நாளை சந்திரகுப்தனின் திருமணம் நடைபெறப் போவதையொட்டி அந்தப்புரத்திலும், அரண்மனையிலும், அருகில் இருந்த விருந்தினர் மாளிகைகளிலும் சிரிப்பும், சந்தோஷமும், உற்சாகமும் நிறைந்திருந்தன. நேபாள, குலு, காஷ்மீர மன்னர்கள் நேற்று தான் வந்து சேர்ந்திருந்தார்கள். சந்திரகுப்தனும், சாணக்கியரும் அவர்களை வரவேற்று உபசரித்த விதத்தில் அவர்கள் மனம் குளிர்ந்திருந்தார்கள். பர்வதராஜன் மரணம் ஏதாவது சிறு சந்தேகத்தை இன்னமும் அவர்கள் மனதில் தங்க வைத்திருக்குமானால் அந்தச் சந்தேகமும் அவர்கள் மனதிலிருந்து நீங்கி விடும்படியாக அவர்களிடம் சாணக்கியர் பேசினார். கப்பம் கட்டுவதிலிருந்து விடுதலை, எதிரிகள் தாக்கினால் உடனடியாக உதவிக்கு வருவதாக அவர் தந்த வாக்கு, அவர்களுக்காக அவர் எடுத்து வைத்திருந்த நிதி இம்மூன்றிலும் அவர்கள் பரம திருப்தி அடைந்தனர். தங்களுடன் சேர்ந்து இப்பலன்களை அனுபவிக்கும் யோகம் பர்வதராஜனுக்கு இல்லாமல் போனது அவனது துரதிர்ஷ்டம் என்று அவர்கள் நினைத்தார்கள். இல்லா விட்டால் நண்பர், நெருக்கமானவர் என்று பேச்சுக்குப் பேச்சு சொல்லிக் கொண்டிருந்த பர்வதராஜன் ராக்ஷசருடன் சேர்ந்து சதி செய்து இறந்து போகும்படி அவன் புத்தி வேலை செய்து விட்டதே என்று தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.
ஆனால் அவர்களுக்கு
ராக்ஷசரைப் பழைய பதவியிலேயே அங்கு பார்க்க முடிந்தது ஆரம்பத்தில் திகைப்பாய் தான்
இருந்தது. அதுபற்றிப் பேசுகையில் சாணக்கியர் முன்பு ராக்ஷசர் எதிரியாக இருந்த நிலையில்
அவர் செயல்பாடு சரியே என்றும் அவர் பர்வதராஜனைப் போல் நட்பு பாராட்டி துரோகம் செய்ய
முற்படவில்லை என்றும் சொன்னது புதிய அணுகுமுறையாக அவர்களுக்குத் தோன்றியது.
ராக்ஷசர் தன் பழைய
பதவியை ஏற்கச் சம்மதித்தவுடன் சாணக்கியர் அவருக்கு நன்றி சொல்லி முழு அதிகாரத்தையும்
தந்து நிர்வாக காரியங்களில் இருந்து முழுவதுமாக ஒதுங்கிக் கொண்டதை ராக்ஷசரே எதிர்பார்த்திருக்கவில்லை.
சிறிதாவது அவர் தலையீடு இருக்குமென்று அவர் எதிர்பார்த்தார். ஆனால் சாணக்கியர் அவர்
திறமையிலும் நேர்மையிலும் முழு நம்பிக்கை வைத்திருந்ததால் ராக்ஷசரின் அதிகாரத்தில்
தலையிட விரும்பவில்லை. பல பகுதிகளையும்
ஒன்று சேர்த்துக் கொண்டு பெரிய சாம்ராஜ்ஜியமாக, ஒன்றுபட்ட பாரதமாக விரிவடைய வேண்டும் என்ற
இலக்கை நோக்கி இனி தன் முழுக்கவனத்தையும் திருப்ப முடிவதில் சாணக்கியருக்குப் பரம திருப்தி.
