சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, May 13, 2024

யோகி 49

 

மின்சாரம் தாக்கியது போல் உணர்ந்த சுகுமாரன் மின்னல் வேகத்தில் ஓடி வாசற்கதவைத் திறந்து வெளியே வந்து அவசரமாய் கதவைச் சாத்தி தாளிட்டார்

 

தடாலென்று முன் வாசற்கதவு திறக்கப்பட்ட சத்தம் கேட்டு கூர்க்கா எழுந்து நின்று கேட் கம்பிகளுக்கு மேல் தலையை நீட்டிப் பார்த்தான். அவன் முதலாளியும் நாய் குரைக்கும் சத்தம் தாங்காமல் கோபமாய் கதவைத் திறந்து வெளியே வந்திருப்பார் என்று நினைத்தான். ஆனால் அவன் பார்த்த காட்சியோ அவனை ஆச்சரியமூட்டியது. அவன் முதலாளி கையில் ஒரு சிலுவையை வைத்துக் கொண்டு, மூச்சு வாங்கியபடி கதவில் சாய்ந்து நின்றது வேடிக்கையாகவும் இருந்தது. சற்று முன் பார்க்கையில் நெற்றி நிறைய திருநீறு பூசியிருந்த ஆள் இப்போது திருநீறை அழித்து விட்டு கையில் சிலுவையுடன் இந்த நடுநிசி நேரத்தில் இப்படி நிற்பது ஏன் என்று அவனுக்குப் புரியவில்லை. இத்தனைக்கும் அவர் ஆன்மீகவாதி அல்ல... ஒருவேளை எதையாவது பார்த்து பயந்து தான் இப்படியெல்லாம் செய்கிறாரோ? அவர் பயப்படுவதற்குத் தகுந்த மாதிரி தான் இங்கே என்ன என்னென்னவோ நடந்து கொண்டிருக்கிறது. டாமி விடாமல் குரைப்பதும், ஒரு காவித் துணி, தோட்டத்தில் எரிந்து கொண்டிருந்ததும் அமானுஷ்யமாகத் தான் இருக்கிறது. இல்லை, முதலாளிக்குப் பைத்தியம் பிடித்து விட்டதோ? 

 

மூச்சு வாங்க, கண்களை மூடி, வாசற்கதவில் சாய்ந்து நின்ற சுகுமாரன் ஓரளவு நிதானத்துக்கு வந்து கண்களைத் திறந்த போது, கூர்க்கா அவரையே பார்த்துக் கொண்டு நிற்பது தெரிந்தது. அவன் வினோதமாகப் பார்ப்பதைக் கவனித்த பிறகு தான் அவர் இன்னமும் தன் கையில் சிலுவையைப் பிடித்து நிற்பதை உணர்ந்தார். அவன் என்ன நினைத்திருப்பானோ? யோசிக்கையில் அவருக்கு அவமானமாக இருந்தது. மருத்துவமனையிலும் சரி, வீட்டிலும் சரி,  வேலைக்காரர்கள் முன் கம்பீரமாக இருந்து பழகிய அவருக்கு, இப்போது இப்படி கதிகலங்கி காட்சியளிக்க வேண்டிய நிலைமை வந்ததைத் தாங்க முடியவில்லை.    

 

டாமி இப்போதும் கதவைப் பார்த்து குரைத்துக் கொண்டே இருந்தது. அவருக்குத் தலைவலி அதிகமாகியது. வயிற்றில் எரிச்சல் உணர்வும் அதிகமாகியது. காதில் கேட்டுக் கொண்டிருந்த ரீங்காரத்தின் நிலைமை என்ன என்பது, டாமி குரைக்கும் சத்தத்தில் தெரியவில்லை. கிட்டத்தட்ட பைத்தியம் பிடிக்கும் நிலையில் இருந்த அவருக்கு அந்த வீட்டில் இருப்பது இப்போதைக்குப் பாதுகாப்பல்ல என்று தோன்றியது.   கையிலிருந்த சிலுவையை நழுவவிட்டு, வேகமாகச் சென்று காரில் ஏறினார். உடை மாற்றி இருக்காததால், நல்ல வேளையாக அவருடைய கார் சாவி இப்போதும் பாக்கெட்டிலேயே இருந்தது.

 

அவர் காரில் ஏறியதைப் பார்த்து கூர்க்கா அவருக்குப் பைத்தியம் முற்றி விட்டதோ என்று பயப்பட்டான். இந்த நேரத்தில் இவர் எங்கே போகிறார், இந்த நாயை வைத்துக் கொண்டு எப்படி சமாளிப்பது என்ற கவலைகள் அவன் மனதில் எழுந்தன. அவசர அவசரமாக கேட்டைத் திறந்தான். நல்ல வேளையாக நாயும் அவரைப் பின் தொடர்ந்து காரில் ஏறி உட்கார்ந்து கொண்டது. சுகுமாரன் வேகமாகக் காரைக் கிளப்பினார்.

 

நாய் ஜன்னல் வழியாகத் தலையை நீட்டி வீட்டைப் பார்த்துக் குரைத்துக் கொண்டே இருக்க, கார் வெளியேறியது. சுகுமாரன் தாங்க முடியாமல் நொந்து போய் டாமியிடம் சொன்னார். “டேய் நிறுத்துடா. தலை வலிக்குதுடா”. டாமி கருணை காட்டி அமைதியாகி அவரைப் பரிதாபமாகப் பார்த்தது.

 

நடப்பது எதுவும் புரியா விட்டாலும் டாமியின் சத்தத்திலிருந்து விடுபட்டதில் நிம்மதி அடைந்தவனாய் கூர்க்கா கேட்டைச் சாத்தினான். ’போகும் ஆள் எப்போது திரும்பி வருவார் என்று தெரியவில்லை. அவர் வரும் வரை தூங்கவும் முடியாது. ஒட்டு மொத்தத்தில் இன்றைக்கு நேரம் சரியில்லை.’

 

ங்களது வீதியைக் கடந்தபின் சுகுமாரனுக்கு எங்கே போவது என்று தெரியவில்லை. ஒரு ஆவிக்குப் பயந்து வீட்டை விட்டு நடுநிசியில் வெளியே வருவது அவமானமாகத் தான் இருந்தது. ’நியாயமாக அந்த ஆவி யோகாலயத்திற்கு அல்லவா போயிருக்க வேண்டும். என் வீட்டுக்கு வந்து ஏன் இம்சை செய்கிறது? டாக்டர் வாசுதேவன் ஆவி வந்திருந்தாலாவது ஒரு அர்த்தம் இருக்கிறது...’ 

