுத்த முடியாதா?”

(தொடரும்)
என்.கணேசன்

Thursday, November 10, 2022

சாணக்கியன் 30

 

னநந்தன் பொறுமையை முழுவதுமாக இழந்தான். சென்ற முறையே இங்கு வந்து அகம்பாவம் காட்டிய மனிதர் இப்போதும் உதவி கேட்கும் தொனியில் அவன் என்ன செய்ய வேண்டும் என்று அறிவுரை சொல்வது அவனுக்குச் சிறிதும் பிடிக்கவில்லை. ராக்‌ஷசர் கூட இறுகிய முகத்தோடு பதில் சொன்னது  அவருக்கும் இந்த ஆளின் அதிகப்பிரசங்கித்தனம் சிறிதும் பிடிக்கவில்லை என்பதைக் காட்டியது.

 

தனநந்தன் கோபத்தால் கொதித்தபடி ஆணையிட்டான். “காவலர்களே, இந்தப் பைத்தியக்கார அந்தணனின் குடுமியைப் பிடித்து இழுத்துக் கொண்டு போய் வெளியே தள்ளுங்கள்….”

 

காவலர்கள் வேகமாக விஷ்ணுகுப்தரை நோக்கி விரைந்து வர  இந்த முறை ராக்‌ஷசர் அவர்களைத் தடுக்க முனையவில்லை. இந்த ஆசிரியரைப் போன்ற ஆட்களுக்குச் சம்பிரதாயமான மரியாதை தருவது கூட திரும்பவும் அவர்களை இங்கே வரவழைக்கலாம். அவர் அதை விரும்பவில்லை.

 

விஷ்ணுகுப்தர் சிலை போல் நின்றார். அவர் கண்களில் தீக்கனல் தெரிந்தது. அவர் வலது கை அவர் முடிந்திருந்த குடுமியை நிதானமாக அவிழ்த்தது. காவலர்கள் இருவர் இருபுறமும் நின்று அவர் கைகளைப் பிடித்து அப்படியே தூக்கினார்கள். பொதுவாக இது போன்ற சமயங்களில் தூக்கப்படுபவர்கள் திமிறுவது தான் வழக்கம். ஆனால் விஷ்ணுகுப்தர் திமிறவில்லை. ஒரு பொம்மையைத் தூக்குவது காவலர்கள் அவரைத் தூக்கிக் கொண்டே வாயிற்பக்கம் திரும்பி நடக்க ஆரம்பிக்க அவர் தன் முகத்தை தனநந்தன் பக்கம் திருப்பி அழுத்தந்திருத்தமாக உரக்கச் சொன்னார். “பெரிய ராஜ்ஜியத்தின் அரசன் என்ற ஆணவத்தில் என்னை வெளியே தள்ளச் சொன்ன தனநந்தனே, ஒரு நாள் இந்த ராஜ்ஜியத்தில் இருந்தே உன்னை புறந்தள்ளா விட்டால் நான் சாணக்கின் மகன் சாணக்கியன் அல்ல. அது வரை இன்றவிழ்த்த குடுமியை நான் முடிய மாட்டேன்...”  

 

தனநந்தனுக்கு அவர் என்ன பேசுகிறார் என்றே புரியவில்லை. கோபத்தின் அளவு குழப்பமும் அவனுக்கு அதிகமாக இருந்தது. இந்தப் பைத்தியம் முதலில் விஷ்ணு என்று எதோ பெயர் சொல்லியது. இப்போது சாணக்கின் மகன் சாணக்கியன் என்று சொல்கிறது. இந்த சபதத்தைச் செய்யும் அளவு சக்தி வாய்ந்த அரசர்கள் கூட இந்த பரதக்கண்டத்தில் யாருமில்லை. அப்படி இருக்கையில் கேவலம் ஒரு ஆசிரியன், மகதப் பேரரசின் மன்னனிடமே இப்படி சபதம் செய்ய வேண்டுமானால் கண்டிப்பாக பைத்தியம் முற்றித் தான் போயிருக்க வேண்டும். அதனால் தான் பெயரும் ஏதேதோ சொல்கிறது...

 

தனநந்தனைப் போலவே தான் ராக்‌ஷசருக்கும் ஆரம்பத்தில் தோன்றியது என்றாலும் அவருக்கு இனம் புரியாத நெருடலை உணர வைத்தது விஷ்ணுகுப்தரின் கோபத்திலும் நிதானம் மாறாத போக்கும் அவருடைய அழுத்தந்திருத்தமான சபதமும் தான். இப்படி ஒரு வேண்டுகோளோடு யாரும் மகத மன்னரிடம் வரவும் மாட்டார்கள், அவமானப்படுத்தப்பட்டதற்கு இப்படியொரு சபதம் போடவும் மாட்டார்கள். விஷ்ணுகுப்தரின் கண்களில் தெரிந்த தீக்கனலும் தகிக்கிற ஆழத்தைப் பெற்றிருந்தது. சாணக்கின் மகன் சாணக்கியன் என்று சொன்னது தான்  எல்லாவற்றையும் விட அதிகமாகக் குழப்பியது... இதென்ன புதுக்குழப்பம்...

