சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, May 12, 2022

சாணக்கியன் 4

விஷ்ணுகுப்தர் இந்தக் கூட்டத்திற்காக வந்திருப்பவர்களை கூர்ந்து கவனித்ததில் நான்கு வகை மனிதர்களாக அவர்களைப் பிரிக்கலாம் என்று கணக்கிட்டார். தங்கள் அறிவுத்திறனை அடுத்தவர்களுக்குத் தெரியப்படுத்த வந்திருப்பவர்கள், தங்கள் அறிவுத்திறன் மூலம் பரிசும் செல்வமும் பெற்றுக் கொண்டு போக வந்தவர்கள், மாணவர்கள், அறிவுதாகத்தினால் வந்தவர்கள் மற்றும் வேறெந்த வேலையும் இல்லாமல் வேடிக்கை பார்த்து பொழுதைப் போக்க வந்தவர்கள். எல்லா இடங்களிலும் எல்லா நேரங்களிலும் சூழ்நிலையை ஆராய்ந்து ஒரு தெளிவான கணக்கை அவரால் எட்டாமல் இருக்க முடிவதில்லை

 

திடீரென்று எதிர் பக்கத்திலிருந்து ஒரு இளைஞன் எழுந்துவணக்கம் ஆச்சாரியரேஎன்று கைகூப்பி தலைதாழ்த்தி வணங்கினான். தட்சசீலத்தில் அவரிடம் படித்த மாணவன் அவன். விஷ்ணுகுப்தருக்கு மகிழ்ச்சியாக இருந்தது. தட்சசீலத்தின் பிரதிநிதியாக ஒரு மாணவன் இந்தச் சபையில் இருக்கிறான்…. புன்னகையுடன் அவர் கை உயர்த்தி ஆசிர்வதித்தார்.

 

தனநந்தன் வருகையை அறிவிக்கும் மணியடிக்கப்பட்டது. தனநந்தனும் அவனைப் பின் தொடர்ந்து ராக்ஷசரும் வந்தார்கள். விஷ்ணுகுப்தரையும், வேறு இரண்டு முதியவர்களையும் தவிர மற்றவர்கள் எல்லாரும் எழுந்து நின்றார்கள்அரசனை வாழ்த்தும் வேதகோஷங்களைப் பண்டிதர்கள் ஒருசேரச் சொன்னார்கள். நின்றிருக்கும் கூட்டத்தின் நடுவே விஷ்ணுகுப்தர் அமர்ந்திருந்ததை அருகிலிருப்பவர்கள் மட்டுமே கவனிக்க நேரிட்டது. அவர்கள் திகைப்புடன் அவரைப் பார்த்ததை விஷ்ணுகுப்தர் லட்சியம் செய்யவில்லை.

தனநந்தன் அமர்ந்து கையமர்த்தினான்.  அனைவரும் அமர்ந்தார்கள். தனநந்தன் முகத்தில் மலர்ச்சியோ உற்சாகமோ இருக்கவில்லை. ராக்ஷசர் உள்ளே சென்று அழைத்து வந்திருக்கா விட்டால் இனியும் தாமதமாகத் தான் தனநந்தன் வந்திருப்பான் என்று விஷ்ணுகுப்தர் கணக்குப் போட்டார்.

 