 

காரை ஒரு தெருவில் நிறுத்திய சுகுமாரன் இனி அடுத்ததாய் என்ன செய்வது என்று யோசித்தார். நேற்று வரை கனவிலும் நினைத்துப் பார்த்திருக்காத துர்ப்பாக்கிய நிலை இன்று வந்து விட்டதே என்று மனம் நொந்தார். உடம்புக்கு எதாவது பிரச்சினை வந்தால் நடுநிசியானாலும், போய்ச் சரிசெய்து கொள்வதற்கு ஆஸ்பத்திரிகள் இருக்கின்றன. ஆனால் ஆவிகளால் பிரச்சினை இப்படி நள்ளிரவில் வந்தால் எங்கே போவது, என்ன செய்வது? போவதென்றால் யோகாலயத்துக்குத் தான் போக வேண்டும். என்ன செய்வதென்று அவர்களைத் தான் கேட்க வேண்டும். அவர்களுக்காவது தெரிகிறதோ, இல்லையோ? அங்கே கூட இந்த நள்ளிரவில் பயந்து போய் நிற்பது அவமானமாய்த் தெரிய, அதிகாலையில் அங்கு போய்க் கொள்ளலாம் என்று அவர் முடிவு செய்து, காரிலேயே களைப்புடன் கண்மூடினார்.

 

யாரோ கார்க்கண்ணாடியைத் தட்டும் சத்தம் கேட்டு சுகுமாரன் கண்விழித்தார். தட்டியது ஒரு போலீஸ்காரர். டாமியும் கண்விழித்து அந்தப் போலீஸ்காரரைப் பார்த்து குரைக்க ஆரம்பித்தான். இடது கையால் அவனைத் தட்டிக் கொடுத்து சாந்தப்படுத்தியபடி, சுகுமாரன் போலீஸ்காரரை, ‘என்ன?’ என்பது போல் பார்த்தார்.

 

ஏன் இங்கே காரை நிறுத்தித் தூங்கறீங்க? என்ன பிரச்சினை?”

 

சுகுமாரனுக்கு ஆத்திரம் வந்தது. ’மனிதன் எங்கேயாவது காரை நிறுத்தி உறங்கவும் நாட்டில்  சுதந்திரம் இல்லையா? பிரச்சினையைச் சொன்னால் இந்தப் போலீஸ்காரன் வீட்டுக்கு வந்து ஆவியைப் பிடித்துக் கொண்டு போவானா? ஏனடா ஏற்கெனவே பிரச்சினையில் இருக்கும் மனிதனை நீங்களும் சித்திரவதை செய்கிறீர்கள்?’

 

ஆனால் அப்படி வாய்விட்டுக் கேட்க வழியில்லை. கண்டவனெல்லாம் வந்து விசாரிக்கும் நிலை வந்து விட்டதே என்று மனதிற்குள் புலம்பினாலும், சுதாரித்துக் கொண்டு சொன்னார். ”ட்ரைவிங் பண்ணிட்டு இருந்தப்ப ரொம்ப தூக்கம் வந்துச்சு. வண்டி ஓட்டறதும் சிரமமாய் இருந்துச்சு. அதான்...”

 

அந்தப் போலீஸ்காரர் அவரையே லேசான சந்தேகத்துடன் பார்த்து நின்றார். சுகுமாரனுக்குக் கோபம் வந்தது. ஒன்றும் பேசாமல் தன்னுடைய விசிட்டிங் கார்டை எடுத்து அந்தப் போலீஸ்காரரிடம் நீட்டினார். அதை வாங்கிப் பார்த்த போலீஸ்காரர் ஒரு சல்யூட் அடித்து விட்டு நகர்ந்தார். ஆனால் சுகுமாரனுக்கு அதற்கும் மேல் அங்கே இருப்பது உசிதமாகப் படவில்லை. எரிச்சலுடன் கடிகாரத்தைப் பார்த்தார். நேரம் 3.25 என்று காட்டியது.  விடிவதற்கு முன்பு வீட்டுக்குப் போக அவர் விரும்பவில்லை. இனி இன்னொரு தெருவுக்குப் போய் காரை நிறுத்தி விட்டுத் தூங்க அவருக்கு, தன்மானம் இடம் தரவில்லை.

 

அவர் இப்படி வீட்டில் இருக்க முடியாமல் இரவு முதல் காரில் நகர்வலம் வந்து கொண்டிருக்கையில், சம்பந்தப்பட்டவர்கள் நிம்மதியாக ஏ.சி ரூமில் படுத்துக் கொண்டிருப்பது என்ன நியாயம் என்று தோன்றியது. இனி நேரம் காலம் பார்ப்பதில் அர்த்தமில்லை. அவர் கைபேசியை எடுத்து ஒரு எண்ணை அழைத்தார். ஏழு முறை அடித்த பின் தான் மறுபக்கத்தில் கைபேசி எடுக்கப்பட்டது. தூக்கக் கலக்கத்தில் ஒரு குரல் கேட்டது. “ஹலோ

 

நான் டாக்டர் சுகுமாரன் பேசறேன்.”

 

தெரிஞ்சுது. டாக்டர் இப்ப நேரம் என்ன தெரியுமா?” ஆழ்ந்த தூக்கத்திலிருந்து எழுப்பப்பட்டதன் எரிச்சல் வெளிப்பட்டது.

 

தெரியல. ஆனா நேரம் சரியில்லைன்னு மட்டும் தெரியுதுஎன்று சுகுமாரன் தானும் எரிச்சலுடன் சொன்னார்.

 

என்ன ஆச்சு? நீங்க எதுக்கும் அசர்ற ஆளில்லையே.”

 

சில சமயங்கள்ல எப்படிப்பட்டவனையும் அசர வைக்கிற மாதிரி சம்பவங்கள் நடந்துடுது…”

 

என்ன ஆச்சு?”

 

போன்ல பேச முடியாது. நேர்ல தான் சொல்ல முடியும்.”

 

சரி. அப்படின்னா பத்து மணிக்கு வாங்களேன்.”

 

சுகுமாரனுக்குக் கோபம் வந்தது. ”அது வரைக்கும் நான் என்ன பண்றது? இப்ப நான் வீட்டுல இல்லை. ரோட்டுல இருக்கேன். நான் இப்பவே அங்கே வர்றேன். யோகிஜி இருக்காரா?”

 

இல்லை. அவர் மதுரை போயிருக்கார்.”

 

பரவாயில்லை. நீங்க இருக்கீங்கல்லயா? உங்க கேட்கீப்பர் கிட்ட நான் வர்றதை முதல்லயே சொல்லி வைங்க. அரை மணி நேரத்துல அங்கே இருப்பேன்

 

(தொடரும்)

என்.கணேசன்





Thursday, May 9, 2024

சாணக்கியன் 108

 

லயகேது தன் ஒவ்வொரு படைப்பிரிவையும் தனியாகக் கூட்டிப் பேசினான். புருஷோத்தமன் மரணம் அடைந்த விதம் குறித்த தகவல் அவர்களுக்கு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கவில்லை. உண்மையும், பொய்யும், இரண்டும் கலந்த யூகங்களும் கேள்விப்பட்டு குழப்பமடைந்திருக்கும் அவர்களுக்கு உண்மையை உணர்ச்சி பூர்வமாகத் தெரிவிப்பது அவசியம் என்று சாணக்கியர் இந்திரதத்திடம் சொல்லி அனுப்பி இருந்தார். அவன் உணர்ந்த கோபமும், சோகமும் ஒவ்வொரு வீரனும் உணர்ந்தால் மட்டுமே அவர்களது பரிபூரண ஒத்துழைப்பு கிடைக்கும் என்று அவர் கணித்துச் சொல்லியிருந்தார்.  