 

ராக்ஷசருக்கு சாணக் என்ற பண்டிதர் ஒருவர் ஒரு காலத்தில் பாடலிபுத்திரத்தில் வாழ்ந்ததாகச் சொல்லப்பட்டது நினைவிருக்கிறது. சாணக் தீவிரவாதக் கருத்துக்களை மன்னருக்கெதிராகப் பரப்புரை செய்து தண்டிக்கப்பட்டவர் என்றும் அவர் கேள்விப்பட்டிருக்கிறார். அந்தப் பழங்கதைகள் பற்றி விரிவாக அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. அதையெல்லாம் அறிந்து கொள்ள அவர் ஆர்வம் காட்டியதுமில்லை. விஷ்ணுகுப்தர் சொல்லும் சாணக் அவராக இருக்க வாய்ப்பிருப்பதாய்த் தெரியவில்லை. பாடலிபுத்திரம் எங்கே, தட்சசீலம் எங்கே என்று தோன்றினாலும் அங்கிருந்து அடிக்கடி இங்கே வந்து அறிவுரை சொல்லிப் போகும் இந்த மனிதரைப் பார்த்தால் எதையும் தொலைவை வைத்துத் தீர்மானிப்பது சரியல்ல என்றும் தோன்றுகிறது. விஷ்ணுகுப்தரைத் தூக்கிக் கொண்டு காவலர்கள் போவதைப் பார்த்துக் கொண்டேயிருக்கையில் இன்னொரு விஷயம் வித்தியாசமாகத் தோன்றியது. அவமானப்படுத்தப்பட்டு காவலர்களால் வெளியேற்றப்படும் நபர் போல அல்லாமல் விஷ்ணுகுப்தர் காவலர்களால் பல்லாக்கில் தூக்கப்பட்டுக் கொண்டு போகும் அரசர் அல்லது அமைச்சர் போன்ற அசையாத கௌரவ அமைதித் தோற்றத்தில் தெரிந்தார். சற்று முன் மன்னரைப் பார்த்து சபதமிட்ட மனிதர் இப்போது முகத்தைத் திரும்பிக் கொண்டு விட்டதால் முகம் பார்க்க முடியாவிட்டாலும் பின்னால் இருந்து பார்க்கையில் ஆடாமல் அசையாமல் திமிறாமலிருந்த அந்த மனிதரைப் பார்த்து ராக்ஷசரால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. இது பைத்தியம் நடந்து கொள்ளும் முறையாக இருக்க வழியில்லையே....

 

அவர் பார்வை அரசவையில் ஒரு ஓரமாக நின்று கொண்டிருந்த ஒற்றன் மீது விழுந்தது. பார்வையாலேயே ராக்‌ஷசர் அவனிடம் விஷ்ணுகுப்தரைக் கண்காணிக்கக் கட்டளையிட்டார்.

 

காவலர்களால் வெளியே வந்து வீசப்பட்ட விஷ்ணுகுப்தர் மனதில் விரக்தி, வேதனை, கோபம் மூன்றையும் மீறி வைராக்கியம் பிரதானமாக மேலோங்கி நின்றது.  அன்னை பூமியை அன்னியரிடமிருந்து இப்போதைக்குக் காப்பாற்ற முடியாமல் போயிருக்கலாம். ஆனால் எந்த நிலைமையும் அப்படியே இருந்து விட வேண்டும் என்ற கட்டாயமில்லை. இந்த தனநந்தனைப் போன்ற தரங்கெட்டவனால் காப்பாற்றப்பட பாரத அன்னையே விரும்பவில்லையோ என்னவோ! நடந்து முடிந்ததை மாற்றும் சக்தி யாருக்கும் இல்லை தான். ஆனால் நடக்கப் போகும் நிகழ்வுகளை நிச்சயிக்கக்கூடிய சக்தி நிச்சயம் இந்த சாணக்கியனுக்கு உண்டு. ’தட்சசீல ஆச்சாரியர் விஷ்ணுகுப்தனாக இது வரை காய்கள் நகர்த்தி வெற்றி பெற முடியவில்லை. ஆனால் சாணக்கின் மகன் சாணக்கியனாக கண்டிப்பாக தீவிரமாக அரசியல் களத்தில் காய்கள் நகர்த்தி வெல்லத் தான் போகிறேன். ஒருவேளை தனநந்தன் தாயகத்தைக் காப்பாற்ற முன் வந்திருப்பானேயானால் நான் என் தந்தையின் மரணத்தையும் மன்னித்திருப்பேன். ஆனால் பழைய கணக்குகளையும் சேர்த்துத் தீர்த்து புதிய சரித்திரத்தை எழுத வேண்டியிருப்பது இறைவனின் சித்தமானால், அப்படியே ஆகட்டும்.”

 

விஷ்ணுகுப்தராகப் பிறந்த மண்ணிலேயே சாணக்கியனாக மறுபிறவி எடுப்பதாக உணர்ந்த அவர் தரை மண்ணை கையில் எடுத்து நெற்றியில் பூசிக் கொண்டார். “தாய் மண்ணே உன் பிள்ளையை ஆசிர்வதிப்பாயாக!” விஷ்ணுகுப்தராக விழுந்த மண்ணிலிருந்து சாணக்கியனாக எழுந்த போது அவரிடம் பேரமைதி குடிகொண்டிருந்தது. இனி ஒவ்வொரு அடியாக யோசித்து, திட்டமிட்டு எடுத்து வைக்க வேண்டும்.  அமைதியிழப்பது சக்தி விரயம். அதை இந்தச் சாணக்கியன் அனுமதிக்கக் கூடாது. இனி ஒவ்வொரு கணமும், சக்தியும், மிக முக்கியம்….!”

