என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, January 13, 2022

இல்லுமினாட்டி 137



ம்மானுவலும் விஸ்வத்தின் குணங்களை இப்போது துல்லியமாக அறிந்திருந்ததால் அக்ஷய் சொன்னதை நம்பினான். விஸ்வத்துக்குத் தன் தோல்வியைச் சகித்துக் கொள்ள முடியாது. தன் குறிக்கோள் முடியும் வரை ஓய மாட்டான். உடனே அடுத்து ஏதாவது செய்வான்இம்மானுவல் அக்ஷயிடம் கேட்டான். “அப்படி அவன் ஒரு திட்டம் வைத்திருந்தால் அதை எங்கே அரங்கேற்றுவான் என்று நினைக்கிறீர்கள்?”

பெரும்பாலும் நாளை காலை உங்கள் கூட்டம் நடக்கும் இடத்தில்என்றான் அக்ஷய்.

அந்த இடத்தில் பலமான பாதுகாப்பு ஏற்பாடுகள் தான் செய்திருக்கிறான் என்றாலும் இம்மானுவலுக்கு விஸ்வம், அவன் கூட்டாளி சேர்ந்த கூட்டணி என்ன செய்யப் போகிறதோ என்ற கவலை சிறியதாக எழுந்தது. வெறும் திறமை வாய்ந்த மனிதர்கள் அவனுக்கு ஒரு பிரச்சினையே அல்ல. விஸ்வத்தைப் போன்ற சக்தி வாய்ந்த மனிதன் நிஜமாகவே ஒரு பிரச்சினை தான்.  மின்னல் வேகத்தில் அவன் நகர முடிந்த காட்சி இப்போதும் அவனை ஆச்சரியப்படுத்தியது. அந்த உடல் போதையால் பாழாகி தெருவில் சாகப் போகிற நிலையில் கிடந்த உடல். அதை இந்த அளவு  தேற்றியிருக்கிறவன் தன் மற்ற சக்திகளை எந்த அளவு பிரயோகப்படுத்த முடியுமோ!

எர்னெஸ்டோ யோசனையுடன் சொன்னார். “அவன் முயற்சியில் வெற்றி பெற்றிருந்தால் நீங்கள் நானும் கர்னீலியஸைப் போல உறக்கத்தில் மாரடைப்பு வந்து இறந்து விட்டேன் என்று நினைத்திருப்பீர்கள். உங்களுக்கு இந்த வயதானவன் இறந்ததில் சந்தேகமே வந்திருக்காது….”

தலையசைத்த இம்மானுவலுக்கு அவர் கர்னீலியஸையும், அவரும் அதே போல் இறந்தார் என்பதையும், நினைவுபடுத்திய போது அவனுடைய ஆட்கள் அவர் வீட்டைச் சோதனையிட்டு அனுப்பிய தகவலைப் படிக்காமல் வைத்திருப்பது நினைவுக்கு வந்தது. அக்ஷய் எர்னெஸ்டோவிடம் எதோ சொல்ல ஆரம்பிக்க அதில் கவனம் செலுத்தாமல் அவன் அலைபேசியை எடுத்து அந்தத் தகவலைப் பார்த்தான். கர்னீலியஸ் கைப்பட எதோ எழுதி இருந்ததன் புகைப்படம் அது. அதைப் பெரிதாக்கிப் பார்த்துப் படித்தான். அவன் முகம் மாறியது.

எர்னெஸ்டோ அவன் முக மாற்றத்தைப் பார்த்து என்னவென்று கேட்டார். இம்மானுவல் அவரிடம் தன் அலைபேசியை நீட்டினான். அதைப் படிக்கச் சோம்பல் பட்ட எர்னெஸ்டோ அக்ஷயிடம் சொன்னார். “நீ அதைப் பாரேன்என்றார்.    

அக்ஷய் அதைச் சத்தமாகப் படித்தான். “.....ஓருடல் நஷ்டப்பட்டு அழியும் போது வெளியேறி மறு உடல் கண்டு சேர்ந்து நிரந்தரமாய்த் தங்கும்  புதிய முயற்சி அரங்கேறும் போது ஆபத்துக் காலம் உச்சம் சென்றதென்று அறிக. இது நீங்கள் அறியாது நடக்க வழியில்லை. நடந்த பின் அறிவது உறுதி. மறு உடல் கண்ட மனிதன் மறைய உதவி கிடைக்கும்....” என்று அக்ஷய் படித்த போது எர்னெஸ்டோ இதையேன் அவர் எழுதி வைத்தார் என்று நினைத்தார். மீதியையும் அக்ஷய் படித்த பிறகு தான் இது நடந்த பின் எழுதி வைத்தது அல்ல நடப்பதற்கு முன்பே எழுதி வைத்தது, இனி நடக்கப் போவதும் அதில் எழுதி உள்ளது என்பது அவருக்கும் புரிந்தது.

ஒரு நிமிடம் அங்கே கனத்த அமைதி நிலவியது. இனி நடக்கப் போவது அவர்களுக்குத் தெளிவாய் இல்லை. ஏதோ மகாகவி, தொழுத இடம், பெருவிழி,  இருவர் மூலம் விதி முடிவு செய்வது எதுவும் புரிகிற மாதிரி இல்லை. குழப்பமாக இருந்தது. எதைப் பார்த்து ஏன் இதை அவர் எழுதி வைத்தார் என்று தெரியாமல் அவர்கள் குழம்பினார்கள்.

இம்மானுவல் சந்தேகத்துடன் சொன்னான். “அவரும் மாரடைப்பில் இறந்திருக்கிறார். அதுவும் இயற்கை மரணமாக இல்லாமல் இருக்க வாய்ப்பு இருக்கிறது...”

எர்னெஸ்டோவுக்கு எதிரிகள் இருக்கலாம். ஆனால் கர்னீலியஸுக்கு எதிரிகள் கிடையாதுஎன்றார் எர்னெஸ்டோ.

ஆனால் இந்த மாதிரியான மிக முக்கியமான குறிப்பு அவரிடம் இருப்பதே அவருக்கு எதிராக மாறியிருக்கலாம்என்றான் அக்ஷய்.

இம்மானுவலுக்கும் ஆமென்று பட்டது. அவன் அடுத்த தகவலைப் பார்த்தான். போன்கால்களின் விவரம். அதில் ஏதும் சந்தேகப்படுகிறாற்போல் இல்லை. ஆனால் இம்மானுவல் அதில் திருப்தி அடையவில்லை. உடனடியாக ஒரு நபருக்குப் போன் செய்து சொன்னான். “நான் அனுப்பும் போன் நம்பரிலிருந்து எங்கெல்லாம் போன்கால்கள் போயிருக்கின்றன, எங்கிருந்தெல்லாம் போன்கால்கள் வந்திருக்கின்றன என்று தகவல்கள் வேண்டும். நம்பர்கள் மட்டும் போதாது. ஆட்கள் தகவலும் வேண்டும். உடனடியாக அனுப்பு. நான் காத்துக் கொண்டிருப்பேன்.”

