விஸ்வத்தை உறுப்பினர் பதவியிலிருந்து விலக்கியதுடன் அவன் தலைவரைக்
கொல்லவும் முயன்றான் என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டி அவன் இனி எந்த வகையிலும் இல்லுமினாட்டியில்
இணையவோ, தலைவனாகவோ முடியாதபடி எர்னெஸ்டோ செய்து விட்டதை அறிந்த பிறகு நிலைமை மிக அபாயமாவதை
இம்மானுவல் உணர்ந்தான். நாடுகளே கூட எர்னெஸ்டோவுக்கு எதிராக எதுவும் செய்ய முயன்றதில்லை.
மனிதர்கள் அதைப் பற்றி நினைக்கவும் நடுங்குவார்கள். ஆனால் விஸ்வம் ஒருவன் மட்டும் விதிவிலக்காக
இருக்கக் காரணம் அவனுடைய சக்திகள். அவன் இப்போது கண்டிப்பாகக் கோபத்தின் உச்சத்தில்
இருப்பான். அவனால் முடிந்ததை எல்லாம் செய்யாமல் விட மாட்டான். அவனிடமிருந்து எர்னெஸ்டோவை
இம்மானுவல் காப்பாற்றியாக வேண்டும்...
இம்மானுவல் யோசனையுடன்
சொன்னான். “விஸ்வம் செத்தால் ஒழிய நமக்கு நிம்மதியில்லை.”
எர்னெஸ்டோ சிரித்துக்
கொண்டே சொன்னார். “அவன் சாவையும் நம்ப முடியாது என்பதை ஞாபகம் வைத்துக் கொள். ஒரு தடவை
நாம் அனுபவப்பட்டிருக்கிறோம்.”
இம்மானுவல் சொன்னான்.
“ஜான் ஸ்மித் நிறைய ஆட்களை விசாரித்திருக்கிறார். இந்த உடலை விட்டு இன்னொரு உடலையும்
சேரும் அதிசயம் இன்னொரு முறை நடக்காது என்று அத்தனை பேரும் சொல்லியிருக்கிறார்கள்.
அதனால் இந்த முறை அவனை ஒழித்தால் நிச்சயம் அதற்குப் பிறகு பிரச்சினை இல்லை”
“சரி எப்படி ஒழிக்கப்
போகிறாய்?” எர்னெஸ்டோ கேட்டார்.
இம்மானுவல் க்ரிஷையும்
அக்ஷயையும் பார்த்து விட்டுச் சொன்னான். “அமானுஷ்ய சக்திகள் பற்றி எல்லாம் இவர்கள்
இரண்டு பேருக்குத் தான் தெரியும். அதனால் இவர்கள் தான் ஆலோசனை சொல்ல வேண்டும்”
அக்ஷய் சொன்னான்.
“அவனுக்கு இப்போது இருக்கும் சக்திகள் அளவு தெரியவில்லை. ஆனால் குறைந்த அளவே இருக்கிறது
என்பது தான் என் அபிப்பிராயம். ஏனென்றால் அதிகம் இருந்திருந்தால் தலைவரைத் தாக்க அவன்
நேரடியாக வந்திருப்பான். என்னையும் மீறி அவரைத் தாக்கும் அளவு சக்திகள் இப்போது இல்லை
என்பது மட்டும் நிச்சயம். அதே போல் அவன் என்னையும் ஆக்கிரமித்து என் சக்திகளை அளக்கவோ
தெரிந்து கொள்ளவோ இன்னமும் முயற்சி செய்யவில்லை. அவன் அதைச் செய்யாததும் சக்திகளைச் சேமிக்க வேண்டிய நிலைமையில் இருப்பதைத்
தான் தெரிவிக்கிறது. ஆனால் அவன் இப்போது ஏதோ சக்திகள் கூடுதலாகப் பெறுவான் என்று உங்கள்
ஆரகிள் சொல்லி இருக்கிறது. அதன் அளவு நமக்குத் தெரியாது. அதனால் அந்தச் சக்திகள் கிடைத்த
பின் அவன் என்னவெல்லாம் செய்ய முடியும் என்றும் சொல்ல முடியாது”
எர்னெஸ்டோ சொன்னார்.
“அவனால் முடிந்ததை எல்லாம் கண்டிப்பாகச் செய்வான். அந்த அளவு உக்கிரத்துடன் அவன் இருப்பான்.
அதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அவன் சக்திகளைப் பெறுவான் என்பதை எந்த
அளவு நம்பலாம் என்று தான் யோசிக்கிறேன்”
க்ரிஷ் சொன்னான்.
“அந்தச் சுவடியில் எழுதியிருந்த மற்றதெல்லாம் பலித்திருக்கிறது. அதனால் இதுவும் கண்டிப்பாகப்
பலிக்கும். அதில் சந்தேகம் வேண்டியதில்லை”
எர்னெஸ்டோ சொன்னார்.
