நாகராஜ் கொஞ்சம் நெருங்க முடிந்தவனாக
இருந்தால் அவர் எப்படியாவது குழைந்து பேசி நட்பு பாராட்டி அந்த வீட்டுக்குள் நுழைந்திருப்பார். அவன் நெருங்கிப் பழகும் தீபக் கூட அந்த வீட்டுக்குள் இன்னும்
நுழைய முடியவில்லை. தீபக்கும் அதற்கான முயற்சிகளை எடுக்கிற மாதிரி தெரியவில்லை. அதனால்
அவர்கள் யாரும் நாகராஜ் வீட்டில் நுழைந்து சோதிக்கும் வாய்ப்பு சுத்தமாக இல்லை..
மகன் தீவிரமாக யோசிப்பதைப் பார்த்து
அவர் கேட்டார். “என்னடா யோசிக்கறே?”
“அந்த ஆள்
அந்தப் பழைய வெடிகுண்டு வழக்கை விசாரிக்க வந்தவன். அவன் மாதவனைப்
பத்தி எங்க கிட்ட விசாரிக்கிறதுல ஆச்சரியம் இல்லை. அவன் ஏன்
இந்த நாகராஜை விசாரிக்கணும்? நாகராஜ்னு மாதவனுக்கு ஒரு நண்பன் இருக்கறானான்னு எங்ககிட்டயும்
ஏன் கேட்கணும்?..” கல்யாண் ஆழ்ந்த யோசனையோடு கேட்டான். ஏற்கெனவே
புதிராக இருக்கும் நாகராஜ் அந்தப் பழைய வழக்கோடும், இந்த ரா
அதிகாரியோடும் சம்பந்தப்படுவது நல்லதாகத் தோன்றவில்லை...
“அது எதுவாகவோ
இருந்துட்டுப் போகுது; விட்டுத் தள்ளு... அந்த விசேஷ
நாகரத்தினத்தைப் பத்தி யோசி.... திடீர்னு நாகராஜ் ஒருநாள் வீட்டைக் காலி பண்ணிட்டு போவான்
போலத்தான் தெரியுது.... அவனோட அந்த நாகரத்தினமும் போயிட்டா நம்மள
நெருங்கி வந்த அருமையான சந்தர்ப்பத்தை நாம நழுவ விட்ட மாதிரியாயிடும்டா”
“அவன் சக்தி வாய்ந்தவன்னு எல்லாரும் சொல்றாங்கப்பா…. எதையும்
யோசிச்சு தான் செய்யணும்…”
“அதைத்தான் சீக்கிரம் யோசின்னு நான் சொல்றேன்…. அவன் போனதுக்கப்பறம்
யோசிச்சி என்ன பண்றது? அவன் சக்தி அவன்கிட்ட நாகரத்தினங்க இருக்கறதால
தான் இருக்கு. அந்த நாகரத்தினங்க நம்ம கிட்ட வந்தா அந்த சக்திகள்லாம்
நமக்கு வந்துடும்…” அவர் சொல்லும் போதே அவர் கண்கள் பளீரிட்டன.
“ஆபத்துல நாம மாட்டிக்க கூடாதுப்பா” என்று தீவிர யோசனையுடனேயே
கல்யாண் சொன்னான்.
“அந்த அளவு அதிர்ஷ்டமும் அதுல புதைஞ்சிருக்குதுடா. அதை
மறந்துடாதே. கவனக்குறைவா இருக்கணும்னு நான் சொல்லலை. நாம நேரடியா ஈடுபடணும்னும் சொல்லலை. தகுந்த ஆளைப் பிடி.
அவனுக்குக் காசைக்குடு. எத்தனையானாலும் பரவாயில்ல.
வேலையானா முழு அதிர்ஷ்டமும் நமக்குக் கிடைக்கும். வேலையாகலைன்னா அந்தக் காசு போகும் அவ்வளவு தானே? எத்தனையோ
சின்ன நஷ்டங்கள்ல
அதுவும் ஒன்னுன்னு எடுத்துக்கலாம்.
குறைந்த பட்சமா முயற்சியே பண்ணாத முட்டாளா இல்லாமலிருப்போமில்லையா?”
அவர் சொன்னது மிகச்சரியாகவே அவனுக்குத் தோன்றியது. அவன் யோசித்து முடிவில்
சொன்னான். “ஒரு ஆள் இருக்கான். அவன் கிட்ட
நான் நாளைக்கே பேசறேன்ப்பா”
வேலாயுதம் நிம்மதியடைந்தார்.
அஜீம் அகமது முன்னால் அவன் ஆட்கள்
இருவர் மிகுந்த பயபக்தியோடு நின்று கொண்டிருந்தார்கள். அஜீம் அகமது அவர்களிடம்
கேட்டான். “இப்ப மகேந்திரன் மகன் எங்கே இருக்கான்?”
