சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, May 16, 2022

யாரோ ஒருவன்? 85


தீபக் கொடிவேரி நீர்வீழ்ச்சியில் உணர்ந்த அனுபவத்தையும், வழியில் வினோதமான முறையில் மாதவனின் பெற்றோரைச் சந்தித்ததையும் அவளிடம் சொன்னபடி சரத்திடம் சொல்லவில்லை. அவன் எதையும் அவர்கள் இருவரிடமும் மறைப்பவன் அல்ல. அவன் கொடிவேரி நீர்வீழ்ச்சிக்குப் போய் திரும்பிய அன்று இரவு சரத்எப்படிடா இருந்துச்சு?” என்று கேட்டான்.

சூப்பர்ப்பாஎன்று சொன்ன தீபக் தொடர்ந்து தன் விசித்திர அனுபவங்களைச் சொல்ல முனைவதற்கு முன்னால் அவனுக்கு ஒரு நண்பனின் போன்கால் வந்தது. அந்த நண்பன் அன்று அவர்களுடன் நீர்வீழ்ச்சிக்கு போக முடியாதவன். அவனிடம் விவரமாகப் பேசுவதற்கு தீபக் தனதறைக்குப் புகுந்து கொள்ள அன்று அவன் அதைப் பற்றி சரத்திடம் விரிவாகச் சொல்ல முடியவில்லை. மறுநாளோ அந்த நிகழ்வு பழைய நிகழ்வாகப் போய் விட்டதால், சூப்பர்ப்பா என்று ஒரே வார்த்தையில் தீபக் சொன்னதோடு எல்லாம் சொல்லியாகி விட்டது என்ற உணர்வை சரத்தும் பெற்றிருந்ததால் அவன் மறுபடி தீபக்கிடம் எதுவும் கேட்கவில்லை. ஆக அந்த சம்பவங்கள் சரத்துக்குத் தெரியாமலே போய் விட்டது.

ரஞ்சனி நினைத்திருந்தால் அந்தச் சம்பவங்களை சரத்திடம் தெரிவித்திருக்கலாம். ஆனால் சரத் அதை நல்ல விதமாக எடுத்துக் கொள்வான் என்று ரஞ்சனிக்குத் தோன்றவில்லை. அவன் அவளையே கூட மாதவனின் பெற்றோரைச் சந்திக்கச் செல்வதற்கு அனுமதிக்கவில்லை. அதனால் தீபக் போனதையும் ரசிப்பான் என்று சொல்ல முடியாது... அதனால் அவளும் சொல்லவில்லை.

நடப்பதெல்லாம் எதை உணர்த்த வருகிறது என்பதை நாகராஜ் என்ற நாகசக்தி மனிதனிடம் கேட்டால் தெரியும் என்று அவள் நினைத்துக் கொண்டிருக்கிறாள். நேற்று கூட தீபக்கிடம் அதுபற்றிச் சொன்ன போது அவன் சொன்னான். “நான் அவர் கிட்ட சொல்லியிருக்கேன்ம்மா. அவர் தமாஷாஉன்னையே சமாளிக்க முடியலை. உங்கம்மாவுமான்னு சொன்னார். ‘என் மாதிரி எங்கம்மா கிடையாது. பக்கா டீசண்டுன்னு சொன்னேன். அப்பறமா அவர் ஒன்னும் சொல்லலை.  பொறும்மா. சீக்கிரமே ஒரு நாள் நீ அவரைச் சந்திக்கற மாதிரி பண்ணிடறேன்....”   

அந்த நாள் எப்போது வருமோ?

ல்யாணிடம் அட்வான்ஸ் தொகை மூன்று லட்சம் வாங்கிய அன்றே மணி தன் வேலையை ஆரம்பித்து விட்டான். அவனும் அவனுடைய பிரதான கூட்டாளியும் நாகராஜின் வீட்டை ஒரு நாள் முழுவதும் கண்காணித்தார்கள். இரவு நேரம் கூட முழுமையாக அப்பகுதியின் சூழ்நிலையையும், அந்த வீட்டின் சூழலையும் அவர்கள் ஆராய்ந்தார்கள்.