“அது உண்மையாகி அவன் நம் விதியையும் உலகத்தின் விதியையும் எழுதுவான் என்பது உண்மையானால்
அவன் எழுதுகிற விதி நல்லதாய் இருக்க வாய்ப்பே இல்லை. என்னைப் பொருத்த வரை நம்மைக் காக்க
முடிந்தவன் க்ரிஷ் தான். ஆரகிள் சொன்னதும், நம் இல்லுமினாட்டி சின்னம் சொன்னதும், க்ரிஷின்
வேற்றுக்கிரகவாசி நண்பன் சொன்னதும் அது தான். அதனால் க்ரிஷைத் தான் நான் நம்பி இருக்கிறேன்”
அவர் நட்புணர்வோடும்,
அன்போடும் அதைச் செல்லமாகச் சொன்ன மாதிரி இருந்தது. அதை அவர் எந்த அளவு உண்மையாகவே
நம்புகிறார் என்பதை அவர்களால் கணிக்க முடியவில்லை. க்ரிஷ் ஆழ்ந்த யோசனையிலிருந்தான்.
இம்மானுவலும் அவர்
தொனியிலேயே தொடர்ந்து க்ரிஷைக் கேட்டான். “க்ரிஷ் என்ன செய்யப் போகிறாய்?”
“நான் விஸ்வத்தைச்
சந்திக்க அந்தச் சர்ச்சுக்குப் போகிறேன்” க்ரிஷ் அமைதியாகச் சொன்னான். மூவரும் அவனுக்குப்
பைத்தியம் பிடித்து விட்டதா என்பது போல அவனைப் பார்த்தார்கள்.
“அவன் அங்கேயே இருப்பான்
என்றால் நாம் படையையே அனுப்பலாமே. இம்மானுவல் சொன்னது போல் அவன் அங்கே இருக்க மாட்டான்
என்று தானே நானே சும்மா இருக்கிறேன்.” என்றார் எர்னெஸ்டோ.
“படை அனுப்பினால்
அவன் இருக்க மாட்டான். ஓடி விடுவான். நான் ஒருவன் போனால் அவன் ஓட மாட்டான். அவனுடைய
“ஈகோ” ஒருவனைப் பார்த்து ஓட அனுமதிக்காது.”
இம்மானுவல் சொன்னான்.
“அவன் ஆத்திரத்தின் உச்சத்தில் இருக்கும் போது நீ போனால் முதல் வேலையாக உன்னைக் கொன்று
விடுவான். அது நிச்சயம். ஏனென்றால் அவன் எதிர்பார்த்திருப்பது நீ இந்தியா சென்று விட்டாய்
என்பதைத் தான். அப்படிப் போகாமல் நீ அவன் முன் போய் நிற்பதைத் தவிர வேறு வினையே வேண்டாம்”
எர்னெஸ்டோ சொன்னார்.
“அப்படியெல்லாம் போய் நீ ஆபத்தில் சிக்கிக் கொள்ள நான் அனுமதிக்க மாட்டேன் க்ரிஷ்.”
“நான் போனால் அது
எனக்கு மட்டும் தான் ஆபத்தாக இருக்கலாம். ஆனால் நான் போகாவிட்டால் அது ஏராளமானவர்களுக்கு
ஆபத்தாக முடியலாம்.”
“நீ போகும் போது
அவன் அங்கே இருக்கா விட்டால்...?”
“நான் அங்கே அவனுக்காகக்
காத்திருப்பேன். ஏனென்றால் அவன் திரும்பவும் வராமல் இருக்க மாட்டான். உங்கள் ஆரகிளின்
ரகசிய ஓலைச்சுவடி எல்லா முடிவுகளும் அங்கே தான் எடுக்கப்படும் என்று சொல்லியிருப்பதாகத்
தான் எனக்குப் படுகிறது. அவன் முடிவெடுக்கும் வேளையில் நான் அங்கே இருக்க விரும்புகிறேன்.
அவன் மோசமாக எதையும் செய்யாமல் என்னால் பார்த்துக் கொள்ள முடியும்”
“போய் என்ன செய்வாய்?”
எர்னெஸ்டோ கேட்டார்.
“அவனிடம் பேசுவேன்”
என்று க்ரிஷ் சொன்னவுடன் எர்னெஸ்டோ கலகலவென்று சிரித்து விட்டார். அவரால் சிரிப்பைச்
சீக்கிரத்தில் அடக்க முடியவில்லை. அக்ஷயும் இம்மானுவலும் கூடப் புன்னகையை அடக்கக்
கஷ்டப்பட்டார்கள்.
எர்னெஸ்டோ சொன்னார்.
“அவன் எனக்கும் எதிரி தான். இத்தனை நாட்களில் அவனைப் பற்றி அதிகம் யோசித்திருக்கிறேன்.