 

அமைதியாக எழுந்து நடக்க ஆரம்பித்த சாணக்கியரை அந்தக் காவலர்கள் திகைப்புடன் பார்த்தார்கள். தூக்கி வீசியது இந்த ஆளைத் தானா என்று அவர்கள் திகைத்து நிற்க அவர்களைத் திரும்பியும் பார்க்காமல் சாணக்கியர் நடக்க ஆரம்பித்தார்.    ஒற்றனும் திகைத்தபடியே அவரைப் பின் தொடர்ந்தான். அவன் ஒற்றனாக எத்தனையோ வித்தியாசமான மனிதர்களைச் சந்தித்திருக்கிறான். ஆனால் இப்படியொரு ஆளைப் பார்த்திருக்கவில்லை.   கணத்திற்குக் கணம் ஒரு ஆளால் இப்படி மாற முடியும் என்று அவனிடம் முன்பே யாராவது சொல்லியிருந்தால் அவன் கண்டிப்பாக நம்பியிருக்க மாட்டான்.  

 

விடுதிக்குச் சென்று உடைமைகளை எடுத்துக் கொண்டு அங்கிருந்த லாயத்தில் கட்டியிருந்த குதிரையைக் கிளப்பிக் கொண்டு வெளியே  வந்த போது தூரத்தில் அவர் நண்பன் கோபாலன் தூரத்தில் வந்து கொண்டிருப்பது தெரிந்தது. மற்ற சமயமாக இருந்திருந்தால் இத்தனை தூரம் வந்து விட்டு  கோபாலனைப் பார்க்காமல் போக இந்த முறை மனம் அனுமதித்திருக்காது. ஆனால் இப்போது அவர் கோபாலனைப் பார்த்து பேசி விட்டுப் போவது கோபாலனுக்கே நல்லதல்ல. அவரைக் கண்காணித்துக் கொண்டிருக்கும் ஒற்றன் அதைக் கண்டிப்பாக ராக்‌ஷசரிடமோ, தனநந்தனிடமோ சொல்வான். தேவையில்லாமல் கோபாலன் சில பிரச்னைகளைச் சந்திக்க வேண்டி வரலாம். நண்பனுக்கு நல்லது செய்ய முடியாமல் போனாலும் கெடுதலாவது செய்யாமலிருப்போம் என்று எண்ணியவராக வேகமாகக் குதிரையேறி எதிர்த் திசையில் செல்ல ஆரம்பித்தார்.

 

கோபாலனுக்கு விடுதி வாசலில் குதிரையேறிக் கொண்டிருப்பது அவரது நண்பன் விஷ்ணுகுப்தர் போலத் தோன்றியது. அவர் கண்களைக் குறுக்கிக் கொண்டு கூர்மையாகப் பார்த்துக் கொண்டே வேகமாக நடந்து வந்தார். அதற்குள் குதிரையேறிய அந்த நபர்  வேகமாகப் போய் பார்வையிலிருந்து மறைந்து விடவே ஏமாற்றமடைந்தார்.

 

கோபாலனைப் பார்த்து விட்டு வேகமாக அங்கிருந்து சாணக்கியர் போவதையும், அவரைப் பார்த்து விட்டு கோபாலன் வேகமாக வருவதையும் ஒற்றன் கவனித்து விட்டான். “அரசவையில் அத்தனை நடந்து, வெளியே வீசப்பட்டும் ஒன்றும் நடக்காதது போல மண்ணை நெற்றியில் பூசிக் கொண்டு எழுந்து அமைதியாக நடந்து வந்த ஆசாமி இந்த ஆளைப் பார்த்து விட்டு வேகமாகப் போகிறாரென்றால் இந்த ஆளுக்கு அந்த ஆள் தெரிந்தவராகத் தான் இருக்க வேண்டும் என்று கணக்கிட அவனுக்கு நேரம் அதிகம் தேவைப்படவில்லை. இப்போது அவன் கவனம் கோபாலன் மீது நிலைக்க ஆரம்பித்தது.

 

(தொடரும்)

என்.கணேசன்



 

Wednesday, November 9, 2022

முந்தைய சிந்தனைகள் 87

 சிந்தியுங்களேன்... என் நூல்களிலிருந்து சில சிந்தனைச் சிதறல்கள்...













Monday, November 7, 2022

யாரோ ஒருவன்? 111



பீம்சிங் ரிஷிகேசத்தில் சாப்பிட்டு விட்டு காட்டுப் பகுதி எல்லை வரை ஜீப்பில் போய் அங்கிருந்து நடக்க ஆரம்பித்த போது மூன்றே முக்கால் மணி ஆகியிருந்தது. ஆனால் சிறிது தூரம் போனவுடனேயே இருட்டில் தான் கவனமாக அவன் நடக்க வேண்டியிருந்தது. அவ்வளவு அடர்த்தியாக மரங்கள் இருந்ததால் சூரிய ஒளி பகலிலும் அதைத் தாண்டி உள்ளே வரவில்லை. பீம்சிங் டார்ச் விளக்கைப் பிடித்துக் கொண்டு மெள்ளத் தான் நடக்க முடிந்தது. காட்டுப்பகுதிக்குள் ஒரு புதியவன் வருகிறான் என்பதை அறிவிப்பதைப் போல காட்டுப் பறவைகள் விதவிதமான குரல்களில் கிறீச்சிட்டனஆனால் அவனுக்கு பறவைகள் பிரச்சினையில்லை.