 

அனைவரிடமும் புருஷோத்தமன் எப்படி வஞ்சித்துக் கொல்லப்பட்டார் என்று அவன் உணர்ச்சிகரமாக விவரித்த போது அவர்களில் பெரும்பாலானோர் அவன் சோகத்தையும், நிகழ்ந்திருக்கும் அநியாயத்தையும் உணர்ந்து மனம் கொதித்து மனதார அவன் பக்கம் சாய்ந்தார்கள். அந்த அளவு கொதிக்காத மற்றவர்களுக்கும் கூட புருஷோத்தமன் போன்ற மாவீரனை யூடெமஸ் விஷமிட்டுக் கொன்றது அநீதியாகவே தோன்றியது.

 

கேகய வீரர்கள் ஒவ்வொருவரும் தங்கள் மன்னன் மரணத்திற்குப் பழிவாங்கத் துடித்தார்கள். யவன வீரர்கள் உட்பட மற்ற வீரர்களிடம் மலயகேது, தன் தந்தை அலெக்ஸாண்டரிடம் தோற்ற போது கூட அவரை அலெக்ஸாண்டர் மிக மரியாதையாகக் கௌரவத்துடன் நடத்தியதை நினைவுகூர்ந்தான். நண்பன் என்று சொல்லி நட்பு பாராட்டியதைச் சொன்னான். அப்படிப்பட்ட அலெக்ஸாண்டரின் சத்ரப்பான யூடெமஸ் புருஷோத்தமனை வஞ்சித்துக் கொன்றதன் மூலம் அவனை நியமித்த அலெக்ஸாண்டருக்குக் களங்கம் ஏற்படுத்தி விட்டான் என்று மலயகேது குமுறினான்.


சாணக்கியர் இந்திரதத்திடம் சொல்லியிருந்தார். “யவன வீரர்கள் மனதிலும், மற்ற படை வீரர்கள் மனதிலும் யூடெமஸை சத்ரப் என்ற தலைவன் நிலையிலிருந்து அகற்றி அவனைத் தனிமைப்படுத்த வேண்டும். அவர்கள் தங்கள் தலைவனுக்கு எதிராகப் போரிடுவதாக எண்ணாமல் ஒரு குற்றவாளிக்கு எதிராகப் போரிடுவதாக நினைக்க வேண்டும்.”

 

அவர் சொன்னபடியே மலயகேது படைவீரர்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்த முடிந்ததை அருகிலிருந்து பார்த்த இந்திரதத் மனம் குளிர்ந்தது.

 

ந்திரதத் யூடெமஸ் சூழ்ச்சி செய்து விஷமிட்டு புருஷோத்தமனைக் கொன்றதைப் பற்றி  அனுப்பிய புகார் கிடைத்தவுடனேயே ஆம்பி குமாரன் க்ளைக்டஸை வரவழைத்து விசாரித்தான். க்ளைக்டஸுக்கு யூடெமஸின் செயல்கள் எதுவும் சரியாகத் தோன்றா விட்டாலும் கூட யவனனான அவனைக் காட்டிக் கொடுக்க மனம் வரவில்லை.  அதனால் தான் எதையும் பார்க்கவில்லை என்று சொல்லி விட்டான். முந்தைய நாள் இரவு தங்களுடன் பேசிக் கொண்டிருக்கும் வரை புருஷோத்தமன் நன்றாகத் தான் இருந்ததாகச் சொன்னான்.

 

ஆம்பி குமாரன் க்ளைக்டஸைக் கூர்மையாகப் பார்த்தபடி தொடர்ந்து கேட்டான். “நீ பார்க்காத போது யூடெமஸ் மதுவில் விஷம் கலந்திருக்க வாய்ப்பிருக்கிறதா?”

 

க்ளைக்டஸ் சொன்னான். “அதை நானெப்படி சொல்ல முடியும்?”

 

“அவர்களிடம் கேட்காமலேயே யூடெமஸ் யானைகளை ஓட்டிக் கொண்டு போய் விட்டதாகப் புகார் சொல்கிறார்கள். அதுபற்றி உன் கருத்து என்ன க்ளைக்டஸ்?”

 

தன்னை இக்கட்டான நிலையில் மாட்டி விட்டிருக்கும் யூடெமஸை க்ளைக்டஸ் மனதில் சபித்தான்.அதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது சத்ரப்”

 

“நீ உடன் இருக்கும் போது யூதிடெமஸ் புருஷோத்தமனிடம் யானைகளை அழைத்துச் செல்ல அனுமதி கேட்டானா?”

 

“இல்லை…. பின் எல்லா நேரங்களிலும் நான் அவர்களுடனே இருக்கவுமில்லை. என் கவனம் வேறு இடங்களிலும் இருந்தது.”

 

“நீ மொழிபெயர்க்காமல் யூடெமஸ் பேசியது எதுவும் புருஷோத்தமனுக்குப் புரிந்திருக்காதே. அதனால் அனுமதி கேட்பதானால் யூடெமஸ் உன் மூலமாக அல்லவா கேட்டிருக்க வேண்டும்.?”

 

“என் மூலமாகக் கேட்கவில்லை. ஆனால் சத்ரப்பான அவர் தன் அதிகாரத்துக்கு உட்பட்ட பகுதியிலிருந்து யானைகளை அழைத்துச் செல்வதற்கு கேகய அரசனின் அனுமதி தேவையுமில்லையே”

 

“ஆனால் முறை என்று ஒன்று இருக்கிறதல்லவா?”

 

க்ளைக்டஸ் மௌனம் சாதித்தான்.  ஆம்பி குமாரன் யோசித்து விட்டு இது குறித்து அவன் செய்வதற்கு ஒன்றுமில்லை என்று முடிவெடுத்தான். அவர்களுக்கும் மேலே யாராவது இருந்தால் அந்த நபர் தீர்மானிக்க வேண்டிய விஷயம் இது என்று அவனுக்குத் தோன்றியது. சமநிலையில் இருப்பவர்கள் மீது அவன் எப்படி தீர்ப்பு சொல்ல முடியும்?

