அரண்மனைக்குச் சென்று சேர்ந்தவுடன் தனநந்தன் வறண்ட குரலில் நீண்ட காலத்திற்கு முன்னால் கங்கைக் கரையில் பெரும் நிதியைப் புதைத்து வைத்த கதையையும், சில காலம் கழித்து முன்னெச்சரிக்கையுடன் யாகசாலையை அங்கு கட்டி மக்கள் தற்செயலாக எதையும் கண்டுபிடித்து விடமுடியாத ஏற்பாட்டைச் செய்ததையும், சுருக்கமாக ராக்ஷசரிடம் தெரிவித்தான்.
ராக்ஷசர் திகைப்படைந்தாலும்
அதை வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. முன்கூட்டியே தெரிவித்திருந்தால்
அங்கே காவலை அதிகப்படுத்தியிருக்கலாம் என்ற ஆதங்கம் மட்டும் அவர் மனதில் எழுந்தது. அவர் மெல்லக்
கேட்டார். “இந்தப் புதையல் விஷயம் யார் யாருக்கெல்லாம் தெரியும் அரசே?”
“உயிரோடிருப்பவர்களில்
என்னைத் தவிர யாருக்கும் தெரியாது என்று இதுநாள் வரை நினைத்திருந்தேன்.”
அந்த ஒற்றை வாக்கியம் ஏராளமான தகவல்களை
ராக்ஷசருக்குத் தெரிவித்தது. ஆனால் அவரைப்
பொருத்த வரை தனநந்தன் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவன். அவன் அரசன். அவன் என்ன
செய்தாலும் அது சரியே.
ராக்ஷசர் கேட்டார். “தங்கள்
குடும்பத்தினர் அல்லது வேறு யாரிடமாவது பேச்சுவாக்கில் எப்போதாவது இதைப் பற்றிச் சொல்லி
வைத்திருந்தீர்களா? சிறிது ஞாபகப்படுத்திப் பாருங்கள் அரசே”
“இல்லை” என்று உடனே தனநந்தன் உறுதியாகச் சொன்னான்.
ராக்ஷசர் குழப்பத்துடன் கேட்டார். “பின் எப்படி?”
தனநந்தன் விரக்தியும் ஆத்திரமும் சேர்ந்து
உணர்ந்தபடி சொன்னான். “அது தான் எனக்கும் விளங்கவில்லை. வரருசி
சொல்வது போல் சாணக்கின் மகன் மாந்திரீகம் மூலமாக இதை அறிந்திருப்பானோ?”
முதலில் ஆயுதக்கிடங்கு பற்றியெரிந்தது, இப்போது
புதையல் திருட்டுப் போனது என்று அடுத்தடுத்து நடக்கின்றவற்றை எண்ணிப் பார்த்தால் அந்தக்
கோணமும் அலட்சியப்படுத்த முடியாதது என்று தோன்றினாலும் கூட ராக்ஷசருக்கு
அதை நம்பக் கஷ்டமாக இருந்தது. அவர் யோசனையுடன் கேட்டார். “நீங்கள்
யாகசாலையை எப்போதும் பூட்டியே வைத்திருந்தீர்கள் அல்லவா? இன்று செல்லும்
போது பூட்டு உடைக்கப்பட்டிருந்ததா?”
“இல்லை. யாகசாலை
பூட்டியே இருந்தது. சாரதி என் கண் முன் தான் பூட்டைத் திறந்தான்”
”சாவி இங்கே
எங்கே வைக்கப்பட்டிருந்தது அரசே?”
“சாவி என்னிடமே
இருந்தது. அதை யாரும் எடுத்திருக்க வழியில்லை.”
பின் எப்படி இது நிகழ்ந்திருக்க முடியும்
என்பது ராக்ஷசருக்குப் புரியவில்லை. மிகவும்
கச்சிதமாக இத்திருட்டு அரங்கேற்றப்பட்டிருக்கிறது என்பது மட்டும் தெரிந்தது.
“நீங்கள்
இதற்கு முன் கடைசியாக யாகசாலைக்கு எப்போது சென்றீர்கள் அரசே? அந்தச்
சமயத்தில் இந்தப் புதையல் திருட்டுப் போயிருக்கவில்லையே?”
தனநந்தன் தான் கடைசியாக எப்போது போய்ப்
பார்த்தான் என்று சொன்னான். அந்தச் சமயத்தில் எல்லாம் சரியாகவே இருந்ததை உறுதிப்படுத்திக்
கொண்டதைச் சொன்னான்.
