சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, May 30, 2024

சாணக்கியன் 111

 

யூடெமஸ் சிறந்த போர்வீரனேயொழிய சிறந்த பேச்சாளன் அல்ல. அதனால் அவனுடைய வீரர்களிடம் எழுச்சியூட்டும்படி பேச வேண்டிய அவசியம் நேர்ந்திருப்பது அவனுக்கு சலிப்பு கலந்த சங்கடத்தை ஏற்படுத்தியது. கேகய நாடு எதிரியுடன் சேர்ந்து படையெடுத்து வரும் துரோகச் செயலைக் கேள்விப்பட்டவுடன் ஒவ்வொரு யவன வீரனும் தானாகவே கொதித்தெழ வேண்டும் என்று அவன் மிகவும் எதிர்பார்த்தான். அது கேகயத்தில் மட்டுமல்லாமல் இங்கும் அவன் வீரர்களிடம் ஏற்படாதது அவனுக்குப் பெரிய ஏமாற்றத்தையே தந்தது. அவனுடைய படைத்தலைவனே கூட தலையைக் கவிழ்த்து வருத்தப்பட்டு அமர்ந்திருந்தானேயொழிய கொதித்தெழவில்லை;  நாடி நரம்புகள் துடிக்க போருக்குத் தயாராகவில்லை. காலம் செல்லச் செல்ல எல்லாரிடமும் வீரம் குறைந்து வருவது அவனுக்கு வருத்தத்தை அளித்தது. படைத்தலைவன் சொன்னது போல் போரிடும் வீரர்களின் துடிப்பான மனநிலையும், உற்சாகமும் மிக முக்கியம் தான். ஆனால் அது தானாக ஏற்படுவதல்லவா அவர்களுக்குப் பெருமை?

 

இதையெல்லாம் யோசித்து பெருமூச்சு விட்டபடி என்ன பேசுவது என்று யூடெமஸ் சிந்திக்க ஆரம்பித்தான். வீரர்களிடம் உள்ளதை உள்ளபடி சொன்னால் கேகயத்து யவன வீரர்கள் போல் அவர்கள் சிந்தித்து விடும் அபாயம் இருப்பதால் அவன் பக்கத்து நியாயத்தைச் சொல்லி அவர்களைப் பொங்கியெழ வைக்க அவன் சில விஷயங்களை ஜோடித்துச் சொல்ல வேண்டியிருக்கிறது. அவன் அலெக்ஸாண்டரின் எழுச்சியூட்டும் பேச்சுகள் பல கேட்டிருக்கிறான். அதிலிருந்து சில வாசகங்களையும் சேர்த்துப் பேசினால் நன்றாக இருக்கும். இருந்தாலும் பேசுவதை விடப் போர் புரிவதே சுலபம் என்று அவனுக்குத் தோன்றியது. ஆனால் காலத்தின் கட்டாயத்தால் அந்தக் கடினமான செயலை மனதளவில் பல முறை ஒத்திகை பார்த்த பின் சிறப்பாகவே செய்தான்.


தன் வீரர்களைக் கூட்டி அவன் மிக உருக்கமாகவும், உணர்ச்சிகரமாகவும் பேசினான். “மறைந்த மாவீரர் சக்கரவர்த்தி அலெக்ஸாண்டரின் வீரர்களே! தோல்வியே காணாத சரித்திரம் படைத்திருப்பவர்களே! இன்று நம் சக்கரவர்த்தி நம்மிடையே இல்லாவிட்டாலும் அவர் காட்டிய மாவீரம் நம் மனதில் இருக்கிறது. அவர் வென்ற பகுதிகளைக் கட்டிக் காக்கும் மாபெரும் பொறுப்பும் நமக்கு இருக்கிறது. என்னையும், உங்களையும் நம்பி அந்தப் பொறுப்பை அவர் ஒப்படைத்து விட்டுப் போயிருக்கிறார். அவர் இங்கிருந்த வரை இருக்குமிடம் தெரியாமல் அடங்கியிருந்தவர்கள் அவர் திரும்பி என்றும் அவர் வரப்போவதில்லை என்று தெரிந்தவுடன் தைரியம் பெற்று தங்கள் கைவரிசையைக் காட்ட ஆரம்பித்து விட்டார்கள். நம் சத்ரப்பாக இருந்த மாவீரர் பிலிப்பைக் கொன்று வாஹிக் பிரதேசத்தைக் கைப்பற்றி விட்டார்கள். அதைக் கேட்டவுடன் ஆத்திரமடைந்த வீர அலெக்ஸாண்டர் எதிரிகளுக்குப் பதிலடி தர என்னையும் காந்தார அரசன் ஆம்பி குமாரனையும் சத்ரப் பதவிக்கு நியமித்து விட்டு காலமானார். அவர் தந்த பணியை நிறைவேற்ற ஓடோடி வந்த எனக்கு காந்தார அரசன் ஆம்பி குமாரனின் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. ஏனென்று கேட்டால் அவனுக்கு உயிர்ப்பயம் என்று சொன்னார்கள். ஆனால் அந்த உயிர்ப்பயம் எனக்கில்லை.”

 

“நான் கேகய மன்னனின் உதவியோடு புரட்சிப்படையினரைத் தோற்கடித்து பிலிப்பின் மரணத்திற்குப் பழி வாங்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அது குறித்து கேகய மன்னனுக்கு நான் அனுப்பிய கடிதத்திற்குச் சரியாகப் பதில் வரவில்லை. நேரடியாகச் சென்று பேசினேன். அவர் மாவீரர் அலெக்ஸாண்டரின் மறைவுக்குப் பின் நம்மிடம் பழைய மரியாதை காட்டவில்லை. ஆனாலும் சத்ரப் பிலிப்பைக் கொன்றவர்களைப் பழிவாங்கி வாஹிக் பிரதேசத்தை மீட்க வேண்டிய அவசியத்தை நான் உறுதியாகச் சொன்னவுடன் எனக்கு யானைப்படை தந்து உதவுவதாகச் சொல்லி வேண்டாவெறுப்புடன்  ஐநூறு யானைகளை மட்டும் அனுப்பி வைக்கச் சம்மதித்தார். அதன் பின் அவர் வயோதிகத்தின் காரணமாக உறக்கத்தில் உயிரிழந்தாரா அல்லது அங்குள்ளவர்களின் சதிச்செயலால் உயிரிழந்தாரா என்பது நமக்குத் தெரியாது. ஆனால் அவர் உயிரிழப்பதால் எனக்கு எந்த விதமான இலாப நஷ்டங்களும் இல்லை என்பது குழந்தைக்குக் கூட தெரியக்கூடிய உண்மை. அவர் மரணத்தினால் பதவி இலாபமடைந்த அவர் மகன் அதைச் செய்திருக்கலாம். அவன் நாட்டு மக்களிடம் நற்பெயர் வாங்க அவனுடைய சதிக்கு என் மீது பழி போட்டு இருக்கிறான் என்பது எனக்கு இங்கே வந்தவுடன் தான் தெரிந்தது.”

