என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, January 9, 2020

இல்லுமினாட்டி 31


ம்மானுவல் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்த போன்கால் இரண்டு மணி நேரத்தில் வந்தது. அவனுடைய உளவுத்துறை ஆள் ஒருவன் பரபரப்புடன் சொன்னான். “ம்யூனிக் நகரிலிருந்து சுமார் நூறு கிலோ மீட்டர் தூரத்தில் நீங்கள் சொன்னது போல் ஒரு ஓக் மரம் இருக்கிறது... ஒரு கிளை தீயில் கருகி இருக்கிறது. ஒரு கிளை தரையைத் தொட்டபடி இருக்கிறது. பழைய மரம்....”

இம்மானுவல் கேட்டான். “நீ அங்கே தான் இருக்கிறாயா?”

ஆமாம். மரத்தின் அடியில் நின்று கொண்டு தான் பேசுகிறேன்

உனக்கு அங்கேயிருந்து அருகில் எதாவது வீடு தெரிகிறதா?”

நூற்றியிருபது அடி தூரத்தில் ஒரு தனி வீடு தெரிகிறது

வேறெதாவது வீடுகள், கட்டிடங்கள்?”

கண்ணுக்கெட்டிய தூரம் வரை இல்லை

இம்மானுவல் தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தான். இரவு எட்டு... அவன் தன் ஆளிடம் கேட்டான். “அந்த வீட்டுக்குள் விளக்கு வெளிச்சம் எதாவது தெரிகிறதா?”

இல்லை.”

நீ இருக்கும் இட வரைபடத்தை எனக்கு வாட்சப்பில் அனுப்பி வை

ஐந்து வினாடிகளில் அவன் சொன்னான். “அனுப்பி விட்டேன்...”

சரி நீ அங்கேயே இரு.  நம் ஆட்கள் சிலரை அங்கே அனுப்புகிறேன். அது வரை அந்த வீட்டில் இருந்து யாரும் வெளியேறி விடாமல் பார்த்துக் கொள்...”

அந்த ஆள் சரியென்றான். அவன் பார்வை அந்த வீட்டிலேயே தங்கி இருந்தது. உள்ளே ஆட்கள் இருப்பது போல் தெரியவில்லை. மறைவாக இருக்க விரும்பி யாராவது விளக்கை அணைத்துவிட்டு ஒளிந்து கொண்டிருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. அப்படி மறைவாக ஒளிந்திருக்க மிகவும் கச்சிதமான வீடு தான் அது...  

அடுத்த ஒரு மணி நேரத்தில் இம்மானுவல் அனுப்பிய ஆட்கள் ஏழு பேர் வந்து சேர்ந்தார்கள். ஒவ்வொருவர் கையில் அதுநவீன துப்பாக்கிகள் இருந்தன. அவர்களில் தலைவர் போல் இருந்தவன், தகவல் தெரிவித்துக் காத்திருந்தவனிடம் வந்து கேட்டான். “ஆட்கள் யாராவது உள்ளே இருக்கிற மாதிரி தெரிகிறதா?”

இல்லை.”

தலையசைத்து விட்டு அவன் தன் ஆட்கள் மூவரையும், தகவல் தெரிவித்தவனையும் சில அடிகள் இடைவெளிகளில் அங்கேயே நிற்க வைத்து விட்டுச் சொன்னான். “நாங்கள் நாலு பேர் சென்று உள்ளே யாராவது இருக்கிறார்களா என்று பார்க்கிறோம். ஒருவேளை அங்கு ஆட்கள் இருந்து எங்களை மீறி அங்கிருந்து ஓடி வந்தால் தயங்காமல் சுட்டு விடுங்கள். எந்தக் காரணத்தைக் கொண்டும் அவர்கள் இங்கிருந்து தப்பித்து விடக்கூடாது...”

சொல்லி விட்டு அவனும் அவன் ஆட்கள் மூன்று பேரும் வீட்டை நோக்கிச் சத்தமில்லாமல் முன்னேறினார்கள். வீட்டை வெளியிலிருந்தே சுற்றிப் பார்த்தார்கள். எல்லா ஜன்னல்களும் சாத்தியிருந்தன. உள்ளே இருட்டாகவே இருந்தது. பின் வாசலில் இருவரை நிற்க வைத்து விட்டு அவன் தன் சகா ஒருவனுடன் முன் வாசற்கதவுக்கு வந்து கதவருகே இருந்த பாதுகாப்பு அலாரத்தை ஆராய்ந்து விட்டுச் சொன்னான். “இதை ஆஃப் செய்து வைத்திருக்கிறார்கள். நீ கதவைத் திற

அவன் சகா தன்னிடமிருந்த மெல்லிய இரும்புக் கம்பியை வளைத்து அந்தக் கதவின் சாவித் துளையில் விட்டான். ஒன்றரை நிமிடத்தில் அவன் கதவைத் திறந்து விட்டான். மிகவும் எச்சரிக்கையுடன் உள்ளே நுழைந்து விளக்கைப் போட்டார்கள். துப்பாக்கியை நீட்டிக் கொண்டே உள்ளே போய் ஒவ்வொரு அறையாகப் பார்த்தார்கள். யாருமே இல்லை. ஆனால் சில மணி நேரங்கள் முன்பு வரை சமையலறை பயன்படுத்தப்பட்டிருந்த சின்னச் சின்னத் தடயங்கள் நுணுக்கமாக ஆராய்ந்ததில் தெரிந்தன.