கல்யாணிடமிருந்து பக்கத்து வீட்டின் உள்ளமைப்பையும் அறிந்து கொண்ட பின் மணிக்கு ஒரே ஒரு சந்தேகம் மட்டுமே மிஞ்சியிருந்தது. அந்த வீட்டுக்குள் பாம்பு இருப்பது உண்மையா? தகவல் போல் கல்யாண் அதை அவனிடம் தெரிவித்திருந்தானேயொழிய அவன் நேரிலேயே பார்த்திருக்கிறான் என்பதைச் சொல்லவில்லை. கல்யாண் பாம்பு சமாச்சாரத்தைச் சொன்னது போலவும் இருக்க வேண்டும், வேவு பார்க்கையில் பாம்பு இருப்பதைப் பார்த்து விட்டேன் என்கிற உண்மையைச் சொல்லவும் கூடாது என்ற நிலைப்பாட்டில் இருந்ததால் பாம்பு சீறல் சத்தம் மட்டும் கேட்கிறது என்று சொல்லி விட்டிருந்தான். ஆனால் ஒரு விஷயத்தைக் கேள்விப்பட்ட பிறகு, அங்கே போகும் முன் அது உண்மையா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியமிருந்த மணி வெளியே இருந்து அந்த வீட்டைக் கவனித்ததில் வீட்டுக்கு வெளியே பாம்பு எதுவும் பார்க்கவில்லை. ஆனாலும் அந்த வீட்டுக்குப் போகும் சமயத்தில் உள்ளே பாம்பு இருந்தால் என்ன செய்வது என்பதற்கும் சேர்த்து அவன் யோசிக்க ஆரம்பித்தான்.

பிறகு அவனும் அவன் கூட்டாளியும் சேர்ந்து திட்டமிட ஆரம்பித்து ஒரு முடிவுக்கு வந்தார்கள்.


றுநாள் காலை கல்யாணுக்கு மணி போன் செய்து சொன்னான். “சார், இன்னைக்கு ராத்திரி உங்க வேலை நடக்கும். உங்க கூர்க்கா ராத்திரி ட்யூட்டியில இல்லாம இருக்கிறது நல்லது. நாளைக்கு எதாவது போலீஸ் விசாரணைன்னா தேவையில்லாம அவன் மேலயும் சந்தேகம் வர வாய்ப்பிருக்கு….”

கல்யாண் சொன்னான். “அவன் ஊருக்குப் போகணும்னு சொல்லிட்டிருந்தான். இன்னைக்கு அனுப்பிச்சிடறேன்…”

மகன் பேசி முடித்த பிறகு வேலாயுதம் கேட்டார். “யாருடா? என்ன விஷயம்?”

கல்யாண் மணி சொன்னதைச் சொன்னான். வேலாயுதத்துக்குப் பரபரப்பாய் இருந்தது. ”இன்னைக்கு ராத்திரி வர்றானா? எத்தனை பேரு வருவானுக?”

தெரியல. நாலஞ்சு பேராவது வருவானுகன்னு நினைக்கிறேன்….”

அவனுக பாம்பைப் பார்த்து பயந்து ஓடிப் போயிட மாட்டானுகளே. பாம்பு இருக்குங்கறத சொல்லியிருக்கேல்லியா

ம்சூசகமா சொல்லியிருக்கேன். அவனுக எல்லாம் ப்ரொஃபெஷனல்ஸ்ப்பா நாம சொல்ற எந்தத் தகவலையும் அலட்சியப்படுத்திட மாட்டாங்க. அதனால தான் அவ்வளவு பணம் வாங்கறானுக…. பாம்பு விஷயத்தைக் கேட்டு அதுக்காகவே அவன் ஒரு லட்சம் ரூபாய் அதிகமாய் சொல்லியிருக்கவும் வாய்ப்பிருக்கு..