வருவதற்கு முன்பே அவன் விஷயம் தெரிந்தவர்களிடம் விசாரித்து விட்டுத் தான் வந்திருக்கிறான். காளி கோயிலும் தாண்டிய பின் உட்பகுதிகளில் தான் ஆபத்தான விலங்குகள் இருக்கின்றன என்று சொன்னார்கள். காளிகோயில் போய்ச் சேரும் வரை அதிகமாய் குரங்குகள் தான் அவனுக்குத் தென்படும் என்று சொன்னார்கள். மிகவும் கவனமாக இருக்கா விட்டால் குரங்குகள் செய்யும் சேட்டைகளே சமாளிக்க முடியாதென்பதை அவன் அனுபவத்தில் அறிந்தவன். ஆனால் அனுமானை வணங்கி விட்டு வந்திருக்கும் அந்தப் பக்தனைத் தொந்தரவு செய்ய அனுமார் அனுமதிக்க மாட்டார் என்ற நம்பிக்கை அவனுக்கு உறுதியாக இருக்கிறது.

விசாரித்ததில் ஒருவர் மட்டும் அந்தக் காட்டில்எப்போதாவது உள் பகுதியிலிருந்து வெளிப்பகுதிக்கும் கரடிகள் ஒன்றிரண்டு வருவதுண்டுஎன்று சொல்லியிருந்தது தான் இப்போது கொஞ்சம் கிலியைக் கிளப்பியது. அந்தஎப்போதாவதுஇப்போதாகி விட்டால் என்ன செய்வது என்ற யோசனையை அவனால் விலக்க முடியவில்லை. அதனால் கரடி வந்தால் காப்பாற்றிக் கொள்ள ஒரு கைத்துப்பாக்கியை அவன் வைத்திருக்கிறான்.

திருடப்போகும் இடங்களில் நாய்களை அவன் மிக லாவகமாகச் சமாளித்து விடுவான்.  சில சமயங்களில் ஆட்கள் வந்து விடுவதுண்டு. அவர்களைத் தாக்கி மயக்கமடைய வைப்பதற்கும் அவன் கண நேரமும் தயங்கியதோ பயப்பட்டதோ இல்லை. அப்போதெல்லாம் ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை என்ன செய்ய வேண்டும் என்பதை அவன் தெளிவாக அறிவான். ஆனால் கரடி, பாம்பு, மற்ற கொடிய விலங்குகள் எல்லாம் என்ன செய்யும், அதன் விளைவுகள் என்ன என்பதெல்லாம் அவனுக்குத் தெரியாது. அதனால் அதற்கு எதிர்வினை என்ன என்பதிலும் அவனுக்குத் தெளிவில்லை.  

ஒரு குரங்கு அவன் தோளில் இருந்த பையைப் பார்த்தபடியே கூட நடந்து வர ஆரம்பித்தது. சற்று பின்னால் இன்னொரு குரங்கு வர ஆரம்பிக்க இதை இப்படியே அனுமதித்தால் பிரச்சினை தான் என்பதைப் புரிந்து கொண்ட அவன்ஜெய் ஹனுமான்என்று கட்டையான குரலில் கர்ஜித்தான். அனுமானின் பெயராலோ, அவனது கட்டைக்குரலாலோ கூட வந்த குரங்குகள்  பின்னுக்கு ஓடின. சிறிது நிம்மதியடைந்து நடந்தான்.

தூரத்தில் தீப்பந்தம் ஒன்று எரிந்து கொண்டிருந்தது தெரிந்தது. அதன் ஒளியில் காளி கோயில் நிழலாகத் தெரிந்தது. பாம்புகள் இருக்காது என்று சுவாமிகள் சொல்லி இருப்பதாகச் சொன்னதால் சற்று தைரியமாகவே நடந்தாலும் காளி கோயிலை நெருங்க நெருங்க இயல்பான எச்சரிக்கை உணர்வு அவன் நடை வேகத்தைக் குறைத்தது. டார்ச் லைட் வெளிச்சத்தில் ஏதாவது பாம்புகள் தெரிகின்றனவா என்று கவனமாகப் பார்த்துக் கொண்டே நடந்து அவன் கோயிலை அடைந்தான். ஒரு பாம்பும் கண்ணுக்குத் தெரியவில்லை.

தீப்பந்தத்தின் அருகே நின்று கொண்டு ஒருவன் அவனையே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் சுவாமிஜியின் சீடனாக இருக்க வேண்டும் என்று பீம்சிங் அனுமானித்தான்.   அவன் பீம்சிங்கிடம் கோயிலுக்கு வெளியே இருந்த ஒரு கிணற்றைக் காட்டிதலைக்குக் குளிச்சுட்டு நல்லா உடம்பைத் துடைச்சுட்டு இந்த கருப்புத் துணியைக் கட்டிகிட்டு உள்ளே வாங்கஎன்று சொல்லி விட்டு ஒரு துண்டையும், ஒரு கருப்புத்துணியையும் தந்தான்.

பீம்சிங் தயக்கத்துடன் வாங்கிக் கொண்டான். நல்ல வேளையாக தீப்பந்தத்தின் ஒளி கிணறு வரைக்கும் வந்தது. கிணறை நோக்கி அவன் நகர்ந்தவுடன் அந்தச் சீடன் இருட்டில் மறைந்தான். சாதாரண திருட்டுகளில் இந்த விசித்திரச் சிக்கல்கள் இல்லை. பொருளிருக்கும் இடத்தைக் காட்டினால் பின் அவன் மற்றதைப் பார்த்துக் கொள்ளலாம். இது எதோ மந்திரக் கல் சமாச்சாரம் என்பதால் தான் இத்தனை அமர்க்களம். ஆனால் குறை சொல்ல அவனுக்கு ஒன்றுமில்லை. இது போல் தனி நபரிடமிருந்து பொருளைத் திருடுவதற்கு அவன் எப்போதும் எட்டு லட்சம் ரூபாய் தான் வாங்குவான். இந்த பாம்பு, கோயில், மந்திரக்கவசம் போன்ற இத்தியாதிகளுக்காகத் தான் அவன் இரண்டு லட்சம் ரூபாய் கூடுதலாகக் கேட்டிருந்தான். பணம் வாங்கிய பின் புகார் சொல்ல ஒன்றுமில்லை.