ஒருவன் சொன்னான்.
“கோயமுத்தூர்ல இருக்கான்…. அந்தத் தமிழ்ப்பசங்க
கிட்ட விசாரிச்சிகிட்டு இருக்கறதா கேள்விப்பட்டோம்….”
“ஜனார்தன் த்ரிவேதி என்ன பண்றார்?”
“அடிக்கடி என் கிட்ட கேட்கறார். இங்கே நடக்கறதை எல்லாம்
உங்க கிட்டே சொல்லிட்டேனா இல்லையான்னு அவருக்கு இன்னும் சந்தேகம் தீரலை…” இன்னொருவன் சொன்னான்.
அஜீம் அகமது மெலிதாகப் புன்னகைத்தான். கிழவர் கட்சி ஆட்சியில்
இருந்திருந்தால் அவரே மகேந்திரன் மகனை ஒரு கை பார்த்திருப்பார். இந்த நேரத்தில் ஆட்சியில் இல்லாமல் போனது உண்மையில் அவருக்கு துரதிர்ஷ்டம்
என்று தான் சொல்ல வேண்டும்…
“நான் இங்கே வந்திருப்பதை அவர்கிட்ட சொல்லலையே?”
“இல்லை.”
“நல்லது. இனிமேயும் சொல்ல வேண்டியதில்லை.”
ஒரு காலத்தில் எங்கும்
நிறைய ஆட்கள் சூழ இருப்பதில் பிரியப்பட்டவன் இப்போது தனிமையையும், அமைதியையுமே அதிகம்
விரும்பினான். எதிரிகள் உலக அளவில் அதிகமாகி விட்டதால் அதிகம் பேருக்குத் தெரியாமல்
ரகசியமாய் எங்காவது தனிமையில் இருப்பதே பாதுகாப்பாகவும் இருந்தது. ஜனார்தன் த்ரிவேதிக்குத்
தெரிந்தால் அவர் கண்டிப்பாக வந்து பார்ப்பார். அவர் அவருக்கு நம்பிக்கையான யாரிடமாவது
அதைச் சொல்லவும் வாய்ப்பிருக்கிறது. அல்லது அவரைப் பின் தொடர்ந்து வந்தும் எதிரிகள்
தெரிந்து கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது. எல்லாமே அனாவசியமான பிரச்னைகள்….
அஜீம்
அகமது கேட்டான். ”மகேந்திரன் பையன் அந்த ரெண்டு பேரையும் எங்கே அடைச்சு
வெச்சிருக்கான்னு உங்களுக்கு ஏதாவது அனுமானம் இருக்கா?”
அவர்கள் இருவரும் இல்லையென்று தாழ்த்தியபடியே தலையசைத்தார்கள்.
அவன் அவர்களை இகழ்ச்சியாகப் பார்த்தான். பின் மெல்லக் கேட்டான்.
“மூளைக்கு அப்பப்ப வேலை குடுங்க. அவன் அவங்க ரெண்டு
பேரையும் தனித்தனி இடங்கள்ல அடைச்சு வெச்சிருப்பானா இல்லை ஒரே இடத்துல அடைச்சு வெச்சிருப்பானா?”
ஒருவன் சொன்னான்.
“சஞ்சயை டெல்லி பக்கத்துல எங்கயாவதும், மதன்லாலை
சிம்லா பக்கத்துல எங்கயாவதும் அடைச்சு வெச்சிருப்பான்னு தோணுது…”
இரண்டாவது ஆள் சொன்னான். “ரெண்டு பேரையும் ஒரே இடத்துல அடைச்சி வச்சிருக்கறதுக்கு
தான் வாய்ப்பு அதிகமா எனக்குத் தோணுது…”
அஜீம் அகமது இரண்டாவது ஆளிடம் கேட்டான். “அப்படி எங்கே அடைச்சு வெக்க
வாய்ப்பு அதிகம்? டெல்லியா சிம்லாவா?”
”டெல்லி பக்கத்துல தான் எங்கயோ அடைச்சு வெச்சிருக்கணும்…. ஏன்னா அது தான் அவனுக்கு அடிக்கடி போய் வர சுலபமா முடியற இடம்…”
“ஆனா சில நாளா அவன் அடிக்கடி போய் வந்த இடங்களை எல்லாம் கண்காணிச்சுட்டு தானே
இருக்காங்க. அதுல அந்த மாதிரி இடம் எதையும் அவங்க கண்டுபிடிக்கலையே”
அந்த இரண்டாவது ஆளுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. மௌனமாக இருந்தான்,.