ஆனாலும் எட்டு லட்சம் அதிகம் தான்.  இத்தனைக்கும் நீ அதோட மதிப்பே ஒரு லட்சத்துக்குள்ளே தான் சொல்லியிருக்கேஅப்படியிருக்கறப்ப அவன் இவ்வளவு வாங்கறான்…;. ஊம்இருந்துட்டு போகட்டும் அந்த விசேஷ நாகரத்தினம் மட்டும் நம்ம கைல கிடைச்சுடுச்சுன்னா நாம இருக்கப் போற நிலைமையே வேற…. அத யோசிக்கறப்ப இந்த எட்டு லட்சம் எல்லாம் சுண்டைக்காய் தான்அதுசரி பாம்புகள் இருந்தா அவனுக எப்படி சமாளிப்பாங்க….”

அது எதோ பண்ணிட்டு போறாங்க….”

வேலாயுதம் இரவு பக்கத்து வீட்டைக் கவனிக்கையில் என்னவெல்லாம் நடக்கிறது என்பதை நேரடியாகவே பார்க்க முடியும் என்று எண்ணிக் கொண்டார். அந்த நினைவே அவருக்கு பரபரப்பாக இருந்தது. பாம்பைப் பார்த்து தலைதெறிக்க ஓடாத ஆட்களாக இருந்தால் போதும்அவர் அதைப் பார்த்து வயிறெரியத் தேவையில்லாதபடி எல்லாம் நடந்தால் போதும்

அவர் அந்த மனநிலையில் இருக்கையில் கல்யாண் மெல்லக் கேட்டான். “அவனுக்கு எத்தனையோ சக்திகள் இருக்குன்னு சொல்றாங்களே…. அவனுக்கு அவர்கள் வர்றது தெரிஞ்சு போச்சுன்னா என்ன செய்வான்?”

அதெல்லாம் அவனுக்குத் தெரிய வாய்ப்பில்லைடா. அப்படித் தெரிஞ்சுக்கிறதுன்னா நாம அவனை வேவு பார்க்கறதையும் கூடத் தெரிஞ்சிருப்பான்.  அப்படி தெரிஞ்சிருந்தா நம்மளப் பார்த்து புன்னகை எல்லாம் ஏன் பண்ணப்போறான்?”

அவர் சொல்வதும் சரியாகத் தான் கல்யாணுக்குத் தோன்றியது. முன்பு இந்தப் பக்கமே பார்க்காதவன் இப்போது புன்னகை செய்து அங்கீகரிக்கிறான் என்றால் அவர்கள் மனஓட்டங்கள் அவன் அறிந்திருக்க வாய்ப்பில்லைசிறிது யோசனைக்குப் பின் கல்யாண் தந்தையிடம் உறுதியான குரலில் சொன்னான். “ஆனா ஒன்னு மட்டும் ஞாபகம் வெச்சுக்கோங்க. ராத்திரி வெளியே என்ன சத்தம் கேட்டாலும் நீங்க வெளியே போய் பார்க்கற வேலை மட்டும் வேண்டாம். நாம பணம் கொடுத்தாச்சு. இனி அவங்க பாடு, நாகராஜ் பாடு

வேலாயுதம் தலையசைத்தார்.

ஜீம் அகமதுக்குக் கிடைத்திருந்த டெல்லி வரைபடம் மிக அண்மைக்கால வரைபடமாக இருந்தது. அதில் ஒவ்வொரு தெருவும், ஒவ்வொரு பகுதியும் எந்தக் குறிப்பும் விடுபட்டிராதபடி முழுவிவரங்கள் இருந்தன. ஒரு வீடு அல்லது ஒரு அலுவலகம் கடந்த சில தினங்களாகக் காலியாக இருந்தால் அது பச்சை நிறத்தில் குறிக்கப்பட்டிருந்தது. அந்தப் பச்சை நிற இடங்களுக்குத் தனி எண்கள் தரப்பட்டிருந்தன. அந்த எண்ணை க்ளிக் செய்தால் அந்த இடம் பற்றிய விரிவான கூடுதல் தகவல்கள் தனியொரு பக்கத்தில் விரிந்தன.   இப்படியாக ஒரு நாள் முழுவதும் டெல்லி வரைபடத்தை ஆராய்ந்து அவன் 48 இடங்களை நரேந்திரன் இருவரையும் ஒளித்து வைத்திருக்ககூடிய இடங்களாகத் தேர்ந்தெடுத்து வைத்திருந்தான்.

