கல்யாண் மணிக்கு சொல்ல என்றே ஒரு தனிக்கதையைத் தயாரித்து வைத்திருந்தான். மணி மூலமாக
அவனுக்கு வேலையும் நடக்க வேண்டும், அதே நேரத்தில் மணிக்கு
நாகரத்தினத்தின் விசேஷ தன்மைகள் எதுவும் தெரியக்கூடாது என்ற இரட்டிப்பு நோக்கத்தை நிறைவேற்றும்படியான
கச்சிதமான கதையாக அவன் கதை இருந்தது.
உட்கார்ந்த அவனிடம் தேவையில்லாமல் குசலம்
பேசாமல் மணி ”சொல்லுங்க சார்” என்றான்.
கல்யாண் தான் தயாரித்திருந்த கதையைச்
சொல்ல ஆரம்பித்தான் “மணி, என் பக்கத்து வீட்டுக்கு ஒரு ஆள் குடி வந்திருக்கார். ஆள் பார்க்க
டீசண்டாய் இருப்பார். அவர் கூட அவர் வேலையாள் ஒருத்தன் இருக்கான். வினோதமான
ஆள் அவர். அவர் வீட்டிலிருந்து அப்பப்ப பாம்பு சீறுற மாதிரி சத்தம்
கூட வரும். அவரே சீறுறாரா இல்லை பாம்பை வளர்த்தறாரான்னு கூட எங்களுக்குத்
தெரியாது.... ஆனா எங்களுக்கெந்த பாதிப்புமில்லைங்கறதால நாங்க அதைக் கண்டுக்கலை...
பார்த்தா குட் மார்னிங் சொல்ற கட்டத்தோட நாங்க நிறுத்திகிட்டோம்.”
மணி அவன் சொல்வதைக் கவனமாகக் கேட்டுத்
தலையசைத்துக் கொண்டே வந்தானேயொழிய இடைமறித்துக் கேள்விகள் கேட்கவோ அபிப்பிராயங்கள்
சொல்லவோ முனையவில்லை.
கல்யாண் தொடர்ந்தான். “என் மனைவி
கிட்ட அவ தாய்வழிப்பாட்டி கொடுத்த சில ரத்தினக்கல்கள் இருந்துச்சு. அது நாலஞ்சோ, ஏழெட்டோ
அதுவே அவளுக்கு இப்ப சரியாய் நினைவில்லை. அவளுக்கு அந்தப்
பாட்டி மேலே உயிர்ங்கறதால அவங்களோட அந்த ரத்தினக்கல்களை அவங்க ஞாபகார்த்தமா ரொம்ப காலமா
வச்சிருந்தா. பார்க்க நீலமும் பச்சையுமாய் கலந்து ஜொலிச்சு ரம்யமாய் இருந்தாலும்
அதோட மதிப்பு மிஞ்சி மிஞ்சிப் போனா ஐம்பது அல்லது அறுபதாயிரத்துக்குள்ளே தான் வரும். போன வாரம்
அந்த ரத்தினக்கல்கள் காணாம போயிடுச்சு. எங்களுக்கு பக்கத்து
வீட்டு ஆள் மேல தான் சந்தேகம். போன வாரம் வீட்ல எல்லாரும் ரெண்டு நாள் வெளியூர் போயிருந்தோம். அந்த சமயத்துல
பக்கத்து வீட்டுக்காரன் அதைத் திருடிட்டு போயிருக்கணும்கிறது தான் எங்க பலத்த சந்தேகம்...சந்தேகம்னு
கூட சொல்ல முடியாது. அவன் தான் செஞ்சிருக்கான்னு தெரியும்னே வைங்களேன்”
கல்யாண் நிறுத்தி விட்டு மணியைப் பார்த்தான். மணி கேட்டான். “போலீஸ்ல
புகார் குடுத்தீங்களா சார்?”
கல்யாண் சொன்னான். “இல்லை....
போலீஸ்காரனுக அதை அவன் கிட்ட இருந்து மீட்டுத்தர முடியும்னு எங்களுக்கு நம்பிக்கை
இல்லை. பணமதிப்பு அதிகமில்லாட்டியும் செண்டிமெண்டா என் மனைவிக்கு
அந்த ரத்தினங்க மேல உயிர். போலீஸ்ல புகார் குடுத்து பக்கத்து வீட்டுக்காரன் விவரமா அதை
எங்கயாவது வித்துட்டாலோ, கைமாத்தி விட்டாலோ எங்களுக்கு அந்த ரத்தினங்க நிரந்தரமா நஷ்டமாற
மாதிரியாயிடும். அதனால தான் நான் உங்க கிட்ட வந்தேன். அவன் அமுக்கமா
எங்க வீட்ல இருந்து எடுத்த மாதிரி நீங்களும் அங்கே இருந்து எடுத்துட்டு வந்து எங்க
கிட்ட குடுக்கணும்...”