ராக்ஷசர் சொன்னார். “அப்படியானால்
அதற்குப் பின் தான் இதை அவர்கள் நூதன முறையில் திருடியிருக்க வேண்டும்”
தனநந்தன் திடீரென்று நினைவு வந்து கோபத்தில்
கொந்தளித்தபடி சொன்னான். “அப்படியானால் வேறெதோ புதையல் கிடைத்து அவர்கள் ஆயுதங்களும்
குதிரைகளும் வாங்கவில்லை. இங்கிருந்து திருடிச் சென்றதை வைத்தே தங்கள் படை ஆயுத பலத்தைப்
பெருக்கி இருக்கிறார்கள்.”
நினைக்க நினைக்க கோபம் அதிகமாகி தனநந்தன்
ஜன்னி வந்தவன் போல் நடுங்கினான். திட்ட சரியான வார்த்தைகள் கிடைக்காமல் அவன் யாகசாலையில் ஆரம்பத்தில்
ஓலமிட்டது போலவே மறுபடி ஓலமிட்டான். என்ன ஆயிற்றோ என்று
பதறியபடி அவன் குடும்பத்தினரும், அரண்மனைக் காவலர்களும், பணியாளர்களும்
ஓடி வந்தார்கள். அவர்கள் வேடிக்கை பார்ப்பதை ரசிக்க முடியாமல் மேலும் கொதித்த
தனநந்தனை ஓரளவாவது அமைதிப்படுத்த அவன் குடும்பத்தினருக்கும், ராக்ஷசருக்கும்
நீண்ட நேரம் தேவைப்பட்டது.
ராக்ஷசருக்கு
தனநந்தனின் நிலைமையைப் பார்க்கையில் மனம் வேதனை அடைந்தது. எத்தனை தான் கோபமடைந்தாலும் இப்படி புத்தி பேதலித்தவன் போல்
நடந்து கொள்பவன் அல்ல அவன். அப்படிப்பட்டவன் தன் நிலையும், கௌரவமும்
மறந்து மற்றவர்களால் பரிகசிக்கப்படும் நிலைக்கும், பரிதாபப்படும்
நிலைக்கும் தள்ளப்பட்டதை அவரால் சகிக்க முடியவில்லை.
வீடு திரும்பும் போது அவருக்கு தனநந்தனின்
கொந்தளிப்புக்கு நேரெதிராயிருந்த விஷ்ணுகுப்தரின் அசைக்க முடியாத அமைதி நினைவுக்கு
வந்தது. அரசவையில்
அவமானப்படுத்தப்பட்ட போதும், சபையிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட போதும் அழுத்தமான
அமைதியுடன் அந்த மனிதர் இருந்த காட்சி மறுபடி நேரில் பார்ப்பது போல் மனத்திரையில் வந்தது. ஒரு சாதாரண
ஆசிரியர் என்று நினைக்கப்பட்ட மனிதர் இன்று விஸ்வரூபம் எடுத்து மிரட்டுகிறார்...
ராக்ஷசர் இனி
வேகமாய் செயல்பட வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தார். ஒற்றர்களை
அழைத்து விசாரித்த போது அவர்கள் சில காலத்திற்கு முன்பு கங்கைக் கரையில் யாகசாலைக்கு
அருகில் முகாமிட்டுத் தங்கிய வணிகர்களை நினைவு கூர்ந்தார்கள். அவர்கள்
தங்கிய காலமும் இடமும் அவர்களையே திருடர்களாய் சுட்டிக் காட்டியது. அந்த வணிகர்களில்
ஒருவன் அவரிடமே விற்பனை செய்ய முயன்றதையும் ஒரு ஒற்றன் கட்டுப்படுத்திய புன்னகையுடன்
நினைவுபடுத்தினான். தனநந்தனைப் போலவே அவரும் கோபத்தை உணர்ந்தாலும் அதைக் கட்டுப்படுத்திக்
கொண்டு, திரும்பவும் அந்த வணிகர்கள் வந்தால் அவர்களை உடனடியாகச் சிறைப்படுத்த
வேண்டும் என்று கட்டளை இட்டார்.
பின் அவர் அவர்களிடம் கேட்டார். “அந்த வணிகர்களுக்கும், இப்போது
ஆயுதக்கிடங்கைத் தீப்பிடிக்க வைத்தவர்களுக்கும் கண்டிப்பாக உள்ளூர் ஆட்கள் சிலரின்
உதவி கிடைத்திருக்க வேண்டும். அல்லது உள்ளூர் ஆட்கள் சிலராவது அவர்கள் நடவடிக்கைகள் பற்றி
அறிந்திருந்திருக்க வேண்டும். அப்படிப்பட்ட உள்ளூர் ஆட்கள் யாராக இருக்க வாய்ப்புகள் அதிகம்
என்று நினைக்கிறீர்கள்?”