மறுநாள் காலை அவன் ஆட்கள் இருவரும் ஆளுக்கு ஐம்பது இடங்கள் தேர்ந்தெடுத்துக் கொண்டு வந்திருந்தார்கள். அவர்கள் முதலாமவன் தேர்ந்தெடுத்திருந்த 22 இடங்களும், இரண்டாமவன் தேர்ந்தெடுத்திருந்த 19 இடங்களும் அஜீம் அகமது தன் வரைபடத்தில் ஏற்கெனவே தேர்ந்தெடுத்திருந்த இடங்களாக இருந்தன.

மீதமிருந்த அவர்கள் தேர்ந்தெடுத்திருந்த இடங்களை ஏன் தேர்ந்தெடுத்தார்கள் என்று அஜீம் அகமது அவர்களிடம் விளக்கச் சொன்னான். அவர்கள் சொன்னதை உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டே வந்த அஜீம் அகமது அவர்கள் சொன்னதில் இருந்த பொருந்தாத விஷயங்களைச் சுற்றிக்காட்டி சிலவற்றை அந்தத் தாள்களில் அந்தக் குறிப்பிட்ட இடத்திற்கு பெருக்கல் குறி போட்டான். அவர்கள் சொன்னது ஓரளவாவது சரியாக இருப்பதாகத் தோன்றினால் அந்த இடத்திற்குப் புள்ளி வைத்தான். முடிவில் முதலாமவன் தேர்ந்தெடுத்த இடங்களில் ஒன்பது புள்ளிகள் மிஞ்சின. இரண்டாமவன் தேர்ந்தெடுத்த இடங்களில் ஏழு புள்ளிகள் மிஞ்சின. அவன் தேர்ந்தெடுத்திருந்த இடங்களில் 48ம், அவர்கள் இருவர் தேர்ந்தெடுத்திருந்த இடங்களில் மொத்தமாக 16ம் சேர்ந்து மொத்தமாக 64 இடங்கள் உள்ள பட்டியலைத் தயாரித்த அஜீம் அகமது தன் இரு ஆட்களிடமும் சொன்னான். “இந்த 64 இடங்களில் ஒன்றில் தான் நரேந்திரன் அவர்களை ஒளித்து வைத்திருக்கிறான்”



(தொடரும்)
என்.கணேசன்

இந்த நாவலையும், சாணக்கியன் உட்பட அச்சில் உள்ள என் மற்ற நூல்களையும் அமேசானில் வாங்க லிங்க் -

(அல்லது)

என்.கணேசன் புக்ஸுக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் தபாலில் பெற்றுக் கொள்ளலாம். 

நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பேபோன் பேமற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம்(ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)

நூல்களின் குறிப்பு மற்றும் விலையை அறிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும் - என்.கணேசன் நூல்கள்


அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.


நூல்களை வாங்க விரும்பும் வெளிநாட்டு வாசகர்கள் தங்கள் விவரங்களை nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பினால் தபால் செலவு அறிந்து சொல்லப்படும்.

2 comments:

  1. Very interesting episode. Ajeem Ahmed seems to be fast and Mani is going to steal the nagarathinam. I think Mani will be caught by Nagaraj. Waiting eagerly for next Monday.

    ReplyDelete
  2. நாகராஜிடம் அந்த விவேஷ நாகரத்தினம் நீண்ட நாள் தங்காது என்று சொல்லப்பட்டிருக்கிறது... மணி வெற்றிகரமாக திருடிவிடவும் வாய்ப்புள்ளது...

    ReplyDelete