அந்த நபர் அழைக்கும் வரை அவர்கள் மூவரும் பேசிக் கொள்ளவில்லை. அவரவர் சிந்தனைகளில் அவர்கள் ஆழ்ந்திருந்தார்கள். பத்து நிமிடங்களில் தகவல்கள் இம்மானுவலுக்கு வந்தன. கடந்த இருபது நாட்களில் கர்னீலியஸை அழைத்துப் பேசியவர்களில் சாலமன் பெயரையும், வாங் வே பெயரையும் பார்த்து இம்மானுவல் அதிர்ந்தான். அந்தத் தகவலை அவன் அவர்களிடம் தெரிவித்த போது  அவர்களும் அதிர்ந்தார்கள். அவர்களிடம் கர்னீலியஸ் பேசியிருப்பதில் சந்தேகப்படப் பெரிதாக ஒன்றுமில்லை. ஆனால் அலைபேசியில் அந்தப் பேசிய தகவல் அழிக்கப்பட்டிருப்பது சந்தேகத்தைப் பலமாகவே எழுப்பியது.

இம்மானுவல் சொன்னான். “கர்னீலியஸும் அந்த விஷம் தரப்பட்டு தான் கொல்லப்பட்டிருக்க வேண்டும். கொன்று விட்டுத் தங்கள் போன்கால்கள் விவரங்களை அவர்கள் அவர் அலைபேசியில் அழித்திருக்கிறார்கள். அவர்கள் இருவர் பெயர்கள் மட்டும் தான் அழிக்கப்பட்டிருக்கின்றன

எர்னெஸ்டோ வாங் வே பெயரைச் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை. திடீரென்று வயதானது போல் அவர் களைப்பை உணர்ந்தார். இல்லுமினாட்டியில் சாதாரணக் களைகளையே சகித்துக் கொள்வது கிடையாது. தலைமைச் செயற்குழு உறுப்பினராக இருக்கிற வாங் வே இப்படி மாறியிருப்பது அவரைப் பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவர் யோசனையுடன் கேட்டார். “என்ன நடந்திருக்கலாம் என்று உங்களால் யூகிக்க முடிகிறதா

இம்மானுவலுக்கும் தெரியவில்லை. அவன் அக்ஷயைப் பார்த்தான். அக்ஷய் சொன்னான். “அவர் எழுதியிருப்பதைப் பார்த்தால் ஏதோ பழைய சுவடியில் இருந்து எடுத்து எழுதப்பட்டிருப்பது போலத்தான் தோன்றுகிறது…”

இம்மானுவல் சொன்னான். “அப்படித்தான் இருக்கும். கர்னீலியஸ் பழங்காலச் சுவடிகள், கலப்பு மொழிகள், இதிலெல்லாம் நிபுணர். ஏதாவது சுவடி அவர்களுக்குக் கிடைத்திருக்கலாம். அதை மொழிபெயர்த்துத் தர அவரிடம் சொல்லியிருக்கலாம். அவர் மொழிபெயர்த்துச் சொன்ன பிறகு இந்த விவரத்தை அவர் வேறு யாரிடமாவது சொல்லி விடக்கூடும் என்று அவரைக் கொன்றிருக்கலாம்தலைவரே! வாங் வேயே அவன் பக்கம் இருக்கிறார் என்கிற போது நாளை நீங்கள் அவரும் இருக்கிற அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வது ஆபத்து என்று எனக்குப் படுகிறது.”

எர்னெஸ்டோ அக்ஷயைப் பார்த்தார். அக்ஷய் சொன்னான். “எனக்கும் அப்படித் தான் தோன்றுகிறது….”

எர்னெஸ்டோ யோசனையில் ஆழ்ந்தார். இம்மானுவல் அவர் என்ன முடிவெடுப்பாரோ என்ற கவலையில் இருந்தான். யார் என்ன அறிவுரை சொன்னாலும் அவருக்குச் சரியென்று பட்டாலொழிய அவர் அதை ஏற்றுக் கொள்ள மாட்டார். எப்போதும் அவர் அவருக்குத் தோன்றியதையே செய்வார், அதிலுள்ள ஆபத்துகளுக்கெல்லாம் அவர் அசர மாட்டார். இம்மானுவலுக்கு சாலமன், வாங் வே போன்ற உயர் பதவியில் இருப்பவர்களே சதிகாரர்களாக மாறியிருந்தது எச்சரிக்கையுணர்வை அதிகபட்சமாய் உயர்த்தியிருந்தது.

இரண்டு நிமிடங்களில் எர்னெஸ்டோ தன் முடிவைச் சொன்னார். இம்மானுவலிடம் இனி அடுத்து என்ன எல்லாம் ஆகவேண்டும் என்று கட்டளையிட்டார்.  அவருடைய மிகத் தெளிவான முடிவுகள், தெளிவான கட்டளைகள், யார் யார் என்னென்ன செய்ய வேண்டும், என்னென்ன சொல்ல வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற வழிகாட்டல்கள்- இவையெல்லாம் பார்க்கையில் அக்ஷயால் அவரை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை. சதி, சூழ்ச்சிகள் எல்லாம் அவர் தினசரி பார்த்துப் பழக்கப்பட்டவை தான் என்பதால் ஸ்தம்பித்துப் போகாமல் அவரால் வேகமாவே அவற்றைத் தாண்ட முடிகிறது என்று அக்ஷய் நினைத்தான்.


வியாழன் அதிகாலை நான்கு மணிக்கு வாங் வேயின் அலைபேசி அடித்தது. அழைப்பது யாரென்று அவர் தூக்கக்கலக்கத்துடன் பார்த்தார். இல்லுமினாட்டியின் உபதலைவர். வாங் வே பேசினார். “ஹலோ

தலைவருக்கு உடல்நிலை சரியில்லை என்று அவர் ஒரு மணி நேரத்திற்கு முன்பு ம்யூனிக் போய் விட்டார். அதனால் இன்றைக்கு தலைமைக்குழுக் கூட்டத்தையும், பொதுக்கூட்டத்தையும் என் தலைமையிலேயே நடத்த உத்தரவிட்டிருக்கிறார்”  உபதலைவர் தெரிவித்தார்.

தலைவருக்கு என்ன ஆயிற்று?” வாங் வே பரபரப்போடு கேட்டார்.

நெஞ்சு வலியாம்…”

உயிருக்குப் பயம் ஒன்றும் இல்லையே?” ஆவலோடு வாங் வே கேட்டார்.