 

அவன் மேற்கொண்டு கேள்விகள் எதுவும் கேட்காமல் சும்மா இருந்தது க்ளைக்டஸுக்கு நிம்மதி தந்தது. ஆனால் கேகயத்தில் நடக்க ஆரம்பித்த அடுத்த கட்ட நிகழ்வுகள் அவன் மனநிம்மதியை மறுபடியும் குலைத்தன. ஒவ்வொரு தகவலாகத் தெரிய வந்த போது அவன் மனம் குமுற ஆரம்பித்தது. மலயகேது சந்திரகுப்தனுடன் கைகோர்த்துக் கொண்டு யூடெமஸை எதிர்க்கத் துணிந்ததை அவனால் சகிக்க முடியவில்லை. என்ன இருந்தாலும் பிலிப்பைக் கொன்ற பாதகர்களோடு யவன அதிகாரத்துக்கு உட்பட்ட கேகய அரசன் சேர்வது தவறென்று அவன் நினைத்தான். அதை அனுமதிப்பது யவன அதிகாரத்தை அப்பகுதியில் மிக பலவீனப்படுத்தி விடும் என்று அவன் உள்ளுணர்வு எச்சரித்தது.

 

அந்தச் செய்தியைக் கேள்விப்பட்டவுடன் இப்போதைய சத்ரப்பான ஆம்பி குமாரனும் தன்னைப் போலவே குமுறுவான், பதறுவான் என்றெல்லாம் எதிர்பார்த்த க்ளைக்டஸ் ஏமாந்து போனான். ஆம்பி குமாரன் எங்கோ ஒரு மரத்தில் ஏதோ ஒரு கிளை முறிந்தது என்று கேள்விப்பட்டது போல எந்தப் பாதிப்பும் இல்லாமல் இருந்தான்.  

 

க்ளைக்டஸ் ஆம்பி குமாரனிடம் மனத்தாங்கலுடன் சொன்னான். “சத்ரப் யூடெமஸ் தவறே செய்திருந்தாலும் நம் அதிகாரத்தின் கீழ் இருக்கும் கேகயம் நம் எதிரியான சந்திரகுப்தனுடன் சேர்ந்து யூதிடெமஸுக்கு எதிராகப் போருக்குத் தயாராவது பெருந்தவறல்லவா?”

 

“யாரும் ஒருவருக்கு எதிராகத் தவறு செய்து விட்டு பதிலுக்கு அவர்கள் பெருந்தவறு செய்யக்கூடாது என்று எதிர்பார்க்க முடியாது. தவறு செய்பவன் தண்டனைக்கான அனுமதியும் தந்து விடுகிறான். புருஷோத்தமன் போரில் தோற்ற பின்பும் கூட அலெக்ஸாண்டர் பெருந்தன்மையுடன் நடந்து கொண்டிருக்கும் போது அவர் நியமித்த சத்ரப் அதே புருஷோத்தமனை வஞ்சகமாக விஷம் வைத்துக் கொன்றும் விட்டு, பாதிக்கப்பட்டவர்கள் சும்மா இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது அபத்தம்.”

 

வர வர ஆம்பி குமாரன் சாமர்த்தியமாகப் பேசுகிறான் என்று க்ளைக்டஸுக்குத் தோன்றியது. அவன் சொல்வதில் உண்மை இருக்கிறது என்று தோன்றினாலும் கூட யவனர்களுக்கு எதிரான சக்திகள் வலுப்பெறுவதை அவனால் தாங்க முடியவில்லை.  அதனால் சொன்னான். “ஆனால் சத்ரப் யூடெமஸ் தான் புருஷோத்தமனைக் கொல்லவில்லை என்று சொல்கிறாரே?”

 

“பின் யார் கொன்றிருக்க முடியும்? வெளியிலிருந்து அங்கே போனவர்கள் இரண்டே பேர். ஒன்று சத்ரப் யூடெமஸ். இன்னொன்று நீ. யூடெமஸ் கொல்லவில்லை என்றால் நீ கொன்றாய் என்றாகி விடும். இந்தச் செயலை நீ செய்து விடவில்லையே?”

 

க்ளைக்டஸ் பதறிப் போய் மறுத்தான். யூடெமஸின் பைத்தியக்காரத்தனம் எப்படிப்பட்ட நிலைமையில் தன்னையும் இழுத்திருக்கிறது என்று எண்ணி அவன் மனம் வெதும்பிய போது யூடெமஸிடமிருந்து தூதன் அங்கு வந்து சேர்ந்தான். யூடெமஸின் செய்தியை மொழிபெயர்த்துச் சொல்லும் துர்ப்பாக்கியமும் க்ளைக்டஸுக்கு வந்து சேர்ந்தது.

 

ஆம்பி குமாரன் அமைதியாக எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு விட்டு உடனடியாகப் பதிலைத் தூதனிடம் சொன்னான்.

 

“தூதனே! சத்ரப் யூடெமஸுக்கு என் வணக்கங்களைத் தெரிவி. கேகய விவகாரத்தில் என்னைக் கலந்தாலோசித்து சத்ரப் யூடெமஸ் எதையும் செய்யவில்லை. என்னைக் கேட்டுக் கொண்டு அங்கே செல்லவில்லை. என்னைக் கேட்டுக் கொண்டு அங்கே எதையும் செய்யவில்லை. சந்தேகத்திற்கு இடம் தரும் வகையில் அங்கே நடந்து கொண்டதோடு, கேகய மன்னர் இறந்து கிடக்கும் வேளையில் நன்றாக விடியும் வரை கூடப் பொறுத்திருக்காமல் யானைகளைக் கிளப்பிக் கொண்டு சென்றதும் அவர் பதவிக்கு சோபை தருவதாய் நான் நினைக்கவில்லை. இப்படி என்னை எதிலும் கலந்தாலோசிக்காமல், சக்கரவர்த்தி அலெக்ஸாண்டர் தந்த பதவியின் கண்ணியத்திற்கு ஏற்ற வகையில் நடந்தும் கொள்ளாமல் அவராக உருவாக்கிய சிக்கலில் நான் எந்த விதத்திலும் கலந்து கொள்ள விரும்பவில்லை என்று அவருக்குத் தெரிவிப்பாயாக. தனிப்பட்ட வகையில் தேவையில்லாமல் அவர் ஏற்படுத்திக் கொண்ட பிரச்னையை அவர் தனியாகச் சந்திப்பதே சரி…”

 

க்ளைக்டஸ் அதிர்ந்தான். என்ன சொன்னாலும் யூதிடெமஸ் கோரிக்கை விடுத்ததற்காக வேண்டா வெறுப்பாகவாவது படைகளை அனுப்ப வேண்டி இருக்கும் பொறுப்பை சத்ரப்பான ஆம்பி குமாரன் உணர்வான் என்று அவன் நம்பியிருந்தது வீணானது. ஆம்பி குமாரன் சொன்னதை மொழிபெயர்த்து தூதனிடம் சொன்ன போது அவனுக்கு வருத்தமாகத் தானிருந்தது.  