வாளியில் தண்ணீரை இறைத்து தலைக்குக் குளித்து விட்டு கருப்புத் துணியை உடுத்திக் கொண்டு காளி கோயிலுக்குள் நுழைந்த போது கர்ப்பக்கிரகத்தில் எரிந்து கொண்டிருந்த எண்ணெய் விளக்கைத் தவிரக் கோயிலில் விளக்குகள் எதுவுமில்லை. அந்த விளக்கில் காளி சிலை அமானுஷ்யத் தோற்றத்துடன் தெரிந்தது. பீம்சிங் தன்னையுமறியாமல் கைகூப்பினான்.

கர்ப்பக்கிரகத்திற்கு வெளியே பல வண்ணப் பொடிகளால் பெரியதாக ஒரு மண்டலம் வரையப்பட்டிருந்தது விளக்கொளியில் மங்கலாகத் தெரிந்தது. மண்டலத்தின் நடுவில் ஒரு மரப்பலகை வைக்கப்பட்டிருந்தது

வா பீம்சிங்என்று ஒரு கம்மிய குரல் கேட்டது.  பீம்சிங் குரல் வந்த பக்கம் திரும்பினான். காளிங்க சுவாமி கருப்பு ஆடையில் வெறும் நிழலாகத் தெரிந்தார். அவரிடமிருந்து ஏதோ ஒரு விசேஷ சக்தி அவனை ஈர்ப்பது போன்ற உணர்வு பீம்சிங்குக்கு வந்தது. அவன் அவரைப் பார்த்து கைகூப்பினான்.

காளிங்க சுவாமி அன்று காலையிலிருந்து தண்ணீர் கூடக் குடிக்காமல் ஒரு நீண்ட பூஜையைச் சிறிது நேரத்திற்கு முன்பு தான் முடித்திருந்தார். இனி இவனை இங்கிருந்து அனுப்புவது வரையும் அவர் அந்தப் பட்டினி விரதத்தைத் தொடரப் போகிறார். தன் சக்திகள் மூலம் முன்பே ஓரளவு பீம்சிங்கை அவர் அறிந்திருந்தாலும் அவன் வந்து சேர்ந்து அருகில் இருக்கும் இந்தக் கணம் அவன் அலைவரிசைகளை வைத்து முழுவதுமாக அவரால் தெரிந்து கொள்ள முடிந்தது. இந்த வேலைக்குப் பொருத்தமானவனாக இவனை மேலும் மெருகேற்றி விடலாம் என்ற நம்பிக்கை அவருக்குப் பரிபூரணமாக வந்தது.   

பீம்சிங் அனுமானை மனதில் நினைத்துக் கொண்டு வணங்கி அந்த மண்டலத்துக்கு நடுவில் இருக்கும் மனையில் உட்கார்என்று காளிங்க சுவாமி சொன்னார்.

அவர் அவன் அனுமான் பக்தன் என்று அறிந்து அப்படி சொல்கிறாரா இல்லை இந்த பூஜைக்கு அனுமானைத் தான் நினைக்க வேண்டுமா என்பது அவனுக்குத் தெரியவில்லை. அவன் போய் எந்தப் பக்கமாய் பார்த்தபடி உட்கார்வது என்று யோசித்த போது அவர் சொன்னார். “காளியைப் பார்த்தபடி உட்கார்

அந்த வண்ணப்பொடி மண்டலத்தை மிதித்துத் தாண்டித் தான் அவன் அந்த மரப்பலகையில் அமர முடியும். என்ன செய்வதென்று அவன் யோசித்த போது அவர் சொன்னார். “பரவாயில்லை. மிதித்துக் கொண்டே போ.”

பீம்சிங் அப்படியே செய்தான். அவன் மரப்பலகையில் அமர்ந்த அந்தக் கணம் வரை மட்டுமே அவன் முழு நினைவில் இருந்தான். அமர்ந்த பின் காளிங்க சுவாமி ஏதோ மந்திரங்களை உச்சரிக்க ஆரம்பிக்க அவன் தன் நினைவை இழக்க ஆரம்பித்தான். கண்கள் மூட ஆரம்பித்தன. அவன் தலைக்குள்ளும், நெஞ்சுப் பகுதியிலும் ஏதேதோ சக்திகள் ஊடுருவுவது போல் தோன்ற ஆரம்பித்தது. உடம்பெல்லாம் சூடாக ஆரம்பித்தது. சுவாமிஜி சொல்லும் மந்திரங்கள் வெகுதூரத்திலிருந்து கேட்பது போல இருந்தது. உடல் உணர்வுகள் எல்லாம் மங்கி, உடலே லேசாகி மிதப்பது போன்ற உணர்வு மெல்ல எழ ஆரம்பித்தது. காளி சிலை உயிர்த்தெழுந்தது போல அவன் முன்பு தோன்றியது.  அவன் ஆகாயத்தில் அண்டவெளியில் மிதப்பது போலவும் நட்சத்திரங்களை மிக அருகில் காண்பது போலவும் தோன்றியது. இத்தனையின் பின்னணியிலும் காளிங்க சுவாமியின் மந்திரங்களின் ஒலி மட்டும் தொலைதூரத்திலிருந்து கேட்பது போலிருந்தது. இப்படி எத்தனை நேரம் போனது என்று அவனுக்குத் தெரியவில்லை.