அந்த வீட்டுக்காரன் நியூயார்க்கில் இருக்கிறான் என்றும், வருடம் ஒரு முறை கிறிஸ்துமஸ் சமயத்தில் வந்து போவான் என்றும் வரும் முன்பே தகவல் சேகரித்திருந்தார்கள். தற்போது இரண்டு மாதங்களாக வீடு காலியாகத் தான் இருந்திருக்கிறது. அக்கம் பக்கம் வீடுகளும் இல்லை. அதனால் ஒளிந்து கொள்ள மிக வசதியான வீடு தான் இது. பாதுகாப்பு அலாரத்தைஆஃப்செய்து வைத்திருப்பதும், சமையலறையைப் பயன்படுத்தி இருப்பதும் சமீபத்தில் ஆட்கள் இங்கே இருந்திருப்பதற்கு அத்தாட்சி...

இந்த விவரங்கள் உடனடியாக இம்மானுவலுக்குத் தெரிவிக்கப்பட்டது.

அதே நேரத்தில் விஸ்வமும் ஜிப்ஸியும் ஒரு வெள்ளை நிறக் காரில் முன்னூறு கிலோமீட்டர் தொலைவில் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். ஜிப்ஸி காரை சீரான வேகத்தில் ஓட்டிக் கொண்டிருந்தான். விஸ்வம் பின்சீட்டில் படுத்துக் கொண்டிருந்தான். முன் சீட்டில் அவன் உட்கார்ந்திருந்து அவனை யாராவது பார்த்து, ஞாபகம் வைத்துப் பின் அவன் எதிரிகளிடம் தெரிவிக்கக்கூடும் என்ற எச்சரிக்கை உணர்வு அவர்களுக்கிருந்தது.

சில மணி நேரங்களுக்கு முன் தான் ஜிப்ஸி அவசரமாக வந்து அவனிடம் தெரிவித்தான். ”அவர்கள் நம்மைக் கண்டுபிடித்து விட்டார்கள்


சற்று ஆச்சரியத்துடன் விஸ்வம் கேட்டான். “எப்படி?

ஜிப்ஸி வேக வேகமாக அவர்களது துணிமணிகளை ஒரு சூட்கேஸில் திணித்துக் கொண்டே சொன்னான். “அலெக்சாண்டிரியாவில் உனக்குக் குறி சொன்னவள் தான் உன் இருப்பிடத்தை அவர்களுக்கும் சொல்லி இருக்கிறாள்...”

விஸ்வம் முகத்தில் களைப்பின் ரேகை ஒரு கணம் படர்ந்து மறைந்தது. அவர்கள் அடுத்த எட்டாவது நிமிடம் அங்கிருந்து கிளம்பி இருந்தார்கள். ஜிப்ஸி அந்த வீட்டுக்கு வந்த மறுநாளே காரை மாற்றி இருந்தான். விஸ்வம் சவரம் செய்யாமலேயே இருந்ததால் டேனியல் முகவாய்க்கட்டையில் இருந்த ஆழமான கீறல் தாடியால் மறைக்கப்பட்டிருந்தது. அந்த இரவு நேரத்தில் எந்த விதமானத் தயக்கமோ, கலக்கமோ இல்லாமல் இருவரும் அமைதியாகப் பயணித்துக் கொண்டு இருந்தார்கள்.     

விஸ்வம் அவனிடம்எங்கே போகிறோம்?” என்று கேட்கவில்லை. விஸ்வம் இந்தச் சில நாட்களில் வாய் விட்டுப் பேசிய வார்த்தைகளை விரல் விட்டு எண்ணி விடலாம். இந்த நாட்களில் அவன் மூச்சுப் பயிற்சியிலும் யோகா பயிற்சிகளிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருந்தான். அதற்கெல்லாம் பழக்கப்பட்டிருக்காத டேனியலின் உடல் கடுமையாக முரண்டு பிடித்தது. அசௌகரியங்களால் அவஸ்தைப்பட்டது. போதும், ஓய்வெடுத்துக் கொள்ளலாம் என்று கதறியது. ஆனால் விஸ்வம் அதையெல்லாம் கண்டு கொள்ளவில்லை.   உடல் எல்லாம் ரணமாக வலித்தாலும் அவன் கருமமே  கண்ணாய் இருந்தான். அவனுக்கு எல்லைகள் இல்லை. எல்லைகளை விஸ்தீரப்படுத்திக் கொண்டே முந்தைய உடலில் வாழ்ந்தவன் அவன். இந்த உடலிலும் அவன் அப்படியே முன்னேறுவான். பரிதாபமான நிலையில் இருந்தாலும் இந்த உடல் அவனுக்குக் கிடைத்திருக்கிற கருவி. எவ்வளவு பலவீனமான கருவியாக இருந்தாலும் அவனால் இந்தக் கருவியை முடிந்த வரை சரி செய்ய முடியும். வெற்றி தோல்விகளை நிர்ணயிப்பது கருவிகள் அல்ல. பயன்படுத்துபவனது திறமையும், மன உறுதியுமே முடிவில் எல்லாவற்றையும் தீர்மானிக்கின்றன. அவன் கர்த்தா... இந்த உடல் ஒரு கருவி...

ஜிப்ஸி அவன் சிந்தனைகளைக் கலைத்தான். “மறுபடியும் அந்தக் கிழவியால் உன்னைக் கண்டுபிடிக்க முடியுமா?”