ஒற்றர்கள் யோசித்தார்கள். ராக்ஷசர் சொன்னார். “உள்ளூர்
ஆட்களில் யாரிடம் திடீரென பணப்புழக்கம் அதிகமாகியிருக்கிறது என்று தெரிந்தாலும் கூட
அது நமக்கு உபயோகமான தகவலாய் இருக்கும்”
ஒற்றர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்
கொண்டார்கள். ராக்ஷசர் அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் தொனியில் சொன்னார். “உங்கள்
மனதில் உள்ளதைச் சொல்லலாம். என்னிடம் எதையும் மறைக்க வேண்டியதில்லை.”
ஒரு ஒற்றன் சொன்னான். “பணப்புழக்கம்
அதிகம் என்று சொல்ல முடியா விட்டாலும் நம் சேனாதிபதி பத்ரசால் ஒரு காலத்தில் பணத்திற்காகச்
சிரமப்பட்டது போல் இப்போதெல்லாம் சிரமப்படுவதில்லை என்பதைப் பார்க்கிறோம்.”
ராக்ஷசர் அதிர்ந்து
போனார். நாளை போர் மூளுமானால் யாரை நம்பி மகத சாம்ராஜ்ஜியமே இருக்கிறதோ
அந்த அஸ்திவாரமே தகர்வதை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. எந்த ஒரு
மனிதனும் தாங்க முடிந்த அதிர்ச்சிகள் ஓரளவு தான். அதற்கு
மேல் ஏற்படும் அதிர்ச்சிகள் அவனை உடைத்து சிதைத்து
விடும். அவர் மெல்லக் கேட்டார். “அந்த வணிகர்களோ, வேறு ஏதாவது
சந்தேகத்திற்குரியவர்களோ சேனாதிபதியுடன் நெருங்கிப் பழகி இருக்க வாய்ப்புகள் உண்டா?”
“அப்படி
எதுவும் நடக்கவில்லை பிரபு. ஆனால் முன்பெல்லாம் சூதாட்ட அரங்கில் அடிக்கடி கடன் சொல்லும்
அவர் இப்போதெல்லாம் அந்தப் பிரச்சினையில் சிக்குவதில்லை என்பதைப் பார்க்கிறோம்.”
“வேறு யாராவது
ஆட்கள் அப்படி நாம் சந்தேகப்படும்படியாக இருக்கிறார்களா?”
அவர்களுக்கு அப்படி யாரையும் உடனடியாக
நினைவுபடுத்த முடியவில்லை. அவர் சொன்னார். ”கூடுதல் கவனத்துடனும்
சந்தேகத்துடனும் அனைவரையும் கண்காணியுங்கள். வேறு யாராவது
நினைவுக்கு வந்தாலோ, புதிதாய் சந்தேகத்தைத் தூண்டுவது போல நடந்து கொண்டாலோ உடனே
என்னிடம் தெரிவியுங்கள்”
அவர்களை அனுப்பிய பின் அவர் சேனாதிபதியின்
சமீபத்திய நடவடிக்கைகளை எல்லாம் நினைவுகூர்ந்தார். அவர் முன்னிலையில்
அவன் சந்தேகத்திற்கிடமாக நடந்து கொண்டதாய் தகவல் எதுவும் நினைவுக்கு வரவில்லை. பத்ரசால்
அரிச்சந்திரன் அல்ல. தேன் எடுக்கையில் புறங்கையை நக்கக்கூடியவன் தான். ஆனால் தேன்
கூட்டையே அபகரித்துச் செல்லக்கூடியவன் அல்ல.... எதற்கும்
அவனைச் சந்தித்துப் பேசுவது உசிதமென்று அவருக்குத் தோன்றியது.
அவர் பத்ரசாலைச் சந்திக்கக் கிளம்பிய
வேளையில் ஜீவசித்தி தயக்கத்துடன் அவர் எதிரே வந்து நின்றான். இதற்கு
முந்தைய இரண்டு அதிர்ச்சிகளையும் தெரியப்படுத்தியவன் அவன் தான். இப்போது
என்ன தகவல் கொண்டு வந்திருக்கிறானோ? அவருக்கு இன்னொரு
அதிர்ச்சியைத் தாங்க முடியாதென்று தோன்றியது.
(தொடரும்)
என்.கணேசன்