அரண்மனையில் சந்திரகுப்தனும்,
சாரங்கராவும், விஜயனும் மற்ற நண்பர்களும் சத்தமாகச் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தது
சாணக்கியரின் காதுகளில் விழுந்தது. அவர் மனநிறைவுடன் புன்னகைத்தார். போய்ப் பார்த்து
மகிழ்ச்சியில் பங்கு கொள்ளலாம் என்று ஒரு கணம் அவருக்குத் தோன்றினாலும் அவர் போனால்
அந்த இளைஞர்களின் கொண்டாட்டம் குறைந்து போகும் என்று தோன்றியதால் போகாமல் தவிர்த்தார்.
வாழ்க்கையில் இலக்குகள் அளவுக்கு இது போன்ற சந்தோஷங்களும் மிக முக்கியமானவையே. அந்தந்த
காலக்கட்டங்களில் அனுபவிக்கத் தவறும் சந்தோஷங்கள் பின் யாருக்கும் கிடைப்பது அரிது.
அவருடைய சந்திரகுப்தன் இனி சிறிது காலம் வேறு எந்த யோசனைகளும் இன்றி ஆனந்தமாய் இருக்கட்டும்
என்று ஆசைப்பட்டார். இனி ஆக வேண்டியவற்றை எல்லாம் யோசிக்க அவர் இருக்கவே இருக்கிறார்.
அவனும் அவன் நண்பர்களும் மகிழ்ச்சியாக இப்போது இருக்கட்டும்...
அந்தப்புரத்திலும்
அதே மகிழ்ச்சி அனைவரிடமும் இருந்தது. அமிதநிதா தன் கணவன் இங்கில்லை என்ற மனக்குறையை
மறந்து மகளுக்காக கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டாள். சந்திரகுப்தனின் தாய் மூராவையும்
அவளுக்கு மிகவும் பிடித்து விட்டது. அவள் போன பின்பு துர்தராவுக்கும் தாயாக இருந்து
அவளை நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்த போது மகளில்லாத குறை
இனி தனக்கு நீங்கி விட்டதாய் மூரா அன்பு மேலிடச் சொன்னது அமிதநிதாவுக்கு ஆறுதலாய் இருந்தது.
துர்தராவும் மூராவின் கள்ளங்கபடமில்லாத தூய
அன்பில் அகமகிழ்ந்தாள்.
துர்தராவும் சந்திரகுப்தனும்
முடிந்த போதெல்லாம் ஏதாவது ஒரு காரணம் கண்டுபிடித்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
பார்வைகள் பேசிக் கொண்டன. அது போன்ற சமயங்களில் அருகில் வருவதைத் தவிர்த்து தள்ளிப்
போன சாணக்கியர் மீது துர்தராவுக்கு மிகுந்த அன்பும், மரியாதையும் இருந்தன. அவர் மட்டும்
மறுத்திருந்தால், தடையாக இருந்திருந்தால் அவளுக்குக் கண்டிப்பாக சந்திரகுப்தன் கிடைத்திருக்க
மாட்டான் என்ற புரிதலே அவளுக்குள் நன்றியுணர்வை மிகுதியாக ஏற்படுத்தியிருந்தது.
ஒருமுறை அவள் அவரைச்
சந்தித்து வணங்கி தன் ஆத்மார்த்த நன்றியை மனதாரத் தெரிவித்துக் கொண்டு தன் நன்றிக்கடனை
எப்படித் தீர்க்க முடியும் என்று தனக்கு விளங்கவில்லை என்றும் சொன்னாள்.
“நீங்கள் இருவரும்
எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள் துர்தரா. அந்த நன்றிக்கடன் தானாகக் கழியும்.” என்று
அவர் அன்பான புன்னகையுடன் சொல்லி நகர்ந்த போது அவள் மனதில் அவர் மேலும் உயர்ந்து போனார்.
செல்யூகஸ் எப்போது
வேண்டுமானாலும் படையோடு வரலாம் என்ற நிலை இருப்பதால் காந்தாரத்திலிருந்து ஆம்பிகுமாரனும்,
கேகயத்திலிருந்து மலயகேதுவும் சாணக்கியரின் அறிவுரைப்படி அழைப்பிருந்தும் பாடலிபுத்திரம்
வருவதைத் தவிர்த்தார்கள். ஆனால் அவர்கள் தங்கள் பிரதிநிதிகளை பரிசுகளோடு அனுப்பியிருந்தார்கள்.