வரருசி ஒரு சமஸ்கிருத ஸ்லோகம் பிரார்த்தனையாகச் சொல்லி கூட்டத்தைத் தொடங்கி வைத்தார்.  முதலில் விவாத நிகழ்ச்சி. ராக்ஷசர் அரசனுக்கு ஆரம்ப விவாதமே எட்டிக்காயாகக் கசக்க வேண்டாம் என்று எண்ணி சாதுரியமாக இராமாயணத்தில் யாருடைய எந்தத் தம்பி உயர்ந்தவன், ஏன் என்ற தலைப்பை வாதத்திற்காக எடுத்துக் கொடுத்தார்.  காரசாரமான விவாதம் தொடர்ந்தது. ஒவ்வொருவரும் பேச ஆரம்பிப்பதற்கு முன் தங்கள் பெயர், குருவின் பெயர், ஊரின் பெயர் சொல்லி அறிமுகம் செய்து கொண்டபின் தங்கள் கருத்துக்களை ஆணித்தரமாகச் சொன்னார்கள். சத்ருக்னன், சுக்ரீவன், விபீஷணன் மூவர் பெயரும் ஆரம்ப விவாதங்களிலேயே கழிக்கப்பட்டு இராமனின் பரதன், லட்சுமணன், இராவணனின் கும்பகர்ணன்- இந்த மூவர் குறித்த கருத்துகள் முன்னிலை எடுத்து அறிஞர்களால் கடைசி வரை காரசாரமாக விவாதிக்கப்பட்டனதனநந்தனின் முகச்சுளிப்பு குறைந்து அவன் சுவாரசியமாக அந்த வாதங்களை ரசிக்க ஆரம்பித்தான்.  மிக நன்றாகப் பேசி பரிசு பெறத் தகுதிபெற்றவர்களுடைய பெயர்களை ராக்ஷசரும், வரருசியும் அருகருகே அமர்ந்தபடி கலந்து பேசி குறித்துக் கொண்டார்கள்.

 

அடுத்தது நிபுணத்துவம் எந்த அளவில் உள்ளது என்பதற்கான போட்டி. போட்டியில் தலைப்பைத் தந்தவுடன் யார் எழுந்து முன்வருகிறார்களோ அவர்கள் அதுகுறித்துப் பேச வேண்டும். பேசுபவரிடம் அது சம்பந்தமான எதிர் கேள்விகளை யாரும் கேட்கலாம். பேச வந்தவர் அதற்கான பதிலைச் சொல்ல வேண்டும். ஆதாரங்கள் தேவைப்பட்டால் அதையும் சொல்ல வேண்டும். அவரால் தொடர்ந்து எதுவும் சொல்ல முடியாத பட்சத்தில் அவர் போய் அமர்ந்து கொள்ள அடுத்து யாராவது தொடர வரலாம். அல்லது வேறு எதாவது பதிலையே சொல்ல ஆரம்பிக்கலாம். இதற்கான தலைப்பை வரருசி தேர்ந்தெடுத்தார்.  “ஒரு ராஜ்ஜியத்தின் சிறப்பு எதை வைத்து தீர்மானமாகிறது?”

 

முதலில் பேச எழுந்தது விஷ்ணுகுப்தரின் மாணவன் தான். இது குறித்து அவர் வேண்டுமளவு சொல்லித் தந்திருக்கிறார். உறக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் பதில் சொல்லுமளவு மனதில் நிறைய பதித்திருக்கிறார். அதனால் முதலில் எழுந்த அந்த மாணவன் விஷ்ணுகுப்தரை இருகரம் கைகூப்பி வணங்கி விட்டு சபைக்கு எதிரில் வந்து நின்றான்.

 

மன்னரைத் தலைதாழ்த்தி வணங்கி விட்டு அந்த மாணவன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். “என் பெயர் சக்ரபாணி. என் குரு ஆச்சாரியர் விஷ்ணுகுப்தர்....” சொல்லி விட்டு விஷ்ணுகுப்தரை திரும்பிப் பார்த்து தலை தாழ்த்தி வணங்கி விட்டுத் தொடர்ந்தான். “படித்தது தட்சசீலத்து கல்விக்கூடம்....”

 

தட்சசீலத்துக் கல்விக்கூடம் என்று சொன்னவுடன் வரருசி முகம் மலர்ந்ததுராக்ஷசரிடம் பெருமிதத்துடன் சொன்னார். “நான் படித்த இடம்..” அவர்கள் இருவரும் ஆச்சாரியர் விஷ்ணுகுப்தர் குறித்தும் பலர் உயர்வாகச் சொல்லிக் கேட்டிருக்கிறார்கள். அவர்கள் இருவர் பார்வையும் மரியாதையுடன் சக்ரபாணி வணங்கிய பக்கம் சென்றது. ஆனால் விஷ்ணுகுப்தர் நிச்சலனமாக நேர் பார்வை பார்த்தபடி அமர்ந்திருந்தார்

 

சக்ரபாணி தன் பதிலைச் சொல்ல ஆரம்பித்தான். “ராஜ்ஜியத்தின் சிறப்பு மக்களின் சுபிட்சத்தை வைத்தும் அதன் ஆட்சியை வைத்தும் தீர்மானமாகிறது. ஆனால் அந்த இரண்டின் சிறப்புமே அரசனை வைத்துத் தான் தீர்மானமாகிறது...”