அவனை ஓரளவு நன்றாகவே புரிந்து கொண்டுமிருக்கிறேன் க்ரிஷ். நீ அவனைத் தாக்கப் போகிறாய்
என்று சொன்னால் கூட அவன் பொறுத்துக் கொள்வான். ஆனால் பேசப் போகிறாய் என்றால் கண்டிப்பாகப்
பொறுத்துக் கொள்ள மாட்டான். நீ ஒரு முறை பேசியதில் அவன் அடைந்த வீழ்ச்சியை அவன் என்றென்றைக்கும்
மறக்க மாட்டான்...”
க்ரிஷ் சொன்னான்.
“அவன் ஆத்திரப்படுவான் என்பது எனக்கும் புரிகிறது தலைவரே. ஒருவிதத்தில் அது நல்லதும்
கூட. ஓரளவு ஆத்திரம் வெளிப்பட்டுக் குறையும். ஆனாலும் நான் அவனிடம் மனம் விட்டுப் பேச
வேண்டியிருக்கிறது... என் உள்மனம் அப்படித்தான் சொல்கிறது”
எர்னெஸ்டோ திகைத்தார்.
மேலும் எதையோ திட்டிச் சொல்ல நினைத்த அவர் பின் மௌனமானார். அவன் முடிவுகள் அறிவுக்குப்
புறம்பாக ஆரம்பத்தில் தோன்றினாலும் அவன் அப்படி நடந்து கொண்டு வென்றவன் என்பதை அவர்
நினைவுகூர்ந்தார். இல்லுமினாட்டி கூட்டத்திற்கு அத்தனை ஆபத்தையும் ஏற்று அவன் வந்ததும்,
அந்தக் கூட்டத்தில் பேசி எல்லாவற்றையும் மாற்றியதும் நினைவுக்கு வந்தது. விஸ்வத்தின்
ஆளான சிந்துவைத் தண்டிக்காமல் அவளை வீட்டில் அனுமதித்ததுடன் பேசி அவளை மாற்றியதும்
நினைவுக்கு வந்தது. ஆனாலும் விஸ்வம் விஷயத்தில் மட்டும் க்ரிஷால் சிறிய மாற்றத்தைக்
கூட ஏற்படுத்த முடியாது என்று மனிதர்களின் சுபாவங்களை எடைபோடுவதில் சமர்த்தரான அவருக்குத்
தோன்றியது.
அவர் மெல்லச் சொன்னார்.
“ஆனாலும் அவன் விஷயத்தில் நீ பேசி எதையும் சாதிக்க முடியாது க்ரிஷ். அவன் முழு விஷம்.”
“ஆனாலும் முயற்சி
செய்திருக்கிறேன் என்ற ஆறுதலாவது எனக்கு மிஞ்சும் அல்லவா தலைவரே. இல்லா விட்டால் என்
வாழ்நாள் பூராவும் என் மனசாட்சி உறுத்திக் கொண்டே இருக்கும்.”
எர்னெஸ்டோ அவனை
மிகவும் கனிவுடன் பார்த்தார். இவன் இந்தச் சுயநல சமுதாயத்திற்குச் சிறிதும் பொருத்தமில்லாதவன்
என்று தோன்றியது. இவ்வளவு தூரம் நல்லவனைத் தனியாக அனுப்பி ஆபத்தில் சிக்க வைக்க அவர்
மனம் ஒப்பவில்லை. “போவதென்றால் தகுந்த பாதுகாப்போடு தான் அனுப்புவேன்” என்றார்.
“அப்படிக் கும்பலாகப்
போனால் அவன் ஓடிப் போய் விட வாய்ப்பிருக்கிறது தலைவரே. அப்படிப் போவது வீண்”
அக்ஷய் சொன்னான். “அப்படியானால்
பாதுகாப்பிற்கு நான் உன்னோடு வருகிறேன்”
க்ரிஷ் உடனடியாக
மறுத்தான். “நீங்கள் சொன்னதற்கே கோடி நன்றி அக்ஷய். ஆனால் உங்கள் பாதுகாப்பிற்கு நானும்
இல்லுமினாட்டியும் உத்தரவாதம் தந்திருக்கிறோம். அதனால் உங்களை ஆபத்தில் சிக்க வைக்கும்
எதையும் என்னால் யோசிக்கவும் முடியாது. அவனுக்கு உங்கள் மீதும் கடுமையான ஆத்திரம் இருக்கும்.
அவன் அதிக சக்தி பெற்றிருந்தால் எந்த அளவு குரூரமாய் மாறுவான் என்று சொல்ல முடியாது”
(தொடரும்)
என்.கணேசன்
(குறிப்பு: நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் சாணக்கியன் நாவல் அச்சகம் சந்திக்கும் சில பிரச்சினைகளால் தாமதமாகி வருகிறது. அடுத்த வார இறுதிக்குள் கிடைத்து விடும் என்று எதிர்பார்க்கிறேன். )