திடீரென்று காளிங்க சுவாமியின் மந்திரங்கள் நின்றன. அண்டசராசரங்களும் இயக்கம் நின்று போய் மவுனித்தது போன்றதொரு நிசப்தம் நிலவியது. அவன் மிதக்கும் உணர்விலிருந்து மீண்டு வர ஆரம்பித்தான். உடலின் சூட்டை மறுபடி உணர ஆரம்பித்து அவன் மெல்ல கண்களைத் திறந்த போது அவன் எதிரே காளிங்க சுவாமி அமர்ந்திருந்தார். அவர் கண்கள் அமானுஷ்யமாய் ஜொலித்தபடி அவனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தன.

பீம்சிங் தன்னையும் அறியாமல் நடுங்கினான்.

(தொடரும்)
என்.கணேசன்



Thursday, November 3, 2022

சாணக்கியன் 29

 

றுநாள் காலை அரசவையில் ராக்ஷசர் நுழைந்த போது முன்பே ஆட்கள் வந்தமர்ந்திருந்தார்கள். அவர்களுக்கிடையே விஷ்ணுகுப்தர் அமர்ந்திருப்பார் என்று எண்ணிப்பார்க்கவும் காரணம் எதுவும் வைத்துக் கொண்டிருக்காததால் ராக்ஷசர் விஷ்ணுகுப்தரைக் காணவில்லை. வழக்கம் போல் சென்று தனநந்தனை அழைத்து வந்து தனநந்தன் அமர்ந்த பிறகு தன் இருக்கையில் அமர்ந்த பிறகு சபையை மேலோட்டமாகப் பார்த்துக் கொண்டே வந்த போது தான் அவர் பார்வை விஷ்ணுகுப்தர் மேல் நிலைத்தது. விஷ்ணுகுப்தர் எந்த இடத்திலும் பலருள் ஒருவராக மறைந்து விடக்கூடிய நபர் அல்ல. உருவத்தில் பிரத்தியேகத் தனித்தன்மை அவரிடம் இருக்கா விட்டாலும் நிமிர்ந்து நேராக உட்கார்ந்திருக்கும் தோரணையிலும், பார்க்கும் பார்வையிலும் விஷ்ணுகுப்தர் தனியாகவே தெரிந்தார். அவரைப் பார்த்த பிறகு ராக்ஷசருக்கு வேறு எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. “இந்த மனிதர் ஏனிங்கே மறுபடி வந்தார்?” என்ற கேள்வியிலேயே அவர் மனம் உழன்றது.   

 

தெற்கில் இருக்கும் ஒரு சிற்றரசனின் தூதன் கொண்டு வந்த செய்தியில் இருந்து அன்றைய அரசவை நிகழ்வுகள் ஆரம்பித்தன. அதுவும் அதன் பின் நடந்தவையும் வழக்கமானவையாகவே இருந்தன. தனநந்தன் ஏதோ ஒரு விஷயமாக ராக்ஷசர் கருத்தைக் கேட்க நினைத்து அவர் பக்கம் திரும்புகையில் அவர் ஏதோ யோசனையுடன் அவையில் அமர்ந்திருந்தவர்கள் பக்கம் பார்த்துக் கொண்டிருந்ததைக் கவனித்து அவர் பார்வை போன பக்கம் தன் பார்வையைத் திருப்பினான். அவன் பார்வை விஷ்ணுகுப்தர் மீது விழுந்தவுடன் கூர்மையாகியது. ஓரிரு கணங்களில் அவனால் அவர் குறித்த பழைய நினைவுகளை நினைவுபடுத்திக் கொள்ள முடிந்தது. அந்த அந்தணரை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்து விட முடியாது. எவ்வளவு திமிரோடு அன்று அவனிடம் அவர் பேசியிருந்தார். இந்த ஆள் ஏன் இப்போது மறுபடி வந்திருக்கிறார் என்ற கேள்வி அவனுக்குள்ளும் எழுந்தது. அவன் பார்வையும், ராக்ஷசர் பார்வையும் சந்தித்துக் கொண்டன. பார்வையாலேயே அவன் கேட்ட கேள்விக்கு ராக்ஷசர் தெரியவில்லை என்று லேசாகத் தலையசைத்தார்.

 

அவையில் அவசரமாகப் பேச எழுந்தவர்கள் பேசி முடித்து ஒரு இடைவெளி கிடைத்த போது விஷ்ணுகுப்தர் எழுந்தார்.  அவர் மீது விழுந்த தனநந்தன் பார்வை பேச ஊக்குவிப்பதாக இருக்கவில்லை. இவனிடம் பேச வேண்டுமா என்ற கேள்வி அவர் மனதில் எழாமல் இல்லை.  பேசுவது இவனுக்குப் புரியுமா என்ற சந்தேகம் எழாமலும் இல்லை.  ஆனால் பாரதத்திற்காக அவர் முயற்சி செய்யாமல் போனால் அவரையே அவரால் மன்னிக்க முடியாது. இந்தப் புனித பூமியை விட அவர் பெரிய மனிதரல்ல. அவரை தனநந்தன் மதிக்கா விட்டாலும் பரவாயில்லை. ஆத்மார்த்தமாக முயற்சி செய்ய வேண்டியது அவர் கடமை. பழைய பகையைப் பின்னுக்குத் தள்ளி விட்டு தனநந்தனிடம் பேச அவர் முன் வந்தார். எந்த நல்ல வார்த்தைக்கும் தனநந்தன் அருகதை உள்ளவனல்ல என்றாலும் அவருடைய தாயகத்தைக் காப்பாற்ற வேண்டிய காரியம் ஆக வேண்டி இருக்கிறது...