 

(தொடரும்)

என்.கணேசன்

Monday, May 6, 2024

யோகி 48

 னித உணர்ச்சிகளில் பயம் மிகவும் சக்தி வாய்ந்தது. அது எப்படிப்பட்ட அறிவாளியையும், தைரியசாலியையும் கூடச் செயலிழக்க வைக்கும். பாதி எரிந்திருந்த அந்தக் காவித்துணியைப் பார்க்கையில் சுகுமாரனுக்குள் இதுவரை அறிந்திராத ஒரு அமானுஷ்ய பயம் பரவ ஆரம்பித்தது. சைத்ராவின் உருவம் கூர்க்காவின் கண்களுக்குத் தெரியவில்லை. அது அவரும் டாமியும் மட்டுமே பார்க்க முடிந்ததாய் இருந்தது. ஆனால் காவித்துணி அமானுஷ்யமாய் அவருடைய தோட்டத்தில் எரிந்து கொண்டிருந்ததை அவனும் பார்த்து ஓடி வந்து அணைத்து அதை எடுத்து விரித்தும் காட்டுகிறான். அதனால் இப்போது நடப்பது அவரது பிரமையோ, அவருக்கும், டாமிக்கும் மட்டுமே தெரியும் காட்சியோ அல்ல.

 

மிகவும் கஷ்டப்பட்டு பயத்தை வெளிக்காட்டாமல் கூர்க்காவிடம் கேட்டார். “நீ வெளியாள் யாரையாவது இங்கே பார்த்தாயா?”

 

கூர்க்கா குழப்பத்துடன் சொன்னான். “இல்லையே சார்.  நீங்க உள்ளே வந்தவுடனே மூடின கேட்டை இப்ப தான் நானே திறக்கிறேன்.”

 

அப்படின்னா வெளில இருந்து யாராவது இந்தத் துணிக்குத் தீ வெச்சு தூக்கி எறிஞ்சிருப்பாங்களா?”

 

கூர்க்கா குழப்பத்துடன் யோசித்தான். அவன் கண்ணயர்ந்திருந்த போது யாராவது அதைச் செய்திருக்கலாம். அவன் கண்விழித்த போது ஒரு பைக், கடந்து சென்றதை உணர்ந்தது அவனுடைய நினைவுக்கு வந்தது.  ஆனால் யார் இந்த முட்டாள்தனத்தைச் செய்வார்கள்? இதில் அவர்களுக்கு என்ன லாபம்? மேலும், பைக்கில் போகிறவன் அப்படித் தூக்கி எறிந்து விட்டுப் போயிருக்கலாம் என்ற அனுமானத்தைச் சொன்னால், அப்போது நீ என்ன செய்து கொண்டிருந்தாய், உனக்குத் தூங்குவதற்கா சம்பளம் தருகிறேன் என்ற கேள்விகள் எல்லாம் எழும். எனவே அவன் உறுதியான குரலில் சொன்னான். “இல்லை சார். அப்படி எதுவும் நடக்கலையே?”

 

அப்படின்னா இந்தத் துணி எப்படி இங்கே வந்துச்சு? யார் இதைக் கொளுத்தினாங்க?”

 

தெரியலயே சார். ஒட்டு மொத்தமாய் இன்னைக்கு நேரமே சரியில்லைன்னு நினைக்கறேன். டாமியும் பத்து மணில இருந்தே குரைக்குது....”

 

ஒன்றும் சொல்லாமல் சுகுமாரன் வீட்டை ஒரு முறை சுற்றி வந்தார். டாமியும் உடன் இருக்கிறது, கூர்க்காவும் இருக்கிறான். இப்போது சைத்ராவின் ஆவி தெரியவும் இல்லை. உள்ளே ஒரு மூலையில் சிறு பயம் இருந்தாலும் வீட்டைச் சுற்றி வந்து, யாருமில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டவுடன் அவருக்குச் சற்று பயம் தெளிந்தது.  ஒருவேளை அந்தக் காவித்துணி எரிந்த போது, ஆவியும் எரிந்து போய் விட்டிருக்கலாம் என்று நினைத்த போது அவருக்கு நிம்மதி ஏற்பட்டது. எல்லாம் அந்த ஹோம சாம்பலை நெற்றியில் பூசிக் கொண்டதன் விளைவா?  மூட நம்பிக்கை என்று உடனடியாகத் தோன்றினாலும் இல்லவே இல்லை என்று சொல்லவும் அவருக்கு முடியவில்லை. ஆனாலும் இந்தக் காவித்துணி எப்படி இங்கு வந்தது? தானாக எப்படி எரிந்தது? என்ற கேள்விகள் அவர் மனதைக் குடைய ஆரம்பித்தன.

 

கூர்க்காவும் அவர் நெற்றியில் திருநீறு பூசிக்கொண்டு பக்திப்பழமாய் இருப்பதை அப்போது தான் கவனித்தான். அவன் அங்கே வேலையில் சேர்ந்து பத்து வருடங்கள் முடியப் போகின்றன. ஒரு முறை கூட முதலாளி இப்படி திருநீறு பூசிக் கொண்டதை அவன் பார்த்திருக்கவில்லை. முதலாளியம்மா தான் சில நாட்களில் அப்படி இருப்பார்கள்

 

சுகுமாரன் ஒரு பெருமூச்சு விட்டபடி வீட்டுக்குள் போனார். மிகவும் கவனமாகக் கதவைத் தாளித்துக் கொண்டார்.  தனதறைக்குள் நுழைந்து அறைக் கதவையும் தாளிட்டுக் கொண்டு விட்டுப் படுக்கையில் சாய்ந்தார்.  கண்களை மூடினாலும் உறக்கம் வர மறுத்தது. மறுபடி எழுந்து உட்கார்ந்து கைபேசியில் ஆவிகள் பற்றிய தகவல்களைத் தேட ஆரம்பித்தார்.

ஆவிகள் உலகம் என்ற ஒரு பிரபலமான யூட்யூப் சேனல் சுகுமாரனின் கண்களில் பட்டது. ஒவ்வொரு யூட்யூப் வீடியோவையும் பல லட்சம் பேர் பார்த்திருந்தார்கள். பலரும் அந்த வீடியோக்களைப் பாராட்டியும் இருந்தார்கள். அந்த வீடியோக்களில் ஒன்றின் தலைப்பு அவரை கவனத்தைக் கவர்ந்தது. “இறைசக்தி ஆவியைத் துரத்துமா?”