 

“அதன் பின் நடந்த சம்பவங்களைப் பார்க்கையில் அந்தச் சதித்திட்டத்தின் பின்னணியில், சத்ரப் பிலிப்பைக் கொன்று வாஹிக் பிரதேசத்தைக் கைப்பற்றிய புரட்சிப்படைத் தலைவன் சந்திரகுப்தனும் இருக்கிறான் என்பது எனக்குப் பிறகு தான் புரிந்தது. நான் தான் கேகய மன்னனைக் கொன்றேன் என்று சொன்ன பொய்யை வலுப்படுத்தி மக்களை நம்ப வைக்க இருவரும் சேர்ந்து கொண்டு இங்கு படையெடுத்து வரும் நாடகத்தையும் அரங்கேற்றி இருக்கிறார்கள். கேகயம் புருஷோத்தமனுக்கு நம் வீர அலெக்ஸாண்டர் போட்ட பிச்சை. நாம் அந்த நாட்டைத் திருப்பித் தந்து அவர்களைக் கௌரவப்படுத்தியதற்கு அவர்கள் நமக்குத் தரும் பரிசு என்ன பார்த்தீர்களா? தனித்தனியாக வந்தால் நம்மை வீழ்த்த முடியாது என்று புரிந்து கொண்டு சதிகாரர்கள் இருவரும் கைகோத்துக் கொண்டிருக்கிறார்கள். நீதி கேட்க வருகிறார்களாம். நீதியே இல்லாத அந்த மனிதர்களுக்கு அலெக்ஸாண்டரின் வீரர்களான நாம் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும். கற்பித்து அலெக்ஸாண்டர் மறைந்தாலும் அவர் நம்மிடம் உருவாக்கிச் சென்ற வீரம் மறையவில்லை என்று நிரூபிக்க வேண்டும். நிரூபிப்போமா?”

 

படைத்தலைவன் அந்தப் பேச்சைக் கேட்டு திகைத்தான். இது என்ன புதுக்கதை என்று தோன்றியது. “ஒரு கிழவன் இறந்ததற்கு இத்தனை முக்கியத்துவம் தர என்ன இருக்கிறது?” என்று நேற்று ஒற்றனிடம் கொந்தளித்துக் கேட்ட யூடெமஸ் இன்று புதிய கதையுடன் வீரர்களிடம் பேசியதைக் கேட்கையில் அவனுக்கு அவ்வப்போது பைத்தியம் பிடித்தாலும் சில சமயங்களில் தெளிவாக ஜோடித்துப் பேசவும் முடிகிறது என்று மனதில் மெச்சத் தோன்றியது.

 

யவன வீரர்களும் முன்பு கேள்விப்பட்ட கதையே வேறு இன்று இவன் சொல்லும் கதையே வேறு என்று திகைத்தாலும் யூடெமஸ் சொல்வது போல் புருஷோத்தமன் இறப்பதால் யூடெமஸுக்கு என்ன இலாபம் என்று தோன்றியது. யூடெமஸ் சொல்லியிருப்பது போலத் தான் நடந்திருக்கும் என்று நம்பவும் தோன்றியது. எதிரிகள் சதி செய்து யூடெமஸின் மீது பழி சுமத்தி படையெடுத்தும் வருவது அநீதியின் உச்சம் என்று தோன்றியது. அவர்கள் எழுச்சியுடனும், உறுதியுடனும் “நிரூபிப்போம்” என்று ஒன்றுசேர்ந்து உச்சக் குரலில் கத்த யூடெமஸ் புன்னகைத்தான். யாரையும் ஏமாற்றுவது கஷ்டமான காரியம் அல்ல என்று தோன்றியது. முயன்றால் அவனும் ஒரு அலெக்ஸாண்டர் ஆக முடியும் என்ற நம்பிக்கை பிறந்தது.

 

புஷ்கலாவதியில் யூடெமஸ் தன் வீரர்களிடம் அவிழ்த்து விட்டிருக்கும் புதுக் கதையை ஒற்றன் வந்து சொன்ன போது மலயகேது கடுங்கோபம் அடைந்தான். இளம் வயதானதாலும், வாழ்க்கையின் நிதர்சன அனுபவங்கள் இல்லாமையாலும் இது போன்ற அயோக்கியத்தனங்களைப் பார்த்திராததால் அவன் ஆத்திரத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தவித்தான். ஆனால் சந்திரகுப்தன் அதில் ஆத்திரப்பட எதுவும் இல்லை என்பது போலவே இருந்தான். அவன் மலயகேதுவிடம் சொன்னான். “உன் ஆத்திரத்தைப் போர்க்களத்தில் காட்டுவதற்காகப் பத்திரப்படுத்திக் கொள். எதையும் தகுந்த இடத்தில் வெளிப்படுத்துவது தான் புத்திசாலித்தனம்.”

 

மலயகேது அந்த அறிவுபூர்வமான வார்த்தைகளில் இருந்த உண்மையை உணர்ந்து ஓரளவு அமைதியானான். சந்திரகுப்தனிடமிருந்து கற்க இன்னும் நிறைய இருக்கின்றன...

 

சந்திரகுப்தன் மலயகேதுவிடம் சொன்னான். “போரில் வீரர்கள் தங்கள் தலைவன் சொன்னது போல் போரிடக் கடமைப்பட்டவர்கள் என்றாலும் அவர்கள் போர் புரியும் உக்கிரம் போரின் நோக்கத்தைப் பொருத்தே பெரும்பாலும் அமையும். தங்களையும் தங்கள் பெருமைகளையும், தற்காத்துக் கொள்ளப் போரிடும் போதும், நியாயத்திற்காகப் போரிடும் போதும் அவர்கள் கூடுதல் வீரத்தோடு போரிடுகிறார்கள். அதனால் யூடெமஸ் அவர்களை உற்சாகப் படுத்த ஒரு கதை சொல்லியிருக்கிறான். அவனைப் பொருத்த வரை அதுவே புத்திசாலித்தனம்...”

 

இந்திரதத் சொன்னார். “நாம் நம் பங்குக்கு கேகயத்தில் நடந்த சதியை சில யவன வீரர்கள் மூலம் முன்பே அங்கு கசிய விட்டிருக்கிறோம். அது அவனுக்குத் தெரிந்திருக்கும். அதனால் ஒரு மாற்றுக் கதையை உருவாக்க வேண்டிய அவசியம் அவனுக்கு வந்திருக்கிறது”

 

மலயகேது கேட்டான். “அப்படியானால் உண்மையை அவன் வீரர்கள் எப்படித் தெரிந்து கொள்ள முடியும்?”