ஜிப்ஸி பதிலைத் தெரிந்து வைத்துக் கொண்டே தான் இந்தக் கேள்வியைக் கேட்கிறான் என்பதில் விஸ்வத்திற்குச் சந்தேகமில்லை. ஆனாலும் பொறுமையாகச் சொன்னான். “முடியாது. ஒரு முறை பயன்படுத்திய பிறகு அந்தப் பொருளில் இருக்கும் நமது தடயம் மங்கலாகிப் பலவீனமடைந்து விடும்.”

ஜிப்ஸி அதற்கு மேல் எதுவும் கேட்கவில்லை. கார் நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்து போன ஒரு தனிப்பாதையில் காரிருளில் வேகமாகப் போக ஆரம்பித்தது. இப்போது எந்த வாகனமும் அவர்களுக்கு எதிரே வரவுமில்லை, அவர்களைக் கடந்து செல்லவுமில்லை. தூர தூரங்களில் ஓரிரு கட்டிடங்கள் அபூர்வமாகத் தெரிந்தன. அதையெல்லாம் கடந்து ஜிப்ஸி காரோட்டிச் சென்று கடைசியில் ஒரு பழங்கால சர்ச்சின் முன் காரை நிறுத்தினான். சர்ச்சைச் சுற்றிப் புதர்கள் படர்ந்திருந்தன. இப்போது வழிபாட்டில் இல்லாத சர்ச் என்பது அதைப் பார்க்கையிலேயே தெரிந்தது. இருவரும் காரிலிருந்து இறங்கினார்கள்.

ஜிப்ஸி டார்ச் விளக்கை ஒளிர விட்டு சர்ச்சின் பக்கவாட்டில் விஸ்வத்தை அழைத்துச் சென்றான். விஸ்வம் அப்போதும் எதுவும் கேட்கவில்லை. பக்கவாட்டில் இருந்த ஒரு ஜன்னல் கதவை ஜிப்ஸி மெல்லத் தள்ளினான். அந்த ஜன்னல் கதவு திறந்து கொண்டது. ஜன்னலில் கம்பிகள் இல்லை. ஜிப்ஸி அதன் வழியாக உள்ளே குதித்தான். விஸ்வமும் தொடர்ந்து குதித்தான். உள்ளே ஏதோ ஒரு பறவை அமானுஷ்யமாகக் கிறீச்சிட்டது.

விஸ்வம் பறவைகளின் பாஷையை ஓரளவு அறிவான். அதுஅபாயம்என்று கூக்குரல் இடுவதாக உணர்ந்தான்.

(தொடரும்)
என்.கணேசன்




Wednesday, January 8, 2020

சென்னை புத்தகக்காட்சியில் அரங்கு எண்.333ல் என் நூல்கள் கிடைக்கும்!



அன்பு வாசகர்களுக்கு,

வணக்கம். 

ஜனவரி 9 முதல் 21 வரை சென்னை நந்தனம் மைதானத்தில் நடக்கும் புத்தகக் காட்சியில் என் புதிய நூல்கள் இல்லுமினாட்டி, விதி எழுதும் விரல்கள்,  இவ்வார இறுதியில் வெளியாகவிருக்கும் ‘ஆன்மீகப் பயணத்தில் ஆத்மசக்திகள்’ உட்பட அனைத்து நூல்களும் சிறப்புத் தள்ளுபடியுடன் ப்ளாக்ஹோல் மீடியா அரங்கு  333ல் கிடைக்கும். 

என்னுடைய மகாசக்தி மனிதர்கள், அமானுஷ்ய ஆன்மிகம் இரண்டு நூல்களும் தந்தி பதிப்பக அரங்கு 331, 332ல் கிடைக்கும். அருகருகே இருக்கும் இந்த இரண்டு அரங்குகளிலுமே என் அனைத்துப் படைப்புகளையும் வாசகர்கள் வாங்கிக் கொள்ளலாம். இந்த அரங்குகள்  ஐந்தாவது வரிசையில் வலது புறமாக அமைந்துள்ளன.

சென்னையில் உள்ள வாசகர்களையும், இந்தச் சமயத்தில் சென்னை வரும் வாய்ப்புள்ள வாசகர்களையும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். 

பல வாசகர்கள் சென்னைப் புத்தகக் காட்சிக்கு வருவீர்களா என்று கேட்டிருக்கிறார்கள். வேறு பல பணிகள் இருக்கும் காரணங்களால் அங்கு வரும் வாய்ப்பில்லை.  வாசகர்களின் அன்பான விசாரிப்புகளுக்கு நன்றி.

அன்புடன்
என்.கணேசன்




Monday, January 6, 2020

சத்ரபதி 106

ராஜா ஜெய்சிங் அவருடைய திட்டங்களின் படியே ஓரளவு அனைத்தும் நடைபெறுகிறது என்றாலும் நினைத்த வேகத்தில் எதுவும் நடக்கவில்லை என்ற அதிருப்தியில் இருந்தார். ஷாஜஹான் காலத்தில் இருந்து அவர் பல போர்க்களங்கள் கண்டிருக்கிறார். பல வலிமையான எதிரிகளைச் சமாளித்திருக்கிறார். ஆனால் சிவாஜியைப் போன்ற ஒரு எதிரியை அவர் இது வரை கண்டதில்லை. அவனுடைய எதிரிகளும், அவன் மீது பொறாமை கொண்டவர்களும் இப்போது அவருடன் சேர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதும், அவர்கள் அவனை அழிக்க அவரை விட அதிகத் தீவிரத்துடன் இருக்கிறார்கள் என்பதும் உண்மையே. ஆனால் அவன் நண்பர்களும், அவன் வீரர்களும், அவன் ஆளுமைக்குட்பட்ட பகுதிகளின் மக்களும் அதே அளவு அதிகத் தீவிரத்துடன் அவன் பக்கம் இருக்கிறார்கள் என்பதையும் அவர் கண்டார். இந்த அளவு ஒரு அன்பையும், பக்தியையும் அவர் வேறெங்கும் கண்டதில்லை.