தெரியவில்லை. இம்மானுவல் தான் நெஞ்சு வலி தகவலையும், தலைவர் கூட்டத்தை என் தலைமையில் நடத்த உத்தரவிட்டார் என்ற தகவலையும் சொன்னான். ஆனால் அவன் குரலில் இருந்த பதற்றத்தைப் பார்த்தால் நிலைமை கொஞ்சம் அபாயம் போல் தான் தெரிகிறது….”


(தொடரும்)
என்.கணேசன்



Wednesday, January 12, 2022

முந்தைய சிந்தனைகள் 75

 சிந்திக்க சில சிந்தனைகள் என் நூல்களில் இருந்து...












Monday, January 10, 2022

யாரோ ஒருவன்? 67



தன்லாலுக்கு இந்தச் சிறைவாழ்க்கை சகிக்க முடியாத ஒன்றாய் இருந்தாலும் யாருமே கற்றுக் கொடுக்க முடியாத அடக்கத்தை அவனுக்குக் கற்றுக் கொடுத்திருந்ததுஅவனை விடத் திமிர் பிடித்தவனாய் அந்தத் தடியன் இருந்தான். அவன் தன் கைதிகளை நடத்தியதை விடக் கேவலமாகவும் கொடுமையாகவும் அந்தத் தடியன் அவனை நடத்தினான். அந்தத் தடியன் குத்துச் சண்டை பயில்வான் போல் இருந்தான். அவன் கை கால்கள் மிக வலிமையாக இருந்தன. இரண்டையும் உபயோகப்படுத்துவதில் அவன் எந்த தாட்சணியமும் காட்டாதவனாக இருந்ததால் மதன்லால் சஞ்சயைப்  போலவே மரியாதையைக் கற்றிருந்தான். வாங்கியிருந்த அடிக்கும், உதைக்கும் பல மடங்கு வட்டியும் முதலுமாய் நிச்சயமாய் திருப்பித் தரும் வெறி நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போனாலும் அதை அவன் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. நாயும் சாப்பிடாது என்று அவன் சாப்பிட மறுத்த வறண்ட சப்பாத்தியை திரும்பவும் கேட்க அவன் சுயமரியாதை விடவில்லை. ஒரு நாள் முழுப்பட்டினிக்குப் பிறகு உடல் பலமிழப்பதை அவன் உணர ஆரம்பித்தான். தப்பித்துப் போக ஓரளவாவது உடல்பலம் வேண்டும் என்று அறிவு அவனை எச்சரித்ததுஒற்றைச் சப்பாத்தியால் எத்தனை சக்தி கிடைக்கும் என்று மனம் புழுங்கினாலும் அதையும் மறுப்பது முட்டாள்தனம் என்று உணர்ந்தவனாய் அவன் இரண்டு தடவை கெஞ்சியபிறகு தான் தடியன் அதைக் கொடுக்க ஆரம்பித்தான். அதுவும் காலையும், இரவும் மட்டும் தான் கிடைத்தது. நரேந்திரனிடம் சில தகவல்களைச் சொன்ன பிறகு தான்  மூன்றாவது வேளை சப்பாத்தி கிடைக்கிறது என்று சஞ்சய் சொல்லியிருந்தான்.

இன்னமும் அவனிடம் பேச நரேந்திரன் வரவில்லை. தடியனிடம் கேட்டதற்குஅவர் தேவைப்பட்டால் தான் பேசுவார். தேவையிருக்கலை போல...” என்றான்

வந்த கோபத்தைக் கவனமாக அடக்கிக் கொண்டு அவன் கேட்டான். “பின்னே எதுக்கு என்னைக் கடத்திகிட்டு வந்து இங்கே வச்சிருக்கீங்க? என்ன தான் வேணும்

தடியன் சொன்னான். “உன் தப்புக்கு அபராதமாய் உன் பொண்டாட்டி கிட்ட பணம் கேட்டிருந்தோம். அவ குடுத்திருந்தா அதை வாங்கிட்டு உன்னை விட்ருப்போம். பணம் குடுத்து உன்னை மீட்டுக்கற அளவுக்கு உனக்கு எந்த மதிப்பும் இருக்கறதாய் அவ நினைக்கலை போலருக்கு. வேறென்ன பண்றதுன்னு இங்கே கொண்டு வந்து போட்ருக்கோம்.”

மதன்லால் அவன் சொன்னதை நம்பினான்அவன் மெல்லக் கேட்டான். “எவ்வளவு பணம் கேட்டீங்க?”

ஐம்பது லட்சம்

மதன்லால் மனைவி பேரில் வாங்கிய சொத்துக்களின் இன்றைய மதிப்பு குறைந்தது ஐந்து கோடி இருக்கும். கணவன் அவளுக்கு வாங்கிக் கொடுத்த சொத்தில் பத்தில் ஒரு பகுதியை அவளுக்கு இழக்க மனமில்லை. தப்பித்துப் போனால் அவளையும் முறையாக கவனிக்க வேண்டும்.

மதன்லால் வந்த முதல் நாளிலேயே தனது அறையை நுணுக்கமாய் ஆராய்ந்திருந்தான். உபயோகிக்காமல் விட்டிருந்த பழைய கட்டிடத்தின் ஒரு பாழடைந்த அறை. ஒரு ஜீரோ வாட்ஸ் பல்பு மட்டும் தான் ஒரே மின்சார உபகரணம். அதனால் பேசுவதை ஒட்டும் கேட்கும்படியான எந்த அறிகுறியும் தெரியவில்லை. சஞ்சய் அறை நிலவரமும் அப்படியே என்பது அவனிடம் விசாரித்ததில் தெரிந்தது. தடியன் இரவு நேரத்தில் மட்டும் அங்கேயே தங்குவான் போலத் தெரிந்தது.... அதனால் பகல் பொழுதுகளில் தடியன் இல்லாத நேரங்களில் சஞ்சயும் அவனும் மனம்விட்டுப் பேசிக் கொண்டார்கள். அண்ணா அண்ணா என்று அழைத்து தர்மசங்கடமான விஷயங்களையும், தன்னம்பிக்கையை இழக்க வைக்கும் விஷயங்களையும் தான் சஞ்சய் அதிகம் பேசினான் என்றாலும் அவனும் பேச்சுத் துணைக்கு இல்லா விட்டால் பைத்தியம் பிடித்து விடும் என்று மதன்லால் நினைத்துக் கொண்டான்.

அங்கிருந்து தப்பிக்க எல்லா வழிகளையும் அவன் யோசித்துப் பார்த்து விட்டான். கடினமான இரும்புச் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கும் வரை அங்கிருந்து தப்பிக்க வழியே இல்லை.  சங்கிலியை பாத்ரூம் போக முடிந்த அளவு தளர்த்தியிருந்ததால் அந்த நீளச்சங்கிலியை தடியனைத் தாக்க முடிந்த ஆயுதமாகவும் பயன்படுத்தலாம். அந்த யோசனையை ஒரு நாள் சஞ்சயிடம் சொன்னான்.