 

சுகுமாரன் பரபரப்புடன் அந்த வீடியோவைப் பார்க்க ஆரம்பித்தார். அதில் பேசிய ஆள் தன் கருத்துக்களை ஆணித்தரமாய் சொன்னார். “இறைசக்தி இருக்கிற இடத்துல ஆவிகள் இருக்குமா, ஆவிகள் உலாவ முடியுமான்னு என் கிட்ட பல பேர் கேட்கறாங்க. இதுக்கு இருக்கும், இருக்காதுன்னோ, முடியும், முடியாதுன்னோ மொட்டையாய் சொல்றது சரியான பதிலாயிருக்காது. விளக்கமாய் சொன்னா தான் உங்களுக்குப் புரியும். மனுஷங்கள்ல நல்லவன், கெட்டவன்னு இருக்கிறாங்க இல்லையா? இவங்க இறந்தவுடனே நல்ல ஆவி, கெட்ட ஆவியாயிடறாங்க. அதாவது வாழ்றப்ப எந்த மாதிரியான சம்ஸ்காரங்கள் ஒரு மனுஷன் கிட்ட இருக்கோ, அது தான் அவன் செத்தவுடனயும் அவனைப் பின் தொடர்ந்து வரும். நல்லவனோட நல்ல சம்ஸ்காரங்கள் அவனோட ஆவியில கலந்திருக்கும். கெட்டவனோட கெட்ட சம்ஸ்காரங்கள் அவனோட ஆவியில கலந்திருக்கும். ஏன்னா செத்ததுக்கப்பறம் புதுசா அது வேற மாதிரி மாறிட முடியாது இல்லையா? எதுவாய் மாறுவதாய் இருந்தாலும் வாழும் போதே மாறினால் தான் உண்டு. அதனால தான்அரிது அரிது மானிடராதல் அரிதுன்னு ஔவையார் பாடினாங்ககெட்ட மனுஷங்க கெட்ட ஆவிகளாய் தான் உலாவ முடியும். அந்த ஆவிகளுக்கு இறைசக்திகள் நெருப்பாய் சுடும். அதனால கெட்ட ஆவிகள் இறைசக்திகள் நிறைஞ்சிருக்கற இடத்துல இருக்க முடியாது. ஆனால் நல்ல மனுஷங்க தங்களோட நல்ல சம்ஸ்காரங்கள், நல்ல கர்மாக்கள் தொடர்றது மூலமாய் நல்ல ஆவிகளாய் மாறி உலாவறப்ப அவங்களுக்கு இறைசக்தி உறுதுணையாய் தான் இருக்கும். அதனால அந்த ஆவிகள் கூடுதல் சக்தி படைச்சதாய் மாறிடும்….”

 

சுகுமாரன் அந்த யூட்யூபைத் தொடர்ந்து பார்க்கவில்லை. ”முட்டாள்முட்டாள்…. நீ யாருடா? செத்துப் போன ஆவிகளோட ஏஜெண்டா? உனக்கெப்படிடா தெரியும்? இஷ்டத்துக்கு இவன் உளர்றான். இதை லட்சக்கணக்கான ஆளுக பார்க்கறானுக…” என்று அவர் திட்டினார். அவருக்கு ஆவிகளும், இறைவனும் கூட்டு சேர்வதும், ஆவிகள் கூடுதல் சக்தி பெறுவதும் சிறிதும் பிடிக்கவில்லை. ’தேவையில்லாததை எல்லாம் சொல்லி வெறுப்பேத்தறான்கள்!’

 

திடீரென்று டாமி அவருடைய ஜன்னல் அருகே நின்று ஆக்ரோஷமாய் குரைக்க ஆரம்பித்தது.  திகைப்போடு அவர் நிமிர்ந்த போது சைத்ரா அவரது அறையின் மூலையில் புன்னகையுடன் தெரிந்தாள்.

 

சுகுமாரன் ஒரு கணம் சப்தநாடியும் ஒடுங்கிப் போனார். அடுத்த கணம் அவர் மின்னல் வேகத்தில் அறையை விட்டு வெளியே வந்து வேகமாய் அறைக்கதவைச் சாத்தி வெளியே தாளிட்டார். பின் மூச்சு வாங்க திரும்பிய போது எதிர் சுவரிலிருந்த கண்ணாடியில் அவர் உருவம் தெரிந்தது. நெற்றி நிறைய சாம்பலுடன் இருந்த அவரைப் பார்க்கையில் அவருக்கே ஆத்திரம் வந்தது. இதைச் செய்தும் அந்த ஆவி போய்விடவில்லையே. கோபத்துடன் அவசர அவசரமாய் அவர் நெற்றி சாம்பலைத் துடைத்துக் கொண்டார்.

 

திடீரென்று சுகுமாரனுக்கு ஆங்கிலப் பேய்ப்படங்களை பார்த்தது ஞாபகத்துக்கு வந்தது.  அந்த சினிமாக்களிலெல்லாம் சிலுவையை வைத்திருந்தால் பேய்கள் நெருங்காமல் பின்வாங்கியது நினைவுக்கு வந்தது. அவர் மூளை மின்னல் வேகத்தில் வேலை செய்தது. இரண்டாண்டுகளுக்கு முன் அவருடைய கிறிஸ்துவ நண்பர் ஒருவர் சிலுவையில் அறையப்பட்டிருக்கும் ஏசுவின் மரச் சிற்பம் ஒன்றை பரிசளித்திருந்தார்.  எந்தக் கடவுள் மீதும் அவருக்கு நம்பிக்கை இல்லை என்றாலும், அந்தச் சிற்ப வேலைப்பாட்டுக்காக அதை அவர் வைத்திருந்தார்.

 

சுகுமாரன் அவசர அவசரமாக ஹாலில் ஷோகேஸில் இருந்த அந்தச் சிற்பத்தை எடுத்தார். அவர் பார்த்த திரைப்படங்களில் வெறும் சிலுவை தான் ஆவிகளைத் துரத்தியிருக்கிறது. ஏசுவோடு இருந்த சிலுவை எந்தத் திரைப்படத்திலும் ஆவியைத் துரத்தியதில்லை. அவர் வேகமாக சிலுவையை இழுத்து தனியாகப் பெயர்த்தார். ஏசுவை ஷோகேஸிலேயே வைத்து விட்டு சிலுவையைக் கையில் வைத்துக் கொண்டபடி ஹாலிலிருந்த சோபாவில் உட்கார்ந்து களைப்புடன் கண்களை மூடினார். அவர் மூச்சு இயல்பான நிலைக்கு வர இரண்டு நிமிடங்கள் ஆகின.

 

திடீரென்று வாசற்கதவருகே நின்று டாமி குரைக்க ஆரம்பித்தது. ’ஏன் டாமி இடம் மாறி வந்து குரைக்கிறான்?’ என்று திகைப்புடன் அவர் கண்களைத் திறந்த போது அவர் அறைக் கதவில் சைத்ரா சாய்ந்து நின்றிருந்தாள். அவள் புன்னகை விரிந்திருந்தது.


(தொடரும்)

என்.கணேசன்

 

Thursday, May 2, 2024

சாணக்கியன் 107

 

ண்பர்களின் சந்திப்பு உணர்வுபூர்வமாக இருந்தது. நீண்ட காலம் கழித்து ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்வதில் இருவருமே இனிமையை உணர்ந்தார்கள். வயதாக ஆக நட்பின் ஆழம் அதிகமாகிறது, சந்திப்புகளுக்கு இடையேயான நீண்ட இடைவெளிகள் அந்த ஆழத்தைச் சிறிதும் குறைத்து விடுவதில்லை என்பதை இருவருமே உணர்ந்தார்கள்.  