தில்லர்கான் அவர் பலகாலமாகப் பார்த்து வரும் மாவீரன். போர்க்களத்தில் சிங்கம் அவன். எதிரிகளுக்கு எமன் அவன். அப்படிப்பட்டவனே புரந்தர் கோட்டையைப் பிடிக்கத் திணறிக் கொண்டிருக்கிறான். அவனிடம் இருந்து வரும் செய்திகள் சிவாஜியின் வீரர்கள் சரணடைவதை விட மரணமடைவது மேல் என்று உறுதியாக இருப்பதாகத் தெரிவிக்கின்றன. போரின் போது அவர்களின் தாக்குதலில் அவிழ்ந்த தலைப்பாகையை புரந்தர் கோட்டையை வெல்லாமல் திரும்பவும் அணியப் போவதில்லை என்று தில்லர்கான் சபதம் எடுத்திருந்தான். தலைப்பாகை இல்லாமல் அவன் போர் புரிந்து வருவது இது வரை நிகழாத ஒரு அதிசயம் தான். ஒரு நாள் புரந்தர் கோட்டையை அவன் வெல்வான் என்பதில் சந்தேகம் இல்லை தான். ஆனால் அந்த முயற்சியில் இது வரை ஆகியிருந்த நாட்களே மிக அதிகம். இனி எத்தனை நாட்கள் ஆகும் என்பது யாருக்கும் நிச்சயமில்லை.

சிங்கக் கோட்டையை வென்று வர ராஜா ஜெய்சிங் திறமை வாய்ந்த தன் தளபதியை அனுப்பியிருந்தார். கோட்டையை ஆக்கிரமித்திருக்கும் அவன் கோட்டைக்குள் இருந்து திடீர் திடீர் என்று வரும் தாக்குதல்களில் நிலைகுலைந்து போயிருக்கிறான். ஒரு நாள் அதிகாலை சிவாஜியே சில வீரர்களுடன் குதிரையில் வந்து முகலாயச் சேனைக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தி விட்டுத் திரும்பிப் போயிருப்பதாய் செய்தி அனுப்பி இருக்கிறான். சிங்கக் கோட்டையையும் ஒரு நாள் அவர்கள் வெல்வது நிச்சயம் தான். ஆனால் அந்த ஒரு நாள் எப்போது வரும் என்பதும் யாருக்கும் நிச்சயமில்லை.

சிவாஜிக்கு எதிராக பல பேரை அவர்களுடன் சேர்த்தாகி விட்டது. ஒவ்வொரு பக்கத்திலும் ஒவ்வொரு குழுவாக தீவிரமாக அவர்கள் அனைவரும் போர் முனைப்பில் தான் இருக்கிறார்கள். அதிலும் வெற்றி நிச்சயம். ஆனால் எப்போது என்பது தான் நிச்சயம் இல்லை. அந்த அளவில் இருக்கிறது சிவாஜியும் அவன் ஆட்களும் காட்டும் தீவிரம்.

இப்படி நிலைமை இருக்கையில் இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு முறை முகலாயச் சக்கரவர்த்தி நிலவரம் கேட்டு ஆளனுப்பிக் கொண்டிருக்கிறார். ஒரே பதிலைச் சொல்லி அனுப்பி அவருக்கும் சலித்து விட்டது. ஒரே பதிலைக் கேட்டுக் கேட்டு முகலாயச் சக்கரவர்த்தியும் பொறுமையிழந்து கொண்டிருக்கிறார். இதற்கெல்லாம் சீக்கிரமாய் முடிவு காண்பது எப்படி என்று ராஜா ஜெய்சிங் சிந்தித்துக் கொண்டிருந்த போது தான் அவரது  காவலன் சிவாஜியின் அமைச்சர் ரகுநாத் பந்த் அவரைக் காண வந்திருப்பதாக அறிவித்தான்.

சமாதான உடன்படிக்கைக்கு எத்தனையோ ஆட்களை சிவாஜியிடம் அனுப்பியும் அதற்குச் சம்மதிக்காத சிவாஜி இப்போது முதல் முறையாகத் தன் அமைச்சரையே அனுப்பி இருப்பது ஒரு நல்ல அறிகுறியாகத் தோன்ற அவரை உள்ளே அனுப்புமாறு ராஜா ஜெய்சிங் காவலனிடம் கூறினார்.

ரகுநாத் பந்த் உள்ளே வந்ததும் மிகுந்த மரியாதையுடன் வரவேற்று அவரை அமரச் செய்த ராஜா ஜெய்சிங் வந்த காரணம் என்ன என்பதைக் கால தாமதமில்லாமல் கேட்டார்.