 

சந்திரகுப்தன் புன்னகையுடன் சொன்னான். “நாம் நம் வழியில் ஆணித்தரமாகப் புரிய வைப்போம் கவலைப்படாதே”

 

(தொடரும்)

என்.கணேசன் 



Monday, May 27, 2024

யோகி 51

சுகுமாரனுக்கு பாண்டியனின் எகத்தாளத்தை ரசிக்க முடியவில்லை. அவர் வெடித்தார். “நோய் எப்படி வந்துச்சுன்னு நீங்க கேட்டா என்னால தெளிவாய் சொல்ல முடியும். ஆவி எப்படி வந்துச்சு, ஏன் லேட்டா வந்துச்சுன்னு கேட்டா எனக்கென்ன தெரியும்? அதெல்லாம் உங்க மாதிரி ஆளுகளோட சமாச்சாரம்...” சொல்லச் சொல்ல, பாண்டியன் சுடுகாட்டுக்குப் போயும் ஆவியைப் பார்க்க முடியவில்லை என்று சொன்னது நினைவுக்கு வந்தது. அதனால் தொடர்ந்து சொன்னார். ”யோகிஜியைக் கேட்டுப் பாருங்க. ஆனா நான் பாத்ததும், என் அனுபவமும் நிஜம்...”

 

பாண்டியன் லேசான புன்னகையுடன் சொன்னார். “சரி நான் எங்க கிராமத்துல பார்க்க முடியாத ஆவியை உங்க வீட்டுலயாவது பார்க்க முடியுதான்னு பார்ப்போம். நான் உங்க வீட்டுக்கு இப்பவே வரேன். சரியா?”

 

பாண்டியன் உடனடியாக வீட்டுக்கு வரச் சம்மதித்தவுடன் சுகுமாரன் சற்று நிம்மதியை உணர்ந்தார். ”வாங்க. என் கார்லயே போவோம்என்று சொன்னபடி எழுந்தார்.

 

பாண்டியன் சொன்னார். “பரவாயில்ல டாக்டர். நான் என் கார்லயே வர்றேன். எப்படியும் திரும்பி வரணுமே. உங்க கார்ல வந்தா திரும்பவும் இங்கே என்னைக் கொண்டுவந்து விட நீங்க வரணும். இல்லைன்னா நான் டாக்ஸி புக் செய்யணும்...”

 

சுகுமாரனுக்கு அவர் சொல்வதும் சரியென்றே பட்டது. இருவரும் சேர்ந்து வெளியே வந்த போது லேசாக விடிய ஆரம்பித்திருந்தது. சுகுமாரன் மனதில் ஒரு சந்தேகம் மெல்ல எழுந்தது. “நாம எங்க வீட்டுக்குப் போய் சேர்றதுக்குள்ளே விடிஞ்சுடும். அந்த நேரத்துல ஆவி இருக்குமோ, இருக்காதோ.”

 

பாண்டியன் அதிகம் சிரிக்கும் நபர் அல்ல. அதுவும் யோகாலயத்தில் வந்து செட்டிலான பிறகு சிரிக்கும் சந்தர்ப்பங்கள் மிகவும் குறைந்து விட்டன. சிரிப்பது மட்டுமல்லாமல் அவர் புன்னகைப்பதும் கூட அத்தி பூத்தாற் போல சில சமயங்களில் தான். ஆனால் இந்த டாக்டர் பேசுவதைக் கேட்கும் போது சிரிக்காமலிருப்பதற்கு கடும் முயற்சி எடுக்க வேண்டியிருந்தது. சிரித்தால் மனிதர் டென்ஷனாகி விடுகிறார்...

 

பாண்டியன் புன்னகையின் சுவடும் கூட இல்லாமல் கேட்டார். “ஏன் பகல்ல ஆவி எங்கேயாவது போயிடுமா என்ன?” 

 

பாண்டியனின் கேள்வியில் தொனித்த ஏளனத்தை சுகுமாரன் மறுபடியும் உணராமல் இல்லை. ‘கண்டவனெல்லாம் என்னைக் கேலி செய்யும் நிலைமை வந்து விட்டதேஎன்று அவர் மனம் நொந்தாலும் அதை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ள வழியில்லை. கோபத்தை அடக்கிக் கொண்டு அவர் சொன்னார். “அதான் சொன்னேனே, நானும் ஆவி எக்ஸ்பர்ட் அல்ல. இந்த அனுபவம் நேத்து ராத்திரி வராம இருந்திருந்தால்  நானும் கேலியாய் தான் பேசியிருப்பேன். எல்லாரும் ராத்திரில தான் ஆவி நடமாட்டம் அதிகமாய் இருக்கிறதாய் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கேன்.  பகல்ல என்ன நிலைமைன்னு போய்ப் பார்த்தால் தான் தெரியும்

 

பாண்டியன் சிரிக்காமல் சொன்னார். “சரி டாக்டர் போய்ப் பார்ப்போம். ஒருவேளை பகல்ல அதைச் சந்திக்க முடியாட்டி, ராத்திரில ஆவியை சந்திக்கறதுக்காகவே திரும்பவும் இன்னொரு தடவை உங்க வீட்டுக்கு வர்றேன், சரியா?’

 

தேங்க்ஸ்என்று சுகுமாரன் சொன்னார். ’அந்த ஆவி பகலிலும் இவன் கண்ணிலும் தென்பட வேண்டும்என்று அவர் ஆசைப்பட்டார். ’இப்போது அங்கு போனவுடன் அவள் ஆவி இவன் கண்களில் தென்படாவிட்டால் இவன் ராத்திரி வரைக்கும் சந்தேகப்பட்டுக் கொண்டே தான் இருப்பான்.’ என்று அவர் எண்ணினார். ராத்திரி வரை நிம்மதியாக அவராலும் இருக்க முடியாது. அவர் மனைவியும், மகளும் நாளை சாயங்காலம் வருகிறார்கள். அதற்குள் இந்த ஆவி சமாச்சாரத்தை முடித்து வைக்கா விட்டால் பெரிய பிரச்சினையாகி விடும். மனைவியையும், சைத்ராவின் ஆவியையும் ஒரே சமயத்தில் சமாளிப்பது முடிகிற காரியமல்ல

 

ஷ்ரவனுக்கு யோகாலயத்திலிருந்து பாண்டியனும், சுகுமாரனும் தனித்தனி கார்களில் கிளம்பிப் போகும் தகவல் கிடைத்தது. அவர்கள் போகும் தெருக்களை வைத்துப் பார்க்கையில் சுகுமாரனின் வீட்டுக்குத் தான் போகிறார்கள் என்பது புரிந்தது.  சுகுமாரன் வீட்டில் இரவில் சுமார் பத்து மணியளவில் இருந்து சுகுமாரன் வீட்டு நாய் விடாமல் குரைத்துக் கொண்டிருந்ததும், சுகுமாரன் போன பின்பும் அது தொடர்ந்ததும் ரகசியக் கண்காணிப்பாளர்கள் மூலம் அவனுக்குத் தெரிய வந்தது.  தீப்பற்ற வைத்த காவித்துணி வெளியே இருந்து வீசப்பட்டதும், சிறிது நேரத்தில் சுகுமாரனும், நாயும், வெளியேறி விட்டதும். அதன் பின் நடந்ததும் கூட அவனுக்குத் தெரிவிக்கப்பட்டன.

 

பரசுராமன் தனது மந்திரவாத சக்தியால் இந்த பெருங்காரியத்தை எப்படி செய்திருக்கிறார் என்பது அவனுக்குத் தெரியவில்லை. அவன் கடிகாரத்தைப் பார்த்தான். மணி 5.47.