 

உபசரிப்பு, பரஸ்பர விசாரிப்புகள் முடிந்த பின் இந்திரதத் சாணக்கியரிடம் புருஷோத்தமன் கொலை செய்யப்பட்ட விதத்தை விவரித்து விட்டுச் சொன்னார். “…. ஆம்பி குமாரன் எவ்வளவோ உத்தமன் என்று சொல்லக்கூடிய அளவுக்கு ஒரு அயோக்கியனைப் பார்ப்பேன் என்று நான் வாழ்நாளில் அன்று வரை நினைக்கவில்லை விஷ்ணு. தரம் கெட்ட யூடெமஸ் ஆம்பி குமாரனை இமயமலைக்கு இணையாக உயர்த்தி விட்டான்…”

 

சாணக்கியர் சொன்னார். “அழிவுகாலம் வரும் போது புத்தி பேதலித்துப் போவதும், மனம் பக்குவம் அடையும் போது திருந்துவதும் எப்போதும் நிகழ்வது தான் இந்திரதத். இருவர் விஷயத்திலும் அது தான் நடந்திருக்கிறது. ஆனால் புருஷோத்தமனைப் போன்ற ஒரு மாவீரன் இப்படி சூழ்ச்சியில் உயிரிழந்திருப்பது வருத்தத்தை அளிக்கிறது. இனி என்ன செய்வதாக இருக்கிறீர்கள்?”

 

“இளவரசன் மலயகேது வரும் வெள்ளிக்கிழமை அன்று முறைப்படி முடிசூடப் போகிறான். முடிசூடியவுடன் அவன் செய்யத் துடிக்கும் முதல் காரியம் யூடெமஸைக் கொல்வது தான். அது நாங்கள் தனியாகச் செய்ய முடிந்ததாக இல்லை. அதனால் தான் உங்களிடம் உதவி கேட்டு நான் நேரில் வந்திருக்கிறேன் விஷ்ணு.”

 

சாணக்கியர் ஒரு கணம் யோசித்து விட்டுச் சொன்னார். “அப்படியானால் சந்திரகுப்தன் முன்னிலையில் இதைப் பேசுவதே நல்லது இந்திரதத்”

 

சரியெனத் தலையசைத்த இந்திரதத்துக்கு காலம் சக்கரம் போன்றது என்று சொல்வது சரிதானென்று தோன்றியது.  ஒரு காலத்தில் விஷ்ணுகுப்தர் யவனர்களுக்கு எதிராக ஒன்றிணைவது அவசியம் என்று பதறிக் கொண்டு உதவி கேட்டு கேகயம் வந்தது நினைவுக்கு வந்தது. இன்று அதே யவனர்களுக்கு எதிராக அவர் உதவி கேட்டுக் கொண்டு விஷ்ணுகுப்தரிடம் வந்திருக்கிறார். நிலைமை எந்த அளவு தலைகீழாக மாறி விட்டிருக்கிறது!

 

சந்திரகுப்தனின் மாளிகைக்குச் செல்லும் போது இருவரும் மௌனமாகவே இருந்தார்கள். சந்திரகுப்தன் ஆச்சாரியரைக் கண்டவுடன் மிகுந்த மரியாதையுடன் எழுந்து அவர் கால்களைத் தொட்டு வணங்கியவன், அப்படியே அவருடைய நண்பரான இந்திரதத்தின் கால்களையும் தொட்டு வணங்கினான். அவனை ஆசிர்வதித்த இந்திரதத் வெற்றிகள் பண்பட்ட மனிதர்களைப் பாதித்து விடுவதில்லை என்று எண்ணிக் கொண்டார்.

 

அவர்களை மரியாதையுடன் ஆசனங்களில் அமர்த்திய சந்திரகுப்தனிடம் சாணக்கியர் சொன்னார். “சந்திரகுப்தா, நாம் கேள்விப்பட்டது உண்மையே. யவனர்களின் சத்ரப்பான யூடெமஸ் சதி செய்து புருஷோத்தமனைக் கொன்று விட்டு ஐநூறு யானைகளை எடுத்துக் கொண்டு போயிருக்கிறான். அவனைப் பழி வாங்க இவர் நம் உதவி கேட்டு வந்திருக்கிறார்.”

 

சந்திரகுப்தன் ஆச்சாரியரை ஆழமாகப் பார்த்தான். பின் அவன் இந்திரதத்திடம் கேட்டான். “நீங்கள் எங்களிடம் எப்படிப்பட்ட உதவியை எதிர்பார்க்கிறீர்கள் கேகய அமைச்சரே?”

 

சந்திரகுப்தனுக்கும் சாணக்கியருக்கும் இடையே பார்வையிலேயே கருத்துப் பரிமாற்றம் நடந்து முடிந்தது போல் தனக்குத் தோன்றுவது பிரமையா அல்லது உண்மை தானா என்று இந்திரதத்துக்குத் தெரியவில்லை. அவர் சந்திரகுப்தனிடம் சொன்னார். ”யூடெமஸை உயிரோடு விட்டு வைக்கக் கூடாது என்று இன்றைய இளவரசரும், நாளைய அரசருமான மலயகேது உறுதியாக நினைக்கிறார். இப்போதைய நிலைமையில் எங்களால் தனியாக அது சாத்தியப்படும் என்று தோன்றவில்லை. அதனால் தான் தங்களின் உதவி நாடி வந்திருக்கிறேன் அரசே”

 

சந்திரகுப்தன் யோசனையுடன் சொன்னான். “இப்போது கேகயம் யவனர்களின் அதிகாரத்திற்குட்பட்ட பகுதி. அப்படி இருக்கையில் நீங்கள் யூதிடெமஸை எதிர்ப்பது உங்களுடைய உட்பூசலாகத் தான் இருக்கும். அதனால் உதவி செய்ய நாங்கள் வருவது, நாங்கள் உங்கள் உள்விவகாரத்தில் தலையிடுவது போல் அல்லவா ஆகிவிடும்?”

 

இந்திரதத் இதை முன்பே எதிர்பார்த்திருந்து மலயகேதுவிடமும் சொல்லி இருந்தார். சந்திரகுப்தன் தலைமையை ஏற்றுக் கொண்டால் ஒழிய அவன் உதவ முன்வர மாட்டான் என்பதை யூகிக்க பேரறிவு தேவையிருக்கவில்லை. அவர் சொன்னார். “சத்ரப் யூடெமஸ் எங்கள் அரசரைச் சதிசெய்து கொன்ற பிறகும் நாங்கள் யவனர்களின் அதிகாரத்திற்குட்பட்டே இருப்பது எங்கள் சுயகௌரவத்தைக் கேள்விக்குறியாக்கிவிடும். அதனால் யவனர்கள் அதிகாரத்திலிருந்து எங்களை விடுவித்துக் கொள்ள விரும்புகிறோம். இந்த விஷயத்தில் எங்களுக்கு நீங்கள் உதவியாக இருந்து யூடெமஸை ஒழித்துக் கட்டினால் என்றும் உங்கள் நட்பிலேயே இருக்க விரும்புகிறோம்”