சிவாஜியின் அமைச்சரான ரகுநாத் பந்த் மிகச் சிறந்த பேச்சாளர். விஷய ஞானம் நிறைய உள்ளவர். ஆட்களை எடை போடுவதில் சாமர்த்தியசாலி. அவருக்கு ராஜா ஜெய்சிங்கிடம் உபசார வார்த்தைகளோ, சுற்றி வளைத்த பேச்சுக்களோ பயன் அளிக்காது என்பது ஆரம்பத்திலேயே தெரிந்து விட்டது. பல அலங்கார வார்த்தைகளைத் தயார் செய்து வந்திருந்த ரகுநாத் பந்த் அவற்றை எல்லாம் தள்ளி வைத்து, ராஜா ஜெய்சிங்குக்கு வணக்கம் தெரிவித்து விட்டு, “எங்கள் மன்னர் அமைதியையும் சமாதானத்தையுமே விரும்புகிறார் ராஜா. நீங்களும் உண்மையாகவே அதை விரும்புகிறீர்கள் என்ற உத்திரவாதம் தந்தால் இங்கு வந்து தங்களைச் சந்திக்கத் தயாராக இருக்கிறார்” என்று சுருக்கமாகச் சொன்னார்.

அவர் சொன்னதைக் கேட்டு மனதினுள் மகிழ்ந்த போதிலும் ராஜா ஜெய்சிங் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அமைதியான குரலில் உறுதியாகப் பேசினார். “மகிழ்ச்சி அமைச்சர் அவர்களே. அமைதியே இரு பக்கத்திற்கும் நன்மை அளிக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் பேச்சு வார்த்தை என்ற பெயரில் சாகசங்களோ, காலங்கடத்துவதோ நிகழ்த்த உங்கள் தரப்பு உத்தேசித்திருந்தால் தயவு செய்து என் நேரத்தை வீணடிக்க வேண்டாம். போர்க்களத்தில் பேரழிவுக்குப் பின் தான் அமைதி நிலைநாட்ட வேண்டும் என்றிருந்தால் அப்படியே அது நடக்கட்டும். அமைதியும் சமாதானமும் தான் உங்கள் உண்மையான உத்தேசம் என்றால் மட்டுமே உங்கள் மன்னர் என்னைச் சந்திக்க வந்தால் போதும்.”

பேச்சு வார்த்தை என்ற பெயரில் சாகசம், காலங்கடத்துவது என்ற ராஜா ஜெய்சிங் குறிப்பிட்டது சிவாஜி சிதி ஜோஹரிடம் காட்டிய தந்திரத்தை அறிந்திருப்பதாகத் தெரிவிக்கும் சூசகமாகவே ரகுநாத் பந்த் கண்டார். ஆனால் அவரும் அதைப் புரிந்து கொண்டதாகவோ, முன்பு அப்படி நடந்திருப்பதாகவோ காட்டிக் கொள்ளவில்லை. அவரும் ராஜா ஜெய்சிங் பேசிய அதே தொனியில் சொன்னார். “பேச்சு வார்த்தை நடத்த வருகையில் தங்கள் பக்கத்திலிருந்து எந்த ஆபத்தும் ஏற்படாது என்ற உத்திரவாதத்தை நீங்கள் தந்தால் எங்கள் மன்னர் விரைவில் வந்து தங்களைச் சந்திக்க நினைக்கிறார்”

ராஜா ஜெய்சிங் சற்று முன் தான் பிரார்த்தனையை முடித்து துளசியை எடுத்துக் கண்களில் ஒற்றிக் கொண்டு வந்திருந்தார். முன்னால் வைத்திருந்த அந்தத் துளசியை எடுத்துக் கொண்டு அவர் மிக உறுதியாகச் சொன்னார். “நான் புனிதமாக நினைக்கின்ற இந்தத் துளசியின் மீது ஆணையாகச் சொல்கின்றேன். தங்கள் மன்னர் எங்களைத் தாக்கும் உத்தேசம் இல்லாமல் இங்கு வருவாரேயானால் அவருடைய உடலுக்கு மட்டுமல்ல அவருடைய சிறு ரோமத்திற்கும் எந்த ஆபத்தும் வராது என்று உறுதியளிக்கிறேன்”

வார்த்தைகள் உதட்டளவில் இருந்து வராமல் உள்ளத்திலிருந்து வந்ததை உணர்ந்த ரகுநாத் பந்த் ராஜா ஜெய்சிங்கை நோக்கி இரு கைகளையும் கூப்பி விட்டு எழுந்தார்.

சிவாஜியிடம் நடந்ததை எல்லாம் தெரிவித்து விட்டு ரகுநாத் பந்த் சொன்னார். ”மன்னா. சொல் ஒன்று செயல் வேறு என்று நடக்கும் மனிதராய் அவர் தெரியவில்லை. அதே நேரத்தில் அப்படிச் சொல் ஒன்று செயல் வேறாய் மற்றவர்கள் நடந்து கொள்வதை அனுமதிப்பவராகவும் தெரியவில்லை. அவர் ஒரு நோக்கத்துடன் வந்திருக்கிறார். அந்த நோக்கத்தில் இருந்து இம்மியும் அசைந்து கொடுப்பவராகத் தெரியவில்லை. அதனால் பேச்சில் அவரை நாம் மாற்றுவதோ, திசை திருப்புவதோ முடியும் என்று தோன்றவில்லை”

சிவாஜி பெருமூச்சு விட்டான். அவனுக்கு அன்னை பவானி இதே செய்தியை முன்பே உணர்த்தியிருக்கிறாள்.

