சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, May 30, 2022

யாரோ ஒருவன்? 87


ஞ்சய் ஷர்மாவாலும், மதன்லாலாலும் தடியன் என்று அழைக்கப்படும் தாமோதர் அன்றிரவு தன் வழக்கமான நேரத்தில் அவர்களுக்கு வறண்ட சப்பாத்தி எடுத்து வந்து கொண்டிருந்தான். அவன் பைக் அந்த நெடுஞ்சாலையில் திரும்பும் போதே அவர்களை அடைத்து வைத்திருக்கும் அந்தப் பழைய ஃபேக்டரிக்கு எதிரில் நின்று பேசிக் கொண்டிருந்த இரண்டு ஆட்களை அவன் கவனித்து விட்டான். அவர்கள் பேசிக் கொண்டிருந்த போதும் அவர்கள் இருவர் பார்வையும் அந்த ஃபேக்டரி மீது தான் இருப்பது பௌர்ணமி நிலவொளியில் தெளிவாகவே தெரிந்தது.

ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் ஒரு நெடுஞ்சாலையில் அந்த நேரத்தில் காணக் கிடைக்கும் காட்சி அல்ல அது.  அந்த நேரத்தில் வாகனங்கள் வந்து போகுமேயொழிய ஆட்கள் நின்று பேசிக் கொண்டிருக்க மாட்டார்கள். தன் பைக்கின் வேகத்தை வெகுவாகக் குறைத்துக் கொண்ட தாமோதர் அவர்களைக் கூர்ந்து கவனித்துக் கொண்டே வந்தான். ஒரு பழைய ஸ்கூட்டரில் சாய்ந்து கொண்டே ஒருவன் நின்று கொண்டிருக்க, அதன் பின் சீட்டைப் பிடித்தபடியே அருகில் நின்று இன்னொருவன் பேசிக் கொண்டிருந்தான். இருவரும் சும்மா வெட்டிப் பேச்சு பேசிக் காலம் கழிக்கும் ஆட்கள் போலத் தெரியவில்லை. அவர்கள் நின்று கொண்டிருக்கும் விதம் பார்த்தால் நிறைய நேரம் நின்று கொண்டிருப்பவர்கள் போலவே தோன்றியது. நின்று சலித்து தான் ஒருவன் சாய்ந்தும், இன்னொருவன் சீட்டைப் பிடித்தபடியும் நின்று கொண்டிருக்கிறான் என்பதை தாமோதரால் எளிதில் கணிக்க முடிந்தது.  

தாமோதர் எச்சரிக்கையடைந்து அந்த ஃபேக்டரிக்கு நூறு அடிகள் முன்பாகவே பைக்கை நிறுத்தி அதில் ஏதோ பிரச்சினை இருப்பது போலவும், அந்த பைக்கை ஆராய்வது போலவும் காட்டிக் கொண்டு ஓரக்கண்ணால் அவர்கள் இருவரையும் கவனித்தான். அவர்கள் இருவர் பார்வையும் இப்போது அவன் மேல் தங்கியது. பைக்கைத் தட்டி வயர்களை இழுத்துப் பார்த்து இரண்டு நிமிடங்கள் அங்கே நின்ற அவன் பெருமூச்சு விட்டு பிரச்சினையைப் பின்பு சரிசெய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்தவனைப் போல் காட்டிக் கொண்டு மறுபடியும் பைக்கைக் கிளப்பி மெல்ல ஓட்ட ஆரம்பித்தவன் அந்த ஃபேக்டரியைத் தாண்டிப் போனான். அப்போதும் அந்த ஆட்கள் அங்கேயே நின்று பேசிக் கொண்டிருந்தார்கள்.