 

ராக்ஷசர் அரசனை மையப்படுத்தி பேச்சு நகர்வதில் பிரச்னையை உணர்ந்தார். அறிவுரைகள் என்ற தலைப்பை இந்த மாணவன் நெருங்கிவிட வாய்ப்பிருக்கிறது. ஏற்கெனவே எட்டிக்காயாய் கசக்கிறது என்று தனநந்தன் சொல்லியிருப்பதால் ராக்ஷசர் இடைமறித்துக் கேட்டார். “அமைச்சர்களின் பங்கை ஏன் சொல்லவில்லை. அரசர் அமைச்சர்கள் மூலமாக அல்லவா ஆட்சியை நடத்துகிறார்

 

நிர்வாகத்திற்கு அரசன் அளவுக்கு அமைச்சர்கள் பங்கும் முக்கியம் தான் என்றாலும் அமைச்சர்களை அரசர் எந்த அளவு பயன்படுத்திக் கொள்கிறார் என்பது மறுபடியும் அரசரின் குணாதிசயங்களையும், அறிவையும் பொறுத்தே அமைகிறது. மேலும் அமைச்சர்கள் தங்கள் ஆலோசனைகளை அரசருக்கு வழங்க முடியும் என்றாலும் அதை ஏற்றுக்கொண்டு பயன்படுத்திக் கொள்வதும் ஒதுக்குவதும் அரசரின் இச்சைப்படியே நடக்கிறது.”

 

ராக்ஷசருக்கு இதை மறுக்க முடியவில்லை. வேறு எதாவது கேள்வி கேட்டு கூடுமான அளவு பேச்சு அரசர் பற்றிப் போகாமல் தவிர்க்க வேண்டும் என்று நினைத்து அவர் கேள்வியை யோசிப்பதற்குள் ஒரு வயதான அறிஞர் கேள்வி கேட்டு விட்டார். ”ராஜ்ஜியத்தின் சிறப்பு அரசனைப் பொறுத்தது என்றால் அரசன் சிறப்பாய் ஆட்சி நடத்தும் முறை என்ன?”

 

கேள்வி கேட்கப்பட்ட பிறகு செய்வதற்கொன்றுமில்லை என்பதால் ராக்ஷசர் மௌனமாக இருந்து விட்டார். சக்ரபாணி மடைதிறந்த வெள்ளம் போல் பேச ஆரம்பித்தான். “அரசன் சிறப்பாய் ஆட்சி செய்யும் முறை குறித்து மனுநீதியில் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. குடிமக்களின் நலன் காப்பதும், நீதியை நாட்டில் நிலைநாட்டுவதும், அரசனின் தலையாய கடமையாகச் சொல்லப்பட்டிருக்கிறது. மனு அத்துடன் தண்டநீதி என்னும் தண்டிக்கும் சட்டங்கள், வரிவசூல் முறை, நீதி பரிபாலனம், அயல்நாடுகளுடனான உறவு, அரசனுக்கு இருக்க வேண்டிய நற்குணங்கள், தர்மசிந்தனை ஆகியவற்றைப் பற்றியெல்லாம் சிறப்பாகச் சொல்லியிருக்கிறார். தண்டநீதி குறித்துச் சொல்லுகையில் தண்டனைகள் குறித்த பயமே குற்றங்களைக் குறைக்கும் என்பதால் வலிமையானவர்களின் தவறான செயல்களால் பலவீனமான குடிமக்கள் பாதிக்கப்படாமல் இருக்கும்படியாகவும், தர்மத்தை நிலைநாட்டும்படியாகவும் அது இருக்க வேண்டும் என்கிறார். விவசாயி களைகளைப் பிடுங்கி பயிர்களைக் காப்பது போல அரசனும் சமூகவிரோத சக்திகளை அழித்து மக்களைக் காப்பாற்ற வேண்டும். மனுவின் காலத்தில்  ஆறில் ஒரு பங்கு விளைச்சலிலும், பத்தில் ஒரு பங்கு வியாபரத்திலும் வரியாக வசூலிக்கப்பட்டது. வரிகள் எப்போதுமே குடிமக்களுக்குச் சுமக்க முடியாத சுமையாக மாறிவிடக்கூடாது என்பது மனுவின் கருத்து. அரசன் குரூரமாகவும், தர்மமில்லாத வழிகளில் செல்லக்கூடாது. தர்மசாஸ்திரங்களை அறிந்தவனாகவும், தர்ம வழிகளை அறிந்தவனாகவும் இருப்பதுடன் தர்மத்தை அனுசரிப்பவனாகவும் இருக்க வேண்டும்.... அய்த்ரேய பிராமணத்தில் அரசன் தர்மநியாய முறைப்படி தான் நடந்து கொள்வேன் என்ற உறுதிமொழி எடுத்துக் கொண்டு தான் ஆட்சிபீடத்தில் அமர வேண்டும் என்று சொல்லப்படுகிறது....”