அன்னை பவானி அறிவுறுத்தியது போல் பணிந்து போவதற்கு மனதை அவன் தயார்ப்படுத்திக் கொண்டிருக்கிறான் என்றாலும், எந்த அளவு பணிய வேண்டியிருக்கும் என்பதும், எந்த அளவு அவனால் முடியும் என்பதும் தீர்மானமாகத் தெரியவில்லை.

“பேச்சு வார்த்தைக்கு எப்போது செல்லலாம் அமைச்சரே?” என்று கேட்ட போது அவனுக்குக் கசந்தது. ஆனால் வாழ்க்கையில் இனிமை மட்டுமே வேண்டும் என்று ஆசைப்படுவது யதார்த்தத்திற்குப் புறம்பானது அல்லவா? கசப்பும் வந்து தானே தீரும். அதைச் சகித்துத் தானேயாக வேண்டும். அந்தக் கசப்பும் நீங்கி மறுபடி காணும் போதல்லவா அந்த இனிமையின் மகத்துவம் புரிகிறது…..


இந்தச் சிந்தனை ஓட்டத்தில் அமைதி கண்டான் சிவாஜி.

(தொடரும்)
என்.கணேசன்


Thursday, January 2, 2020

இல்லுமினாட்டி 30



லெக்சாண்டிரியா நகரின் எல்லைப்பகுதியில் வசித்து வந்த அந்த மூதாட்டியிடம் அந்த மனிதன் இரண்டு நாட்களுக்கு முன்பே போனில் பேசி இருந்தான். ”ஒருவன் தற்போது எங்கே இருக்கிறான் என்று தெரிய வேண்டும் என்று அவன் சொன்னவுடன் அந்த மூதாட்டி சொன்னாள். “அவன் பயன்படுத்தி இருந்த ஏதாவது பொருள் ஒன்றும், ஆறாயிரம் பவுண்டுகளும் கொண்டு வந்தால் சொல்லலாம்”

அவன் கேட்டான் “எப்போது வரட்டும்?”

”நாளை மறுநாள் காலை பத்து மணிக்கு வாருங்கள். வீடு எங்கே என்பது தெரியுமல்லவா?”

“தெரியும்” என்று அவன் அந்த வீட்டைக் கண்காணித்தபடியே சொன்னான். அந்த வீட்டை அவனும் அவன் ஆட்களும் மாற்றி மாற்றி நேற்றிலிருந்தே கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தப் பழங்கால வீட்டிலிருந்து அந்த மூதாட்டி ஒரு முறை கூட வெளியே வரவில்லை. வாரம் ஒரு முறை ஒரு பெண்மணி வந்து வீடு சுத்தம் செய்து கொடுத்து விட்டுப் போகிறாள் என்பதை அவர்கள் முன்பே தெரிந்து வைத்திருந்தார்கள். அதே போல் வாரம் ஒரு முறை பக்கத்து டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸிலிருந்து அவளுக்கு வேண்டிய பொருள்கள் வந்து சேர்கின்றன. அவள் எந்தச் செய்தித்தாளையும் வாங்குவதில்லை. அவள் வீட்டிலிருந்து ஒரு கருப்புப்பூனை தான் தினமும் இரண்டு மூன்று முறையாவது வெளியே வருவதும், உள்ளே போவதுமாக இருந்தது. அவள் ஒருநாளுக்கு ஒரு ஆளுக்குத் தான் குறி பார்த்துச் சொல்கிறாள் என்றும் அதற்கு மேல் யாரையும் வர அனுமதிப்பதில்லை என்றும் அவர்கள் கண்டுபிடித்திருந்தார்கள். ஆனால் மாதம் குறைந்தது இருபது ஆட்களுக்காவது அந்த மூதாட்டி குறி சொல்கிறாள் என்றும் அதிகபட்சமாக 25 ஆட்களுக்குக் குறி சொல்கிறாள் என்றும் அவர்கள் சேகரித்திருந்த குறிப்புகள் தெரிவித்தன... நேற்று ஒரு ஆப்பிரிக்கப் பெண்மணி அந்த வீட்டுக்கு வந்து குறி கேட்டுப் போனாள். அவள் நேற்று மாலை நான்கு மணிக்கு வந்தவள் ஐந்தரை மணி வரை அந்த வீட்டுக்குள் இருந்தாள்.

இன்று காலை பத்து மணிக்கு அவன் அந்த வீட்டுக்குப் போனான். அழைப்பு மணி அடித்து விட்டு அவன் பொறுமையாகக் காத்திருந்தான். மூதாட்டியால் வேகமாக நடக்க முடிவதில்லை என்பதால் மெல்ல தான் வந்து கதவைத் திறப்பாள் என்பது அவனுக்குத் தெரியும். அவள் கதவைத் திறந்தவுடன் வணக்கம் சொல்லி அவன் முன்பே தெரிவித்திருந்த பெயரைச் சொன்னான். அவள் தலையசைத்து விட்டு அவனை உள்ளே அழைத்துப் போனாள்.