 

ஷ்ரவன் பரசுராமனுக்குப் போன் செய்தான்.  குட்மார்னிங் சுவாமிஜி.  நான் உங்களைத் தொந்தரவு செய்யலையே

 

பரசுராமன் அன்பாகச் சொன்னார். “இல்லை ஷ்ரவன் சொல்லு.”

 

உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல. சைத்ரா கேஸ்ல இதுவரைக்கும் எல்லாமே கிணத்துல போட்ட கல்லு மாதிரி அசையாம இருக்குதேன்னு யோசிச்சுகிட்டு இருந்தோம். உங்க முயற்சியால இப்ப கல்லுகளும் நகர ஆரம்பிச்சிருக்கு. டாக்டர் சுகுமாரன் இன்னைக்கு காலைல 4.05 க்கு யோகாலயம் போய்ச் சேர்ந்திருக்கார். 5.30 மணிக்கு அங்கேயிருந்து அவரும், யோகாலயம் மேனேஜர் பாண்டியனும் கிளம்பி சுகுமாரன் வீட்டுக்குப் போய்கிட்டு இருக்காங்க. இன்னும் அரை மணி நேரத்துல அவங்க சுகுமாரன் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்துடுவாங்கன்னு நினைக்கிறேன்... இந்தக் கொலைகள்ல பாண்டியனுக்கும் பங்கிருக்குங்கறது நமக்குத் தெரிஞ்சிடுச்சு.”

 

நல்லது ஷ்ரவன்

 

சுவாமிஜி. அடுத்ததா நாங்க செய்ய வேண்டியது எதாவது இருந்தா சொல்லுங்க.”

 

பரசுராமன் யோசித்து விட்டுச் சொன்னார். “முடிஞ்சா அந்த மேனேஜர் பாண்டியன் உபயோகப்படுத்திகிட்டிருக்கற எதாவது பொருளை எனக்கு அனுப்பி வெச்சா நல்லது. அவனோட வியர்வை அல்லது எச்சில் இருக்கற மாதிரி பொருள்களோ, அல்லது, அடிக்கடி பயன்படுத்திகிட்டு இருக்கற பொருளாகவோ இருந்தால் ரொம்ப நல்லது.”

 

சரி சுவாமிஜி. சின்ன வாய்ப்பு கிடைச்சாலும் இன்னைக்கே எங்க ஆளுக செய்துடுவாங்க. ஆனா அந்த மேனேஜர் எத்தனை நேரம் அங்கே இருப்பார்னு தெரியல. இப்ப சுகுமாரன் வீட்டு கிட்ட முடியாட்டி வேற இடங்கள்ல முயற்சி செய்யச் சொல்றேன்.”

 

பரசுராமன் சொன்னார். “நான் ரெண்டு நாள்ல துபாய் போறேன் ஷ்ரவன். அங்கிருந்து மற்ற நாடுகளுக்கெல்லாம் போய் நான் திரும்பி வர்றதுக்கு மூனு மாசமாயிடும். அதனால நாளைக்குள்ளே முடிஞ்சா நல்லது.”

 

ஷ்ரவன் உறுதியாய் சொன்னான். “இப்ப முடியாட்டியும் நாளைக்குள்ளே வேலை முடிஞ்சுடும் சுவாமிஜி

 

ஒரு முக்கியமான விஷயம். அது நான் முதல்ல சுகுமாரன் விஷயத்துல சொன்னதே தான். பாண்டியனோட பொருளை எடுக்கறவங்க முடிஞ்ச வரைக்கும் அதை அதிகம் தொடாமல் இருக்கறது நல்லது. அதாவது பாண்டியனோட அலைவரிசைகள் தான் அந்தப் பொருள்ல அதிகம் இருக்கணும். எடுக்கறவங்க அலைவரிசை அதுல எவ்வளவு குறைவாய் இருக்கோ அவ்வளவு நல்லது.”

 

புரிஞ்சுது சுவாமிஜி.”

 

அதை எடுத்தவுடனே எனக்குச் சொல்லு ஷ்ரவன். நான் சொல்ற நேரத்துல இங்கே அது வந்து சேர்ந்தா நல்லது.”

 

ஷ்ரவன் சரியென்றான்.

 

சுகுமாரனும், பாண்டியனும் சுகுமாரன் வீட்டைச் சென்றடைந்த போது மணி 6.20. அப்போது நன்றாக விடிந்திருந்தது. கூர்க்கா வெளி கேட்டைத்  திறந்தாலும் கூட சுகுமாரன் காரை உள்ளே நிறுத்தாமல் வெளியிலேயே நிறுத்தினார். உள்ளே ஆவி நிலவரம் என்ன என்பது தெரியாமல் அவர் உள்ளே காரை நிறுத்த விரும்பவில்லை. அவசரமாகக் கிளம்ப வேண்டுமென்றால் அது இம்சையாகி விடலாம்.

 

பாண்டியனும் தன் காரை சுகுமாரனின் காருக்குப் பின்புறமாக நிறுத்தினார்.  தனதருகே இருந்த டவலில் முகத்தைத் துடைத்தபடி, டாக்டர் என்ன செய்கிறார் என்று பார்த்தார்.

 

சுகுமாரன் கேட் அருகே நின்றபடி தோட்டத்தை எட்டிப் பார்த்தார். நேற்று முதல் முதலில் காட்சி அளித்த இடத்தில் சைத்ராவின் ஆவி இப்போது தெரியவில்லை.  விடிந்தவுடன் போய் விட்டதா, இல்லை, இன்னமும் வீட்டுக்குள் தான் இருக்கின்றதா, இல்லை, தோட்டத்தில் வேறெங்காவது உலாவிக் கொண்டு இருக்கிறதா என்பது தெரியவில்லை.   அது போய் விடாமல் வீட்டுக்குள்ளேயோ, தோட்டத்திலேயோ இருந்தால் நல்லது என்று அவர் எண்ணினார். இருப்பது மட்டுமல்லாமல் பாண்டியன் கண்ணுக்கும் தெரிய வேண்டும். அப்படி பாண்டியனுக்குத் தெரியாமல் அவருக்கு மட்டும் தெரிந்தால் அவர் பார்த்து பயந்து கொண்டேயிருக்க, இந்தப் பைத்தியக்காரப் பாண்டியன்எங்கே, எங்கே?” என்று எகத்தாளமாகக் கேட்டுக் கொண்டே இருக்கும் வாய்ப்பும் இருக்கிறது. ’சே, இந்த ஆவியைக் காட்டுவதில் கூட எத்தனை சிக்கல்! நாசமாய் போன ஆவியே, எனக்குக் கொடுத்த தரிசனத்தை இந்த ஆளுக்கும் தாயேன்.’


(தொடரும்)

என்.கணேசன்





Thursday, May 23, 2024

சாணக்கியன் 110


யூடெமஸின் படைத்தலைவன் தன் பார்வையை யூடெமஸ் மீது வைத்திருந்தால் சிரிப்பைக் கட்டுப்படுத்துவது மிகவும் கஷ்டம் என்று உணர்ந்து தலையைக் கவிழ்த்துத் தரையைப் பார்க்க ஆரம்பித்தான். யூடெமஸுக்கு அவன் பேச்சில் இருக்கும் நியாயத்தை உணர்ந்து தான் படைத்தலைவன் சோகத்துடன் தலையைக் கவிழ்த்துக் கொண்டு அமர்ந்து இருக்கிறான் என்று தோன்றியது. அவனைப் புரிந்து கொண்டு அவன் பக்கம் யோசிக்கவும் ஆட்கள் இருக்கிறார்கள் என்பது அவனுக்கு மிகவும் ஆறுதலாய் இருந்தது.