ஒரு குறுக்குத் தெருவில் திரும்பி பின் தெரு வழியாக வீட்டுக்குப் போன தாமோதர் ஒரு மணி நேரம் கழித்து மறுபடியும் கிளம்புவதற்காக வெளியே வந்தான். அவன் உள்ளுணர்வு அவனை எச்சரித்தது. அந்த இருவரும் ஏற்கெனவே அவனைக் கவனித்திருக்கிறார்கள். திரும்பவும் அவன் அதே இடத்திற்கு இரவு நேரத்தில் போவது சந்தேகத்தைக் கண்டிப்பாக ஏற்படுத்தும் என்று தோன்றவே அவன் தன் நண்பன் ஒருவனுக்குப் போன் செய்து அந்த ஃபேக்டரி பக்கம் போகச் சொன்னான். ”எதிரில் இப்போதும் அந்த ஆட்கள் இருக்கிறார்களா?” என்பதைப் பார்த்துச் சொல்லச் சொன்னான். ஒருவேளை அவர்கள் இருந்தார்களானால் எந்தக் காரணத்தைக் கொண்டும் அவர்களை உற்றுப் பார்க்கவோ, அதிக நேரம் பார்க்கவோ வேண்டாம் என்று சொன்னான்.

அரை மணி நேரத்தில் அவன் நண்பன் போன் செய்து அந்த இரண்டு ஆட்களும் ஃபேக்டரிக்கு எதிர்ப்பக்கத்தில் இப்போதும் நின்று பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர்கள் இருவர் பார்வையும் ஃபேக்டரியின் மீது தான் இருக்கிறது என்றும் தெரிவித்தான்.

தாமோதர் உடனடியாக நரேந்திரனுக்குப் போன் செய்து விஷயத்தைச் சொன்னான்.

நரேந்திரன் யோசனையுடன் கேட்டான். “அவங்க நீ மத்தியானம் போனப்ப இருக்கலை இல்லயா

இருக்கலை சார். நான் ரெண்டரை மணிக்கு அங்கேயிருந்து கிளம்பிட்டேன். அதுக்குப் பிறகு எந்த நேரத்துலயும் அவங்க வந்திருக்கலாம். அப்போலருந்து ஃபேக்டரியை கண்காணிச்சிட்டிருக்கலாம்னு தோணுது….”

ஃபேக்டரியை நீ நல்லா பூட்டியிருக்கே அல்லவா?”

பூட்டியிருக்கேன். பூட்டும் பெருசு. காம்பவுண்ட் சுவரும் உயரமா தான் இருக்கு. அதுல கண்ணாடித் துண்டுகள் நெருக்கமா பதிச்சிருக்கோம்…. ஆனா உள்ளே போயேயாகணும்னு நினைச்சா அவங்க எதாவது வழி கண்டுபிடிச்சு போக முடியாதுன்னு சொல்ல முடியாதுஇப்ப என்ன பண்றது சார்?”

நான் யோசிச்சு என்ன பண்ணனும்னு சொல்றேன் தாமோதர். நீ அவனுக முன்னாடி பூட்டைத் திறந்து உள்ளே போகாம இருந்தது ரொம்ப நல்லதாப் போச்சு.” என்று அமைதியாகச் சொல்லி செல்போனைக் கீழே வைத்தாலும் நரேந்திரன் முழுமையான ஆபத்தை உணர்ந்தான்.

யோசித்த போது நடக்கும் நிகழ்வில் அஜீம் அகமதின் முத்திரை தெரிந்தது. நாகராஜ் சொன்னது போல் அஜீம் அகமது இந்தியா வந்து சேர்ந்திருக்க வேண்டும். அவன் டெல்லியில் உத்தேசமாக எங்கெல்லாம் நரேந்திரன் சஞ்சய் ஷர்மாவையும், மதன்லாலையும் அடைத்து வைத்திருப்பான் என்று சில இடங்களைத் தேர்ந்தெடுத்துக் கண்காணிக்கச் சொல்லியிருக்கலாம். ஆனால் அந்த இரண்டு ஆட்களும் உள்ளே போய் உறுதிப்படுத்திக் கொள்ளாமல் அங்கேயிருந்து போக மாட்டார்கள் என்பது புரிந்தது. உள்ளே அவன் அவர்களை அடைத்து வைத்திருப்பது மட்டும் வெளியே தெரிந்தால் பின் நரேந்திரன் ராவில் வேலை செய்ய முடியாமல் ஜனார்தன் த்ரிவேதி கண்டிப்பாகப் பார்த்துக் கொள்வார். அவன் உத்தியோகத்துக்கு மட்டுமல்லாமல் அவன் உயிருக்கும் கூட ஆபத்து நேரலாம். ரா அதிகாரிகளும் கூட அவனைக் காப்பாற்ற முடியாது. என்ன செய்வதென்று நரேந்திரன் தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தான்.