வீட்டில் இருந்த எல்லா பொருள்களும் பழையவையாகத் தானிருந்தன. ஹாலில் இருந்த சோபாவில் கருப்புப்பூனை படுத்திருந்தது. கண்களைத் திறந்து அவனை ஒரு முறை பார்த்து விட்டு சுவாரசியம் காட்டாமல் கண்களை மறுபடி மூடிக் கொண்டது. மூதாட்டி ஒரு பழைய மர மேஜைக்குப் பின்னால் இருந்த நாற்காலியில் கஷ்டப்பட்டு உட்கார்ந்து விட்டு எதிர்ப்புற நாற்காலியில் அவனை உட்காரச் சொன்னாள். அவன் அமர்ந்தவுடன் கையை நீட்டினாள். அவன் “என்ன?” என்பது போல் பார்த்தான்.

அவள் சொன்னாள். “பணம்”

அவன் ஆறாயிரம் எகிப்தியப் பவுண்டுகளை எண்ணித் தந்தான். அதை வாங்கிக் கவனமாக எண்ணி மேஜையோரம் இருந்த இரும்பு டப்பாவில் வைத்து இறுக்கமாக மூடினாள். பின் கேட்டாள். “என்ன பொருள் கொண்டு வந்திருக்கிறாய்?”

அவன் விஸ்வம் கடைசியாக உபயோகப்படுத்தியிருந்த கைக்குட்டையை ஒரு பிளாஸ்டிக் கவரின் உள்ளே வைத்துக் கொண்டு வந்திருந்தான். அதை அந்த ப்ளாஸ்டிக் உறையோடு அவளிடம் தந்தான். “இது அந்த ஆளின் கைக்குட்டை”

அந்த மூதாட்டி அந்த ப்ளாஸ்டிக் உறையிலிருந்து அந்த வெள்ளை நிறக் கைக்குட்டையை வெளியே எடுத்தாள். அந்தக் கைக்குட்டையைத் தொட்டவுடன் லேசாக அவள் உடம்பு ஒரு கணம் நடுங்கியது போலிருந்தது. அவன் திகைப்புடன் அவளைக் கேட்டான். “என்ன?”

அவள் சொன்னாள். “ஒன்றுமில்லை” ஆனால் அவள் அதற்குப் பிறகு அந்தக் கைக்குட்டையைக் கையில் வைத்துக் கொள்ளாமல் மேஜையில் வைத்து விட்டாள். அவளுடைய ஆள்காட்டி விரல் மட்டும் அதைத் தொட்டது. அவள் அதைத் தொட்டுக் கொண்டிருந்தபடியே கண்களை மூடினாள். அவன் கடிகாரத்தையும் அவளையும் பார்த்தபடியே அமைதியாக அமர்ந்திருந்தான். பதினைந்து நிமிடங்கள் கடந்த போது அவள் உறங்கி விட்டாளோ என்று கூட அவனுக்குச் சந்தேகமாக இருந்தது. ஆனாலும் அமைதியாகவே அவளைக் கூர்ந்து பார்த்தபடி அமர்ந்திருந்தான்.

பதினெட்டு நிமிடங்கள் முடிந்த போது மெல்ல அவள் சொல்ல ஆரம்பித்தாள். “இந்த ஆள் சாதாரணமானவன் இல்லை.  மிகவும் சக்தி வாய்ந்தவன்.”

அவன் தலையசைத்தான். அவள் தொடர்ந்து சொன்னாள். “இப்போது இந்தக் கைக்குட்டையைப் பயன்படுத்திய கை இல்லை, தீயில் கருகி விட்டது...”

அவனுக்கு அவள் சொன்னது திகைப்பாய் இருந்தது. மறுபடியும் தலையசைத்தான். அவள் சொன்னாள். “ஆனால் உயிர் இருக்கிறது..... உனக்கு இவனைப் பற்றி என்ன தெரிய வேண்டும்?”

“அவன் இப்போது எங்கே இருக்கிறான்? அவன் கூட யார் இருக்கிறார்கள்?”

அவள் கண்களைத் திறக்கவில்லை. அவள் தன் கவனத்தை எங்கேயோ குவிப்பது போன்ற பாவனை அவள் முகத்தில் தெரிந்தது. மறுபடியும் மௌனம். இந்த முறை இருபது நிமிடங்கள் நகர்ந்தன. பிறகு அவள் சொல்ல ஆரம்பித்தாள். “ஒரு அழகான வீட்டில் இருக்கிறான்.... அது ஒரு தனி வீடு..... வீட்டின் சுற்றுவட்டாரத்தில் நிறைய தூரத்திற்கு வேறு வீடோ, கட்டிடங்களோ இல்லை.. அவன் அந்த வீட்டு ஹாலின் தரையில் ஒரு சிறிய துணிவிரிப்பில் உட்கார்ந்திருக்கிறான்... ஏதோ மூச்சுப் பயிற்சி செய்கிற மாதிரி தெரிகிறது.... அவன் ஏதோ வேதனையை அனுபவித்து வருகிறான்... மிகவும் களைப்பாக இருக்கிறான்....”

அவன் கேட்டான். “அவனுடன் யார் இருக்கிறார்கள்? அதை விவரிக்க முடியுமா?”

“ஆள் யாரும் காணோம்.... ஒரு கிதார் மட்டும் அவன் உட்கார்ந்திருக்கும் ஹாலின் மூலையில் இருக்கிறது.... அந்தக் கிதார் சாதாரணமான கிதார் போலத் தெரியவில்லை. அதில் ஏதோ அமானுஷ்யமாய் இருக்கிறது....”