கேகயத்திலிருந்து இந்திரதத் வந்திருந்தார். சாணக்கியரின் வெற்றிகளில் எல்லோரையும் விட
இந்திரதத் அதிகம் மகிழ்ந்தார். எல்லா நேரங்களிலும்
இலக்கு நோக்கிய பார்வையைத் தவற விடாதவன் அடைய முடியாதது எதுவுமிருக்க முடியாது என்பதற்கு
சாணக்கியரின் வாழ்க்கையே சரியான உதாரணம் என்று அவருக்குத் தோன்றியது.
கேகயத்திலிருந்து
மைனிகாவும் வந்திருந்தாள். தாசியான அவளுக்கு சாணக்கியர் அரசர்களுக்கு இணையான கௌரவம்
கொடுத்து அழைப்பிதழ் அனுப்பி இருந்தார். அதைப் பெற்ற கணத்தில் கண்கலங்கியது போலவே பாடலிபுத்திரம்
வந்து சாணக்கியரைக் கண்டவுடனும் அவள் கண்கலங்கினாள். தாசியாக மட்டுமே அவள் பெரும்பாலும்
பார்க்கப்பட்டிருக்கிறாள். சுபநிகழ்ச்சிகளில் அவளுக்கு இதுவரை அழைப்பிருந்ததில்லை.
அழைப்பு இருந்தாலும் அது நடனமாடுவதற்கான அழைப்பாகவே இருக்கும். பங்கு கொண்டு ஆசிவழங்குவதற்கு
அழைப்பிதழ் அவளுக்குக் கிடைத்தது இதுவே முதல் முறை. அவர் காலில் விழுந்து வணங்கி அவள்
குரல் தழுதழுக்கச் சொன்னாள். “இந்த தாசிக்கு உங்களைப் போன்ற உயர்ந்த மனிதர் இத்தனை
மதிப்பும், மரியாதையும் தந்ததற்கு நான் என் வாழ்நாள் முழுவதும் உங்களுக்குக் கடமைப்பட்டிருக்கிறேன்
ஆச்சாரியரே.”
சாணக்கியர் அன்புடன்
கைகூப்பிச் சொன்னார். “மைனிகா. இந்தப் புனித மண்ணின் புத்திரியாக நீ செய்த சேவையை நான்
என்றும் மறக்க முடியாது. அதனால் அருகதையானவர்களுக்குத் தரும் மரியாதை இது என்றே நான்
இதை எடுத்துக் கொள்கிறேன்.”
சாணக்கியரின் அழைப்பில்
அவளைப் போலவே கண்கலங்கியவர் அவரது நண்பன் கோபாலன். அரண்மனையிலிருந்து ரதத்தில் வந்து
இறங்கி சகல மரியாதைகளும் தந்து தன் மாணவனின் திருமணத்திற்கு கோபாலனை அழைத்துச் சொன்னார்.
“கோபாலா என் பால்ய நண்பன் என்று சொல்ல எனக்கு உன்னை விட்டால் வேறு யாருமில்லை. அதனால்
நீ கண்டிப்பாகக் குடும்பத்துடன் வந்து மணமக்களை வாழ்த்த வேண்டும்.”
அக்கம்பக்கத்திலிருப்பவர்கள்
வாசலில் நின்று சாணக்கியரின் நண்பரா இவர் என்று பிரமிப்போடு பார்க்க கோபாலன் நண்பனின்
கைகளைப் பிடித்துக் கொண்டு கண்கலங்கினார். இத்தனை உயரத்திற்குப் போனாலும் அவருடைய விஷ்ணு
அவரை மறக்காமல் அதே அன்போடு வந்து அழைத்தது அவருக்குப் பெருமையாக இருந்தது.