 

சந்திரகுப்தன் சாணக்கியரைப் பார்த்து விட்டு இந்திரதத்திடம் சொன்னான். “ஆச்சாரியரிடம் நீங்கள் கொண்டிருந்த தனிப்பட்ட நட்பு நம் இரு பிரதேசங்களுக்குள்ளும் நீண்டதில் மகிழ்ச்சி கேகய அமைச்சரே. நாம் இணைந்து எதிரிகளை வீழ்த்துவோம்”

 

இந்திரதத் நிம்மதியடைந்தார். அடுத்து அவரும் சந்திரகுப்தனும் யூடெமஸை எதிர்த்துப் போரிட்டு வெல்லும் வியூகங்களைப் பற்றிக் கலந்தாலோசித்துப் பேசினார்கள். சாணக்கியர் அவர்கள் பேசிக் கொள்வதை மிகவும் கூர்ந்து கேட்டுக் கொண்டேயிருந்தாரேயொழிய ஒன்றும் சொல்லவில்லை. சாணக்கியர் அதிகம் வாய்திறந்து பேசாதது இந்திரதத்துக்கு வியப்பை அளித்தது.  ஆரம்பத்தில் சாணக்கியருக்கும் சந்திரகுப்தனுக்கும் இடையில் பிணக்கு ஏதாவது இருக்கிறதோ என்று கூட அவர் சந்தேகப்பட்டார். ஆனால் நண்பரை மிக நன்றாக அறிந்த அவர், சாணக்கியர் ஒதுங்கி இருந்து தன் மாணவன் எப்படி எல்லாம் யோசிக்கிறான், முடிவெடுக்கிறான் என்பதைக் கண்காணித்து மனதிற்குள் மதிப்பிடுகிறார் என்று பின் புரிந்து கொண்டார். சாணக்கியரின் மதிப்பீடு அவர் முகத்தில் தெரிந்த திருப்தியில் வெளிப்பட்டது.

 

சந்திரகுப்தனின் அறிவுகூர்மை இந்திரதத்தையும் வியக்க வைத்தது. சாதக, பாதகங்களை அவன் மிக ஆழ்ந்து யோசித்து சிறிய விஷயங்களிலும் சிறப்பான முடிவுகள் எடுத்து அவரை அசத்தினான். அதே போல் அவன் கேகயத்திலிருந்து புஷ்கலாவதி வரை விரிந்திருந்த பிராந்தியத்தைக் குறித்தும் தெளிவான அறிவு படைத்தவனாக இருந்ததும் அவரை ஆச்சரியப்படுத்தியது. ஆசிரியனுக்குப் பொருத்தமான மாணவன் என்று சந்திரகுப்தனை அவர் மனம் மெச்சியது.

 

முடிவில் சந்திரகுப்தன் சாணக்கியர் பக்கம் திரும்பிக் கேட்டான். “நாங்கள் சிந்தித்ததில் எதாவது விடுபட்டிருக்கிறதா ஆச்சாரியரே?”  

 

சாணக்கியர் கேட்டார். “இப்போது கேகயப்படையில் இருக்கும் யவன வீரர்கள், மற்ற பகுதி வீரர்கள் ஆகியோரை எப்படி சமாளிக்கப் போகிறீர்கள்? அவர்கள் உங்களுக்கு எதிராக இயங்காமல், உங்களுக்கு ஒத்துழைக்க என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்?”

 

யூடெமஸ் கேகயத்திலிருந்து அவன் ஓட்டி வந்திருந்த யானைப் படையை ரசித்துக் கொண்டிருந்தான். இப்போது தான் சத்ரப் என்ற பதவிக்கு அர்த்தம் இருக்கும் சூழ்நிலையை அவன் உருவாக்கியிருப்பதாக அவனுக்குத் தோன்றியது. அவன் மகிழ்ச்சியைக் கெடுக்கும் தகவல் ஒன்றை அந்த வேளையில் அவனுடைய ஒற்றன் கொண்டு வந்தான். “சத்ரப். தங்களுக்கு எதிராக கேகய அரசன் மலயகேதுவும், சந்திரகுப்தனும் சேர்ந்து படையெடுத்து வரும் ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டிருக்கிறார்கள். கேகய அமைச்சர் இந்திரதத் நேரடியாகச் சென்று சந்திரகுப்தனுடன் ஒப்பந்த்ததை உறுதி செய்து வந்திருக்கிறார்”

 

யூடெமஸ் திகைத்தான். புருஷோத்தமனின் மரணத்தில் அவன் மீது அவர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டால் கூட அவர்கள் அதிகபட்சமாக ஆம்பி குமாரனிடம் புகார் செய்வதைத் தவிர வேறு எதையும் செய்ய முடியாது என்று திடமாக நம்பியிருந்த அவனுக்கு அவர்கள் எதிரியுடன் இணையத் தயங்க மாட்டார்கள் என்று தோன்றியிருக்கவில்லை. ஆனால் ஆரம்ப அதிர்ச்சி பின் குறைய ஆரம்பித்தது. கேகயத்தில் அவன் வீரர்களும் இருக்கிறார்கள், மற்ற வீரர்களும் இருக்கிறார்கள். கேகய வீரர்கள் கேகய மன்னனை தங்கள் தலைவனாக நினைத்தாலும் மற்ற வீரர்கள் தங்கள் உண்மையான தலைவன் யூடெமஸுக்கு எதிராகப் போரிடத் தயாராக இருக்க மாட்டார்கள். அதனால் கேகயத்தில் பாதிப்படை தான் அவனுக்கு எதிராகக் கிளம்பும்.

 

இன்னொரு விஷயமும் அவனைத் தைரியமூட்டியது.  அவனுக்கு எதிராக அவர்கள் படையெடுத்து வந்தால் ஆம்பி குமாரன் முன்பு போல விலகி இருக்க முடியாது. இன்னொரு சத்ரப்பான அவன் யூடெமஸை ஆதரித்தே ஆக வேண்டும்.  அப்படி ஆதரிக்கா விட்டால் அவன் சத்ரப்பாக இருப்பதற்குப் பொருளில்லை என்றாகி விடும். அவனுடன் ஆம்பி குமாரனும் இணைந்தால் எதிரிகளை வெல்வது பெரிய விஷயமல்ல.

 

யூடெமஸ் உடனடியாக எதிரிகள் தனக்கெதிராகப் போருக்கு ஆயத்தமாவதைத் தெரிவித்து ஆம்பி குமாரனுக்கு ஒரு தூதன் மூலம் செய்தி அனுப்பினான். அத்துடன் உடனடியாக அவர்களை எதிர்கொள்ள அவனுடன் இணைந்து கொள்ள வரும்படி ஆம்பி குமாரனுக்குக் கோரிக்கையும் விடுத்து விட்டுச் சற்று நிம்மதி அடைந்தான்.   

 

(தொடரும்)

என்.கணேசன்