நரேந்திரனுக்கு இன்றிரவே அந்த ஆட்கள் ஃபேக்டரிக்குள் எப்படியாவது நுழைந்து பார்க்கும் வாய்ப்பு இருப்பதாகவே தோன்றியது. பகலில் இருக்கும் எச்சரிக்கை உணர்வு இரவில் அவர்களுக்குக் கண்டிப்பாக இருக்காது. இப்போதைக்கு அவர்கள் போகாதபடி எதாவது செய்ய முடியும். ஆனால் நாளை, நாளை மறுநாள் என்று தொடர்ந்து தவிர்க்க முடியாது. அவர்கள் சந்தேகம் வலுக்கும்.... அது ஆபத்து....

நிறைய யோசித்து இன்றைக்கு அவர்களுக்குச் சந்தேகம் வராதபடியும், இன்றைக்கு அவர்கள் ஃபேக்டரிக்குள் புகாதபடியும் பார்த்துக் கொண்டு நாளை என்ன செய்வதென்று பிறகு சிந்திக்கலாம் என்ற முடிவுக்கு நரேந்திரன் வந்தான்.

அவனுடைய நண்பன் போலீஸ் ரோந்துப் பிரிவில் இருந்தான். அவனிடம் போன் செய்து பேசினான்...


டந்த பத்து மாதங்களாகப் பூட்டப்பட்டிருக்கும் அந்த ஃபேக்டரி அஜீம் அகமது தேர்ந்தெடுத்திருந்த இடங்களில் ஒன்றாக இருந்தது. ஃபேக்டரி முதலாளி இறந்து போய் அவரது மகன்கள், மகள்களுக்குள் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடு காரணமாக அந்த ஃபேக்டரி இழுத்து மூடப்பட்டிருந்தது. அந்த ஃபேக்டரியைக் கண்காணித்துக் கொண்டிருந்த ஆட்கள் மதியம் மூன்றரையிலிருந்து கண்காணித்துக் கொண்டிருப்பதாகவும், அங்கே யாரும் போகவோ, அதனுள்ளே இருந்து வரவோ இல்லை என்றும் தங்களை நியமித்த தலைவனுக்குப் போன் செய்து இரவு ஒன்பதரைக்குச் சொன்னார்கள்.

 ”பதினொன்றரை மணி வரைக்கும் பாருங்கள். பின் உள்ளே போய் பார்த்து விட்டு வந்து விடுங்கள்என்று உத்தரவு வந்தது.

பத்தரை மணியளவில் இருவரில் ஒருவன் எதிரே நின்று பார்த்துக் கொண்டிருக்க, மற்றவன் தெருவைக் கடந்து போய் ஃபேக்டரியின் பெரிய மெயின் கேட்டின் பூட்டைக் கவனமாக ஆராய்ந்தான். பழங்காலப் பூட்டு என்றாலும் அவ்வளவு சீக்கிரம் திறக்க முடியாத பூட்டாக அது இருந்தது. கேட்டின் மீது ஏறிப் போவது முடியாத காரியம். கால் வைத்து ஏற வசதி இல்லை....  சுவர்கள் மிக உயரமாக இருந்தன. அதுமட்டுமல்லாமல் சுவர்களின் மேல் விளிம்பில் உடைந்த கண்ணாடிகள் பதிக்கப்பட்டிருந்தன. எளிதாக இல்லாவிட்டாலும்  பூட்டைத் தான் எப்படியாவது திறந்து கொண்டு உள்ளே போக வேண்டும்... வேறு வழியில்லை.

அவன் மறுபடி சாலையைக் கடந்து வந்து தன் சகாவிடம் சொன்னான். “பூட்டைத் தான் திறக்கணும்...”

அது பிரச்னையில்ல. கம்பி இருக்கு...” என்ற சகா ஸ்கூட்டரிலிருந்து ஒரு வளைந்த கம்பியை வெளியே எடுத்த போது தான் தூரத்தில் போலீஸ் ரோந்து வாகனம் வருவது தெரிந்தது.


(தொடரும்)
என்.கணேசன்
   
  

1 comment:

  1. அப்ப இன்று இரவு அவர்கள் இருவரும் பட்டினி தானா....?

    ReplyDelete