கிதார் பற்றிச் சொன்னதும் அவன் திகைப்பும், சுவாரசியமும் இரட்டிப்பாகியது. அவன் கேட்டான். “என்ன அமானுஷ்யம்?...”

அந்த மூதாட்டி அப்போது அந்தக் கிதாரைக் கூர்ந்து பார்ப்பது போல் தோன்றியது. அவள் மெல்லச் சொன்னாள். “சரியாகச் சொல்ல முடியவில்லை.... ஏதோ அபாயம்.... ஆபத்தான வசீகரம் அதில் தெரிகிறது....”

பின் மௌனமானாள். அவன் பரபரப்பாகப் பொறுமையிழந்து கேட்டான். “அது என்ன என்று முடிந்த வரை விளக்குங்களேன்......”

“பனிமூட்டம் அந்தக் கிதாரைச் சூழ்கிறது.... ஏதோ ஒரு நட்சத்திரம் அந்தப் பனிமூட்டத்தில் தெரிகிறது. இப்போது கிதார் மறைந்து விட்டது. தெரியவில்லை.....”

அவனுக்கு ஏமாற்றமாகப் போய் விட்டது. அவன் கேட்டான். “இந்தக் கைக்குட்டைக்காரனையும் அந்த வீட்டையும் பார்க்க முடிகிறதா?”

அவள் முகம் சிறிது வலது புறமாகத் திரும்பியது. அவள் சொன்னாள். “முடிகிறது”

“அந்த வீட்டைக் கண்டுபிடிக்க ஏதாவது துப்பு கொடுங்கள். சுற்றிலும் இருப்பதில் ஏதாவது வித்தியாசமாகத் தெரிகிறதா?”

அவள் ஒரு நிமிட மௌனத்திற்குப் பிறகு சொன்னாள். “அந்த வீட்டிலிருந்து நூறடி தூரத்தில் ஒரு ஓக் மரம் இருக்கிறது. அதன் ஒரு கிளை மட்டும் தரையைத் தொட்டபடி இருக்கிறது. மிகப்பழைய மரம் அது. விரிந்திருக்கிறது..... அதன் ஒரு கிளை தீயால் கருகி விட்ட வடு மரத்தில் இருக்கிறது....”

அதற்கு மேல் அவளால் எதையும் சொல்ல முடியவில்லை. சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு சிரமத்துடன் சொன்னாள். “இப்போது அந்த மரத்தை கிதார் மறைக்கிறது..... கிதாரே வளர்ந்தது போல் பிரம்மாண்டமாய் தெரிகிறது..... இப்போது மூடுபனி வந்து விட்டது. அது எல்லாவற்றையும் மறைத்து விட்டது.... மூடுபனி மட்டுமே தெரிகிறது..... ஆனால் அது கூட அந்த ஒற்றை நட்சத்திரத்தை மறைக்க முடியவில்லை.... ஒற்றை நட்சத்திரம் மங்கலாகத் தெரிகிறது... அவ்வளவு தான்.”

அவள் கண்களைத் திறந்து விட்டாள். அவன் நன்றி தெரிவித்து விட்டு அந்தக் கைக்குட்டையை மறுபடி ப்ளாஸ்டிக் உறையில் போட்டுக் கொண்டு கிளம்பினான்.


வன் அனுப்பிய தகவல் ஐந்து நிமிடங்களில் இம்மானுவலுக்கு வந்து சேர்ந்தது.  சிறிது யோசித்தவனுக்கு அந்த மூதாட்டி சொன்ன இடம் ம்யூனிக் சுற்று வட்டாரத்திலேயே இருக்க வாய்ப்பு அதிகம் என்று உள்ளுணர்வு சொன்னது. உடனே ஒரு கிளை தரையைத் தொட்டபடியும், ஒரு கிளை தீயில் கருகியும் இருக்கும் ஓக் மரம் ம்யூனிக்கின் சுற்று வட்டாரத்தில் எங்காவது இருக்கிறதா என்று கண்டுபிடித்து உடனடியாகச் சொல்லும்படி தன் ஆட்களுக்குக் கட்டளையிட்டான்.

(தொடரும்)
என்.கணேசன்
  


Wednesday, January 1, 2020

நோய் தீர்க்கவும், வரவழைக்கவும் முடிந்த ஆழ்மனம்!

அன்பு வாசகர்களுக்குப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

இந்த ஆண்டு அதிர்ஷ்டமானதாகவும், ஆரோக்கியமானதாகவும் தங்களுக்கு அமையட்டும் என்று வாழ்த்துகிறேன்.

உடல்நலம் என்பது மிக மிக முக்கியமானது. அது ஒன்று கெட்டால் மற்ற எல்லா நலங்களும் இருந்தாலும் வாழ்க்கை சுவைக்காது. உடல்நலத்தைப் பொறுத்தே நம் திறமைகளையும், செல்வத்தையும், நம்மால் பயன்படுத்த முடிகிறது.

அப்படிப்பட்ட உடல்நலம் சீரடைவதும், சீரழிவதும் ஆழ்மனதினிடமே பெரும்பாலும் என்று ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்த ஆரம்பித்திருக்கின்றன. எனவே உங்கள் அபிப்பிராயங்களிலும், நம்பிக்கைகளிலும் எச்சரிக்கையாக இருங்கள் என்று விளக்கும் பயனுள்ள காணொளியோடு புத்தாண்டை ஆரம்பிப்போம். வாருங்கள்...




என்.கணேசன்