மதன்லால் அண்ணா. அதை நானும் யோசிச்சிருக்கேன். ஆனா அவன் நம்மள நெருங்கி வர மாட்டேன்கிறானேண்ணா. அது மட்டுமில்லாம நம்மள சங்கிலியால கட்டியிருக்கற பூட்டைத் திறக்கற சாவி அவன் தன்கிட்டயே வெச்சிருக்கிறதில்லை அண்ணா. அதைக் கண்டுபிடிச்சுட்டேன். அதனால நாம கஷ்டப்பட்டு அவனை சங்கிலியால அடிச்சு சாய்ச்சா கூட நாம இதைக் கழட்டிட்டு போக முடியாதே அண்ணா.”

சினிமாவில் வருவது போல் தடியனைத் தாக்கி அவன் பாக்கெட்டில் வைத்திருக்கும் சாவியை எடுத்து பூட்டைத் திறந்து தப்பிக்கும் அந்த வழிக்கு வாய்ப்பில்லை என்று தெரிந்த மதன்லால் மனம் நொந்து போனான்.

சஞ்சயின் குரல் பரிதாபமாகப் பக்கத்தறையிலிருந்து வந்தது. “அண்ணா உங்களுக்கும் ஏழெட்டு நாள் முன்னாடியே இங்கே வந்து மாட்டிகிட்டவன் நான். நாளுக்கு மூனு சப்பாத்தி மட்டும் சாப்பிட்டு உடம்பு ரொம்பவே பலவீனமாயிடுச்சு அண்ணா. தப்பிச்சாலும் ஓடறதை விடுங்க, வேகமா நடக்க முடியுமாங்கறதே சந்தேகமாயிருக்கு அண்ணா..”

இனி சில நாட்களில் தன் நிலைமையும் அது தான் என்கிற உண்மை உறைத்த போது மதன்லால் கலக்கமடைந்தான். பசியும் கடுங்குளிரும் சேர்ந்து சீக்கிரமே சாகடித்து விடும் போலத் தோன்றியதுஉடனடியாக எதாவது செய்தாக வேண்டும்.

சஞ்சய் கவலையுடன் சொன்னான். “என் மாமாவோ, அஜீம் அகமதோ நம்மளைக் கண்டுபிடிச்சுக் காப்பாத்தினா தான் உண்டு. அதுக்கு எதாவது வழி இருக்கா அண்ணா?”

மதன்லால் மனதில் ஒரே ஒரு நம்பிக்கைக் கீற்று மெல்ல எழுந்தது. “நீ காணாமல் போனதையும், என்னை  நரேந்திரன் விசாரிக்க வந்ததையும் அஜீம் அகமது காதுல போடச் சொல்லி உன் மாமா கிட்ட சொல்லிருந்தேன். சொல்லியிருப்பார். அவன் கில்லாடி. ரொம்ப புத்திசாலி.   உன் மாமாவுக்கு முடியாட்டியும், மனசு வெச்சா அஜீம் அகமதுக்கு நம்மள காப்பாத்த முடியும்.”

சஞ்சய் கேட்டான். “அவன் மனசு வெப்பானா அண்ணா?”

மதன்லால் நம்பிக்கையோடு சொன்னான். “அஜீம் அகமதுக்கு எதாவது சவாலா இருந்தா அதை அவன் நிச்சயம் அலட்சியமா விடமாட்டான் சஞ்சய். பொறு. அவன் நம்மள கண்டுபிடிச்சு கண்டிப்பா காப்பாத்துவான்”


ரேந்திரனுக்கு நாகராஜைப் பற்றிய விவரங்கள் வந்து சேர்ந்தன. கிட்டத்தட்ட ஜெய்ராம் கல்யாணுக்கு அனுப்பி வைத்த விவரங்களாகவே அவை இருந்தன. சுவாமி முக்தானந்தா ஆசிரமவாசிகளையும், அக்கம்பக்கத்து ஆட்களையும், ஆசிரமத்துக்கு நீண்ட காலம் வந்து போய்க் கொண்டிருந்த பக்தர்களையும் விசாரித்து எழுதினவையாக அவை இருந்தன. நாகரத்தினங்கள் நாகராஜிடம் இருக்கும் விவரம் மட்டும் அதில் இருக்கவில்லை. மற்றபடி நாகசக்தியால் அவன் அமானுஷ்ய சக்திகள் பெற்றிருப்பதை அந்த அறிக்கை பிரதானப்படுத்தியே எழுதியிருந்தது. கூடவே சமீபத்தில் தான் ஜெய்ராம் என்ற போலிப் பெயரில் எழுத்தாளராக எவனோ வந்து நாகராஜைப் பற்றிய விவரங்களை சேகரித்துக் கொண்டு போயிருக்கிறான் என்பதும் குறிப்பிடப் பட்டிருந்தது. நாகராஜ் தன் சொந்த வேலையாக தற்போது கோயமுத்தூரில் தங்கியிருக்கிறான் என்றும் விலாசம் இன்னதென்றும், அலைபேசி எண்ணும் கூட சொல்லப்பட்டு இருந்தது.

நரேந்திரனை அந்த விலாசம் ஆச்சரியப்படுத்தியது. கல்யாணின் வீட்டு விலாசம் உள்ள பகுதி மட்டுமல்ல, கல்யாண் வீட்டுக்கு அடுத்த வீட்டில் தான் நாகராஜ் தற்போது வசித்துக் கொண்டிருக்கிறான். மாதவனின் நண்பனாக அறிமுகப்படுத்திக் கொண்டு வந்தவன், இன்னொரு நண்பனின் பக்கத்து வீட்டிலேயே வசிக்க வந்திருப்பது தற்செயல் போலத் தெரியவில்லை.

அவனுக்கு அந்தத் தகவல்களை அனுப்பியவன் ஒரு பின்குறிப்பையும் அனுப்பியிருந்தான். பிரதமரின் தனிச் செயலாளர் குடும்பத்தினரும் நாகராஜை அடிக்கடிச் சந்திப்பவர்கள் என்றும், அதுமட்டுமல்லாமல் ஆளும்கட்சிப் பிரபலங்கள், எதிர்க்கட்சிப் பிரபலங்கள், பல உயர்மட்ட அதிகாரிகள் என அதிகாரமும், செல்வாக்கும் உள்ளவர்களே அவன் தயவைத் தேடி அடிக்கடி செல்பவர்கள் என்பதால் நாகராஜின் அதிருப்தியைச் சம்பாதித்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது என்றும் எச்சரித்திருந்தான்.