 

அவன் ஓரளவு அமைதியடைந்து ஒற்றனிடம் கேகயத்திலிருந்து வரும் படை குறித்த தகவல்களை விசாரிக்க ஆரம்பித்தவுடன் படைத்தலைவன் மெள்ளத் தலையை உயர்த்தி அந்த விவரங்களை உள்வாங்க ஆரம்பித்தான். இரண்டு படைகளையும் சேர்த்துப் பார்த்தால் கூட அவர்கள் படைபலம் சரிசமமாகத் தான் இருந்தது. அவர்களுடைய படைவீரர்கள் முழுமனதுடன் தீவிரமாகப் போரிட்டால் வெற்றி பெறுவது முடியாததல்ல. ஆனால் படைவீரர்களில் பலரும் நியாயம் தங்கள் பக்கம் இல்லை என்று உணர்ந்து தங்களுக்குள் பேசிக் கொண்டதை அவனால் கேட்க முடிந்தது.   

 

சற்று முன் ஒற்றன் கேகயத்தில் இருக்கும் யவன வீரர்கள் எண்ணப் போக்கைச் சொன்னது போலத் தான் இங்குள்ளவர்கள் எண்ணப் போக்கும் இருந்தது. யூடெமஸ் செய்த எதுவும் சத்ரப் என்ற உயர்ந்த பதவியில் இருக்கும் ஒருவன் செய்யத் தகுந்ததல்ல என்று இவர்களும் அபிப்பிராயப் பட்டார்கள். அதனால் கேகயம் எதிரி சந்திரகுப்தனுடன் சேர்ந்து கொண்டதை இவர்களால் பெருங்குற்றமாக நினைக்க முடியவில்லை. அது குற்றமானாலும் அதைச் செய்யத் தூண்டியது யூடெமஸ் என்பது தான் இங்குள்ள வீரர்கள் எண்ணமாக இருந்தது. அதனால் எந்த அளவு எழுச்சியோடு இவர்கள் போர் புரிவார்கள் என்று தெரியவில்லை.

 

அலெக்ஸாண்டர் தலைமையில் அவனும் இங்குள்ள வீரர்களும் எத்தனையோ முறை போராடியிருக்கிறார்கள். போர்க் காலங்களில் அலெக்ஸாண்டர் அதிக நேரம் போர் வீரர்களுடன் தான் கழிப்பான். அவன் போர் புரியும் விதமும், அவனுடைய யுக்திகளும் சிறப்பாக இருக்கும். வெற்றியை ஒவ்வொரு வீரனின் தனிப்பட்ட வெற்றியாக அவன் உணர வைப்பான்.  அதனாலேயே ஒவ்வொருவரும் தீவிரமாகப் போராடுவார்கள். ஆனால் இப்போது ?

 

யூடெமஸ் படைத்தலைவனிடம் கேட்டான். “உன் அபிப்பிராயம் என்ன படைத்தலைவனே?”

 

இந்தப் பைத்தியக்காரனிடம் உண்மையான கருத்துகளைச் சொல்வது தனக்கு ஆபத்து என்று உணர்ந்த படைத்தலைவன்  சொன்னான். “அவர்கள் இரண்டு படைகளும் சேர்ந்தால் கூட நம்மால் அவர்களை வென்று விட முடியும் சத்ரப்”

 

யூடெமஸ் அதைக் கேட்டு உற்சாகமடைந்தான். அவன் பெருமையுடன் சொன்னான். “நம்மிடம் இருக்கும் யானைப்படையும் நமக்குக் கூடுதல் பலம். கேகயத்திலும் இத்தனை யானைகள் இருந்தாலும் கூட, அத்தனையும் ஓட்டி வருவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக அவர்கள் மிகவும் குறைந்த அளவு யானைப்படையோடு தான் வருகிறார்கள்”

 

’இந்த யானைகள் தான் உன் இத்தனை பிரச்னைகளுக்கும் காரணம் முட்டாளே’ என்று மனதிற்குள் படைத்தலைவன் கத்தினாலும் வாய்விட்டு எதுவும் சொல்லாமல் தலையை அசைத்தான்.

 

யூடெமஸ் சொன்னான். “நாம் அவர்களை எங்கே சந்திப்பது நமக்கு சாதகமாக இருக்கும் என்று நினைக்கிறாய்?”

 

படைத்தலைவன் மூன்று இடங்களைச் சொன்னான். அதில் இரண்டு இடங்களில் இருக்கும் பாதகங்களைச் சுட்டிக் காட்டி ஒரு இடத்தை யூடெமஸ் தேர்ந்தெடுத்தான். போர் யுக்திகள், வியூகங்கள் பற்றிப் பேசும் போது அந்த அறிவில் அவனிடம் எந்தக் குறையையும் படைத்தலைவனால் காண முடியவில்லை.

 

போரிடும் இடத்தைத் தேர்ந்தெடுத்து, அந்த இடத்திற்கு எதிரிப்படைகள் வந்து சேர எவ்வளவு நாட்கள் ஆகும் என்பதையும் கணக்கிட்டு அதற்கேற்றபடி போருக்குத் தேவையான ஏற்பாடுகள் செய்வதிலும் ஒருமித்த தீர்மானத்தை அவர்கள் எட்டிய பின் படைத்தலைவன் கேட்டான். “நம் வீரர்களிடம் நீங்கள் எப்போது பேசுகிறீர்கள் சத்ரப்?”  

 

அலெக்ஸாண்டர் ஆரம்பித்து வைத்த அந்த சம்பிரதாயத்தை யூடெமஸால் மறுக்க முடியவில்லை என்றாலும் அதுவரை வேகமாகத் தெளிவாகவும், ஆணித்தரமாகவும் முடிவெடுத்து வந்தது போல் சட்டென அவனால் சொல்ல முடியவில்லை. சற்றுத் தயங்கி மெல்லச் சொன்னான். “நாளை பேசுகிறேன்.”

 

விளைவுகளைப் பற்றி முழுமையாக யோசிக்காமல் ஏதோ ஒரு வேகத்தில் பைத்தியக்காரத்தனமாய் செயலைச் செய்து விட்டு இப்போது தடுமாறும் யூடெமஸைப் பார்க்கையில் படைத்தலைவனுக்கு ஒரு கணம் பாவமாக இருந்தது. சற்று முன்பு அறிவுபூர்வமாக போர் வியூகங்களை அலசிய யூடெமஸைப் பார்த்து சிறிது நேரத்துக்கு முன் உள்ளுக்குள் சிரித்தது போல் இப்போது படைத்தலைவனால் சிரிக்க முடியவில்லை.