திருமண நாளிலும்
சரி பட்டாபிஷேக நாளிலும் சரி இந்த வெற்றிக்காக உழைத்தவர்கள் யாரையும் மறக்காமல் அழைத்து
கௌரவிக்க சாணக்கியர் ஏற்பாடு செய்திருந்தார். சாரங்கராவ், விஜயன், வீரசேனன், சூரசேனன், ஜீவசித்தி, சுசித்தார்த்தக்,
சாரகன் முதலானவர்களுக்கு உரிய மரியாதையுடன், பதவி அல்லது பரிசுகள் காத்திருந்தன.
எல்லா ஏற்பாடுகளையும்
செய்து முடித்து விட்டுக் கடைசியாக சாணக்கியர் ராக்ஷசரைச் சந்திக்க வந்தார்.
ராக்ஷசர் எழுந்து
வரவேற்றுச் சொன்னார். “அழைத்திருந்தால் நானே தங்களைக் காண வந்திருப்பேனே ஆச்சாரியரே.”
சாணக்கியர் சொன்னார்.
“எனக்கு உங்களிடம் ஒரு கோரிக்கை உள்ளது பிரதம அமைச்சரே. அதனால் நானே இங்கு வந்து சந்திப்பது
தான் சரி”
ராக்ஷசர் சொன்னார்.
“ஆணையிட முடிந்தவர் கோரிக்கை விடுப்பது சரியல்ல ஆச்சாரியரே சொல்லுங்கள். நான் என்ன
செய்ய வேண்டும்?”
“இதுநாள் வரை நாட்டு
நிதியின் முழு இருப்பு ரகசியமானதாக இருந்தது ராக்ஷசரே. மன்னனின் தேவையும் அதிகமாக
இருந்தது. ஆனால் இனி நிதி நிலவரத்தில் ரகசியங்கள் இருக்கப் போவதில்லை. ஆளப் போகும்
மன்னனின் தேவையும் அதிகமில்லை. கஜானா அதிகாரியிடமிருந்து இப்போதைய நிதியிருப்பு விவரத்தைக்
கொண்டு வந்திருக்கிறேன்” என்று சொல்லி நிதியிருப்பு விவரங்கள் அடங்கிய ஒரு பெரிய பேழையை
சாணக்கியர் ராக்ஷசரிடம் தந்து விட்டுத் தொடர்ந்து சொன்னார். ”இப்போது அரண்மனையிலும்,
மாளிகைகளிலும், நம் நட்பு வட்டத்திலும் பெருமகிழ்ச்சியை என்னால் பார்க்க முடிகிறது.
அந்த மகிழ்ச்சி மக்களிடமும் பரவ வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் ராக்ஷசரே. அதனால் சந்திரகுப்தனின்
திருமணத்தையும், பட்டாபிஷேகத்தையும் ஒட்டி, முடிந்த வரை வரிகள் குறைக்கப்பட வேண்டும்
என்று தங்களிடம் கோரிக்கை வைக்கிறேன். நீங்கள் கணக்கு பார்த்து அறிவிப்பு வெளியிட வேண்டும்.”
ராக்ஷசர் அந்தக்
கோரிக்கையில் பேச்சிழந்தார். ஆளும் வாய்ப்பு கிடைத்தவர்கள் பின்பு மக்கள் மகிழ்ச்சிக்கு
முக்கியத்துவம் தருவது அபூர்வம். ஆணையிட முடிபவர்கள் கோரிக்கை விடுப்பதும் அபூர்வமே.
ஆனால் இவற்றையெல்லாம் செய்யும் சாணக்கியரும் அபூர்வமானவரே. புதிதாக ஒரு சரித்திரம்
உருவாகிறது என்பது இப்போதே ராக்ஷசருக்குப் புரிந்தது. அந்தப் புதிய சரித்திரத்தில்
அவருக்கும் ஒரு இடம் தந்து பழைய தவறுகளைத் திருத்திக் கொள்ள ஒரு வாய்ப்பு தந்த அந்த
மாமனிதனை அவர் வார்த்தையில்லாமல் தலைவணங்கினார்.
(அடுத்த வாரம் முடியும்)
என்.கணேசன்
ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