அதிகாரபூர்வமான விசாரணை என்று அவன் நாகராஜை நெருங்கிவிட முடியாது என்பதை நரேந்திரன் புரிந்து கொண்டான்.. அதற்கான அதிகாரத்தையே நாகராஜ் அலட்டாமல் அகற்றி விடமுடிந்த அளவு செல்வாக்குள்ளவன் என்பது புரிந்தது. நரேந்திரன் கடிகாரத்தைப் பார்த்தான். காலை ஒன்பதரை மணி. அவன் கல்யாணையும் சரத்தையும் அவர்களது கம்பெனியில் பதினோரு மணிக்குச் சந்திக்கச் செல்ல வேண்டும். பத்தரை மணிக்கு அவன் தற்போது தங்கும் ஓட்டலிலிருந்து கிளம்பினால் போதுமானது. இன்னும் ஒரு மணி நேரம் இருக்கிறது. அவர்களைச் சந்திக்கச் செல்லும் முன் நாகராஜிடம் பேசிப் பார்த்தால் என்ன என்று தோன்றியது.

உடனே நாகராஜின் அலைபேசி எண்ணை நரேந்திரன் தொடர்பு கொண்டான்.



(தொடரும்)
என்.கணேசன்




Thursday, January 6, 2022

இல்லுமினாட்டி 136



வாஷிங்டன் வந்து சேர்ந்ததிலிருந்தே அக்‌ஷயின் மனம் ஏதோ ஒரு நெருடலை உணர்ந்து கொண்டேயிருந்தது. அது என்னவென்று அவனால் சொல்ல முடியவில்லை. பயணத்தின் போது ம்யூனிக்கிலும், வாஷிங்டனிலும் செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகளில் எந்தக் குறையும் இருக்கவில்லை. எர்னெஸ்டோவின் பங்களாவிலும் அதில் எந்தக் குறையும் இல்லை. ஆனாலும் அந்தப் பங்களாவில் கூட அவரைத் தனியாகச் சிறிது நேரம் அவர் அறையில் இருக்க விடுவதற்கு அவன் மனம் சம்மதிக்கவில்லை.

அவன் தனக்குள் சொல்லிக் கொண்டான். “இத்தனை பாதுகாப்பு கெடுபிடிகளைத் தாண்டி விஸ்வம் வர வாய்ப்பேயில்லை. இவர் வருவதற்கு முன் இங்கிருந்த பாதுகாப்பு குறைந்த நிலைமையிலாவது விஸ்வம் எதாவது முயற்சி எடுத்திருந்தால் அது முடிந்திருக்கலாம். இப்போது முடியவே முடியாது...”

அக்‌ஷய் ஒரு கணம் மனதை நிறுத்தினான். திரும்பவும் முந்தைய வாக்கியத்திற்குப் போனான். ‘இவர் வருவதற்கு முன் இங்கிருந்த பாதுகாப்பு குறைந்த நிலைமையிலாவது விஸ்வம் எதாவது முயற்சி எடுத்திருந்தால் அது முடிந்திருக்கலாம்.’. தலைவர் இல்லாத போது அப்படி இங்கே வந்து போய் அவன் எதைச் சாதித்திருக்க முடியும்.... ஏன் எதையும் சாதித்திருக்க முடியாது. வந்து வெடிகுண்டு வைத்து விட்டும் கூடப் போயிருக்கலாமே....

இம்மானுவல் அங்கே இருபத்திநான்கு மணி நேரமும் பாதுகாப்பு அதிகாரி, காவலாளிகள் இருக்கிறார்கள் என்று சொல்லியிருந்த போதிலும் அக்‌ஷய்க்கு அந்த எண்ணம் வந்த பிறகு நிம்மதியாக இருக்க முடியவில்லை. இருபத்தி நான்கு மணி நேரக் காவலில் சில வினாடிகள், சில நிமிடங்களாவது அவர்கள் அசந்திருக்க வாய்ப்பிருக்கிறது. தலைவர் தான் இல்லையே என்ன ஆகி விடப்போகிறது என்று சிறு அலட்சியம் காட்டியிருக்கவும் வாய்ப்பிருக்கிறது.... அந்தக் குறைவான நேரம் விஸ்வத்துக்குப் போதும் ஏதாவது ஆபத்தை உருவாக்க...

அக்‌ஷய் உடனே இம்மானுவலை அழைத்துத் தன் சந்தேகத்தைச் சொன்னான். இம்மானுவல் சொன்னான். “வெடிகுண்டு வைத்து விட்டுப் போக விடுமளவு எங்கள் ஆட்கள் மோசமில்லை அக்‌ஷய். அவர்கள் இருப்பது மட்டுமல்ல. கண்காணிப்பு கேமிராக்கள் வேறு இருக்கின்றன. ”

ஆனாலும் அக்‌ஷயின் மனம் ஏனோ விஸ்வம் வந்து போயிருக்கலாம் என்ற சாத்தியக்கூறிலிருந்து நகர மறுத்தது.. அது அர்த்தமில்லாத பயமாய் இருக்கலாம் என்றாலும் அலட்சியப்படுத்த வேண்டாம் என்று நினைத்த அக்‌ஷய் சொன்னான். “அப்படியானால் கடைசி இரண்டு மூன்று நாட்களின் பதிவுகளை ஒரு தடவை பார்த்து விடுங்களேன்...”

இம்மானுவல் தலையசைத்தான். அன்று மாலை எர்னெஸ்டோவும், அக்‌ஷயும் பாதுகாப்பு வீர்ர்களுடன் போக இம்மானுவல் பங்களாவிலேயே இருந்தான். அமெரிக்க ஜனாதிபதி, ரஷிய ஜனாதிபதி எல்லாம் கலந்து கொள்கிற விருந்து என்பதால் அந்தந்த நாட்டினரின் உச்சக்கட்டப் பாதுகாப்பு அங்கே இருக்கும். கூடவே இல்லுமினாட்டியின் பாதுகாப்பும், அக்‌ஷயின் பாதுகாப்பும் தலைவருக்கு இருக்கும் போது கவலைப்பட ஏதுமில்லை என்பதால் பங்களாவிலேயே இருந்து அக்‌ஷய் சொன்ன மாதிரி அந்தப் பதிவுகளை எல்லாம் பார்த்து சந்தேகம் தெளிவது நல்லது என்று அவன் நினைத்தான். ஏனென்றால் விஸ்வம் சம்பந்தப்படும் எதிலும் சிறிய சந்தேகத்தையும் கூட அவ்வப்போது நிவர்த்தி செய்யாமல் விடுவது ஆபத்து என்று அவனும் நினைத்தான்.