 

மகதத்தின் மாமன்னரை தட்சசீலத்தின் ஆசிரியன் விஷ்ணுகுப்தன் தலைவணங்குகிறேன்...” கம்பீரமான குரலில் சொல்லி விஷ்ணுகுப்தர் சிரம் தாழ்த்தி கைகூப்பி வணங்கினார்.

 

தனநந்தன் அவரைச் சந்தேகத்தோடு பார்க்க ராக்ஷசர் விஷ்ணுகுப்தரை ஆச்சரியத்தோடு பார்த்தார்.

 

விஷ்ணுகுப்தர் பணிவுடன் தொடர்ந்தார். ”புண்ணிய பூமியான பாரதத்தை நோக்கி யவன அரசனான அலெக்ஸாண்டர் வந்து கொண்டிருக்கிறான் என்ற செய்தி கிடைத்திருக்கிறது மகத மன்னரே. பாரதத்தின் தலைவாசலில் காந்தாரத்தின் அரசனாக அரியணை ஏறியிருக்கும் ஆம்பி குமாரன் அன்னியனான அலெக்ஸாண்டரை எதிர்த்து நின்று பாரதத்தைக் காப்பாற்றுவதற்குப் பதிலாக நட்பு பாராட்டி அவனை வரவேற்கக் காத்திருக்கிறான். அலெக்ஸாண்டர் படையுடன் காந்தாரப் படையும் இணைந்து கொண்டால் பின் அந்த இணைந்த படையை வெல்ல மகதத்தைத் தவிர வேறு வலிமையான படை பாரதத்தில் இல்லை என்பதே இன்றைய யதார்த்த நிலை. அன்னியர்களிடம் இருந்து நம் புண்ணிய பாரதத்தைக் காப்பாற்றுவதற்கு மற்ற யாருக்குமே போதுமான வலிமை இல்லாததால் மகதத்தின் வலிமையான படையுடன் விரைவாக வடக்கு நோக்கி வரும்படி தங்களைப் பணிவுடன் வேண்டிக் கொள்கிறேன்...”

 

தனநந்தன் விஷ்ணுகுப்தரை ஏளனமாகக் கேட்டான். ”பாரதத்தின் பாதுகாப்பைக் கண்காணிக்கும் பொறுப்பை தட்சசீல ஆசிரியருக்கு யார் தந்தார்கள்?”

 

தாயகத்தைக் காக்கும் பொறுப்பு ஒவ்வொரு மைந்தனுக்கும் உண்டல்லவா அரசே. ஆனால் அதற்கான வலிமையும், வாய்ப்பும் எல்லோருக்கும் கிடைத்து விடுவதில்லை. இறைவன் அந்த இரண்டையும் தங்களுக்குத் தந்திருக்கிறான். எனவே மகத மாமன்னர் பாரதத்தின் சக்கரவர்த்தியாகப் பொறுப்பேற்றுக் கொண்டு தாயகத்தைக் காக்கும் கடமையை நிறைவேற்ற வேண்டுமென்று பணிவுடன் வேண்டிக் கொள்கிறேன்...”

 

அவர் குரலிலும் தொனியிலும் பணிவிருந்த போதும் தனநந்தன் அவருடைய வார்த்தைகளால் கோபம் அடைந்தான். “அந்தணனே. தட்சசீலத்துக் கல்விக்கூடத்தின் ஆசிரியர் அந்த வேலையை அல்லவா ஒழுங்காகச் செய்ய வேண்டும். அங்குள்ள மாணவர்களுக்கல்லவா பாடம் படிப்பிக்க வேண்டும். அப்படியிருக்கையில் அதைச் செய்வதை விட்டு விட்டு அவ்வப்போது அரசர்களுக்கு பாடம் நடத்தக் கிளம்புவது சரியில்லையே. என் நினைவு சரியாக இருக்குமானால் சில வருடங்களுக்கு முன்பும் இந்த அரசவைக்கு வந்து அரசரின் பொறுப்புகளைப் பற்றிப் பாடம் நடத்திய ஆள் நீயேயல்லவா?”

 

பழைய நிகழ்வுக்குப் பதில் சொல்லி தனநந்தனின் கோபத்தை அதிகரிக்க விஷ்ணுகுப்தர் விரும்பவில்லை. பணிவுடனேயே சொல்ல ஆரம்பித்தார்.  நான் பாடம் நடத்துவதாகத் தயவு செய்து நினைக்க வேண்டாம் மகத மன்னரே. சரித்திரம் படைக்கும் வாய்ப்பொன்று உங்களுக்குக் காத்திருக்கிறது என்று நினைவுபடுத்த வந்த சாதாரண மனிதனாக என்னை நினையுங்கள் போதும். தலைக்கு ஊற்றிய தண்ணீர் காலுக்கும் வந்தே தீரும். பாரதத்திற்குள் நுழைந்த பிறகு அலெக்ஸாண்டர் எல்லைப் பகுதியோடு திருப்தி அடைந்து திரும்ப மாட்டான். கண்டிப்பாக முன்னேறி மகதத்திற்கும் வருவான். அவன் உங்கள் எல்லைக்கு வந்த பிறகு அவனுடன் போரிடுவதை விட பாரதத்தின் எல்லைப்பகுதியிலேயே அவனைத் தடுத்துத் துரத்தியடிப்பதல்லவா புத்திசாலித்தனம். உங்கள் ஆதிக்கமும் பராக்கிரமமும் பாரதத்தின் எல்லை வரை நீளும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும்படித் தங்களை நான் வேண்டிக் கொள்கிறேன் அவ்வளவு தான்…”    