மணி அமைதியாகச் சொன்னான். “சார் நான்
சொல்றேனேன்னு தப்பா நினைக்காதீங்க... அந்த ரத்தினங்க
மதிப்பு அறுபதாயிரம் தான்னா, போலீஸ்ல புகார் குடுக்கவும் நீங்க விரும்பலைன்னா, அதை நீங்க
விட்டுத் தள்றது தான் நல்லது. எங்க மினிமம் ரேட்டே அஞ்சு லட்சம் தான். அதுவும்
காலி வீட்ல இருந்து எடுக்கறதாயிருந்தா. ஆள் இருக்கற வீட்டிலிருந்து
எடுக்கறதாயிருந்தா சிக்கல்கள்
அதிகம்கிறதால மூனு லட்சம் கூடுதலாய் தரவேண்டியிருக்கும்...”
கல்யாண் யோசிப்பது போல் பாவனை காட்டினான். பக்கத்து
வீட்டிலிருந்து எடுத்த ரத்தினத்தின் உண்மையான மதிப்பு தெரிந்தால் மணி அந்த ரத்தினங்களோடு
காணாமல் போகின்ற வாய்ப்புகள் அதிகம் என்பதால் தான் அதைத் தவிர்க்க இந்தக் கதையை அவன்
ஜோடித்தான்.... பல கோடி மதிப்புள்ள பொருளைத் திருடி ஒருவன் கையில் தந்து
சில லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டு போகுமளவு மணி முட்டாள் அல்ல என்பதை அவன் அறிவான்.
கல்யாண் பெருமூச்சு விட்டவனாகச் சொன்னான். “நீங்க சொல்றது
ரொம்பச் சரி. திருட்டுப் போனது என் பொருளாய் இருந்திருந்தால் கண்டிப்பா
நீங்க சொன்ன மாதிரி தான் செஞ்சிருப்பேன். ஆனால் பொம்பளைக
நம்மள மாதிரி அறிவுபூர்வமாய் யோசிக்கிறதில்லை. என் மனைவி
அந்த ரத்தினங்களையே மீட்டுத் தரணும்னு அழறா. அதுக்கு
பதிலா வைரமும், வைடூரியமும் செட்டாகவே வாங்கித் தர்றேன்னும் சொல்லிப் பார்த்துட்டேன். கேட்க மாட்டேங்கிறா…”
மணி அவனை இரக்கத்தோடு பார்த்து விட்டுக் கேட்டான். “பக்கத்து வீட்டுக் காரன்
எப்பவாவது வெளியூர் போவானா?”
கல்யாண் வருத்தத்தோடு சொன்னான். “அப்படிப் போற மாதிரி தெரியல.
என் வீட்லயோ தினம் அழுகை அதிகமாயிட்டே வருது….”
“அப்படி அந்த ஆள் வீட்ல இருக்கறப்பவே எடுக்கணும்னா நான் அப்பவே சொன்ன மாதிரி
எட்டு லட்சம் ஆகுமே சார்”
கல்யாண் வேறு வழியில்லாமல் ஒத்துக்
கொள்ளும் அன்பான கணவனாகத் தன்னைக் காட்டிக் கொண்டு சொன்னான். “வேற வழியில்லை....
தர்றேன்...”
மணி சொன்னான். “இன்னொரு
விஷயம்... நாங்க திருடறதுக்குன்னு போய்ட்டா நீங்க சொன்ன பொருளை மட்டும்
தான் எடுப்போம்னு உத்திரவாதம் தர முடியாது. கூடுதலாகவும்
எடுத்துக்கலாம். நீங்க அதையும் நாங்க உங்க கிட்ட தரணும்னு எதிர்பார்க்கறதோ, எங்களுக்குத்
தரவேண்டிய தொகைல அதோட மதிப்பைக் கழிச்சுக்கணும்னு எதிர்பார்க்கறதோ கூடாது. உங்க அந்த
ரத்தினங்க நாலஞ்சு இருந்தாலும் சரி, ஏழெட்டு இருந்தாலும்
சரி அதைக் குடுத்துடுவோம்....”