இரண்டு நாட்களின் பதிவுகள் சரியாகப் பிரிக்கப்பட்டு இரண்டிரண்டு பேர் கொண்ட ஆறு பிரிவினரால் பார்க்கப்பட்டது. அவர்கள் கூர்ந்து பார்த்துக் கொண்டிருக்க இம்மானுவல் அவர்கள் கண்காணிப்பை சுற்றி நடந்தபடியே கண்காணித்துக் கொண்டிருந்தான். நேரம் நகர்ந்து கொண்டிருந்தது. ஆனால் எதுவும் வித்தியாசமாகவோ, சந்தேகப்படும்படியாகவோ கிடைக்கவில்லை. எல்லாம் இயல்பாகவே இருந்தது. தேவையில்லாமல் சந்தேகப்பட்டோமோ என்று இம்மானுவல் நினைத்த போது திடீரென்று அந்தப் பன்னிரண்டு பேரில் ஒருவன் கத்தினான். “இங்கே பாருங்கள்”

இம்மானுவல் அந்த ஆள் பின்னால் நின்று பார்த்தான். அந்த ஆள் சிறிது அந்தப் பதிவைப் பின்னுக்குத் தள்ளி மறுபடி ஓட விட்டான். பங்களாவின் பின்னால் இருந்த காமிரா பின் சுவரிலிருந்து முகமூடியணிந்த ஒருவன் குதிப்பதைக் காட்டியது. அவன் சுவரை ஒட்டி நின்று கொண்டு சிறிது நேரம் பார்த்து விட்டு ஓட யத்தனிப்பது தெரிந்தது. திடீரென்று அவன் அந்தப் பதிவில் காணவில்லை. அடுத்தடுத்த காமிராக்களில் ஏதோ அலைபாய்ந்தது போல் அவனது அவசரப் பாய்ச்சல் தெரிந்தது....

இம்மானுவல் சிலையாய் உறைந்து போனான். ஹாலின் காமிராக்களிலும் ஒரு பாய்ச்சல் மட்டும் தான் மூன்று வினாடிகளில் தெரிந்தது. அதன் பின் அவன் ஒரு அறையை அடைவது தெரிந்தது. அந்த அறையிலும் ஒரு காமிரா இருந்தது என்றாலும் கும்மிருட்டில் எதுவும் சிறிதும் தெரியவில்லை.  சில நிமிடங்கள் அவன் அங்கே இருந்தான் என்பது மட்டும் தெரிந்தது. பின் மறுபடி ஹாலில் பாய்ச்சல், பின் சிறிது நேரம் வரவேற்பறையின் கதவருகே நின்று எட்டிப் பார்த்தபடி நின்றது வராந்தா வெளிச்சத்தால் சில நிமிடங்கள் மங்கலாக அரையிருட்டில் தெரிந்தது. அதன் பின் அசாத்திய வேகத்தில்  பழையபடி ஓட்டம்.

அவர்கள் பார்த்தபடி திகைத்து நின்ற போது எர்னெஸ்டோவும் அக்‌ஷயும் விருந்திலிருந்து திரும்பி வந்து சேர்ந்தார்கள். அவர்களுக்கும் அந்தக் குறிப்பிட்ட பதிவு மறுபடி காட்டப்பட்டது. முகமூடி மனிதன் தொடர்ந்து சிறிது நேரம் வெளிச்சத்தில் நின்றிருந்தது பின்பக்கச் சுவர் அருகே தான். மற்றபடி எல்லா இடத்திலும் மின்னல் வேகம் தான். வந்திருந்தவன் விஸ்வம் தான் என்பதில் சந்தேகமேயில்லை.

இம்மானுவல் சொன்னான். “அவன் போய்ச் சிறிது நேரம் தங்கியிருந்தது தலைவரின் படுக்கையறை. அங்கே இருட்டில் என்ன செய்திருக்கிறான் என்று பார்க்க வேண்டும்... இருட்டில் இருக்கும் காமிராப் பதிவுகளைத் தெளிவாக்கிக் காட்ட வல்லுனர்கள் இருக்கிறார்கள்... அவர்களை அழைப்போம்.. அவனிடம் வெடிகுண்டு எதுவும் இருந்தது போல் தெரியவில்லை என்றாலும் அந்த சாத்தியத்தையும் சோதித்து விடுவது நல்லது.”

முதலில் எர்னெஸ்டோவை தூர இருக்கும் ஒரு அறையில் பாதுகாப்பாக அமர்த்தி அவருடன் ஐந்து பாதுகாவலர்களை நிறுத்தினார்கள். பின் அந்தந்த வல்லுனர்கள் வருவதற்கு முன் எர்னெஸ்டோவின் அறையைச் சோதனையிடப் பாதுகாப்பு வீர்ர்கள் உள்ளே செல்ல இம்மானுவலும், அக்‌ஷயும் பின் சென்றார்கள். அவரது படுக்கை, மற்ற அலங்காரப் பொருட்கள் எல்லாம்  அவர்கள் பரிசோதித்துப் பார்த்துக் கொண்டிருந்த போது கண்களை மூடி நின்று யோசித்த அக்‌ஷய் பின் மெல்ல அலமாரியைத் திறந்தான். ஒயின் பாட்டில்களைப் பார்த்தவுடன் சொன்னான். “ஆபத்து இதில் இருக்கலாம் என்று நினைக்கிறேன்”.

அடுத்த அரை மணி நேரத்தில் வெடிகுண்டு நிபுணர்கள், காமிராப்பதிவு நிபுணர்கள், மருத்துவ ஆய்வுப் பரிசோதகர்கள் வந்து சேர்ந்தார்கள். பரிசோதனை செய்ததில் அக்‌ஷய் சந்தேகப்பட்டது போல மூன்று ஒயின் பாட்டில்களிலும் விஷம் கலக்கப்பட்டு இருப்பது தெரிந்தது.  மூத்த பரிசோதகர் சொன்னார். “இது சாதாரண விஷம் இல்லை.  இரண்டு மூன்று விஷங்கள் சேர்ந்த ஒரு கலவை.  இதைச் சாப்பிட்டு இறந்தால் சாதாரணப் பரிசோதனையில் கண்டுபிடிக்க முடியாது. மாரடைப்பில் காலமான அறிகுறிகள் தான் தெரியும்… ஆனால் சாப்பிட்டு ஒரு மணி நேரத்தில் ஆள் இறப்பது மட்டும் நிச்சயம்”

இம்மானுவல் அதிர்ந்து போயிருந்தான். சிறிது ஏமாந்திருந்தால், அக்‌ஷயின் உள்ளுணர்வுக்கு இது தோன்றாமலிருந்திருந்தால் இன்றிரவு இல்லுமினாட்டி அதன் தலைவரை இழந்திருக்கும். அவன் தலைவரைப் பாதுகாக்கத் தவறியவனாய் ஆகியிருப்பான்…. தலைவர் வாஷிங்டன் வரும் போதெல்லாம் ஒரு செனெட்டர் நண்பர் அவருக்குப் பிரத்தியேகமாகத் தருவிக்கப்பட்ட இத்தாலிய, பிரெஞ்சு ஒயின்கள் அனுப்புவது வழக்கம் என்பதையும் சாலமன் தான் விஸ்வத்துக்குத் தெரிவித்திருக்க வேண்டும்.