அஜீம் அகமது தானே பதில் சொன்னான். “அவனைக் கண்காணிக்கறாங்கன்னு
தெரிஞ்சவுடனேயே அவன் உஷாராயி அந்தப் பக்கமே போகாம இருந்திருப்பான். அந்த ரெண்டு பேரைக் காவல் காக்க ஆள்கள வெச்சுருப்பான்..”
இரண்டாவது ஆள் தலையசைத்தான்.
அஜீம் அகமது சொன்னான்.
“இப்ப நீங்க ரெண்டு பேரும் அவன் நிலைமைல இருக்கீங்கன்னு வெச்சுக்கோங்க.
அப்படி இருக்கிறப்ப ரெண்டு பேரை அடைச்சு வெக்கணும்னா எங்க அடைச்சு வெப்பீங்கன்னு
யோசியிங்க. ஆளுக்கு குறைஞ்சது ஐம்பது இடங்களாவது பொருத்தமான இடங்களாய்
நாளைக்கு காலைல ஒன்பது மணிக்கு வந்து சொல்லணும். அது வரைக்கும்
வேற எந்த யோசனையும் உங்களுக்கு இருக்ககூடாது…. நீங்க போகலாம்”
அவர்கள் இருவரும் போனபின் அஜீம் அகமது தன் லாப்டாப்பைத் திறந்தான். அவன் மெயிலுக்கு ஐந்து நிமிடங்களுக்கு
முன் தான் டெல்லியின் தற்போதைய விரிவான வரைபடம் வந்து சேர்ந்திருந்தது. அடுத்த இரண்டு நிமிடங்களில் அவன் கவனத்தை முழுவதுமாக அந்த வரைபடம் ஆக்கிரமிக்க
ஆரம்பித்தது.
கல்யாண் அந்த ஆளை மறுநாளே சந்தித்தான். பணக்காரர்கள்
அதிகம் வசிக்கிற பகுதியில் பணக்காரர்களில் ஒருவனாக வாழும் அந்த நபர் மணி என்ற பெயரில்
தான் முன்பொரு முறை அவனுக்கு அறிமுகப்படுத்தப் பட்டிருக்கிறான். அது அந்த
ஆளின் உண்மையான பெயர் தானா என்பதில் கல்யாணுக்கு இப்போதும் சந்தேகம் உண்டு. ரியல் எஸ்டேட்
பிசினஸ் செய்வதாக அந்த ஆள் சமூகத்தில் அறியப்பட்டாலும் திருட்டு, கொள்ளை
தான் மணியின் முக்கிய தொழில். அதைப் பலகாலமாக மணி செய்து வந்தாலும் மாட்டிக் கொள்ளாமல்
சாமர்த்தியமாகச் செய்து வருவது தான் அவனுடைய தனித்தன்மையாக இருந்தது. அவனுக்கென்று
ஒரு தனி கூட்டாளிக் கும்பல் உண்டு. அவர்கள் தனித்தனியாக
சில சமயங்களில் மாட்டிக் கொள்வதுண்டு. ஏதோ ஒரு உறவுமுறை
சொல்லி, அல்லது வேண்டப்பட்டவர்களின் உறவுமுறையைச் சொல்லி ஜாமீனில்
எடுப்பது, வழக்கிலிருந்து விடுவிப்பது என்று உதவினாலும் மணி அவர்களுடன்
தொழிலில் சம்பந்தப்பட்டவன் என்று யாருமே அறியும் அளவுக்கு அவன் அஜாக்கிரதையாக இருந்ததில்லை.
நேற்றிரவு போன் செய்த போது காலை பத்து
மணிக்கு வந்து பார்க்கும்படி மணி சொல்லியிருந்தான். கல்யாண்
பத்து மணிக்குப் போன போது மணி நெற்றியெல்லாம் திருநீறு பூசிக்கொண்டு பக்திப் பழமாகத்
தெரிந்தான். கழுத்தில் இருந்த கனத்த தங்கச் சங்கிலியும் கை மணிக்கட்டில்
இரண்டரை பவுனில் இருந்த ப்ரேஸ்லெட்டும் அவன் நிதிநிலைமையை பிரகடனப்படுத்தின.
“வாங்க சார்” என்று மரியாதையாக
வரவேற்று வரவேற்பறையில் இருந்த விலையுயர்ந்த வெள்ளை ஷோபாவில் கல்யாணை மணி அமர வைத்தான்.
Father and son are playing with fire, I suspect. Ajeem Ahmed seems to be no-nonsense person. He doesn't waste time. Going very interesting.
ReplyDeleteஅஜீம் அகமது சீக்கிரமே அவர்களை கண்டுபிடித்து விடுவான்... போலிருக்கிறதே...? நரேந்திரனுக்கு ஆபத்தான காலம் தான்...
ReplyDelete