 

அலெக்ஸாண்டர் எழுப்பிய உற்சாகத்தை யூடெமஸும் வீரர்களிடம் எழுப்ப முடிந்தால் வெற்றி நிச்சயம். ஆனால் ஒற்றனிடம் முன்பு பேசியது போல் அவர்களிடமும் யூடெமஸ் பேசுவானானால் வெற்றி சந்தேகமே! அதைச் சூசகமாகவாவது அவனால் சொல்லாமலிருக்க முடியவில்லை. “வெற்றியைப் பல விஷயங்கள் தீர்மானிக்கின்றன என்றாலும் போரிடும் வீரர்கள் மனநிலை அதில் மிக முக்கியமானது என்று எப்போதுமே சக்கரவர்த்தி அலெக்ஸாண்டர் சொல்வார். அதனால் தான் வீரர்களிடம் பேசுவது பற்றி நினைவுபடுத்தினேன்” என்று சொல்லி அவன் விடைபெற்றான்.

 

ந்திரகுப்தனுடனான முதல் சந்திப்பு மலயகேதுவுக்கு மறக்க முடியாததாய் இருந்தது. உற்சாகம், வீரம், புத்திசாலித்தனம், நற்பண்புகளின் மொத்த உருவமாக சந்திரகுப்தன் அவனுக்குத் தெரிந்தான். முதல் சந்திப்பிலேயே இருவரும் நண்பர்களாகி விட்டார்கள். அதைக் கண்ட இந்திரதத் மகிழ்ந்தார். முடிசூடியவுடன் போருக்குக் கிளம்பியிருக்கும் மலயகேது மீது அவருக்கு ஒரு தந்தையின் பாசம் இருந்தது. முன்னொரு போரில் சகோதரர்களை இழந்து, யூடெமஸின் சதியால் தந்தையையும் இழந்து ராஜ்ஜிய பாரத்தைச் சுமந்த கையோடு போருக்கும் கிளம்பியிருக்கும் மலயகேது சந்திரகுப்தனிடம் ஒரு சகோதரனைப் பார்ப்பது போல் உணர்ந்தான்.

 

இந்திரதத் அவருடைய நண்பரான சாணக்கியர் பற்றியும், சாணக்கியரின் புகழ் பெற்ற மாணவனான சந்திரகுப்தன் பற்றியும் பெருமையாக நிறைய ஏற்கெனவே சொல்லியிருந்தார்.  சிலவற்றை எல்லாம் கேட்கும் போது மலயகேதுவுக்கு இந்திரதத் மிகைப்படுத்திச் சொல்வது போல் தோன்றியும் இருக்கிறது. ஆனால் சந்திரகுப்தனைப் பார்த்த பிறகு எதுவும் மிகையல்ல என்று அவனுக்குப் புரிந்தது. மாணவனைப் பற்றிக் கேள்விப்பட்டது எதுவும் மிகையல்ல என்றால் ஆசிரியரின் பெருமைகளிலும் மிகைப்படுத்துதல் இருக்காது என்று மலயகேது முடிவுக்கு வந்தான்.

 

இரண்டு படைகளும் சந்தித்துக் கொண்ட இடத்திலிருந்து சேர்ந்து பயணித்தார்கள். வழி நெடுக சந்திரகுப்தனைப் பார்த்து மலயகேது நிறைய கற்றுக் கொண்டான். சந்திரகுப்தன் தன் வீரர்களுடன் ஒரு நண்பனைப் போல் பழகியதை அவன் பார்த்தான். அவன் தந்தை வீரர்களை மிகவும் மதிப்போடும், கௌரவத்தோடும் நடத்தினாலும் கூட இப்படி சகஜமாகப் பழகியதில்லை. ஆரம்பத்திலிருந்தே அரசகுமாரனாகவும், பின் அரசனாகவும் அவர் இருந்தது காரணமாக இருக்கலாம் என்று தோன்றியது.

 

அவன் சந்திரகுப்தனைப் பார்த்து பிரமித்த ஒரு விஷயம் இருந்தது. ஒரு வேலையில் முழுமையாக ஈடுபட்டு அதைச் செய்து கொண்டிருந்தாலும் கூடச் சுற்றிலும் என்ன நடக்கிறது என்ற பிரக்ஞை சந்திரகுப்தனுக்கு இருந்தது அவனை ஆச்சரியப்படுத்தியது. அந்த வேலையைச் செய்து கொண்டே சந்திரகுப்தன் அனாயாசமாக மற்ற வேலைகள் குறித்து மற்றவர்களுக்கு நினைவுபடுத்தவும், அவர்களை வழிநடத்தவும் செய்தான். ஒருவன் ஒரே சமயத்தில் இத்தனை விஷயங்களில் கவனம் வைக்க முடியுமா என்று மலயகேது சந்திரகுப்தனிடம் வெளிப்படையாகவே வியந்த போது சந்திரகுப்தன் சிரித்துக் கொண்டே சொன்னான். “நீ என் ஆச்சாரியரைச் சந்திக்கவில்லை. அதனால் தான் என்னைப் பார்த்து ஆச்சரியப்படுகிறாய்.”

 

மலயகேது வியப்புடன் பார்க்க சந்திரகுப்தன் சொன்னான். “சில சமயங்களில் அவருக்குப் பல கண்கள், பல காதுகள், திவ்ய சக்திகள் இருப்பதாக எனக்குத் தோன்றும். அவரைச் சுற்றி நடப்பது மட்டுமல்லாமல் அப்படியே தொடர்ந்து நடந்தால் எது எப்படி முடியும் என்றெல்லாம் கூட ஆருடம் சொல்வார். மாற்ற வேண்டியதை உடனே மாற்றி விடுவார். உன் அமைச்சரைக் கேள். அவர் நண்பரைப் பற்றி இன்னும் நிறைய சொல்வார்”

 

மலயகேது இந்திரதத்தைப் பார்க்க இந்திரதத் பெருமையுடன் சொன்னார். “எல்லாவற்றைப் பற்றியும் எந்த நேரத்திலும் சிந்தித்து முடிவுகளை எட்டக் கூடியவன் என் நண்பன். நாமெல்லாம் அடுத்த கட்டத்தைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கையில் அவன் அதற்கும் ஐந்து கட்டங்கள் தாண்டி யோசித்து ஒரு தெளிவுக்கு வந்திருப்பான். இறைவன் அறிவுப் பொக்கிஷம் முழுவதையும் அவன் ஒருவனிடமே கொடுத்து வைத்திருக்கிறார் என்று எனக்குச் சில சமயங்களில் தோன்றும்...”

 

மலயகேது ஆச்சாரியரை இது வரை பார்த்திராதது தன் துர்ப்பாக்கியம் என்று நினைத்தான். அப்படிப்பட்ட ஒரு மனிதரிடம் இளம் வயதிலேயே கற்க முடிந்தது சந்திரகுப்தனின் பேரதிர்ஷ்டமாக அவனுக்குத் தோன்றியது.