இம்மானுவலின் அதிர்ச்சி எர்னெஸ்டோவிடம் இருக்கவில்லை. அவர் அக்‌ஷயிடம் புன்னகையுடன் சொன்னார். “விஸ்வத்தை நான் இன்று திருப்திப்படுத்த முடியாதபடி செய்து விட்டீர்கள்…”

அக்‌ஷய் அமைதியாகச் சொன்னான். “விஸ்வம் தன் திருப்திக்கு ஒரே ஒரு திட்டத்தை மட்டும் நம்பியிருக்க மாட்டான். அவனிடம் வேறொரு திட்டம் தயாராக இருக்கலாம்.”

(தொடரும்)
என்.கணேசன்



Monday, January 3, 2022

யாரோ ஒருவன்? 66


வேலாயுதம் கற்பனை வானில் சிறகடித்துப் பறக்க ஆரம்பிக்க பாம்பாட்டி அவரைக் கூர்ந்து பார்த்தான். திடீரென்று அதைக் கவனித்த வேலாயுதம் எச்சரிக்கையடைந்தார். அவருடைய எண்ணங்களை அவன் படித்திருப்பானோ?
         
அவர் ஒரு பெருமூச்சு விட்டபடி சொன்னார். “யார் யாருக்கு எவ்வளவு விதிச்சிருக்கோ அதைவிட இம்மியளவும் அதிகம் கிடைக்க வழியில்லை. அவனுக்கு ஏற்கெனவே நாகசக்தி இருக்கறதால மேல மேல கிடைச்சுகிட்டே இருக்கு. நம்மள மாதிரி ஆள்கள் தூரத்துல நின்னு வாயைப்பிளக்க மட்டும் தான் முடியும். நாகரத்தினங்களைப் பத்தி இத்தனை தெரிஞ்சு வச்சிருக்கியே உனக்கு ஏதாவது இதுவரை கிடைச்சிருக்கா?”

பாம்பாட்டி வருத்தத்தோடு சொன்னான். “அதான் சொன்னேனே. ஒரு தடவை எனக்கு கிடைக்க இருந்துச்சுகடைசி நிமிஷத்துல கைநழுவிப் போச்சு. நீங்க சொன்னபடி எனக்கு விதிக்கலை போல...”

வேலாயுதம் நீண்டகாலம் பழகியவர் போல அவனைத் தட்டிக் கொடுத்துக் கேட்டார். “என்ன ஆச்சு?”

பாம்பாட்டி தன் பழைய கசப்பான நினைவுகளைச் சொல்ல விரும்பவில்லை. “பழையதைச் சொல்லி எதுவும் ஆகப்போறதில்லை. அதை விடுங்க

பழையதை நினைத்துப் பார்க்கும் மனநிலையில் கூட அவன் இல்லை என்பது அவருக்கு ஆறுதலாக இருந்தது. அவர் அவனைக் கேட்டார்.  “சரி... நீ இங்கே எங்கே தங்கியிருக்கிறாய்?”

பக்கத்தில் புலியகுளத்தில் தான்.... வந்து ஒரு மாசமாச்சு. எனக்கு எப்பவுமே ஸ்திரமான ஒரு இடம் கிடையாது. நாடோடி மாதிரி சுத்திகிட்டே இருப்பேன். எந்த இடத்திலும் அதிகபட்சம் ஆறு மாசம் தான்....”

புலியகுளம் அங்கிருந்து சுமார் மூன்று கிலோமீட்டருக்குள் தான் இருந்தது. அவன் மிக அருகாமையில் வசிப்பது ஆபத்தாக அவருக்குப் பட்டது. அவ்வப்போது திரும்பவும் அவன் வரக்கூடும். வந்து கல்யாணைப் பார்த்தால் அடையாளம் கண்டுபிடித்தாலும் கண்டுபிடித்து விடலாம். இந்த நேரத்தில் அது அதிகப் பிரச்சினைகளை உருவாக்கலாம். இனி இந்தப் பாம்பாட்டியால் ஆக வேண்டியது எதுவும் இல்லை, அறிய வேண்டியதும் எதுவுமில்லை என்பதால் அவன் ஊரைவிட்டுப் போனாலே நல்லது. குறைந்தபட்சம் கண்ணில்படாமல் இருப்பது மிகநல்லது.

குடும்பம்...?” அவர் கேட்டார்.

நான் தனிக்கட்டை தான். பல்லு பிடுங்கின பாம்புகள் தான் இப்போது என் குடும்பம்

வருமானம்?”

வயித்தை நிரப்பற அளவு கிடைக்குது. அதிகமுமில்லை. கம்மியுமில்லை...”

அவன் சொன்னது அவரைச் சிறிதும் பாதிக்கவில்லை. ஆனால் பாதித்தது போல முகத்தைச் சோகமாக வைத்துக் கொண்டார். அவனிடம் மேலும் இரண்டு ஐநூறு ரூபாய்நோட்டுக்களைத் தந்தார். “வெச்சுக்கோ. எனக்கென்னவோ பக்கத்து வீட்டுக்காரன் ரொம்ப ஆபத்தான ஆளாய் தெரியறான். அவன் பக்கத்து வீட்டுக்கு வந்து இத்தனை நாளாச்சு. எங்க யார்கிட்டயும் அவன் முகம் கொடுத்து பேசினதில்லை. அத்தனை கர்வம்.  அவன் கிட்ட வேண்டிய அளவு பணமும் இருக்கு. அமானுஷ்ய சக்தியும் இருக்கு. அவன் கண்ணுல நீ படறதும் ஆபத்து. அவனோட நாகரத்தினங்கள் பத்தி நீ யூகிச்சிட்டேன்னு தெரிஞ்சதுன்னா என்ன செய்வானோ தெரியாது. அதனால இனி இந்தப் பக்கம் வராம பாதுகாப்பாய் இருந்துக்கோ

சொல்லி விட்டு அவர் எழுந்தார். அவனும் மெள்ள எழுந்தான்.

அவர் சொன்னார். “நான் என் பையன் வீட்டில் தான் இருக்கேன். அவன் தூங்கிட்டதால தான் தைரியமாய் வெளிய வந்து உன்கிட்ட பேசறேன். அவனுக்கு நான் முன்பின் தெரியாதவங்க கிட்ட பேசறது பிடிக்காது. என்ன பண்றது. குழந்தைகளோட தயவுல வாழ்றப்ப அவங்கள அனுசரிச்சு தான் வாழ வேண்டியிருக்கு. இப்ப நான் கொடுத்த பணமெல்லாம் கூட அவன் என் கைச்செலவுக்கு மூனு மாசமா தந்தது. ஏதோ உன் மேல ஒரு இரக்கம் தோணினதால் அப்படியே உனக்குக் குடுத்துட்டேன். இனி நாம சந்திக்க வாய்ப்பில்லை. சந்திச்சாலும் பேசற நிலைமைலயோ, பணம் கொடுத்து உதவற நிலைமைலயோ நானில்லை. தப்பாய் நினைக்காதே. அது தான் வயசான என்னோட நிலைமை. எங்கேயிருந்தாலும் நல்லா இரு. வரட்டா

அவன் பதில் சொல்லக் காத்திருக்காமல் அவர் கிளம்பி விட்டார். பாம்பாட்டி அவர் போவதையே பார்த்துக் கொண்டு சிறிது நேரம் நின்றுவிட்டு நடக்க ஆரம்பித்தான்.