 

சக்ரபாணி வரிவசூல் பற்றிச் சொல்ல ஆரம்பத்ததிலிருந்தே எரிச்சலடைய ஆரம்பித்திருந்த தனநந்தன் இந்தக் கட்டத்தில் பொறுமையை முழுவதுமாக இழந்து குறுக்கிட்டான். “அந்தணனே, நீ சொல்கின்ற படியெல்லாம் அனுசரித்து நடந்தால் ஒரு மடத்தை வேண்டுமானால் நடத்தலாம். மகதம் போன்றதொரு சாம்ராஜ்ஜியத்தை நடத்த முடியுமா? ஏதோவொரு பழங்காலத்தில் எவனோ சொன்னதை எல்லாம் கிளிப்பிள்ளை போல் ஒப்பிக்கிறாயே, இக்காலத்திற்குப் பொருந்துவது போல் சொல்ல இன்றைய அறிஞர்கள் யாருமில்லையா?”

 

சக்ரபாணி திடுக்கிட, ராக்ஷசரும், வரருசியும்  தங்கள் இருக்கைகளில் மெல்ல நெளிந்தார்கள். சக்ரபாணி சுதாரித்துக் கொண்டான். “மேலான ஞானம் காலம் மாறுவதற்கேற்ப மாறுவதில்லை அரசே. மானுட நன்மைக்கும், சுபிட்சத்திற்கும் வேண்டி எக்காலத்திற்கும் பொருந்துவது போலவே அறிஞர்கள் தர்மநீதிகளைச் சொல்லி இருக்கிறார்கள். எனினும் தற்கால அறிஞர்கள் கருத்தை அறிய தாங்கள் ஆசைப்படுவதால், என் குருவான ஆச்சாரியர் விஷ்ணுகுப்தர் கருத்தை அவர் அனுமதியுடன் கூறுகிறேன்...” என்று சொல்லி அவன் திரும்பி விஷ்ணுகுப்தர் இருக்கும் பக்கம் நோக்கிக் கைகூப்பி விட்டுத் தொடர்ந்தான்அவன் அதிலிருக்கும் ஆபத்தை அறிந்திருக்கவில்லை.

 

(தொடரும்)

என்.கணேசன்


இந்த நாவலையும், அச்சில் உள்ள என் மற்ற நூல்களையும் அமேசானில் வாங்க லிங்க் -

(அல்லது)

என்.கணேசன் புக்ஸுக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் தபாலில் பெற்றுக் கொள்ளலாம். 

நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பேபோன் பேமற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம்(ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)

நூல்களின் குறிப்பு மற்றும் விலையை அறிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும் - என்.கணேசன் நூல்கள்


அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.


நூல்களை வாங்க விரும்பும் வெளிநாட்டு வாசகர்கள் தங்கள் விவரங்களை nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பினால் தபால் செலவு அறிந்து சொல்லப்படும்.




2 comments:

  1. தனநந்தன் இது போன்ற நீதி போதனைகளை விரும்பாதவன்... சக்ரபாணி மன்னனின் தண்டனைக்கு உள்ளாகப் போகிறான்...

    ReplyDelete