அவன் சொன்னதில் கல்யாண் பரம திருப்தி
அடைந்தான். நாகராஜிடம் நாகரத்தினங்கள் அதிகமாயிருந்தாலும் அதை அப்படியே
இவன் கொண்டு வந்து கொடுத்தால் பிறகு வேறென்ன வேண்டும். தன் சந்தோஷத்தைக்
காட்டிக் கொள்ளாமல் கல்யாண் சொன்னான். “எங்க ரத்தினங்கள்
எங்களுக்குக் கிடைச்சா போதும். மத்தபடி நீங்க என்ன எடுத்துகிட்டாலும் எங்களுக்கு வருத்தமில்லை....
ஆனா நான் சொல்லி தான் நடக்குதுங்கற விஷயம் பக்கத்து வீட்டுக்காரனுக்குத் தெரிஞ்சுட
கூடாது. அந்த ஆள் கிட்ட தேவை இல்லாமல் வம்பு வளர்க்கிறதுல எனக்கு
இஷ்டமில்லை.”
மணி சொன்னான். “அது பத்தி
நீங்க கவலையே பட வேண்டாம். நாங்க உயிர் போனாலும் சரி உங்களைக் காட்டிக் கொடுக்க மாட்டோம். எங்க தொழில்ல
நாங்க யாரையும் காட்டிக் கொடுத்ததாய் சரித்திரமே இல்லை. அதனால தான்
எங்க ஃபீஸ் அதிகமானாலும் எங்க கஸ்டமர்ஸ் அதைப் பெருசா நினைக்கிறதில்லை”
அவன் ஃபீஸ் என்று சொன்னது கல்யாணை உள்ளூரச்
சிரிக்க வைத்தாலும் அவன் அதை வெளிக்காட்டவில்லை.
மணி சொன்னான். “அட்வான்ஸா
மூனு லட்சம் குடுங்க. பொருள் கைக்கு வந்தவுடன மீதியைக் கொடுங்க. அட்வான்ஸ்
பணம் கொடுத்த மூனு நாள்ல அந்தப் பொருள் உங்க கைல இருக்கும்....”
ரஞ்சனி இரண்டு நாட்களாக அதிகமாக மாதவனை நினைத்துப் பார்க்கிறாள். நரேந்திரன்
கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்த போது மாதவன் இருப்பை அங்கு உணர்ந்ததை இப்போது நினைத்தாலும்
அவளுக்கு மயிர்க்கூச்செறிகிறது. அது போதாதென்று அவள் மகன் தீபக்கும் கொடிவேரி நீர்வீழ்ச்சியில்
மாதவன், சரத், கல்யாண் மூவரும் குளித்துக் கொண்டிருக்கும் காட்சியைக் கண்டிருக்கிறான். தீபக் அவர்களின்
முகத்தைச் சரியாகப் பார்க்க முடியவில்லை என்று சொன்னாலும் அவன் பார்த்தது அவர்கள் மூவரைத்
தான் என்பதில் அவளுக்குச் சந்தேகமேயில்லை. அவன் திரும்பி
வரும் போது மாதவனின் வீட்டுக்குச் சென்று அவன் பெற்றோரைச் சந்தித்த விதமும் இயற்கையாய்
தற்செயலாக நிகழக்கூடிய சம்பவம் அல்ல. மாதவனின் ஆத்மாவே
தீபக்கை அங்கே செல்ல வைத்திருக்கிறது என்று அவள் உறுதியாக நம்பினாள். அவளுக்கு
ஒன்று மட்டும் விளங்கவில்லை. இதெல்லாம் ஏன் நடக்கிறது? அதுவும்
இத்தனை வருடங்கள் இல்லாமல் இந்த சில நாட்களாக மட்டும் ஏன் நடக்க ஆரம்பிக்கிறது? அவளுக்கு
அதற்கான காரணம் என்ன யோசித்தும் இது வரை விளங்கவில்லை.
மாதவன் மிக நல்லவன். அவனுடைய
ஆத்மா சாந்தியடைந்து சொர்க்கத்தில் இருக்க வேண்டிய ஆத்மா. அது ஏன்
இப்போது இந்த உலகத்திற்கு இறங்கி வர வேண்டும்? அதற்கு
என்ன மனக்குறை பாக்கி இருக்க முடியும்? பெற்றோருக்கு யாருமில்லை
என்ற காரணம் என்றால் அதுவும் புதிதாக ஏற்பட்டதல்லவே! ஏன் அவன்
ஆத்மா அவர்கள் வாழ்க்கையில் இப்போது குறுக்கிடுகிறது?
Kalyan seems to be a very cunning fellow. Everything is connected with the bomb incident happened many years ago. Very interesting events.
ReplyDeleteமணி திருட போகும் போது நன்றாக வாங்கிக் கட்டிக்கொண்டு வரப் போகிறான்...
ReplyDelete