 

யூடெமஸ் தன் படைகளுடன் எங்கு காத்திருக்கிறான் என்ற தகவல் அவர்களுக்குக் கிடைத்தது. அவனிடமிருக்கும் படைகள் குறித்த விவரங்களும் ஒற்றர்கள் மூலம் அவர்களுக்குக் கிடைத்தன. அதற்கேற்றபடி என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று சந்திரகுப்தன் புத்திசாலித்தனமான யுக்திகளை எல்லாம் சொல்ல கூர்ந்து கேட்டு மனதில் பதித்துக் கொண்ட மலயகேது சந்திரகுப்தனிடம் சொன்னான். “நண்பனே நான் ஆசைப்படுவது ஒன்றே ஒன்றுக்குத் தான். யூடெமஸ் என் கையால் மரணமடைய வேண்டும். நான் அதைச் செய்யாமல் என் தந்தையின் ஆத்மா சாந்தியடையாது என்று மனப்பூர்வமாக நம்புகிறேன். அதற்கான வாய்ப்பை மட்டும் எனக்கு ஏற்படுத்திக் கொடு. அது முடிந்து நான் மரணமடைந்தாலும் எனக்கு வருத்தம் இருக்காது...”

 

(தொடரும்)

என்.கணேசன்  

Monday, May 20, 2024

யோகி 50

 

சுகுமாரன் யோகாலயத்துக்குப் போய்ச் சேர்ந்த போது அதிகாலை மணி 4.05. இரண்டாவதுகேட்டையும் தாண்டி பார்க்கிங்கில் காரை நிறுத்தி விட்டுக் கீழே இறங்கிய போது டாமியும் அவருடன் சேர்ந்து இறங்க முயன்றது. “நோ டாமி. நீ இங்கேயே இருஎன்று அன்புடன் அதட்டலாகச் சொன்னார்.

 

டாமி லேசாக உறுமி தன் அதிருப்தியைத் தெரிவித்தாலும், அமைதியாக காரிலேயே அமர்ந்து கொண்டது. ”குட் பாய்என்று சொல்லி விட்டு அங்கே சுற்றிலும் இருந்த சிறிய கட்டிடங்களைப் பார்த்தார். தூரத்தில் ஒரு கட்டிடத்தின் முன்னால் நின்றிருந்த ஒரு உருவம் கையை உயர்த்தி அசைத்தது அரையிருட்டில் மங்கலாகத் தெரிந்தது.

 

இவன் என்ன இந்த நாட்டுக்குப் பிரதமரா? இருக்கற இடத்துல இருந்தே கை ஆட்டறான்...” என்று சுகுமாரன் மனம் பொருமினார். யோகி பிரம்மானந்தா அப்படிச் செய்திருந்தால் அவர் அதைப் பெரிதுபடுத்தியிருக்க மாட்டார். ஆனால் எங்கும், இரண்டாம் நிலை ஆள்கள் அவருக்கு மரியாதை தருவதைக் குறைத்துக் கொண்டால் அவரால் தாங்க முடிவதில்லை. பல்லைக் கடித்துக் கொண்டு அந்த மனிதரை நோக்கி சுகுமாரன் நடக்க ஆரம்பித்தார்.

 

அவர் நெருங்கும் வரை அசையாமல் சிலை போல் நின்று இருந்த அந்த மனிதர், அவர் நெருங்கியவுடன்குட்மார்னிங் டாக்டர்என்று மிகவும் தாழ்ந்த குரலில் சொல்ல, சுகுமாரனும் அதிருப்தியை மறைத்துக் கொண்டுகுட்மார்னிங் பாண்டியன்என்று சொன்னார். 

 

மெல்லப் பேசுங்க டாக்டர். நீங்க வந்திருக்கிறது இங்கே எல்லாருக்கும் தெரிய வேண்டியதில்லைஎன்று பாண்டியன் மறுபடியும் தாழ்ந்த குரலில் சொன்னது சுகுமாரனுக்குப் பிடிக்கவில்லை. ஆனால் பாண்டியன் சொன்னதிலும் தப்பில்லை என்பதும் அவருக்குப் புரிந்தது. ’ஏற்கெனவே இங்கே ஒரு கருப்பு ஆடு இருப்பது இவர்களுக்குத் தெரிய வந்திருக்கிறது. அது சைத்ராவின் அப்பனுக்கு ஒரு மொட்டைக் கடிதம் எழுதியது தான் பெரிய பிரச்சினையாக பின்னர் வெடித்திருக்கிறது. அதனால்  தான் இவன் எச்சரிக்கையாக இருக்கிறான்...’

 

பாண்டியன் அவரை அந்தக் கட்டிடத்திற்குள் அழைத்துச் சென்றார்.  பாண்டியனுக்கு வயது சுமார் ஐம்பது இருக்கும். வெள்ளைச் சட்டையும், வேட்டியும் அணிந்திருந்தார். இதற்கு முன் அவர்களுக்குள் நடந்த இரண்டு சந்திப்புகளிலும் கூட அவர் இதே போல் தான் வெண்ணிற உடையில் இருந்தது சுகுமாரனுக்கு நினைவுக்கு வந்தது. ஆனால் இந்த அதிகாலை சந்திப்பிலும் கூட பாண்டியன் அப்படி இருந்தது வினோதமாய்த் தோன்றியது.

 

தன் அலுவலக அறைக்கு சுகுமாரனை அழைத்துப் போன பாண்டியன் அவரை அமர வைத்து விட்டு அமைதியாகக் கேட்டார். “சொல்லுங்க டாக்டர், என்ன விஷயம்?”

 

சுகுமாரன் பாண்டியனிடம் தன் அனுபவத்தை வரிசையாகவும், விரிவாகவுமே சொல்ல ஆரம்பித்தார். ஆரம்பிக்கும் போதே அவர் சொன்னார். “முதல்ல ஒரு உண்மையை நீங்க புரிஞ்சுக்கணும். நான் நாத்திகன். கடவுளையே நம்பாதவன், பேய், ஆவி, சூனியம் மாதிரியான விஷயங்களை எப்படி நம்புவேன்? அப்படிப்பட்ட எனக்கு நேத்து ராத்திரியிலிருந்தே நம்ப முடியாத அமானுஷ்ய அனுபவம்...”

 

நேற்றிரவு நண்பர் ஒருவர் தந்த விருந்தில் கலந்து கொண்டுவிட்டு வீடு திரும்புவதில் இருந்து ஆரம்பித்த  சுகுமாரன் தன் வயிற்றில் எரிச்சலை உணர்ந்தது, காதில் ரீங்காரம் கேட்டது, வீட்டில் டாமி விடாமல் குரைத்துக் கொண்டிருந்தது எல்லாம் சொல்லி விட்டு வீட்டில் காரை நிறுத்தி இறங்கும் போது சைத்ராவைப் பார்த்ததைச் சொன்னவுடன் பாண்டியனின் உணர்ச்சியில்லாத முகத்தில் கட்டுப்பாட்டையும் மீறி லேசான சிரிப்பு எட்டிப் பார்த்தது.  

 

பாண்டியன் சொன்னார். “நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க டாக்டர். பார்ட்டில ட்ரிங்க்ஸ் சாப்டுருப்பீங்க. காரமாய் எதாவதும் சாப்டிருப்பீங்க. அதோட விளைவுகள் தான் உங்க அனுபவங்கள்னு எனக்குத் தோணுது.”