 

விஷ்ணுகுப்தரின் வார்த்தைகளில் இருந்த பணிவும், உண்மையும் தனநந்தனின் கோபத்தைச் சிறிதும் குறைத்து விடவில்லை.  எனக்கு ஆலோசனை கூற என் அமைச்சர்கள் இருக்கிறார்கள். எனக்கு அறிவுரை சொல்ல அறிவிற்சிறந்த என் பிரதம அமைச்சர் ராக்ஷசர் இருக்கிறார். அதனால் உன்னிடமிருந்து ஆலோசனையும், அறிவுரையும் எனக்குத் தேவையில்லை அந்தணனே. என்னை மேலும் கோபமூட்டாமல் இங்கிருந்து போய் விடு 

 

விஷ்ணுகுப்தர் உணர்வுகளே இல்லாத இந்த மூர்க்கனுக்கு நிலைமையின் தீவிரத்தை எப்படி உணர வைப்பேன் என்ற இயலாமையின் தவிப்போடு அறிவிற்சிறந்ததாய் இவன் சொல்கிற பிரதம அமைச்சருக்காவது இது புரியுமா, இவனுக்குப் புரிய வைக்க முடியுமா என்றெண்ணியபடி ராக்‌ஷசரைப் பார்த்தார்.

 

ராக்‌ஷசர் இந்த ஆச்சாரியரை அனாவசியமாய் அதிக உயர்வாக எண்ணி விட்டோமோ என்று தன்னையே கேட்டுக் கொண்டார். இவர் வெறும் ஆசிரியர். இங்குள்ளவரும் அல்ல. தட்சசீலத்தில் இருப்பவர். முன்பு ஒரு முறை இங்கு வந்திருந்த போது கூட அரசர் எரிச்சலடைந்து பேசியதற்குப் பதில் பேசியதாய் அன்றைய பேச்சை உயர்வாக எடுத்துக் கொள்ள முடிந்தது. ஆனால் இன்று இந்த மனிதர் பேசுவது அதிகப்பிரசங்கித்தனமாகவே அவருக்கும் தோன்றியது. யாரிந்த மனிதர்? இங்கு வந்து இதைச் சொல்ல இவருக்கு என்ன தகுதி இருக்கிறது? அங்குள்ள அரசர்கள் யாராவது அலெக்ஸாண்டரின் வருகைக்குப் பயந்து உதவி கேட்டு ஒரு தூதராக இவரை அனுப்பியிருந்தாலும் கூட இந்தப் பேச்சை ஏற்றுக் கொள்ள முடியும். அறிவுகூர்மைக்குப் பெயர் போனவராக இவரது மாணவன் அன்று சொன்னது நினைவுக்கு வந்தது. அறிவும் எல்லை மீறிப் போனால் ஒருவரைப் பைத்தியமாக்கி விடுமோ, அது தான் இப்போது நடந்திருக்கிறதோ?

 

ராக்‌ஷசர் இந்தப் பைத்தியத்திடம் அதிகம் பேசுவதோ, அதிகம் பேச ஊக்குவிப்பதோ நல்லதல்ல என்று முடிவு செய்தவராக இறுகிய முகத்துடன் சொன்னார். “ஆச்சாரியரே. யாரிடம் எப்போது எப்படிப் போரிட வேண்டும் என்பதை நாங்கள் முடிவு செய்து கொள்கிறோம். மன்னர் கூறியது போல் எங்களுக்கு உங்கள் ஆலோசனை தேவையில்லை. இதைச் சொல்ல நீங்கள் தட்சசீலத்திலிருந்து இங்கு வரை வந்திருக்க வேண்டியதில்லை.”

 

விஷ்ணுகுப்தர் தன் இரு கைகளையும் கூப்பி தனநந்தனையும் ராக்‌ஷசரையும் பார்த்தபடி உருக்கமாகச் சொன்னார். “நான் ஆலோசனை சொல்ல வரவில்லை. உதவி கேட்டு வந்திருக்கிறேன். இந்தப் புண்ணிய பூமியை அன்னியர் ஆக்கிரமிக்கச் சம்மதிக்காதீர்கள் என்று மன்றாடிக் கேட்கும் இந்த மண்ணின் மைந்தனாக வந்திருக்கிறேன். இதைச் செய்யும் வலிமை உங்களுக்கு இருக்கிறது. இதைச் செய்வதால் உங்கள் ராஜ்ஜியத்தின் பரப்பும், வலிமையும் கூடும் அனுகூலமும் உங்களுக்கு இருக்கிறது. அதோடு  தாயகத்தைக் காத்த புகழும் புண்ணியமும் கூட உங்களை வந்து சேரும். தயவு செய்து நான் சொல்வதைப் பரிசீலனை செய்யுங்கள்”

 

(தொடரும்)

என்.கணேசன்   


இந்த நாவலையும், அச்சில் உள்ள என் மற்ற நூல்களையும் அமேசானில் வாங்க லிங்க் -

(அல்லது)


நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து என்.கணேசன் புக்ஸுக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் ரிஜிஸ்டர் தபால் அல்லது குரியர் மூலமாகப் பெற்றுக் கொள்ளலாம். 

உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பேபோன் பேமற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம்(ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)

நூல்களின் குறிப்பு மற்றும் விலையை அறிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும் - என்.கணேசன் நூல்கள்


அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.


நூல்களை வாங்க விரும்பும் வெளிநாட்டு வாசகர்கள் தங்கள் விவரங்களை  nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பினால் தபால் செலவு அறிந்து சொல்லப்படும்.