வீட்டின் வெளி கேட்டை எட்டும் போது சந்தேகத்துடன் வேலாயுதம் திரும்பிப் பார்த்தார். நல்ல வேளையாக அவன் பின்தொடர்ந்து வரவில்லை. தூரத்தில் அவன் நடந்து போய்க் கொண்டிருப்பது தெரிந்தது.

நிம்மதியுடன் உள்ளே நுழைந்த அவருக்காக கல்யாண் பரபரப்புடன் காத்திருந்தான். அவனைத் தன்னறைக்கு அழைத்துக் கொண்டு போய் கதவைத் தாளிட்டு விட்டு அவனிடம் அவர் நடந்ததையெல்லாம் பரபரப்புடன் சொல்ல ஆரம்பித்தார். கேட்கக் கேட்க கல்யாணின் கண்கள் ஜொலித்தன. முடிவில் மகன் ஏதாவது சொல்வான் என்று எதிர்பார்த்த வேலாயுதம் தானே மெல்லக் கேட்டார். “என்னடா நினைக்கிறே?”

கல்யாண் உடனடியாக எதையும் சொல்லவில்லை. அவன் கவனம் முழுவதும் பழைய நிகழ்வுகளில் இருந்தது. அந்த நாட்களில் நாதமுனி சொன்ன விஷயங்களை நினைவுபடுத்திப் பார்த்தான். நாகரத்தினங்களைப் பற்றி அவர் விவரமாகச் சொல்லியிருந்தாலும் இப்படியோரு விசேஷ நாகரத்தினத்தைப் பற்றி அவர்களிடம் சொல்லியிருக்கவில்லை. அவன் யோசனையுடன் சொன்னான். “மத்ததை எல்லாம் சொன்ன நாதமுனி இதைச் சொல்லலையேன்னு யோசிக்கிறேன்

அந்தக் கிழவனுக்கு சொல்ல விட்டுப் போயிருக்கும். இந்தப் பாம்பாட்டி விஷயம் தெரிஞ்சவன், அனுபவமிருக்கறவன்னு நமக்குத் தெரியும். அதனால் இவன் சொல்றது உண்மையில்லாமல் இருக்காதுடா. இவன் சொல்றதெல்லாம் நாகராஜ் செய்யறதோட ஒத்து தான் போகுதுராத்திரி நேரத்துல அவன் பண்ற பூஜை, வாக்கிங் கூடப் போகாம பண்ற தியானம் அதெல்லாம் சரியாத்தான இருக்கு....”

ஆமாஎன்ற மகன் மேலும் என்ன யோசிக்கிறான் என்பதை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர் முக்கியமான தகவலை இன்னொரு முறை சொன்னார். “அந்த விசேஷ நாகரத்தினம் இருக்கற பாம்பை இப்ப யாரும் நெருங்க முடியாதாம். விஷத்தைக் கக்கிடுமாம். ஆனா அது அந்த ரத்தினத்தை உதிர விட்ட பிறகு அந்த ரத்தினம் யார் கிட்ட இருக்கோ அவன் கடவுள் மாதிரி சக்தி இருக்கிற ஆளாய் மாறிடுவானாம்...”

அதை அவர் இன்னொரு முறை சொல்ல வேண்டியிருக்கவில்லை. முதல் தடவையிலேயே மிகத் தெளிவாகப் புரிந்து கொண்டிருந்த கல்யாண் மெல்லச் சொன்னான். “அன்னைக்கிருந்த சூழ்நிலை வேறப்பா. அது யாரும் எதிர்பார்க்கல. நடந்ததெல்லாம் நமக்கு சாதகமா இருந்துச்சு. ஆனா இன்னைக்கு அப்பிடியில்ல. நாகராஜ் ஆபத்தானவன். பணம், செல்வாக்கு, நாகசக்தின்னு நெருங்க முடியாத உச்சத்துல இருக்கான்...”

வேலாயுதம் மெல்லச் சொன்னார். “இருக்கலாம். அன்னைக்கும் நம்ம நிலைமை கற்பனைல கூட இப்படியாவோம்னு நினைக்க முடியாதபடி தான் இருந்துச்சு. ஒரு சந்தர்ப்பம் வந்துச்சு. நான் சொல்லி நீ அதைப் பயன்படுத்திகிட்டே. நாம இவ்வளவு உயரத்துக்கு வந்துட்டோம். இன்னைக்கும் சந்தர்ப்பம் அப்படியே தான் வந்திருக்குன்னு எனக்குத் தோணுதுடா. இல்லாட்டி இந்த நாகராஜ் மாதிரியான ஆள் பக்கத்து வீட்டுக்கு வருவானா? ஆயிரம் வருஷத்துக்கு ஒரு தடவை உருவாகிற நாகரத்தினம் இந்தச் சமயத்திலேயே பக்கத்து வீட்டுல உருவாகுமா? அப்படி உருவான நாகரத்தினம் பத்தி நமக்குத் தெரிவிக்கவே வந்த மாதிரி இந்தப் பாம்பாட்டி இப்ப இங்கே வந்திருப்பானா? விதி நமக்கு ஒரு பொன்னான சந்தர்ப்பத்தை நமக்கு ஏற்படுத்தித் தர்ற மாதிரியே தோணுதுடா...”


கல்யாணுக்கு அவர் சொன்னதை மறுக்க முடியவில்லை. ஆனால் இப்போது இந்தச் சந்தர்ப்பத்துடன் ஆபத்தும் உச்சத்திலேயே இருக்கிறது என்பதை அவன் அறிவு சுட்டிக்காட்டியது.  அவன் யோசித்து விட்டுச் சொன்னான். “எதுக்கும் இது பத்திக் கூடுதலாய் தெரிஞ்சுக்கிறது நல்லதுன்னு எனக்குப் படுதுப்பா. நீங்க நாளைக்கே சத்தியமங்கலம் போய் நாதமுனியை பார்த்து இந்த விசேஷ நாகரத்தினம் பத்தின முழுவிவரங்களைத் தெரிஞ்சுகிட்டு வந்துடுங்களேன். அப்புறமா நாம முடிவெடுப்போம்…

(தொடரும்)
என்.கணேசன்