 

 

சுகுமாரன் பொங்கியெழுந்த கோபத்தை மிகவும் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு சொன்னார். “நான் டாக்டர். அதுவும் நாத்திகன்னும் சொல்லியிருக்கேன். நடக்கிறது எது பிரமை, எது நிஜம்னு எனக்குத் தெரியாதா பாண்டியன்? நான் சொல்றதை முழுசா கேட்டுகிட்டு உங்க அபிப்பிராயம் சொல்லுங்க போதும், சரியா?”

 

பாண்டியன் முகத்தில் சிரிப்பு மறைந்து பழையபடி உணர்ச்சியின்மை தெரிந்தது. தலையை லேசாக அசைத்தார். சுகுமாரன் இங்கே வந்து சேர்ந்தது வரையான தன் அனுபவங்களைச் சொல்லி விட்டுச் சொன்னார். “நான் அந்தக் காட்சியைப் பார்த்த இடத்தைப் பார்த்து தான் டாமியும் குரைச்சான். காவித் துணி எரிஞ்சது எங்களுக்கு மட்டுமல்லாமல் கூர்க்காவுக்கும் தெரிஞ்சுது. நான் வீட்டை விட்டு வந்த பிறகு தானா வயிற்றுல எரிச்சல் குறைஞ்சுது. காதுல கேட்ட ரீங்காரம் குறைஞ்சு போச்சு.”

 

பாண்டியன் தலையை அசைத்தாலும், தன் பழைய சிந்தனை ஓட்டத்தில் இருந்து மாறிவிடவில்லை. இந்த முறை சிறிதும் சிரிப்பில்லாமல் அவர் கேட்டார். “சார் நீங்க சைத்ராவைப் பத்தியே நினைச்சுகிட்டு இருந்தீங்களோ?”

 

சுகுமாரன் கோபத்தில் வெடித்து விடாமல் இருக்க பிரம்மப் பிரயத்தனம் செய்ய வேண்டி வந்தது. ‘இந்த மரமண்டையனுக்கு உண்மையைப் புரிய வைப்பது எப்படி?’ என்ற சலிப்பும் வந்தது. பிரம்மானந்தா மதுரைக்குப் போகாமல் இங்கேயே இருந்திருந்தால் இந்த மரமண்டையனிடம் பேச வேண்டிய துர்ப்பாக்கியம் வந்திருக்காதே என்றும் மனம் சலித்தது. ஒரு பெருமூச்சு விட்ட சுகுமாரன் பாண்டியனைக் கடுமையாகப் பார்த்தபடி சொன்னார். “சைத்ராவை எரிச்ச நாளோட நான் மறந்தாச்சு. நான் பிஸி மேன் பாண்டியன். எனக்கு இந்த சில்லறை விஷயங்களை எல்லாம் நினைக்க நேரம் கிடையாது. அவள் உருவத்தை என் வீட்டுத் தோட்டத்துல நான் பார்க்கிற வரைக்கும் ஒரு தடவை கூட நினைச்சதில்லை, போதுமா?”

 

வர வர பைத்தியங்கள் சமூகத்தில் அதிகமாகி வருகின்றன என்று பாண்டியன் எண்ணிக் கொண்டார். நேற்று அந்த இன்ஸ்பெக்டர், இன்று இந்த டாக்டர். இவர்களுக்குப் பைத்தியம் பிடித்தவுடன் அவரைத் தேடி வருவது தான் பாண்டியனுக்குப் பிரச்சினையாகத் தோன்றியது. இன்ஸ்பெக்டர் செல்வத்திடம் கறாராக நடந்து கொண்டது போல் சுகுமாரனிடம் நடந்து கொள்ள முடியாது என்பதால் பாண்டியன் பொறுமையாகச் சொன்னார்.  நான் ஏழாம் கிளாஸ் வரைக்கும் தான் படிச்சவன் டாக்டர். உங்கள மாதிரி வெளிநாட்டுக்குப் போய்ப் பெரிய படிப்பு படிச்ச ஆளில்லை. எங்க கிராமத்துல எங்கெல்லாம் பேய் உலாவுது, ஆவி தெரியுதுன்னு சொல்றாங்களோ அங்கெல்லாம் நான் ராத்திரி 12 மணிக்குப் போய் அதிகாலை வரைக்கும் பல நாள் காத்திருந்திருக்கேன். ஆனால் எத்தனையோ பேருக்கு காட்சி குடுத்த பேயும், ஆவியும் எனக்கு அந்த பாக்கியத்தை ஒரு தடவையும் குடுத்தது கிடையாது.  அதுக்குன்னு உங்க அனுபவம் பொய்யின்னும் சொல்ல மாட்டேன். இதுல யாரோ உங்க கிட்ட வேணும்னே விளையாடறாங்கன்னு எனக்குத் தோணுது. ஏன்னா மாயா ஜாலத்துல காவித் துணி எரிய வாய்ப்பு இல்லைங்கறதை நானும் ஒத்துக்கறேன். ஆனா பேய், ஆவியோட வேலையா இதை நினைக்கறதை விட எவனோ உங்களை பயமுறுத்த நினைக்கிற முயற்சியா தான் எனக்குப் படுது.”

 

காவித்துணி எரிஞ்சது வேணும்னா அப்படி இருந்திருக்கலாம். எவனோ  துணியில நெருப்பை பத்த வெச்சு வெளியே இருந்து உள்ளே வீசியிருப்பான்னே வெச்சுக்குவோம். ஆனா மத்தது?”

 

பாண்டியன் இந்தப் படித்த முட்டாளுக்கு எப்படிப் புரிய வைப்பது என்று யோசித்தார். ’வெளிநாட்டுச் சரக்கடித்து, கண்டதையும் சாப்பிட்டு வந்த இந்த டாக்டருக்குப் போதையில் தெரிஞ்சதையும், காரத்தைத் தின்னு வயிறெரிஞ்ச சமாச்சாரத்தையும் புரிய வைக்கிறது கஷ்டம் தான். நல்லா பயந்து போயிருக்கற சமயத்துல ஒருத்தனுக்கு நாத்திகமும் உதவாது, படிச்ச படிப்பும் உதவாதுங்கறது இவரைப் பார்த்தாலே தெரியுது. பகுத்தறிவாவது உதவுதான்னு பார்ப்போம்...’.

 

பாண்டியன் பொறுமையாகச் சொன்னார். “சைத்ராவோட ஆவி இங்கே வராம உங்களை மட்டும் தேடி வந்திருக்கிறது எதனாலன்னு நினைக்கிறீங்க டாக்டர்? எங்களை விட அவ ஆவிக்கு உங்க மேல கோபம் அதிகமா, இல்லை பிரியம் அதிகமா? அதை எப்படி எடுத்துக்கறது? அவ செத்து எத்தனை நாளாச்சு? அவ ஆவி இத்தனை நாள் என்ன செஞ்சுகிட்டு இருந்தது? டூர் எதாவது போயிடுச்சா? இத்தனை லேட்டா ஏன் வந்துச்சு?”


(தொடரும்)

என்.கணேசன்